Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1988 ஆடி மாதம் சனிக்கிழமை.
வேகமாக துவிச்சக்கரவண்டியில் வந்த சங்கரை மறித்தான் கோபால். 
 
என்ன மச்சான் கிளாசுக்காப் போகிறாய்?

ஓமோம் சோதியற்ற பிஸிக்ஸ். உமக்கு ? 

எனக்கு பொருளியல் கிருஸ்ணானந்தான் ஆசிரியரின் கிளாஸ். 

அங்க பார் ஆமிக்கார்கள், எல்லோரையும் மறிக்கிறாங்கள். இன்றைக்கு கிளாசுக்கு போனபாடுதான்.

சங்கர் க.போ.த உயர்தரம் கணிதபிரிவில் கல்வி கற்கிறான். பொறியிலாளராக வேண்டும் என்ற விருப்பம். கோபால் யாழ்மத்திய கல்லூரியில் வர்த்தகதுறையில் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறான் .  நன்றாகப் படித்து பல்கலைக்கழகம் சென்று கற்று தனது சகோதரிகளை கரைசேர்க்கவேண்டும் என்று விரும்பினான். கோபாலின் அப்பா ஒரு சட்டத்தரணி. பலருக்கு பல்வேறு விதமாக உதவும் எண்ணம் கொண்டவர். தகப்பனைப்போல கோபாலும் சமுகத்தின் மீது பற்றுள்ளவன். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். கோபாலுக்கு ஈரோஸ் இயக்கத்தில் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் அடிக்கடி திரிவதுண்டு.

மல்லாகச் சந்தியில் இருந்து சுன்னாகம் போகும் வழியில் வலதுபக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் உள்ள மரத்தின் கீழ் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். சுன்னாகச் சந்தையில் மரக்கறி வாங்கி வந்தவர்கள், தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட வயது வேறுபாடின்றி ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு காவலாக இந்திய இராணுவத்தின் சீக்கியர்கள் துப்பாக்கி ஏந்தியவண்ணம் இருந்தார்கள். இராணுவத்துக்கு வழிகாட்டியாக இருந்த ஈபிஆர் எல் எவ் அமைப்பினர், தடுத்து வைத்திருப்பவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சங்கரின் பாடசாலை நண்பர் சிவனேசனை கறுத்த மெல்லிய சுருள்முடியுடன் இருந்த இளைஞன் ஒருவன் விசாரித்துக் கொண்டிருந்தான். 

எந்த ஊர்? 
 
குப்பிளான்.  

லோலாவைத் தெரியுமா?

தெரியாது.

"டேய் பொய் சொல்லாதே. அதில போய் நில்லு" என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சங்கரைக்கூப்பிட்டான். உடல் நடுக்கத்துடன் சங்கர் எழுந்தான். அப்பொழுதுதான் அந்த இளைஞன் சங்கருக்கு அருகில் இருந்த கோபாலைக் கண்டான்.  

'கோபால் நீ எங்கே இங்கை".

"கிளாசுக்கு போய்கொண்டிருந்தனான். எனக்கு கிளாசுக்கு நேரமாயிட்டுது"

'நீ கிளாசுக்குப் போகலாம்"

"இவர் என்ற நண்பர் சங்கர்"

" ஒ கே , இவரையும் கூட்டிக்கொண்டு போகலாம்"

சங்கரும் தப்பினேன் பிளைத்தேன் என்று நினைத்து துவிச்சக்கர வண்டியை நோக்கிப் போனான். "உனக்கு எப்படி உவனைத் தெரியும்?"

"அது ரவி. உனக்கு பிறகு சொல்கிறேன். கிளாசுக்கு நேரமாகிவிட்டது" என்று சொல்லி கோபால் துவிச்சக்கரவண்டியில் பறந்தான்.

-------------------------------------------------------
1986 சித்திரை மாதம் மாலை நேரம். க.போ.த சாதாரணதரம் சமுகக்கல்வி  புத்தகத்தினை கோபால் வாசித்துக் கொண்டிருந்தான். மார்கழியில் பரீட்சை. நல்ல பெறுபேறுகள் எடுக்க வேண்டும் என்று படித்துக்கொண்டிருந்தான். யாரோ பின் கதவினைத் தட்டும் சந்தம் கேட்டது. 

