Sign in to follow this  
பிழம்பு

சர்வதேச மகளிர் தினம்: வரலாறும், நிதர்சனமும்

Recommended Posts

அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக
உலக மகளிர் தினம்: வரலாறும், நிதர்சனமும்படத்தின் காப்புரிமை Getty Images

பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது அனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள்.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் , 1910 ம் ஆண்டு உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கிளாரா ஜெட்கின் , அனைத்து நாட்டில் உள்ள பெண்களும் சேர்ந்து தனி சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தினைக் கடைப்பிடிக்க வேண்டும், பெண்கள் சந்திக்கும் அனைத்து சவால்களையும் இணைத்து, வாக்குரிமை கோரிக்கையும் சேர்த்து விவாதிக்க வேண்டும், சம உரிமை கேட்டு போராட வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தினார்.

இதுவே மகளிர் தினம் உருவாவதற்கான அடிப்படை எனினும் அத்தீர்மானத்தில் இந்த நாள் என்று குறிப்பிடவில்லை. அதன் பின் பல நாடுகளிலும், பல வேறுபட்ட தேதிகளில் பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ரஷ்யப் பெண்கள் முதல் உலகப் போர் நேரத்தில், அமைதியையும், ரொட்டியையும் வலியுறுத்தி போராட்டம் தொடங்கிய மார்ச் 8 ம் தேதி பிறகு சீராக சர்வதேசப் பெண்கள் தினமாக அங்கீகரிக்கப்படத் தொடங்கியது.

1911 ம் ஆண்டில் இருந்தே பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு பாலின சமத்துவம் குறித்து பேசி வந்தாலும் இன்றும் ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறாள், ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு பெண் வார்த்தை வன்முறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள், பணியிடத்தில் சம உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறாள், ஒரு ஆண் இன்னொரு ஆணை வசைபாடும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு பெண் அவமானப்படுத்தப் பட்டு கொண்டிருக்கிறாள்.

நவீன உலகத்தில் பல துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கான அச்சுறுத்தலும் அதிகமாகியிருக்கின்றன என்கிறார், துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் டிடெக்டிவ் யாஷ்மின். "நவீன உலகத்தில் முகநூல், ட்விட்டர் வாயிலாக பெண்கள் மீது , பெண் உடல் மீது வீசப்படும் வன்மம் அதிகம். அலுவலகங்களில் வெற்றி பெற்ற பெண்ணை சாய்ப்பதற்கு கூட அவளின் உடலின் மீதான தாக்குதல் தான் முதன்மையாக இருக்கிறது. சமூக ஊடகங்களை பெண்கள் விழிப்புணர்வோடு கையாள வேண்டும். குடும்ப விஷயங்கள் எல்லாவற்றையும் பொதுவெளியில் வைக்கக்கூடாது. முழுமையாக ஒருவரை தெரியாமல் அவரிடம் உரையாடலை நிகழ்த்தக் கூடாது.

உலக மகளிர் தினம்: வரலாறும், நிதர்சனமும்படத்தின் காப்புரிமை Getty Images

பெண் பெயரில் இருப்பவர்கள் எல்லாம் பெண்ணாகவே இருப்பதில்லை அவர் பெண் உருவத்துக்குள் இருக்கும் ஆணாகவும் இருக்கலாம்.எதன் பொருட்டும் விடியோ சாட்டுக்கு அனுமதிக்க கூடாது. அது எந்த சூழலிலும் பெண்களுக்கு எதிராகத் திரும்பலாம். நேற்றுவரை நல்லவராக இருந்தவர் கொஞ்சம் பிசகாக தொடர்பு கொண்டால் அதை ஸ்கிரின் சாட் எடுத்து வைத்து தேவைப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் தயங்க கூடாது. தொல்லையாக இருந்தால் பிளாக் செய்து விடலாம் அதற்கு முன் அவரின் ஆவணத்தை சேமித்து வைக்க வேண்டும். சமூக அச்சம், குடும்ப மானம் இப்படியான காரணங்களை காட்டி மறைமுகமாக பெண் அச்சுறுத்தப்பட்டு கொண்டே இருக்கிறாள்" என்கிறார் பல துப்பறியும் வழக்குகளை கையாளும் யாஷ்மின்.

