Jump to content

ஆஸ்கார் விருதுகள் 2019 – கோ. கமலக்கண்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கார் விருதுகள் 2019 – கோ. கமலக்கண்ணன்

1

ஆஸ்கார் எப்போதும் ஒரு வித கலவையான ரசனையுடனேயே படத்தேர்வில் ஈடுபடுகிறது. முழுக்க சிறந்த திரைப்படங்களை மட்டுமோ, அல்லது முழுக்க வணிக வெற்றி படங்களையோ கொண்டோ அது தன் பட்டியலை நிரப்புவதில்லை. அது அதிகளவிலான மக்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டாடிக் கொள்வதற்கான தருணமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவதற்கான பிரயத்தனங்களிலேயே எப்போதும் ஈடுபடுகிறது.

ஆஸ்காரின் தேர்வுகள் ஏதோவொரு அரசியல் நோக்கத்தைத் தன்னுள்ளே வைத்தே செயல்பட்டு வருகிறது என்பது இன்று புரிந்து கொள்ள முடியாத கருத்தமைவல்ல. அது கூடிய மட்டும் மக்கள் கூட்டத்தை அதிகமாக உள்ளடக்கிக் கொள்ளும் பொருளாதாரப் பணியில் தன் கவனத்தைக் கூர்கிறது. அதனால்தான், ஹோலோகொஸ்ட், ரஷ்ய எதிரிகள், அமெரிக்க தேசியம் போன்ற நிலைப்பாடுகளைக் கொண்ட படங்களைத் தேர்வு செய்வதிலிருந்து மெல்ல நகர்ந்து இன்று கருப்பின மேம்பாடு, LGBT, ஆசிய மக்களின் கதைகள் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறது. பொதுப்புத்திக்கு ஏற்றவாறு சுழலும் சிற்றுலகமது. முன்னதை விட இவ்வகைகள் பரவாயில்லை என்றாலும் இதனாலேயே ஓராண்டில் வெளியாகும் பல நல்ல திரைப்படங்கள் கவனிக்கப்படாமலேயே போய்விடும் அபாயமும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் பொதுமக்களுக்கான ஒரு கொண்டாட்டமாக இன்னும் அதே பொலிவுடன் திகழும் ஆஸ்கார் ஒருவகையில் இதமான தலைவலி.

qxn5stgre1rc1r3w2stx-300x167.jpg

2019 ஆம் ஆண்டிற்கான ஆஸ்காரின் பரிந்துரைப் பட்டியல் வெளியாகியிருக்கும் இத்தருணத்தில் முக்கியமான படங்களைப் பற்றிய பார்வையை முன்வைக்கும் முன்னர் ஆஸ்காரின் தேர்வு முறையைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

ஆஸ்கார் பரிந்துரை தேர்வு முறை :

சினிமாத் துறையில் உள்ளும் சுற்றியும் அதன் தொடர்பிலும் உள்ள சுமார் 6000 உறுப்பினர்கள் ஒவ்வொரு பிரிவிலும் பரிந்துரைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு (பெரும்பாலும் 5), அதே எண்ணிக்கையில் தர வரிசைப்படுத்தி வாக்குகள் இட வேண்டும். வாக்குச் சீட்டுகளின் முதல் தரத்தில் உள்ள பரிந்துரையின் எண்ணிக்கை முதலில் கணக்கிடப்பட்டு அதிலிருந்து ஒரு மாய எண் முடிவு செய்யப்படும். மாய எண்ணை கணக்கிட மொத்த தர வாக்குகளின் எண்ணிக்கையை பரிந்துரையுடன் ஒரு எண்ணிக்கையினைச் சேர்த்து வகுத்துப் பெறுவார்கள். உதாரணமாக 300 ஓட்டுச் சீட்டுகளின் எண்ணிக்கையை ஆறால் வகுத்து (5 பரிந்துரைகள் + 1= 6) 50 என கிடைக்கும் எண்ணே மாய எண் ஆகும்.

அதனை ஒரு முதல் தர பரிந்துரை – உதாரணமாக Bradley Cooper பல சீட்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முதல் தர ஒட்டுகளைப் பெற்ற கணமே பரிந்துரைப் பட்டியலில் வந்துவிடுவார். வேறு எவரும் இல்லாத பட்சத்தில் இரண்டாம் சுற்றில் இரண்டாம் தர ஓட்டுகள் கணக்கெடுக்கப்பட்டு மாய எண்ணை நோக்கி எண்ணப்படும். இது போல ஐந்து பரிந்துரைகள் வரை பரிந்துரைக்கப்படும். சிறந்த திரைப்படத்திற்கான தேர்வில் மட்டும் குறைந்தது ஐந்து முதல் அதிகபட்சம் 10 வரை பரிந்துரைகள் இருக்கலாம். இதனால் தான் இவ்வாண்டு எட்டு பரிந்துரைகள் உள்ளன.

வெற்றியாளர்களுக்கான தேர்வு செய்யும் முறை மிக எளிதானது. பரிந்துரைப் பட்டியலில் இருந்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரேயொரு வாக்கு மட்டுமே உறுப்பினர்கள் இட வேண்டும். இருப்பினும் தனக்குப் பரிட்சயமற்ற துறை அல்லது தான் பார்க்காத படங்கள் பற்றிய வாக்குகளை இடாமல் இருப்பதற்கு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் நிர்ணயிக்கப்படுகிறார்கள்.

