Jump to content

ரன்கள் எடுக்கத் திணறிய ஆஸி.; மந்தமான பிட்சில் இந்திய பவுலிங் அசத்தல்: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரன்கள் எடுக்கத் திணறிய ஆஸி.; மந்தமான பிட்சில் இந்திய பவுலிங் அசத்தல்: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு

Published :  02 Mar 2019  18:19 IST
Updated :  02 Mar 2019  18:19 IST
 
shamijpg

படம்.| பிடிஐ.

ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியினால் விருப்பத்துக்கேற்ப ரன்கள் குவிக்க முடியாமல் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் என்று மட்டுப்பட்டது.

பும்ராவிடம் ஏரோன் பிஞ்ச் டக் அவுட் ஆன பிறகே ஆஸ்திரேலியாவினால் எழும்ப முடியவில்லை. ஷமி தொடக்கத்தில் 4 ஓவர்கள் 6 ரன்கள் என்று நெருக்க, ஆஸி.மிடில் ஆர்டரை ஸ்பின்னர்கள் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களால் சிங்கிள்கள் கூட சீராக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு பிற்பாடு பவுண்டரிகளும் வறண்டன.

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா அரைசதம் எடுக்க கிளென் மேக்ஸ்வெல் போராடி 40 ரன்கள் சேர்த்தார். இதற்கு 51 பந்துகளை அவர் எடுத்துக்கொண்டார் என்றால் பந்து வீச்சின் கிடுக்கிப்பிடித் தன்மையை ஊகித்தறியலாம். கடைசியில் மொகமத் ஷமியின் ட்ரேட் மார்க் இன்ஸ்விங்கரில் க்ளீன் பவுல்டு ஆகி வெளியேறினார் மேக்ஸ்வெல். கடைசியில் கேரி, டர்னர், கூல்டர் நைல் ஆகியோரின் பங்களிப்பில் 236 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா.

இந்தியப் பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பாக இன்னிங்ஸ் முழுதும் அமைந்தது. குல்தீப் யாதவ் (2/46), ரவீந்திர ஜடேஜா (0/33), கேதார் ஜாதவ் (1/31) ஆகியோர் ஜஸ்பிரித் பும்ராவின் அரிதான ஒரு ரன் கொடுப்பு பந்து வீச்சுக்கு ஈடுகட்டினர், பும்ரா 10 ஓவர்கள் 60 ரன்கள் 2 விக்கெட்.  சமீபத்தில் அவர் நிர்ணயித்த தரநிலைகளுக்கு இந்தப் பந்து வீச்சு உதாரணமாக இருக்க முடியாது.  ஸ்பின்னர்கள் 27 ஓவர்களில் வெறும் 110 ரன்களையே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மொகமது ஷமி முதல் 4 ஓவர்களில் 6 ரன்கள் என்று நெருக்கியவர் கடைசியில் 2 விக்கெட்டுகளுடன் 10 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்தார்.

உஸ்மான் கவாஜா 76 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல், கவாஜா ஆகியோரும் சவுகரியமாக ஆட முடியவில்லை, இந்திய அணி ஏறக்குறைய 169 ரன் இல்லாத பந்துகளை வீசியது. அதாவது ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 28.1 ஓவர்கள் ரன் எடுக்கவில்லை என்று பொருள்.

கேதார் ஜாதவ், ஜடேஜா 2வது பவர் ப்ளேயின் போது ஆஸ்திரேலியாவை கிடுக்கிப் பிடி போட்டனர். ஷமி முதல் ஸ்பெல்லுக்குப் பிறகு ஸ்டாய்னிஸ் (37, 53 பந்துகள்), கவாஜா இணைந்து 2வது விக்கெட்டுக்காக 87 ரன்கள் சேர்த்தனர், ஏரோன் பிஞ்ச் ஆஸி. அணியில் நீடிப்பது கடினம் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று பும்ராவின் பந்து உள்ளே வருமா வெளியே செல்லுமா என்பதைத் தீர்மானிக்க முடியாமல் அருமையான பந்தில் தோனியிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.

கவாஜாதான் முதலில் பும்ராவை ஒரு கவர் டிரைவ் அடித்து ஸ்கோரிங் ஷாட்டை நினைவு படுத்தினார், பிறகு பவர் பிளேயின் கடைசி ஓவரில் குல்தீப் அறிமுகமாக அவரை கவாஜா ஒரு சிக்ஸுக்கு விரட்டினார்.

