Jump to content

ஒரே மாதிரியாக வாக்களிப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்! - பிரணாய் ராய் பேட்டி


Recommended Posts

ஒரே மாதிரியாக வாக்களிப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்! - பிரணாய் ராய் பேட்டி

 
ngbjpg
 

இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களில் ஒருவரான பிரணாய் ராய் பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்டவர். ‘என்டிடிவி’யின் நிறுவனர்களில் ஒருவர். தோரப் ஆர்.சோபரிவாலாவுடன் இணைந்து பிரணாய் ராய் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக்‌ஷன்ஸ்’ புத்தகம் 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வாக இருக்கிறது. புத்தகத்தின் மிக சுவாரஸ்யமான பகுதி, தேர்தல் முடிவுகளை எப்படியெல்லாம் கணிக்கிறார்கள் என்பதுதான். மூத்த பத்திரிகையாளரான என்.ராம், சீனிவாசன் ரமணி இருவரும் இணைந்து பிரணாய் ராயுடன் நீண்ட நேர்காணல் ஒன்றை நடத்தினர். பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை இங்கே தருகிறோம்.

 

தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஒரு கட்சி எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும், எந்தக் கட்சி அல்லது தலைவர் வெற்றி பெறுவார் என்று கணித்துவிட முடியும் என்று உங்களுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறீர்கள்; 2004 பொதுத் தேர்தல் விதிவிலக்காகிவிட்டது. கணிப்பு எங்கே, எப்படித் தவறியது?

2004-ல் ஏன் தவறாகக் கணித்தோம் என்று எந்த கருத்துக் கணிப்பு அமைப்பாலும் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எச்சரிக்கையாகப் பதில் சொல்வோம் என்று வாக்காளர்கள் கருதியதுதான் முக்கியக் காரணம் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பாளர்கள் பின்னர் தெரிந்துகொண்டனர். நெருக்கடிநிலை அமலுக்குப் பிறகு வாக்காளர்களிடம் கருத்து கேட்டால், ‘இந்திராவுக்கு வாக்களிக்கப்போவதில்லை’ என்று யார்தான் பகிரங்கமாகக் கூறுவார்கள்? பெரும்பாலானவர்கள் ‘இந்திராவுக்குத்தான் வாக்கு!’ என்றிருப்பார்கள். நூறு வாக்காளர்களில் ஐந்து பேர் அப்படி அச்சப்பட்டால்கூடக் கணிப்பு தவறாகிவிடும். மக்களிடையே அச்ச உணர்வு 2%, 5% அல்லது 7% என்று இருந்தால் கணிப்பும் அதற்கேற்பத் தவறாகவே இருக்கும். இதுவே ஒவ்வொரு தேர்தலிலும் கணிப்பாளர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினை.

உங்களுடைய புத்தகத்தில் மிகவும் சுவாரசியமான அம்சம், பெருவாரியான தொகுதிகளில் ஒரு கட்சி அடையும் வெற்றி என்பது; இதை மாநில, தேசிய அளவில் உங்களால் விளக்க முடியுமா?

மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சேர்ந்து நடக்கும் தேசியத் தேர்தல் இப்போது கிடையாது; சுதந்திரம் அடைந்த புதிதில் 1950-களில் தொடங்கியபோது அரசியல்வாதிகளையும் தலைவர்களையும் மக்கள் முழுதாக நம்பினார்கள். மக்களவைப் பொதுத் தேர்தல் என்பது மாநிலத் தேர்தல்களின் கூட்டாட்சிக்கான தேர்தலாகவே இருந்தது. இப்போது மக்களவைப் பொதுத் தேர்தலிலேயே ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொருவிதமாக வாக்களிக்கின்றன. முடிவு என்பது பெருவாரியான வெற்றிகளின் சேர்க்கையாக இருக்கலாம். மாநிலங்களின் பெருவாரியான வெற்றி, ஒரு மாநிலத்தை இன்னொரு மாநிலம் சரிநிலைப்படுத்துவதாகக்கூட அமையலாம். தமிழ்நாட்டில் பெருவாரியான மக்கள் ஒரு கட்சிக்கும், மகாராஷ்டிரத்தில் பெருவாரியான மக்கள் இன்னொரு கட்சிக்கும் வாக்களிக்கலாம். மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 77% மாநில அளவில் பெருவாரியான முடிவாகவே இருப்பதை நாங்கள் ஆய்வில் கண்டோம்.

