Jump to content

புலன்


Recommended Posts

புலன்

 
அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது.


இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா? எந்த நிகழ்வு? எந்த உலகம்?

சொல்கிறேன். 

உலகம் என்றால் நம் உலகம் அல்ல. நம் தாய் பூமி அல்ல. நம் பூமி அல்ல. நாட் அவர் பேல் ப்ளூ டாட். இன்னொரு சோலார் சிஸ்டம். இன்னொரு பூமி-நிகர் உலகம். நம் பூமியில் இருந்து சில மில்லியன் ஒளி வருடங்கள் தொலைவில். ஆனால் பூமியின் டிட்டோ. 


அங்கே இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். H 1 மற்றும் H 2. கி.பி. 2300 இல் நம் பூமி மிகப்பெரிய அழிவை சந்தித்தது.  ஆஸ்டிராய்டு இம்பாக்ட் ஒன்றில் மனித குலம் கிட்டத்தட்ட அழிய இருந்த போது எங்கிருந்தோ வந்த மகானுபாவர்களான இவர்கள் தான், அதாவது H 1 மனிதர்கள் அழிவின் விளிம்பில் இருந்த   H 2 மனிதர்களை  காப்பாற்றினார்கள். ஒரு ஆயிரம் பேரை மட்டும் விண்கலத்தில் ஏற்றி தங்கள் சொந்த கிரகத்துக்கு அவசரமாகக் கொண்டு போனார்கள். அது நடந்து ஒரு 1000 வருடங்கள் 10 தலைமுறைகள் ஆகி விட்டன. எனிவே, பூமியைப் போன்றே வேறு கிரகங்களும் மனிதர்களை அச்சடித்து போல வேற்றுக் கிரக வாசிகளும் இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ரீட் ஆன்.


 குடியேறிய மனிதர்கள்  இந்தப் புதிய பூமியின் பிரஜைகள் என்ற போதிலும் அவர்களுக்கு அங்கே இரண்டாம் அந்தஸ்து தான். சிலர் அவர்களை  உள்ளூர வெறுக்கக் கூட செய்தார்கள். வந்தேறிகள் என்பதாலோ என்னவோ. வந்தேறி  மனிதர்கள் இங்கே H2 என்று அழைக்கப் பட்டார்கள். H 2க்களுக்கு அங்கே உயர் பதவிகள் இன்னும் கிடைக்கவில்லை. ஓட்டுரிமை கூட இப்போது தான் சமீபத்தில் பெரும் போராட்டத்துக்கு அப்புறம் கிடைத்திருக்கிறது. H2 க்கள் இரண்டாம் தரமாக நடத்தப்பட்டதன் இன்னொரு காரணம் H 2 மனிதர்களுக்கு இல்லாத ஒரு எக்ஸ்ட்ரா புலன் ஒன்று H 1 மனிதர்களுக்கு இருந்தது. அல்லது இருப்பதாக நம்பப்பட்டது. அதாவது ஆறு புலன்கள்.


இதையெல்லாம் விட முக்கியமானதொரு காரணம் இந்த இரண்டு இனங்களும் ஒன்று சேர முடியாதது தான். H1 ஆணும் H2 பெண்ணும், H 1 பெண்ணும் H2 ஆணும் இணைந்து பாப்பாவாவை உருவாக்க முடியவில்லை.

சில சமயங்களில் அபூர்வமாக கரு உருவாகி இரண்டு மூன்று மாதங்களில் தானாகவே அபார்ட் ஆகியது. மனிதர்களும் சிம்பான்சி யும் இணைந்து ஹ்யூமான்சி வர முடிவதில்லை அல்லவா...அப்படி!



சரி. இப்போது  H 2 தம்பதிகளான பவன் மற்றும் பிருத்வி நியூஸ் ரிபோட்டர்கள். அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்ப்போம்.



பவன் பாத்ரூமின் கதவை பொறுமை இன்றி இடித்தான்.


"எத்தனை நேரம், பிருத்வி?" 

சோப்பின் நறுமணம் கதவை ஊடுருவிக் கொண்டு வெளி வந்த வண்ணம் இருந்தது.

"டன் !"

பிருத்வி கதவைத் திறந்து கொண்டே உடம்புக்குப் போதாத டவல் ஒன்றை தரித்துக் கொண்டு வெளி வந்தாள் .


