யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

தாய்மொழியின் சமத்துவமும், அயல்மொழியின் ஆதிக்கமும்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-5

Recommended Posts

தாய்மொழியின் சமத்துவமும், அயல்மொழியின் ஆதிக்கமும்!

மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-5

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

"காக்கா எல்லா நாட்டுலயும் கா கா -ன்னுதான் கத்துது! எல்லா நாட்டுலயும் குயில் கூகூ-ன்னுதான் கூவுது; எல்லாக் காட்டு யானையும் ஒரே மாதிரித்தான் பிளிறுது; இந்த மனிதன் மட்டும் ஊரூருக்கு வேற வேற மொழி பேசறானே! அதெப்படிப்பா?", என்றபடியே வந்தார் நண்பர்.

"மொழிகளின் இயற்கை குறித்துச் சொல்றேன்னு சொன்னது உண்மைதான்! அதுக்காக என்ன வைச்சு செய்யதுன்னு முடிவு பண்ணிட்டியாப்பா!", என்றேன் சற்று பயத்துடன்.

"அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்ல! மொழிகளின் இயற்கை-ன்னு நீ சொல்லப் போறல்ல! அது எப்பிடியிருக்கும்-னு யோசிச்சேன்! அவ்வளவுதான்!", என்றார் சற்றே கூச்சத்துடன்.

மொழியே மனித இனத்தின் சாதனைகளில் மிக உயர்ந்தது!

"ஆமாப்பா! யோசிச்சுப் பாத்தா மனித இனத்தின் சாதனைகளிலேயே மிக உயர்ந்தது மொழிதான்-னு தோணுது! அறிவு நூற்களின் வளர்ச்சி, ஆட்சிமுறை, சமுதாய வாழ்வு, கலை, சமயம், நாகரிகம், சட்டம், ஒழுங்கு, தகவல் தொடர்பு-ன்னு எதுவுமே மொழின்னு ஒண்ணு இல்லேன்னா இல்ல!", என்றேன் என்னையறியாமலேயே!

"மெய்யாலுமே உண்மைதான்!", என்றார் நண்பர்.

மொழியே மனித இனத்தின் வேர்!

"காலத்தை வென்று, வள்ளுவனும், கம்பனும், இளங்கோவும் பாரதியும் இன்றும் நம்முடன் வாழ்வதன் காரணம் அவர்தம் பாடல் மொழிகள் அல்லவா! நாகரித்துடன் நாகரிகமாக வளர்வதும் மொழி! நாகரிகத்தை வளர்ப்பதும் மொழி! தலைமுறை கடந்து தலைமுறை, ஊழி கடந்து ஊழி, மனிதனின் அனுபவத்தையும், அறிவையும், உணர்வையும் எடுத்துச் செல்லும் ஒப்பற்ற ஆற்றல் கொண்ட ஊடகம்  மொழி! காலம், இடம் கடந்து இயற்கையை மனிதன் வெற்றிகொள்ள உதவும் கருவியும் மொழியே!", என்ற நான், தொடர்ந்து,

"மனிதஇன வாழ்வின் அலைகடற்பரப்பு நாகரிகம் என்றால், அதன் ஆழ்கடற்பரப்பு மொழியாகும்! அரசன்-ஆண்டி, முதலாளி-தொழிலாளி, புலவன்-தற்குறி, பணக்காரன்-ஏழை உள்ளிட்ட அனைத்து மட்டங்களையும் ஊடுருவி, ஆழமாக நிலைத்த வேர்ப்பண்பு தாய்மொழிக்கு மட்டுமே உண்டு!", என்றேன்.

அந்நிய ஆரியமொழியின் ஆட்சியில் சீரழிந்த இந்தியா!

"இந்தியாவின் மற்ற மொழிகளெல்லாம் அந்தந்த மாநில மக்களுக்கான தாய்மொழியாக மட்டுமே இருக்க, அனைத்து மொழிகளும் 'தேவபாடை அல்லது கடவுள்மொழி' என்று ஏற்றுக்கொள்ளும் சமற்கிருதம் போன்ற உயர்ந்த மொழியைக் கொண்டுள்ள நாடு உலகில் எங்காவது இருக்கிறதா?", என்று கேட்டார் நண்பர்.

