Jump to content

முதல் பார்வை: டுலெட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: டுலெட்

உதிரன்சென்னை
19jkrtoletjfif

வாடகைக்கு வீடு தேடும் படலத்தில் அவதிப்படும் ஒரு குடும்பத்தின் கதையே 'டுலெட்'. 

சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ். அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண் யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில் வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ். ஆனால், அப்போதும் ஒரு சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல் என்ன, வீடு தேடுவதில் உள்ள சிரமங்கள் என்ன, வீடு என்பதற்கான கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் அந்த மூவரும் என்ன செய்கிறார்கள், எங்கே அவர்களுக்கு வீடு கிடைத்தது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. 

ஓர் இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டுலெட்’ என்கிற வார்த்தை எப்படி அலைய வைக்கிறது என்ற ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு அதற்கு அழகான திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செழியன். மேலும், வழக்கமான விருது சினிமாக்களுக்குரிய வரையறைகளையும் உடைத்து எறிந்திருக்கிறார். பாடல்கள் இல்லை, பின்னணி இசை இல்லை. நல்ல கதைக்கு அது தேவையும் இல்லை என்பதை செழியன் காட்சிகள் மூலம் தெளிவுபடுத்திவிடுகிறார்.

நடுத்தரக் குடும்பத்தின் ஏக்கத்தை, தவிப்பை, அவமானத்தை, இயலாமையை, மகிழ்ச்சியை, தொந்தரவை, சங்கடத்தை அப்படியே நடிப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஷீலா. பிரச்சினைகளின் போது கண்ணீர் விட்டு மன்றாடும்போதும், சொந்த வீடு குறித்து கண்களில் தேக்கி வைத்திருக்கும் கனவை வார்த்தைகளால் கணவனிடம் சொல்லும்போதும், வாடகை வீடு கிடைக்காத அவஸ்தையிலும் குறைந்த விலையில் வீடு என்பதால் சொந்த வீட்டுக்கான விளம்பரத்துக்கு போன் நம்பரைக் கொடுத்ததாக வருத்தம் தோய்ந்த குரலில்  சொல்லும்போதும் வீடு குறித்த தன் அர்த்தமுள்ள ஆசையை வெளிப்படுத்துகிறார். குழந்தையைக் கொஞ்சும் அந்தப் புன்னகை மொழியில் இயல்பாக ஈர்க்கிறார்.

பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் தன்னை நிரூபிக்கப் போராடும் உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் சந்தோஷ் கச்சிதமாகப் பொருந்துகிறார். மனைவியிடம் கோபமுகம் காட்டி கன்னத்தில் அறைந்த மறு நொடியில் மன்னிப்பு கேட்கும் சந்தோஷ், அவரைச் சிரிக்க வைக்கவும் நெகிழ வைக்கவும் எடுக்கும் முயற்சிகள், நீ யார் கிட்டயும் கெஞ்சுறது எனக்குப் பிடிக்காது என்று மனைவியிடம் சொல்லும் தருணங்கள் நல்ல குடும்பத் தலைவனுக்கான அடையாளம். 

தமிழ் சினிமாவில் குழந்தைகளை அவர்களின் குழந்தைத்தன்மையோடு பதிவு செய்வது அரிது. தருண் கதாபாத்திரத்தின் மூலம் அந்த அரிதான பதிவை செழியன் சாத்தியப்படுத்தியுள்ளார். விளையாட்டு, ஓவியம், பெற்றோர் மீதான அன்பு, புது வாடகை வீடு குறித்த தன் மகிழ்ச்சி என எல்லாவற்றிலும் செயற்கைத்தனம் கலக்காத தருண் ஆச்சர்யப்படுத்துகிறார். தன் விளையாட்டில் 100 ரூபாய்க்கு வாடகை வீடு தருவதாகச் சொல்வது, அப்பாவிடம் கசக்கி எறியப்பட்ட ஓவியத்துக்கு இஸ்திரி போடச் சொல்வது என படம் முழுக்க வசீகரிக்கிறார். இந்த டிவி நம்மளோடது, வண்டி நம்மளோடது, ஆனா இந்த வீடு மட்டும் ஏன் நம்மளோடது இல்லை என்று தருண் கேட்கும் ஒற்றைக் கேள்வி நம்மையும் சேர்த்தே உலுக்குகிறது. 

