Jump to content

தேர்தல்களைச் சந்திக்க அஞ்சும் அரசாங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்களைச் சந்திக்க அஞ்சும் அரசாங்கம்

எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, மு.ப. 12:52 Comments - 0

image_1369c2f162.jpgகடந்த வருடம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த, அரசாங்கம் அஞ்சுகிறது என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.   

ஆனால், அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சியாக உண்மையிலேயே செயற்படும் ஒன்றிணைந்த எதிரணியினருக்கும், அத்தேர்தல்களை ஒத்திப் போடும் தேவை இருப்பதாக, அப்போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய சபையின் தலைவராக இருந்த அசோக பீரிஸ் கூறியிருந்தார்.  

அதேபோல், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப்போட, அரசாங்கம் முயற்சிப்பதாக, இப்போது மஹிந்த அணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் கடந்த வாரம், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விவாதம் ஒன்று நாடாளுமன்றத்தில், கோரம் இல்லாமையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து, மாகாண சபைத் தேர்தல்களைத் துரிதமாக நடத்த, எவருக்கும் தேவை இல்லை என்றே தெரிகிறது.   

ஐக்கிய தேசியக் கட்சியே, பிரதான ஆளும் கட்சியாக இருக்கிறது. அக்கட்சிக்குத் தேவை இருந்தால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும் மாகாண சபைத் தேர்தல்களையும் உரிய நேரத்தில் நடத்தியிருக்க முடியும். ஆனால், அக்கட்சி தேர்தல்களை நடத்த அச்சப்படுகிறது என்பது, இப்போது தெளிவாகிறது.   

புதிய கலப்புத் தேர்தல் முறையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்காக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டம் 2012ஆம் ஆண்டே திருத்தப்பட்டது. அப்போது, மஹிந்த ராஜபக்‌ஷவே ஜனாதிபதியாக இருந்தார். அவரது காலத்தில், அந்தத் தேர்தல்களை நடத்துவதற்காக, உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயமும் மேற்கொள்ளப்பட்டது.   

எனினும், அந்த எல்லை நிர்ணய அறிக்கையில், பல குறைபாடுகள் இருந்ததால், அதைச் சீர்செய்வதற்காக, 2015ஆம் ஆண்டு, பதவிக்கு வந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம், அசோக பீரிஸின் தலைமையிலான குழுவொன்றை நியமித்தது. அது, 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தமது அறிக்கையை மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கப்படவிருந்த போதிலும், அரசாங்கம் அக்குழுவுக்குத் தேவையான மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற வசதிகளைச் செய்து கொடுக்காத காரணத்தால், அவ்வறிக்கை 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதமே, அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.   

அதற்கும் 13 மாதங்கள் சென்றதன் பின்னர், அதாவது 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியே தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ஆளும் ஐ.தே.கவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் படு தோல்வியடைந்தன.   

இந்தத் தேர்தல்கள், முன்னர் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டதால், இம் முறை 2015ஆம் ஆண்டிலும் 2016ஆம் ஆண்டிலுமே நடைபெற்றிருக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு ஆளும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இருந்தமையால் அப்போது அந்தத் தேர்தல்களை நடத்தியிருந்தால், அக் கட்சிகள் இவ்வாறான தோல்விகளை அடைந்திருக்க வாய்ப்பில்லை.   

அந்தத் தோல்வியை அடுத்து, ஐ.தே.க தேர்தல்களுக்கு மேலும் பயப்படுகிறது போலும். அதற்கு முன்னரும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும் தயங்கிய அரசாங்கம், பல்வேறு தந்திரங்களைப் பாவித்து மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போட்டு வந்துள்ளது. அதன்படி, ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தல்களை ஒரேநாளில் நடத்தக் கூடிய வகையில், அரசாங்கம் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், அரசமைப்பின்  20 ஆவது திருத்தம் என்றதொரு சட்ட வரைவைச் சமர்ப்பித்தது.   

அரசாங்கம், மாகாண சபைகளின் உரிமைகளைப் பறிக்கும் சில வாசகங்களையும் இந்த அரசமைப்புத் திருத்தத்தில் புகுத்தி இருந்தது. சில சந்தர்ப்பங்களில், மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரமும் மாகாண சபைகள் கலைக்கப்பட்டு இருக்கும் காலத்தில், அவற்றின் அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்க, இந்தச் சட்ட மூலம் வழி வகுத்து இருந்தது.  

