Jump to content

சின்னதம்பி யானையின் இந்நிலைக்கு யார் காரணம்? - சில புரிதல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ்
யானைபடத்தின் காப்புரிமை Getty Images

சின்னதம்பி இந்த வார்த்தையைதான் 2,3 நாட்களாக செய்தியிலும், சமூக ஊடகங்களிலும் கேட்டும் பார்த்தும் வருகிறோம்.

பொதுவாக பிற விலங்குகளைக்காட்டிலும் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு சற்றே அதிகம். பார்க்க பார்க்க சலிக்காத ஒர் உயிரி அது. எப்போது பார்த்தாலும் அது நமக்கு ஒரு புது அனுபவத்தையே வழங்கும்,

அப்படியான களிறுக்கு நாம் செய்ததென்ன?

அதன் வாழ்விடத்தை அழிக்கிறோம். அதன் வழித்தடங்களை ஆக்கிரமிக்கிறோம். அதன் வாழ்விடத்தில் பயிர் செய்து, பின் 'யானைகள் அட்டகாசம்' என புகார் தெரிவிக்கிறோம். நெருப்பை கொளுத்தி அதன் மீது வீசுகிறோம்.

வளர்ச்சியின் சுயநலத்தினால், அது இறந்தால், அது நமக்கு மற்றொரு செய்தி அவ்வளவுதான்.

சின்னதம்பி ஆகிய நான்

தனது இருப்பிடத்தையும், உணவையும் தேடி அலைந்து கொண்டிருக்கும் முயற்சியில் மனிதர்களால் மீண்டும் மீண்டும் துரத்தி அடிக்கப்படும் ஒரு காட்டு யானைதான் இந்த சின்னதம்பி.

இந்த சின்னதம்பி யானை காட்டுப் பகுதியைவிட்டு விவசாயப் பகுதிகளில் இறங்கி விவசாயிகளின் வாழ்வாரதாரத்தை சேதம் செய்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே, சின்னதம்பி மற்றும் விநாயகன் என்ற யானையை பிடித்து காட்டுப் பகுதிக்குள் விட வனத்துறை முடிவு செய்தனர். விநாயகன் என்ற யானையை பிடித்து முதுமலை பகுதியிலும், சின்னதம்பியை பிடித்து ஆனைமலை பகுதிகளிலும் கொண்டு விட்டனர் வனத்துறையினர்.

விநாயகன் முதுமலையிலிருந்து திரும்பி வரவில்லை அது அந்த சூழலுக்கு பழகி கொண்டது.

காடுகளில் ஒடி திரிந்த சின்னதம்பி, துருதிரஷ்டமாக விளைநிலங்களின் பயிருக்கு பழக்கப்பட்டு போனதால் மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்கே வருகிறது.

ஆனால் அதற்காக சின்னதம்பி எந்த ஒரு நபருக்கும் எந்த ஒரு தீங்கையும் இழைக்கவில்லை.

சின்னதம்பி தொடர்பான தவறான புரிதல்கள்

சின்னதம்பி விஷயத்தில் பல தவறான புரிதல்கள் உள்ளன என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் ஓசை காளிதாஸ்.

யானைகள்படத்தின் காப்புரிமை Getty Images

எல்லா யானைகளையும் கும்கி யானையாக மாற்றிவிட முடியாது என்கிறார் அவர்.

"யானைகளுக்கு பயிற்சி அளித்து அதனை வளர்ப்பு யானைகளாக மாற்ற முடியும். ஆனால் எல்லா யானைகளையும் கும்கியாக மாற்றமுடியாது. ஏனென்றால் காட்டு யானையை விரட்டும் தைரியம் அனைத்து யானைகளுக்கும் வந்துவிடுவதில்லை" என்கிறார் காளிதாஸ்.

தடாகம் பகுதியில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சின்ன தம்பி யானை குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து கொண்டிருந்தது. அதாவது பயிர்களை மட்டுமே சாப்பிட்டு பழகிய யானையாக அது மாறிவிட்டது. வனத்துறை சின்னதம்பியை காட்டுப் பகுதிக்குள் விரட்ட பல்வேறு முயற்சிகளை செய்தது. ஆனாலும் அது விவசாய பகுதிகளுக்கே மீண்டும் மீண்டும் வந்தது.

யானைபடத்தின் காப்புரிமை Getty Images

"சின்னதம்பியை விட்ட இடம் அடர்ந்த காட்டுப் பகுதிதான், ஆனால் அந்த காட்டு யானை பயிர்களை சாப்பிட்டு மட்டுமே பழகிய காரணத்தால் அது காட்டு பகுதியை விட்டு திரும்பி வந்துவிட்டது." என்கிறார் காளிதாஸ்.