"யாரது?"

"கோபால் நான் ரவி"

இவனேன் முன்கதவினைத் தட்டாது பின்கதவினைத் தட்டுகிறான் என்று நினைத்து , அங்கே சென்றான். இரத்தக் காயங்களுடன் ரவி அங்கே நின்று கொண்டிருந்தான். விடுதலைப்புலிகளினால் டெலோ இயக்கம் தடைசெய்யப்பட்ட காலம். இதனால் ஏற்பட்ட மோதலில் காயப்பட்டு உயிர் தப்பி கோபாலிடம் உதவி கேட்க வந்திருந்தான். கோபாலும் ரவியை, வீட்டு மாட்டுக் கொட்டில் ஒருவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்து தெரிந்த வைத்தியர் ஒருவர் மூலம் சிகிச்சை வழங்கி காப்பாற்றினான். காயங்கள் ஆறியபின்பு ரவியைப் பாதுகாப்பாக சாவகச்சேரியில் ரவிக்கு தெரிந்த ஒருவரிடம் ஒப்படைத்தான். டெலோவில் இருந்த ரவி, பிறகு இந்திய இராணுவ வருகையின் போது , இந்திய இராணுவத்துணைக்குழுவான ஈபிஆர் எல் எவ்வுடன் சேர்ந்து வந்தான்.

-----------------------------
1988 புரட்டாதி மாதம்,

சுன்னாகம் வினாயம்ஸ் கல்வி நிலையம் அருகில் ஈபி ஆர் எல் எவ்வினர் ஆயூதங்களுடன் நடமாடினார்கள். துவிச்சக்கரவண்டியில் சங்கருடன் வந்த கோபால், ரவியைக் கண்டதும்  "என்ன பிரச்சனை. யாரைப் பிடிக்கப் போறீர்கள்" என்று வினாவினான். 
"உந்த மதிலுக்குப் பக்கத்திலை யாரோ புலி ஒன்று குண்டை வைத்திட்டுப் போட்டுது . நல்ல காலம் வெடிக்கவில்லை. அதுதான் தேடுகிறோம்" என்று சொல்லி வேகமாக ரவியும், மற்றைய ஈபி ஆர் எல் எவ்வினரும் அவ்விடத்தினை விட்டு சென்றார்கள். "உனக்கு தேவையில்லாத கேள்வி. உவங்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும். உவன் ரவி எத்தனை அப்பாவிகளை சித்திரவாதை செய்து போட்டிருக்கிறான். உவனோட தொடர்புகளை வைக்காதே' என்று சங்கர் புத்திமதி சொன்னான்.

-----------
1989 தை மாதம். மாலை நேரம் 7 மணி

சங்கர் வீட்டில் இருந்து படித்துக் கொண்டிந்தான். சட புட என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தினைக் கேட்டான்.மனதுக்குள் ஏதோ செய்தது. யாரையோ சுட்டுப்போட்டாங்கள். 

மாலை 9 மணியிருக்கும். சங்கரின் வீட்டின் முன்கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அங்கே கோபாலின் அத்தான் மிகவும் பதற்றத்தோடு நின்றுகொண்டிருந்தார். 

"பின்னேரம் டியூசனுக்குப் போன கோபாலை இன்னும் காணவில்லை. அதுதான் தேடி வந்தனான்".

"கோபாலை நான் நேற்றுத்தான் பார்த்தனான்.  நீங்கள் வேறு யாரையும்  விசாரித்தனீங்களா?"

"கிளாஸ் முடிய மோகனுடன் மல்லாகச்சந்தியில் டீ குடித்ததாக மோகன் சொன்னார். பலரையும் விசாரித்துவிட்டேன் எங்கே போயிட்டான் என்று தெரியவில்லை." 

"ஈபி ஆர் காம்பிலையும் போய் விசாரித்தேன். ரவியை அங்கு கண்டேன். தான் காணவில்லை. நாங்கள் ஒருவரும் கோபாலைப் பிடிக்கவில்லை என்றும் சொன்னான்".

