• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
சுப.சோமசுந்தரம்

பண்பாட்டு அசை பண்ணொடு இசை - சுப. சோமசுந்தரம்

Recommended Posts

                                                பண்பாட்டு  அசை  பண்ணொடு  இசை

                                                                                                            சுப. சோமசுந்தரம்

            தொ.ப.வின் பண்பாட்டு அசைவுகள் படித்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். அது ஆங்கிலத்தில் cultural movements பற்றியது எனச் சொல்லலாம். நான் இங்கு பதிய நினைப்பது பண்பாடு சார்ந்த விடயங்களை இலக்கிய உலகில் சான்றோர் பெருமக்கள் அசை போடுதல் (chewing the cud) பற்றியது. விலங்கினங்கள் தாம் உட்கொண்டவற்றை வெளிக்கொணர்ந்து நிதானமாக அசை போடுவதற்கும் மனிதர்கள் தாம் உள்வாங்கியவற்றை நினைவுகளில் வெளிக்கொணர்ந்து அசை போடுவதற்கும் எவ்வாறு தமிழில் 'அசை போடுதல்' என்ற ஒரே சொல்லாடல் அமைந்ததோ, அவ்வாறே ஆங்கிலத்திலும் இவை இரண்டிற்கும் 'chewing the cud' என்ற ஒரே சொல்லாடல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 

            இத்தலைப்பில் முதலில் நாம் கையிலெடுக்க நினைப்பது கல்வியிற் பெரியன் கம்பனை. 'வில்லை ஒடித்தான்; சீதா பிராட்டியைப் பரிசுப் பொருளாய்ப் பெற்றான்' எனும் கதை கம்பனுக்கு ஏற்புடையதாயில்லை. பெண்ணை அடைய வேண்டிய ஒரு பொருளாய்ப் பாவித்தல், பெண்ணடிமைத்தனத்தைப் போதிக்கும் சனாதன பூமியில் தோன்றிய வால்மீகிக்கு ஏற்புடையதாயிருக்கலாம். மைந்தர் பெற்ற பரிசில் என்னவென்றே அறியாமல் 'பகிர்ந்து கொள்க' என ஈன்ற தாய் பணித்ததால் , பரிசிலான பாஞ்சாலி ஐவருக்கும் பத்தினியான கதை வியாசருக்கும் உடன்பாடாயிருக்கலாம். களவியலும் கற்பியலும் உலகிற்கே வகுத்தளித்த தமிழர்தம் மாண்பிற்கு அது உகந்ததாயில்லை. ஏறு தழுவி பெண்ணைப் பரிசாக அடைதல் போன்ற அநாகரிகங்கள் ஆரிய வரவுக்குப் பின் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தோன்றியிருக்கலாம். தமிழரின் பொற்காலமான சங்க கால வாழ்வியலில் இந்த அலங்கோலங்கள் அரங்கேறியதாகத் தெரியவில்லை. எனவே ஆரிய வரவுக்குப் பின் பல நூற்றாண்டுகளுகள் கழித்துத் தோன்றியிருந்தாலும் கம்ப நாடன், ஜனகராஜனின் அரண்மனைக்கு வருகிற தலைவனையும் கன்னிமாடத்தில் நிற்கும் தலைவியையும்,

                         'எண்ணரும் நலத்தினாள் இனையள் நின்றுழிக்

                          கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று

                          உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட

                          அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்'

                                                                                   (பால காண்டம், மிதிலை காட்சிப் படலம்)

என முதலில் கண் களவு கொள்ள விட்டான். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மையலுற்றே மணந்தனர் என்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆறுதல் உரைத்தான் தமிழ்க் கம்பன்.

          'கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

           என்ன பயனும் இல'

எனும் பொருள்கண்ட தமிழ்ச் சமூகம் கைதட்டி ஆர்ப்பரித்தது. 'கண்டவுடன் காதலா? பகுத்தறிவுக்கு ஏற்புடையதாயில்லையே' என்பார்க்குத் தமிழின் பதில், 'நம்பினார்க்குக் கடவுளும் காமுற்றார்க்கும் காதலும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதேயாம்' என்பது. பார்வையிலேயே பண்பு நலனை அளக்கும் கருவி இவர்களிடத்து உண்டு போலும். தெரியாமலா சொன்னான் வள்ளுவன்

            'கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்திற்

             செம்பாகம் அன்று பெரிது'

என்று?