இந்த அமைப்பிலேயே ஜனநாயக அமைப்பின் குறைபாடு இங்கும் இருப்பது புலனாகிறது. இதைப் புரிந்து கொண்ட திரைப்படங்கள் பொதுவில், விளம்பர உத்திகள் மூலமும் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தின் மூலமும் வலிந்து சில படங்களை அவ்வாண்டின் ஆகச்சிறந்த திரைப்படங்களாக நிறுவ விழைகிறது. மேலும், வாக்கு அளிப்பவர்கள் அனைவரும் அத்தனை திரைப்படத்தையும் நுண்ணி அணுகி கறாராக மதிப்பிடுபவர்கள் அல்ல. மாறாக தனக்கு வந்து சேர்ந்த திரைப்படங்களையே அப்படியே வாக்கிடும் புத்தி கொண்டவர்களே இருப்பதற்கான சாத்தியம் அதிகம். இதனடிப்படையிலேயே Roma, Black Panther, A Star is Born போன்ற திரைப்படங்கள் அமோக வரவேற்பைப் பெறுவதும் Heriditary, Thunder Road, Sweet Country, Eighth Grade, Zama, First Reformed, You Were Never Really Here, The Rider, Love, Simon போன்ற நல்ல படங்கள் ஒருதலைபட்சமாக கவனிக்கப்படாமல் விடப்படுவதும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது. இத்தனைக்கும் இந்த நல்ல படங்களின் பட்டியலில் சில படங்கள் பல முக்கிய எழுத்தாளர்களாலும், விமர்சகர்களாலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. விமர்சகர்களுக்குத்தான் வாக்கு கிடையாதே!

இதனடிப்படையில் ஆஸ்கார் என்பது தரம் பற்றிய துல்லியமான அளவுகோல் அல்ல என்பதும் அது ஒரு கொண்டாட்டத்திற்கான வடிகாலே என்பதும் புலனாகும்.

2

ஆஸ்காரைப் பொறுத்தவரையில் ஆண்டாண்டுகளாய் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டிய நோக்கமும் தேவையும் அதற்கு முதன்மையான காரியங்களுள் ஒன்று. ஓரிரு தசாப்தங்களுக்கு முன்புவரை அமெரிக்காவின் வரைகலை தொழில்நுட்பம், பட்ஜெட், நட்சத்திர மதிப்பு போன்றவற்றை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு அதிக மதிப்பு இருந்து வந்தது. தற்போது மெல்ல அதன் அமைப்பு மாறி உலகளாவிய வெவ்வேறு இனங்களுக்குரிய திரைப்படங்களைத் தேர்வு செய்யும் -நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்த்த- போது இன்னும் பலமடங்கு உலகெங்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

உதாரணமாக 2009 இல் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து திரைப்படங்களையும் கவனிப்போம். Slumdog Millionaire ,The Curious Case of Benjamin Button , Frost/Nixon ,Milk & The Reader. இவை ஐந்தையும் பார்த்தவர்களுக்குத் தெரியும் எந்த விதத்திலும் “Slumdog Millionaire” வெற்றிக்கான தகுதியுடைய சிறந்த படமல்ல என்பதும், அதற்கான காரணமாக உலகப் பார்வையாளர்களை, குறிப்பாக இந்தியா போன்ற அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைத் தம் வசம் ஈர்ப்பதன் நோக்கத்தினை மட்டுமே கருத முடியும். 2009 ற்குப் பிறகு அகாடமி விருது வழங்கும் நிகழ்வையும் அது தொடர்பான செய்திகளையும் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மடங்குகளாக பெருகியிருக்கிறது. சென்ற ஆண்டு “The Shape of Water“ வரை இந்தக் கணக்கினைப் பயன்படுத்த அகாடமி தவறவில்லை. இதே தர்க்கத்தில், அமெரிக்காவின் அதிக எண்ணிக்கையிலான ‘கருப்பின’ மக்களின் வாழ்வியல் பற்றிய கதைகளை முன்னெடுக்கத் தொடங்கிய அகாடமி இன்னும் அதில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.

free-printable-2019-oscar-ballot-3-300x2

“Slumdog Millionaire”, ‘’The King’s Speech’‘ போன்ற திரைப்படங்கள், சிறந்த படங்களாய் வெற்றி பெறுவதும், பரிந்துரைக்கப்படுவனவும் நிஜத்தில் தரத்துடன் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்ற ஒன்றைத்தான் மீண்டும் நிரூபித்து வருகின்றன. இவ்வாண்டும் Roma திரைப்படம் முன்னிறுத்தப்படுவதன் அடிப்படைக் காரணமும் அது உலகை பிரதிநித்துவம் செய்யும் கதை மாந்தர்களைக் கொண்டு நகர்வதால் தான். “Slumdog Millionaire” மற்றும் “12 Years a Slave” திரைப்படங்களால் அகாடமிக்கு கிடைத்த வரவேற்புகளுக்குப் பிறகு Roma-வால் இன்னும் பார்வையாளர்கள் கூடியிருக்கிறது எனில் அது மிகையாகாது.

இவ்வடிப்படையிலேயே இவ்வாண்டு கருப்பின வாழ்வியலை முன்வைக்கும் மூன்று திரைப்படங்கள் சிறந்த படத்திற்கான பரிந்துரையில் உள்ளன. அவற்றில் இரண்டு ஏற்கனவே பல விருதுகளையும், நேர்மறை விமர்சனங்களையும் பெற்றுள்ளன.