அப்படியென்றால், ஒன்றுபோல மக்கள் வாக்களிப்பதற்குத் தமிழ்நாடு நல்ல உதாரணம் என்று சொல்லலாமா?

ஆமாம். தமிழ்நாட்டில் இது 94%, பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் இதுவே உச்சம் - அதாவது, ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ ஆதரவாக வாக்களிப்பது. தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளர் என்ற முறையால் சிறிய அளவில் வாக்கு சதவீதம் ஒரு கட்சிக்கு ஆதரவாகத் திரும்பினாலும் தொகுதிகளும் அக்கட்சி அல்லது கூட்டணி பக்கம் சாய்கிறது. அதிலும், எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்காமல் பிரிந்து நின்றால் பெருவாரியான வெற்றி சாத்தியமாகிவிடுகிறது.

பாஜக மக்களுக்குப் பிடித்தமான தேசியத்தையும் காங்கிரஸ் வேறு அம்சத்தையும் கொண்டுள்ளன என்று ஊடகங்களில் குறிப்பிடுகிறார்கள், இது சரியா? இந்த மாதிரியான உணர்வுகள் தேசிய அளவில் நிலவுகின்றனவா அல்லது வெறும் கட்டுக்கதையா?

இது ஓரளவுக்குக் கட்டுக்கதையே. ஆந்திர பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பற்றியோ பெரும்பான்மையினவாதம், தேசியம் குறித்தோ நாம் எதையும் கேள்விப்படவில்லை. உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஓரளவுக்கு இந்த மனோபாவம் நிலவுகிறது. வாக்காளர்கள் அவர்களுடைய வாழ்க்கை நிலையை ஒட்டித்தான் வாக்களிக்கிறார்கள். நாங்கள் ஒரு கிராமத்துக்குச் சென்றோம். அரசு பாலம் கட்டித்தராததால், அரசுக்கு எதிராக வாக்களிக்கப்போகிறோம் என்றார்கள். ஒருவர் புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசினார். ஆனால், அது அவருடைய வாழ்வாதாரப் பிரச்சினைக்கு அடுத்ததுதான் என்று கூறிவிட்டார்.

நீங்களும் அசோக் லஹரியும் ‘எதிர்க்கட்சி ஒற்றுமைக் குறியீட்டெண்’ என்ற ஒன்றை வடிவமைத்தீர்கள்; இது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? டேவிட் பட்லரின் ‘சீரான ஊசல்கள்’ பற்றியும் பேசுகிறீர்கள்; இது எந்த அளவுக்கு உங்களை ஊக்கப்படுத்தியது? அது அனைத்திந்திய அளவுக்குப் பொருந்துகிறதா? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் இந்தியாவில் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணி அல்லவா?

பட்லரின் ஆய்வுகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். பட்லரின் சீரான ஊசல் முறை, இரு கட்சி ஆட்சி முறை உள்ள நாடுகளில்தான் அதிகம் செயல்படுகிறது. இங்கே ஏராளமான கட்சிகள் இருப்பதால் அது செயல்படுவதில்லை. எனவே, வாக்கு வித்தியாசத்தை மாற்றுவது எது என்பதை நாம் கணக்கிட வேண்டும். வெற்றியின் விளிம்பு என்பது எவ்வளவு வாக்குகள் மாறின, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதைப் பொருத்தது. இரு கட்சி ஆட்சி முறை என்றால், எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது நூறுக்கு நூறாக இருக்கும். பிளவு அதிகமாக இருந்தால் அது 70, 60, 50 ஆகிவிடும். அதில் எவ்வளவு ஊசல் ஏற்படுகிறதோ அதற்கேற்ப வெற்றி பெறும் வாக்குகள் எண்ணிக்கையும் இருக்கும்.