"இரு, என்ன அவசரம், 12 மணிக்கு தானே ஹாஸ்பிடலுக்கு போகணும்?" 


"ப்ருத் , இது ஒரு ஹிஸ்டரிகல்  ஈவென்ட்...இப்பவே ஹாஸ்பிடல் நிரம்பி வழியும் "


நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் பிருத்வி டவலை உடலினின்றும் உருவி எடுத்தாள் .பர்த் டே சூட்டில் கொஞ்ச நேரம் அங்கே இங்கே வளைய வந்தாள் .

"வொரி நாட், டார்லிங், ஹாஸ்பிடல் நர்ஸ் ஒருத்தி கிட்ட சொல்லி வைத்திருக்கிறேன்" 

"கொஞ்சம் சதை போட்டுட்ட போல" என்று அவள் இடுப்பை கிள்ளினான். 

"ஓகே, ஓகே கெட் ரெடி"

"வி ஹாவ் ப்ளென்டி ஆப் டைம்..இன்னும் எங்கே எங்கே சதை போட்டிருக்கிறாய் என்று பார்ப்போமா..." 
"நோ...ஓஒ.."

பிருத்வி அவசரமாகத் தன் ரிப்போர்ட்டர் சூட்டை மாட்டிக் கொண்டாள் .

வினவினாள்:

"ஆமாம் பவன், H 1 உண்மையிலேயே நம்மை விட உயர்ந்தவர்களா?"

"அப்படி தானே சொல்றாங்க!"


ஹாலில் ம்யூட் ஆக்கி வைக்கப்பட்டு ஓடிக் கொண்டிருந்த டி .வி யை பார்த்தபடி இருந்தான் பவன். எல்லா சானல்களை அதையே லைவ் ஆக ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.


[. H 1 மனிதர்களின் அந்த எக்ஸ்ட்ரா புலன் 'தமா ' என்று அழைக்கப்பட்டது. இந்தப் புலன் இருப்பதற்கு சாட்சியாக ஹெச்.1 மனிதர்களின் நெற்றியில் உதடு போன்ற ஒரு  சிறியதொரு உறுப்பு இருந்தது. இதைத் தமான் என்று அழைத்தார்கள். இந்த அதிகபட்ச புலன் அனுபவம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பது கூட H 2 மனிதர்களுக்கு கஷ்டமாய் இருந்தது. H 1 களை பொறுத்தவரை H 2 க்கள் ஊனமுற்றவர்கள். ஒரு புலனின் அனுபவம் குறைந்தவர்கள். குருடர்கள், செவிடர்கள், ஊமைகள் நமக்கு எப்படியோ அப்படி. புலன்களின் அனுபவம் qualia என்பதால் அது எவ்வாறு இருக்கும் என்று H 2 மனிதர்களுக்கு விளக்க H 1கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். நான் பார்க்கிறேன், பார்வை என்றால் என்ன என்று ஒரு குருடனுக்கு எப்படி விளக்க முடியும்? 


H 2 ஆட்கள் வேறு விதமாக சிந்தித்தார்கள்.இந்த சமாச்சாரத்தை கட்டுக்கதை என்றார்கள். உண்மையிலேயே H 1 மனிதர்களுக்கு எக்ஸ்ட்ரா புலன்கள் இல்லை என்றும் அவர்கள் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் உறுப்பு வெறும் ஜெனெடிக் மியூட்டேஷன் என்றும் வாதிட்டார்கள். தம்மை ஏமாற்ற, காலம் காலமாக அடிமை செய்ய , தங்களை ஒருபடி தாழ்வாகக் காட்ட அவர்கள் ஒரு மரபுப் பிழையை எக்ஸ்ட்ரா சென்ஸ் என்று கதை கட்டி விட்டுவிட்டார்கள் என்று நம்பினார்கள். அந்த உறுப்பால் எந்த ஒரு பயனும் இல்லை . ஜஸ்ட் தேர் . ஆணின் நிப்பிள் போல.

தங்கள் புலனை objective ஆக நிரூபிக்க முயன்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன H 1 களுக்கு. ]

"அவர்களின் எஸ்ட்ரா புலன் வழியே இந்த உலகம் எப்படி இருக்கும் பவன்?" 