கண்டிப்பான ஹவுஸ் ஓனராக வரும் ஆதிரா பாண்டியலட்சுமி, எதிலும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் ஆதிராவின் கணவர் கவிஞர் ரவி சுப்பிரமணியன், விளம்பரப் பட இயக்குநராக வரும் மணி எம்கே மணி ஆகியோர் பொருத்தமான வார்ப்புகள்.  வாடகை மூவாயிரம், கரண்ட் பில் 30 ஆயிரம் கட்டணும் போல, குகைக்குள்ளே கூட்டிட்டுப் போற, அவரும் நீங்களும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு... ஒரே மணவாடு என்று சொல்லி சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தும் அருள் எழிலன் கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறார். 

''கதைக்குள்ள இருக்குற மனுஷங்களுக்கு காட்டுற அக்கறையை பக்கத்துல இருக்கிற மனுஷங்ககிட்டயும் காட்டணும்'', ''குற்ற உணர்வும் மன அழுத்தமும்தான் கலைஞனுக்கு உரிய ரா மெட்டீரியல்'' போன்ற இயல்பான அளவான வசனங்கள் படத்துக்கு அழகு சேர்க்கின்றன. 

நெரிசல் மிக்க சென்னையின் சத்தங்களையும் பம்பை, மேளம், கடல் அலை, போக்குவரத்தின் ஓசைகளையும்  தபஸ் நாயக் சவுண்ட் டிசைனில் செதுக்கி இருக்கிறார். எடிட்டிங் நேர்த்தியில் ஸ்ரீகர் பிரசாத் மலைக்க வைக்கிறார். நிழல், இருட்டின் அடர்த்தி, ஒளியின் தன்மைக்கேற்றவாறு செழியனின் கேமரா லாவகமாகப் பயணிக்கிறது. 

ஐடி துறைக்குப் பிறகு வாடகை வீடுகளுக்கான மவுசு எப்படி? யாரால்? அதிகரித்தது என்பதையும் படம் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. 

வாடகைக்கு வீடு தேடும் அலைச்சல், வலி, துயரத்தைப் பாசாங்கு இல்லாமல் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. அழுது வடியும் காட்சிகள், எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற சுய புலம்பல், உலகத்தின் வலிமிக்க மனிதன் நானே என்ற பிரச்சாரம் போன்றவை படத்தில் இல்லாதது வரவேற்கத்தக்கது.  அதே சமயம் போரடிக்கும் காட்சிகள், நிதானகதியில் செல்லும் திரைக்கதை போன்ற வழக்கமான குறைகளாகச் சொல்லப்படும் அம்சங்களும் இல்லை. 

படத்தின் யதார்த்தமான அணுகுமுறையும், அது பேசும் உண்மையும், நேர்மையும் நம்மை படத்துக்குள் அழைத்துச் செல்கிறது. நாயகன் - நாயகி- வில்லன் என்ற ஃபார்முலாக்களும் இல்லாதது படத்தின் ஆகச் சிறந்த பலம். எந்த ஒரு நெகட்டிவ் கதாபாத்திரமும் படத்தில் கட்டமைக்கப்படாதது ஆரோக்கியமானது.  அந்த வகையில் தமிழில் தகுதியும், தரமும் நிறைந்த ஒப்புயர்வற்ற சினிமாவாக 'டுலெட்' தனித்து நிற்கிறது.

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26331648.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைத் தலை நிமிரச் செய்த படம்: பாரதிராஜா

42.jpg

“இதுவரை நான் பார்த்த படங்களில் உலகத் தரம் வாய்ந்த படம் என்றால் அது டு லெட்தான்” என்று பாராட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

கடந்த வியாழன் (பிப்ரவரி 21)அன்று ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டு லெட்’ படம் வெளியானது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 32 சர்வதேச விருதுகளைப் பெற்ற பெருமையுடன் இந்தப் படம் திரைக்கு வந்துள்ளது.

வணிக ரீதியாக தமிழகம் முழுவதும் குறைவான திரையங்குகளில் டு லெட் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சினிமாவை நேசிக்கும் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகைச் சேர்ந்தவர்களும் இந்தப்படத்தை எந்த தயக்கமும் இன்றி கொண்டாடி, புகழ்ந்து வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா படத்தைப் பார்த்த பின் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். “எனது 50 ஆண்டு கால சினிமா வரலாற்றில் எழுபதுகளில் வந்த படங்களின் மீது எனக்குக் கோபம் உண்டு. அப்போது பெங்காலி, மராத்தி, மலையாளப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் தமிழில் இப்படி உலகத் தரம் வாய்ந்த படங்கள் வரவில்லையே என்கிற கோபம் இருந்தது.

அதற்குப் பின் பாலசந்தர் நல்ல படங்கள் பண்ணினார். என் காலகட்டத்தில் அதையே கொஞ்சம் கமர்ஷியலாகப் பண்ணினோம். ஒரு காலகட்டத்தில் நான், பாலுமகேந்திரா போன்றவர்கள் இருந்தாலும், அப்போதுகூட ஒரு சத்யஜித் ரே, மிருனாள் சென் அளவுக்குத் தமிழில் யாரும் இல்லையே என்றுதான் சொன்னார்கள்.

ஆனால் தற்போதைய சூழலில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் வருகை ரொம்பவே அதிகமாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான படங்களில் வெற்றி மாறன் படங்கள், ராமின் பேரன்பு, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை இந்த படங்களை எல்லாம் பார்த்து நான் ரொம்பவே விமர்சித்துள்ளேன் பாராட்டியுள்ளேன்.

ஆனால் அந்த அளவுகோல்களை எல்லாம் தாண்டி என்னை கவர்ந்த படம்தான் ‘டு லெட்’. செழியன் என்னுடைய நண்பன்தான்.. ஆனால் நான் பார்த்த செழியன் வேறு. இந்த டு லெட் படத்தில் பார்க்கின்ற இயக்குனர் செழியன் வேறு.. செழியன் நல்ல ஒளிப்பதிவாளர்.. நல்ல எழுத்தாளனும்கூட. சில படங்களை, அதன் கேரக்டர்களை ரசித்திருப்போம். ஆனால் அந்த கதாபாத்திரங்களுடனேயே வாழ்வது என்பது அரிதான விஷயம்.

இயக்குநர் செழியன் இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார். அதில் நடித்த அனைவரையும் வாழ வைத்திருக்கிறார். படம் பார்த்த நம்மையும் அவர்களுடன் சேர்ந்து வாழ வைத்திருக்கிறார்.

ஒரு படம் பார்த்தால் சினிமா பார்த்த உணர்வு ஏற்பட வேண்டும். இந்தப் படத்தை பார்க்கும்போது அந்த உணர்வு எனக்கு தோன்றவில்லை. அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து அவர்களுடனேயே சுற்றி அவர்களுடனேயே அழுதுவிட்டு வந்தது போலிருந்தது.

ஒருவேளை அவருடைய வாழ்க்கையில் இதெல்லாம் நடந்திருக்குமோ என்னும் அளவிற்கு இவ்வளவு யதார்த்தமாக இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செழியன்.

நான்கூட மண்வாசனை போன்ற படங்களில் என் மண்ணின் மைந்தர்களை பற்றிச் சொல்லி இருந்தாலும் இன்னும் கூட கிராமங்களை பற்றிச் சரியாகச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் சென்னை போன்ற நகரத்தில், ஐடி கம்பெனிகளின் பெருக்கத்தைத் தொடர்ந்து, வாடகைக்கு குடியிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினைகளை இவ்வளவு நெருக்கத்தில் சமீபகாலமாக இவ்வளவு துல்லியமாக யாருமே சொன்னது இல்லை. இது இங்கு மட்டுமல்ல, உலகத்தில் எல்லோருக்கும் உள்ள பிரச்சினை.

