Jump to content

#சுமந்திரன் - சுயசரிதைச் சுருக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

#சுமந்திரன்
"""""""""""""""""""""""
எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக வேண்டுமென்பதே. அதற்காக எவ்வளவோ முயன்றும் பலன் கிட்டவில்லை. ஆனால் பௌதீகவியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. பின்னர் சட்டத்தில் ஆர்வம் திரும்பி, சட்டத்தரணியாகி விட்டேன். தமிழர்களின் அரசியல் உரிமைப் பயணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பங்களிப்பை வழங்கியிருப்பார்கள். எனது சட்டத்துறை அறிவை கணிசமாக பங்களித்திருக்கிறேன். இதுவே, இன்று அரசியலில் இந்த இடத்திற்கு அழைத்தும் வந்துள்ளது.

நான் அரசியலிற்கு வந்த சமயத்தில், ‘சுமந்திரன் நியமன எம்.பி. மக்களால் தேர்வு செய்யப்படவில்லை’ என்று சிலர் பேசினார்கள். எனினும், கடந்த தேர்தலில் இதற்கான பதில் கிடைத்து விட்டது.

படிக்கும் காலத்தில் விஞ்ஞானமே படித்தேன். பௌதீகவியலில்தான் அதிக ஆர்வம் இருந்தது. பொறியியலாளனாக வர வேண்டுமென்பதே வீட்டில் எல்லோரது விருப்பமாகவும் இருந்தது. எனது விருப்பமும் அதுதான். எங்கள் குடும்பத்தில் எந்தப்பக்கத்திலும் சட்டத்தரணி ஒருவர்கூட கிடையாது. ஆகையால் சட்டத்தரணியாகுவது பற்றி யாருமே சிந்தித்தும் பார்க்கவில்லை.

 
1982 இல் கா.பொ.த உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து, பெரதெனியா பல்கலைகழகத்தில் பௌதீகவியல் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பொறியியல் படிப்பதே எல்லோரது நோக்கமாகவும் இருந்தது. அதனால் பெரதெனியா வாய்ப்பை பயன்படுத்தவில்லை. இந்த சமயத்தில் 1983 இனக்கலவரம் வந்தது. நான் இந்தியா சென்றுவிட்டேன். இந்தியாவில் பொறியியல் படிக்கலாமென முயற்சித்து, பொறியியல் கல்லூரிகளை தேடிப்பிடித்து பரீட்சைகள் எழுதினேன். ஓன்றும் சரிவரவில்லை.

ஆனால் நான் சோர்ந்தவிடவில்லை. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தேன். அப்போது மீண்டும் பௌதீகவியல் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. சரி. பௌதீகவியலை படித்துக்கொண்டு, பொறியில் படிக்க கல்லூரியை தேடலாம் என முடிவெடுத்தேன். இரண்டு வருடமாக பௌதீகவியல் படித்துக்கொண்டு, பொறியியல் படிக்க இடம் தேடினேன். இறுதிவரை பொறியியல் படிக்க ஒரு இடமும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் சட்டத்தை பற்றிய ஆர்வம் ஏற்பட்டது.

பௌதீகவியல் கல்வியை நிறுத்திவிட்டு, சட்டத்தை படிக்கலாமென முடிவு செய்தேன். ஆனால் இதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. ஏனெனில் எங்கள் குடும்பத்தில் யாருமே சட்டத்துறையில் இருக்கவில்லை. ‘இது பொய் சொல்லும் தொழில். அதனால் செய்ய வேண்டாம்’ என தடுத்தனர். சட்டம் வேண்டாம், கணக்கியல் படிக்கலாம் என்றார்கள். கணக்கியல் எனக்கு பிடிக்கவில்லை. பெற்றோருடன் பேசி, ஒருமாதிரி சட்டம் படிக்க சம்மதிக்க வைத்தேன்.