3

கருப்பின மீட்சி

Black Panther

முதன் முதலாக ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் சிறந்த படத்திற்கான பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என இதற்குக் கூடுதாலாய் ஒரு பாராட்டு உருவாகி வந்திருக்கிறது. ஆனால், இப்படத்தின் மறுக்க முடியாத வெற்றியையும், உலகெங்கும் அதற்கு உருவாகி வந்துள்ள ரசிகர்களின் எண்ணிக்கையையும் பார்க்கையில் ’Black Panther’ திரைப்படத்திற்கு அகாடமியின் தேவையென ஏதுமில்லை. மாறாக அகாடமிக்குத் தன் நோக்கத்தை அடைய ’Black Panther’ தேவையானதாகிறது என்றுதான் முடிவு கட்ட இயலும்.

black-panther-6-300x169.jpg

ஒலி தொடர்பான நான்கு பிரிவுகளிலும் முக்கிய தேர்வாக இருக்கும் இத்திரைப்படம் சிறந்த படத்திற்கான வெற்றி முனைப்பிலும் முன்னணியிலேயே நிற்கிறது. வகாண்டாவின் அரசன் தன் கருப்பினங்களை ஒன்று திரட்டுவதும், அதிலிருக்கும் எழுச்சியும், இடையிடையே வரும் எதிரியுடனான மோதல்களும் ஆயிரமாண்டு பழைங்கதை. ஆனால், அதில் கருப்பினத்தவர் இருப்பதாலேயே உருவாகிவரும் கொண்டாட்ட நிலை – ஆயிரமாண்டு குற்ற உணர்விலிருந்து தப்பித்துக் கொள்ள – அமேரிக்கர்கள் உருவாக்கிக் கொண்ட கண்ணாடி. இதை மேலும் நீட்டித்து Avengers Infinity War திரைப்படத்தில் வகாண்டாவையே மையமாகக் கொண்ட போர்க்காட்சியை நிகழ்த்தியதும் பார்வையாளர்களுக்குச் சிலிர்ப்பேர்படுத்தும் உத்தியே.

இதில் நல்ல திரைப்படமா இல்லையா என்ற சந்தேகம், கேள்வி எங்கிருந்து வர முடியும்? இது ஒரு இனக் கொண்டாட்டம். ஒருவேளை இத்திரைப்படம் சிறந்த திரைப்படமாக வென்றாலும் கூட ஒரு சில வருடங்கள் தாண்டி திரை ரசிகர்கள் மனதில் இருக்காது என்றும் துணிபிடலாம். ’சிறந்த மூல இசை’ பிரிவிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

BlacKkKlansman

’இன்னொரு நிறவெறியும் அதற்கெதிரான சாகசமும்’ வகைத் திரைப்படம். ஸ்பைக் லீ இதற்கு சிறந்த இயக்குநர் என்று பரிந்துரைக்கப்பட்டதில் இருந்து இதற்கான முக்கியத்துவம் அகாடமியால் அதிகரித்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இதன் மூல இசையும், துணை நடிகர் பிரிவில் தேர்வான Adam Driver-ன் நடிப்பும் மெச்சத்தக்கவை. ஸ்பைக் லீ தன் இனத்திற்காக தந்துள்ள வாழ்நாள் பரிசெனவும் கொள்ளலாம். (அவரால் இவ்வளவுதான் தர முடியுமா என்று கேட்க வேண்டாம்) அகாடமியின் பதற்றமும் குழப்பமும் தான் இயக்குநரையும் இத்திரைப்படத்தையும் இத்தனை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவைத்திருக்கிறது.

Ku Klux Klan எனும் அமேரிக்க மேட்டிமைத்தனமும் நிற வெறியும் கொண்ட ஒரு அமைப்பு கருப்பின உரிமைப் போராட்டங்கள் நிகழ்த்துபவர்கள் மீது குறி வைக்கிறது. அவ்வூரின் முதல் கருப்பின காவலனான றான் ஸ்டால்வொர்த் சில காய்நகர்வுகள் மூலம் ‘ஆரிய உயரினம்’ என்று நினைக்கும் ரகசிய கூட்டத்திற்குள் ஊடுருவி அவர்களது அத்தனைச் சதியையும் அவர்களுக்கெதிராகத் திருப்புகிறான்.

blackkklansman.0-300x200.jpg

இத்திரைப்படத்தில் Birth of Nation திரைப்படக் காட்சியின் பின்னணியில் நிலவும் வன்மம், கருப்பர்கள் மீதான வரலாற்று கொடுமைகள் பற்றிய ஓரிரு துணுக்குகள் தவிர எதுவும் ஆழமான கதையாடல்களுடன் செல்லாமல் வெறும் சொற்களாக எஞ்சி நின்றுவிட்டன. இருப்பினும் ஆறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ஓர் விருதையேனும் பெறும் – குறிப்பாக துணை நடிகர் பிரிவில்- என்று எதிர்பார்க்கலாம். இதற்கு முன் ‘Do The Right Thing’ திரைப்படத்தில் பரிந்துரை செய்யப்பட்ட ஸ்பைக் லீ முதல் முறை சிறந்த இயக்குநராக இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால், இறுதி வெற்றி எட்டாக்கனியெனத்தான் படுகிறது. அது நியாமும் கூடத்தான். சென்ற ஆண்டு அகாடமியில் முக்கிய இடம் பெற்ற ‘Get Out’ திரைப்படத்தைப் போன்ற உணர்வு தரும் ‘Sorry to Bother You’ திரைப்படம் எந்தப் பரிந்துரையும் பெறாதது குறித்து ஆறுதல் கொள்ளும் அதே வேளை BlacKkKlansman குறித்து ஏக்கப் பெருமூச்சு விடாமலும் பல முக்கிய படச் சொந்தகாரர்கள் இருப்பது கடினம்.