மக்கள் இதுதான் மோடி அலையா என்று கேட்கின்றனர்; 2014 தேர்தல் மோடி அலை பற்றியதா?

இது பொருத்தமில்லாத வர்ணனை; 31% வாக்குகளை மட்டுமே பெற்று அவர் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால் அதிகத் தொகுதிகளைப் பெற முடிந்தது. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் எந்த அளவுக்குச் சிதறியிருக்கிறது என்றே நாம் கேட்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இந்த மாநிலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? அலைகள், ஊசல்களைவிட இவைதான் முக்கியமானவை. இங்கே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் 100 அல்ல; 50, 60, 70.

அப்படியென்றால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் மாநில வாரியாக, தேசிய அளவில் என்ன?

இது மிகவும் முக்கியமான கேள்வி. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் எவ்வளவு என்பதைக் கருத்துக் கணிப்புகள் மூலம்தான் அறிய முடியும். உதாரணத்துக்கு, தலித்துகளுடன் சேர்ந்து யாதவ்கள் வாக்களிக்கவுள்ளனர். இது வெறும் எண்ணிக்கைக் கூட்டு மட்டுமல்ல, அதற்கு மேலும் ஊக்குவிப்பானாக இருக்கக்கூடியது. ‘இது வெற்றிக் கூட்டணி’ என்ற உற்சாகம் இதற்கு மேலும் வாக்குகளை அள்ளித்தரும். இரு கட்சிகளும் சேர்ந்து தலா 20% வாக்குகளைப் பெறும் என்றால், ஊக்குவிப்பின் மூலமாகக் கூடுதலாக 5% வாக்குகள் கிடைக்கும். சராசரி ஊக்குவிப்பு அல்லது வேகம் 8% என்று கணக்கிடுகிறோம்.

தோழமைக் கட்சிக்கு வாக்குகளை மாற்றுவது தொடர்பான தரவுகள் உள்ளனவா? பிற கட்சிகளிடம் பெறுவதைவிடப் பிற கட்சிகளுக்கு சில கட்சிகள் தரும் வாக்குகள் குறைவு என்கிறார்களே?

இது பத்திரிகையாளர்கள் காலம் காலமாக எழுதிவரும் தகவல், உண்மையல்ல. வாக்குகளை மாற்றித் தருவது 100% என்பதுடன் ஊக்குவிப்பாக மேலும் சில சதவீதங்களும் சேரும் என்பதே நாங்கள் கண்டது. தலித்துகள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்தாலும் யாதவர்கள் மாயாவதிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பார்கள். இது உண்மையே அல்ல. யாதவர்கள் முழுதாக மாயாவதிக்கு வாக்களித்ததை நாங்கள் கண்டுபிடித்தோம். அதேபோல, முஸ்லிம்கள் தங்களுக்குள் பேசிவைத்துக்கொண்டு வாக்களிப்பார்கள் என்பார்கள். முஸ்லிம்களின் வாக்குகளும் பிளவுபடுவதைப் பார்த்திருக்கிறோம். உத்தர பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணிக்கு 80%, காங்கிரஸுக்கு 20% என்று முஸ்லிம்களின் வாக்குகள் பிரிகின்றன. எந்த மதமும் சாதியும் ஒரே கட்சிக்கு 100% வாக்களிப்பதில்லை. பிராமணர்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு வாக்களிப்பதில்லை. அதிபட்சம் 65% கிடைக்கலாம். யாதவர்கள் 100% சமாஜ்வாதிக்கு வாக்களிப்பதில்லை. அது 80% ஆக இருக்கிறது. எண்ணிக்கை வழியில் எதையாவது எழுதும்போது பத்திரிகையாளர்கள் அதீதமாகக் கற்பனை செய்துவிடுகிறார்கள்.

அப்படியென்றால் 2014-ஐவிட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் 2019 தேர்தலில் அதிகமாக இருக்கிறது, அப்படித்தானே?