மறு நாள் ஏழாலைக்கும் சுன்னாகத்துக்கும் இடையில் புகையிரதத் தண்டவாளத்துக்கு அருகில் கோபாலின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சித்திரவாதைகள் செய்து மிருகத்தனமாக கோபால் கொல்லப்பட்டிருந்தார். நிகங்கள் பிடுங்கப்பட்டிருந்தன. கைகள் முறிக்கப்பட்டிருந்து. முகத்தில் பல காயங்கள். ரவி கொல்லப்பட்டிருந்த இடம் இந்திய இராணுவம், ஈபி ஆர் எல் எவ் முகாம்களுக்கு மிக அருகில். கோபாலுடன் வேறு இருவரும் அன்று கொல்லப்பட்டிந்தார்கள்.  துப்பாக்கிச்சத்தம் கேட்க முன்பு, மாலை 6மணியளவில் கோபாலை ரவி கூட்டிக்கொண்டு சென்றதினைக் கண்டவர்கள், சிலர் சொன்னார்கள். துப்பாக்கி சத்தம் கேட்டு தண்டவாளத்துக்கு அருகில் இருந்த வீட்டில் உள்ளோர்கள் ,அவ்விடத்தில் ஈபிஆர் எல் எவ்காரர்கள் திரிவதைக் கண்டதாகவும் சொன்னார்கள். கோபாலின் கைக்கடிகாரம், பாதணிகள், மோதிரம், துவிச்சக்கரவண்டியும் களவாடப்பட்டது. கோபாலின் துவிச்சக்கரவண்டியில் ஈபி ஆர் எல் எவ்வினர் சவாரி செய்வதினை கோபாலின் நண்பர்கள் பிறகு பார்த்திருக்கிறார்கள்.  

 வடகிழக்கு மாகாணத்தில் முதல் அமைச்சராக ஈபிஆர் எல் எவ்வின் வரதராஜப் பெருமாள் அப்பொழுது இருந்தார். யாழ் மாவட்டத்தில் வேறு கட்சிகள் போட்டியிடாததினால், போட்டியின்றி ஈபி ஆர் எல் எவ் அனைத்து இடங்களையும் வென்றது. 89 பெப்ரவரியில் இலங்கையின் பாராளுமன்றத்தேர்தலில் ஈபி ஆர் எல் எவ் , தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டது. விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் ஈரோஸ் இயக்கம் அத்தேர்தலில் போட்டியிட்டது. இதனால் ஈரோஸ் இயக்கத்தினர், ஆதரவாளர்கள் சிலர் இந்திய இராணுவத்தின் துணைப்படைகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 86ல் கோபால் தனது நண்பன் ரவியினைக் காப்பாற்றினான். ஆனால் 89ல் ரவி?.

---------------------------------------

ஆவணி மாதத்தில் நடைபெறவிருக்கும் பரிட்சைக்கு படிக்க முடியாமல் சங்கர் அவதிப்பட்டான். புத்தகத்தினைத் திறந்தால் கோபாலின் சகோதரிகள், பெற்றோரின் முகங்கள் , அவர்கள் சங்கரை கண்டால் கதறி அழுவது, சங்கரால் படிக்கமுடியவில்லை. மேலும் மேலும் துயரச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. 
சங்கரின் ஆரம்பகாலத்து பள்ளி மாணவனும், முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வத்தின் மகன் அகிலன்( பரியோவான் கல்லூரி மாணவன்), முரசொலிப்பத்திரிகையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சந்திப்பு பற்றிய செய்திவெளியிட்டதினால் இந்திய இராணுவ துணைப்படைகளினால் கொல்லப்பட்டார். யூனியன் கல்லூரி  பிரேமானந்தன் உட்பட 90 பேர் தெல்லிப்பளையில் வைத்து அமைதிப்படையினால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அமைதிப்படையும் இலங்கையினை விட்டு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. பிரேமானந்தன் பற்றிய செய்தி இன்னும் தெரியவில்லை. பிரேமானந்தன் கைதானதற்கு பிறகுவந்த அவனது பிறந்த நாளில் அவரது தகப்பன், மகன் பிரிவால் மாரடைப்பினால் காலமானது சோகத்தின் மேல் சோகம். பரிட்சை நாட்கள் நெருங்க நெருங்க ஈபி ஆர் எல் எவ்வினால் வீதிகளில் சென்ற இளையோர்கள் பிடிக்கப்பட்டு துணை இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். இதனால் தனியார் கல்வி நிலையங்களில் பெண்கள் மட்டுமே படிக்கச் சென்றார்கள். முக்கியமான படங்கள் கற்காமல் ஆண்கள் பரீட்சை எழுத வேண்டியிருந்தது. சங்கரின் நண்பர்கள் பலர் படிப்பும் வேண்டாம் ,தப்பினால் போதுமென்று கொழும்புக்கு ஓடி வெளினாடு சென்றார்கள். சிலர் பிடிபட்டார்கள். சிலர் காணாமல் போனார்கள். 