Green Book

ஓர் அரை நூற்றாண்டிற்கு முன்னர் நிகழும் கதை. கருப்பர்கள் மீது அவ்வளவு நட்புணர்வு இல்லாத இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்வன் டோனி வல்லிலாங்கா. தன் கருப்பு எஜமானை (டான் ஷெர்லி) ஒவ்வொரு ஓய்வகத்திற்கும் ஒவ்வொரு பியானோ கலை நிகழ்த்துமிடத்திற்கும் அழைத்துச் செல்லும் வண்டியோட்டியாக இருப்பதே அவன் பணி.

திரைக்கதையில் சுவாரஸ்யமேற்படுத்தவென பல நுட்பங்கள் ஆண்டாண்டாய் உருப்பெற்று மேம்பட்டு வந்திருக்கின்றன. அவற்றை சரியான அளவில் பயன்படுத்துவதே இந்தப் படம் தனக்கு முன் எடுத்துக் கொண்டிருக்கும் முக்கிய சவால். அது தேவையென்று சொல்லித் தந்தவர் யாரென்று அறிவதறிவு! ஒற்றைப் பார்வையிலிருந்து மட்டும் கேள்விகளையும் சந்தேகங்களையும் முன்வைத்து அலசாமல் இருமுனைகளிலிருந்தும் அதைச் செய்திருப்பது ஆறுதல். மேலும் திரைக்கதையில் Driving Miss Daisy-ஐயும், திரைக்கதையின் தன்மையில் The Shawshank Redemption-ஐயும் முன்னோடிகளாக கொண்டு நகர்த்தப்பட்டிருக்கிறது.

8U02_TTP_00025CR_618x412-300x200.jpg

படத்தின் பெரும்பகுதி காருக்குள்ளேயே நிகழும் உரையாடல்களால் நிரம்பி இருப்பதால், வெகு குறைந்த படமாக்கும் வாய்ப்புகளே இருக்கும் நிலையில், அப்படி ஒரு சலிப்பே ஏற்படாமல் பார்த்துக் கொண்டதற்கு ஒளிப்பதிவாளருக்கும் முதன்மை நடிகர்களுக்கும் Peter Farrelly-க்கும் சபாஷிடலாம்.

Green Book ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு பிரிவிலும் ஓரிரு வலுவான போட்டியாளர்களுடனே களம் நிற்கிறது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த துணைநடிகர், சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த மூல திரைக்கதை ஆகிய ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான வலுவான போட்டி Roma, Black Panther, The Favourite ஆகிய மூன்றிற்குமிடையிலேயே நிகழும் என்பதால் Green Book-ற்கு அப்பிரிவில் வெல்ல வாய்ப்பேதும் இல்லை. துணை நடிகர் பிரிவில் மஹெர்ஷாலா அலி இரண்டாவது முறையாக வெல்வாரா என்பது கிளர்ச்சிக்கும் அகாடமி உளவியல் ஆய்விற்குமான கேள்வி. சிறந்த நடிகர் பிரிவில் ஏற்கனவே Bradley Cooper மற்றும் Rami Malek-இடம் Viggo Mortenson தன் வெற்றியை இழக்க வாய்ப்புகள் அதிகம்.

4

இசையின் கொண்டாட்டங்கள்

Bohemian Rhapsody

படம் முழுவதும் Rami Malek வியாபித்திருக்கிறார். சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் ஒரு தரமான போட்டியை முன்வைத்திருக்கிறார். Freddie-இன் உடல் மொழியைப் புரிந்து கொண்டு அப்பட்டமாக அப்படியே அதை முன்வைக்காமல், தன் ஆன்மாவைப் பங்கிட்டிருக்கிறார். படத்துவக்கத்தில் பதின் பருவ வாலிபனாய் இருக்கையில் தடுமாற்றங்களையும் கனவுகளையும் இணைத்து புரிந்து கொண்டும், பின்னர் வாழ்விறுதியை அடையப் போகிறோம் என்றதும் உருவாகும் நேரக்குறைவின் விழிப்பூட்டலையும் அதனால் பெருகும் உற்சாகத்தையும் இணைத்தவாறு புரிந்து கொண்டும் உலகறிந்த ஒரு கதாபாத்திரத்தை முன்வைப்பது கடும் சவால்தான். அதன் அழுத்தத்தைக் கடந்து இவர் முன்நிற்கிறார்.

