• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Justin

மலேரியா போய் கஞ்சா வந்தது! 

Recommended Posts

மலேரியா போய் கஞ்சா வந்தது! 

உலகளாவிய ரீதியில்  மக்களின் ஆரோக்கியத்தைக் குறைக்கும் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்ந்தால் வளர்ந்த மேற்கு நாடுகளிலும் அபிவிருத்தியடையாத ஆபிரிக்க, ஆசிய நாடுகளிலும் வெவ்வேறு விதமான காரணிகள் பிரதானம் வகிப்பதைக் காணலாம். மேற்கு நாடுகளில், மூன்றில் ஒரு பங்கினர் உடல் எடை அதிகரித்தவர்களாகவும் அதனால் வரும் உடல் நோய்களால் அவதியுறுவோராகவும் உள்ளனர்: இதய நோயும், புற்று நோய்களும் முதன்மையான மரண காரணிகளாக அமெரிக்காவில் இருக்கின்றன. ஆபிரிக்காவிலும் அபிவிருத்தியடையாத தெற்கு-தென்கிழக்காசிய நாடுகளில் தொற்று நோய்கள் முதன்மையான சவால்களாக இருக்கின்றன. நீர்மூலம் பரவும் வயிற்றோட்ட வகை நோய்கள் ஒரு புறமும், பூச்சிகளால் பரவும் மலேரியா போன்ற இரத்தத் தொற்றுகள் மறு புறமும் இந்த ஏழை நாடுகளைப் பந்தாடுகின்றன. 

இலங்கையில் வசித்த வேளையில் மலேரிய காய்ச்சல் வந்து அவதிப் பட்டோருக்கு அந்தக் காய்ச்சலின் அனுபவம் சட்டென்று நினைவில் வரும்- அந்தளவுக்கு உடலை வருத்தி முறித்துப் போடும் காய்ச்சல் அது! காய்ச்சல் அப்படியென்றால் அத்ற்கு எடுத்துக் கொள்ளும் குளோரோகுயின் மாத்திரையின் கசப்புத் தன்மை அதை விடக் கொடுமையானது-வாந்தி வர வைப்பது. மலேரியா எதிர்ப்பு அமைப்பு (Anti Malaria Campaign) என்ற அரச நிறுவனம் 1930 இல் இருந்து ஆற்றிய பணியின் விளைவாக 2016 இல் உலக சுகாதார அமைப்பு இலங்கையை "மலேரியா ஒழிக்கப் பட்ட" நாடாகப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்தப் பிரகடனம் நல்ல விடயம் என்றாலும், அது நிரந்தரமான ஒன்றல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டில் பரவிய மலேரியா நோயாளிகள் யாரும் கண்டறியப் படாவிட்டால், உலக சுகாதார அமைப்பு இந்தப் பிரகடநதை வழங்கும்: இலங்கையில் 2012 இலிருந்து மலேரியா கேஸ்கள் பதிவு செய்யப் படவில்லை என்பதே இதன் அர்த்தம். நுளம்பினால் மலேரியா பரவுகிறது, அந்த வகையான நுளம்புகள் இன்னும் இலங்கையில் இருக்கின்றன- இதனால் மலேரியா அபாயம் நீங்கி விடவில்லை! 