"தத்தம் தாய்மொழிகளை ஆரிய அந்நியர்கள் 'பிசாசு மொழி, நீசமொழி' என்று தூற்றுவதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு, அந்நிய மொழியான ஆரியத்தை 'தேவபாடை அல்லது கடவுள் மொழி' என்று தூக்கித் தலையில் வைத்துக் கூத்தாடும் மக்கள் வாழும் இந்தியாவைப் போன்ற கேவலமான நாடு உலகில் எங்காவது இருக்கா? என்று கேட்பதுதான் மிகவும் பொருத்தமான கேள்வியாக இருக்கும்", என்றேன் நான்.

அந்நிய மொழிகளின் ஆட்சியில் சீரழிந்த உலகநாடுகள்!

"உன்னைப் பொருத்தவரை அப்படியே வைத்துக்கொள்!  இந்தியாவின் சமற்கிருத மொழிக்கு இணையான மொழி வேறு நாடுகளில் உண்டா இல்லையா என்பதற்கு விடை தேவை", என்றார் நண்பர்.

"நண்பரே! மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ளும்! உமது வினாவுக்கான விடை 'உண்டு!' என்னும் ஒற்றைச் சொல்தான். நம்ப நாட்டு மக்கள்தான் தத்தம் தாய்மொழிகளைப் புறம்தள்ளிட்டு, சமற்கிருதத்தைத் தூக்கிக் கொண்டாடினார்கள் என்றால், முற்கால ஐரோப்பியர்கள்கூட அவரவர் தாய்மொழிகளைக் கீழே போட்டுவிட்டு, கிரேக்கம்-லத்தீன் மொழிகளைத்தான் கொண்டாடினார்கள்; Middle-East நாடுகளோ, ஹீப்ரு-அரபி மொழிகளின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்தார்கள்!", என்றேன் நான்.

"சமற்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, அரபி மொழிகள் அனைத்தும் Classical Languages எனப்படும் செம்மொழிகள் என்பதால் அத்தகைய உயர்நிலை பெற்றிருக்கலாமோ?", என்று நெத்தியடியாக வினவினார் நண்பர்.

"நீ சொல்வதை ஏற்றுக்கொண்டால், கட்டமைப்பிலும், செறிவிலும் உலகின் அனைத்து செம்மொழிகளிலும் மூத்த மேம்பட்ட தொன்மைச் செம்மொழி தமிழ் அத்தகைய உயர்நிலை அடையவில்லை! சுயமரியாதையைத் தொலைத்துவிட்ட தமிழர்களின் முகத்துக்கு நேராகவே தமிழ்மொழியை 'நீசபாஷை' என்று கீழ்த்தரமாகப் பேசும் ஆணவமிக்க ஆரியர்கள், இப்போதும்கூட, தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எனவே, உனது கருதுகோள்(hypothesis) தவறு", என்றேன் நான்.

"அப்படியானால், சமற்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, அரபி மொழிகள் உயர்நிலை அடைந்தது எப்படி?", என்று குறுக்குக் கேள்வியைப் பாய்ச்சினார் நண்பர்.

"சரியான கேள்வி! நீ சொல்லும் மொழிகள் அனைத்தும் சமய, தத்துவ மொழிகள். யூதர் - கிறித்துவர்-களின் மறை-வேத மொழி ஹீப்ரு. இஸ்லாமியர்களின் மறை-வேத மொழி அரபி. கிரேக்கம், லத்தீன் தத்துவ மொழிகள். இம்மொழிகள் அனைத்தும் சமய, தத்துவ மொழிகள் என்பதனால் மட்டும் உயர்நிலை அடைந்தன என்பது மட்டும் உண்மையல்ல! அதைத் தாண்டி, அவை அயல்மொழிகள் என்பதால்தான் ஆட்சியாளர்களும், மேட்டுக்குடியினரும் தூக்கிப் பிடித்தனர் என்பதே உண்மையான காரணம்!", என்றேன் நான்.

மண்ணின் மைந்தர்களை அடிமைப்படுத்தவே அயல்மொழி ஆட்சி!

"ஏன் ஆட்சியாளர்கள் என்றும் அயல்மொழிகளைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்? ஒரே குழப்பமாய் இருக்கிறதே!", என்று அங்கலாய்த்தார் நண்பர்.

"சமயம், இனம், நாடு போன்றவற்றில் உயர்வு-தாழ்வு உருவாக்க முடிந்த ஆட்சியாளர்களாலும், மேட்டுக்குடியினராலும், தாய்மொழியில் உயர்வு-தாழ்வு உருவாக்க முடியாது! ஒரே தாய்மொழி பேசும் பண்டிதரையும், ஆட்டோக்காரரையும் எடுத்துக்கொள்வோம். நிரம்பப் படித்த பண்டிதரை, எழுத்தறிவு இல்லாத ஆட்டோக்காரன் தனது பேச்சுத் திறமையால் மடக்கிவிடுவதை நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்க்க முடியும்!" என்ற என்னை இடைமறித்த நண்பர்,

"எழுத்தறிவில்லாத ஆட்டோக்காரனுக்கு எப்படிப் பேச்சுத் திறமை வந்திருக்க முடியும்?", என்றார்.