09-bohemian-rhapsody-film-press-2018-bil

சிறந்த படத்தொகுப்பு பிரிவிலும் இப்படத்திற்கான வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறது. இப்பிரிவில் The Favourite ஒரு நல்ல போட்டியாளர். மூன்றாவதாக இசை பற்றிய திரைப்படம் ‘சிறந்த ஒலித்தொகுப்பு’, ’சிறந்த ஒலிக் கோர்வை’ பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்படுவது ஆச்சரியமேற்படுத்தும் ஒன்றல்ல. Queen band-இன் முக்கிய பாடல்கள் உருவாகும் விதமும், அதன் பின் நிகழ்ச்சிகளும் சுவாரஸ்யமாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரு பிரிவுகளிலுமே Roma ஒரு மலை போல முன்நிற்கும். Bohemian Rhapsody-க்கு ‘சிறந்த ஒலித்தொகுப்பு’ பிரிவிலும் Roma-விற்கு ’சிறந்த ஒலிக் கோர்வை’ பிரிவிலும் விருது வழங்கப்படுவது வெகு பொருத்தமாக இருக்கும். ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று விருதுகளைப் பெறும் தகுதியுடன் முன்னிற்கிறது. சிறந்த படம் என்ற பிரிவில் விருது பெறுவது அத்தனை சரியானதாய் இருக்காது.

A Star is Born

இசைக்கான களம் காதலாக இருக்கையில் மட்டும் மனம் கூடுதல் துள்ளலுறுகிறது. அந்த துள்ளலின் வழியே வாழ்வின் கையறு நிலையைக் கடக்கத் துடிக்கிறது. காதலும் ஒரு இசைதான். இசை போலவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஆயிரம் கிளை நதிகளாய்ப் பீறிட்டுச் செல்ல அதற்கு ஆன்மமுண்டு. எதை மறைத்துக் கொண்டு காதல் முன்னகர்கிறதோ அதுவே அதைக் காவியத்தில் சேர்க்கிறது. தன் அகச்செவியை உணர்ந்த அந்த இசைக்கலைஞன் தன் வாரிசாக காதலியை முன்வைப்பதன் உணர்வுநிலையை Bradley Cooper மற்றும் Lady Gaga இருவரின் அர்த்த புஷ்டியான விழிநகர்வுகள் சரியான பதத்தில் கண்டடைந்திருக்கிறது.

ஒருவேளை வெளிநாட்டுத் திரைப்படமான Roma வழக்கமான அளவுகோல்களின் படி பொருட்படுத்தப்படாமல் விடப்பட்டிருந்தால், இரண்டாண்டுகட்கு முன்பு La La Land-ற்குத் தரப்பட்ட ஸ்தானத்தை A Star is Born அடைந்திருக்கும். இருப்பினும் தற்போதும் எட்டு பிரிவுகளில் – மூன்று நடிப்பு பரிந்துரைகள் உட்பட – முன்னணியிலேயே நிற்கிறது. சிறந்த நடிகருக்கான போட்டியில் Rami Malek-க்கிற்கும் Bradley Cooper-க்குமே உண்மையான போட்டி நிலவுகிறது. Bradley Cooper தன் கண்களின் சாதகத்தை மேலும் நுட்பமாய் புரிந்துணர்வுடன் பயன்படுத்தி துயரத்தையும், அதனுள் எரியும் ஜுவாலையின் அழகையும், பிரித்துக் காண்பித்திருக்கிறார். இது போன்ற தனிமைப்பட்டு, நோய்வாய்பட்டு, தன்னைத் தானே துன்பப்படுத்திக் கொள்ளும், ரசாயன மருந்தேற்றம் கொள்ளும் இவ்வகைக் கதாபாத்திரங்களுக்கு வரிசையாக அகாடமியின் கரிசனம் இருந்தே வந்திருக்கிறது.

a-star-is-born-300x169.jpg

Lady Gaga தன் கதாபாத்திரத்தில் மெல்ல இருளிலிருந்து ஒளிவிடும் சுடர் சூரியனாய் இதமளிப்பதிலும், தன் காதலனை வழிப்படுத்த சராசரிப் பெண்ணாய் தவித்து கோபமுற்று எரிவதிலும், தன் கண்ணீரால் தன்னை நனைத்து அவன் தந்த இசையை முன்வைத்து அதிலிருந்து தன்னிலை தொடர்வதும் என வெவ்வேறு கொள்கலன்களுக்கு ஏற்றவாறு தன் வடிவத்தினை திரவமென மாற்றிக் கொண்டிருக்கிறார். இருப்பினும், Lady Gaga-விற்கு அவரது பிரிவில் Olivia Coleman சிம்ம சொப்பனமாக இருப்பார். Sam Elliot-க்கு Sam Rockwell-உம் Adam Driver-உம் கடும் போட்டி தருவார்கள். இருந்தாலும், Sam Elliot-ற்கான ஆதரவுகள் வலுத்து வருவதை வெவ்வேறு விருது நிகழ்வுகள் காட்டியே வருகின்றன.

சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைப்படம், சிறந்த ஒலிக்கோர்வை ஆகிய பிரிவுகளில் ஜொலிக்கும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும், ”சிறந்த பாடல்” பிரிவில் Shallow-விற்கான விருது உறுதிபடவே நிற்கிறது. மீதமுள்ள பாடல்கள் எவையும் இதற்குமுன் நிற்பதென்பது பொருத்தமற்றது.

