Jump to content

ரணமாகிப்போன காயங்களும் மாறாத வடுக்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணமாகிப்போன காயங்களும் மாறாத வடுக்களும்
     ************************************

கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்று சொல்லுவார்கள்.ஆனால் பல மனிதர்களிடம் அது  இருந்ததில்லை,அதிலும் என் இனத்திற்கு எதிராக போராடுபவனிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்..?

ஆம் எனது தடுப்புமுகாம் வாழ்வில் நான் அனுபவித்த துயர் நிறைந்த சம்பவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்கிறேன்....

நான் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்பு முகாமிலே பல மாதங்கள் கடந்து வருடமாகவும் துயர் சுமந்தேன்.

இறுதி யுத்தகாலப்பகுதியில் பல பொதுமக்களும் சரி போராளிகளும் சரி   இராணுவத்தின் எறிகணைகளிற்கு பலநூறுபேர் காயமடைந்தும் மரணித்தும்போவார்கள்.மரணத்தின் பிடியில் வாழ்வு,காயங்களிற்கு மருந்தின்றி மரணித்தோர்கூட பலநூறுண்டு.

அதேகாலப்பகுதியில்தான் நான் யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் காயமடைந்திருந்தேன்.இரண்டு கால்களிலும் காயமடைந்திருந்தேன்,ஆனால் ஓர் காலிற்கு மட்டுமே மருந்துகட்டினேன்,

மறுகாலின் முழங்காலின்மேல் குதியில் இராணுவத்தினரின் றவுன்ஸ்(ரவை)துளைத்துக்கொண்டது.அத்தோடு ரவை வெளியேறவும் இல்லை.

கால்களிற்குள்ளே ரவையோடு இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தேன்,இரத்த ஓட்டத்தோடு கால்களிற்குள் ரவை ஓடிக்கொண்டே இருந்தது.

பலநாட்கள் கால்களை தூக்கி நடக்க முடியாமல் தவித்தேன்,கால்கள் கண்டல்பட்டும் இழுத்தும்கொண்டது.

நடக்க முடியாது விட்டாலும் இராணுவத்தினர் அணி எண்ணும்போது லைன் போகவேண்டும்.என் தோழிகளும் ஏசியபடி இருந்தார்கள்,கால்களிற்குள் ரவையோடு திரியாத பிறகு பெரிய சிக்கலாபோடும் என்று.அதனால் இந்த ரவை எடுப்பதென்று முடிவெடுத்தேன்,

இராணுவத்தினரிடம் கால்களை காட்டி விடயத்தை கூறினேன்,இரண்டு கிழமைகள் கழித்து வவுனியா மருத்துவமனை கூட்டிச் சென்றார்கள்.

மருத்துவமனை போகும்போது இரண்டு பெண் இராணுவத்தினர் எனக்கு காவலாகவும் வந்தார்கள்.

மருத்துவரிடம் எனது கால்களை காட்டினேன்.பரிசோதித்த மருத்துவர் சத்திரசிகிச்சை செய்தே ரவைய வெளியே எடுக்கவேண்டும் என்றார்.

ஆனால் சத்திரசிகிச்சைக்கு போடவேண்டிய வெள்ளைஉடை என்னிடம் இருக்கவில்லை.என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருந்தேன்.

அதன்பின்  இராணுவப்பெண்களிடம் சென்று விடையத்தை கூறினேன்.அவர்களிடம் வெள்ளை உடுப்பு வேணும் என்றேன்.அவர்கள் என்னை நக்கலடித்தார்கள்,கூட்டிக்கொண்டுவந்ததும் காணாதென்று உடுப்பும் நாங்களா தரவேண்டும் என்று.

போராளியாக நான் இருந்தபோது இடம்பெயர்ந்து வந்திருந்த ஓர் குடும்பத்தவர்கள் என்னோடு அன்பாக பழகியிருந்தனர்.நாம் தடுப்புமுகாம் வந்ததன்பின் என்னை தேடி கடிதம் போட்டிருந்தனர்,

அவர்களும் செட்டிக்குளம் முகாமிலே இருந்தார்கள்.கடிதத்தில் தமது தொலைபேசி இலக்கத்தையும் எழுதி இருந்தனர்.என்னிடம் போன் இல்லாவிட்டாலும் அவசரத்திற்கு உதவும் என்று அவர்கள் தொலைபேசி எண்ணை பாடமாக்கி வைத்திருந்தேன்,

முகாமில் இருக்கும் குடும்பத்தவர்களிற்கு அறிவித்து எங்கயாவது வெள்ளைஉடை எடுக்கலாம் என்று நினைத்தேன்,இராணுவத்தினரிடம் நான் கூறும் எண்ணிற்கு தொலைபேசி எடுக்க முடியுமா என்றுகேட்டேன்,மறுத்துவிட்டார்கள்,இனத்துவசம் கொண்டவர்கள்.