"இன்னும் இன்னும் ரிச் -ஆ " 

"அப்போ அதை ஏன் பரிணாமம் நம் H 2 மனிதர்களுக்கு கொடுக்கலை" 

"ஐ டோன்ட் நோ. வி  கேன் டூ வெல் வித்அவுட் இட் " 

"அப்ப நாம் பார்ப்பது, உணர்வது எல்லாமே ரியாலிட்டி யின் ஒரு சிறிய பகுதி தானா?" 

"கண்டிப்பாக" என்றான் பவன். 

"இப்போ H 1 பெண்ணுக்கும் H 2 ஆணுக்கும் பிறக்கப் போற குழந்தைக்கு அது , அந்த கூடுதல் புலன் இருக்குமா?"


"அது தானே இப்போது எல்லோரின் கேள்வியும்!"


பிருத்வி ஒரு சிறிய பெருமூச்சை விட்டபடி தொடர்ந்தாள் .


"ஹ்ம்ம்..இந்தக் குழந்தைக்கு தான் எத்தனை ஆராய்ச்சிகள், எத்தனை போராட்டங்கள், எத்தனை கேஸ்கள்..எத்தனை எதிர்ப்புகள்..finally they made it "!



[பிருத்வி சொல்வது உண்மை தான். H 1 க்கும் H 2 க்கும் இயற்கையிலேயே குழந்தை உருவாகவில்லை. க்ரோமசோம்-களின் எண்ணிக்கை சமமாகவே இருந்தாலும் கூட.  எக்ஸ்ட்ரா புலன் உள்ள ஒரு பெற்றோரிடம் இருந்தும் எக்ஸ்ட்ரா புலன் அற்ற இன்னொரு பெற்றோரிடம் இருந்தும் ஜீன்களை பெற்று குழந்தையை உருவாக்குவதில் சிக்கல் .இதையே தங்களின் எக்ஸ்ட்ரா சென்ஸை நிரூபிக்க H 1 கள் பயன்படுத்தினார்கள். H1-H2  கர்ப்பம் 99.999% கலைந்து விடும் என்பதால் இரண்டு இனமும் இணைவது இந்த பூமியில் சட்டப்படி குற்றம். அதுவும் H 2 ஆண் H 1 பெண்ணை அவள் சம்மதம் இன்றி  கூடி விட்டால் மரண தண்டனை தான்! பழைய பூமியில் இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் H1-H2 இணைதல் ஒரு ஹோமோசெக்ஷுவல் ரிலேஷன்ஷிப் போல. காதலிக்க முடியும்;இணைந்து வாழ முடியும். ஆனால் குழந்தை பெற முடியாது. ஆனாலும் இரண்டு இனங்களும் திரை மறைவில் இணைந்து கொண்டு தான் இருந்தார்கள். ஆங்காங்கே my love my right என்ற பதாகைகளைத் தாங்கிய போராட்டங்கள் நடந்தபடி தான் இருந்தன. பொதுவாக ஹெச்.1 கள் மீது ஹெச். 2க்களுக்கும்  ஹெச்.2 கள் மீது ஹெச். 1 க்களுக்கும் அதிகப்படியாக ஈர்ப்பு வரவில்லை.நெற்றியில் உறுத்திக் கொண்டிருந்த  உதடு போன்ற அந்த அறுவறுப்பான  தமானை H 2 க்கள் வெறுத்தார்கள். face pu *** என்று அதை வசை பாடினார்கள். அதே சமயம் பாழும் நெற்றியுடன் இருந்த H 2 க்கள் மீது H 1 கள் அதிக ஈடுபாடு காட்டவில்லை. நெற்றியில் உள்ள உதடு மூலம் இரண்டு H 1 கள் முத்தமிடுவதை ஆகா என்ன தேவானுபவம் என்று அவர்கள் சிலாகித்தார்கள். H 2க்கள் மூளி கள் என்றும் தங்கள் முன்னோர்கள் அவர்களை எங்கிருந்தோ இங்கே கொண்டு வந்து விட்டது மிகப்பெரிய தவறு என்றும் வருத்தப்பட்டார்கள்."கோ பேக் டு யுவர் ஓன் வேர்ல்ட் " என்று சில இன வெறியர்கள் போராட்டம் கூட நடத்தினார்கள்.