 
சட்டக்கல்லூரி பரீட்சை எழுதி சட்டக்கல்லூரிக்கு சேர்ந்து, சட்டத்தரணி ஆகினேன். ஆரம்பத்தில் வர்த்தக, வாணிப வழக்குகளையே அதிகமாக செய்து வந்தேன். முதலாவது பத்து வருடங்கள் இப்படித்தான் சென்றது. இந்த சமயத்தில் உலக வங்கியின் புலமைப்பரிசில் ஒன்று கிடைத்தது. இதன்மூலம் அவுஸ்திரேலியாவில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு வருடம் படித்து விட்டு திரும்பி வந்தேன்.

இதன் பின்னான காலத்தில் கொள்கைகள், தமிழ் மக்களின் உரிமைகள் சம்மந்தமான வழக்குகளில் ஆர்வம் காட்டினேன். அதற்கமைய மனித உரிமைகள் தொடர்பான வழக்குகள் நிறையச் செய்திருந்தேன்.

சம்பந்தன் ஐயாவை எனக்கு முதலில் இருந்தே தெரியும். அவரது மூத்த மகனும் நானும் பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்தோம். நான் கொழும்பில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், என்னைப்பற்றி கேள்விப்பட்டு, சட்டம் சம்பந்தமாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார். இப்படியான தொடர்பு இருந்து கொண்டிருந்தது.

2003இல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக ஆனந்தசங்கரி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை பொறுப்பெடுத்து செய்யுமாறு சம்பந்தன் ஐயா என்னிடம் வந்து கேட்டார். சம்பந்தன், ஜோசெப் பரராஜசிங்கம் ஆகியோருக்காக வழக்கை நடத்தினேன்.

அதே காலகட்டத்தில் வலிகாமம் வடக்கு காணி தொடர்பான வழக்கொன்றை தாக்கல் செய்யுமாறு மாவை சேனாதிராசா அண்ணன் வந்து கேட்க, நிலவிடுவிப்பு தொடர்பான வழக்கை தாக்கல் செய்தேன். அந்த வழக்கு இன்றைக்கும் இருக்கிறது. இந்த வழக்கின் மூலமாகத்தான் ஆரம்பத்தில் நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

இப்படியான வழக்குகள் செய்து கொண்டிருந்தபோது, 2007 இல் கொழும்பிலிருந்த தமிழர்கள் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கமைய இரவோடிரவாக பஸ்களில் ஏற்றி அனுப்பப்படவிருந்தனர். உடனடியாக அன்றே ஒரு வழக்கை தாக்கல் செய்து அதனையும் தடுத்து நிறுத்தினேன். இதன்மூலம்தான் எனது பெயரும் அதிகளவில் வெளியில் தெரிய வந்தது.

 
இந்தக்காலகட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆசனம் இரண்டுமுறை காலியானது. ஜோசெப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டபோதும், ஈழவேந்தன் மூன்றுமாதம் பாராளுமன்றம் செல்லாதபோதும் காலியானது. இரண்டு தடவையும் அதனை நிரப்புமாறு என்னை கேட்டிருந்தார்கள். ஆனால் நான் இதற்கு இணங்கவில்லை. அப்போது மாவை அண்ணனுக்கு சொன்னேன்- ‘நான் அரசியல்வாதியாக வந்தால் நீங்கள் ஒரு சட்டத்தரணியை இழந்துவிடுவீர்கள்’ என. அப்போது கட்சி சம்பந்தமான எல்லா வழக்குகளையும் செய்பவராக மாறியிருந்தென். அரசியல்வாதியான பின்னர் நீதிமன்றம் சென்றால், நீதிபதிகள் என்னை ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்ப்பார்கள். சட்டத்தரணியாக பார்க்க மாட்டார்கள் என்பதால் மறுத்து விட்டேன்.

