Jump to content

பொள்ளாச்சி: அக்கறையின் பெயரால் நடக்கும் அத்துமீறல்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொள்ளாச்சி: அக்கறையின் பெயரால் நடக்கும் அத்துமீறல்கள்!

25.jpg

பாலியல் விழைவை வெளிப்படுத்துபவர்கள் எல்லோரும் பாலியல் குற்றவாளிகள் அல்ல!

கவின்மலர்

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூரங்களை அடுத்து உருவாகியுள்ள சூழல் மிகவும் அபாயகரமானது. பெண்களுக்கு அறிவுரைகள் சொல்லும் வாட்ஸ் அப் செய்திகள், முகநூலில் பகிரப்படும் பெண்கள் மீதான அக்கறைப் பதிவுகள் என்கிற பெயரிலான அறிவுரைகள், சில சமயங்களில் வசவுகள் எனப் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சொல்லும் கனவான்கள் நிரம்பிய சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. பெண்களும் சக பெண்களுக்கு அறிவுரைகளைச் சொல்கிறார்கள். பெண்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற அவர்களின் அக்கறையின் மேல் எனக்கு எந்த சந்தேகமும். இல்லை. ஆனால், அந்த அக்கறை கட்டுப்படுத்தும் குரலாக மாறுகையில் அதைக் கேள்வி கேட்கத்தான் வேண்டும்.

முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பெண்கள் தங்கள் படங்களைப் பகிரக் கூடாது, புதியவர்களிடம் உரையாடக் கூடாது என்பது உட்பட பல கட்டுப்பாடுகளைச் சொல்லும் வாட்ஸ் அப் செய்திகள் உலா வருகின்றன.

இச்சம்பவத்தை ஒரு சிலர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மாற்று இயக்கங்களைக் கொச்சைப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றனர். தலித்தியம், அம்பேத்கரியம், மார்க்சியம் பேசிப் பெண்களை நெருங்குவது, இலக்கியம் பேசிப் பெண்களிடம் உரையாட வருவது, உலக சினிமா குறித்துப் பேச்சைத் தொடங்கி திரைப்படத்துக்கு அழைப்பது, பறையிசைப் பயிற்சிக்கு வரும் பெண்களிடம் நெருங்கிப் பழகுவது என்று ஒரு நீண்ட பட்டியல் இடப்படுகிறது.

இப்படிப் பட்டியலிடும் இவர்களுக்கு பாலியல் குற்றங்களுக்கும் பாலியல் விழைவின்பாற்பட்ட அழைப்புகளுக்கும் வேறுபாடு உண்டு என்பது தெரிவதில்லை. அந்த வேறுபாடு குறித்த தெளிவு முதலில் இச்சமூகத்துக்குத் தேவை.

பெண்களிடம் ‘நூல் விடுபவர்கள்’, இன்பாக்ஸில் வந்து பேசுவோர், சினிமாவுக்குப் போகலாமா எனக் கேட்போர், உலகப் படங்கள் பற்றியோ, இலக்கியம் பற்றியோ, பெண்ணின் சமூக அக்கறையைப் போற்றியோ பேச்சைத் தொடங்குவோர் முதலான அனைத்து ஆண்களிடமும் எப்படிப் பேச வேண்டுமெனப் பெண்களுக்குத் தெரியும்.

பிடித்திருந்தால் பேச்சைத் தொடர்வதும், சினிமாவுக்கு உடன் செல்வதும், பிடிக்கவில்லையெனில், பேச்சை நாசூக்காக மடைமாற்றுவது, சில நேரங்களில் ‘நூல் விடுவது’ புரிந்தும் புரியாததுபோல் நடித்துத் தன் விருப்பமின்மையைப் உணரவைத்துவிடுவது, சில நேரங்களில் பேச்சை முறித்துக்கொள்வது, நேரில் பார்த்தால்கூட பேசாமல் போய்விடுவது என இவற்றில் ஏதேனுமொன்று அல்லது எல்லாமேகூடப் பெண்களுக்குத் தெரியும். இவை எல்லாமே தெரிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருக்கிறாள் என்றால் அந்த நட்பை அவள் விரும்புகிறாள் என்றே பொருள். விரும்பிவிட்டுப் போகிறாள். இருவர் மனமொப்பி ஏதோ செய்கிறார்கள். இதற்குக் கலாச்சாரக் காவலர்கள்தான் அச்சப்பட வேண்டும். முற்போக்காளர்கள் அல்ல.

ஆண்களைக் கையாள்வது எப்படி எனப் பெண்கள் அறிவார்கள். இலக்கியம், உலக சினிமா, தத்துவம், அரசியல் எனப் பேசிக்கொண்டு நெருங்கும் ஒருவனின் நேர்மையை அளவிடப் பெண்களுக்குத் தெரியும். விட்டால் பெண்கள் யாரிடமும் பேசவே கூடாது எனச் சொல்லிவிடுவார்கள் போல.

