Jump to content

ஓடிப்போவதெல்லாம் உடன்போக்கு அல்ல - சுப. சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                        ஓடிப்போவதெல்லாம் உடன்போக்கு அல்ல

 

                                                                                                -       சுப. சோமசுந்தரம்

 

            இத்தலைப்பைப் பார்த்தவுடன் நான் என்னவோ காதலுக்கு எதிரானவன் என்று முடிவெடுத்து விட வேண்டாம். இலக்கியங்களில் அகப்பாடல்களைத் தேடித் தேடி ரசிப்பவன் நான். பக்தி இலக்கியங்களில் கூட அகம் காணுகிறவன் நான். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் நாச்சியார் கண்ணனுடன் கொண்ட நாயகன் – நாயகி பாவனை, திருக்கோவையாரில் மணிவாசகர் தம்மையே தலைவியாகவும் சிவபெருமானைத் தலைவனாகவும் மேற்கொள்ளும் களவொழுக்கம் இவற்றையெல்லாம் தம்மை மறந்து ரசிக்காதார் அவனியில் யாரேனும் உளரோ ?

 

            தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு (வெட்டிக்) கதைகள் பேசுவோர் கூட ‘எவள் எவனோடு ஓடிப் போனாள்’ என்பதை சுவாரஸ்யமாகப் பேசிக் களிப்பர். அவ்வழியே நாமும் உடன்போக்கைப் பின்னுக்குத் தள்ளி ‘ஓடிப்போன’ கதைகள் இரண்டினை முதலில் பேசலாமே ! இவை கற்பனைக் கதைகளல்ல ; உண்மை நிகழ்வுகள்.

 

            முதல் கதை - கிராமத்தில் எனது வீட்டிற்கு அருகாமையில் வசித்த, எங்களுக்கு நட்பான குடும்பம் ஒன்று உண்டு. ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகளின் தாய் – தகப்பன் மற்றும் அத்தகப்பனின் தம்பியும் அவரது மனைவியுமாக அது ஒரு கூட்டுக் குடும்பம். தம்பிக்கும் மனைவிக்கும் குழந்தையின்மையால், அவ்வீட்டிலிருந்த இரு குழந்தைகளும் தாய், தந்தை, சிற்றப்பா, சித்தி என நால்வராலும் சீராட்டி வளர்க்கப்பட்டனர். அக்குடும்பம் எல்லோரிடமும் அன்பு பாராட்டியதைப் போல் எங்கள் குடும்பத்தாரிடமும் நேசம் வளர்த்தனர். திடீரென்று ஒரு நாள் அப்பெண் குழந்தை (சமூகத்திற்கு அவள் குமரி; சரியாகச் சொல்வதானால் மடந்தை) தான் விரும்பிய ஒருவனுடன் சென்று விட்டாள். பெற்றோர் நால்வரும் இடிந்து போனார்கள். வேறு சாதி – குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதி - பையனுடன் அவள் சென்றதெல்லாம் அவர்களுக்குப் பெரிதாக உறுத்தவில்லை என்றே நினைக்கிறேன். ஓரளவு நடுத்தர வர்க்க வசதியுடன் வளர்ந்த மகள், வீட்டில் கழிப்பறை வசதியே இல்லாத பக்கத்து கிராமத்து வீட்டில் எப்படி வாழப் போகிறாள் என்று மருகினார்கள். சரி, பையனாவது யோக்கியனா என்றால், இருபத்து நான்கு மணி நேரத்தில் வெறும் எட்டு மணி நேரமே ‘தண்ணியில்’ மிதக்கும் அளவு யோக்கியன் என்று ஊரே சொல்கிறது. “அவன் மூஞ்சியும் அவனும்” என்று ஊரார் சொல்வதை நான் அங்கீகரிக்கவில்லை. ஏனெனில், அவனது உருவ லட்சணம் என்பது அவள் பார்வையைப் பொறுத்தது. எனக்குத் தேவையில்லாத விஷயம் என்றாலும், “எதைக் கண்டு மயங்கி அவனுடன் ஓடிப் போனாள்” என்று பெற்றோர் நால்வருடன் நானும் தலையைப் பிய்த்துக் கொண்டேன். காதலுக்குக் கண்ணில்லை என்பதால் எதையும் காண வேண்டியதில்லை போலும். அன்றிலிருந்து அந்நால்வரும் நல்ல உணவு கொள்வதில்லை; நல்ல உடை உடுத்துவதில்லை என்று ஊரே பேசியது. அவள் என்ன சாப்பிடுகிறாளோ, என்ன உடுத்துகிறாளோ என்ற ஏக்கமாயிருக்கலாம். அவர்களுடன் சேர்ந்து அப்பெண்ணுக்காக ஊர் அழுதது. நானும் அழுதேன். அவர்கள் வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் - இதனை எழுதும்போது கூட - இன்னும் அழுகிறேன்.