தாய்மொழியின் சக்தி!

"அதுதான் தாய்மொழியின் சக்தி! பிறமொழி அறிவு, ஆசிரியர் மூலமாகவோ, அல்லது அம்மொழி பேசுபவர்கள் மூலமாகவோ பெரும் முயற்சிசெய்து மட்டுமே பெறக்கூடியது; ஒரு முயற்சியுமில்லாமல் சரளமாகத் தாய்மொழியில் பேசுகின்றது மூன்று வயதுகூட நிரம்பாத குழந்தை! மூன்று வயது நிறைவடைந்த பிறகே எழுத்தறிவு பெறப் பள்ளிக்கூடம் செல்கிறது அக்குழந்தை!    எனவே, எழுத்தறிவே இல்லாத ஒரு ஆட்டோக்காரன் பேச்சுத்திறமையில் வல்லவனாக இருப்பது தாய்மொழியில் சாத்தியமே! ஆட்சியாளர்கள் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே கற்பிக்கப்படும் அயல்மொழி மூலம் ஆட்சி செய்தால் இதுபோன்ற சூழ்நிலைகளை முற்றிலும் தவிர்த்துவிடலாமல்லவா? உலகெங்கிலும், ஆளும் வகுப்பினர், உயர்குடியினர், புரோகிதர் உள்ளிட்ட ஆதிக்க சக்திகள் அயல்மொழியின் மூலமே ஆட்சி செய்வதன் உள்நோக்கம் இப்போது புரிகிறதா?", என்றேன் நான்.

ஆங்கிலேயனும் ஒரு காலத்தில் வேற்றுமொழி அடிமை!

"உண்மைதான்! நாம்பதான் ஊர்-பெயர், இறைவன்-பெயர், மனிதன்-பெயர் அனைத்திற்கும் சமற்கிருதப் பெயர் வைத்துக் கொண்டாடும் கிறுக்குப் புடிச்சி அலையறோம்! வெள்ளக்காரன் தாய்மொழியான இங்கிலீசை எவ்வளவு கெட்டியாப் புடிச்சிருக்கான் பார்! அவன்ட்டேருந்து நாம பாடம் கத்துக்கணும்!", என்றார் நண்பர்.

"நீ நினைக்கிறதில் பாதிதான் உண்மை! சமற்கிருதப் பெயர்களை நம்பமேலத் திணிச்சது தமிழ் மன்னர்களைக் கைக்குள் போட்டுக்கொண்ட ஆரியர்களும், தமிழினத் துரோகிகளுமே(Quislings). தமிழனைப் போலவே, ஆங்கிலேயனும் ஒரு காலத்துல வேற்றுமொழி அடிமையா இருந்திருக்கான்! 250  ஆண்டுகளாத்தான் ஆங்கிலேயன் முழிச்சுக்கிட்டு இருக்கான்", என்றவனை இடைமறித்து,

"அடப்பாவி! வெள்ளக்காரங்கூட நம்பளைப்போல வீணாப்போன கூட்டந்தானா! யாரும் இதப்பத்திப் பெருசா பேசலையே?!", என்று தன் ஐயத்தை வெளிப்படுத்தினார் நண்பர்.

கி.பி,1362-ல்தான் ஆங்கிலேய மக்களவையில் ஆங்கிலத்தில் உரையாட அனுமதிக்கும் சட்டம் நிறைவேறியது!

"சந்தேகப்படவேண்டாம்! வேற்றுமொழியான சமற்கிருதம் தமிழ்நாட்டின் சமயத்திலும், ஆட்சியிலும் கோலோச்சியதைப்போல்,  'Anglo-Norman French'  என்னும் வேற்றுமொழியே கி.பி.1066-லிருந்து இங்கிலாந்து நாட்டின் ஆட்சிமொழியாக, பாராளுமன்றத்தின் சட்ட மொழியாகப் பல்லாண்டுகள் கோலோச்சியது.  பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாட அனுமதி இல்லை. ஆங்கிலத்தில் உரையாட அனுமதிப்பதற்காக "The Pleading in English Act 1362 (36 Edw. III c. 15)" எனப்படும் சட்டத்திருத்தம் நீண்ட விவாதத்திற்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது; இருந்தும், நடைமுறைக்கு வருவதற்கு ஐம்பது ஆண்டுகள் ஆச்சு! சரியாகச் சொன்னால், ஆங்கிலம் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தின் மொழியாக ஏற்கப்பட்டது பதினைந்தாம் நூற்றாண்டில்தான்.", என்றேன் பதிலுக்கு.