2009 இல் யுத்தம் முடிந்தபின்னர், அரசியலமைப்பு சட்டமாற்றத்தின் மூலமாகத்தான் எங்கள் பிரச்சனையை தீர்க்கலாமென கொழும்பிலுள்ள சிரேஸ்ட சட்டத்தரணிகளுடன் இணைந்து புதிய பிரேரணை தயாரிக்கும் பணியில் சம்பந்தன் ஐயா ஈடுபட்டார். இதில் நானும் இணைந்திருந்தேன். 2009 நவம்பரில் அது பூர்த்தியானது. இந்த அடிப்படையிலேயே சரத் பொன்சேகா பொதுவேட்பளரான போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதில் நானும் கலந்து கொண்டேன்.

2010இல் பொதுத்தேர்தல் வருமென தெரிந்ததும், தேர்தலில் போட்டியிடுங்கள் என மீண்டும் கேட்டனர். நான் மறுத்து விட்டேன். பின்னர் சம்பந்தன் ஐயா தனியாக என்னை அழைத்து, அரசியலிற்கு வந்து நிறையச் செய்யலாம். தேசியப்பட்டியல் மூலமாவது வாருங்கள் என கேட்டார். அதற்கும் நான் மறுத்துவிட்டேன். ஆனால் பின்னர் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்ததில், அரசியலுக்கு வரலாமென்ற முடிவிற்கு வந்தேன். இரண்டு நாளில் சம்பந்தன் ஐயாவை தொலைபேசியில் அழைத்து முடிவை சொன்னேன். தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாக போடப்பட்டது. இப்படியாக, கட்டாயமாக இழுத்து வரப்பட்டே அரசியலுக்குள் வந்தேன். ஆனால் அரசியலிற்குள் வந்தபின் முழுமையாக செயற்பட்டேன். வழக்குகளும் நிறையச் செய்ய வேண்டியிருந்தது. அதையும் செய்தேன்.

2015 இல் பல சர்வதேச நாடுகளின் தூதரகங்கள், ஐக்கிய தேசியக் கட்சி, வேறு கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ராஜபக்சவின் ஆட்சியை மாற்ற வேண்டுமென செயற்பட்டபோது, அவர்களுடன் இணைந்து நெருங்கிய பங்களிப்பை செய்தேன். நான் கொழும்பில் இருந்ததால் இந்த தொடர்புகளிற்கு வசதியாக இருந்தது.
யார் வேட்பாளர் என்ற கேள்வியெழுந்தபோது, சந்திரிகாவையே திரும்ப ஜனாதிபதியாக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருந்தோம். ஆனால் சந்திரிகா அம்மையார் வேறுவிதமாக சிந்தித்திருந்தார். அந்த சமயத்தில் ஜயம்பதி விக்கிரமரட்ண இங்கிலாந்து சென்று சந்திரிகாவை சந்தித்துவிட்டு திரும்பிவந்து என்னை சந்தித்தார். மைத்திரிபாலதான் சரியான வேட்பாளர் என சந்திரிகா அபிப்பிராயப்படுவதாக சொன்னார். ஆனால் மைத்திரியுடன் இதுபற்றி பேச முன்னர், தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜேவிபியுடன் பேசி அவர்களின் நிலைப்பாட்டை அறிய வேண்டுமென்பதை ஜயம்பதியிடம் சந்திரிகா சொல்லியிருந்தார்.

 
அப்போது சம்பந்தன் ஐயா நாட்டில் இல்லை. தொலைபேசியில் எல்லாம் இதை விவாதிக்க முடியாது. ஆனால் மைத்திரி பற்றிய சம்பந்தன் ஐயாவின் எண்ணம் எனக்கு தெரியும். அதனால், ‘மைத்திரி என்றால் நாங்கள் இணங்குவோம்’ என உடனேயே சொன்னேன். நாங்கள் ஆதரிக்கிறோம் என்றதும், ஜேவிபியுடன் பேசாமலேயே மைத்திரியுடன் பேச சென்றுவிட்டார் ஜயம்பதி. ஆரம்பத்தில் மைத்திரி மறுத்துவிட்டார். அவருக்கு நிறைய பயமிருந்தது. பின்னர் சந்திரிகா வந்து நேரடியாக பேசிய பின்னரே மைத்திரி இணங்கினார்.

மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி முறையில் தீர்வு என முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தமிழர்களிற்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் ஆரம்பத்திலேயே அகற்ற வேண்டுமென நினைத்தோம். அப்போது சிகிச்சைக்காக சம்பந்தன் ஐயா இந்தியாவில் இருந்தார். மைத்திரியுடன் நேரடியாக பேச நானே சென்றேன். அப்போது தொலைபேசியில் தொடர்புகொண்ட சம்பந்தன் ஐயா, ‘வெட்டொன்று துண்டு இரண்டாக கதைச்சு அவரை வெருட்டிப் போடாதையுங்கோ. ஆனால் விசயத்தை தெளிவாக சொல்லிவிட்டு வாருங்கள்’ என்றார்.

‘ஒற்றையாட்சி என்ற சொல்லை மாற்றாமல் விட்டால் நாங்கள் உங்களை ஆதரிக்கமாட்டோம்’ என்று சொல்லப்போகிறேன் என்றேன். ‘இல்லையில்லை… அப்படி சொல்லாதீர்கள். நாங்கள் உங்களிற்கு ஆதரவு தருவதாக இருந்தால் அந்த சொல்லை மாற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்’ என்றார். அதுதான் இராஜதந்திர உரையாடல். அவரிடமிருந்துதான் இதை கற்று கொள்கிறோம். மைத்திரியை சந்தித்து விடயத்தை சொன்னதும், ஒற்றையாட்சியை விஞ்ஞாபனத்திலிருந்து அகற்றினார்.

நாங்கள் ஒப்பந்தம் எதுவும் செய்யாமல் மைத்திரியை ஆதரித்து விட்டோம் என குற்றம்சாட்டுபவர்களும் உள்ளனர். அதுபற்றிய சம்பவம் ஒன்றையும் குறிப்பிட வேண்டும்.

சந்திரிகா அம்மையாரின் வீட்டில் ஒரு சந்திப்பு நடந்தது. சந்திரிகா, மைத்திரி, ரணில் ஆகியோருடன் நானும், சம்பந்தன் ஐயாவும் கலந்து கொண்டோம். ‘அரசியல் தீர்வு தொடர்பாக நாங்கள் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடுவோம். மைத்திரியும் அதற்கு தயாராக இருக்கிறார்’ என்றார் சந்திரிகா. ஆனால் சம்பந்தன் ஐயா மறுத்துவிட்டார். ‘அப்படி ஒரு ஒப்பந்தமும் வேண்டாம். ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டால், சம்பந்தன்-சிறிசேனா இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டனர் என மகிந்த பிரசாரம் செய்வார். அந்த சமயத்தில் நானோ, மைத்திரியோ பொய்யா சொல்வது? அதனால் ஒப்பந்தம் வேண்டாம்’ என சம்பந்தன் ஐயா சொன்னார்.

அப்போது சந்திரிகா ‘சாம்… 60 வருடங்களாக சிங்கள தலைவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். நீங்கள் இன்னுமா எங்களை நம்புகிறீர்கள்?’ என்றார். அதற்கு சம்பந்தன் ஐயா ‘உங்கள் அப்பாதான் முதலாவதாக ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். அதில் கையெழுத்து போட்டதால் எங்களிற்கு எதுவும் கிடைக்கவில்லை. காகிதத்தில் மையை கொட்டுவதால் எதுவும் நடக்காது. இனப்பிரச்சனை தீர வேண்டுமாக இருந்தால், நீங்கள் எங்களை நம்ப வேண்டும். நாங்கள் உங்களை நம்ப வேண்டும். இது எல்லாவற்றிற்கும் முதல் மைத்திரிபால வெல்ல வேண்டும். அவர் வெல்வதென்றால் ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படக்கூடாது’ என்றார்.
மாவை அண்ணன் சில கூட்டங்களில், ‘இதயத்தால் எங்களுக்குள் ஒரு உடன்பாடு உள்ளது’ என சொன்னார்.

