யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

பிரபாகரனை சந்தித்த மகேந்திரன்.. மறக்க முடியுமா..?

Recommended Posts

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்த மகேந்திரன்...மறக்க முடியுமா அந்த சிலிர்ப்பான பதிவை...

mahendran_1200x630xt.jpg

2002 ஓஸ்லோ அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை சந்தித்துத் திரும்பிய சிலிர்ப்பான  அனுபவத்தை ’குமுதம்’ இதழில் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மகேந்திரன். எப்போது எத்தனை முறை  படித்தாலும் திகட்டாத பதிவு இதோ...மகேந்திரனின் வார்த்தைகளில்...

திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின்இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான மூன்று மாதங்கள். அங்கேயிருந்து 1996என்ற அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவை எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது. 1996ன் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தபோதுதான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.

சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள். அதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம். சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார். தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.

திடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்பு குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது. சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா? என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன். நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன்.

அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது.

என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தார் தலைவர்.
உருகிக்கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி.
நாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோம்
என்றால், நீங்களும் ஏன் அப்படி இருக்கவேண்டும்?. உழைக்கிற நேரத்திற்குத் தகுதியாக நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்ற கரிசனத்தோடு ஆரம்பமானது பேச்சு. இரண்டு பேருமே ஐயா என்று விளித்துக் கொண்டோம். ராணுவம் எங்கள் நாட்டில் இளம்பெண்களைக் கற்பழித்தது. அப்படிக் கேவலப்படுத்தியதைவிட, தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது என்று வருத்தத்தோடு பேசினார். கன்னத்தில் முத்தமிட்டால் எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். பாரதிராஜா ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்க வேண்டியது அவசியம்தானா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமாவின் மீது அக்கறைப்பட்ட பேச்சை அப்படியே ஹாலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம்... யார் இவர்! இவரின் பார்வைகள் என்ன? இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி? என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா? என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார். படக்காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப்பேசினார். எனக்கு 200 ஹாலிவுட் சி.டிகளைப் பரிசாகத் தந்தார். அரைமணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத்திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித்தார் முள்ளும் மலரும் க்ளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத்தைப் பகிர்ந்தார்.

நாங்கள் விடைபெறுகிற அந்தத் தருணம் வந்தேவிட்டது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினார். கடைசியாகப் பேசிக்கொள்கிற நிமிடங்கள் உன்னதமாக அமைய, கூடியிருந்த பாதுகாப்புகளை விலகியிருக்கச் சொன்னார். நீங்கள் அடுத்த முறையும் வருவீர்கள். ஆனாலும் யுத்தம் அப்போதும் நடக்கும். இருந்தாலும் உங்களைச் சந்திப்பேன். என்றார். அவரது பேரன்பின் அடையாளமாகச் சிறிய தங்கப்பதக்கத்தைக் கொடுத்தார். அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிற விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டது. திரும்பி வண்டியில் உட்கார்ந்தபோது சீருடை, துப்பாக்கிகளோடு தலைவரின் அனுபவ சாந்தமும் மனசுக்குள் வந்தது.

கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தேன். என்னுடைய கைப்பையை வாங்கி, ஒரு சிங்கள அதிகாரி சோதனையிட்டார். அந்தப் பதக்கத்தைப் பார்த்த மறு விநாடி என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்து, உடனே கைப்பையை மூடி என்னை விமானத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார். விமானத்தில் வந்து உட்கார்ந்து யோசித்தபோது,

சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது.

"அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது."

-இயக்குனர் மகேந்திரன்

https://tamil.asianetnews.com/cinema/director-mehendran-s-meeting-with-ltte-leader-prabhakaran-ppbftb

டிஸ்கி:

உன்னத கலைஞன் .. கண்ணீர் அஞ்சலிகள்..😢

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது."

அருமையானதொரு சந்திப்பு.
உரிய நேரத்தில் இணைத்திருக்கிறீர்கள்.
இணைப்புக்கு நன்றி புரட்சி.

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

அற்புதக் கலைஞனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, standing, sunglasses and beard

தலைவர் பிரபாகரன் ஏன் இயக்குனர் மகேந்திரனைத் தேர்ந்தெடுத்தார்?

மகேந்திரனைத் தவிர வேறு சில தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்களும் வன்னி வந்து சென்ற போதும் தன் மக்களுக்கு சினிமா கற்றுக் கொடுக்கவும் தன்னுடன் சினிமா பற்றி உரையாடவும் ஏன் இயக்குனர் மகேந்திரனைத் தேர்ந்தெடுத்தார்? தமிழ்நாட்டில் தமிழ் உணர்வுள்ள, புலிகளை ஆதரிக்கின்ற இன்னும் பல இயக்குனர்கள் இருந்தும் நம் நாட்டு இயக்குனர் பாலுமகேந்திரா இருந்தும தலைவர் ஏன் இயக்குனர் மகேந்திரனை வன்னிக்கு வரவழைத்தார்?;

அறம்!

