Jump to content

இலங்கையில் தங்கள் தாய்நிலத்தை மீண்டும் அடைந்த தமிழ் மக்களின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கடந்த ஆண்டு, 40 மீன்பிடி படகுகளுடன், வடக்கு இலங்கையை நோக்கி ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் தீவை மீட்பதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த மீட்புப்பயணம் எவ்வாறு எந்த உயிர்ச்சேதமும் இல்லாமல் நடந்தது என்பதை விளக்குகிறார், பிபிசியின் ஆயிஷா பெரேரா.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, வடக்கு இலங்கையின் இரணைமாதா நகரின் அருகில் நின்று கடலைப்பார்த்த யாராக இருந்தாலும், அவர்களுக்கு அந்தக்காட்சி சற்று வியப்பை அளித்திருக்கும்.

திருச்சபையின் பாதிரியார் முதல் மீன்பிடி பணியில் ஈடுபடும் மகளிர், உள்ளூர் ஊடகவியலாளர்கள் என அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து வெள்ளைக்கொடியுடன் படகை எடுத்துக்கொண்டு, இரணை தீவை மீட்கப் புறப்பட்டனர்.

அவர்களின் இலக்கு: கடந்த 25 ஆண்டுகளாக, இலங்கை கடற்படையின் பயன்பாட்டில் உள்ள தங்களின் நிலத்தை மீட்பது.பெரிய தீவு மற்றும் சின்னத் தீவு என இரண்டு தீவுகளை கொண்டது இரணை தீவு. மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இது, இந்தியாவின் தென்கோடி பகுதிக்கும், இலங்கையில் வடக்கு பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. புவியின் சொர்க்கம் போல காட்சியளிக்கக்கூடியது இந்த தீவு.

மிகவும் சுத்தமான கடற்பகுதியை கொண்டுள்ள இந்த தீவில், மீன்கள் செல்வதை சாதாரணமாகவே பார்க்க முடியும்; நட்சத்திர மீன்கள் கடற்கரைகளில் ஒதுங்கி இருக்கும். கடலின் சீற்றம் மிகவும் குறைவாக இருக்கும் பகுதி என்பதால், முழங்கால் அளவு தண்ணீரில் சுமார் அரை கிலோமீட்டர் வரையில் உங்களால் கடலினுள் இறங்கி நடக்க முடியும்

இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் போர் உச்சம் கொண்டிருந்த சமயத்தில் 1992ஆம் ஆண்டு, இலங்கை கடற்படையால் மக்கள் இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறுகின்றனர், இத்தீவைச் சேர்ந்தவர்கள். மக்கள் இடம் மாற்றப்பட்ட பிறகு, அரசிற்காக ஒரு கடற்படைத் தளமும் அங்கு கட்டப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமில்லாமல், வடக்கு இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களும் தங்களின் நிலத்தை இலங்கை ராணுவம் கைபற்றியதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிக்கு இடையில் உள்ள இரணைமாதா நகரில் தாங்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டதாக இந்த கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை இலங்கைக் கடற்படை மறுக்கிறது.

இந்தப் படகில் பயணித்த பலரும் பெண்களே. இலங்கை கடற்படையை நேருக்கு நேராக எதிர்கொள்வது என்பது, 'அச்சமளிக்கக்கூடிய' செயலாக இருந்தாலும், எந்த சூழலிலும் திடமான மனதுடன் இருந்து அதை செய்யவே விரும்பியதாக அந்த பெண்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

"எங்களின் சிறிய படகுகளுக்கும், கடற்படையின் கப்பல்களுக்கும் இடையே மோதல் நடக்கும் என்றும், அந்த மோதலை படமெடுப்பதன் மூலமாக, அங்கு நடக்கும் சமூகப் பிரச்சனையை உலகிற்கு விளக்க முடியும் எனவும் நம்பினோம்" என்கிறார், மக்களுடன் பயணித்த பாதிரியார்களில் ஒருவரான அருட்தந்தை ஜெயபாலன்.

ஆனால், அவ்வாறான தாக்குதல் எதுவும் அங்கு நடக்கவில்லை.

ரோந்துப் பணியில் ஈடுபடும் சிறிய கப்பல் மட்டும் கடலுக்குள் அனுப்பப்பட்டது. அதன்பிறகு, அங்கு வேறு எந்த கடற்படை கப்பலும் தென்படவில்லை. மக்கள் தங்களின் படகுகளை கடற்கரையில் நிறுத்திவிட்டு, ஊருக்குள் இறங்கி நடந்தனர்.