அதனால், மாகாண சபைகள் இந்தச் சட்ட மூலத்தை எதிர்த்தன. மாகாண சபைகளின் உரிமைகள் சம்பந்தப்பட்டதால், அச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு, மாகாண சபைகளின் இணக்கமும் தேவைப்பட்டது. அதற்காக, அது மாகாண சபைகளுக்கு அனுப்பப்பட்ட போது, சில மாகாண சபைகள் தமது அதிகாரங்களைப் பறிக்கும் வாசகங்கள் இருப்பதால் அதை நிராகரித்தன.  

எனவே, அந்தப் பிரச்சினைக்குரிய வாசகங்களை சட்ட மூலத்திலிருந்து நீக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதை மாகாண சபைகளுக்கு அறிவிக்கவே, சில மாகாண சபைகள் அதற்கு இணக்கம் தெரிவித்தன. அந்த வாசகங்களை நீக்க எடுத்த முடிவு, அச்சட்ட மூலத்தைப் பரிசீலித்து வந்த உயர் நீதிமன்றத்துக்கும் அறிவிக்கப்பட்டது.   

ஆனால், ஏனோ நீதிமன்றம் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. அதேவேளை, மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. எனவே, சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறுவது மட்டுமல்லாது, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், மக்களாலும் அங்கிகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.  

தாம் நீக்கிவிடப் போவதாக அறிவித்த வாசகங்களை நீக்கிவிட்டு, தேர்தல்களை ஒத்திப் போடாத வண்ணம், அந்த அரசமைப்புத் திருத்தத்தை மீண்டும் மாகாண சபைகளுக்கும் நீதிமன்றத்துக்கும் சமர்ப்பித்து இருந்தால், அரசாங்கம் அந்த அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியிருக்க முடிந்திருக்கும்.   

ஆனால், அதைச் செய்யாது, அரசாங்கம் அந்தத் திருத்தத்தை, ஒட்டு மொத்தமாகத் தூக்கியெறிந்துவிட்டது. எனவே, மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடுவதே, இந்த அரசமைப்புத் திருத்தத்தின் நோக்கம் எனத் தெரிகிறது.  அதேமாதம், அரசாங்கம் மாகாண சபைகளின் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தது.

அது, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, விவாதத்தின் குழு நிலையின் போது, அரசாங்கம் அச்சட்டமூலத்துக்கான திருத்தம் ஒன்றின் மூலம், கலப்புத் தேர்தல் முறை தொடர்பான ஆலோசனைகளையும் சமர்ப்பித்தது. சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிரகாரம், மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதால், மாகாண சபைத் தேர்தல்கள் தாமாகவே ஒத்திவைக்கப்பட்டன.   

அதாவது, அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம், எதைச் செய்யக் கூடாது என உயர்நீதிமன்றம் கூறியதோ, அதையே அரசாங்கம் மற்றொரு சட்டத்தின் மூலம் செய்துவிட்டது. கலப்புத் தேர்தல் முறை தொடர்பான சட்டப் பிரமாணங்கள், தனியான சட்டமூலமாக, உயர்நீதிமன்றத்துக்குச் சென்றால், அதன் மூலமும் முதலில் பதவிக் காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படும் என்ற அடிப்படையில், அந்தச் சட்டமூலமும் நிராகரிக்கப்படலாம்.   

அதனாலேயே அரசாங்கம், அந்த சட்டப் பிரமாணங்களை மற்றொரு சட்ட மூலத்துக்குள், அதன் குழு நிலை விவாதத்தின் போது திணித்து நிறைவேற்றிக் கொண்டது. இதன் மூலமும், அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கவே, ஒரே நாளில் தேர்தல்களை நடத்தும் முயற்சி என்ற போர்வையில், 20ஆவது அரசமைப்புத் திருத்தத்தை முன்வைத்தது என்பது தெளிவாகிறது.  

மாகாண சபைகளுக்காக கலப்புத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, 16 மாதங்களாகி விட்டன. ஆனால் இன்னமும் அத்தேர்தல்களுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகவில்லை. அப்பணிக்காக ஆரம்பத்தில் முன்னாள் நில அளவையாளர் நாயகம் கே. தவலிங்கம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு தமது அறிக்கையை, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில் மாகாண சபைகள் அமைச்சரிடம் கையளித்தது.   

அது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததன் காரணமாக, அவ்வறிக்கையைச் சீர்செய்வதற்காக பிரதமரின் தலைமையிலான ஒரு குழுவிடம் கையளிக்கப்பட்டது.   

சட்டப்படி இரண்டு மாதங்களில் அந்தக் குழு தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க வேண்டும். ஆனால், அது இன்னமும் நிறைவேறவில்லை. இதுவும் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை இழுத்தடிக்க விரும்புகிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.    

பழைய முறைப்படி தேர்தலை ஏன் நடத்த முடியாது?

பதினாறு மாதங்களுக்கு முன்னர், அதாவது 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைப் போலவே, மாகாண சபைத் தேர்தல்களையும் கலப்புத் தேர்தல் முறைப்படி நடத்துவதற்கான சட்டப் பிரமாணங்கள் பிரிதொரு சட்ட மூலத்துக்குள் திணித்து நிறைவேற்றப்பட்டன. எனவே, இப்போது அதுதான் சட்டம்.   

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிக் காலம், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் முடிவடைந்தது. மத்திய, வடக்கு, வட மேல் ஆகிய மாகாண சபைகளின் பதவிக் காலம், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முடிவடைந்தது.   

தெற்கு, மேல் மாகாண சபைகளின் பதவிக் காலம், ஏப்ரல் மாதம் முடிவடைய இருக்கிறது. இவ்வாண்டு செப்டெம்பர் மாதமே, மீதமான ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் முடிவடையும்.   
ஆனால், எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடையாது இருப்பதாலும், அரசாங்கத்துக்கு அந்த விடயத்தில் ஆர்வம் இல்லை என்பது தெளிவாகத் தெரியவிருப்பதாலும், ஏற்கெனவே, பதவிக் காலம் முடிவடைந்த ஆறு மாகாண சபைகளுக்குப் புதிய கலப்பு முறைப்படி தேர்தல்களை நடத்துவது நடக்காத காரியமாகியுள்ளது.  

ஒருவகையில், இதில் நன்மையில்லாமலும் இல்லை. புதிய கலப்புத் தேர்தல் முறை, ஒரு குழப்பமான தேர்தல் முறை என்பது, அம்முறைப்படி முதன் முதலாகக் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மூலம் தெளிவாகியது.   

அம்முறைப்படி தேர்தல் நடைபெற்றால் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்படுகிறது. மாகாண சபைகளே இன்று கேலிக்கூத்தாகிவிட்டுள்ள நிலையில், இவ்வாறு மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும்.  

புதியமுறைப்படி தேர்தல் நடைபெறும் போது, பல சபைகளில் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சிக்கு, அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என்பதும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது தெளிவாகியது.   

இது அவ்வாறான மாகாண சபைகளின் நிர்வாகச் சீர்கேட்டையே ஏற்படுத்தும். எனவேதான், கலப்புத் தேர்தல் முறையை இரத்துச் செய்வது நல்லது என, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து அத்தேர்தல்களின் போது பெரும்பாலான சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அணியின் தலைவரான மஹிந்த ராஜபக்‌ஷவே கூறியிருந்தார்.   

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என இப்போது பல அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்ற தேர்தலுக்கு அஞ்சும் கட்சிகள் மட்டும், புதிய முறைப்படியே தேர்தலை நடத்த வேண்டும் எனக் கூறி வருகின்றன.   

கலப்பு முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றை பழைய முறைப்படி நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அதற்குச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர்.   

அதேவேளை, வேறு சிலரிடம் சட்டத்தை மாற்றாவிட்டாலும் எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடையும் வரை பழைய முறையில் தேர்தலை நடத்த முடியும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இது போன்றதொரு கருத்தை, முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் 2017 ஆம் ஆண்டு வெளியிட்டு இருந்தார்.   

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதமாவதையிட்டு பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, அரசாங்கத்தைக் குறை கூறவே, அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் முஸ்தபா அறிக்கையொன்றின் மூலம், இக் கருத்தை வெளியிட்டு இருந்தார்.  

‘சட்டத்தின் பிரகாரம் எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடையும் வரை அல்லது புதிய சட்டம் பூரணமாக அமுலாகும் வரை, பழைய சட்டப்படி தேர்தலை நடத்த முடியும். ஆனால், எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாவதற்கு முன்னர் முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் பழைய தேர்தல் முறை இரத்தாகிவிட்டது என்றும் புதிய முறை அமுலுக்கு வந்துவிட்டது என்றும் 2013 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்தார். எனவே பழைய முறைப் படி இப்போது தேர்தலை நடத்த முடியாது’ என்பதே முஸ்தபாவின் அந்த அறிக்கையின் சாராம்சமாகும்.  

இக்கருத்தை எவரும் இதுவரை எதிர்க்கவில்லை. எனவே இக்கருத்து மாகாண சபைகள் விடயத்திலும் பொருத்தமாக இருக்க வேண்டும். அதாவது எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகும் வரை, பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் வாதிடலாம்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்களைச்-சந்திக்க-அஞ்சும்-அரசாங்கம்/91-228741

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.