தலைவர் எப்பவும் அறத்தின்பால் நம்பிக்கை கொண்டவர். அவர் சினிமாவை நேசித்தார் என்பது உண்மைதான். ஆனால் அறத்தைப் பேணும் சினிமாக்களையே அவர் நேசித்தார். அத்தகைய படங்களை இயக்கும் இயக்குனர்களையே மதித்தார். அவர்களே தன் மக்களுக்கு உதாரண புருசர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும் என விரும்பினார். அவர் இயக்குனர் மகேந்திரனைத் தேர்ந்தெடுக்க காரணம் இந்த அறம்தான்

இங்கு நான் அறம் எனக் கூறும் போது அது விஷன், தொலைநோக்கு, அணுகுமுறை, கொள்கை என்பவற்றைக் குறிக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

மகேந்திரன் அவர்கள் வன்னியில் இருந்து திரும்பிய பின்னர் தலைவருடனான சந்திப்பின் போது தாங்கள் பேசிக் கொண்ட விடயங்களைச் சொல்லும் போது, 'உங்கள் முள்ளும் மலரும் படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது' எனத் தலைவர் தன்னிடம் சொன்னதாகச் சொல்கிறார். உண்மையில் அந்தக் கிளைமாக்ஸ் தலைவருக்குப் பிடிக்கக் காரணம் என்ன?

பலரும் அந்த கிளைமாக்சை அண்ணன் தங்கை சென்டிமென்ட்டுக்கூடாகப் பார்ப்பதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அது மக்கள் சக்தியின் பலத்தைக் காட்டும் ஒரு உன்னதமான, எளிமையான கிளைமாக்ஸ். அதனாற்தான் அது தலைவரின் மனதில் அவ்வளவு தூரம் பதிந்துள்ளது. பொதுவாக தமிழ்ச் சினிமாப் பண்பாட்டில் மக்கள் பார்வையாளர்களாக இருப்பார்கள். ஹீரோக்கள் அவர்களுக்காக சண்டையிட்டு வெல்வார்கள். மகேந்திரன் அவர்களுடைய படங்களில் அது எதிர்மாறாக இருக்கும். ஹீரோ மக்களால் தோற்கடிக்கப்படுவான் அல்லது திருத்தப்படுவான். முள்ளும் மலரும் படத்தில் மக்கள் வெல்கிறார்கள். ஹீரோ (ரஜனிகாந்) விழுந்தாலும் மீசையில் மண் முட்டாதவன் போல் நடந்து கொள்கிறான்.

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் ஹீரோயிசத்தை வளர்த்தவர் அல்ல. அவர் மக்கள் சக்தியை வெல்ல வைப்பார். உதிரிப்பூக்கள் படத்தில் மக்கள் சக்தியின் பலம் இன்னொரு பரிமாணத்தில் காட்டப்படுவதைப் பார்க்கலாம். அங்கு மக்கள் அதர்மத்துக்குத் தண்டனை வழங்குகிறார்கள்.

இயக்குனர் மகேந்திரன் அவர்களிடம் தலைவருக்குப் பிடித்த இன்னொரு அறம், பெண்கள் சார்ர்ந்து தனது படைப்புகளில் அவர் கடைப்பிடிக்கிற அணுகுமுறையாகும். இயக்குனர் மகேந்திரன் எப்பவும் பெண்களை பலமானவர்களாகவும் ஆண்களைவிடவும் நிதானமானவர்களாவும் நீதியானவர்களாகவும் சித்தரிப்பார். முள்ளும் மலரும் படத்தில் மங்கா பாத்திரத்தின் ஊடாக இதை அற்புதமாகச் செய்வார். உதிரிப்பூக்களில் வரும் 4 பெண் பாத்திரங்களுமே ஏதோ ஒரு வகையில் பெண்களை மேன்மைப் படுத்துபவர்களாகத்தான் இருக்கின்றனர்..

தமிழ்ச் சினிமாக்கள் பெண்களை கொச்சைப்படுத்துவதையும், அவர்களை சந்தைப் பண்டங்களாக பாவிப்பதையும் இன்னமும் நிறுத்தாத சூழலில் மகேந்திரன் 70களிலேயே பெண்களை மேன்மைப்படுத்துவதை அறமாக கொண்டிருந்தார். அதனாற்தான் தலைவர், 'தமிழ்நாட்டு சினிமாக்காரர்களிடம் சொல்லுங்கள் பெண்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுப்பதை நிறுத்தச் சொல்லி' என்னும் தன் கோரிக்கையை இயக்குனர் மகேந்திரனிடம் முன் வைத்தார், ஏனெனில் அதைச் சொல்லவதற்கு மிகவும் தகுதியானவர் இயக்குனர் மகேந்திரன்தான்.