"ஐயோ! வேற்றுமொழி அடிமைப்புத்தி வெள்ளைக்காரனையும் விடல போல இருக்கே!", என்று வியப்பில் மூக்கின்மேல் விரலை வைத்தார் நண்பர்.

வேற்றுமொழிகளால் மாசுபட்ட ஆங்கில மொழிநடை!

"வெள்ளைக்காரனும் Greek-Latin-German-Frenchன்னு வேற்றுமொழிக் கிறுக்குப் புடிச்சி அலைந்து நீண்ட காலங்களுக்குப் பிறகுதான் விழிப்புணர்வு பெற்றான். தற்காலத்தில் Anglo-Norman, Anglo-French மொழிகளை நவீன ஆங்கிலம் முற்றிலுமாக தவிர்த்துவிட்டது என்றாலும், இம்மொழிகளின் சொற்கள் பலவும் ஆங்கிலமொழியில் ஊடுருவி நிலைத்துவிட்டன; மேலும், ஆங்கிலமொழி நடையான - adjective then noun -ங்கறது பல இடங்களிலும் மாறிபோச்சு! இம்மொழிகள்-ல வர்ற  'பெயர்ச்சொல்லுக்குப் பின் உரிச்சொல் (noun then adjective)'-ங்கற நடை, ஆங்கிலத்திலும் பரவியது. காட்டாக, 'attorney general', 'heir apparent', 'court martial' போன்ற பயன்பாடுகளைச் சொல்லமுடியும்!.", என்றேன் நான்.

வேற்றுமொழி அவமானச்சின்னத்தை இன்றும் சுமக்கும் ஆங்கிலேயர்கள்!

270px-Royal_Coat_of_Arms_of_the_United_K

"கடந்த காலம் எப்படியிருந்தாலும், வெள்ளக்காரன் இப்ப நிமிந்து நிக்கறான்ல!", என்றார் நண்பர்.

"எங்கே? வேற்றுமொழி அவமானச்சின்னத்தை இன்னமும் சுமக்கிறது இங்கிலாந்து! இங்கிலாந்து பேரரசி Queen Elizabeth II அணியும் அதிகாரபூர்வ மேலங்கியில் காணப்படும் "Dieu et mon droit" ("God and my right") and the motto of the British chivalric Order of the Garter, "Honi soit qui mal y pense" ("Shamed be he who thinks evil of it") என்னும் வாசகங்கள் Anglo-Norman, Anglo French மொழிகளின் தொடர் ஆதிக்கத்தை உரக்கக் கூவுகின்றன", என்றேன் நான்.

"ஓ! சூத்திராளுக்கு வேதக்கல்வி ஏன் மறுத்தா-ன்றதும், வேதங்கேட்ட சூத்திரா காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தணும்-னு ஏன் சட்டம் போட்டான்னுட்டு இப்போ நன்னா புரியரதுண்ணா!", என்ற நண்பர்,

"வெள்ளக்காரன் முழிச்சுக்கிட்டதாலத்தான் உலகத்தையே கட்டி ஆண்டான். தமிழ்நாட்டுல நாம கொஞ்சம் முழிச்சிக்கிட்டதாலே இந்தியையும் சமற்கிருதத்தையும் எதிர்த்தோம்! மத்த மாநிலத்துல இன்னும் சமற்கிருத மயக்கம் தெளியலன்னு உறுதியாச் சொல்லலாம். ஒண்ணு மட்டும் எனக்கு இன்னும் சுத்தமாப் புரியல!", என்று சற்று இழுத்தார் நண்பர்.

"பரவாயில்ல. என்னன்னுதான் சொல்லேன்", என்றேன் நான்.

"மொழிகளில் இயற்கை புரிந்துவிடு-ன்னு அப்பப்ப சொல்லுறயே! சொல்லாமப் புரியறதுக்கு இதென்ன . . . கலையா? எப்ப சொல்லுவ?", என்று ஒரு ஆப்பு அடித்தார் நண்பர்.

"கட்டாயம் நாளை பேசலாம்!", என்று விடை பெற்றேன்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார் 

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

மொழிகளின் இயற்கை அறிவோம்!