5

முதன்மைக் குதிரைகள்

Roma

இந்த ஆண்டின் முதன்மைப் படமாக உலகெங்கிலும் பல பட்டியல்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேலும் பல கலைஞர்களாலும் வாழ்த்தப்பட்டு, அகாடமியிலும் பெரும் செல்வாக்குடன் திகழும் திரைப்படமென்றால் அது ரோமா தான். இதுவும் The Favourite போலவே பத்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலமில்லாத வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு ஒரேயொரு பிரிவைத் தவிர வேறந்த பிரிவிலும் பரிந்துரைக்கப்படும் வழக்கம் அகாடமிக்கு குறிஞ்சி போல பூக்கும். இதற்கு முன் இதே 10 பரிந்துரைகளுடன் களமிறங்கியது தாய்வான் நாட்டுப் படமான Crouching Tiger, Hidden Dragon. பதினேழு வருடங்களுக்குப் பிறகு Roma (Crouching Tiger- ஐ நினைவிருக்கிறதா?)

எந்தவிதமான குழப்பங்களுக்கும் இடமின்றி தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளின் உயரத்தை இன்னும் நீட்டிவிட்டு இருக்கிறது. காட்டுத்தீயின் மந்திர ஓசை, கடலின் அலைச்சீற்றம், எழுபதுகளின் அமைதிக்கும் சலனத்திற்குமான தனித்துவம் என ஒலிக் கோர்வையில் கடும் உழைப்பு திரண்டிருக்கிறது. அதைப் போலவே Emmanuel Lubezki இல்லாமல் இயக்குநர் Alfonso Curaon தானே ஒளிப்பதிவுத் துறையில் முன்னின்று பணியாற்றி இருப்பதும், காமிரா நகர்வுகளில் உள்ள நிதானமும் அவரது கதைக்கான கண்களைப் பிரதிபலித்திருக்கிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல அநாயசமான காட்சிகள் படத்தில் உண்டு, காட்டுத்தீயை அணைக்கும் சுற்றத்தார், மார்ஷியல் கலையைப் பயிற்றுவிக்கும் குருவின் சாகசம், கிளர்ச்சியாளர்களால் கிழிபட்டு நிற்கும் அமைதியான தெருக்கள், பிரசவத்தில் பிறக்கையிலேயே இறந்துபடும் பிள்ளை, கடலில் குழந்தைகளைத் தேடுபவள் என சொல்லிக் கொண்டே செல்ல முடியும். அகாடமியும் முக்கிய பிரிவுகளான “சிறந்த படம்”, “சிறந்த ஒளிப்பதிவு”, “சிறந்த ஒலிக்கோர்வை” என விருதுகளைத் தயாராய் Roma-வின் பெயர் பொறித்து கூட வைத்திருக்கும்.

roma2-300x150.jpg

வேறொரு கோணத்தில் இது அத்தனைச் சிறந்த படமில்லைதான். உலகின் ஒரு படத்தை எடுத்து புகழுரைகளை மட்டுமே சொரித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், பல சிறந்த தனித்துவமான, நல்ல படங்களின் இடத்தை அது அடைத்துக் கொண்டு விட்டிருக்கிறது என்பதை கவனிக்கையில் பெரு வியாபாரத்தின் தேவையும், அரசியலுமே முற்றிலும் முன்வைக்கப்படுகிறது என்பது புலனாகலாம்.

தன் வாழ்வின் நினைவேக்க நிகழ்வுகளை மையச் சரடாகப் புனைந்து, மெக்சிகோவின் புறவுலகை அவ்வப்போது இணைத்து ஒரு கதையை தேர்வு செய்திருக்கிறார் க்யூரான். அவ்வுலகம் இன்னும் சீராக மையத்தை நோக்கி ஒருக்கம் கொள்ளவில்லை. திரைக்கதைக்கு பல வித வரையறைகளிருப்பினும், “கதையின் உடலம்” என்ற பார்வையின் அடிப்படையில் கவனித்தால் மிகவும் தெளிவற்ற, எங்கும் முழுமை நோக்கிச் செல்லாத ஒன்றாகவே முடிந்து விடுகிறது. Roma அருமையான படம். ஆனால் – வெளிநாட்டுப் படமாக இருப்பினும் – பத்து பிரிவுகளில் பரிந்துரை என்பதும், விமர்சன ஆதரவு மழையில் உலகெங்கும் நனையும் முதன்மையான திரைப்படமாகவும் குறிப்பிடப்படுவது பல நல்ல படங்களை அடையாளம் காண்பிக்காமல் நழுவிடச் செய்து அவற்றை இருட்டடிப்புச் செய்யும் துர்நிலையையே குறிக்கிறது.

The Favourite

கவிதைகளை மழைக்கவிதை இருள்கவிதை என்றெல்லாம் வகைப்படுத்துவதில் இருக்கும் அபத்தத்தை போல, வாழ்வில், சமூகத்தில் நுண்ணிய அபத்தங்களின் தொகுப்பை உருவாக்கும் திறன் பெற்ற இயக்குநர் யோர்கோஸ் லாந்திமோஸ் (Yorgos Lanthimos). வழக்கமாக திரைக்கதைகளையும் உருவாக்கும் அவர், இம்முறை இயக்கத்தில் மட்டும் தோற்றமளிக்கிறார். ஏற்கனவே The Lobster (2015), The Killing of Sacred Deer (2017) ஆகிய இரண்டு படங்களின் மூலம் தன்னிருப்பைத் திண்ணமாக அமெரிக்காவில் முன்வைத்திருக்கிறார். இம்முறை Roma-விற்கு நிகராக பத்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் The Favourite ஒரு முக்கியமான திரைப்படம் என்பதில் மாற்றில்லை.