முதல் பவர் பிளேயில் 38 ரன்கள்தான் வந்தது. இதனையடுத்து ஸ்டாய்னிஸ் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து விஜய் சங்கர் பந்துகளில் ரன் குவிக்கத் தொடங்கினார், விஜய் சங்கர் 3 ஒவர்கள் 22 ரன்கள் என்று சொதப்பினார். இவரை பவுண்டரிகள் விளாசினார் ஸ்டாய்னிஸ். இதனையடுத்து அடுத்த 5 ஓவர்களில் 33 ரன்கள் வந்தது. இந்நிலையில்தான் அரைக்கை பவுலர் ஜாதவ் போட்ட படுமோசமான பந்தை, சிக்ஸ் தூக்க வேண்டிய பந்தில் ஸ்டாய்னிஸ் விராட் கோலி கையில் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், ஜாதவ்விடம் ஆட்டமிழப்பவர்கள் 2 போட்டிகளுக்கு நீக்கப்படுவார்கள் என்று எந்த அணி கூறுகிறதோ அந்த அணிதான் உருப்படும், ஜாதவ் 7 ஒவர்கள் 31 ரன் 1 விக்கெட்.

கவாஜா தனது 6வது ஒருநாள் அரைசதத்தை எடுத்தார், குல்தீப் பந்தை மேலேறி வந்து அடிக்கிறேன் பேர்வழி என்று தூக்கி அடிக்க சரியாகச் சிக்காமல் டீப் மிட்விக்கெட்டில் விஜய் சங்கர் அருமையான ரன்னிங் கேட்ச் எடுத்தார்.

97/3 என்ற நிலையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், மேக்ஸ்வெல் இணைந்தனர்.  ஹேண்ட்ஸ்கம்ப் கால்களை நன்றாகப் பயன்படுத்தினார், ஆனால் குல்தீப் யாதவ் அருமையான சைனமன் பந்தை வீசினார். முதலில் பந்து காற்றில் வரும் போது ஏமாந்த ஹேண்ட்ஸ்கம்ப் பிட்ச் ஆகி உள்ளே வந்ததையும் கணிக்கத் தவறினார், தோனிக்கு சுலபமான ஒரு ஸ்டம்பிங்காக ஆனது.

ஹேண்ட்ஸ் கம்ப் ஆட்டமிழந்தவுடன் 2வது பவர்ப்ளெயை கேதார் ஜாதவ், ஜடேஜாவை வைத்து இந்தியா பிடியை இறுக்கியது.

விக்கெட் எடுக்காவிட்டாலும் ஜடேஜா முதலில் 5 ஒவர்கள் 15 பிறகு 5 ஓவர்கள் 18 என்று சிக்கனம் காட்டினார், 34 டாட்பால்களை அவர் வீச 2 பவுண்டரிகளை மட்டுமே மொத்தமாக கொடுத்தார் ஜடேஜா.

மேக்ஸ்வெல், டர்னர் (21) கடினமான கட்டத்தில் கொண்டு சென்றனர், 36 ரன்களை இருவரும் சேர்த்தனர், அப்போதுதான் டர்னரை இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆக்கிய ஷமி மேக்ஸ்வெலுக்கு அருமையான இன்ஸ்விங்கரை வீசி பவுல்டு செய்தார்.

ஆனால் கேரி (36), கூல்ட்டர் நைல் (28) இணைந்து 62 ரன்களைச் சேர்க்க ஆஸ்த்ரேலியா 236/7 என்று முடிந்தது.

https://tamil.thehindu.com/sports/article26418800.ece

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகல துறை ஆட்டக்காறரான கேதார் ஜாதவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

Score Aus 236/7 50 ov

           Ind 240/4 48.2 ov

ஆட்டநாயகன் கேதார் ஜாதவ் துடுப்பாட்டத்தில் 81 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 7 பந்து பரிமாற்றங்களில் 31 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸி.க்கு எதிராக தொடர் 4வது அரைசதம்; தோனி-கேதார் ஜாதவ் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி

Published :  02 Mar 2019  22:09 IST
Updated :  02 Mar 2019  22:17 IST
 
dhoni-jadavjpg

99/4 என்ற நிலையிலிருந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்த வெற்றிக்கூட்டணி தோனி, ஜாதவ்வை பாராட்டும் ஆஸி. அணி. | ஏ.பி.

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 237 ரன்கள் வெற்றி இலக்கை 99/4 என்ற நிலையிலிருந்து சேர்ந்த தோனி, கேதார் ஜாதவ் கூட்டணி அபாரமாக விரட்ட 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்று, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக இந்திய அணியின் அபாரப் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி ரன்கள் எடுக்கத் திக்கித் திணறி 50 ஓவர்களில் 236/7 என்று முடிந்தது.  இந்திய அணி 48.2 ஓவர்களில் 240/4 என்று அபார வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் வீசிய 49வது ஓவரில் எம்.எஸ்.தோனி அருமையான டைமிங்கில் பாயிண்டில் ஒரு பவுண்டரியையும் பிறகு அடுத்த பந்தே இன்னொரு ஷாட்டைத் தூக்கி பவுண்டரிக்கு விரட்டியும் வெற்றிக்கான இலக்கை எட்டினார்.