2015 தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானித்ததற்கு ஒரு காரணமுள்ளது. அதுவரை நான் ஒரு விடயத்தை சொன்னால், ‘இவர் நியமன எம்.பி. மக்கள் சார்பாக பேச முடியாது’ என ஒரு சாரர் சொல்லிவந்தனர். இதனை ஒரு சவாலாக ஏற்றுத்தான் தேர்தலில் போட்டியிட்டேன். தேர்தலில் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என சொன்ன ஒரேயொரு வேட்பாளரும் நான்தான்.

மிதவாத கொள்கையை வெளிப்படையாகவே சொன்னேன். எனக்கு ஆயுதத்தில், வன்முறையில் நம்பிக்கையில்லை. இது, அதில் ஈடுபட்டவர்களை கொச்சைப்படுத்தும் கருத்தல்ல. எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அவ்வளவே.

மிதவாத போக்கின் மூலம் மக்களின் விடிவை காணலாம் என்ற நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதனை மக்களிடம் சொன்னேன். மக்கள் அதற்கு ஆதரவு கொடுத்தால் மாத்திரமே மக்கள் பிரதிநிதியாக செயற்படுவேன் என சொல்லியே தேர்தலில் போட்டியிட்டேன். எனது கொள்கைகளை தெரிந்து கொண்டு மக்கள் வாக்களித்தனர்.

ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் கரவெட்டியில் நடந்தது. ஒரு பெரியவர் சொன்னார் ‘சுதந்திரதின நிகழ்விற்கு சென்றதற்கு எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களிற்கு வாக்களிக்கமாட்டோம்’ என்றார்.

சுதந்திரதின நிகழ்விற்கு சென்றதற்கான காரணத்தை அவருக்கு புரியவைத்தேன். ‘அங்கு போனது சரியென்றுதான் இப்போதும் நினைக்கிறேன். சரியென நான் நினைப்பதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. ஆனால் நான் சென்றது பிழையென கருத உங்களிற்கு பூரண உரிமையுள்ளது. நான் போனது பிழையென நினைத்தால் தயவுசெய்து எனக்கு வாக்களிக்க வேண்டாம். நான் போனது சரியென நினைத்தால் மாத்திரமே வாக்களியுங்கள்’ என்றேன். பின்னர் அந்தக் கூட்டம் முடிந்து நான் சென்ற பின்னர் அந்தப் பெரியவர் எனக்கு மட்டும்தான் வாக்களிப்பதாக சொன்னதாக கேள்விப்பட்டிருந்தேன்.

வெளிப்படையாக என்னுடைய கருத்துக்களை கூறியிருந்தேன். மக்களும் தெரிவு செய்திருக்கின்றனர். ஆனால் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டி இருக்கின்றது. அதேநேரத்தில் அரசாங்கமும் காலத்தை இழுத்தடிக்கிறது. உரிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமலும் இருக்கிறது. இதனால் மக்களின் அவநம்பிக்கை அதிகரிக்கலாம். அது எங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. மகிந்த காலத்தில் நேரடியாகவே எதிர்த்தோம். அது இலவானது. இப்போதைய சூழ்நிலை மிக கஸ்ரமானது. அரசாங்கத்தை கவிழவும் விடக் கூடாது. அதேநேரத்தில் அரசாங்கத்தின் போக்கை மாற்றுவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையில் இந்த இரட்டைகுதிரையில் சவாரி செய்கிறோம்.

யாரோ

நன்றி FB

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்ஸப்பில் வந்த நண்பரின் கருத்து..

 

இந்த கட்டுரை தமிழ் வாக்காளர் மத்தியில் ஒரு ஆதரவு  அலையை ஏற்படுத்தி விடும் நோக்கோடு மிகத் திட்டமிட்டு வரையப்பட்டுளது.