நல்லவர்கள் சிலர் , ஹ்யூமனிஸ்ட்ஸ், இரண்டு இனமும் இணைந்து சந்ததிகளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த இணைவு காலம் காலமாக நிலவி வரும் பகைமையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று நம்பினார்கள்.விஞ்ஞானிகளை டி .என். ஏ ஆராய்ச்சிக்கு தூண்டினார்கள். பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்தன. பிறக்கப் போகும் குழந்தையை எந்த இனத்தில் சேர்ப்பது என்றும் அதற்கு இன்னொரு குழந்தையை உருவாக்கும் fertility இருக்குமா என்றும் கேள்விகள் எழுந்தன. 


பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆராய்ச்சி ரீதியாக மட்டும் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொள்ள கோர்ட் ஆதரவு கொடுத்தது...


மீண்டும் நாம் பவன், பிருத்வியை தொடர்வோம்.


பவனும் பிருத்வியும் ஹாஸ்பிடலுக்கு செல்லும் போது அங்கே வரலாற்று சிறப்பு மிக்க ,H 1 H 2 வின் முதல் இணைப்புப் பாலம் பிறந்திருந்தது. இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த அந்த சவலை ஆண் குழந்தையை ஆயிரக்கணக்கில் கேமராக்கள் மொய்த்தன.

டாக்டர்கள் வெயிட்  வெயிட் என்று இறைந்து கொண்டிருந்தார்கள் . H 1 பெண் வாசிகா பெருமையடன் படுக்கையில் படுத்திருந்தாள். அருகில் அவன் H 2 கணவன் தயாள்.



உலகமே எதிர்பார்த்த அந்த விஷயம்: ஆம் குழந்தைக்கு நெற்றியில் அழகாக ஒரு குட்டி தமான் இருந்தது.


H 1 கள் ஆரப்பரித்தார்கள். சந்தோஷத்தில் கோஷம் போட்டார்கள். H 2 க்களோ அவர்களின் ஜெனிட்டிக் குறைபாடு அந்த எஸ்ட்டிரா உறுப்பு குழந்தைக்கும் தொடர்வதாக வாதிட்டார்கள். 
குழந்தைக்கு இரண்டு இனங்களையும் இணைப்பவன் என்ற பொருளில்  சம்வர் என்று பெயர் சூட்டப்பட்டது.


சம்வர் பையன் ஆரவாரமாக வளர்ந்தான்.  அப்பா செல்லம் அவன்.


சம்வருக்கு 15 வயது ஆகும் வரை அவனுக்கு தமான் என்ற புலனின் அனுபவம் இருக்கிறதா என்று சோதனை செய்ய கோர்ட் தடை விதித்திருந்தது. அந்த வயதில் தான் சரியாக விவரம் வரும் என்று ஏனோ கோர்ட் நம்பியது.

வாசிகா மட்டும் அவனுக்கு புலன் இருப்பதாகவும் அந்தப் புலனின் வழியே அவனால் தன்னோடு தொடர்பு கொள்ள முடிவதாகவும் வாதிட்டுக் கொண்டிருந்தாள் .


சம்வரின் பத்தாம் வயதில் அந்த கொலை முயற்சி நடந்தது.



.


..


..


வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சம்வரை கார் ஏற்றிக் கொள்ள முயன்றார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான் சம்வர்.



H 1 கள் H 2க்கள் மீது பழி போட்டார்கள். சிம்பிள்.  H1 H2 கலவியில் பிறக்கும் குழந்தை கூட H 1 தான் என்று தெரிந்து விட்டது. இப்படியே போனால் ஒருநாள் H 2 இனம் கூண்டோடு அழிந்து விடும் என்று இப்போதே குழந்தையை தீர்த்துக் கட்டி விட H 2க்கள் முனைந்து விட்டதாக குற்றம் சாட்டினார்கள். H 2 க்கள் இதை மறுத்தார்கள். அன்றிலிருந்து சம்வரின் வீட்டுக்கு இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஸ்கூலுக்கு போகவும் அவனை போலீஸ் எஸ்கார்ட் செய்தது.


ஒரு நாள். அழகிய மாலை நேரம். சம்பவர் வீட்டின் முன் பக்கம் இருக்கும் புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். வாசிகா  அருகே இருந்த டைனிங் டேபிளில் உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தாள் . தயாள் மகனை முதுகில் யானை ஏற்றி விளையாடிக் கொண்டிருந்தான். வாருங்கள்.அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்போம்.


