Sign in to follow this  
கிருபன்

திருப்பூர் மண்ணுக்கு தலை வணங்குகிறேன்: மோடி

Recommended Posts

திருப்பூர் மண்ணுக்கு தலை வணங்குகிறேன்: மோடி

43.jpg

திருப்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகையில் திருப்பூர் மண்ணுக்கு தலை வணங்குவதாக தெரிவித்தார்.

இன்னும் 2 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இன்று காலை ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அதன்பிறகு திருப்பூர் கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் 2.45 மணி அளவில் கோவை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாஜக கூட்டம் நடைபெறும் திருப்பூர், பெருமாநல்லூர் பகுதிக்கு வந்தடைந்தார். அங்கு அவருடைய ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக சிறப்பு ஹெலிபேட் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

நலத்திட்ட விழாவில் மோடி

பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மற்றொரு மேடையில் நடந்தது. இந்த விழாவில் திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. மேலும், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் தாமஸ் மவுண்ட் வரையிலான மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். அதுமட்டுமின்றி, திருச்சி ஒருங்கிணைந்த புதிய விமான நிலையக் கட்டடம், சென்னை விமான நிலையம் நவீனமயமாக்கல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். எண்ணூர் பிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் பாதை சேவையையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சபாநாயகர் தனபால், மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மண்ணுக்கு தலை வணங்குகிறேன்

இதையடுத்து நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். திருப்பூர் குமரன் மற்றும் தீரன் சின்னமலையின் துணிச்சலும், தைரியமும் இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை வழங்குவதாகவும், இந்த மண்ணுக்கு நான் தலை வணங்குகிறேன் என்றும் மோடி கூறினார். அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், “நமோ என்ற சொற்களைத் தாங்கி டீஷர்ட்டுகள் போன்ற ஆடைகள் மீண்டும் இப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆடைகள் இந்த திருப்பூர் மண்ணில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொழில்முனைவோர் மற்றும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் மக்களைக் கொண்டது திருப்பூர்” என்றார்.

மேலும், “நாட்டின் பாதுகாப்பில் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை. அனைத்திலும் ஊழல் செய்துள்ளது. புதிதாக அமையவுள்ள 2 பாதுகாப்பு தொழில்துறை பூங்காக்களில் ஒன்று தமிழகத்தில் அமையவுள்ளது. இதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஊழலுக்கு முடிவு கட்டியுள்ளது பாஜக. இதுபோன்ற ஒரு அரசைத்தான் காமராஜர் விரும்பினார். காமராஜர் விரும்பிய ஆட்சியை நான் கொடுக்கிறேன். பதவி உயர்வில் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது காங்கிரஸ், திமுக ஆட்சியில்தான். முன்னேறிய சமூகத்தினருக்கு பொருளாதார அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டால், ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்று வருவோருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நமது உயர்ந்த எண்ணத்திற்கேற்ப தமிழ்நாடும், இந்தியாவும் வளர்ச்சியடையும்” என்றார்.

வேண்டும் மோடி-மீண்டும் மோடி

முன்னதாக வரவேற்புரையாற்றிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், “கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பார்கள். பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற கால் எங்கே இருக்கிறது என்கிறார்கள் சிலர். ஆனால் பாஜகவுக்கு ஆல விருட்சமாக தமிழக மக்கள் இருப்பார்கள். விவசாயிகளைப் பற்றி மோடிக்கு அக்கறையில்லை என்று திமுக சொல்கிறது. இங்கு இவ்வளவு விவசாயிகள் வந்து, விவசாயிகளின் தோழன் மோடி என்று காட்டியிருக்கிறார்கள். வேண்டும் மோடி-மீண்டும் மோடி” என்றார்.

மோடி வருகைக்கு எதிர்ப்பு

இதனிடையே மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மதிமுக கட்சியினர் வைகோ தலைமையில் திருப்பூரில் இன்று கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினரை கலந்துசெல்ல வலியுறுத்தியும், அவர்கள் கலைந்துசெல்ல மறுத்ததால் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில் மதிமுக தொண்டர் ஒருவர் அருகிலிருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். சுமார் 300க்கும் மேற்பட்ட மதிமுகவினர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதேபோல, திருப்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலை பகுதியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. முன்னேறிய சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் பொருளாதார ரீதியாக 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 700க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். மீண்டும் 3ஆவது முறையாக கோ பேக் மோடி ஹாஸ்டாக் இந்திய அளவில் இன்று ட்ரெண்ட் ஆனது. மோடியின் வருகையை ஆதரித்து மோடி ஆதரவாளர்களும் டிஎன் வெல்கம்ஸ் மோடி போன்ற ஹாஸ்டாக்குகளில் அதிகளவில் ட்விட்டரில் பதிவிட்டனர்.

 

https://minnambalam.com/k/2019/02/10/43

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this