Jump to content

உலக சமத்துவமின்மை அறிக்கை 2019: விடையில்லா வினாக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக சமத்துவமின்மை அறிக்கை 2019: விடையில்லா வினாக்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 01:25

உலகம் சமத்துவபுரமன்று. சமத்துவத்துக்கான போராட்டங்களே, உலக வரலாற்றில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், சமத்துவமின்மை தொடர்கிறது; அதற்கெதிரான போராட்டங்களும் தொடர்கின்றன.  

 கடந்த இரண்டு தசாப்தகாலப் பகுதியில், செல்வம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களும் இடையிலான இடைவெளி, தொடர்சியாக அதிகரித்து வந்துள்ளது. செல்வம் உள்ளவர்கள், மேலும் செல்வந்தர்களாக ஆகிறார்கள். ஏழைகள், மேலும் ஏழைகளாகிறார்கள். இதன் பரிமாணங்கள், அதிர்ச்சி அளிக்கத்தக்கன.   

நேற்று முன்தினம், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ஒக்ஸ்பாம்’ நிறுவனம், 2019ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, உலகெங்கும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.   

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள இடைவெளியும் அதனால் ஏற்பட்டுள்ள மோசமான விளைவுகளையும் இவ்வறிக்கை பட்டியலிடுகிறது. 105 பக்கங்களை உடைய அறிக்கை குறித்து, இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் உள்ளவர்கள், குறிப்பாக ஏழைகளுக்காக உழைப்போர், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும்.   

இந்த அறிக்கையைத் தயாரித்த ‘ஒக்ஸ்பாம்’ நிறுவனத்தின் தலைமைப் பதவியில், இலங்கைத் தமிழர் ஒருவர் இருக்கிறார் என்ற செய்தியை இங்கு பதிவிட விரும்புகிறேன்.   

இந்த அறிக்கை பட்டியலிடுகின்ற, முக்கியமான அவதானிப்புகளை முதலில் நோக்கலாம்.   
 உலகின் மிகப்பெரும் பணக்காரர்களின் செல்வம், கடந்தாண்டு மட்டும் 900 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. அவர்கள் நாளொன்றுக்குச் சராசரியாக, 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான செல்வங்களைக் குவிக்கிறார்கள். அதேவேளை, ஏனையோரின் செல்வம் 11சதவீதத்தால் கடந்தாண்டு மட்டும் குறைந்திருக்கிறது.   

 உலகில் உள்ள மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், வறுமையில் வாடுகிறார்கள். அதில், அரைவாசிப் பேர் கிட்டத்தட்ட மிகமோசமான வறுமைக்குள் சிக்கித்தவிக்கிறார்கள்.    

 ஆண்டுதோறும் உலகெங்கும், 262 மில்லியன் குழந்தைகள் பாடசாலைக்குச் செல்ல வழியின்றித் தவிக்கிறார்கள்.  

 அடிப்படை மருத்துவ வசதிகள் இன்மையால், ஆண்டொன்றுக்கு 3.3 மில்லியன் மக்கள் உயிரிழக்கிறார்கள். நாளொன்றுக்கு 10,000 பேர், அடிப்படை மருத்துவ உதவி இன்மையால் இறக்கிறார்கள்.   

 உலகில் செல்வம் படைத்த ஒருசதவீதமானவர்கள், மேலதிகமாக 0.5சதவீத மேலதிக வரி கட்டுவார்களாயின், அனைத்துக் குழந்தைகளையும் பாடசாலைக்கு அனுப்பவும், மருத்துவ வசதிகள் மூலம் அத்தனை உயிர்களையும் காப்பாற்றவும் இயலும்.  

 உலகில் 26 மனிதர்களின் மொத்தச் சொத்து மதிப்பானது, 3.6 மில்லியன் மக்களின் (செல்வமற்ற உலக மக்களின் அரைப்பகுதி) சொத்து மதிப்பை விட அதிகம். இது கடந்தாண்டு 43 மனிதர்களாக இருந்து, இப்போது 26 பேராகக் குறைந்துள்ளது. இதன் அர்த்தம், செல்வம் ஒரு சிலரின் கைகளில் ஏகபோகமாகக் குவிகிறது என்பதாகும்.   