ஆமாம், அது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தப்போகிறது; குறிப்பாக, உத்தர பிரதேசத்தில். மீண்டும் அலை ஏற்படுமா என்று கேட்பதைவிட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் எவ்வளவு என்று கேட்பதே சரி. 2014-ல் விழுந்த அதே அளவு வாக்குகள் எல்லாக் கட்சிகளுக்கும் கிடைத்தாலும் சமாஜ் வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியால், பாஜக வென்ற இடங்கள் 73-லிருந்து சரிபாதியாகக் குறையும். காங்கிரஸ் மட்டும் இந்தக் கூட்டணியில் சேர்ந்திருந்தால் பாஜகவுக்குக் கிடைக்கும் தொகுதிகள் 20 ஆகத்தான் இருந்திருக்கும். 6% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் தனியாகப் போட்டியிட்டு பாஜகவுக்குக் கூடுதலாக 14 இடங்களைத் தரப்போகிறது. வெறும் 3% முதல் 4% வரையில் வாக்குகள் அதிகமானாலோ சரிந்தாலோ வெற்றியும் இழப்பும் தொகுதிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் என்பதை பாஜக தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறது. இதனால்தான், பல கட்சிகளுடன் பேசி, சமரசங்களுடன் கூட்டணியை வலுப்படுத்தியிருக்கிறது. கூடுதலாக, 4% முதல் 5% வாக்குகளையும் அதன் மூலம் 10% கூடுதல் தொகுதிகளையும் பெற அது முயற்சி மேற்கொண்டது. காங்கிரஸ் தவறாகக் கணித்துவிட்டது. சில தொகுதிகளை விட்டுக்கொடுத்து பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதியுடன் கூட்டணி கண்டிருந்தால், மேலும் அதிக தொகுதிகளில் அது வென்றிருக்க முடியும்.

மற்ற மாநிலங்களைப் பார்ப்போம். மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சியின் ஒற்றுமை என்ன செய்யும்?

மகாராஷ்டிரத்தில் மிகவும் தீவிரமான போட்டியாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் இங்கு 80%. கேரளத்தை எடுத்துக்கொண்டால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முழுமையானது. கூட்டணியின் அருமை தெரிந்தவர்கள் அவர்கள். காலத்தால் முந்தியவர்கள். கேரளத்தில் கருத்துக் கேட்பு வாக்கெடுப்பு நடத்துவதைப் போல உற்சாகம் தருவது எதுவும் கிடையாது. கேட்டோம், எழுதினோம், வந்தோம் என்று வந்துவிட முடியாது. நிறைய நேரம் பிடிக்கும். கேள்விகள் சரியானவைதானா என்று கருத்துக் கணிப்புக்கு முன்னால் நடத்தும் முன்னோட்டத்துக்கே நாங்கள் கேரளத்தைத்தான் தேர்ந்தெடுப்போம். அங்குதான் நாங்கள் கேட்டவுடனேயே, ‘உங்களுடையே கேள்வியே தவறு’ என்ற சொல்ல ஆரம்பித்து, எங்கே எப்படி தவறு என்று விளக்குவார்கள். ‘சரியான கேள்வியைக் கேளுங்கள் மக்களே!’ என்று 20 நிமிஷம் வகுப்பு எடுப்பார்கள். ஒவ்வொருவரிடமும் கேட்டு முடிக்க ஒன்றரை மணி நேரம்கூட ஆகிவிடும். பிற மாநிலங்களில் நாங்கள் அங்கிருந்து போனால் போதும் என்று கடகடவென ஏதாவதொரு பதிலைச் சொல்லி விரட்டுவார்கள். கேரளத்தில் விவாதிப்பார்கள். கேரளத்தில் அபாரமான அரசியல் புரிதல் உள்ளது. கருத்துக் கணிப்பு நடத்துவோருக்கு கேரளத்தில் பூர்வாங்க முன்னோட்டம் நடத்துவது நல்லதொரு அனுபவமாக இருக்கும்.