மதியம் 3-00 மணிக்கே என்னை தியட்டருக்கு எடுப்பார்கள்,அதுவரை என்னை ஒரு வாட்டில் நிற்குமாறு இராணுவத்தினர் கூறினர்.அங்கு சென்றபோது அங்கு நின்ற மக்கள் போராளி என்று என்னை அனுதாபத்தோடு பார்த்தார்கள்.அத்தோடு சிலர் பயந்தனர்.ஏனெனில் இராணுவத்தினர் என்னோடு இருந்தபடியால்.

பொதுமக்களோடு கதைத்தாலாவது தொலைபேசி எடுத்து உடுப்பு வாங்கலாம்,ஆனால் எனக்கு பொதுமக்களோடு கதைக்க அனுமதி வழங்கப்படவில்லை.

என்ன செய்வது என்ற நிலை.இரு தலைகொள்ளி எறுப்பாக தவித்தேன்,மனசெல்லாம் பாரமாகவும் வேதனையாகவும் இருந்தது,இப்படி ஒரு நிலையை எண்ணிப்பார்க்க வாழ்க்கைகூட வெறுத்துப்போனது,

தடுப்பிலும் குளிக்க தண்ணி இல்லை.ஒழுங்கான சாப்பாடில்லை.தூங்க இடமில்லை.வெய்யில் வெட்கை ஒருபுறம் அதால காய்ச்சல் வாயிற்றுளைவு என்று ஊரிப்பட்ட வருத்தங்கள்.என்ன செய்வது எல்லாமே சூனியமாக இருந்தது.

தியட்டருக்குபோற நேரம் நெருங்க நெருங்க எனக்கு இதயதுடிப்பு பலமடங்காக அடிக்கத்தொடங்கியது.இனி எதுவும் செய்யேலாது.எனக்கு சிங்களம் தெரியும்.அதால நேர மருத்துவரிட்ட போக முடிவெடுத்து இராணுவ பெண்களிடம் சொன்னேன்,நான் மருத்துவரோட கதைக்க வேணும் என்று.சரி என்று கூட்டிச்சென்றார்கள்.

உள்ளேசென்ற நான் மருத்துவரிடம் கூறினேன்,நான் முகாமில் இருந்து வருகிறேன்,எனக்கு தியட்டருக்குபோட உடுப்பில்லை.நீங்கள் மயக்காது நோமலா விறைப்பூசி போட்டு புள்ளட்டை எடுங்கள் என்று.

ஆனால் மருத்துவர் மறுத்துவிட்டார்,ரவை சிறிய பொருளா நோமலா எடுப்பதற்கு..?முழங்காலின்மேல் பகுதியின் உள்பகுதியில் ரவைஉள்ளது. மயக்கினால்தான் வேதனை தெரியாதென்றார்.

என்னால் என்ன செய்வதென்றே தெரியாமல் போனது.ரவையோடு இருந்து தினம் வேதனைப்படுவதைவிட எடுப்பதுதான் நல்லது.என்ன செய்வதென்று யோசித்தேன்,

மருத்துவரிடம் கூறினேன்,என் குடும்பத்தவர்கள் முகாமில் உள்ளார்கள்.வெள்ளை உடைவாங்க பணம் இல்லை.எவ்வளவு வேதனை என்றாலும் தாங்கிகொள்கிறேன்,விறைப்பூசி போட்டு எடுங்கோ என்று கூறினேன்.

மருத்துவர் முதலில் சம்மதிக்கவில்லை,என் மன்றாட்டை கேட்டபின் சரி என்று கூறி இன்னொரு தாதியை உதவிக்கு அழைத்தார்,

விறைப்பூசி போட்டுவிட்டு சிறிய நேரத்தில் மற்றைய அறைக்குள் வருமாறு கூறினார் அந்த பெண் மருத்துவர்,

ஓர் கட்டிலில் இருத்தி சேஜரி பிளேட்டினால் வெட்டினார்கள்.எனக்கு முழுமையாக கால்பகுதி விறைக்கவில்லை.நோக ஆரம்பித்தது....என்ன செய்வது நோகுதென்றால் தியட்டருக்கு வா மயக்கிதான் எடுக்கவேணும் என்று சொல்வார்கள்.தியட்டருக்குபோட உடுப்பிருந்தால் ஏன் இப்படி வேதனையை அனுபவிக்கிறேன்..?

காலம் எம்மிடம் இல்லையே,துயர் சுமந்தே ஆகவேண்டிய நிலை.கால்களை வெட்டியே ரவையை எடுத்தார்கள்,வலி வேதனை ஒருபுறம்,என்னை அறியாமலே இரு கண்களில் இருந்தும் கண்ணீர் ஓடியது.

மருத்துவர் காணாதபடி கண்ணீரை மறைக்க முயன்றேன்,முடியவில்லை,கண்ணீர் என் அனுமதியின்றி ஓடியபடி இருந்தது.ரவை
 இருந்த பகுதி வெடிமருந்துபட்டிருந்தபடியால் கால்களிற்குள் சதைப்பகுதி கறல்பிடித்து இருந்தது.