"என்னங்க இது, பையனுக்கு 11 வயசு ஆச்சு...இன்னும் யானை விளையாடிக்கிட்டு"


"இவனுக்கு எழுபது வயசு ஆனாலும் இவன் என் செல்ல மகன் தாண்டி...இல்லடா கண்ணா!" 

"சரி சரி..அப்பா வும் மகனும் பாசத்தை காட்ட ஆரம்பிச்சா என்னைக் கூட மறந்துருவீங்க.."


"வாசிகா !" 

"சொல்லுங்க"

"உன்னை ஒன்று கேட்பேன்" 

"உண்மை சொல்லனுமா?"

"உள்ளதை சொல்லு!"

"கேளுங்க..."


"உங்களுக்கு, உங்கள் இனத்துக்கு  உண்மையிலேயே எக்ஸ்ட்ரா புலன் ஒண்ணு இருக்கா!?"


"ஐயோ, இதை நீங்க இதோட பத்தாயிரம் முறை கேட்டாச்சு!" என்றாள்  

."இருக்கு, இருக்கு, இருக்கு!" 

"அப்ப எனக்கு நிரூபி!" 

"இதைப் பாருங்க தயாள், உங்களுக்கு வாசனையை நுகர முடிகிறதா? அதை நுகர முடிகிறது என்று எப்படி நிரூபிப்பீர்கள்?"


"ஓகே...ஸோ இப்ப நான் உன்னைப் .பார்க்கிறேன்....பார்வை!" 

"ஓகே.. 

"நீ பேசுவதைக் கேட்கிறேன்....சத்தம்!"


"..."


"உன் கூந்தல்ல இருக்கிற அந்த அழகான ரோஜாவின் வாசனை....நுகர்ச்சி!" 
"இப்ப உன்னைத் தொடரின்.....ஸ்பரிசம்" 

தயாள் , வாசிகாவின் அருகில் சென்று அவள் கன்னத்தை நக்கினான். 

"சீ என்ன இது , விடுங்க....பையன் முன்னாடி!" 

"உன் கன்னம் லேசா உப்புக் கரிக்குது" 

"ஹ்ம்ம்.."

"இந்த ஐந்தைத் தவிர வேறு என்ன புலன்? அதை நீ உணர்கிறாயா?" 
"கண்டிப்பாக, அந்த அனுபவம் உலகம் எங்கும் பரவி இருக்கிறது..உங்களால் அதை உணர முடியவில்லையா? அங்கே பாருங்கள் நம் குழந்தை சம்வர் அவனை உங்களால் தாமானிக்க முடியவில்லையா?" 

"தமானித்தல் என்றால்?" 

"போச்சுடா...." 

"அது எதற்கு அருகில் வருகிறது வாசிகா ? கேட்டல், நுகர்தல், தொடுதல்?" 

"எதற்கு அருகிலும் இல்லை,,,இது முற்றிலும் வேறுபட்ட ஒரு புலன் " 


"குழப்பாதே, வாசிகா !இதை ஏன் இயற்கை எங்களுக்குக் கொடுக்கவில்லை ?" 

"நீங்கள் வேறொரு கிரகத்தில் தோன்றியவர்கள்" 

"அந்த கிரகம் இதைப் போன்றது தானே?"


"இதைப் பாருங்கள் தயாள்...இயற்கை ஏன் ஐந்து புலன்களை கொடுத்தது? பார்வை ஒன்றே போதாதே? வேட்டையாடும் மிருகம் நம்மை நெருங்குகிறது என்று பார்வை ஒன்று இருந்தாலே கண்டுபிடித்து விடலாம் அல்லவா? பார்வையை எப்போதும் நம்ப முடியாது. எப்போதும் 360 டிகிரி கவரேஜ் கிடைக்காது. எனவே எதிரியின் காலடி ஓசை கேட்க வேண்டும்..எனவே காது வந்தது. மேலும் உணவு கெட்டுபோய் விட்டதா என்று அறிய காதும் கண்ணும் அவ்வளவாக துணை செய்யாது. அதற்கு வாசனையும் சுவையும் வேண்டும்..தொடு உணர்ச்சி வலி வேண்டும்...இல்லை என்றால் உடலில் காயம் பட்டாலும் உயிர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும்.." 
"சரி, இங்கே ஆறாவது புலன் எங்கிருந்து வருகிறது?" 
"மற்ற ஐந்தும் போதாத போது "


"யு மீன்?" 