2014-ல் 2.5 கோடி பெண் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டன. அதுவே பிறகு 2.1 கோடியாகக் குறைந்துள்ளது என்று நீங்கள் புத்தகத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் மனதை வேதனைப்படுத்துவதாகவும், பிறகு ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளன. மக்களவைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களிப்பார்கள் என்று ஊகித்திருக்கிறீர்கள்?

ஆமாம், அதிகம் என்றால் வாக்களிக்க வரும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்; சதவீதக் கணக்கில் பார்த்தால் மேலும் அதிகமிருக்கும். இதை ஊகிப்பது கடினமில்லை, ஏனென்றால் இப்போதெல்லாம் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிகம் வாக்களிக்கின்றனர். எல்லா மாநிலங்களிலும், அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் பெண்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். தென்னிந்தியாவில் கருத்துக் கணிப்புக்காக நாங்கள் செல்லும்போது பெண்கள் வீட்டுக்குள்ளிருந்து எங்களைப் பார்த்ததும் வெளியே வருவார்கள், என்ன கேள்விகளோ கேளுங்கள் என்பார்கள். உத்தர பிரதேசம் என்றால் வாசல்படியில் நிற்பார்கள், தேர்தல் தொடர்பாகக் கருத்து கேட்க வந்திருக்கிறோம் என்றால் வீட்டுக்குள் வேகமாகப் போய்விடுவார்கள். பழக்கமில்லாதவர்களுடன் பேச அவர்களுக்கு விருப்பம் இல்லை. இப்போது உத்தர பிரதேசத்திலும் இந்தப் போக்கு மாறிவருகிறது. தென்னிந்தியாவில் மனைவியைக் கேட்கும்போது கணவரும் உடன் இருப்பார். ‘நீங்கள் தன்னிச்சையாக வாக்களிக்கிறீர்களா, கணவர் சொல்வதைக் கேட்டு வாக்களிப்பீர்களா?’ என்று கேட்போம். ‘அவர் சொல்வதையும் கேட்போம், ஆனால் எங்கள் முடிவுப்படி வாக்களிப்போம்!’ என்பார்கள். ‘மனைவியிடம் கேட்பீர்களா?’ என்று சில வேளைகளில் கணவர்களையும் கேட்போம். அவர்கள் அப்படிச் செய்வதில்லை. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகத்தான் முடிவெடுக்கின்றனர்.

பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருவதால் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?

துரதிருஷ்டவசமாக இதுவரை இல்லை. எந்த அரசியல் கட்சியும் வேட்பாளர்களில் 50%-ஐ பெண்களாகத் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால், பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பதால் கட்சிகளின் கொள்கைகள் மகளிர் சார்ந்து உருவாகத் தொடங்கியுள்ளன. ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு ‘உஜ்வலா’ திட்டத்தில் கேஸ் இணைப்பை இலவசமாகக் கொடுக்கும் பாஜக அரசின் முடிவு புத்திசாலித்தனமான, பயனுள்ள கொள்கை. நல்ல பலனைத் தந்துள்ளது இது. எல்லாக் கட்சிகளும் பெண்களுக்கு நெருக்கமான விஷயங்களைப் பேசத் தொடங்கியுள்ளன. இது உற்சாகத்தைத் தருகிறது.

நகர்ப்புறப் பெண்களைவிட கிராமப்புற பெண்கள் வாக்களிப்பதில் சிறப்பாகச் செயல்படுகின்றனரா?