------------------------------------------
பொறியியாலாளாராக வரவிரும்பிய சங்கரின் எண்ணம் நிறைவேறவில்லை. சங்கரைப்போல வலிகாமம் வடக்கில் பல இளைஞர்களின் கனவுகள் நிறைவேறவில்லை. கொழும்புக்கு சென்ற சங்கர் ஒரு உணவகத்தில் வேலை செய்துகொண்டு கணக்கியலைப் படித்தான்.

மாசி மாதம் 89ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் யாழ் நகரில் பதினொன்றுக்கு 8 இடங்களை ஈரோஸ் பிடித்து வெற்றி பெற்றது. சுரேஸ் பிரேமசந்திரன் , ஆனந்த சங்கரியின் சகோதரர் யோகசங்கரி உட்பட மூவர் ஈபி ஆர் எல் எவ் அணியில் வெற்றி பெற்றார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரனால் வழிகாட்டலுடன் இயங்கிய மண்டையன் குழுவில் இருந்த ரவியினால் கொல்லப்பட்டவர்கள் அதிகம். இந்திய இராணுவம் ஈழத்தினை விட்டு வெளியேறியதும், ரவி இலங்கை இராணுவத்தின் துணைப்படையில் சேர்ந்தான். விடுதலைப்புலிகளினால் ரவி கொல்லப்பட்டதாக ஒரு தகவல். யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபல்யமான பொருளியல் ஆசிரியர் கிருஸ்ணானந்தன் ஆசிரியரும் அவரது வீட்டில் ஈபி ஆர் எல் எவ்வினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

-----------------
2019 மாசி மாதம்.
வலைகுடா நாடொன்றில் கணக்காளராக சங்கர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கீழே கிட்டத்தட்ட 50 கணக்காளர்கள் வேலை செய்கிறார்கள்.  வேலையில் இருக்கும் சங்கரின் கைத்தொலைபேசி அழைப்பு வந்தது.

மச்சான் என்ன நித்திரை கொள்ளவில்லையா? இப்ப எத்தனை மணி? . நாளைக்கு வேலையில்லையா?

சிட்னியில இப்ப 11 மணியாகிறது. நித்திரை வரவில்லை. மனுசியும் பிள்ளைகளும் படுத்திட்டார்கள். எங்கட கிளாஸ்மேட்டுகளோட கதைச்சனியே?

குமாருடன் கதைத்தேன். இப்ப ஆள் பிரின்சிப்பலாக இருக்கிறார். அவருடைய தகப்பன் செல் விழுந்து செத்துப்போனார். பாவம் குமார்தான் குடும்பத்தினைப் பார்த்து எம் எஸ் இ வரை படித்திருக்கிறான். தேவா இறுதி யூத்தம் வரை வன்னியில் இருந்து கஸ்டப்பட்டிட்டான். மயூரன் மாவீரர் ஆகிவிட்டார். குப்பி இப்ப நியூசிலாந்தில் இருக்கிறான்.மப்பு ஜேர்மனியில. மான்ஸ் திருக்கோணமலையில இருக்கிறான். பிரபா இப்ப கனடாவில இருக்கிறான். நல்ல கெட்டிக்காரன். உனக்கு தெரியும்தானே. 