ஆஸ்காரின் தற்போதைய எழுதப்படாத விதிமுறைகளான LGBT போற்றுதல், ஆசிய ஐரோப்பிய இயக்குநர்களுக்கு முன்வரிசை என்ற வரைமுறைகளுக்குள் வந்த படமாகவே இருக்கும் போதிலும், அதைக் கடந்தும், அத்தியாவசிய மானுட கேள்விகளான கையறு நிலை, அன்பின் உண்மைத்தன்மை, பச்சோந்தியென குணமாறும் மனிதர்களின் உளவு, தீராப் பெருவலி என அத்தனை கூறுகளையும் தெளிவான எளிய கதைநடையில் சொல்லி சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர்.

முக்கிய மூன்று கதாபாத்திரங்களைச் செய்த நடிகைகளும் ஆஸ்கார் பரிந்துரையில் வலுவான இடத்தில் முன்னிற்கின்றனர். Olivia Coleman அதில் திடமான நிலையில் இருப்பதையும் இவ்வாண்டு ‘சிறந்த நடிகை’ பிரிவில் வெல்வதையும் திண்ணமென கொள்ளலாம். ‘Rachel Weisz’, ‘Emma Stone’ ஆகிய இருவரது நடிப்பும் உச்சமாக இருந்ததெனினும் ‘சிறந்த துணை நடிகை’ பிரிவில் ஒருவர் மட்டுமே வெல்ல வாய்ப்பிருப்பதால், Emma-வின் கதாபாத்திரத்தின் வளைகோடு இன்னும் பலமாக உருவாகி வந்திருப்பதால் அவருக்கே விருது கிடைத்திட வாய்ப்பு அதிகம் உள்ளது.

125215-300x162.jpg

அன்றைய சாம்ராஜ்யத்தின் அரசியல், வரலாற்று நிகழ்வுகளில் பெரிதும் மெனக்கெடாமல், முழு திரைக்கதையையுமே மூவரின் இடையே நிகழும் போரென நடத்த முயன்றிருப்பதால், சாத்தியமும், ஆழமும் அகநிகழ்வுகளுக்கு கூடியிருக்கிறது. அதுவே இக்கதையின் பொதுமைக்கான ஆதாரமாகவும் விளங்குகிறது. தொய்வில்லாது, சிறுத்தை போல முன்னகரும் திரைக்கதைக்கு, அது எடுத்துக் கொண்ட வடிவமும், சுற்றிலும் புனையப்பட்டிருக்கும் – பேரவை நிகழ்வுகள், போர் விடயங்கள், ஆண்களின் வருகைகள் – புற உலகும் வலுவான ஆதரவை வழங்கி இருக்கிறது. First Reformed திரைக்கதைக்கு பின்னர் ‘சிறந்த மூலக்கதை’ பிரிவில் உள்ள திரைக்கதைகளில் ‘The Favourite’ முதலாவதாகும்.

’சிறந்த படத்தொகுப்பு’, ‘சிறந்த ஒளிப்பதிவு’, ‘சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு’ மற்றும் ‘சிறந்த ஆடைவடிவமைப்பு’ ஆகிய அனைத்து பிரிவுகளிலுமே வலுவான போட்டியாக The Favourite திகழும்.

இன்றைய நவீன உலகின் கழுத்து நெறிப்புகளையும், தொன்று தொட்டு மீள மீள நடைபெறும் மானுட ஆட்டங்களின் அடிப்படைகளைச் சொல்லும் புராணீகங்களையும் இணைத்து ஒரு புள்ளியில் வைத்து தெளிவான கதைநடையால் பார்வையாளர்களை துணுக்குறச் செய்வதும், கேள்விகளுக்குள் தள்ளுவதும் எனத் தொடங்கி முற்றிலும் சில நாட்களேனும் அந்தத் திரைப்படத்திற்குள் உலவிவர வைப்பதும் யோர்கோஸால் செய்ய முடிகிறது. அவரது பெயர் இவ்வளவு கவனத்திற்கு வந்திருப்பதும், அதைப் போலவே Pawel Pawlikowski-இன் பெயரும் சிறந்த இயக்குநர் போட்டியில் முன்நிற்பதும் மகிழத்தக்கவையே. ஆஸ்காரின் வாக்களிப்பு எதிலும் முடியும். அப்படி அலையடித்தால் Alfonso Cuaron-க்கே அந்த ‘சிறந்த இயக்குநர்’ விருதும் போய்விட வாய்ப்பிருக்கிறது.