Edited by பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
to insert ! in the title and an image

Share this post


Link to post
Share on other sites

தமிழுடன் எக்காரணம் கொண்டும் ஆங்கில மொழியினை ஒப்பிட முடியாது.

ஸ்காட்டிஷ், வேல்ஸ் நாட்டு மக்களை போலல்லாது ஆங்கிலேயர்கள் தூய இனம் கிடையாது. 2000 ஆண்டுகள் முன்னர், ரோமர்கள் வந்தனர். அவர்கள் 400 ஆண்டுகள் பிரிட்டனை ஆண்டனர். அவர்களது எழுத்துக்  குறியீடுகள், லத்தீன் மொழி, இங்கே இருந்த, சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தென் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த  இருந்து வந்திருந்த வேடுவர்கள் பேசிய கெல்டிக் மொழியுடன் கலந்தது.

ரோமர்கள் வெளியேற, பின்னர் வந்தவர்கள், வட ஐரோப்பியாவில் இருந்து வந்த, ஜூட், ஆங்கிலோ, சாக்சன் இனக்குழுக்கள். இவர்கள் தனித்தனி மொழிகளை பேசினார்கள்.

கடைசியாக, இவை ஒருங்கிணைத்து ஆங்கிலோ சாக்சன்  மொழியாகியது. 

பின்னர், நோர்வே, டென்மார்க்கில் இருந்து வைக்கிங்குகள் வந்தார்கள்... இவர்கள் கொள்ளையர்கள். ஆங்கிலோ சாக்சன் அரசர்களை தாக்கி பிரிட்டனைக் கைப்பட்ட முயன்றாலும் வெல்ல முடியவில்லை. ஆகவே, சாதாரண குடிகளாக தங்கி விட்டனர். ஆங்கிலோ சாக்சன் மொழியுடன், இவர்களின் மொழியும் கலந்து கொண்டது.

பின்னர் 1066 ம் ஆண்டு பிரான்ஸின் நோர்மன் பகுதியில் இருந்து வில்லியம் என்பவரது படை எடுப்பு நிகழ்ந்தது. அவரது ஆடசியின் போது, அரசரும், அதிகாரிகளும் நோர்மன்  பிரெஞ்ச்யும், மக்கள் ஆங்கிலோ சாக்சன் ,மொழியையும் பேசினர்.

மத்தியகாலப் பகுதியில் (1066 - 1485) இரு மொழிகளின் கலவையாக நவீன ஆங்கில மொழி உருவாக தொடங்கியது. 

ஆயினும், 16ம் நூறாண்டில், முதலாம் எலிசபெத் மகாராணியார் காலத்தின் போதே, ஷேக்பியர் முயல்வினால், ஆங்கிலம் முழுமையான மொழியானது.

மக்களிலும் பார்க்க அரச குடும்பமே, மிகவும் அதிகமான வெளிநாட்டுக் கலப்புகள் கொண்டது. காரணம், சார்லஸ் - டயானா திருமணத்துக்கு முன்னர், அரச குடும்பம், மக்களிடையே அல்ல, இன்னோரு அரச குடுப்பத்துடனே தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியும் என்ற சம்பிரதாயம் இருந்தது.

அதன் காரணமாகவே, அரசி ஆன், 18ம் நூறாண்டில், 16 தடவைகள் கருச்சிதைவு உண்டாக்கி   குழந்தை இல்லாமல் இறந்தபோது, ஜெர்மனிய அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரை 1ம் ஜார்ஜ் என்னும் பேரில் சிம்மாதனம் ஏற  வைத்தார்கள். 

அவருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால், Walpole என்பவரை உதவிக்கு வைத்திருந்தார். அவரே பிரிட்டனின் முதல் பிரதமராக 20 ஆண்டுகள் இருந்தார்.( Sir Robert Walpole)

அதற்கு முன்னர் வில்லியம் ஒரேன்ஜ் என்னும் டச்சு நாட்டு இளவரசர், அரசி ஆனின்  மூத்த சகோதரி மேரியினை மணந்து (glorious  revulotion) அரசராக இருந்தார். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லாத படியால் தான் , மேரியின்  சகோதரி ஆன் ராணியாயிருந்தார்.

ஆகவே சொல்ல வருவது என்னெவென்றால், ஆங்கிலம், (ஆங்கில அரச குடும்பமோ) தமிழ் மொழி போல் செம்மொழி அல்ல.

Edited by Nathamuni
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு