Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின்

navalar4.jpg

சைவ வினா விடை

முதல் புத்தகம்

1. கடவுள் இயல்

1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.

3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.

4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்?

தமது சத்தியைக் கொண்டு செய்வார்.

5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது?

வல்லமை.

6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?

உமாதேவியார்.

7. சிவபெருமானுடைய திருகுமாரர்கள் யாவர்?

விநாயகக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.

8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டு உமாதேவியாரோடும் எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது?

திருகைலாச மலை

9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே நின்று அருள் செய்வார்?

சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும், சைவாசாரியர் இடத்திலும், சிவனடியார் இடத்திலும் நின்று அருள் செய்வார்.

2. புண்ணிய பாவ இயல்

1. சிவபெருமான் ஆன்மாகளுக்காக அருளிச் செய்த முதனூல்கள் எவை?

வேதம், சிவாகமம் இரண்டுமாம்.

2. வேத சிவாகமங்களில் விதிக்கப்பட்டவைகள் எவைகள்?

புண்ணியங்கள்.

3. புண்ணியங்கள் ஆவன யாவை?

கடவுளை வழிபடுதல், தாய் தகப்பன், உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்ந்நன்றி அறிதல் முதலானவைகள்.

4. புண்ணியங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

மேல் உலகங்களாகிய புண்ணிய லோகங்களிலே போய், இன்பத்தை அனுபவிப்பர்.

5. வேத சிவாகமங்களிலே விலக்கப்பட்டவைகள் எவைகள்?

பாவங்கள்.

6. பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.

7. பாவங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

நரகங்களிலே விழுந்து, துன்பத்தை அநுபவிப்பர்.

Link to post
Share on other sites
 • Replies 479
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெய்கண்ட சாத்திரங்கள் 14

1. சிவஞான போதம்

2. சிவஞான சித்தியார்

3. இருபா இருப·து

4. திருவுந்தியார்

5. திருக்களிற்றுப்படியார்

6. உண்மை விளக்கம்

7. சிவப்பிரகாசம்

8. திருவருட்பயன்

9. வினா வெண்பா

10. போற்றிப்ப·றொடை

11. கொடிக்கவி

12. நெஞ்சுவிடுதூது

13. உண்மை நெறி விளக்கம்

14. சங்கற்ப நிராகரணம்

Link to post
Share on other sites

ஒரே ஒரு கேள்வியுடன் என் பணியை தொடங்குகிறேன்!!.

யாழ்ப்பாண பட்டினத்தில் சந்திக்கு சந்தி ஒரு கோவில், மூலைக்கு மூலை பிள்ளையார் கோவில், இப்படியிருக்கு..இவை காலம் காலமாக எம் மூதாதையரினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு கலாச்சாரம். அது சைவத்துடன் இணைந்து நிற்பதால் அதை சமய கலாச்சாரமாக கருத்தப்பட்டு வருடம் வருடமாக இன்றும் மக்களால் நடைமுரைப்படுத்தப்படுகிறது.

இருக்க இப்படி வாழும் மக்களுக்கு தான் சோதனை அதிகமாக இருக்கிறதே அது ஏன்?

இந்தியாவினை எடுத்தால் கோவில்கள் அதிகம் ஆனாலும் பஞ்சமும் அதிகம். அது ஏன்?

அப்ப நமது சிறீல சிறி ஆறுமுகநாவலர் சுவாமிகள் எதைத்தான் சொல்ல வந்தார். எதை எமக்குச்சொல்லித்தந்தார்?

எதற்காக அவர் நல்லூர் கோவில் வாசலை மிதிக்காது ஒரு காலம் வாழ்ந்து வந்தார்?

அவர் காட்டிய பாதையில் இன்று நாம் யாராவது நடக்கிறோமா?

ஏன் ஏன் ஏன்??? அங்கே தான் விடை பதுங்கியிருக்கிறது. கண்டு பிடிப்பதுதான் எம் வேலை!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எவனால் நடக்கும் உலகம்?"

--------------------------

(சயிலாதி)

இத்தலைப்பு ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் திருவாக்கு

சந்திர மண்டலத்தில் இறங்குவதர்கன முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகம் இலெளகிக முன்னேற்றமே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்குகிறது. எவனால் நடக்கும் உலகம்? அவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள உறவு யாது? அவனை அறிந்தால் விளையும் நலன் யாது? என்ற வினாக்கள் எல்லாம் இன்றைய "நாகரிக" மாந்தரின் கவனத்துக்கு எட்டாதனவாகும். அவர்கள் தொழுது வணங்கும் ஆலயங்கள், தொழிற்சாலைகளும், ஆய்வுக் கூடங்களுமே. அவர்கள் பின்பற்றும் மதமோ இலெளகிக முன்னேற்றத்தைக்குறிக்கோளாக

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சைவ சமய உண்மைகள்

திருவாவடுதுறை ஆதீன வித்வான்

சைவத்திரு. வி.சிதம்பரராமலிங்க பிள்ளை

கடவுளும், உயிர்களும், உயிரறிவை மறைத்து நிற்கும் தடைப்பொருள்களும் என்றும் உள்ளன (கடவுள் - பதி, உயிர்கள் - பசு, தடைப்பொருள் - பாசம்)

கடவுள் சிவபெருமான் ஒருவரே. அவர் எல்லா அறிவும் எல்லா முதன்மையும் எல்லா அனுக்கிரகமும் இயல்பாகவுடைய அதிபரிசுத்தர்.

உயிர்கள் எண்ணிறந்த பல. அவ்வுயிர்கள் பலவேறு வகைப்பட்ட சிற்றறிவும் பரதந்திரமும் கடவுள் அனுக்கிரகமின்றி அமையாமையும் இயல்பாகவுடையனவாய்ச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்பன.

உயிரறிவை மறைத்து நிற்கும் தடைப்பொருள்கள் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றுமாம். அவற்றுள் ஆணவம் நெல்லில் உமி போன்றும் செம்பிற் களிம்புபோன்றும் உயிரின் குற்றமாய் உடன்தோன்றி நிற்பது. இருள் ஒன்றேயாயினும் பல கண்களையும் மறைத்து நிற்பதுபோல ஆணவம் ஒன்றேயாயினும் பல கண்களையும் மறைத்து நிற்பதுபோல ஆணவம் ஒன்றேயாயினும் பல உயிர்களின் அறிவையும் மறைத்து நிற்கும். கன்மம், உயிர்கள் தானென்னும் முனைப்போடு மனம் வாக்குக் காயமென்னும் மூன்றாலும் செய்யுந் தொழில். மாயை ஆடையிற் படிந்த அழுக்கை நீக்குதற்கு ஆடையிற் செறிக்கப்படும் உவர் போல, உயிரிற் படிந்த ஆணவத்தடை நீக்குதற்கு உயிரிற் செறிக்கப்பட்டது.

ரு

சிவபெருமான் அநாதியே ஆணவத்திலே அழுத்திக் கிடந்த உயிர்கள்மேல் வைத்த பெருங்கருணையாலே சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகமென்னும் ஐந்து தொழில்களையும் செய்தருளுவர். அவற்றுள் சிருஷ்டியென்பது உயிர்கட்கு அவற்றின் கர்மத்துக்கு ஏற்ப மாயையிலிருந்து சரீரம் உலகம் முதலியவற்றை உண்டாக்கிக் கொடுத்தல். திதி யென்பது அங்ஙனம் உண்டாக்கப்பட்ட சரீரம் உலகம் முதலியவற்றைப் பாதுகாத்தல். சங்காரமென்பது அச்சரீரம் உலகம் முதலியவற்றை மாயையின் ஒடுக்குதல். திரோபவமென்பது உயிர்கள் தாம் செய்த வினைப் பயன்களை அனுபவிக்கும்படி செய்தல். இது திதி நிகழும்போது நடைபெறுவது அனுக்கிரகமென்பது உயிர்களுக்கு ஆணவம் கன்மம் மாயை யென்னும் மூன்று தடைகளையும் நீக்கிப் பேரின்பங் கொடுத்தல். இது சங்காரம் நிகழும்போது நடைபெறுவது.

சா

உயிர்கள் தமக்குக் கிடைத்த சரீரத்தின் உதவியால் இவ்வுலகத்திலே நல்வினை தீவினைகளைச் செய்யும். இவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை முறையே சுவர்க்கத்திலும் நரகத்திலும் அனுபவிக்கும். பின்னர் மறுபடியும் அவை (எஞ்சிய) கர்மத்திற்கேற்ப இவ்வுலகிற் பல பிறவிகளிற் பிறக்கும். இங்ஙனம் உயிர்கள் மாறிமாறிப் பிறந்தும் இறந்தும் வரும். உயிர்களுக்குக் கிடைக்கும் பிறவிகள் பலவற்றுள்ளும் மக்கட் பிறப்பே முத்தியின்பம் பெறுதற்குக் கருவியாதலால் மிகச்சிறந்தது.

மனிதப் பிறப்புப் பெற்றவர்கள் முன் பல பிறவிகளை யெய்தினமை காரணமாகச் சிறிது சிறிது அறிவு விளக்கம் பெற்றுப் படிப்படியாகப் பல வேறு வகைப்பட்ட மதங்களிலே நின்று அவ்வநூல்களின் விதித்தபடி ஒழுகுவர்: அவ்வாறு ஒழுகிய புண்ணியவிசேடத்தால் மேலான சைவசமயத்திற்புகுந்து வேத சிவாகமங்களில் விதித்தபடி ஒழுகுவர்.

வேத சிவாகமங்களிலே விதிக்கப்பட்ட சாதனங்கள் சரியை கிரியை யோகம் ஞானமென நான்காம். அவற்றுள் சரியையாவது ஒழுக்க நெறியிலே நின்று சிவபெருமானைச் சரீரத்தால் வழிபடுதல்: கிரியையாவது ஒழுக்க நெறியிலே நின்று சிவபெருமானைச் சரீரத்தாலும் மனத்தாலும் வழிபடுதல்: யோகமாவது ஒழுக்க நெறியிலே நின்று சிவபெருமானை மனத்தால் வழிபடுதல்: ஞானமாவது சிவபெருமானை அறிவால் வழிபடுதல்.

சரீயை கிரியை யோக நிலைகளிலே நின்று சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்தலே சிவபுண்ணியமாம். இச்சிவ புண்ணியத்தால் யான் இன்ன நல்வினைசெய்தேன் எனக்கு இன்னார் தீவினை செய்தார் என்னும் நினைப்பு நீங்குதலாகிய இருவினைச் சமபுத்தியுண்டாகும். இச்சமபுத்தியால் அகங்காரம் கெட ஆணவ அழுக்கு நீங்கும் பருவம் வரும். அப்பருவத்தில் சிவபெருமானுடைய திருவருள் ஆன்மாவினிடம் விசேஷமாகப் பதியும். அச்சமயம் சிவபெருமானே குருவாக எழுந்தருளி வந்து ஞானோபதேசம் செய்வர்.

அவ்வாறு ஞானோபதேசம் பெற்ற உயிர் அவ்வுபதேச நெறியை உறுதியாகக்கொண்டு சிவபெருமானைத் தன்னுள்ளே சிவோகம்பாவனை செய்து நாடும். அங்ஙனம் நாடிய காலத்து மாயா காரியமாகிய உலகப் பொருள் முதலியவற்றின் நிலையாமை கண்டு, உயிர் அவற்றினின்று நீங்கவே, அவ்வுயிர்க்குச் சிவபெருமானுடைய ஞானசொரூபம் விளங்கும். இவ்வித ஞான சொரூப விளக்கம் நிலைபெறுதற்கு வேண்டப்படுவன சிவாலயத்தையும் சிவனடியார்களையும் சிவனெனவே கண்டு வழிபடுதலும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை விதிப்படி உச்சரித்தலுமாம்.

யக

ஞானசொரூப விளக்கம் நிலைபெற்ற உயிர், முன் பாசத்தோடு கட்டுண்ட காலத்துச் சிவபெருமானை வேறு காணாது நின்ற நிலைபோல இப்பொழுது தன்னை வேறு காணாது சிவபெருமானோடு ஒற்றுமைப்பட்டு அவரருளாலல்லது ஒன்றையும் செய்யாது நிற்கும். அவ்வாறு நிற்கும் உயிர் சிவபெருமான் தன்னோடு அநாதியே இரண்டறக் கலந்து நின்று கருணையால் உபகரித்து வரும் உரிமையை நோக்கி நோக்கி, அப்பெருமானிடத்துப் பேரன்பு முறுகி வளரப்பெறும். இதுவே ஞானத்தின் முடிவான நிலை.

யஉ

இவ்வித ஞானநிலை அடைந்தவர்களே சிவஞானிகள். அவர்களிடம் ஆணவம் வறுத்த வித்துப்போற் பயனற்றுக் கிடக்கும். ஆணவம் பயனற்றுக் கிடப்பவே தானென்னும் முனைப்பில்லாமையால் கர்மம் இல்லை. இவை இல்லாமையால் மாயையும் அவர்களுக்கு வேண்டப்படுவதில்லை. ஆகவே சிவஞானிகள் ஆணவம் கர்மம் மாயை யென்னும் மூன்று தடைகளும் அவற்றின் வாசனையும் நீங்கி, அறிவு முழுவதும் விளங்கப்பெற்று, எல்லாம் சிவமயமாகக் கண்டு, சிவபெருமானாற் கொடுத்தருளப் பெறும் பேரானந்தத்திலே அழுந்தி ஆனந்தமயமாயிருப்பார்கள். இதுவே மோக்ஷ நிலை.

நன்றி கணேசன்தமிழ்மன்றம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

3. விபூதி இயல்

1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?

சைவசமயம்.

2. சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?

விபூதி.

3. விபூதி ஆவது யாது?

பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு.

4. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?

வெள்ளை நிற விபூதி.

5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?

பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.

6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.

7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?

நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.

8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?

சிந்திய விபூதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

9. நடந்து கொண்டாயினும், கிடந்துகொண்டாயினும் விபூதி தரிக்கலாமா?

தரிக்கல் ஆகாது.

10. எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்?

நித்திரை செய்யப் புகும் போதும், நித்திரை விட்டெழுந்த உடனும், தந்த சுத்தம் செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ் செய்த உடனும், போசனத்துக்குப் போம் போதும், போசனஞ் செய்த பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.

11. ஆசாரியர் ஆயினும், சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கல் வேண்டும்?

மூன்று தரம் ஆயினும், ஐந்து தரம் ஆயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கல் வேண்டும்.

12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்ட பின் யாது செய்தல் வேண்டும்?

முன் போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.

13. சுவாமி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?

முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?

உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.

( உத்தூளனம் = நீர் கலவாது, திரிபுண்டரம் =மூன்று குறி)

15. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.

இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிர்ண்டு தானங் கொள்வதும் உண்டு.

16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும், அதிற் கூடினாலுங் குறைந்தாலுங் குற்றமாம்.

17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

(அங்குலம் = 2.5 செ.மீ)

18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.

ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெய்கண்டாச்சிரமம்

T.R.திருவாய் மொழிப்பெருமாள் பிள்ளை B.A.

Retired Tahsildar

__________

(தோற்றுவாய்)

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலிச்சீமை மிகப் பழைமையானது. கடல் வற்றினும் தான்வற்றாமல் தன்னுடைய இருகரைகளிலுமுள்ள பொன்விளையும் நெல்வயல்களையும், சோலைகளையும் நெல்வயல்களையும், சோலைகளையும் வளம் பெறச் செய்தும், பல தலங்களையும் புனிதமாக்கியும், தன்னிடத்தில் நீராடுபவர்களுடைய புற அழுக்கையும், அக அழுக்கையும் போக்கவல்ல ஆற்றலுடையதாயும் திகழும் 'தண்பொருளை' என்னும் தாமிரபரணி இச்சீமையை அலங்கரித்து அழகு பெறச் செய்கிறது. அது உற்பத்தியாகும் இடம் பொதிய மலை. இங்கு தமிழ் முதற்குரவரான அகத்திய முனிவர் இன்னும் தமிழாராய்ந்து கொண்டிருப்பதாகப் பெரியோர்சொல்லுவர். பொதிய மலையினின்றும் இறங்கி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி. முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில், பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது. இந்த நீர்வீழ்ச்சிக்குப் பக்கத்தில் ரமணீயமாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணிக் கரையில் ஒரு சந்தனச்சோலை; வானளாவிய சந்தன மரங்களினின்றும் வரும் நறு மணம்; சூரிய வெப்பம் என்பதே தெரியாத குளுமை; வண்டுகளின் ரீங்காரம்; தென்றல் காற்றின் புளகாங்கிதம். இந்த சூழ்நிலையிலே சோலையின் மத்தியில் அமைந்திருக்கிறது நமது மெய்கண்டாச்சிரமம்.

தென்னங்கீற்றினால் வேயப்பட்ட அந்த ஆச்சிரமத்தில் பெரியவர் ஒருவர் வசிக்கிறார். சற்று உயரமான மெல்லிய மேனியையுடையவர். பசும்பொன்னை யொத்த நிறம். திரிபுண்டரமாக வெண்ணீறு அணிந்த நெற்றியும் கண்டவர்களை வசப்படுத்தும் ஒளி பொருந்திய கண்களும் கருணை பொழிகின்ற முகமும் திருநீறு அணிந்த மேனியும் உருத்திராக்கம் அணிந்த மார்பும் வெண்மையான ஆடையும் உடையவர். ஓடும் பொன்னும். ஒக்கநோக்கும் பண்பையுடையவர். எப்பொழுதும் இறைவன் திருவடியையே சிந்தித்துக் கொண்டும். தன்னிடத்து வரும் மாணாக்கர்களுக்கு நல்லுபதேசம் செய்தும்வருபவர். இவரை ஆத்மநாததேசிகர் என்று சொல்லுகிறார்கள். இப்பொழுது ஆச்சிரமத்தில் நான்கு மாணாக்கர்கள் தங்கியிருந்து அவரிடத்தில் உபதேசம் கேட்டு வருகிறார்கள். மாணாக்கரின் பெயர் மந்ததரன், மந்தன், தீவிரன், தீவிர்தரன், ஆச்சிரமத்துக்கு வெளியில் உள்ள அரசமரத்தடியில் இருந்து தேசிகர் மாணாக்கர்களுக்கு உபதேசம் செய்கிறார். நாமும் சற்று தூரத்திலிருந்து அவர் என்ன சொல்லுகிறார் என்பதைக்கேட்டு நம்முடைய அறிவாகிய கொள்கலம் எவ்வளவு கொள்கிறதோ அதை அப்போதைக் கப்போது நேயர்களுக்குத் தருகிறோம். நேயர்கள் அவற்றைச் சிந்தனை செய்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறோம்.

20020824_190555.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆத்மநாத தேசிகர்

சொற்பொழிவு

உலகத்திலுள்ள ஜீவராசிகள் கோடானுகோடி கணக்கில் அடங்கா அவை தாவரம் சங்கமம் என் இருவகைப்படும். தாவரம் என்பது புல்பூண்டு மரம் செடி கொடி முதலியவை. சங்கமம் என்பவை எறும்பு முதல் யானை முடியவுள்ள விலங்குகள் பறவைகள், நீர்வாழ்வன, ஊர்வன முதலியவை. தாவரம் என்றால் நிலைத்து நிற்பன. சங்கமம் என்றால் அசைவது என்று பொருள். உலகத்திலுள்ள உயிர்களை நால்வகைத் தோற்றம். ஏழுவகைப்பிறப்பு என்று நம்முடைய முன்னோர்கள் வகைப்படுத்தி யிருக்கிறார்கள். நால்வகைத் தோற்றங்களாவன

1. அண்டஜம்: அதாவது முட்டையில் தோன்றுவன - பறவைகள், மீன்கள், பாம்புகள், முதலியன

2. சுவேதஜம்: அதாவது வேர்வையில் தோன்றுவன பேன், கிருமி முதலியன

3. உற்பீஜம்: அதாவது விதை, வேர், கிழங்கு இவற்றில் தோன்றுவன, மரம், செடி, கொடி முதலியன

4. சராயுஜம்: அதாவது கருப்பையில் தோன்றுவன விலங்கு, மனிதர், முதலியவை.

எழுவகைப்பிறப்புகளாவன:

தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்ந்து செல்வன, நீரில் வாழ்வன, தாவரம், (மரம், செடி, கொடிகள்) உலகத்திலுள்ள உயிர்ப் படைப்பை யெல்லாம் எண்பத்தி நான்கு லக்ஷம்யோனிபேதம் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள்.

உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் விரும்புவது இன்பம். இன்பத்தை அடைவதற்கும், துன்பம் வராமல் தடுப்பதற்குமே அவை முயலுகின்றன. தினந்தோறும் அவை அந்த நோக்கத்துடனேயே தொழில் செய்கின்ற்ன. இறை தேடுதல், உண்ணுதல், உறங்குதல், இனத்தைப் பெருக்குதல், இத்துடன் அவற்றின் தொழில் அமையும். ஓரறிவுயிர் முதல் ஐயறிவுயிர் வரை தத்தம் அறிவுக்கேற்ப அவற்றின் தொழிலில் வித்தியாசம் இருப்பினும் மேலே சொன்ன மூன்று தொழிலில் அவற்றின் முயற்சி அடங்கும். ஆனால் மனிதன் இவற்றோடு அமையாமல் இது நல்லது இது கெட்டது; இவற்றைச்செய்யலாம், இவற்றைச் செய்யக்கூடாது, இன்னசெய்தால் இன்ன விளையும் என்று ஆராய்ந்து அறியக்கூடிய பகுத்தறிவாகிய ஆறாவது அறிவும் உடையவன். இப்பகுத்தறிவு இருத்தலினால் தான் மனிதப்பிறவி மற்ற எல்லாப் பிறவிகளைக் காட்டிலும் மேலானது. அரிது அரிது மாநுடராய்ப் பிறத்தல் என்பது மேலோர் வாக்கு. அப்பகுத்தறிவும் மனிதனிடத்தில் ஒரே மாதிரியாக இல்லாமல் மிக மிக மந்தமான நிலையிலிருந்து மிக மிகக் கூர்மையான நிலை வரை பல திறப்பட்டனவாக இருக்கிறது. அதற்கேற்ப மனிதர்களின் எண்ணங்களும், பேச்சுக்களும், செயல்களும் மாறுபடுகின்றன.

மாணவர்களே உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகப் படைப்பு

மந்ததரன்: சுவாமி ஓரறிவுடைய உயிர்முதல் ஆறறிவுடைய உயிர்வரை யாவை என்று விளக்க வேண்டுகிறேன்.

தேசிகர்: புல் பூண்டு மரம் செடி கொடிகள், பரிசத்தைமட்டும் உடைய ஓரறிவுள்ள உயிர்கள். அதாவது அவை தம்மைத்தொட்டால் உணர்ந்துகொள்ளும் அறிவை மாத்திரம் உடையன. இப்பி (சிப்பி) சங்கு முதலியவை பரிசத்துடன் இரதத்தையும், அதாவது உணவை உண்ணும் அறிவையும் உடைய ஈரறிவுடையவை. எறும்பு கறையான் முதலியவை. இவ்விரண்டு அறிவோடு கந்தம் என்னும் வாசனை யறிவையும் உடைய மூவறிவுடையவை. வண்டு, குளவி, தும்பி முதலியவை. இம் மூன்று அறிவுடன் உருவம் அதாவது பார்க்கும் அறிவையும் உடைய நாலறிவுடையவை. பறவைகளும் விலங்குகளும் இந்நான்கு அறிவுடன் சப்தம் அல்லது கேட்கும் அறிவும் உடைய ஐயறிவுடையவை. மனிதர்களும் தேவர்களும் இவ்வைந்து அறிவுடன் சித்தத்தால் பகுத்தறியும் ஆறாவது அறிவையும் உடையவர்கள்.

மந்தன்: சுவாமி எழுவகைப்பிறப்பில் தேவர் என்ற ஓரினம் சொன்னீர்களே அவர்கள் எங்கே உள்ளவர்கள் அவர்களைப்பற்றித் தெரியவில்லையே.

தேசிகர்: தேவர்கள் என்ற ஓரினம் உண்டு. மேலுலகத்தில் உள்ளவர்கள். மனிதர்களை விட எத்தனையோ மடங்கு நீண்ட வாழ்வும் இன்பம் அனுபவிப்பும் உடையவர்கள். உலகத்தில் செய்த தான தர்மங்களின் பயனாக மேலுகத்தையடைபவர்கள். மனிதர்களுக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அப்படி நாட்கள் முந்நூற்றறுபது கொண்டது தேவர்களுக்கு ஒரு வருஷம். அப்படி வருடங்கள் பல தேவர்கள் வாழ்நாள். அவர்களை நம்மால் பார்க்க முடியாது. தேவர் இனம் ஒன்று உண்டு என்பதை மிகப் பழைமையான தமிழ் நூலாகிய திருக்குறளில் "அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங்கரி" என்று திருவள்ளுவநாயனார் கூறியிருப்பதால் ஊகித்து அறியலாம். "வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்" என்ற திருவாசக வாக்காலும்" அறியக்கிடக்கின்றது.

தீவிரன்: தேவர்களுக்கு ஆயிரக்கணக்கான வருடம் வாழ்நாள் எப்படியிருக்க முடியும், நம்பமுடியவில்லையே.

தேசிகர்: உன் அறிவுக்கு அப்படித்தான் தோன்றும். ஒரு உதாரணம் சொல்லுகிறேன் கேள். பெரு மழை பெய்து நின்றவுடன் ஈசல்கள் தோன்றி சூரிய வெப்பம் பட்டவுடனே அவை அனைத்தும் மடிகின்றன. அவற்றின் வாழ்நாள் சில மணி நேரம் தான். அந்த வாழ்வை மனிதனுடைய நூறு வருட வாழ் நாளுடன் ஒப்பிட்டுப் பார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

4. சிவ மூலமந்திர இயல்

1. சைவசமயிகள் நியமமாகக் செபிக்க வேண்டிய சிவமூலமந்திரம் யாது?

ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

5. நித்திய கரும இயல்

1. நாடோறும் நியமமாக எந்த நேரத்தில் நித்திரை விட்டெழுதல் வேண்டும்?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே நித்திரை விட்டெழுதல் வேண்டும்.

2. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

விபூதி தரித்துச் சிவபெருமானைத் தோத்திரஞ் செய்து கொண்டு பாடங்களைப் படித்தல் வேண்டும்.

மலசமோசனம்

3. அதற்குப் பின் யாது செய்யத் தக்கது?

மலசல மோசனஞ் செய்யத்தக்கது.

4. எவ்விடத்தில் மலசலங் கழித்தல் வேண்டும்?

திருக்கோயிலுக்குத் தூரமாய் உள்ள தனி இடத்தில் மலசலங் கழித்தல் வேண்டும்.

5. எவ்விடத்தில் மலசலங் கழித்தல் ஆகாது?

வழியிலும், குழியிலும், நீர்நிலைகளிலும், நீர்க்கரையிலும், கோமயம் உள்ள இடத்திலும், சுடுகாட்டிலும், பூந்தோட்டத்திலும், மரநிழலிலும், உழுத நிலத்திலும், அறுகம் பூமியிலும், பசு மந்தை நிற்கும் இடத்திலும், புற்றிலும், அருவி பாயும் இடத்திலும், மலையிலும், மலசலங் கழித்தல் ஆகாது.

6. எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்?

பகலிலே வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்.

7. எப்படி இருந்து மலசலங் க்ழித்தல் வேண்டும்?

தலையயுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சௌசம்

8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துடன் ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு சௌசஞ் செய்தல் வேண்டும்.

9. சௌசம் எப்படி செய்தல் வேண்டும்?

மண்ணுஞ் சலமும் கொண்டு, இடக்கையினாலே குறியில் ஒரு தரமும், குதத்தில் ஐந்து தரதிற்கு மேலும், இடக்கையை இடையிடயே ஒருதரமும், பின்னும் இடக்கையை பத்துத் தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து கால்களை முழங்கால் வரையும், கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரங் கழுவுதல் வேண்டும்.

10.இப்படி செய்தபின் யாது செய்தல் வேண்டும்?

அவ்விடத்தை விட்டு வேறொரு துறையிலே போய், வாயையும், கண்களையும், நாசியையும், காதுகளையும், கை கால்களில் உள்ள நகங்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத் தரஞ் சலம் வாயிற்கொண்டு, இடப்புறத்திலே கொப்பளித்தல் வேண்டும்.

11.வாய் கொப்ப்ளித்த பின் யாது செய்தல் வேண்டும்?

தலைக்கட்டு இல்லாமல் மூன்று முறை ஆசமனஞ் செய்தல் வேண்டும்.

12.ஆசமனம் எப்படி செய்தல் வேண்டும்?

வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டு, பெருவிரல் அடியில் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.

13.சௌசத்துக்குச் சமீபத்தில் சலம் இல்லையானால் யாது செய்தல் வேண்டும்?

பாத்திரத்திலே சலம் கொண்டு, ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசலங் கழித்து சௌசஞ் செய்து விட்டு பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலங்கொண்டு, வாய் கொப்ப்ளித்துக் கால் கழுவுதல் வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாவலரே உங்கள் சைவப் பணி சிறப்பாக உள்ளது உங்கள சைவத்தொண்டு மென்மேலும் பரவ என் வாழ்த்துக்கள்.

ஏன்ப்பா யாரும் இங்கே இல்லையா............... சைவத்தொண்டு செய்யும் நாவலரை ஊக்குவியுங்கள் உஙகள் வாழ்த்துக்களாள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா ! தாங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிகர்: எவ்வளவு வித்தியாசமிருக்கின்றது. அது போலவே தான் மனிதனுடைய வாழ்வையும் தேவர்களுடைய வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எவ்வளவு வித்தியாசம் என்பது ஒருவாறு விளங்கும்.

தீவிரதரன்: விலங்கு பறவை இவற்றிற்கு பகுத்தறிவு கிடையாது என்று சொன்னீர்களே சில பறவைகளும் விலங்குகளும் அருஞ் செயல்கள் செய்ததாகவும் சிவபூசை செய்ததாகவும் சொல்லுகிறார்களே அது எப்படி.

தேசிகர்: நன்று கேட்டாய். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பகுத்தறிவு இல்லை யென்பது உண்மைதான். அவற்றிற் சில முற் பிறவிகளில் பெறுதற்கரிய மனிதப் பிறவியை எடுத்தும் மிகுந்த அறிவைப் பெற்றும் தாம் செய்த பாவத்தின் காரணமாக மறுபடியும் விலங்குகளாகவும் பறவைகளாகவும் பிறவி எடுக்க நேர்ந்து ஆனால் முன் செய்த புண்ணிய வசத்தினால் சிவனைப் பூசித்து பேறு பெற்றிருக்கின்றன. அவை, யானை, குரங்கு, எறும்பு, கழுகு, சிலந்தி முதலியவை. இவை விதி விலக்குகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சௌசம் என்றால் என்ன எனக்கு புரியவில்லை?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்த சுத்தி

14.சௌசத்துக்குப் பின் யாது செய்யத்தக்கது?

தந்தசுத்தி செய்யத் தக்கது.

15.எதனாலே தந்த சுத்தி செய்தல் வேண்டும்?

சலத்தினாலே கழுவப் பெற்ற பற்கொம்பினாலேனும், இலையினாலுலேனுந் தந்த சுத்தி செய்தல் வேண்டும்.

16.எந்தத் திக்கு முகமாக இருந்து தந்த சுத்தி செய்தல் வேண்டும்?

கிழக்கு முக்மாகவேனும், வடக்கு முகமாகவேனும், இருந்து தந்த சுத்தி செய்தல் வேண்டும்.

17.தந்த சுத்தி எப்படி செய்தல் வேண்டும்?

பல்லின் புறத்தேயும் உள்ளேயும் செவ்வையாகச் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப் பிளந்து, அவற்றினாலே நாக்கை வழித்து இடப்புறத்திலே போட்டு விட்டு, சலம் வாயிற் கொண்டு பன்னிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவுதல் வேண்டும்.

18.நின்று கொண்டாயினும் இருந்து கொண்டாயினும் தந்த சுத்தி பண்ணலாமா?

பண்ணல் ஆகாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாவலரே நன்றி

தொடர்ந்து உங்கள் சைவப்பணியை ஆற்றுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சௌசம் என்றால் என்ன எனக்கு புரியவில்லை?

சுத்தம் செய்தல் என பொருள்படும் என நினைக்கிறேன். :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலரின் பணியைப் பாராட்டுதல் தகும்..! தொடர்ந்து உங்கள் பணி தொடரட்டும். ஆன்மீகமும் ஆன்மாவின் நிலையும் அறியாததாலே மனிதர்கள் மனிதச் செயற்கைகளில் மயங்கி மன அடக்கம் இன்றி இச்சைவழியில் ஆசைக்கு அடிமைப்பட்டு வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்..! குறிப்பாக இளைய சமூகம்..! :rolleyes: :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சைவ வினா விடையில் இடம் பெற்றுள்ள சில சொற்களுக்கு இப்போது உள்ள இளைய தலைமுறைகளுக்கு அர்த்தம் தெரியவதில்லை, ஏனென்றால் சில சொற்கள் வழக்கத்தில் இல்லாததினால் அதனால் அச்சொற்களுக்கான அர்த்தம் இதோ:

சொல்............................ உரை

1. ஆன்மா............................ உயிர்

2. அருள் ............................ பெருங்கருணை

3. திருக்கைலாசமலை............இமயமலை

4. உபாத்தியார்............................ஆசிரிய ர்

5. லோகங்கள்............................உலகங்கள்

6. வியபிசாரம்................விபச்சாரம், ஆண் பெண் தவறான ஒழுக்கம்

7. சமயிகள்............................ சமயத்தார்

8. ஆவசியம்............................அவசியம்

9. அக்கினி............................நெருப்பு

10. செளசம்............................சுத்தம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கட்டுரை நண்பரே

சைவத்திரு வி. சிதம்பர ராமலிங்கம்பிள்ளை சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையின் ஆசிரியர் ஆவார்.

இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள

http://geocities.com/chidambararamalingampillai-Chidambararamalingam Pillai

http://geocities.com/eswaramoorthypillai-Eswaramoorthy Pillai

ஆகிய இணைய தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

பாலபாடம்

நான்காம் புத்தகம்

முதற்பிரிவு

arumuganavalar.jpg

ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள்

கடவுள்

உலகமாவது சித்தும் அசித்துமென இருவகைப்படும் பிரபஞ்சமாம். சித்து அறிவுடைய பொருள். அசித்து அறிவில்லாத பொருள். அசித்தொன்றாலும், சடமொன்றாலும், பொருந்தும். உலகம் தோன்றி நின்று அழியுங் காரியமாய் உள்ளது. ஆதலினால், உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையுஞ் செய்தற்கு ஒரு கடவுள் இருக்கின்றார் என்பது, நன்றாக நிச்சயிக்கப்படும்.