 

            இவ்விடத்து துளசிதாசரையும் பதிவு செய்யும் கடமை நமக்குண்டு. துளசிதாசர் இராமாயணத்தில் தலைவன் இராமனையும் தலைவி ஜானகியையும் வில்லொடிக்கும் நாளுக்கு முந்திய மாலையில் நந்தவனத்தில் சந்திக்க வைத்து காதல் கொள்ள வைக்கிறார். சனாதன பூமியில் தோன்றிய கலகக் குரலோ துளசிதாசர்? நிற்க. கம்பன் தன் மரபினை அசை போட்டதின் விளைவே 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்பதே ஈண்டு நம் பதிவு.

 

            அடுத்து நம் மனதில் நிழலாடுபவர் இம்மண்ணில் தோன்றிய கதையையே எடுத்தாண்ட இளங்கோவடிகள். மாதவியைப் பிரிந்து கண்ணகியுடன் மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு மாதவி கோசிகமாணி மூலம் விடுக்கும் மடலில்,

                 'குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு

                  இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பறியாது'

                                                         (மதுரைக் காண்டம், புறஞ்சேரியிறுத்த காதை, அடி 89-90)

என்று கசிந்துருகுகிறாள். 'குலமகளோடு இரவோடு இரவாக ஊரை விட்டுச்  செல்லுமளவிற்கு நான் செய்த பிழையென்ன?' என மாதவி கேட்பதே கதைப்பகுதி. 'குரவர் பணி அன்றியும்' என்பதன் மூலம் 'மூத்தோர்க்கு (இங்கு பெற்றோர்க்கு) ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்து செல்கிறாயே?' என்று தலையாய பணியாக குரவர் பணியை வைத்து மண்ணின் மரபை அசை போடுகிறார் இளங்கோவடிகள். கதை போகிற போக்கில் இங்கு பண்பாட்டைத் தொட்டுச் செல்வதைக் காணலாம்.

 

            இனி திருவாசகம் ஓதி நம்மை உருக வைத்த  மாணிக்கவாசகரை விட்டு வைப்பானேன்! அவர்தம் திருக்கோவையாரில் உடன்போக்கு சென்ற தலைவியைத் தேடிச் செல்லும் செவிலித்தாய் அம்மேதக ஒழுக்கம் பூண்ட வேறு தலைமக்களைத் தூரத்தே கண்டு தான் தேடி வந்தோர் இவரே என முதலில் மயங்கி, பின்னர் தன் பிள்ளைகளின் அடையாளஞ் சொல்லி, 'அத்தகையோரைக் கண்டீரோ' என வினவுகிறாள். எதிர்ப்பட்ட தலைவன் தன்னை ஆட்கொண்ட புலியூர் இறைவன் உறையும் அரிய மலையில் சிங்கம் (யாளி) போன்ற அத்தகைய தலைவனைக் கண்டதாய்க் கூறி, தன் தலைவியை நோக்கி, "தூண்டா விளக்கினை ஒத்தவளே! அன்னை (செவிலித்தாய்) சொன்னவாறு அயலில் வந்த அந்தப் பெண் எத்தகையவள் எனப் பகர்வாய்!" எனப் பணிக்கிறான்.

இதோ பாடல் :

மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே

பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று

ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே

தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே 

                                                                                                (திருக்கோவையார் - 244)

 

செவிலித்தாய் தேடி வந்தோரை இத்தலை மக்கள் பார்த்தனர் என்பதே செய்தி. அச்செய்தியினூடே இத்தலைவன் அத்தலைவனையும் இத்தலைவி அத்தலைவியையும் நன்கு பார்த்ததைப் பதிவு செய்வதின் மூலம் மணிவாசகர் அசை போடும் தலைசிறந்த பண்பாடு எடுத்தியம்பாமல் தெற்றென விளங்கி நிற்கும். காற்றுவாக்கில் சொல்லிச் சென்றாலும் காலத்திற்கும் நிற்கும் நனி நாகரிகம்!

 

            தான் கடந்து வந்த இலக்கியப் பாதையில் சிற்சில இடங்களைத் தொட்டுக் காட்டுவதே எழுத்தன் பணி. வாசிப்போர் தம் இலக்கியப் பாதையில் இதுபோன்ற இடங்களைக் கடந்து வந்ததை அசை போட வைத்தால், அந்த எழுத்துப் பணி முழுமை பெறும்.

 

                                                                                                           

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.