"யானையை விரட்டுவது என்பது அதற்கான துன்பமே தற்போது அது காட்டுக்குள் சென்று அங்கேயே இருந்துவிட்டால் சரி இல்லை என்றால் அதை வளர்ப்பு யானையாக மாற்றுவதுதான் சின்னதம்பிக்கு நல்லது" என்கிறார் ஓசை காளிதாஸ்.

இதை ஒரு யானையின் பிரச்சனையாக மட்டுமே பார்க்காமல் யானைகளுக்கான இருப்பிடத்தை சரியாக அமைத்து தருவதே இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும் என்கிறார் காளிதாஸ்.

கும்கியுடன் விளையாடும் சின்னதம்பி

சின்னதம்பி துன்பப்படுத்தப்படுத்தப்படுகிறதா என்று வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, சின்னதம்பி தனது உணவுகளை வழக்கமாக உண்பதாகவும், கும்கியுடன் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் அதனை யாரும் துன்புறுத்தவில்லை என்றும் தெரிவிக்கிறார் உடுமலைப்பேட்டையை சேர்ந்த வனத்துறை அதிகாரி தனபாலன்.

யானை

"சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எந்தவித அதிகாரபூர்வ ஆணையும் எங்களுக்கு வரவில்லை. தற்போதைக்கு கும்கி யானையை வைத்து சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விடுவதற்கே எங்களுக்கு ஆணை வந்துள்ளது" என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் சின்னதம்பி அதன் குடும்பத்தை தேடி அலைகிறது, 100 கிமீ தூரம் சுற்றுகிறது என்று வரும் செய்திகள் குறித்து கேட்டபோது, "ஒரு ஆண் யானை தனது 20 வயதுகளில் குடும்ப பிணைப்பைவிட்டு தனியாகதான் இருக்கும்" என்கிறார் தனபாலன்.

மக்களோடு ஒன்றிப்போன சின்னதம்பி

சின்னதம்பியை ஜேசிபி மூலமும், கும்கியானைகளை கொண்டும் இடமாற்றம் செய்த காட்சிகளும், அது ஓடி திரியும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டபின் மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்தது.

அதன்பின் சமூக ஊடகங்களில் சின்னதம்பியை காப்பாற்ற வேண்டும் என்ற பகிர்வுகள் பெரிதும் பகிரப்பட்டன.

சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு சின்னதம்பியை கும்கியாக மாற்றும் முடிவு இல்லை என தெரிவித்தது.

இந்நிலையில், சின்னதம்பி பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு Savechinnathambi என்ற பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

"அந்த பகுதி முழுவதுமே யானைகளுக்கான வழித்தடம். அங்கு பல ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்துள்ளன. முறைகேடான செங்கல் சூளைகள் பல இயங்கி வருகின்றன. மேலும் சின்னதம்பி மற்றும் விநாயகன் போன்ற யானைகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இம்மாதிரியான செங்கல் சூளைகளில் மணல் எடுத்தவர்களுக்கு யானைகள் தடங்கலாக இருப்பதால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என்கிறார் சின்னதம்பு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம்.

கும்கியாக மாறுமா காட்டு யானை?

"கும்கியாக மாற்றுவது ஒரு யானையை கடும் கொடுமைக்கு உட்படுத்துவதே" என்கிறார் வழக்கறிஞர் பன்னீர்செல்வம்.

யானைபடத்தின் காப்புரிமை Getty Images

ஒரு யானை முப்பது வருடங்களாக வந்து போன இடத்தை என்றும் மறப்பதில்லை. ஆனால், வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டால் யானைகள் வழிமாறி வருகின்றன.

"இதுமாதிரி கும்கியாக பயிற்சியளிக்கப்பட்ட மதுகரை மகாராஜா என்ற யானை மன உளைச்சலால் இறந்தவிட்டது அந்த நிலை சின்னதம்பிக்கு வந்துவிடக்கூடாது" என்பது எங்கள் எண்ணம் என்கிறார் பன்னீர் செல்வம்.

இவரின் கூற்றுக்கு மாறாக உள்ளது கும்கி பயிற்சியாளர் கிருமாறன் கூற்று, கும்கியாக ஒரு யானையை பயிற்றுவிப்பது பயிற்சி அளிக்கும் பாகன்களுக்கே கடினம் யானைகளுக்கு அதில் எந்தவித சிக்கலும் இல்லை என்கிறார் அவர்.

சுரண்டப்படும் பூமி

யானைகளுக்கான வழித்தடங்களை நாம் ஆக்கிரமித்துவிட்டு அது நம் வாழ்வாதாரத்தை அழிக்கிறது என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என மனிதன் நினைப்பதனால்தான் இத்தனை பிரச்சனை இந்த உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்துக்கும் உயிர்வாழ்வதற்கான அனைத்து உரிமையும் உண்டு ஆனால் மனிதன் அதை மறந்து தம்மால் ஆன மட்டும் இயற்கையை சுரண்ட முயற்சித்து வருகிறான்.

https://www.bbc.com/tamil/india-47126159

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.