இன்னும் ஒரு படிமேல் போய், விளக்கமாக நோக்கினால், மோசமான மலேரியா நோய் பரவும் நாடாக இலங்கை  மாறக்கூடும். மலேரியா நோயை உருவாக்கும் கிருமி பிளாஸ்மோடியம் எனப்படும் ஒரு ஒற்றைக் கல உயிரினம். தென்னாசியாவில் மலேரியாவை உருவாக்கும் பிளாஸ்மோடியம் (Plasmodium vivax) வகையை விட தீவிரமான நோயை ஏற்படுத்தும்  பிளாஸ்மோடியம் (Plasmodium falciparum) இனம் ஆபிரிக்க நாடுகளிலும் கிழக்காசியாவிலும் பரவலாகக் காணப்படுகின்றது. மூளை மலேரியா (cerebral malaria) எனப்படும் இந்த மோசமான மலேரியா, ஆபிரிக்காவில் மட்டும் வருடாந்தம் 400,000 மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. இது ஏன் இலங்கையில் பரவலாக இல்லை? இந்த இடத்தில் தான் vector எனப்படும் நோய் காவியான நுளம்பின் பங்கு முக்கியமாகிறது. மூளை மலேரியாவைப் பரப்பும் நுளம்பினம் சாதாரண மலேரியாவைப் பரப்பும் நுளம்பினத்தை விட வேறான ஒரு வகை. இந்த வகை நுளம்புகள் இலங்கையில் இருப்பதாக அறியப் படவில்லை- ஆனால் இந்த நிலை 2017 இல் மாறுவதற்கு, மன்னாரில் நடத்தப் பட்ட நுளம்பினப் பரம்பல் பற்றிய ஆய்வு கட்டியம் கூறுகிறது. அந்த   ஆய்வில், மன்னாரின் பல பிரதேசங்களில் எடுக்கப் பட்ட நுளம்பின் குடம்பி மாதிரிகள் (இவை நுளம்பின் இளம் வடிவங்கள், இவையே தேங்கிய நீரில் வாழ்பவை) அனோபிலிஸ் ஸ்ரிபென்சி (Anopheles stephensi) என்ற புது நுளம்பினத்தின் குடம்பிகளாக அடையாளம் காணப்பட்டன. கவலைக்குரிய விடயம் என்னவெனில், இந்த வகை நுளம்புகள் கிழக்காசிய நாடுகளில் மூளை மலேரியாவைப் பரப்பும் இயல்புடையவையாக அறியப் பட்டிருக்கின்றன என்பது தான். பெரும்பாலும் குடி தண்ணீர்க்கிணறுகளில் அடையாளம் காணப்பட்ட இந்த நுளம்பினக் குடம்பிகள் உண்மையிலேயே மூளை மலேரியாவை இலங்கையிலும் பரப்புமா என்பதை எதிர்வரும் வருடங்களில் நடக்கும்  மலேரியாக் கண்காணிப்புத் தான் தீர்மானிக்கும். 

இலங்கை ஒரு தீவாக இருப்பதால் பல தொற்று நோய்களைக் கட்டுப் படுத்துவது ஒப்பீட்டளவில் இலகுவானது (மாலை தீவுகளும் மலேரியா ஒழிக்கப் பட்ட ஒரு நாடு என்ப்தை இங்கே குறிப்பிட வேண்டும்). எப்படி புது நுளம்பினம் வந்திருக்கக் கூடும்? தற்போதைய மாதிரிகளின் படி, இந்தியாவின் வழியாகவே இது இலங்கைக்கு வந்திருக்கலாம்  என்ற ஊகம் இருக்கிறது. இங்கே தான் இலங்கையின் மன்னாருக்கும் இந்தியாவின் தென் முனைக்கும் இடையே நடைபெறும் கட்டுப் பாடற்ற கடற் போக்கு வரத்தின் இன்னொரு ஆபத்து வெளிப்படுகிறது. எல்லை தாண்டிய மீன்பிடி, பொருட் கடத்தல், தினசரி  செய்திகளில் அறிக்கையிடப் படும் கேரள கஞ்சாக் கடத்தல் என்பன வடக்கிலும் இலங்கையிலும் பேரிடர்களை உருவாக்கும் நோய்களையும் நாட்டினுள் கடத்திவருகின்றன. 

இத்தகைய கடத்தல் குற்றச் செயல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்தை வடக்கின் கடற்பரப்பைக் கட்டுப் படுத்தும் காவல்படையினர் எப்போது உணர்வர் என்பதே இப்போதுள்ள கேள்வி!  