தன் படைப்புகளில் மட்டுமின்றி தன் சொந்த வாழ்க்கையிலும் பெண்களை மதிப்பவர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர் இயக்குனர் மகேந்திரன் அவர்கள். அது மட்டுமின்றி 'ஒரு படைப்பாளிக்கு ஆரோக்கியமான உடலும் கூர்மையான மனமும் இருக்க வேண்டும்' எனச் சொல்பவர் மகேந்திரன் அவர்கள் அதன் வழி நடப்பவர். உண்மையில் தலைவர் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசுவதற்கும் ஒன்றாக உணவருந்துவதற்கும் இயக்குனர் மகேந்திரன் தகுதியுடையவரானதற்கு அவருடைய இத்தகைய ஒழுக்கங்கள் பிரதான காரணங்களாகும். அவ்வாறான ஒழுக்கம் அற்றவர்களுக்கு அருகில் அமர்வதற்கும் அவர்களுடன் நீண்ட நேரத்தைச் செலவழிப்பதற்கும் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு ஆளுமைக்கு உடலும் மனமும் கூசும் என்பதே யதார்த்தம்.

தன் படைப்புகளில் மட்டுமின்றி சினிமா தயாரிப்பு முறைமையிலும் அறத்தைக் கடைப்பிடித்தவர் இயக்குனர் மகேந்திரன். நிதர்சனம் தயாரிப்பில் உருவான ஆணிவேர் என்னும் படத்தை இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் ஆஸ்பத்திரியில் நோயாளர் வார்ட் இல் ஒரு காட்சி. அதற்காக புலிகளின் வைத்தியப் பிரிவை நாடியுள்ளனர். அவர்களும் காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக வலு மகிழ்ச்சியாக தங்கள் ஆஸ்ப்பத்திரியில் நோயாளர் தங்கியிருக்கும் ஒரு வார்ட்டை படப்பிடிப்புக்கு வழங்கும் ஏற்பாட்டில் வேகமாக இறங்கினர். இதனைக் கண்ட ஜோன் அவர்கள் உனடியாக அந்த ஏற்பாட்டைத் தடுத்து நிறுத்தினார். அவர் சொன்ன காரணம், 'நோயாளிகளை தொந்தரவு செய்வது சினிமா தர்மம் அல்ல. இப்படி நான் செய்து அதை அப்பா அறிந்தால் அவர் என்னைக் கொன்று போடுவார்'.

அதன் பின்னர் டம்மி வார்ட் ஒன்று அவர்களுக்கு தயார் செய்து கொடுக்கப்பட்டது. காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக மேற்கத்தைய படப்பிடிப்பாளர்கள் கூட இத்தகையை தவறுகளை எங்கள் நாடுகளில் வந்து செய்வதை நான் கண்டுள்ளேன். (தங்கள் நாடுகளில் செய்ய சட்டம் அனுமதிக்காது). இந்நிலையில் ஒரு தமிழ்நாட்டு இயக்குனரிடம் இத்தகையை அறம் இருப்பது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

A Film By என்னும் தங்கள் பெயருக்கு முன்னால் எழுதும் பழக்கம் இன்னமும் தொடர்கிறது. A Film By என்று தம் பெயரைப் போடுவதில் அப்படியொரு மோகம் பலருக்கு. உண்மையில் அதன் அர்த்தம் 'இந்தப் படத்தின் சொந்தக்காரன் இதன் இயக்குனராகிய நான் மட்டுமே' என்பதாகும். பாலுமகேந்திரா கூட இந்த A Film By என்னும் போடும் பழக்கத்தை கடைசிவரை கைவிடவில்லை என்பதும் எனக்கு ஆச்சரியம்தான். தன்னுடைய படங்களின் அதிகமான பணிகளை அவரே செய்வதால் அவர் அப்படிப் போடுவதற்குத் தகுதியானவராக இருக்கக் கூடும்.

ஆனால் மகேந்திரன் அவர்கள் 70களிலேயே அந்த செற்பிரயோகத்தை ஒரு போதும் பயன்படுத்தவில்லை. அவர் அதை வெறுத்தார். அத்தகையை உரிமை கோரலுக்கு எதிராகவும் இருந்தார். அதற்கு அவர் சொல்லும் விளக்கம், "என் படங்களில் 'A Film by Mahendran' என்று நான் போடுவதில்லை. நல்ல ஒளிப்பதிவாளர், நல்ல நடிகர்கள், நல்ல படத்தொகுப்பாளர் போன்றோர் அமைந்தால்தான் கதைக்கு ஏற்ற சரியான மனநிலையை ஏற்படுத்திப் பார்வையாளர்களைக் கதைக்குள் இழுக்க முடியும். இத்தனை பேர் உழைப்பும் இருந்து அந்தப் படத்தை எப்படி நான் என்னுடைய படமாக மட்டும் சொந்தம் கொண்டாடிக்கொள்ள முடியும்?" .......

கட்டுரையை முழுமையாக வாசிக்க "அரங்கம்" மின்னிதழைப் படியுங்கள் 
http://www.arangamnews.com/…/58-Arangam-News-E-Paper-05-04-…

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

May 18 Banner