அதைவெட்டி எடுக்க வேணும்,அல்லது கடிபோன்ற வேறு வருத்தங்கள் வரும் என்றார்கள்.மனம் ஊமையாய் அழுதது.

என் கால்களில் சதைப்பகுதி மயக்கமின்றி என்சுயநினைவோடு வெட்டப்படுகிறது.உயிரோடு மரணவலியை அனுபவித்தேன்,எப்படி கூறமுடியும் நோகுது என்று..?ஓர் உடை இல்லாதபடியால் நான் பெரும் துயரை சுமந்துநின்றேன், வார்த்தைகள் இன்றி அன்றையதினம் அளவின்றி கண்ணீரை சொரிந்தேன்.

தொடைப்குதிக்குள் இருந்த ரவையை மயக்காம எடுத்ததாம் என்று என்னை பாராட்டி அந்த ரவையையும் எனக்கு பரிசளித்தார் அந்த மருத்துவர்.நான் அக்கணப்பொழுதுஅனுபவித்த துயர் எனக்கு மட்டுமே புரியும்.ஏன் எனக்கு மட்டும் கல்லினாலா உடம்மையும் மனதையும் இறைவன் படைத்தான்,நானும்  உணர்வுகளோடு வாழும் ஒரு பெண்தானே.

எனக்கான நியாயத்தையும் என் கால் வேதனையையும் கண்ணீரையும் யாரிடம் சமர்ப்பிப்பேன்,.?எப்படி நான் நின்மதியாக இருப்பேன்.நாங்கள்தானே போரில் அனைத்தையும் இழந்து தாய் தந்தையை இழந்த பிள்ளைகள்போல இன்று அனாதையாக இருக்கிறோம்,

"இடையன் இல்லாத மந்தைக்கூட்டம் போலானது எமதுநிலை"

சிறிய நேரத்தின்பின் என்னை வண்டிலில் இருத்தி வாட்டிற்கு விட்டார்கள்.அங்கு சென்றதும் களைப்பாகவும் பசியாகவும் இருந்தது.காலையில் இருந்து எதுவும் சாப்பிடவும் இல்லை.

யாரிடம் உணவு கேட்கமுடியும்.? ஒரு தேநீராவது அருகில் இருப்பவர்கள் தரமாட்டார்களா..? என்று ஏங்கினேன்,நான் போராளி இராணுவம் எனக்கு காவல் யாரும் என்னோடு கதைக்கவில்லை பயத்தில்.

பெரும்பசியோடு இரவுவரை காத்திருந்தேன் மருத்துவமனை உணவிற்காக,உணவு வந்தபோது அந்த உணவினை ஒருவரை தவிர மற்றையவர்கள் எடுக்கவில்லை.நானும் கால் ஏலாதத்தோடும் இறங்கி எடுத்துக்கொண்டேன்,

இரவு உணவுநேரம் ஓர்தாய் வந்து என்னிடம் கால் நோகுதா ஏதும் உதவி வேணுமாம்மா என்றார்.அந்த தாயின் வார்த்தைகள் எனக்கு ஏதோ என்தாயைப்பார்ப்பது போலவும் என்தாய் கதைப்பதுபோலவும் இருந்தது.

இல்லை அம்மா பறவாயில்லை எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் நான் தரும் தொலைபேசி இலக்கத்திற்கு கோல்பண்ணி நான் இங்கு இருப்பதாக மட்டும் கூறிவிடுங்கள் என்று கூறினேன்.இராணுவத்தினர் கண்டுவிட்டால் அந்ததாய்க்கு பிரச்சனை ஆகிவிடும்.அவரோடு கதைப்பதை முடிந்தஅளவு தவிர்த்துக்கொண்டேன்.

இராணுவத்திற்கு பயப்படாது துணிந்துவந்து என்னோடு உரையாடிய அந்த தாயின் உதவியோடு முகாமில் இருந்த குடும்பத்தவர்கள் மறுநாள் காலையில் என்னைவந்து பார்த்தார்கள்,

முகாமில் இருந்த குடும்பத்தவர்கள் எதுவும் இல்லாத நிலையிலும் ஏதோ யாரிடமோ வாங்கி புட்டும் அவித்து கறியும் வைத்துக்கொண்டுவந்து தந்தார்கள்.அந்த நேரம் அவர்கள் தந்த உணவு அமிர்தமாகவே இருந்தது.

முகாமில் இருந்தும் என்னை தேடிவந்த எம் உறவுகள் எங்கே நான் வெள்ளைஉடை கேட்டபோது நக்கலடித்து சிரித்தவர்கள் எங்கே...?

அந்த இராணுவ பெண்களிடம் நான் புலி.ஏன் எனக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணமே படிந்திருந்தது.  

என்ன
செய்வது எம் இனத்தையே அழித்தவர்களிடம்  மனிதாபிமானத்தை எதிர்பார்த்து நின்றது என்அறியாமையே....

**பிரபாஅன்பு**

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.