"நாங்கள் கண்ணீர் சிந்தினோம்; கடற்கரையை முத்தமிட்டோம். நாங்கள் வீடு திரும்பியுள்ளோம், இந்த முறை திரும்பச் செல்வதாக இல்லை," என்கிறார், உள்ளூர் சமூக தலைவரான ஷாமின் பொனிவாஸ்.சிதிலமடைந்த நிலையில் இருந்த தேவாலயத்தில் அவர்கள் பிராத்தனை செய்தனர்.

அதன்பிறகே, அத்தீவில் பணியமர்த்தப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகள், அவர்களை சந்திக்க வந்தனர். தாங்கள் ஊர் திரும்பியுள்ளதாகவும், இங்கே தங்க முடிவெடுத்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அக்குழுவிலுள்ள பள்ளி ஆசிரியர், மிக கவனமாக மக்களின் நிலத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமை குறித்த கோப்புகளை அதிகாரிகளிடம் கொடுத்தார்.

பேச்சுவார்த்தைக்குப்பின், நில உரிமை உள்ள மக்களை மட்டும், அன்றிரவு அங்கு தங்கிக்கொள்ள கடற்படை அனுமதி அளித்தது. மற்றவர்கள் மாலை வேளையில் அங்கிருந்து புறப்பட்டனர் என்கிறார் அருட்தந்தை ஜெயபாலன். தங்கிய மக்கள், அன்றிரவு கடற்கரையில் உலாவினர்; தங்கள் வீடுகளின் மிச்சத்தை சென்று பார்த்தனர்; தேங்காய் மற்றும் பிற மரங்களின் கனிகளை பரித்தனர் என்று அவர் தெரிவித்தார்.

ஆழமில்லாத கடல் பகுதிக்குள் இறங்கிய மக்கள், மீன்களையும், கடல் அட்டைகளையும் சேகரித்தனர். சீனா மற்றும் பிற இடங்களில் இந்த வகையான அட்டைகளுக்கு அதிக தேவை உள்ளது.

அவர்கள் விட்டுச்சென்ற கால்நடைகளை தேடிச்சென்ற சில கிராமவாசிகள், சென்ற வேகத்திலேயே திரும்பி வந்தனர். இந்த கால்நடைகள் மனிதர்களின் கட்டளைகளை கேட்காமல் கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்தன என்பதால், தற்போதும் அவர்களின் கட்டளைகளை கேட்க மறுத்ததே இதற்கு காரணம்.ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த தீவிற்கு வந்த அரசு அதிகாரிகள், நில உரிமை இல்லாத மக்களையும் சேர்த்து சுமார் 400 குடும்பங்கள் இந்த தீவில் தங்க அனுமதி அளித்தனர். உள்ளூர் ஊடகத்தில் அதிகம் பேசப்படவில்லை என்றாலும், முற்றில்லும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய வெற்றி இது.

அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் அனைவரும், தங்களின் நிலம் மீண்டும் தங்களுக்கே கிடைத்தது குறித்தும், கடற்படை அவர்களிடம் நிலத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், அங்கு தங்க அனுமதி அளித்ததும் நம்பமுடியாத அளவிற்கு உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

இரணை தீவில் கடற்படையின் தளம் கட்டப்பட்ட பிறகு மக்கள் அங்கு தங்க அனுமதி இல்லை என்று அரசு ஒருபோதும் கூறவில்லை என இலங்கை கடற்படை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய செய்தித்தொடர்பாளரான லெஃப்டினட் கமாண்டர் இசூரூ சூரியபண்டாரா, "மக்கள் விடுதலைப்புலிகளுடன் இருந்த பிரச்சனை மற்றும் மோசமான வாழ்விடம்` காரணமாக இந்த இடத்தைவிட்டு வெளியேற அவர்களாகவே முடிவு செய்தனர், " என்றார். ஆனால், இந்தக் கூற்றை உள்ளூர் தலைவர்கள் மறுக்கின்றனர்.