6

இலவச இணைப்பு

Vice

துணை அதிபர் Dick Cheney-இன் வாழ்வைப் படம்பிடிப்பதாக ஒரு நோக்கம் இருந்திருக்கலாம். வழக்கம் போல் இரண்டு படங்களிடையே ஒவ்வொரு முறையும் தன்னுடலினை களிமண் போல் எடையேற்றியும் குறைத்தும் காட்டும் மாயவன் Christian Bale உதவியிருக்கிறார். அதற்காக அவருக்கு சிறந்த நடிகர் பிரிவில் விருது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. குற்றமில்லை தான். Rami Malek-க்கும் Bradley Cooper-உம் தவிர்க்கப்பட்டால் இவருக்கு விருது வழங்கப்படலாம். மற்றபடி வாழ்நாள் சாதனை நடிப்பெல்லாம் ஏற்படவில்லை. சென்ற ஆண்டு சர்ச்சிலாக Gary Oldman பெற்ற விருதுக்கான காரணங்கள் அப்படியே இவருக்கும் மிச்சமிருக்கிறது. திரைப்படத்தில் மற்ற இரண்டு நடிகர்கள் சிறப்பாகவே தன் பங்கினைச் செய்திருந்தார்கள். ஒருவர் Amy Adams மற்றொருவர் George W.Bush ஆக உருமாறியிருந்த Sam Rockwell. இவை இரண்டும் இன்னும் நேர்மையான பரிந்துரைகள் தான். எனினும், அவர்களுக்கான வெற்றி அந்தந்த பிரிவுகளில் நிலவு கடும் போட்டியால் தடைபடலாம். Amy Adams-ற்கான போதுமான இடம் இருக்கவில்லை என்பதையும் Steve Carrell கவனிக்கப்படாமல் போனதையும் குறிப்பிட்டாக வேண்டும். Steve Carrell-உம் Rockwell-உம் தான் அவர்கள் தோன்றும் காட்சிகளில் நம் கண்களை – பேலிடமிருந்து – தம்மை நோக்கிப் பிடுங்கி வைத்துக் காப்பாற்றுகிறார்கள்.

குடிபோதையில் தன் வாழ்வைத் தொலைக்கத் தயாராக இருந்த இளைஞர்களில் முன்னணி வரிசையில் இருந்த டிக், தன் மனைவியின் கோபத்தாலும் கவனத்தாலும் உதவியாலும் மெல்ல முன்னேறி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாட்டை இன்னும் பெரிய சர்வாதிகார நாடாக ஆக்கியதற்கு காரண கர்த்தாவாகிறார். அதைப் பற்றிய ஒரு ஆழமான, முழுமையான அலசல் எதுவும் படத்தில் நிகழவே இல்லை. கற்பனையான முடிவுடன் படத்தின் இடையில் வரும் க்ரெடிட் காட்சி ஒரு வித எதிர்பார்ப்பைத் தூண்டி, இறுதியில் தோல்வியுறுகிறது. ஒய்யாரமாய், நடந்து வந்து நிற்கும் போது தரையில் சப்பாத்து தடுமாறி பரிதாபமாய் கீழே விழும் நடையழகி போல.

vicecover.0-300x169.jpg

கடுமையாக முன்வைக்கப்பட்ட அரசியல், தனிமனித, அறக்கேள்விகளைப் பற்றி எந்தவித கவலையும் படாமல், தன் நகைச்சுவை உணர்வை முன்வைக்கும் விதமாக இயக்குநர் நடத்தியிருக்கும் இயக்கம்தான் உண்மையில் – படத்திலிருந்து வெளியே நிற்கும் – தனி ட்ராமா. உணவு விடுதியில் திடீரென ‘குடனாமோ பே’ சிறையினைப் பற்றி தன் மெனுவில் காண்பிக்கும் பரிமாற்றாளன், இடையில் ஓடும் க்ரெடிட் ரோல், கதையினூடே முன் பின் நகரும் காட்சிகளினால் எவ்வித -தேவையான – பாதிப்பும் ஏற்படாமல் கதை மென்மேலும் தொய்வுறுதல், இறுதிக் காட்சியில் வலுவான monologue வடிவமைக்கப்படாமை, நான்காம் சுவரை உடைத்து பேல் பார்வையாளர்களைக் கண்டு பேசுவது என அத்தனையும் படவொருமையைச் சிதைக்கின்றன. எதனடிப்படையில் சிறந்த இயக்குநர், சிறந்த மூலத்திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் சேர்க்கப்பட்டது என்று ஆராய்ச்சி செய்பவர்களுக்கு Dick Cheney-ஐ விட வேறொரு மிகப்பெரிய மூளைக்காரன் ஆஸ்காரில் சதிசெய்வது தெரிய வரலாம்.

எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு ‘சிறந்த மேக்கப்’ மற்றும் ‘முடிவடிவமைப்பு’ பிரிவில் விருது கிடைக்குமெனில் அக்கலைஞர்கள் தகுதியானவர்கள் என கருதலாம். Christian Bale-க்கு மட்டுமின்றி Sam Rockwell-ற்கும் அரிதாரம் அரிதாய் சிறந்திருக்கிறது.

பத்தாண்டுகள் முன்புவரை ’உலக நாயகன்’ கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கப்படாத ஆஸ்காரைப் புறக்கணித்த ரசிகர்கள் உண்டு. இன்னும் சில பத்தாண்டுகள் முன் சென்றால், ‘இயக்குநர் சிகரம்’ பாலசந்தர் அவர்களுக்கு ஆஸ்கார் ‘இதோ வரும், இதோ வரும்’ என்று எதிர்பார்த்தவர்களும் உண்டு. இன்று அத்தகைய குழப்பங்கள் குறைந்து வருகின்றன. அது யாருக்கெல்லாம், எப்படியான படங்களுக்கெல்லாம் கிடைக்கவே கிடைக்காது என்ற தெளிவும் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. ஆனால், அகாடமி இன்றும் தன் அளவீடுகளையும், ஈர்க்கும் விளம்பரங்களையும் பேணிக் கொண்டு நல்ல படங்களை ரத்தின கம்பளத்தின் அடியில் போட்டு விட்டு, அதன் மேலேறி பல்லாண்டுகளாய் கொண்டாட்டங்களைச் சாமர்த்தியமாய் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

 

 

http://tamizhini.co.in/2019/02/17/ஆஸ்கார்-விருதுகள்-2019-கோ-கமல/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.