தோனி 72 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்தும், பெரும்பாலும் தோனியுடன் கூடவே வந்து கொண்டிருந்த கேதார் ஜாதவ் ஒரு கட்டத்தில் அதிரடி ஆட்டம் ஆடி கடைசியில் 87 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

ஒரு கட்டத்தில் 80/1 என்ற நிலையில் இருந்து 99/4 என்று பின்னடையச் செய்தது, ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலியாவிடமிருந்து முயற்சிகள் பெரிய அளவில் இல்லை, மந்தமான பிட்சில் ரன்கள் போதவில்லை இன்னும் 20-30 ரன்கள் அதிகம் எடுத்திருந்தால் கொஞ்சம் நெருக்கிப் பார்த்திருக்கலாம். ஆனால் அங்குதான் இந்தியப் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியா தரப்பிலிருந்து பேட்டிங்கிலும் சீரிய முயற்சி இல்லை என்பதே நிதர்சனம்.

இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு 2வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது, சமீபகாலமாக சரியாக ஆடத் திணறி வரும் ஷிகர் தவண், கூல்ட்டர் நைல் பந்தை தரையில் ஆடத் தவறி பாயிண்டில் கிளென் மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

1-1 என்ற நிலையிலிருந்து கோலி, ரோஹித் சர்மா இணைந்தனர். ஸ்கோரை 80 வரை கொண்டு சென்றனர், இதில் ரோஹித் சர்மா கொஞ்சம் நிதானம் காட்டினார், அதாவது அவரால் இந்தப் பிட்சில் ஸ்ட்ரோக்குகளை அவர் நினைத்தபடி ஆட முடியவில்லை.

விரட்டல் விராட்டின் திடீர் வீராவேசம்

ஆனால் விராட் கோலி முதல் 9 பந்துகளில் 1 ரன் என்று இருந்தவர் திடீரென பொங்கி எழுந்து சிலபல அபாரமான ஷாட்களை வெளுத்துக் கட்டினார். கூல்ட்டர் நைல்  ஓவரில் ஆஃப் ஸ்ட்ம்புக்கு நகர்ந்து கொண்டு லெக் திசையில் ஒரு பாட்டம் ஹேண்ட் பிளிக் பவுண்டரி விளாசினார், அதே ஓவரில் ஒரு அபார புல் ஷாட் பவுண்டரி. அடுத்து கமின்ஸ் வீசிய வேக ஷார்ட் பிட்ச் பந்தை அரக்க புல் ஷாட் ஆடி லாங் லெக்கில் மிகப்பிரமாதமான சிக்சரை அடித்தார்.

kohli1jpg
 

அதோடு இல்லாமல் பெஹெண்டார்ப் ஓவரில் இறங்கி வந்து ஸ்பின்னரை விளாசுவது போல் ‘பச்’ என்று மிடாஃபில் ஒரு அறை அறைந்தார் நான்கு ரன்கள். ஆனால் அதே ஓவரில் கமின்ஸ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை கோலியின் கிளவ்வுக்கு ஏத்தினார்.  இடையிடையே ரோஹித் சர்மாவை கடுமையாகச் சோதித்தார் கமின்ஸ், கொஞ்சம் அடியும் கையில் வாங்கினார் ரோஹித் சர்மா.  லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா வந்தவுடன் அவரது 2வது ஓவரில் ஸ்கொயர்லெக்கில் ஒரு பவுண்டரி விளாசினார்விராட் கோலி. ஆனால் ஸாம்ப்பாவின் 3வது ஓவரில் திருப்பு முனை ஏற்பட்டது, அதற்கு முன்பாக விராட் கோலிக்கு ஷார்ட் தேர்ட்மேன் வழியாக ஒரு அதிர்ஷ்ட பவுண்டரியும் நேராக ஒரு அரக்க பவுண்டரியும் அடித்து ஃபுல் மூடில் இருந்தார், ஆனால் அடுத்த பந்து கோலி முன்னால் வந்து தடுத்தாட பந்து கொஞ்சம் உள்ளே திரும்பி பிறகு லேசாக நேரானது கால்காப்பில் வாங்கினார் நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூவில் அவுட் என்று தீர்ப்பளிக்கபட்டது. 9 பந்துகளில் 0 என்று இருந்த கோலி அதன் பிறகு 36 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அதில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என்று வெளியேறினார்.

ராயுடு இறங்கி கூல்ட்டர் நைல் பந்திலும் ஸ்டாய்னிஸ் பந்திலும் 2 பவுண்டரிகள் அடித்திருந்த நிலையில் ரோஹித் சர்மா தடவலான 37 ரன் இன்னிங்சில் கூல்ட்டர் நைல் பந்தில் முன் விளிம்பில் பட்டு வெளியேறினார். ராயுடு 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்து சாம்பா லெக் ஸ்பின்னில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் கேட்சில் வெளியேறினார். 99/4 என்ற நிலையில் தோனியுடன், கேதார் ஜாதவ் இணைந்தார்.

தோனி-கேதார் ஜாதவின் அபாரமான சமயோசித வெற்றிச் சதக் கூட்டணி:

dhoni-jadav2jpg
 

10 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த தோனி முதல் பௌண்டரியாக கமின்ஸ் பந்தை ஹூக் செய்தார். சாம்பாவை ஜாதவ் ஒரு மிட்விக்கெட் பவுண்டரி அடித்தார். அடுத்ததாக ஒரு 12 பந்துகளில் ஏற்பட்ட மந்த நிலையை ஜாதவ், ஸாம்பா பந்தை ஒதுங்கிக் கொண்டு கவர் திசையில் பவுண்டரி மூலம் போக்கினார். அதன் பிறகு தோனி 13 ரன்களில் இருந்த போது ஏறக்குறைய ஸ்டாய்னிஸ் பந்தில் காட் அண்ட் பவுல்டு ஆகியிருப்பார். முன்னால் டைவ் அடித்த ஸ்டாய்னிஸினால் பிடிக்க முடியவில்லை. ஜாதவ்வுக்கும் ஒரு முன் விளிம்பில் பட்ட பந்து பாயிண்டில் முன்னால் விழுந்தது.

ஆகவே அதிர்ஷ்டம் தொடர இருவரும் கொண்டு சென்றனர். 35 ஒவர்களில் 147/4 என்ற நிலை இருந்தது. இந்நிலையில் 38வது ஓவரில் கூல்ட்டர் நைல் ஓவர் சம்பவங்கள் நிறைந்த ஓவரானது, ஆஃப் ஸ்டம்ப் வெளியே பிட்ச் ஆன லெந்த் பந்தை தோனி மிட்விக்கெட்டில் ஃபுல் பவரில் தூக்கி சிக்சருக்கு அடித்தார். ஆனால் அடுத்த பந்தே மீண்டும் ஒரு புல் ஷாட் லீடிங் எட்ஜ் ஆக பவுலருக்கு பின்னால் கேட்சாகச் சென்றது, ஆனால் மிட் ஆனிலிருந்து டைவ் அடித்த ஸ்டாய்னிஸ் பிட்ச் ஆன பிறகு பந்தைப் பிடித்தார், தீர்ப்பு 3வது நடுவரிடம் செல்ல ரசிகர்களுக்கு  திக் திக் கணமாக அமைந்தது. அது நாட் அவுட். அதே ஓவரில் இன்னொரு பந்தை தோனி லெக் திசையில் தட்டி விட முயல மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு அதிர்ஷ்ட பவுண்டரி ஆனது.

அதன் பிறகு ஜாதவ் பிரமாதமாக ஆடினார், குறிப்பாக கமின்ஸ் பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி பாயிண்ட், தேர்ட்மேன்களில் பவுண்டரிகள் விளாசினார்.  ஜாதவ் 67 பந்துகளில் 51 என்று அரைசதம் எடுத்தார். அரைசதத்திற்குப் பிறகு ஜாதவ் வேகமாக சிலபல பவுண்டரிகளுடன் முன்னேறி 72 ரன்கள் வந்த பிறகுதான் தோனி 48வது ஓவரில் தன் அரைசதத்தை எடுத்தர், இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக தோனி எடுக்கும் 4வது அரைசதமாகும்.  தோனி அரைசதத்துக்குப் பிறகு ஜாதவ் மிக அருமையாக கூல்ட்டர் நைல் லெந்த் பந்தை மிட்விக்கெட்டில் சிக்ஸ் தூக்கி ஆதிக்கத்தை உறுதி செய்தார். கடைசியில் ஸ்டாய்னிஸை 2 பவுண்டரிகள் அடித்து தோனி பினிஷ் செய்து வைத்தார். இந்திய அணி 48.2 ஒவர்களில் 240/4, தோனி, ஜாதவ் இணைந்து 24.5 ஒவர்களில் 141 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்து வெற்றிக்கூட்டணி அமைத்தனர்.

ஒரு விக்கெட்டை வீழ்த்தி அருமையாக டைட் செய்து பிறகு 99/4-ல் இறங்கி 81 ரன்கள் விளாசிய கேதார் ஜாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

https://tamil.thehindu.com/sports/article26420241.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தது இந்தியா!

1551542110-Dhoni-AP-3.jpg

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 06 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அவுஸ்ரேலிய அணியின் அதிகபட்ச ஓட்டமாக உஸ்மான் கவாஜா 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் ஷமி, பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 237 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து 240 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் கேதர் யாதவ் 81 ஓட்டங்களையும், டோனி 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

 

 

http://athavannews.com/அவுஸ்ரேலிய-அணிக்கு-பதில-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: விராட் கோலி 50-வது அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: விராட் கோலி 50-வது அரைசதம்
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலி தனது 50-வது அரைசதத்தை விளாசினார்.
பதிவு: மார்ச் 05,  2019 13:11 PM மாற்றம்: மார்ச் 05,  2019 15:57 PM
நாக்பூர், 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. 
 
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 0(6), சிகர் தவான் 21(29) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அம்பத்தி ராயுடுவும் 18 (32) ரன்களில் வெளியேறினர். விஜய சங்கர் 46, ஜாதவ் 11 ரன்களில் அவுட் ஆனார். டோனி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
 
வீராட் கோலி 71 ரன்களுடனும், ஜடேஜா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலி தனது  50-வது அரைசதத்தை விளாசினார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலி சதம்.

Ind 226/6 43.3 ov

கோலி 104

ஜடேஜா 13

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஓவரில் நம்பிக்கையைக் காப்பாற்றிய விஜய் சங்கர்: நல்ல நிலையிலிருந்து விக்கெட்டுகளை தூக்கி எறிந்த ஆஸி. - இந்தியா ‘த்ரில்’ வெற்றி

Published :  05 Mar 2019  22:20 IST
Updated :  05 Mar 2019  22:20 IST
vijayjpg

கடைசி விக்கெட்டை வீழ்த்திய விஜய் சங்கரைப் பாராட்ட ஓடும் குல்தீப், கோலி.| படம். | விவேக் பென்ரே.

கடைசி வரை விறுவிறுப்பாகச் சென்ற நாக்பூர் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரை வீசிய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், ஸ்டாய்னிஸ் மற்றும் ஸாம்ப்பாவை வீழ்த்தி 3 பந்துகளில் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று அவர் மீது கோலி வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார். 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் அற்புதமான தனிமனித போராட்ட சதத்தினால் 250 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கடைசி ஒவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், பும்ரா, ஷமி ஆகியோர் ஓவர்களை நிறைவு செய்ய, இந்திய அணி கேப்டனுக்கு இரண்டு வாய்ப்புகளே இருந்தன ஒன்று அரைக்கை பவுலர் கேதார் ஜாதவ்விடம் கொடுக்க வேண்டும் அவரும் தன் ஒவர்களை சிக்கனமாக வீசி 8 ஓவர்கள் 33 ரன்கள் உஸ்மான் கவாஜா விக்கெட்டை முக்கிய கட்டத்தில் வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்தினார். இன்னொரு தெரிவு தன் ஓரே ஓவரில் 13 ரன்களை 4 பந்துகளில் வாரி வழங்கிய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்.

ஆஸ்திரேலிய அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மார்கஸ் ஸ்டாய்னிஸ், இவர் 65 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார், இவர்தான் விஜய் சங்கரை எதிர்கொண்டார். விஜய் சங்கர் கடும் நெருக்கடியில் ஒரு அருமையான பந்தை வீசினார். புல் ஷாட் ஆடுவதற்கான ஷார்ட் பிட்சும் அல்ல, தூக்கி அடிப்பதற்கான புல் லெந்த் பந்தும் அல்ல, இடைப்பட்ட ஒரு பந்தை ஸ்டாய்னிஸ் மட்டையில் வாங்கத் தவறினார் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். அவர் ரிவியூ பலனளிக்கவில்லை. 2வது பந்தில் ஆடம் ஸாம்பா 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்து மிடில் ஸ்டம்பில் கிரீஸில் பிட்ச் ஆனது ஸாம்ப்பா ஒதுங்கிக் கொண்டு பாயிண்டில் அடிக்க நினைத்தார், கோட்டை விட்டார் ஸ்டம்பைப் பந்து தாக்க விஜய் சங்கர் தன் வாழ்நாளில் அதி அழுத்த ஓவரில் கேப்டன், அணியினரின் நம்பிக்கையை காப்பாற்றினார். 8ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

3 ஒவர்களில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் 48வது ஓவரில் ஸ்டாய்னிஸுக்கு பும்ரா வீசிய ஓவர் சர்வதேச தரத்திற்கு  சற்றும் குறைவில்லாதது, அந்த ஓவரில் ஸ்டாய்னிஸினால் பும்ராவை ஒன்றும் செய்ய முடியவில்லை 1 ரன் தான் எடுக்க முடிந்தது. அதற்கு அடுத்த ஷமி ஓவரில் 9 ரன்கள் வந்தது. கடைசி ஓவரில் 11 என்ற நிலையில் விஜய் சங்கரை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறதோ என்று நாம் யோசிக்க மைதானத்தில் ரசிகர்கள் அய்யய்யோ இவரா கடைசி ஓவரை வீசப்போகிறார் என்று அதிர்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் பார்க்க விஜய் சங்கர் அருமையாக வீசி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

விக்கெட்டுகளைத் தூக்கி எறிந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள்:

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் புதிய பந்தில் நன்றாக ஆடினர், கவாஜா, பிஞ்ச் ஜோடி 14.3 ஓவர்களில் 83 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், ஆட்டம் நன்றாக ஆஸி.க்கு போய்க் கொண்டிருந்தது ஏரோன் பிஞ்ச் தன் மீதான விமர்சனங்களை முறியடிக்கும் விதமாக 53 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 37 ரன்கள் என்று ஆடி வந்த போது உள்ளே வந்த குல்தீப் யாதவ் பந்தை தேவையில்லாமல் ஸ்வீப் ஆடி பந்தை மிஸ் செய்து எல்.பி.ஆகி வெளியேறினார்.

இன்னொரு முனையில் உஸ்மான் கவாஜா 37 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது ஜாதவ் பந்து ஒன்று வசதியாக ஆஃப் ஸ்டம்புக்கு வந்தது, பளார் என்று அறைய வேண்டிய பந்தை மந்தமாக முன்னால் வந்து மட்டையை முன் கூட்டியே திருப்ப விளிம்பில் பட்டு கவரில் கோலியிடம் கேட்ச் ஆனது, தேவையற்ற அவுட்.

அடுத்த 8 ஓவர்களில் 39 ரன்களை ஷான் மார்ஷ் (16), ஹேண்ட்ஸ் கம்ப் சேர்த்தனர். ஜடேஜாவின் அதிகம் ஸ்பின் ஆன பந்தை ஆடாமல் விடுவதற்குப் பதிலாக ஆடப்போய் லெக் திசையில் தோனியிடம் கேட்ச் ஆனார். ஏற்கெனவே பிட்ச் ஏற்றமும் தாழ்வுமாக இருக்க, குல்தீப் யாதவ் பந்து மட்டைக்கு அடியிலெல்லாம் சென்றது. அப்படிப்பட்ட தாழ்வான ஒரு பந்தில்தான் மேக்ஸ்வெல் 4 ரன்களில் பவுல்டு ஆனார், ஆனால் அவர் 18 பந்துகள் இதற்காக எடுத்துக் கொண்டார்.

28.3 ஓவர்களில் 132/4 என்று ஆஸ்திரேலியா கொஞ்சம் தடுமாறியது.. ஹேண்ட்ஸ்கம்ப்,ஸ்டாய்னிஸ் இணைந்து 39 ரன்களைச் சேர்த்தனர். இதற்கு 9 ஓவர்கள் எடுத்துக் கொண்டனர், ஆனாலும் ஆஸ்திரேலியா விரட்டலில் கட்டுப்பாட்டுடந்தான் இருந்தது. அப்போது 48 ரன்கள் எடுத்திருந்த ஹேண்ட்ஸ்கம்ப்  பேக்வர்ட் பாயிண்டில் தட்டி விட்டு ஒரு சிங்கிள் எடுக்க முயன்றார், பந்தை எடுத்த ஜடேஜா ரன்னர் முனையில் ஸ்டம்பை பெயர்த்தார். 171/5 என்று ஆனது. இதுவும் இல்லாத சிங்கிள் என்பதால் தூக்கி எறியப்பட்ட விக்கெட்டே.

ஸ்டாய்னிஸ் ஒரு முனையில் நிற்க விக்கெட் கீப்பர் கேரி 24 பந்துகளில் 22 ரன்களுக்கு நன்றாகவே ஆடிவந்தார். 48 பந்துகளில் 59 ரன்கள் என்ற நிலையில் 43வது ஓவரில் குல்தீப் யாதவ்வை நொறுக்கினர், கேரியும், ஸ்டாய்னிசும், கேரி 2 பவுண்டரிகளை விளாச ஸ்டாய்னிஸ் லாங் ஆனில் சிக்ஸ் வெளுக்க அந்த ஒவரில் 15 ரன்கள் வந்து 7 ஓவர்களில் 44 ரன்கள் வெற்றிக்குத் தேஐ என்ற நிலை ஏற்பட்டது. அடுத்த ஓவரில் ஷமி 6 ரன்களை விட்டுக் கொடுத்தார். 36 பந்துகளில் 38 ரன்கள் தேவை என்ற ஆஸி.வெற்றி உறுதியான நிலையில் மீண்டும் குல்தீப் யாதவ்வை 45வது ஓவரின் முதல் பந்தில் பௌண்டரி அடித்தார் ஸ்டாய்னிஸ். ஆனால் அதே ஒவரில் தேவையில்லாமல் கேரி உள்ளே வந்த ஸ்வீப் ஆட முடியாத, காலைப்போட்டு லாங் ஆனில் தள்ளிவிட்டு ஒருசிங்கிள் எடுக்க வேண்டிய பந்தை, ஸ்வீப் ஆட முயன்று பவுல்டு ஆக ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்தது. கூல்ட்டர் நைல் இறங்கி எல்லா பந்துகளை அடிக்கப் பார்த்தார், ஸ்டாய்னிஸுக்கு ஸ்டாண்ட் கொடுக்க வேண்டிய இவர் பும்ராவின் ஆகிருதி என்னவென்று தெரியாமல் அவரை ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில் பவுண்டரி அடிக்க நினைத்து பௌல்டு ஆனார், படுமோசமான பொறுப்பற்ற ஷாட். இவர் அவுட் ஆக கமின்சும் இதே ஓவரில் பும்ராவின் அருமையான பந்துக்கு தோனியின் அருமையான கேட்சுக்கு வெளியேற 8 விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 8 ரன்களில் தோல்வியும் தழுவியது ஆஸ்திரேலியா.