"சளி வந்தால் உங்கள் நாக்கும் மூக்கும் படுத்து விடுகின்றன. ஆனால் எங்களுக்கு சளி வந்தாலும் ஓர் உணவு உண்மையிலேயே சுகாதாரமானது தானே என்று கண்டுபிடிக்க முடியும்...தமான் இருக்கிறதே?" 

"உணவு தமானை வெளியிடுமா?" 

"தமான் என்பது பொருட்களின் பண்புகளில் ஒன்று.."


"..."


பவன் நம்பவில்லை..


"ஏன் டார்லிங் காலம் காலமாக இப்படி ஒரு பொய்யை கட்டி விடுகிறீர்கள்? எங்களை விட நீங்கள் ஒரு படி மேலே இருந்து என்ன சாதித்தீர்கள்? ஏன்? எல்லாரும் சரி சமமாக வாழ்ந்தால் என்ன?எங்களை ஏன் மாற்றுத் திறனாளிகள் என்கிறீர்கள்?ஏதோ ஒரு பொருளை மாய்ந்து மாய்ந்து பர்ச்சேஸ் செய்கிறீர்கள் ...அது எங்களுக்கு மண் உருண்டை மாதிரி தான் இருக்கிறது ..ஒருநாள் அதில் இருந்து தமா அதிகமாக வருகிறது என்று தூக்கி எறிந்தாயே ..ஒருநாள் நான் உனக்கு ஆசையாக அந்த உருண்டையை வாங்கி வந்த போது  சீ சீ கெட்ட தமா என்றாயே, எனக்கு எல்லா உருண்டையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது..சில சமயம் சில இடங்களுக்கு சென்றால் நெற்றியை மூடிக் கொள்கிறாய்...சில சமயம் சில பொருட்களை ஆசையாக நெற்றியின் அருகில் கொண்டு செல்கிறாய்...உங்கள் இனத்தவர் வீடுகளில் நெற்றியை மூடிக்கொண்ட குரங்கு பொம்மை கூட இருக்கிறது."

வாசிகா கொஞ்சம் கடுப்பானாள் .


"இதைப் பாருங்க தயாள், இது கட்டுக்கதை அல்ல,,,உண்மை! நாங்கள் வாங்கும் அந்தப் பொருள் தாமானீஸ் ...ஊதுபத்தி வாங்குவதில்லையா? சி.டி பிளேயர் வாங்குவது இல்லையா? அப்படி...எங்கள் தமானுக்கு அது விருந்தளிக்கிறது ...அந்தப் புலனே இல்லாத உங்களுக்கு அது மண் உருண்டை மாதிரி தான் இருக்கும்...வாசனை அறிவில்லாதவன் ஊதுபத்தியை வீண் என்பான். மல்லிகைப் பூவை மூக்கின் அருகில் கொண்டு சென்று வாசனை பிடிப்பதில்லையா? அப்படித்தான்."


"அம்மா, பசிக்குது" என்றான் சம்வர். 

"இங்க வாடா, " என்றான் தயாள். "உனக்கு தமான் இருக்கா?"

நெற்றியை சுட்டிக் காட்டினான் . 

"அது நல்லா வேலை செய்யுதா?" 

"போப்பா, எனக்கு பசிக்குது!" உள்ளே ஓடினான். 

"உள்ளே ஸ்டராபெரி இருக்கு பாரு, சாப்பிடு, தமானுக்கு நல்லது!"


தயாள் எரிச்சலுடன் உள்ளே போனான். சம்பவர் அப்பாவின் முதுகில் அன்புடன் உப்பு மூட்டை ஏறிக் கொண்டான்.


***


ஒரு வாரம் கழித்து தயாள் அலுவலகத்தில் இருந்த போது அவனுக்கு போன் ஒன்று வந்தது.


"சார், உடனே ஸ்கூலுக்கு வாங்க, உங்க பையன் மயங்கி விழுந்துட்டான்"


தயாள் போட்டது போட்டபடி ஓடினான்.


சமீபத்திய புரட்சியின் போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்து விட்டதால் H 1 பிள்ளைகளுக்கும் H 2 பிள்ளைகளுக்கும் தனித்தனி ஸ்கூல்.