குற்றங்களை நியாயப்படுத்தும் வாதங்கள்

இதில் எல்லாம் பாலியல் சுரண்டல்கள் நடப்பதில்லையா எனக் கேட்கலாம். நடக்கிறதுதான். அப்படிச் சிலர் உண்டுதான். அதற்காக 99.9 சதவிகிதம் என்றெல்லாம் ஆர்டிஐ போட்டுக் கேட்டதுபோல கணக்குச் சொல்லிப் பொதுமைப்படுத்துவதன் மூலம் இந்த ஆண்களே இப்படித்தான் என்றல்ல, இந்த ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கங்களே இப்படித்தான், அவை மயக்கும் மாயக்கூடங்கள் என்கிற கருத்தைப் பதியவைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

தலித்தியம், மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம், அரசியல் வகுப்புகள், பறைப் பயிற்சி என வரும் பெண்கள் ஆண்களிடம் 'மயங்கி'விடுவது பற்றிப் பேசி வகுப்பெடுப்போர் மிக வசதியாக காஞ்சிபுரம் தேவநாதன்களைப் பற்றியும், மீ டூ இயக்கத்தில் குற்றம்சாட்டப்பட்ட கர்னாடக சங்கீதப் பயிற்சி வகுப்புகள் பற்றியும் வாய் திறப்பதில்லை.

பொள்ளாச்சி ரேப்பிஸ்டுகளையும் நூல் விடுவோரையும் ஒப்பிட்டு இருவரும் ஒன்றுதான் எனச் சொன்னால், சிற்றிதழ்ச் சூழலிலேயே காமக் கொடூரன்கள் இருக்கிறார்கள், அரசியல் இயக்கங்களிலேயே இருக்கிறார்கள்; அப்படியானால் சராசரிகள் அப்படி இருக்க மாட்டார்களா என்று நினைக்கவைப்பதும் ஒரு வகையில் குற்றங்களை நியாயப்படுத்தும் செயல்தான்.

உறவுகளில் பல வகைகள்

பெண்கள் பொதுவெளிக்கு வருவதும், மாற்று அரசியல் இயக்கங்களுக்கு வருவதும் அபூர்வம். அப்படி வரும் பெண்கள் இயக்கங்களில் உள்ள ஆண்களைக் காதலித்து திருமணம் செய்துகொண்டோ, செய்துகொள்ளாமலோ சேர்ந்து வாழ்வதும் உண்டு. இயக்கப் பணிகளில் கூட்டாக ஈடுபடுவதும் உண்டு. திருமணத்துக்குப் பின்னர் பெண்ணை இல்லத்தரசியாக்கிவிட்டு, தாங்கள் மட்டும் களப்போராளிகளாக வலம்வரும் ஆண்களும் உண்டு. எல்லா இயக்கங்களிலும் உள்ள எல்லா ஆண்களும் பெண் விடுதலை குறித்த முழு புரிதல் உள்ளவர்கள் எனச் சொல்ல முடியாது. ஆனால் அதைச் சொல்லியோ அல்லது இயக்கங்களுக்குப் போனால் 'ஆண்கள் உங்களைச் சீரழித்துவிடுவார்கள்' என்று பயமுறுத்தியோ, பெண்களை அரசியல் இயக்கங்களுக்கு வரக் கூடாதெனச் சொல்வது எவ்வளவு அபத்தம்!

இத்தகையோர் பாலியல் உறவுகள் குறித்து வைத்துள்ள புரிதல்தான் அபாயகரமானதும் கவலையளிப்பதுமாக இருக்கிறது. எதிர்பாலினத்திடையேயோ அல்லது ஒரே பாலினத்துக்குள்ளேயோ உருவாகும் உறவுகள் குறித்து என்ன கருதுகிறார்கள்?

இருவருக்கு இடையேயான உறவுகளில், நட்பு இருக்கலாம், காதல் இருக்கலாம், காமம் இருக்கலாம், இவை மூன்றுமில்லாத காதலுமில்லாத, நட்புமில்லாத இடைப்புள்ளியில் அவர்கள் உறவு இருக்கலாம். இந்த வகைகள் மட்டுமல்ல. இவற்றைத் தாண்டியும் உறவுகள் பல்வேறு வகைப்படுபவை. சிவப்பை மறுப்பென்றும், பச்சையை ஏற்பென்றும் வைத்துக்கொண்டால், 'சிவப்புக்கும் பச்சைக்கும் நடுவே விழும் மஞ்சள் சிக்னல் போல' என ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வரும் வசனத்தைப் போல இருக்கலாம். அதற்குப் பெயர் வைக்கப்படாமலும் இருக்கலாம்.

இப்படிப் பல்வேறு உறவுநிலைகளுக்கான சாத்தியம் இருக்கையில், ஆணும் பெண்ணும் நட்பு மட்டுமே கொள்ள வேண்டும், அது மட்டுமே தூய்மை என்றும் பிற உறவுகளை அனுமதிக்காததும் ஒருவகையில் பிற்போக்குதான். ஆணும் பெண்ணும் நட்பே கொள்ளக் கூடாது, பேசக்கூடக் கூடாது எனச் சொல்லும் பிற்போக்காளர்களுக்கும் இவர்களுக்கும் மயிரிழைதான் வேறுபாடு. 'நீ அவரிடம் பேசு. பழகு. ஓர் எல்லையோடு நிற்க வேண்டும்' என்று ஒரு பெண்ணிடம் சொல்வதோ அல்லது ஆணிடம் சொல்வதோ அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதே.

25a.jpg

விழைவும் துன்புறுத்தலும்

Flirt எனப்படும் பாலியல் விழைவை வெளிப்படுத்துவது என்பது காதலின் தொடக்கம். எவ்வகைக் காதலிலும், ஒருவருக்கு நம்மீது ஈர்ப்பு உள்ளது என்பதை அவர் சொல்வதற்கு முன்பே அறிந்துகொள்வது அவரிடமிருந்து வந்து அந்த flirt வகைப் பேச்சுதான். உலகம் பூராவும் இதுவே யதார்த்தம்.

ஒருவருக்கு flirt செய்ய உரிமை உள்ளது. அது பிடிக்கவில்லையெனில் அதைச் சொல்லும் உரிமை மற்றவருக்கு உண்டு. மறுதலிக்கப்பட்டவர் எப்படியாவது விரும்பவைக்க முடியாதா என்கிற ஏக்கத்திலும் ஆசையிலும் மீண்டும் மீண்டும் தன் விருப்பத்தைத் தெரிவிக்கவே முயல்வார். அதைக் குற்றமெனக் கருதத் தேவையில்லை. ஆனால், மறுக்க மறுக்கத் தொடர்ந்து வலியுறுத்துவது துன்புறுத்தல் (harassment). அனைத்துப் பாலினத்துக்கும் இது பொருந்தும்.

பாலியல் விழைவைத் தெரிவிக்கும் உரிமை (proposal) எல்லோருக்கும் உண்டு. அதற்கும் harassmemtக்கும் வேறுபாடு உண்டு. அதெப்படி. என்னைப் பார்த்து அப்படிக் கேட்கலாம் எனக் கொதிப்பது தேவையில்லை. 'எனக்கு விருப்பமில்லை' என்பதைச் சொல்லி மறுப்பு தெரிவிக்க உரிமையுண்டு. அது தொந்தரவாக மாறும்போது harassment என்கிற வகைக்குள் வரும். அப்போது அது குற்றமாகிறது. ஆனால், பாலியல் விழைவுகளையும் வேட்கையைத் தெரிவிப்பதையும்கூடப் பாலியல் குற்றம் என்கிற வகைக்குள் சேர்த்துவிடுவது கவலையளிப்பதாகவே இருக்கிறது.

25b.jpg

பாடாவதியான முள்-சேலை தத்துவம்!

அதிலும் பாலியல் விழைவை ஒரு பெண் வெளிப்படுத்திவிட்டால் அவளுக்கு இங்கு என்ன பெயர் கிடைக்கும் என்பதையும் நாமறிவோம். பாலியல் தேவைக்காக அலைபவள் என்கிற பட்டியலில் வைத்துவிடும் இச்சமூகம். ஆனால், ஆணுக்கு அது ஒரு பெருமை என்பதையும் நாம் சேர்த்தே பார்க்க வேண்டியிருக்கிறது. இதை வைத்துத்தான் 'முள்ளு மேல சேலை பட்டாலும், சேலை மேல முள்ளு பட்டாலும் கிழிபடுவது சேலைதான்' என்கிற ‘அரிய’ தத்துவத்தை அறிவுரையாகச் சொல்கிறார்கள். இதில் ஆணென்றால் பெருமையும் இல்லை, பெண்ணென்றால் சிறுமையும் இல்லை. அது இயல்பு. மிக இயல்பு. மனித இனத்தின் இயல்பு என்கிற எண்ணம் ஆழ்மனங்களில் பதிந்தால் மட்டுமே இந்த முள்-சேலை தத்துவத்திலிருந்து பெண்களுக்கு விடுதலை கிடைக்கும்.

இந்தத் தத்துவத்தையேதான் ஆண்களோடு பெண்கள் பழகக் கூடாது என்று சொல்வோர் கூறுகிறார்கள். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்போரும் சொல்கிறார்கள். பெண்கள் முகநூலில் புழங்குவதற்குக் கட்டுப்பாடுகள் விதிப்போரும் சொல்கிறார்கள். தன்னைப் பெண்களின் காவலர்களாகக் காட்டிக்கொண்டு ஒட்டுமொத்த ஆண்களையும் குறை சொல்லி 'ஆண்களே இப்படித்தான்...பழகாதீர்கள் பெண்களே' என்போரும் இதைச் சொல்கிறார்கள் எனில் இவர்களுக்கு இடையே வேறுபாடு உள்ளதா என்ன?

(கட்டுரையாளர் கவின்மலர் எழுத்தாளர், ஊடகவியலாளர்

 

https://minnambalam.com/k/2019/03/17/25

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.