5% வாக்குகள் அதிகம் பதிவானால்கூடப் பெரும் மாறுதல்களை உருவாக்கிவிடும். கிராமப்புற மகளிர் தேர்தலில் வாக்களிப்பது இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கிறது. ஆண்கள் வாக்குசதவீதத்தைவிடப் பெண்களின் வாக்களிப்பு சதவீதம் 20% குறைவாகவே ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிராமப்புற பெண்களும் நகர்ப்புற பெண்களைவிட - ஏன் ஆண்களையும்விட அதிக எண்ணி்க்கையில் வாக்களிக்கின்றனர். ஆனால், பெண் வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவதும் அதிகம் நடக்கிறது. இதுபற்றி நிறைய பேர் எழுதிவிட்டார்கள். ஆனால், அவர்கள் யார், ஏன் விடுபட்டார்கள் என்பதுபற்றி அதிகம் ஆராயப்படவில்லை. மிகவும் ஏழைகள்தான் விடுபட்டுகின்றனர். தலித்துகள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்கள் வாக்காளர் பட்டியலில் பதிவாகாதவர்களில் அதிகம். இது வெறும் 2.1 கோடி பெண் வாக்காளர்களின் பெயர் விடுபடுதல் மட்டும் இல்லை, விடுபடுதலிலும் ஒரு சார்புத்தன்மை மறைந்திருக்கிறது. அது ஏன் என்பதும் பேசப்பட வேண்டும்.

பாஜகவுக்குப் பெண்களைவிட ஆண்களிடத்தில்தான் அதிக செல்வாக்கு. மாறாக, காங்கிரஸ் பெண்களிடத்திலும் அதிக செல்வாக்குடன் இருக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், பெண்கள் ஆதரவை அதிகம் பெற்ற கட்சி அதிமுக. ஆண்கள் மட்டுமே வாக்களிக்கலாம் என்றிருந்தால், திமுகவை அதிமுகவால் தோற்கடித்திருக்க முடியாது என்று பார்த்தோம். தேசிய அளவில் இது சரியா?

உண்மைதான் பாஜகவுக்குப் பெண்களைவிட ஆண்களிடையே ஆதரவு அதிகம். அது ஆணாதிக்கம் நிரம்பிய கட்சி. ஆனால், அவர்கள் இன்று இந்த நிலையை மாற்றிவருகிறார்கள் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் புத்தகத்தின் முக்கியமான அம்சம் இந்திய வாக்காளரை ஆக்கபூர்வமாக மதிப்பிட்டிருக்கிறீர்கள்; ‘சுயேச்சையாக சிந்திக்கிறார்கள், திட்டங்களால் தங்களுக்கு என்ன பலன் என்று மதிப்பிடுகிறார்கள். தங்களுடைய வாழ்க்கை நிலையை எண்ணிப் பார்க்கிறார்கள். இது மிகவும் முக்கியமான அம்சம். சரியாக ஆட்சி செய்யாதவர்களை ஆட்சியிலிருந்து அகற்றுகிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். அடுத்தது இந்தியத் தேர்தல் ஆணையம். உலகின் அதிசயங்களில் ஒன்றுதான் இந்தியத் தேர்தல் ஆணையம். இல்லையா?

ஆம், சரிதான். எவ்வளவோ குறைகள் இருந்தாலும் மிகச் சிறப்பான நிறுவனம்தான் இந்தியத் தேர்தல் ஆணையம்.

அடுத்ததாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை எடுத்துக்கொள்வோம். நீங்கள் இதை விரிவாக ஆராய்ந்திருக்கிறீர்கள் அல்லவா?

1977 முதல் இந்த இயந்திரங்களைத் தொடர்ந்து பார்த்துவருகிறோம், சோதித்திருக்கிறோம், அதன் செயல்பாட்டை ஆராய்ந்திருக்கிறோம். அவை புற உலகுடன் இணைக்கப்படாததால் அதில் தில்லுமுல்லுகள் செய்ய முடியாது என்பதுதான் அடிப்படையான விஷயம். அதில் புளுடூத் கிடையாது. அதில் வைஃபை, இணையதள இணைப்புகளும் கிடையாது. வாக்களிப்பதைப் பதிவுசெய்யும் வாக்குச் சீட்டைப் போல அது பதிவு இயந்திரம் மட்டுமே. வெறும் சந்தேகத்தின்பேரில்தான் அதன் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள்.

தேர்தலில் பண பலத்தைப் பற்றிப் பார்ப்போம்; இதை எப்படித் தடுப்பது? அடுத்த புத்தகம் இதைப் பற்றி இருக்குமா?

இதைப் பற்றி ஆராய்ந்து அடுத்ததாக எழுத உத்தேசம். அமெரிக்காவில் நிறைய ஆராய்ச்சிகள் செய்துவிட்டார்கள். செனட்டர்களையும் கவர்னர்களையும் தேர்ந்தெடுக்க நிறைய பணம் தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. அமெரிக்காவில் ஏற்கெனவே பதவியில் இருப்பவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் விகிதம் 90%. பதவியில் இருப்பதால் மறுதேர்வுக்கு வாய்ப்பு அதிகம். இதில் பணத்துக்கும் நிச்சயம் முக்கியப் பங்கு இருக்கிறது. அமெரிக்க வாக்காளர்களைவிட இந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள். போட்டியிடும் முக்கியக் கட்சிகள் இரண்டிலும் பணம் வாங்கிக்கொண்டு, தாங்கள் ஏற்கெனவே தீர்மானித்தவருக்கே வாக்களிக்கிறார்கள்.

நீங்களும் உங்களுடைய குழுவும் இணைந்து, உங்களுடைய இதழியல் அனுபவம்-திறன் ஆகியவற்றுடன் கல்வித் துறை அணுகுமுறையையும் கலந்து, தேர்தல் தொடர்பாக எழுதியிருக்கிறீர்கள். பொருளாதார அறிஞர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுக் கணிப்பில் நிபுணர், பத்திரிகையாளர்... இப்படியான பன்முகப் பணிகள் ஒரு இதழியலாளராக உங்களுக்கு எப்படிப் பயன்படுகின்றன?

இந்த அனுபவங்களையெல்லாம் சேர்த்தே செய்ய முற்படுகிறோம். இவற்றில் பண்பு சார்ந்தும் எண்ணிக்கை சார்ந்தும் ஆற்ற வேண்டிய பணிகளை நாம் இணைத்துவிடக் கூடாது. உதாரணமாக, நான் கருத்துக் கணிப்பு வேலைகளைச் செய்யும்போது அது எண்ணிக்கைகள் அடிப்படையிலான வேலை; பத்திரிகையாளராக இருக்கும்போதோ பண்பு சார்ந்த பணிகளையே மேற்கொள்கிறேன். பல பத்திரிகையாளர்கள் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தங்களுடைய கட்டுரையில் கூற முற்படுகின்றனர். அது அவர்களுடைய வேலையல்ல. தேர்தலில் ஒரு தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வருகிறவரையே வெற்றி வேட்பாளராக அறிவிக்கும் முறையை நாம் பின்பற்றுகிறோம். வாக்குகளில் 3% மாறினால்கூட 100 தொகுதிகள் கைமாறிவிடும். ஒரு பத்திரிகையாளரால் இந்த 3% மாற்றத்தை எளிதில் கணித்துவிட முடியாது. பத்திரிகையாளரின் வேலை என்னவென்றால் பிரச்சினைகளை, சம்பவங்களைப் பற்றிப் பேசுவது. கருத்துக் கணிப்பின் மூலம் இவற்றையெல்லாம் வெறும் எண்களாக மாற்றிவிட முடியாது. உத்தர பிரதேச விவசாயிகள் எப்படி அல்லல்படுகிறார்கள் என்று பார்க்கிறோம், ஐந்தாண்டுகளுக்கு முன்னால் எப்படி வேறு விதமாக இருந்தது என்பதும் தெரியும். இதை எண்களாக மாற்றிச் சொல்ல முடியாது. பத்திரிகையாளரின் வேலை ஒரு தேர்தலைப் பற்றிய சித்திரத்தை எழுதுவதுதான், தேர்தல் முடிவைக் கூறும் முயற்சியை அவர் தவிர்க்க வேண்டும்!

https://tamil.thehindu.com/opinion/columns/article26884837.ece?utm_source=HP&utm_medium=hp-editorial&fbclid=IwAR3_7tsetGGJ99ho_sAayN7Tq4ex0_jsUK2Stqs_A2Ayu-3YT87I9q2s78o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.