இந்தியா தரப்பில் 10 ஓவர்களில் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.  விஜய் சங்கர் ஒரு ஓவரில் 13 ரன்கள் கொடுதவர் கடைசியில் 1.5 ஒவரில் 13/2 என்று வெற்றிநாயகனாக முடிந்தார், பேட்டிங்கிலும் முக்கியமான 46 ரன்களை அடித்தார் விஜய். ஷமி 10-0-60-0,  பும்ரா மிகப்பிரமாதமாக வீசி 10-0-29-2. என்று முடித்தார். ஜடேஜா 48 ரன்களுக்கு 1 விக்கெட், ஒரு ரன் அவுட். ஜாதவ் 8 ஒவர்கள் வீசி 33 ரன்கல் 1 விக்கெட்.

ஆட்ட நாயகன் 40வது ஒருநாள் சதம் அடித்த விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article26440368.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலி சதமடித்தும் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்க காரணமென்ன?

INDvsAUSபடத்தின் காப்புரிமைROBERT CIANFLONE

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா வென்ற நிலையில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் துவங்கியது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலையில் இருந்தது. இப்போட்டியில் தோற்றால் தொடரை இழந்துவிட கூடிய சூழலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தொடரை வெல்வதற்கு இரு அணிகளுக்கும் வாய்ப்பு நீடிக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு ஆரோன் பின்ச் - உஸ்மான் கவாஜா இணை 193 ரன்கள் குவித்தது. ஆரோன் பின்ச் 99 பந்துகளில் 10 பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் உதவியுடன் 93 ரன்கள் எடுத்தார்.

உஸ்மான் கவாஜா 113 பந்துகளில் 11 பௌண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 104 ரன்கள் எடுத்தார். கிளென் மாக்ஸ்வெல் 31 பந்துகளில் மூன்று பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் விளாசி 47 ரன்கள் எடுத்தநிலையில் ரன் அவுட் ஆனார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 31 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் கரே 21 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா, ஜடேஜாவுக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. கேதர் ஜாதவ் இரண்டு ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இந்திய அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அம்பதி ராயுடுவும் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்குபவர் நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமிருக்கும் சூழலில் தொடர்ந்து சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அம்பதி ராயுடுவுக்கு ஓரளவு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில் தொடர்ந்து அவர் குறைவான ரன்களை குவித்து வந்துள்ளார். அம்பதி ராயுடுவின் ஃபார்ம் இந்திய அணிக்கு சற்று தலைவலியாக அமைந்துளளது.

முதல் ஐந்து ஓவர்களுக்குள் 27 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா. இதன் பின்னர் இந்நாள் கேப்டனும் முன்னாள் கேப்டனும் இணைந்து பொறுமையாக விளையாடினர். எனினும் தோனி 42 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த கேதர் ஜாதவ் 39 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

INDvsAUSபடத்தின் காப்புரிமைROBERT CIANFLONE

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி பொறுப்பாகவும் அதே சமயம் அவசியம் பௌண்டரிக்கு விளாச வேண்டிய பந்துகளை பௌண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை. அவர் 95 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

விராட் கோலி அவுட் ஆனதற்கு பிறகு இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கத்துவங்கியது.

கடந்த போட்டியில் இந்திய அணிக்கு ஆட்டநாயகனாக விளங்கிய விஜய் சங்கர் இப்போட்டியில் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா 31 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 49 ஓவரிலேயே 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விராட் கோலி இப்போட்டியில் தனது 41வது சதத்தை விளாசினார். அவர் சதமடித்தும் இந்தியா தோல்வியடைவது இப்போட்டியைச் சேர்த்து எட்டாவது முறை.

ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன், ஆடம் ஜாம்பா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடக்கவுள்ளது.

https://www.bbc.com/tamil/sport-47501939

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிதாக வீணான விரட்டல் மன்னன் விராட் கோலியின்  சதம்: கிடுக்கிப் பிடி பந்து வீச்சில் இந்திய பேட்டிங் பலவீனத்தை அம்பலப்படுத்தி ஆஸி. வெற்றி

Published :  08 Mar 2019  22:21 IST
Updated :  08 Mar 2019  22:24 IST
ராஞ்சி
 
virat-kohlijpg

விராட் கோலி ஸாம்ப்பா பந்தில் ஆட்டமிழந்து செல்கிறார். | பிடிஐ.