இரணைதீவு மீட்கப்பட்ட கதை

அரசிற்கு பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தோம், பல அதிகாரிகளிடம் இது குறித்த கோரிக்கையை முன்வைத்தோம், கடற்கரையில் அமைதியான முறையில் சுமார் ஒரு ஆண்டு போராட்டமும் செய்தோம். ஆனாலும், மக்கள் அங்கு வாழ அனுமதி இல்லை என்று கூறப்பட்டுவிட்டது என்று உள்ளூர் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிபிசியிடம் காண்பிக்கப்பட்ட கோப்புகளில், வடக்கு மாகாண முன்னாள் முதல்வரான சி. விக்னேஸ்வரன், இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் விவகாரங்களுக்கான அதிகாரியான பால் காட்ஃப்ரே உள்ளிட்டோரும், இரணை தீவு மக்களை, 'இடம்பெயர்ந்த மக்கள்' என்று குறிப்பிட்டு அரசுக்கு எழுதிய கடிதங்களில், அவர்களை மீண்டும் தீவில் குடியமர்த்துவது குறித்து எழுதப்பட்டுள்ளதைப் பார்க்க முடிந்தது.

தீவிற்கு இடம்பெயர்ந்து இதுவரை 10 மாதங்கள் ஆகியும், தங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க அவர்கள் எடுக்கும் முயற்சியும், அதில் உள்ள போராட்டமும் மிகவும் நன்றாகவே தெரிகிறது.

சிதிலமடைந்த வீடுகளுக்கு பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கூரை வீடுகள், உலர்வதற்காக போடப்பட்டுள்ள மீன் வலைகள், மிகவும் அடிப்படையான பொருட்களை மட்டுமே வைத்துக்கொண்டு, பொதுவெளியில் விரகு மூட்டி சமைக்கும் மக்கள் என்று காட்சியளிக்கிறது இப்பகுதி.

சில தன்னார்வலர்களால் அளிக்கப்பட்ட சூரியசக்தியால் இயங்கும் பேட்டரிகளின் உதவியோடு, அங்குள்ள மக்கள் பயன்படுத்தும் கைபேசிகள் மட்டுமே புதுமையான பொருளாக உள்ளது.

இரணைதீவு மீட்கப்பட்ட கதைபடத்தின் காப்புரிமை Vikalpa

சில பழைய கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளன. நீண்டு வளர்ந்துள்ள புற்களுக்கு இடையே சிறிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீன்களுக்கு மாற்றான உணவாக அமைவதற்காக மக்கள் காய்கறிகளை பயிரிட ஆரம்பித்துவிட்டனர். பிபிசி அங்கு பயணித்திருந்த நேரத்தில், சின்னத்தீவிலுள்ள தேவாலயத்தை சரிசெய்யும் பணியில் ஆண்கள் ஈடுபட்டு வந்தனர்.

மக்கள் தீவிற்கும், இரணைமாதா நகருக்கும் இடையே தொடர்ந்து பயணித்து வருகின்றனர். சில இரணைமாதா நகரில் உள்ள தங்களின் வீடுகளில் சில நேரம் தங்கிவிட்டு வருகின்றனர். தீவிலுள்ள பள்ளி மிகவும் மோசமாக உள்ளதால், மாணவர்களால் இன்னும் பள்ளியை பயன்படுத்த முடியவில்லை.

இவ்வளவு சிக்கல்களுக்கு இடையேயும், தீவிற்கு வந்த பின், தங்களின் வாழ்க்கை மாறியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியின் மீனவ மக்கள் கூட்டமைப்பின் தலைவராக உள்ள தோரஸ் பிரதீபன் என்பவர், தீவிற்கு அருகிலேயே மீன்பிடிக்க வசதியான இடம் என்பதால், படகுகளை அங்கேயே நிறுத்துவதாகவும், தங்களுக்கு எரிபொருள் அதிகம் மிச்சமாவதாகவும் தெரிவித்தார்.

தீவை சுற்றியுள்ள மீன், நண்டு மட்டும் கடல் அட்டைகளின் காரணமாக வெறும் இரண்டே மாதத்தில், 70 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிந்ததாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

இரணைதீவு மீட்கப்பட்ட கதை

'தேசத்தை நன்மைக்காக' இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது என்று மக்களுடன் அங்கு இணைந்து வாழும் கடற்படை தெரிவிக்கிறது. இரணை தீவு என்பது, சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களை பிடிக்கவும், சட்டவிரோதமான முறையில், இலங்கை கடலுக்குள் நுழையும் இந்திய மீனவர்களை பிடிக்கவும் வசதியான இடம் என்கிறார் கடற்படை செய்தித்தொடர்பாளர்.