சம்வர் H 1 களின் பள்ளியிலேயே படித்து வந்தான். பொதுவாக அங்கே H 2 க்களுக்கு அனுமதி இல்லை. இருந்தாலும் இப்போது உள்ளே விட்டார்கள்.


***


தயாளும் வாசிகாவும் அழுதபடி நின்றிருந்தார்கள்.


ஹாஸ்பிடலில் டாக்டர் அந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.


"மனசை திடப்படுத்திக்கங்க, தயாள், உங்க பையனுக்கு 15 வருடம் தான் ஆயுசு.. அவன் இதுவரை உயிர் வாழ்ந்ததே அதிசயம்..ஜெனிடிக் குறைபாடுகளால் , செயற்கை முறையில் பிறந்ததால், அவன் உடம்பு முழுவதும் உள் உறுப்புகள் 90%செயலிழந்துவிட்டன. வி காண்ட் ஹெல்ப் ஹிம் எனி பர்தர் ...விஷ் ஹிம் குட் பார்வெல் ..."


தயாள் அப்படியே மயங்கிச் சரிந்தான்.


*****

பிருத்வியும் பவனும் மறுபடி ரெடி ஆகிக் கொண்டிருந்தார்கள்.


15 வருடங்களுக்கு முன்பு இருந்த உற்சாகம் அவர்களிடம் மிஸ்ஸிங்...இப்போது அவர்களுக்கு கம்பெனியில் பிரமோஷன் எல்லாம் வந்து விட்டிருந்த போதிலும் சம்வரின் கடைசி நிமிடங்களை தாங்களே படம் பிடிக்க அதிகாலையிலேயே எழுந்து கிளம்பி விட்டிருந்தார்கள்.


"what an unfortunate morning" என்றான் பவன்.


"ஆமாம் பவன், H 1 மற்றும் H 2 இனத்தின் முதல் மற்றும் கடைசி பாலம் இன்று அறுந்து விழப் போகிறது..அந்தக் குழந்தை பிறந்த போது எத்தனை உற்சாகமாக இருந்தோம்!"


"...."


கனத்த மௌனத்தின் பின் பிருத்வி தொடர்ந்தாள் .


"ஆனால் ஒரு விஷயம் இடிக்குது பவன், பையன் சம்வர் தனக்கு எக்ஸ்ட்ரா புலன் ஒன்றின் அனுபவம் எதுவும் இல்லை , இது சத்தியம் என்று அறிக்கை விட்டிருக்கிறானாமே"


"அதுதான் எனக்கும் ஆச்சரியம் பிருத்வி, அப்படியானால் H 1 கள் இதுநாள்வரை நம்மை ஏமாற்றித்தான் வந்தார்களா, அவர்கள் நெற்றியில் இருக்கும் அந்த உறுப்பு பயனற்ற ஒரு இணைப்பு தானா!" 

"மே பி " 

சம்வரின்  வீடு. 

பையன் ஒரு பெரிய படுக்கையில் ஆக்சிஜன் மாஸ்க்குடன் படுத்திருந்தான். மார்பு சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. 

பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. 

அவர்கள் வெளியே போலீஸ் காரர்களை கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். 

"சார், ப்ளீஸ், இரண்டே இரண்டு கேள்விகள்....பையனோட அப்பா, இல்லை அம்மாவை கேட்டுக்கறோம், ஜஸ்ட் டூ .." 

"...சாரி, அவங்க பதில் சொல்லும் நிலைமையில் இல்லை...ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப்" 

படுக்கை அறையில் வைப்பட்டிருந்த கேமெரா சம்வரை படம் எடுத்து தொலைக்காட்சிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. நிருபர்கள் சோக முகங்களுடன் கேமிராக்கள் முன் நின்று எதை எதையோ பேசி டி .ஆர்.பி ரேட்டிங் பெறுவதற்காய் விசும்பிக் கொண்டிருந்தார்கள்.


"உங்கள் குழந்தையின் கடைசி நிமிடங்கள்" என்றார் டாக்டர். சம்வருக்கு இன்னும் கான்ஷியஸ் கான்ஷியஸ் இருந்தது.


தயாள் அவன் நெற்றியில் முத்தமிட்டான். அதுவரை அமைதியாக இருந்தவன் ஏனோ வெடித்து அழுதான்.