ஆதாரமும் மேலதிக தகவல்களும்: 

1. Genotype and biotype of invasive Anopheles stephensi in Mannar Island of Sri Lanka. Surendran et al., Parasit Vectors, 2018, 11:3 

2. First record of Anopheles stephensi in Sri Lanka: a potential challenge for prevention of malaria reintroduction. Dharmasiri et al., Malaria Journal, 2017, 16:326

  • Like 11
  • Thanks 3

Share this post


Link to post
Share on other sites

மலேரியா போய் டெங்கு எப்படி வந்தது?அதையும் எழுதுங்களேன்.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கட்டுரையை வாசிக்கும் போது மலேரியா என்ற வார்த்தை கொஞ்சம் பழைய நினைவுகளை உலுக்கி விட்ட்து!

ஒரு ஆபிரிக்க நாடு ஒன்றில் முதலாவது வாரம் என்று நினைக்கிறேன்!! அந்த நாட்களில் எம்மவரிடையே ஒரு எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு ஒன்று இருந்தது! இப்போது அது மிகவும் குறைந்து விட்ட்து என்று நினைக்கிறேன்! புதிதாக ஒருவர் அங்கு வரும்போது....அவருக்கு முன்னால் வந்தவர்கள் ...எல்லா விதமான உதவிகளையும்...எந்த விதமான  நிபந்தனைகளுமின்றிச்  செய்வார்கள்! சாதி மதம் கடந்து..சில        வேளைகளில்...இனம்  கூடக் கடந்து அமையும்! இவ்வாறான சந்தர்ப்பமொன்றில்....ஒருவரின் வீட்டுக்கு,,இரவு உணவுக்காகச் சென்ற போது...இன்னொருவர் கூனிக் குறுகியபடி கட்டிலில் போர்வையால் போர்த்த படியே படுத்திருந்தார்! அவரது உடல் பலமாக நடுங்கிக் கொண்டிருந்தது! என்ன நடந்தது என்று.....,நாங்கள் விசாரிக்க....அவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்! இப்போது வெறும் மேலுடன்...லண்டனில் பிக்காடில்லி சேர்க்கஸில் நடந்து கொண்டிருக்கின்றார் என்று பதில் வந்தது!

பின்பு வந்த நாட்களில் மலேரியா எவ்வளவு கொடுமையானது என்பதை அனுபவ பூர்வமாக அறிய முடிந்தது! இந்திய பல் நாட்டு நிறுவனங்கள் அனுப்பும் காலாவதியான மருந்துக்குளிசைகளே அங்கு கிடைத்தன! ஒரு மாதிரித் தப்பி வெளியால வந்த பிறகு...லண்டனில் ஒரு குடும்ப வைத்தியரிடம் பேசிக் கொண்ருந்தபோது அவர் சொன்ன தகவல்...இன்னும் மலேரியா கிருமிகள் என்னுடன் வாழ்கின்றன என்று அறிந்த போது....மிகவும் அதிர்ச்சியாக இருந்தது! 

உண்மையில்...மலேரியா நோய் மிகக் குறைந்த செலவுடன்...ஆபிரிக்காவியிருந்து முற்றாகவே அகற்றப்பட்டு இருக்க முடியும்!

பல் நாட்டு நிறுவனங்கள்.....விடடால்...தானே!

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, Justin said:

இங்கே தான் இலங்கையின் மன்னாருக்கும் இந்தியாவின் தென் முனைக்கும் இடையே நடைபெறும் கட்டுப் பாடற்ற கடற் போக்கு வரத்தின் இன்னொரு ஆபத்து வெளிப்படுகிறது.

நல்லதொரு பதிவு,

Share this post


Link to post
Share on other sites
On 2/9/2019 at 4:42 PM, ஈழப்பிரியன் said:

மலேரியா போய் டெங்கு எப்படி வந்தது?அதையும் எழுதுங்களேன்.