தற்போது, இருதரப்பினரும் சமாதானமாக முறையில் இணைந்து வாழ்கின்றனர். கடற்படையினரும் மக்கள் தங்களின் வாழ்வை மறுகட்டமைப்பு செய்ய உதவுகின்றனர்.

பெரிய தீவு பகுதியில், தேவாலயத்தை மீண்டும் கட்டமைத்துள்ளது கடற்படை. அங்கு மக்களுக்கான குடிநீர், புதிய கட்டமைப்புகள் மற்றும் வழித்தடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் சில உபகரணங்களையும் கொடுத்து உதவியதாக உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இரணை தீவு பகுதியில் மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைக்க மக்கள் பணியாற்றிவரும் சூழலில், நிலத்தை மீட்டெடுக்க அவர்கள் முயன்ற முறை வருத்தமளிக்கும் வகையில் பிரபலமான விஷயமாக உள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், போரின்போது, அரசின் வசம் இருந்து நிலத்தில், 4,241 ஏக்கர் தனியார் நிலம் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிறது, இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம்.

இலங்கை: இரணைதீவு மீட்கப்பட்ட கதைபடத்தின் காப்புரிமை Ruki Fernando

திட்ட ரீதியாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அந்த நிலத்தைவிட்டு வெளீயேற ராணுவம் மறுக்கிறது. முல்லைத்தீவின் வடக்கு மாவட்டத்தில், உள்ள ராணுவ முகாமிற்கு எதிரே 700 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இரணை தீவு மக்களின் வெற்றி, பிற பகுதியை சேர்ந்த மக்களுக்கு ஒரு வெற்றி வழிகாட்டியாக அமையுமா?

அவ்வாறு அமையும் என்று நம்பிக்கை கூறுகிறார், மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ருக்கி ஃபெர்னாண்டஸ். ஆனால், எந்த வகையான சமூகத்தை சேர்ந்தவர்கள், எந்த வகையான செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை பொருத்து இது அமையும் என்ற எச்சரிக்கையையும் அவர் முன்வைக்கிறார்.

"அரசியல்வாதிகள், அதிகாரிகள், அமைப்புகள் என்று எதுவும் உதவாத சூழலில், நாம் கோரிக்கை வைத்து அதற்கு எந்த பயனும் இல்லாத நிலையில், இரணை தீவு மக்களைப்போல, தங்களுக்கு உரிமையான விஷயத்தை மக்கள் திரும்பப்பெற வன்முறையற்ற நேரடியான ஒரு வழியில் இறங்க அவர்களுக்கு உரிமையுள்ளது," என்கிறார் அவர்.

தீவில் வேலை இப்போதுதான் உண்மையில் தொடங்கியுள்ளது. தீவை மேம்படுத்த, அரசின் உதவிகள் தேவை என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இரணைமாதா நகருக்கும், இரணைதீவிற்கும் இடையே படகுப் போக்குவரத்து செய்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தீவிலுள்ள பல வீடுகள், சாலைகள் மற்றும் பள்ளிகளை சீரமைக்கவேண்டிய தேவையும் உள்ளது. தீவில் ஒரு நாள் தாங்களும் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் உள்ளனர்.

"ஆமாம். நாங்களும் ஒருநாள் ஊர் திரும்புவோம். எங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திற்கு திரும்புவோம். எங்களின் மண்ணிலேயே நாங்கள் புதைக்கப்பட வேண்டும் என்பதே, ஒவ்வொருவரின் கனவு" என்கிறார் பொனிவாஸ்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47195508

Link to comment
Share on other sites

4 hours ago, பிழம்பு said:

இரணை தீவு மக்களின் வெற்றி, பிற பகுதியை சேர்ந்த மக்களுக்கு ஒரு வெற்றி வழிகாட்டியாக அமையுமா?

அவ்வாறு அமையும் என்று நம்பிக்கை கூறுகிறார், மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ருக்கி ஃபெர்னாண்டஸ். ஆனால், எந்த வகையான சமூகத்தை சேர்ந்தவர்கள், எந்த வகையான செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை பொருத்து இது அமையும் என்ற எச்சரிக்கையையும் அவர் முன்வைக்கிறார்.

ருக்கி ஃபெர்னாண்டஸ் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.