படத்தில் மொத்தமே பத்து கேரக்டர்கள்தான். அதில் ஒரு கணவன், மனைவி, குழந்தை இவர்கள் மூவரும் மொத்த படத்தையும் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை.

இதில் ஹீரோவாக நடித்துள்ள சந்தோஷ் நம்பிராஜன், எழுத்தாளர் விக்கிரமாதித்தனின் மகன். தந்தை மிகப் பெரிய எழுத்தாளர் என்றால் அவரது மகன் மிகப் பெரிய நடிகர் என்பதை நிரூபித்து விட்டார். ஒரு இடத்திலாவது அவர் நடிக்கிறாரா என்று பார்த்தேன். ஆனால் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்.

அதே போல எத்தனையோ நடிகைகளை நடிக்க வைத்திருக்கிறேன். நடிகைகளுடன் நடித்தும் இருக்கிறேன். ஆனால் இந்தப்படத்தில் நடித்துள்ள ஷீலா ராஜ்குமார் வறுமையில்கூட, ஆங்காங்கே எதிர்ப்படும் சின்ன சந்தோஷங்களைக்கூட இயல்பாகப் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பெண் சிரித்தால் நமக்கும் சிரிப்பு வருகிறது. அவள் கோபித்தால் நமக்கு கோபம் வருகிறது. அவள் அழுதால் நமக்கும் அழுகை வருகிறது.

பொதுவாக சிறு குழந்தைகள் நடிப்பதைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் வந்துவிடும். அவர்களை மிகைப்படுத்தி நடிக்க வைத்துவிடுவார்கள் என்பதால்தான். ஆனால் இந்த படத்தில் நடித்துள்ள சிறுவன் தருண் பாலா நடிக்கவில்லை.

சுவரில் கிறுக்குவதிலிருந்து, பெற்றோருடன் பாசத்தில் இழைவது வரை அவனாகவே வாழ்ந்து இருக்கிறான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேதோ படங்களைப் பார்த்து இருக்கிறேன்.. ஆனால் இந்த 50 வருட காலகட்டத்தில் இந்த படம் கொடுத்த சுமை, அழுத்தத்தை வேறு எந்த படமும் கொடுக்கவில்லை. நான் என்ன உணர்ந்தேனோ அதைத்தான் சொல்கிறேனே தவிர, எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.

இப்படி ஒரு வாழ்க்கையை நான் சொல்ல முடியவில்லையே என்கிற கோபம் என்மேல் எனக்கே உண்டு. பின்னணி இசையையே பயன்படுத்தாமல் சுற்றுப்புற சத்தங்களை வைத்தே ஒருவர் படத்தை எடுத்து ஜெயித்திருக்கிறார் என்றால், ஹேட்ஸ் ஆப்.. இந்த படத்தின் விளம்பரங்களில் விருது பட்டியல் திரை முழுக்க நிறைக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த படத்தை அங்கீகரித்திருக்கின்றன.

மிகப் பெரிய பெயருடன் இந்த படம் வந்திருக்கிறது. இதை பார்க்கும்போது இது ஏதோ மிகைப்படுத்தப்பட்டிருக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே இந்தப் படம் அதற்குத் தகுதியான படம்தான்.

உலகத் தரம் வாய்ந்த படம் எனத் தொடர்ந்து நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்றுவரை உலகத்தரம் வாய்ந்த படம் என்றால் எனக்குத் தெரிந்தவரை இந்த ‘டு லெட்’ படத்தைத்தான் சொல்வேன். மிக அற்புதமாக உலகத் தரத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் செழியன்.