உலக சுகாதார நிறுவனம் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்று நோய் , பாதுகாப்பற்ற உடல் உறவினால் வரும் பாலியல் நோய்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து மனநல பாதிப்பும் இடம் பெற்று இருந்தது. பெண்களின் தற்போதைய மன அழுத்தம் சார்ந்த சிக்கல்கள், அதில் இருந்து விடைபெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி அவர்களிடம் பேசினோம்.

எல்லாக் காலத்திலும் பெண்களுக்கு வாழ்க்கை ரீதியான இடர்கள் ,அழுத்தங்கள் இருந்து இருக்கின்றன. எந்த காலத்திலும் மன அழுத்தம் அற்றவர்களாக மனிதப் பெண்கள் இருந்தார்கள் என்பதற்கான வரலாற்று சான்றுகள் தெரியவில்லை . மன அழுத்தத்தினை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று பயன்படும் அழுத்தம் (use stress) மற்றொன்று இடர் தரும் அழுத்தம் (distress). முதல் வகை நம் வாழ்க்கைக்கு பயன்படுகிற அழுத்தங்கள். அதன் மூலம் பயன்கள் இருக்கும். உதாரணமாக, பணிக்கு செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலை முடிந்து செல்ல வேண்டும், வீட்டில் உடல் நலம் இல்லாதவர்கள் அல்லது குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பது போன்ற அழுத்தங்கள் இயல்பானவை. இது போன்ற பயனுள்ள அழுத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் இது எல்லாம் இல்லாவிடில் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது என்ற மனப்பான்மையோடு இதனை அணுகினால் இந்த மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டுவிட முடியும்" என்கிறார்.

மற்றொன்று பயனற்ற அழுத்தங்கள். "பொதுவாகவே நமது கலாசாரம் பெண்களை அதிகம் புலம்புபவர்களாக பழக்கப்படுத்தி இருக்கின்றது. பெண்களை பிரச்சினைகளை மையப்படுத்தி சிந்திப்பவர்களாக இந்த சமூகம் சித்தரித்து வைத்திருக்கின்றது. அதனை விடுத்து தீர்வினை நோக்கி சிந்திப்பவர்களாக இருந்தாலே பல சிக்கல்களில் இருந்து வெளியேறிவிடலாம். பெண்களின் மிகப்பெரிய பிரச்சினை, தங்களால் செய்ய இயலாத செயலை பிறரை திருப்திப்படுத்துவதற்காக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது.

உலக மகளிர் தினம்: வரலாறும், நிதர்சனமும்படத்தின் காப்புரிமை Getty Images

அப்படி செய்யாமல் எது இயல்பானதோ , எது நம்மால் இயலுமோ அதை மட்டுமே செய்வேன் என்ற கோட்டை பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டும்," என்கிறார் ஷாலினி.

பெண்கள் பெரும்பாலும் இதில் தவறு செய்கிறார்கள். நீங்கள் என்மீது அக்கறை செலுத்தவில்லை நானும் என் மீது அக்கறை செலுத்த மாட்டேன், என்னை முக்கியமற்றவளாக நினைத்து விட்டர்கள் அல்லவா, நான் சாப்பிட மாட்டேன், தூங்க மாட்டேன், என்னை நான் கவனித்துக் கொள்ள மாட்டேன், என்னை நான் புறக்கணிப்பேன் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். இது நேரடியாக சிக்கலை சந்திக்காமல் யாரவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் என்ற சார்புமனநிலை, இதனை தவிர்த்து நேரடியாக சிக்கலைகளை எதிர் கொள்ளும் நேர்மறையான அணுகுமுறையினை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் ஷாலினி.

பெண்கள் தன்னை தியாகியாக கட்டமைக்காமல், தன் சுயத்திற்காக நேரத்தினை செலவிட வேண்டும். தன்னால் செய்ய இயலாதவற்றை எந்த தயக்கமும் இன்றி முடியாது என்று சொல்லிப் பழக வேண்டும். இதை எல்லாம் சரி செய்து கொண்டாலே சராசரி வாழ்க்கையில் வரும் மன அழுத்தங்களில் இருந்து பெண்கள் விடுபட்டுவிட முடியும், இதனை தாண்டி பெரிய சிக்கல்கள் வரும் பொழுது இயன்ற வரை தானாக சரி செய்ய முயற்சித்து விட்டு, இயலாத பொழுது தயங்காமல் தள்ளிபோடாமல், நமது ஆரோக்கியம் முக்கியம் என்பதனை புரிந்து கொண்டு மன நல மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் ஷாலினி.

https://www.bbc.com/tamil/india-47492859

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this