சுமந்திரன் கடந்த முறை தேர்தலில் நின்ற போது தொழில் முறை  தேர்தல்  பரப்புரையாளர்களை கூலிக்கு வைத்திருந்தார் (இதற்குரிய பணத்தை யார் கொடுத்தது) தேர்தலை மாத்திரம் அல்ல, தொடர்ச்சியாக சுமந்திரனையும் சம்மந்தனையும் தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி வைக்கும் பிரச்சார உத்தி, தொழில் முறை பரப்புரையாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. 

எனது ஊரில் மைக்கேல் விளையாட்டுக்கழகம் என்ற ஒன்று இருக்கிறது அவர்களின் FB யில்  நாள் தவறாமல் சுமந்திரன் மற்றும் அவர்களின் சகபாடிகளான ஆனோல்ட் , சுகிர்தனின் புகழ்பாடி செய்திகள் வரும்.......

பாத்து கொள்ளுங்கள் இவர்கள் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான அனைத்துக் கட்டமைப்புகளிலும் எவ்வாறு தமது ஆதரவு தளங்களை உருவாக்கி விட்டுள்ளார்கள் என்று.

1958  மிகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை 1983 ஐ விட அதன் தாக்கம் மிக அதிகம் ( 1983 யே பலர் பாரிய இன அழிப்பு எனக் கூறுவர் அது தவறு)
கிட்டத்தட்ட 20 வருடங்கள் எமது தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இறுதியில் தமிழரை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்றார்கள் அந்த நேர்மையாவது அவர்களிடம் இருந்தது. (இறுதியில் ஆயுதப்போரும் வந்தது அழிவும் வந்தது). 

2009 மிகப்பெரிய அவலம் .... 10 வருடங்கள் கடந்து விட்டது. இன்னுமொரு 10 வருடங்களில் தமிழரை யாரும் காப்பாற்ற முடியாது என்கின்ற நிலை வரலாம் அப்போதாவது அதனை நேர்மையாக ஒத்துக் கொள்ளும் பக்குவம் சுமந்திரனிடம் இருக்குமா தெரியாது.

அவ்வாறான நிலமை வரும் போது ..... மீளவும் ஒரு சந்ததி ஆயுதப் போருக்குச் செல்லலாம் அப்போது நானோ எனது பிள்ளைகளோ அங்கு செல்லப்போவதில்லை. ஊரில் யார் யாரோ பலரின் பிள்ளைகள் ...... 

விடுதலைப்போராட்டத்தை அஞ்சலோட்டத்தோடு ஒப்பிடுவார்கள் ஆற்றல் உள்ளவன் ஓடுவான் முதலா கடசியா என்பது இங்கு பிரச்சினை இல்லை. இலக்கை ஓடி முடிப்பவர்கள் அனைவரும் வெற்றியாளர்கள் தான்.

ஆனால் நம்ம நா***** ஒவ்வொருதரா அஞ்சல் தடியை வாங்கிக் கொண்டு பின்பக்கமாக ஓடினாலும் பரவாயில்லை கிரண்டை விட்டே ஓடிட்டு எண்ட ஓட்டத்தை பார் எண்டு வீராப்பு பேசுறாங்களே! இது தான் தமிழர்களின்
நிலை ..... என்ன செய்வது?


வேட்டை நாய்களை வளர்த்தோம் வேட்டையாடின...
வேட்டை நாய்களை வாங்கினோம் - அவை நம்
வேட்டியை உருவின...

Link to comment
Share on other sites

ஆஹா அருமை , செய்வது பொறுக்கி வேலை , படிப்பது சிவபுராணம் ...
கரவெட்டியில் இவர் வந்தால் .... பாதுகாப்பு இல்லாமல் வர சொல்லவும் ...அவ்வளவு கோபத்தில் மக்கள் இருக்கின்றார்கள் ....

அடுத்த தேர்தலுக்கு இவரின் எடுபிடிகள் செய்த பிரசங்கித்தனமே இது ..... வெட்கம் இல்லை இதனை எழுத்துவதட்கு ...துரோகிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.