இந்தப் படத்தைப் பார்த்து ரசிகர்கள் தங்களது ரசனையை மாற்றிக்கொள்ளவேண்டும். சினிமா என்பதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் தமிழ் ரசிகர்கள் உலகம் முழுவதும் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு படமாக இந்த ‘டு லெட்’ வந்திருக்கிறது என்று தைரியமாகச் சொல்லுங்கள். இதைப் போன்ற படங்கள் அதிகமாக வருமானால், தமிழன் உலகம் முழுவதும் தலை நிமிர்ந்து நிற்கலாம்” என மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார் பாரதிராஜா.

https://minnambalam.com/k/2019/02/25/42

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செழியனின் டு லெட் – கடலூர் சீனு

to let

கடந்த வருடம் புதுச்சேரி திரைப்பட விழாவை துவக்கி வைத்து பேசியவர் செழியன். அந்த விழாவில் டு லெட் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது.  அதில் அந்தப் படம் திரை விழாக்களை நோக்கி எடுக்கப்பட்டது என்றும், கேளிக்கை சினிமா அம்சங்கள் இதில் கிடையாது ஆகவே, பொது திரையரங்கம் நோக்கி இது எடுக்கப்பட வில்லை,இருப்பினும் இதில் உள்ள வாழ்கையை அனைவரும் ரசிக்கும் வண்ணம், டிசம்பர் இறுதிக்குள், மக்கள் பார்வைக்கான திரை அரங்குகளில் பார்க்கக் கிடைக்கும் என கூறி இருந்தார்.  இந்த பெப்ரவரி 21 படம் வெளியானது. அதிசயத்திலும் அதிசயமாக, அஜித் விஜய் வெறிகள் கரைபுரண்டோடும் கடலூரிலும் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

வீட்டு முதலாளியம்மா வீட்டை காலி செய்ய சொல்லி விட, குறிப்பிட்ட தேதிக்குள், பட்ஜெட் வாழ்க்கை வாழும், துணை இயக்குனர் நிலையில் இருக்கும் நாயகன், அந்த ஏரியாவுக்கு உள்ளேயே வேறு வாடகை  வீடு மாற முயன்று அதில் தோற்கும் கதை. உணர்வுகளை கட்டி வைக்க ஒரு சட்டகமாக மட்டுமே கதை. இந்தக் கதையை கேமரா வைக் கொண்டு, அதன் கோணங்கள் அமையும் விதம் வழியே, அந்த கதைக்கான உணர்வு நிலையை கட்டமைக்கிறார் செழியன்.

துவக்கக் காட்சியாக அந்த வீட்டின் கதவு திறக்கப்டும் போதே, கேமரா கோணம் வழியே சொல்லி விடுகிறார் செழியன், பார்வையாளர்களான நாம்தான் அந்த வீடு. அங்கே துவங்கும் இந்த மாயம், அந்தக் குடும்பம் ஒவ்வொரு முறையும் அந்த வீட்டை விட்டு,வேறு வீடு தேட வெளியேறும் போது, அந்த வீடாக நாமிருந்து வேண்டாம் வேண்டாம் என மனதுக்குள் சினுங்குகிறோம். வீடு காலி செய்யப்படும் இறுதிக் காட்சி அந்த உணர்வு நிலையின் தவிப்பின் உச்சம். மின்விசிறி. திரைச்சீலை, பல்புகள், புகைப்படங்கள், அலமாரி கொண்ட பொருட்கள், மளிகை போத்தல்கள் , ஜன்னலோர  குட்டிச் செடி. ஒவ்வொன்றாக பறிகொடுக்கிறது இல்லம்.

கிளம்பும் முன்பாக அந்த சிறுவன் அப்பாவை அழைத்துக் காட்டுகிறான், ஜன்னல் இழந்திருந்தத பூந்தொட்டிக்குப் பதிலாக சிறுவன் ஒரு பூச் செடியை அங்கே வரைந்து வைத்திருக்கிறான். இறுதியாக அந்த வீடு பூட்டப் படுவதற்கு முன், அந்த சிறுவன் அந்த வீட்டை அனாதையாக விட்டு விடாமல், அதற்குள்ளே தனது நான்கு பொம்மைகளை தங்கள் குடும்பமாக அங்கே விட்டு விட்டே செல்கிறான். குடும்பம் வெளியேற,  நமது உணர்வுகளை வீட்டுக்குளே வைத்து கதவடைப்பது வழியே நிறைவடைகிறது திரைப்படம்.