கடவுள் என்றும் உள்ளவர், அவருக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், அவர் இல்லாத இடம் இல்லை. அவர் எல்லாம் அறிபவர், அவர் அறியாதது ஒன்றுமில்லை. அவருடைய அறிவு இயற்கையறிவு, ஒருவர் அறிவிக்க அறிபவரல்லர். அவர் எல்லாம் வல்லவர், அவரால் இயலாத கருமம் ஒன்றுமில்லை. அவர் அளவிடப்படாத ஆனந்த முடையவர், தம்முடைய அநுபவத்தின் பொருட்டு வேறொன்றையும் வேண்டுபவரல்லர். அவர் தம்வயமுடையவர், பிறர்வயமுடையவரல்லர். அவர் உயர்வும் ஒப்பும் இல்லாதவர்; அவரின் மேலானவரும் இல்லை; அவருக்குச் சமமானவரும் இல்லை. அவர் சகலலோகத்துக்கும் ஒரே நாயகர். அவர் செய்யுந் தொழில்களுள் ஒன்றாயினும் அவருடைய பிரயோசனத்தைக் குறித்த தன்று. எல்லாம் ஆன்மாக்களுடைய பிரயோசனத்தைக் குறித்தவைகள். அவர் ஆன்மாக்களிடத்துள்ள கைமாறில்லாத அளவுகடந்த திருவருளே திருமேனியாக உடையவர்.

கடவுள் ஆன்மாக்கள் பொருட்டு வேதம் ஆகமம் என்னும் முதனூல்களை அருளிச் செய்தார். அவைகளிலே விதிக்கப் பட்டவைகளெல்லாம் புண்ணியங்கள். விலக்கப்பட்டவைகளெல்லாம் பாவங்கள். அவர் புண்ணியத்தைச் செய்த ஆன்மாக்களுக்கு இன்பத்தையும், பாவத்தைச் செய்த ஆன்மாக்களுக்குத் துன்பத்தையும் கொடுப்பார். துன்பத்தைக் கொடுத்தலினால் அவரை வன்கண்ணரென்று கொள்ளலாகாது. தீமை செய்த பிள்ளைகளைப் பிதா மாதாக்கள் தண்டித்தலும், சில வியாதியாளர்களுக்கு வைத்தியர்கள் சத்திரமிட்டறுத்தலும், இருப்புக்கோல் காய்ச்சிச் சுடுதலும், கண்ணிற் படலத்தை உரித்தலும் அவர்களிடத்துள்ள இரக்கத்தினாலன்றி வன்கண்மை யினாவல்லவே. அது போலக் கடவுள் பாவஞ் செய்த ஆன்மாக்களைத் தண்டித்தல், அப்பாவத்தை ஒழித்து மேலே பாவஞ் செய்யாவண்ணம் தடுத்து அவர்களை நல்லவழியிலே செலுத்தி உய்வித்தற்கு ஏதுவாதலினால், அதுவும் கருணையேயாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

swamiambalvinn.jpg

ஆன்மா

ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய் சேதனமாய், பாசத் தடையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப் பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.

ஆன்மாக்கள் நல்வினை தீவினையென்னும் இருவினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்துநான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய் பிறந்திறந்துழலும்.

நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையிற்றோன்றுவன. சுவேதசம் வேர்வை யிற்றோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையிற் றோன்றுவன. எழுவகைப் பிறப்புக்களாவன: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைகளாம். தாவரங்களென்றது மரம் செடி முதலியவைகளை.

கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வேர்வையிலே கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமென்றாலும், நிலையியற் பொருளென்றாலும், அசர மென்றாலும் பொருந்தும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம். சங்கமமென்றாலும், இயங்கியற் பொருளென்றாலும், சரமென்றாலும் பொருந்தும்.

தேவர்கள் பதினொரு நூறாயிரயோனிபேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிரயோனிபேதம். நாற்கால்விலங்கு பத்து நூறாயிரயோனிபேதம். பறவை பத்து நூறாயிர யோனிபேதம். நீர்வாழ்வன பத்து நூறாயிரயோனிபேதம். ஊர்வன பதினைந்து நூறாயிரயோனிபேதம். தாவரம் பத்தொன்பது நூறாயிரயோனிபேதம். ஆகத்தொகை எண்பத்து நான்கு நூறாயிரயோனிபேதம்.

ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளினாலும், சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என அறுவகைப்படும். புல்லும் மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள். இப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரதத்தையும்(சுவை) அறியும் ஈரறிவுயிர்கள். கறையானும் எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தத்தையும்(வாசனை) அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும் வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும் பறவையும் அந்நான்கனோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும் மனிதர்களும் அவ்வைந்தனோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.

ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை தீவினை யென்னும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும், அநுபவிக்கும். அப்படி அநுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சிநின்ற இரு வினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து, அவைகளின் பயன்களாகிய இன்பதுன்ப மிரண்டையும் அநுபவிக்கும். இப்படியே, தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும் காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.

இப்படிப் பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகளெலாவற்றினும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சிலகாலம் வளர்ந்து அழியினும் அழியும். மூன்று வயசுக்குமேற் பதினாறு வயசு வரையிலுள்ள பாலாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேல் நாற்பது வயசு வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மையாமே. அழியுங் காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாதுவருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்த சரீரம் உள்ளபொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.