 

            அடுத்த கதை – இங்கு நாயகன் தொழிற்கல்வியில் டிப்ளமோ முடித்து வேலைக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறான். வீட்டில் நடுத்தர வர்க்க வசதி கூட இல்லை. நடுத்தர வர்க்க நாயகி பெற்றோருக்கு ஒரே மகள் ; படித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.அதற்குள் என்ன அவசரமோ, அவர்கள் இருவருக்குமே வெளிச்சம். நாயகி தன் வீட்டில் எதற்காகவோ பெற்றோர் வைத்திருந்த ஓரளவு பெரிய தொகையை ஆட்டையைப் போட்டு ‘இனி நமக்கு ஒளிமயமான எதிர்காலமே’ எனத் தலைப்பட்டாள் நங்கை, தலைவன் வழியே. அவனும் வெட்கமில்லாமல் அவள் காசில் ஊர் சுற்றச் சென்றான். தவமாய் தவமிருந்து இவர்கள் தப்பித் தவறிப் பார்த்த நல்ல திரைப்படங்கள் சொல்லித் தந்திருக்க வேண்டும் – கட்டிக் கொடுத்த சோறு எத்தனை நாளுக்கு வருமென்று. வேலை தேடுவதாய்ப் பெயர் பண்ணிக் கொண்டு உல்லாசமாய்ச் சுற்றினார்கள். வீட்டிலிருந்து தேடும்போது கிடைக்காத வேலையா ஓடிப்போய்த் தேடும்போது கிடைக்கப் போகிறது? கையிலிருந்த காசு கரைய, நிழல் உலகம் மறைந்து நிஜ உலகம் தெரிய ஆரம்பித்தது. அந்த நிஜ உலகம் சுற்றியதை விட தலை வேகமாக சுற்றியது. வேறு வழியின்றி நாயகியின் பெற்றோரின் கால்களில் விழுந்து கதறி அழுதார்கள். இவர்களது ‘காதல்’ தோற்றது; இவர்கள் தோற்கடித்தார்கள். அதிர்ஷ்டவசமாக பெண்ணின் தந்தை நிதானத்திலும் விவேகத்திலும் பட்டம் வாங்கியவர் போலும். “அட மானங்கெட்ட மூதிகளா !” என்று திட்டிவிட்டால், அவர்கள் வயதிற்கு விபரீத முடிவு எதுவும் எடுத்து விட்டால்? எவ்விதச் சலனமுமில்லாமல் ஏதோ நல்ல கலைப்பட இயக்குநர் சொல்லிக் கொடுத்ததைப் போல் மகளிடம் பேசினார், “மாடியில் தனி சமையலறை இருக்கிறது. இப்போதைக்கு மாதம் ஒரு தொகை தருகிறேன். அதற்குள் வாழ்ந்து பாருங்கள். திருட்டுப் புத்தியை விடு. முடிந்தால் விட்ட படிப்பைத் தொடரப் பார். அவனை வேலை தேடிப்பார்க்கச் சொல். நானும் தெரிந்த இடத்தில் சொல்கிறேன்.” அவர் “நாயே ! பேயே !” என்று திட்டியிருந்தால் கூட அவ்வளவு வலித்திருக்காது.

 

            இனி உடன்போக்கு. அகப்பொருள் பாடல்களில் பேசப்படும் களவியலில் உடன்போக்கு ஒரு பகுதி. வேட்டையாடுதல், பயிர் செய்தல் போன்ற தொழில் மேற்கொண்டு தலைவியைப் பேண வல்லவனாகவும், கொடிய விலங்குகளிடமிருந்து அவளைக் காக்க வல்ல வீரம் நிறைந்தவனாகவும் விளங்குகிறான் தலைவன். அத்தகையவனுடன் தலைவி போவதே உடன்போக்காகக் கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது விலங்குகளுடன் போர் செய்ய வேண்டியதில்லை. தற்கால நிலைக்கு ஏற்ப, யாரையும் அண்டிப் பிழைக்காமல் தலைவனோ தலைவியோ பொருளீட்டும் நிலையடைந்து, ஒருவர் மற்றவரைக் காக்கும் வல்லமை பெற்று, உடன்போக்கு மேற்கொள்ளுதல் காதலுக்கு சிறப்பு. முன்சொன்ன இரு கதைகளில் நாயகன் நாயகியால் காதல் கொச்சைப் படுத்தப்பட்டது. முதல் கதையில் பையனின் பெற்றோர், இவனுக்காக நாம் உழைத்து ஓடாவதைப் போல் இவனை நம்பி வந்தவளுக்காகவும் உழைப்போம் என விதியாக ஏற்றுக் கொண்டதால் இவர்கள் காலம் ஓடுகிறது. மற்ற கதையில் பெண்ணின் பெற்றோர் தாங்கிப் பிடித்ததால் இவர்கள் கதை நடக்கிறது. இல்லையென்றால் இவர்கள் கதி ? தற்காலத் திரைப்படங்களில் காதலன் பெண்களைப் போகப் பொருளாய்க் கொள்பவனாக, பார்வையிலேயே வன்முறையை அரங்கேற்றும் வேலை வெட்டியில்லாத வெறும் பயலாக இருந்தும், அவனும் நாயகனாகச் சித்தரிக்கப்படுவது இவர்களுக்கான அசட்டு நம்பிக்கையோ ?

 

            காதல் வெறும் இனக்கவர்ச்சியல்ல. காதலுக்குக் கண்ணில்லை என்பது வீணர்தம் பிதற்றல். காதலுக்குக் கண்ணும் உண்டு; கருத்தும் உண்டு. காதல் புனிதமானது; காதலே புனிதமானது. எனவே இளைஞனே ! ஓடிப் போவதெல்லாம் உடன் போக்கல்ல. இதை இருவரும் உணர்ந்தால், நீ சங்ககாலத் தலைவன்; உன்னவள் சங்க காலத் தலைவி. இல்லையேல் நீ ஒரு முட்டாள்; அவள் ஒரு அடிமுட்டாள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.