மண்ணை விற்றுக் காசாக்கி கைலாயம் கொண்டா போவீர்கள்
மணல் மண்ணை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப் பத்திர நடைமுறையை அமைச்சரவை இரத்துச் செய்த கையோடு, எங்கள் வடபுலத்தில் சட்டவிரோத மண் அகழ்வு அசுர வேகத்தில் நடைபெறுகிறது.
உண்மையில் மணல் மண் உட்பட கனிய வளங்களை எடுத்துச் செல்வதற்கான பயண வழி அனுமதி நடைமுறை இரத்துச் செய்யப் பட்டமையானது மணல் மண்ணை விரைவாக எடுத்துச் செல்வதற்கும் செலவைக் குறைப்பதற்குமானது.
எனினும் நம் வடபுலத்தில் மேற்குறித்த விடயம் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுள் ளது. இதற்குப் பொலிஸாரின் அசமந்தமும் காரணம் எனலாம்.
அதாவது ஓர் இடத்தில் இருந்து மண்ணை எடுப்பதாக இருந்தால், அதற்கான அனுமதி கள் கட்டாயமாகப் பெறப்பட வேண்டும்.
அதிலும் குறிப்பாக கனிய வளங்கள் திணைக் களத்திடம் இருந்து முறையான அனுமதியைப் பெற்றாக வேண்டும்.
அதேநேரம் வாகனத்தில் மண்ணை ஏற்றிச் செல்லும்போது அந்த மண் எடுக்கப்பட்ட தற்கான அனுமதிப்பத்திரம் இருப்பது அவசியம்.
தவிர, மணல் மண் அகழப்படுகின்ற இடங்களில் எவ்வளவு ஆழத்துக்கு மண்ணை எடுக்க முடியும் என்ற நியமங்களை கனிய வளத் திணைக்களம் வரையறை செய்திருக்கும்.
எனவே உரிய அனுமதியுடன் மணல் அகழ்வு செய்யப்படும்போது அதனால் எந்தத் தீங்கும் ஏற்பட மாட்டாது.
ஆனால் மேற்குறித்த நிலைமையைப் புரிந்து கொள்ளாத மணல் வியாபாரிகள், காய்ந்த மாடு கம்பில் விழுந்தபோல கிராமங்களையும் ஊர்களையும் அழிக்கும் வகையில் மணல் மண்ணை அகழ்ந்து எடுப்பதில் ஈவு இரக்கமின்றிச் செயற்படுகின்றனர்.
கூடவே மணல் மண் அகழப்படுகின்ற இடங்களுக்குச் சென்று உரிய அனுமதிப்பத்திரங் கள் பெறப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்குப் பொலிஸார் தயாரில்லாத நிலையில், சட்ட விரோத மணல் அகழ்வு உச்சமடையலாயிற்று.
இந்நிலையில் மணல் அகழ்வால் தங்கள் ஊருக்குள் கடல் நீர் புகுந்து விடப்போகும் அபாயத்தை உணர்ந்த ஊர் மக்கள் மணல் அகழ்வைத் தடுப்பதில் முனைப்புக் காட்டி யுள்ளனர்.
எனவே மணல் மண் விடயத்தில் வழி அனுமதிப்பத்திரம் மட்டு மே இரத்துச் செய்யப்பட்டது. மற்றும்படி மணல் மண்ணை எங்கிருந்து எடுப்பதாக இருந்தாலும் அதற்கான அனுமதிப் பத்திரம் கைவசம் இருந்தாக வேண்டும்.
இந்த நடைமுறையை இறுக்கமாக அமுல் படுத்தும்போது; குறைந்த விலையில், விரை வாக மணல் மண்ணைப் பெற்றுக் கொள்வதும் கட்டிட நிர்மாணப் பணிகளை விரைவு படுத்தவும் முடியும்.
மணலுக்கான வழி அனுமதி நடைமுறை இரத்துச் செய்யப்பட்டதுதான் தாமதம் எங்கள் மணல் வியாபாரிகள் மண்ணை விற்று மிகப் பெருமளவில் பணத்தைச் சம்பாதித்து கைலாயம் கொண்டு போகலாம் என்பதுபோல நடந்து கொள்வதுதான் மிகப்பெரிய வேதனை.
http://valampurii.lk/valampurii/content.php?id=20121&ctype=news