இவை, அடிப்படையில் உலகம் எவ்வாறு செல்வந்தர்களின் சொர்க்கபுரியாகவும், ஏழைகளின் நரகமாகவும் மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது. 

இவ்வாறான ஒரு காலப்பகுதியில், உலகின் அரைவாசிக்கும் மேற்பட்டோர், மிக மோசமான வாழ்க்கையை வாழும் போது, நான் இக்கட்டுரையை எழுதுகிறேன்; நீங்கள் இக்கட்டுரைப் படிக்கிறீர்கள். இந்த அவலத்தை, எவ்வாறு எடுத்துரைப்பது, எவ்வாறு தடுப்பது, இந்நிலையை எவ்வாறு மாற்றுவது? இவை, நாம் ஒவ்வொருவரும் நம்முள் கேட்க வேண்டிய வினாக்கள்.   

செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக...   

இன்றைக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி, பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. பலர் வேலையை இழந்தார்கள்; பலருக்குச் சமூக நலன்கள் வெட்டப்பட்டன.   

பல நாடுகளில், அதிர்ச்சியான பொருளாதாரச் சரிவுகள் ஏற்பட்டன; நாடுகள் வங்குரோத்தாகின. இதன் தாக்கங்கள் இன்றும் உள்ளன. ஆனால், இந்தப் பொருளாதார நெருக்கடியும் அதைத் தொடர்ந்த நிச்சயமற்ற காலங்களும் செல்வந்தர்களை எப்படிப் பாதித்தன, என்பதை நோக்குவது முக்கியம்.   
அவை, தொடர்பான சில தரவுகளையும் இவ்வறிக்கை தந்திருக்கிறது.   

 உலகப் பொருளாதார நெருக்கடி தொடங்கியதன் பின்னரான பத்தாண்டுகளில், பில்லியனர்களின் தொகை இரண்டு மடங்காகியுள்ளது. அதாவது, பொருளாதார நெருக்கடி தொடங்கியபோது இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கைக்கு ஒத்த எண்ணிக்கையிலான பில்லியனர்கள், அடுத்த பத்தாண்டுகளில் உருவாகியுள்ளார்கள்.  

image_eb4f20ffdd.jpg

 உலகின் மிகப் பெரிய செல்வந்தரான ‘அமேசன்’ நிறுவன உரிமையாளர் ஜெவ் பேசோவின் சொத்துமதிப்பின் ஒருசதவீதமானது, 105 மில்லியன் மக்களை உடைய எத்தியோப்பியா, மருத்துவத்துக்கு ஒதுக்கியுள்ள தொகையை விட அதிகம்.  

 அபிவிருத்தி அடைந்த நாடுகளில் செல்வந்தர்களுக்கான வரி, 1970களில் 62சதவீதமாக இருந்து, இப்போது 38சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. இதேவேளை, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில், இது 28சதவீதமாக உள்ளது.   

 மூன்றாமுலக நாடுகளில், குறைவான சம்பளம் பெறும் மக்களே, செல்வந்தர்களை விட அதிகமான தொகையை வரியாகக் கட்டுகிறார்கள்.   

 பிரித்தானியா போன்ற நாடுகளில், 10சதவீதமான ஏழைகள் கட்டும் வரிப்பணமானது, செல்வந்தர்களில்  10சதவீதமானவர்கள் கட்டும் வரிப்பணத்தை விட அதிகம்.   

 உலகில் அதிகசெல்வமுடையவர்கள், 7.6 ட்ரிலியன் டொலர்கள் பெறுமதியான சொத்துகளைப் பதுக்கி, வேறுநாடுகளில் வைத்திருப்பதன் மூலம், வரிகளுக்கு உட்படாமல் பாதுகாக்கிறார்கள். 

இவ்வாறு அபிவிருத்தி அடையும் நாடுகளில் உள்ள செல்வந்தர்கள், வரி செலுத்தாமல் பதுக்கும் பணத்தால், அரசாங்கங்களுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச வரியான 170 பில்லியன் டொலர்கள், ஆண்டொன்றுக்கு மறுக்கப்படுகிறது.   