ஈழப்பிரியன் அண்ணை, நல்ல கேள்வி, அதைப் பற்றி ஒரு நெடுங் கதையே எழுதலாம், ஆனால் அளவுக்கதிகமான உயிரியல் வாசிப்பவர்களைச் சலிக்க வைத்து விடும். எனவே இந்தக் குறு விளக்கம்: 
மலேரியா மட்டுமல்லாமல் டெங்குவும் சிக்குன்குன்யாவும் கூட நுளம்புகளால் பரவும் நோய்களே. இவையிரண்டும் வைரஸ் நோய்கள். ஏடிஸ் (Aedes) எனப்படும் நுளம்பு வகையினால் பரவும் வைரசுகள் இவை! இந்த வைரசுகளும் அதைப் பரப்பும் நுளம்பு வகையும் இலங்கையில் நீண்ட காலமாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், வைரசுகளின் வீரியம் ஏதோ மாற்றத்தினால் அதிகரித்து இந்த நோய்கள் பெருவாரியாக 2006/2009 இல் இருந்து தான் இலங்கையைத் தாக்க ஆரம்பித்திருக்கின்றன. 

சிக்குன்கூன்யா இலங்கையில் 2006 இல் பரவுவதற்கு முதல் 4700 கி.மீ தொலைவில் இருக்கும் மடகஸ்கார் தீவில் பரவ ஆரம்பித்து, மொறீசியஸ், ரியூனியன் வழியாக இந்தியா வந்து ஒரு கலக்குக் கலக்கி இலங்கைக்கு வந்திருக்கிறது! 

டெங்கு வைரசைப் பொறுத்த வரையில் நான்கு வகைகள்- அவற்றில் முதல் வகை வைரசு (DENV-1) தான் வீரியம் பெற்று 2009 இல் இருந்து பரவலாக மத்திய மலை நாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பரவி வருகிறது. மலேரியாவை விட, குழந்தைகளில் மரணத்தை அதிகம் ஏற்படுத்தக் கூடிய டெங்குவை ஒழிக்க பிரதான வழியாக அதைக் காவும் நுளம்பினங்களை அழிக்க முயல்கிறார்கள். இதில் ஒரு சுவாரசியமான தகவல்: டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் நுளம்புகளின் முட்டைகளும் குடம்பிகளும் ரொக்சோறிங்கைற்ஸ் (Toxorhynchites splendens) என்ற இன்னொரு நுளம்பிற்கு மிகவும் பிடித்த சாப்பாடு. இதனால், மனிதரைக் கடிக்காத இந்த நுளம்புகளை டெங்கு காவி நுளம்புகளைக் கட்டுப் படுத்தப் பாவிக்கிறார்கள்.    

  • Thanks 2

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, Justin said:

ஈழப்பிரியன்ண்ணை, நல்ல கேள்வி, அதைப் பற்றி ஒரு நெடுங் கதையே எழுதலாம், ஆனால் அளவுக்கதிகமான உயிரியல் வாசிப்பவர்களைச் சலிக்க வைத்து விடும். எனவே இந்தக் குறு விளக்கம்: 

உங்கள் குறுகிய விளக்கத்திற்கு நன்றி ஜஸ்ரின்.

Share this post


Link to post
Share on other sites

கடலால் பிரிக்கப்பட்டு தீவாக இருப்பதால் நுளம்பில் இருந்து கஞ்சாவரை உள்ளே வருவதற்கு சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றையும் தாண்டி எல்லாமே வந்துகொண்டுதான் இருக்கின்றது.

தினமும் கஞ்சா, ஹெரோயின் செய்திகள் வருவதால் இலங்கை அதிலும் குறிப்பாக வடக்கு போதைப்பொருள் கடத்தலின் முக்கியபகுதியாகி வருகின்றது. அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் ஆதரவுடன் இது பெருகிவருகின்றது. எங்கே போய்முடியுமோ தெரியவில்லை.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this