வீட்டு எஜமானியம்மாவுக்கு எப்போதெல்லாம் நாயகி வேலைக்காரியாக இருக்க மறுக்கிறாளோ அப்போதெல்லாம்,வாடகை உயர்கிறது. இறுதி மறுப்பின்போது [அது கூட கடற்கரையில் இருந்ததால் அந்த சத்தத்தில் அலைபேசியை எடுக்க முடியாமல் போனதால் நிகழ்கிறது] வீட்டை காலி செய்ய வேண்டிய சூழல்.  அப்போ பையன் படிப்பு …என தொக்கி நிற்கும் நாயகியின் கேள்விக்கு பின்புலத்தை எது எனக் காட்டுவதே கதைக் களம்.

அந்த ஏரியாவில் அந்த வீட்டை, வாடகை வீடாக தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வீட்டு எஜமானியம்மாவுக்கு வேலைகள் செய்துதான் ஆக வேண்டுமா?  அவளுக்கு நிகழும்,[அவளுக்கு சம்பந்தமே இல்லாமல் வருவித்துக் கொண்ட] சிறு கௌரவக் குறைச்சல் முதல், எஜமான்கள் கேட்ட வாடகைத் தொகையை தயங்காமல் அள்ளி வீசும் ஐடி துறை புதிய ஊழியர்களின் பொருளாதார நிலை வரை பல்வேறு காரணங்கள் கூடி,அந்த சிறுவனின் எதிர்காலத்துக்கான நல்ல பள்ளிக்கூடத்தில் நல்ல கல்வி எனும் கனவு பறிபோவதை, துருத்தி நிற்கும் வசனங்களோ, வலிந்து உருவாக்கிய காட்சிகளாலோ அன்றி, ஒரு வாழ்வை அருகிருந்து பார்க்கிறோம் எனும் வகையில் காட்சிகளாக்கித் தருகிறது திரைப்படம்.

மிக மெல்லிய அவமானங்களை, கொஞ்சமும் மிகை இன்றி அந்த மெல்லிய தடத்தின் மேலேயே நிகழ்த்திக் காட்டுகிறது பல காட்சிகள். உதாரணமாக எஜமானியம்மா நாயகியை ஒரு நாயைப் போல வெளியே போ என நாயைச் சொல்வத்தைப் போல சொல்லிக் காட்டும் காட்சியை சொல்லலாம். மிகச் சில பலவீனமான ஷாட் களும் உண்டு. உதாரணமாக நாயகி தனது நகையை கழற்றித் தரும் ஷாட்.  மொத்த திரைப்படத்தின் மொத்த காட்சி ஓட்டத்தின் ஒருமை, ஒரு தைல தாரை போல இருக்க,இந்த ஒரு ஷாட் எடுக்கப்பட்ட விதம் , சற்றே உறுத்துகிறது.

கலைப்படம் காட்டுகிறேன் பேர்வழி என்று பார்ப்பவர் கழுத்தை அறுத்து அனுப்பும் ஆசாமிகள் அநேகம் பேர். எது வெகுஜன கேளிக்கை சினிமாவோ அதற்கு நேரெதிராக எடுத்தால் அது கலைப்படம் என நம்பும் அப்பாவி இயக்குனர்களால் அவ்வகைப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கும். மேக்கப் இல்லாமல் கோரமான நாயக நாயகியர், கேணத்தனமான காட்சி அமைப்புகள், வலிந்து ”நீக்கப்பட்ட” பின்னணி இசைக் கோர்வை …பட்டியல் நீளும்.