இத்தரவுகள் சொல்லுகிற செய்தி, மிகவும் எளிமையானது. ஒருபுறம் செல்வந்தர்கள், தங்கள் செல்வங்களை மறைப்பதன் மூலம், அவற்றுக்கு வரி கட்டுவதில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

மறுபுறம், அரசாங்கங்கள் வரிவிலக்குகள் அளிப்பதன் மூலமும் செல்வந்த வரிகளைக் குறைப்பதன் மூலமும் செல்வந்தர்களுக்குப் பணிவிடை செய்கின்றது.   

உலகின் 78 நாடுகளில், கடந்த பத்தாண்டுகளில் பெறப்பட்ட வரிகளின் அடிப்படையில் நோக்குமிடத்து, பல்தேசியக் கம்பெனிகள், நிறுவனங்கள் செலுத்தும் வரி 50சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. செல்வங்களுக்கான வரி வெறும், 10சதவீதத்தாலேயே அதிகரித்துள்ளது.   

அதேவேளை, வருமான வரி 40சதவீதத்தால் அதிகரித்துள்ளது. பொருட்கள் சேவைகளுக்கான வரி 35சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அரசாங்கங்கள் பல்தேசியக் கம்பெனிகளது காவலர்களாகவும் சேவகர்களாகவும் மாறி வருகின்றன.   

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள், சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி ஆகியவற்றிடம் கடன் பெறுவதற்கான நிபந்தனைகளாக இந்தக் ‘கட்டமைப்பு மாற்றங்களே’ கோரப்படுகின்றன. இலங்கை முதல் இந்தியா தொட்டு, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் வரை, இதுவே கதை.   

பெண்களின் உழைப்பை மதித்தல்   

‘ஒக்ஸ்பாம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு விடயம் யாதெனில், பெண்களின் உழைப்பு மதிப்பிடப்படாமல், கவனிப்புக்கு உள்ளாகாமல் போகிறது என்பதாகும்.   

உலகின் பொருளாதாரமானது, பெண்கள் நாள்தோறும், சம்பளமோ, வெகுமதியோ இன்றி, குழந்தைகளைப் பராமரித்தல், வயோதிபர்களைக் கவனித்தல், சமையல் செய்தல், சுத்தம் செய்தல் போன்ற ஏராளமான பணிகளுக்கு மில்லியன் கணக்கான மணித்தியாலங்களைச் செலவழிக்கிறார்கள்.   

அவர்களது பணிகளின் பெறுமதி ஆண்டொன்றுக்கு 10 ட்ரிலியன் அமெரிக்க டொலர்கள். இது உலகின் முன்னணி பல்தேசியக் கம்பெனியான ‘அப்பிள்’ நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தின் 43 மடங்காகும்.   

எனவே, பெண்களின் உழைப்பு அடையாளப்படுத்தல் வேண்டும். அவர்களுக்கான சமூக நலன்களை அரசாங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களே சமூகத்தின் அச்சாணியாக இருக்கிறார்கள்.  அவர்களைச் சுற்றியே பொருளாதாரமும் சமூகமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் தேவைகள் பூர்த்தியாகாவிடத்து, வளமான எதிர்காலச் சந்ததியை, எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று இவ்வறிக்கை கேள்விக்கு உட்படுத்துகிறது.   

இந்தவிடத்தில், முன்னாள் வெனிசுவேல் ஜனாதிபதி ஹீயுகோ சாவேஸை நினைவுபடுத்த வேண்டும். அவரது ஆட்சிக்காலத்தில், வெனிசுவேலாவில், வீட்டில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களின் வேலை அங்கிகரிக்கப்பட்டு, அவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டது. அது இன்றும் அங்கு நடைமுறையில் உள்ளது.   

நிறைவாக, இவ்வறிக்கை ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சி, தேவையான ஒன்று. நாம் வாழும் உலகை, நாம் ஒருகணம் திரும்பிப் பார்க்க வேண்டும். 

இந்தச் செல்வந்தர்களின் இலாபவெறிக்குப் பலியாகப் போகிறோமா அல்லது அதற்கெதிராகப் போராடப் போகிறோமா என்பதை நாம், தீர்மானித்தாக வேண்டும்

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உலக-சமத்துவமின்மை-அறிக்கை-2019-விடையில்லா-வினாக்கள்/91-228462

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.