ராஞ்சியில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் வாழ்வா சாவா என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விராட் கோலியின் மிகப்பிரமாதமான சதத்தையும் மீறி 313 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் தங்கள் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

314 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை பல்லிளித்தது. விராட் கோலி மட்டுமே ‘நான் தான் கிங்’ என்றவாறு ஆடி 95 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 123 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் நின்று கொண்டிருந்தார், ஆனால் கடைசியில் ஆடம் ஸாம்ப்பா பந்தில் பவுல்டு ஆகி வெளியேற இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இன்றும் கோலி, தோனி, ஜாதவ் விக்கெட்டுகளை ஸாம்ப்பா கைப்பற்றி 70 ரன்கள் கொடுத்தாலும் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி எந்தப் போட்டியாக இருந்தாலும் விக்கெட்டுகளே போட்டியை வெல்லும் என்பதை நிரூபித்தார். கமின்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் மிகச்சிக்கனமாக வீசியதோடு தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், முன்னதாக சதம் கண்ட கவாஜா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ரன்களைப் பெரிய அளவில் குவித்தால் இந்த இந்தியப் பேட்டிங் பல்லிளிக்கும் என்று நாம் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம், அது இன்று உண்மையானது, அதே போல் பெரிய இலக்குகளை இப்போதைய தோனி விரட்ட முடியாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் அதுவும் நிரூபணமானது. அதே போல் நல்ல பவுலிங்குக்கு எதிராக அம்பாதி ராயுடுவின் பேட்டிங் திறமைகள் கேள்விக்குறியே என்றும் கூறினோம் அதுவும் தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் 41வது சதமாகும் இது விரட்டும் போது 25வது சதம். விரட்டலில் வெற்றி பெறாத 4வது சதமாகும் இது.  டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது, இந்திய விரட்டல் பலத்தை நம்பியல்ல, பனிப்பொழிவை நம்பி என்று தெரிகிறது, ஆனால் பனிப்பொழிவு இல்லை. ஷிகர் தவண் 1 ரன்னில் திருந்தாத அதே ஷாட்டை ஆடி ரிச்சர்ட்சனிடம் ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து கமின்ஸின் பவுன்ஸ் குறைவான பந்தில் பின் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். நடுவர் அவுட் தரவில்லை ரிவியூவில் அவுட்.

அம்பதி ராயுடு உள்ளே வந்த பந்தை தவறான லைனில் ஆடியதால் பந்து இடையில் புகுந்து பவுல்டு ஆனது, 2 ரன்னில் வெளியேறினார். மிக அருமையான பந்து ராயுடுவுக்கு கொஞ்சம் அதிகம்தான் இந்திஆ 27/3 என்று ஆனது.

பலத்த எதிர்பார்ப்புடன் கோலியுடன் தோனி இணைந்து ஸ்கோரை 86 ரன்களுக்கு உயர்த்தினர். தோனி 42 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் நேதன் லயன் பந்தில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் அடித்து 26 ரன்களில் ஸாம்ப்பாவை அடிக்கப் போய் ஸ்டம்புகளை இழந்தார். அது ஒரு நல்ல ஸ்ட்ரோக்கும் அல்ல, ஒரு அனுபவ வீரர் ஆடும் ஸ்ட்ரோக்கும் அல்ல.

கோலியும் ஜாதவ்வும் ஸ்கோரை 174 க்கு எடுத்துச் சென்றனர். அப்போது ஸாம்ப்பா, ஜாதவ்வை (26 ரன்கள் 39 பந்து) வீழ்த்தினார். கோலி ஆட்டத்தின் மெருக் கூடிக்கொண்டே சென்றது, ஆனால் 98 ரன்களில் இருந்த போது மேக்ஸ்வெல் பந்தில் விக்கெட் கீப்பர் கேரி கேட்சை விட்டார்.கோலி தன் 41வது சதத்தை எடுத்தார், இது ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆகும், ஏனெனில் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் கோலி இருக்கும் வரை வெற்றி பெறத் தேவைப்படும் ரன் விகிதம் 8 ரன்களுக்குக் கீழேயே வைத்திருந்தார், அவ்வப்போது அனாயாசமான பவுண்டரிகளை ஓவருக்கு ஓவர் அடித்து வந்தார். இவரும் விஜய் சங்கரும் மீண்டும் இணைந்து 6 ஓவர்களில் 45 ரன்களைச் சேர்த்தனர் அப்போது விராட் கோலி 123 ரன்களில் ஸாம்பா பந்தில் பவுல்டு ஆனார்.

இந்திய அணிக்கு 75 பந்துகளில் 95 ரன்கள் தேவையாக இருந்தது. விஜய் சங்கர் 30 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து லயன் பந்தை ஒரு சுற்று சுற்றினார் நேராக கையில் போய் உட்கார்ந்தது.  ஜடேஜா (24), குல்தீப் யாதவ் (10), ஷமி (8) ஆகியோர் ரிச்சர்ட்சன், கமின்ஸ் ஆகியோரிடம் சடுதியில் வெளியேற கோலி அவுட் ஆகும் போது 38வது ஓவரில் 219 என்று இருந்த ஸ்கோரிலிருந்து 281 வரைதான் வர முடிந்தது. 48.2 ஓவர்களில் ஆட்டமிழந்தது.

300 ரன்களுக்கும் மேல் எந்த அணி அடித்தாலும் இந்த இந்திய அணியில் விராட் கோலியை வீழ்த்தி விட்டால் கதை முடிந்தது என்பது இந்தப் போட்டி மூலம் தெரியவந்துள்ளது.

https://tamil.thehindu.com/sports/article26475209.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.