இந்த டூ லெட் படத்திலும் பின்னணி இசை கிடையாது. ஆனால் அந்த இசை கொண்டு ஒரு படத்துக்குள் எது ”மேலதிகமாக” கோடிட்டு காட்டப் படுகிறதோ, அது இப்படத்தில் காட்சி ஓட்டங்களில்,ஷாட் களுக்கு இடையே ஆன இசைவு வழியே, மௌனம் அளிக்கும் பல்வேறு அர்த்தங்கள் வழியே, துருத்தல் இன்றி இயல்பாக  கோடிட்டுக் காட்டப்படுகிறது.

பெரும்பாலும் கேமெரா அசையாமல் நிலைத்து நின்றிருந்தாலும் பிரமாதமான ஷாட்கள் வழியே, வித விதமான இயக்கங்கள் திரைப்பட சட்டகத்துக்குள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. கடலலை அங்கிருந்து இங்கே வருகிறது. நாயகன் இங்கிருந்து அங்கே கதவைத் திறந்து கொண்டு போகிறார். உள்ளே இருந்து சிறுவனும் அப்பாவும் வெளியே வேடிக்கை பார்க்கிறார்கள்.வீடு ஒன்றை வெளியே இருந்து உள்ளே வேடிக்கை பார்க்கிறார்கள், இடமிருந்து வலமாக கண் தெரியாதவர்கள் ஒருவரை ஒருவரை பற்றிக்கொண்டு செல்கிறார்கள், வலமிருந்து இடமாக தொடர்வண்டி விரைகிறது, கீழிருந்து மேலாக பலூன் அடக்கு மாடி குடிஇருப்பின் சிகரம் வரை செல்கிறது. இத்தகு அசைவுகள் வழியே படம் நெடுக ஒரு கார்னிவல் உணர்வை அளிக்கிறது காட்சிகள்.

சத்யஜித் ரே  பை சைக்கிள் தீவ்ஸ் படத்தில் இருந்தே முளைத்து வந்தவர், செழியன் அவர்களும் அங்கிருந்தே துவங்கியவர். பாலு மகேந்திரா இயக்கிய வீடு இன்று வரை கொண்டப்படும் திரைப்படம். செழியன் அவர்களுக்கும் மிகப் பிடித்த திரைப்படம். என் நோக்கில் வீடு திரைப்படத்தின்,தொடர்ச்சியாக நின்று, அதே சமயம் வீடு படத்தின்  போதாமைகளை ”நீக்கி”,  இது வாழ்க்கையேதான் என எந்த இடரும் இன்றி நம்பும் வண்ணம், கச்சிதமாக இலக்கை அடித்த படம் செழியனின் டூ லெட்.

இது. கடலூர் மொத்தமே பத்து பேர் மத்தியில் அமர்ந்தது படம் பார்த்தேன். மென் நீல நிழல்  மூலை இருக்கையில் ஒருவர் தனது காரிகையின்  வட்டங்களின் சுற்றளவை அதன் விட்டங்களின் குறுக்களவைக் கொண்டு,கணக்கிட முயன்றுகொண்டிருந்தார் . பிறர் திரைக்கு முன் வரிசையில் அமர்ந்தது உறங்கிக் கொண்டிருக்க, மௌனமான காட்சி ஒன்றினில் நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையானது என்றொரு கட்டைக்குரல் ஓலம் எழுந்தது.

வியாழன் வெள்ளி இரண்டே நாள். சனிக்கிழமை அஜித்தின் விசுவாசம் இரண்டாம் திரை இடல் அங்கே நிகழ்ந்திருந்தது. பேட்டை ரஜினிக்கு இணையாக செம அடி அடித்தார் என கேள்விப்பட்டேன்.  இவர்கள் மத்தியில்தான், தான் சொன்ன ஒன்றை, நம்பிய ஒன்றை கைப்பொருள் தந்து  செய்து காட்டி இருக்கிறார் செழியன்

 

https://www.jeyamohan.in/118692#.XHWsmC-nxR4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.