ஓம் முதல் தரம் எடுக்கேக்க பிசிக்கல் சயன்ஸ் கிடைத்தது.  இரண்டாவது தரம் எடுக்கேக்க பேரதேனியா கிடைத்தது. ஆனால் மறுமொழி வரமுன்பு பிசிக்கல் சயன்சுக்கு ஓமென்று சைன் வைத்திட்டான். படிக்கும் போது அவனுடைய தகப்பன் இறந்திட்டார். குடும்பத்தினைப் பார்க்க வெளினாடு போய் இப்ப கனடாவில படித்தவேலையும் செய்யாமல் குளிருக்க கஸ்டப்படுகிறான். எங்கட பச்சில மூன்று பேர் பேராசிரியர்கள் என்பது சந்தோசம். யாழ், வன்னி, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் வேலை பாக்கினம். எல்லோரையும் பார்த்து 30 வருடங்களாகிவிட்டது. பார்க்க ஆசையாக இருக்கிறது.

86காரங்கள் 50 பேர் ஆண்கள் பெண்கள் என கம்போடியா, தாய்லாந்து, மலேசியா என்று போய் வந்தார்கள். 87காரர்கள் எல்லோரும் சந்தித்து புத்தகம் ஒன்று வெளியிட்டார்கள். 88காரர்கள் இந்தவருடம் எதோ பெரிதாக செய்வதாக கேள்விப்பட்டேன். நாங்களும் எல்லோரும் சந்தித்தால் என்ன?

சந்திப்போம். இலங்கை வேண்டாம். எல்லாம்போய்விட்டது. போனால் கவலைவரும்.

உனக்கு ஊரில ஆக்கள் இல்லை. வெளினாட்டிலதான் இருக்கினம். எங்கட உறவுகள் இலங்கையிலதானே இருக்கினம். அதோட உவன் சித்தங்கேணி,விஜயகுமார் எல்லாம் ஊரிலதானே. அவங்களால வெளினாடு வரமுடியுமே?

 நித்திரை கொள்ளமால் யாரோட அலட்டிக்கொண்டிருக்கிறியள் என்று மனுசி திட்டும் குரல் கேட்கிறது. பிறகு கதைப்போம். 

ஒம் எனக்கும் இப்ப வேலையில மீட்டிங் இருக்கிறது. குட் நைட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கந்தப்பு பழைய ரொக்காட்டை எடுத்து ஓடவிட்டிருக்கிறீர்கள்.கீறு விழாமல் இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீறு  விழுந்தாலும் ஓடவிட்டுக்கொண்டுதான் இருக்க வேண்டும்.....அப்படியும் மனசு ஆறாது......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ ஆறாத ரணங்களைச் சுமந்தபடி வாழும் நாம் கடந்து போன வாழ்வின் பக்கங்களை சுமைகளை வேதனைகளை அப்பப்போ இரைமீட்டிப் பார்க்காமல் வாழ்வது சாத்தியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ரணங்களை மீட்டுஎழுதியிருக்கின்றீர்கள் ,தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 1:04 AM, ஈழப்பிரியன் said:

என்ன கந்தப்பு பழைய ரொக்காட்டை எடுத்து ஓடவிட்டிருக்கிறீர்கள்.கீறு விழாமல் இருக்கட்டும்.

பழையது என்று நாங்கள் கண்டு கொள்ளாமல் விட்டதினால்தான் , வந்தான் வரத்தான் என்று எல்லோரும் நாம் வாழ்ந்த இடங்களுக்கு உரிமைகோருகிறான். பொலநறுவை. புத்தளம் என தமிழன் இருந்தான். தமிழ்ப் பெளத்தர்கள் பலர் இருந்தார்கள். எங்களது பாட்டன், பாட்டிக்கு முன்பு இருந்தவர்கள் பற்றித் தகவல் எதுவும் தெரியுமா? வரலாறுகள் தெரியுமா?. எனென்றால் நாங்கள் பழமை என்று கண்டுகொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2019 at 12:55 PM, கந்தப்பு said:

மப்பு ஜேர்மனியில.