"சம்வர்...ப்ளீஸ் டோன்ட் லீவ் மீ...ப்ளீஸ் டோன்ட் லீவ்.......வ்வ்வ்...."


அப்படியே இடிந்து போய் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான்..."வாசிகா, நம்ம சம்வர்,,நம் செல்லக் குழந்தை...கடவுள் அவன் கூட இருக்கும் பாக்கியத்தை நமக்கு கொஞ்ச வருடங்கள் மட்டுமே கொடுத்திருக்கார்..பாத்தியா அவன் கோலத்தை...ஒருநாள் கூட அப்பா கதை சொல்லாமல் தூங்க மாட்டானே...நேத்து கூட சொன்னான். "அப்பா நான் பிறந்ததே ஒரு லக் தானே...நான் போயிட்டா நீங்க ரொம்ப அழக்கூடாது...உங்களுக்கு ஏற்கனவே பி.பி இருக்குன்னு...அம்மாவை பாத்துக்கணும்..என்ன ஒரு ஜெம் அவன்! இனிமேல் என் முதுகில் யார் சவாரி செய்வார்கள் வாசிகா! யார்.."...


"ப்ளீஸ் காம் யுவர்செல்ப்..." டாக்டர் தேற்றினார். அவன் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான்..


அருகில் நின்றிருந்த மத குருமார் ஒருவர் ஏதோ ஒரு ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். 

போலீஸ் ஒருவர் வந்து "சார், உங்க பையனிடம் ஸ்டேட்மென்ட் வாங்கணும், கோர்ட் ஆர்டர் " என்றார். 

"ஏஸ்  ஹிஸ் பேரெண்ட்ஸ் இதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்" என்றாள் வாசிகா ."ப்ளீஸ்  லெட் ஹிம் டிபார்ட் பீஸ்புலி ..."

"நான் என் பையனுடன் தனியாக கொஞ்சம் பேச வேண்டும்" என்றாள் . 
 எல்லாரும் வெளியேறினார்கள்.

"நீங்களும் தான்" என்றாள் கணவனை நோக்கி..

"ராஜா, அம்மாவுக்கு ஒரு கடைசி முத்தம்" 

கன்னத்தை அவன் தமான் அருகே கொண்டு சென்றாள் . 

"கண்ணா, இப்போதாவது சொல்..உனக்கு உண்மையிலேயே தமான் வேலை செய்யவில்லையா? ஏன் எனக்கு வெறும் ஐந்து புலன்கள் தான் என்று கோர்ட்டிடம் சொன்னாய்? ஏன் நம் இனத்தில் பிறந்து விட்டு நம் இனத்துக்கே துரோகம் செய்தாய்?"


சம்வர் கஷ்டப்பட்டு பேசினான். 

"அம்மா, எனக்கு அந்த புலனின் அனுபவம் இருக்கத்தான் செய்கிறது... எனக்கு என் இனம் முக்கியம் தான்...ஆனால் அதை விட எனக்கு என் அப்பா முக்கியம்..

எனக்கு அவர் தான் எல்லாமே. மற்றவை எல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம் தான். உலகத்தின் பார்வையில் அவர் புலன் குறைந்த ஊனமுற்றவராக இருப்பதை நான் விரும்பவில்லை...என் அப்பா ஒரு முழு மனிதர்...ஒரு ஹீரோ..அதனால் தான் நான் பொய் சொன்னேன்.. மை டாட் ஈஸ் நாட் டிஸ் ஏபில்ட்..இதே மாதிரி ஒரு ஹீரோவா என் அப்பாவை வைத்திருப்பீர்கள் என்று எனக்கு நீங்கள் ப்ராமிஸ் செய்யணும்.."

வாசிகா அவனை ஆச்சரியம் அடங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் நெற்றியில் இருந்த தமான் கொஞ்சம் கொஞ்சமாக துடிப்பை நிறுத்திக் கொண்டிருந்தது....



முற்றும்..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வித்தியாசமான கற்பனை....அது கிடக்கட்டும், ஒரு ஆணின் மார்பில் உள்ள நிப்பிளால் எந்த ஒரு பிரயோசனமும் இல்லையா.....எதிர்காலத்தில் இனம் கூர்ப்பு அடையும் போது அது இல்லாமலே மறைந்து போய் விடுமா....!   😒

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.