 கந்தப்பு! மப்பு ஜேர்மனியிலை எந்த இடமெண்டு சொன்னியளெண்டால் போகேக்கை போத்திலோடை போகலாமெல்லே...😤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 1:39 AM, suvy said:

கீறு  விழுந்தாலும் ஓடவிட்டுக்கொண்டுதான் இருக்க வேண்டும்.....அப்படியும் மனசு ஆறாது......!

ஆறாது ஆறாது சாகும்வரை இருக்கும் வலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 2:57 AM, Kavallur Kanmani said:

எத்தனையோ ஆறாத ரணங்களைச் சுமந்தபடி வாழும் நாம் கடந்து போன வாழ்வின் பக்கங்களை சுமைகளை வேதனைகளை அப்பப்போ இரைமீட்டிப் பார்க்காமல் வாழ்வது சாத்தியமில்லை.

உண்மைதான். அத்துடன் எமக்கு நடந்தவற்றை வேறுநாட்டவர்களுக்கு கட்டாயம் சொல்லவேண்டும். நாங்கள் நடந்தவற்றை சொல்லாததினால்தான் கண்டவன் கிண்டவன் எல்லாம் கற்பனைக் கதைகளைச் சொல்லுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 5:44 PM, putthan said:

பழைய ரணங்களை மீட்டுஎழுதியிருக்கின்றீர்கள் ,தொடருங்கள் 

அமைதிப்படை  தெல்லிப்பளையில் 90 அப்பாவிகளைக் கைது செய்தது என்று சொன்னேன் அல்லவா. அக்காலத்தில் சென்னை வானொலியில் 'அன்புவழி', 'வெற்றிமாலை' என்ற நிகழ்ச்சிகளில் 90 புலிகளைப் பிடித்ததாக செய்திகள் வந்தன.  அதில் தென்கச்சி சுவாமிநாதன் பல பொய்களைச் சொல்வார். 
இன்று பாகிஸ்தானில் இந்திய விமானங்கள் குண்டு போட்டு 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தியினை இந்திய ஊடகங்கள் வெளியிட்டு இருக்கின்றன. இவற்றில் கொல்லப்பட்ட அப்பாவிகள் எத்தனையோ?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு மீள அந்த நினைவுகளை கொண்டுவந்துவிட்டீர்கள். இயக்கமோதல்களால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பலர் மீளவில்லை. அதே சமயம் இந்த இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய இந்தத் துணைப்படையின் செயற்பாடுகளால் பாதிக்கப்படாத தமிழர்கள் இல்லை என்றே சொல்லலாம். மறக்க நினைத்தாலும் முடிவதில்லை. எது சரி எது பிழை என்றே தெரியாமல் அன்றைய காலத்தில் பல இளையவர்கள் இந்திய அரசியல் சூழ்ச்சிகளால் பலியாகிப்போனார்கள். மறுக்கமுடியாது. இந்தியாவை என்றுமே மன்னிக்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மோடு வாழ்ந்தவர்களின் மரணமும் அது தரும் வலியும் என்றும் ஆறாததுதான். நீங்கள் கூறியதுபோல் பழையனவற்றை நாம் எழுதினால்த்தான் புதியவர்களுக்கு அது தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமைதி காக்க வந்த இராணுவத்தால் எனது தந்தை கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
துப்பாக்கி பிடியினால் தாக்க முனைந்த போது துப்பாக்கியை பிடித்துவிட்டார் என்று சுற்றி வளைத்து பூட்ஸ் கால்களாலும் துப்பாக்கி பிடியினாலும் மோசமாக தாக்கப்பட்டார்.
எங்கள் கிராமத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் வீடுவீடாக சென்று தாக்கப்பட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் நடந்த கோரமான கொலைகளை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்த கந்தப்புக்கு நன்றி.

கொலைகள் மலிந்த நிலமாக இருந்த காலத்தில் பார்த்த மரணங்கள் சுடலையில் பிணம் எரியும்போது அருகில் இருந்து விடுப்புக் கதைக்கும் அளவிற்கு பதின்ம வயதினரான எங்களையும் மாற்றியிருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.