பிழம்பு

உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே செய்கிறோம்: மலக்குழி தொழிலாளர்கள்

Recommended Posts

: மலக்குழி தொழிலாளர்கள் துயர் தோய்ந்த தங்கள் கதைகளை பகிர்கிறார்கள்

விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ்
மணி

உயிருக்கு உத்தரவாதம் இல்லை, ஏராளமான உடல் உபாதைகள், போதிய ஊதியம் இல்லை, சமூதாயத்தில் மரியாதையும் இல்லை.

இதுதான் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் நிலை.

அரசாங்க வேலை என்று நம்பி...

"இது அபாயகரமான வேலை என்று தெரிந்தும் உடலையும் உயிரையும் பணயம் வைத்து இதை செய்வதற்கு ஒரே காரணம் இது அரசாங்க வேலை என்பதால்தான். எட்டு வருடங்களாக இந்த பணியில் இருக்கிறேன் ஆனால் 2 வருடங்களுக்கு முன்பு தான் இது அரசாங்க வேலை இல்லை என்பது தெரியவந்தது" என்கிறார் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் சென்னை சூளையை சேர்ந்த மணி.

மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனித கழிவுகளின் குழிக்குள் இறங்கி விஷவாயுத் தாக்கி உயிரிழிந்தனர் என்ற செய்தியை நாம் கேட்காமல் இல்லை.

இந்தியா முழுவதிலும் தமிழகத்தில்தான் மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் என்கிறது மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கான உரிமைகள் குறித்து பணியாற்றும் சஃபாயி கர்மசாரி அந்தோலன் என்னும் அமைப்பு.

மணி

இந்த வருடத்தில் மட்டுமே தமிழ்நாட்டில் இதுவரை 12 பேர் இந்த பணியில் ஈடுபட்டு இறந்துள்ளனர். ஆதாவது வெறும் நான்கு மாதங்களில் மட்டும் என்கிறது இந்த அமைப்பு.

பொதுவாக சமூக நிர்பந்தங்களால் தாங்களாக இந்த பணியில் ஈடுபடுவதும் மற்றும் அரசாங்கத்தில் ஒப்பந்தம் எடுத்த நபர்களால் பணி அமர்த்தப்படுவதும் என இரண்டு விதமாக இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

அரசாங்கத்தில் ஒப்பந்தம் பெரும் நபர்களால் பணியமர்த்தப்படுபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு அரசாங்க வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே இதில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் இது அரசாங்க பணியில்லை. அரசாங்க பணியில் கிடைக்கும் எந்த ஒரு நலனும் இதில் கிடைக்காது. இது ஒரு தினக்கூலி வேலை மட்டுமே என்று தெளிவாக சொல்லப்படுவதில்லை.

'வேறு வழியில்லை'

இவர்கள் பெரும்பாலும் அரசாங்க ஒப்பந்தக்காரர்களால் பணியமர்த்தப்பட்டாலும் இவர்களுக்கு எந்த ஒரு மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை.

"வயிற்று போக்கு, வாந்தி, தலைவலி இது எல்லாம் அடிக்கடி வரும். ஆனால் லீவு எடுத்தால் அன்றைய கூலி போய்விடும் என்பதால் அதை கண்டுகொள்ளாமல் வேலைக்கு போய்தான் தீர வேண்டும்" என்கிறார் மணி.

மூன்று பேர் ஒன்றாக உட்காரக்கூட முடியாத ஒரு சின்ன வீட்டில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் சிரமப்பட்டு வசித்து வருகிறார் இவர். இவர் குடும்பத்தின் முக்கிய வருமானம் இவருக்கு கிடைக்கும் தினக்கூலிதான்.

மணி

"இந்த அடைப்பு வேலையை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிடக்கூட முடியாது, வாந்தி மயக்கம்தான் வரும், யாரேனும் பக்கத்தில் வந்து எதுவும் கேட்டால் கூட பேச முடியாத அளவு சோர்வு இருக்கும், இதை வீட்டில் சொன்னால் பயப்படுவார்கள் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் இதுதான் என் குடும்பத்தின் வருமானம்" என்கிறார் அவர்.

சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது எங்களுக்கு எந்த ஒரு மருத்துவ உதவியும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை என்று கூறும் இவர், தலைவலி தாங்க முடியாமல் தன்னுடன் வேலை செய்த ஒருவர் தன்னைதானே மாய்த்துக் கொண்ட ஒரு சம்பவத்தை கண்ணீருடன் நினைவு கூறுகிறார்.

சமூகத்தில் புறக்கணிப்பு

இந்த பணியில் ஈடுபடுவதால் நியாயமான ஊதியமும் கிடைப்பதில்லை சமூகத்தில் மரியாதையும் கிடைப்பதில்லை என்கிறார் எண்ணூர் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி.

இவர் மனித கழிவுகளை அகற்றும் பணியில் 18 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். இவரின் பகுதியில் பெரும்பாலானோர் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். இளைஞர்கள் உட்பட. இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்.

"சுத்தம் செய்யும் வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்டால் பாத்ரூமில் இருக்கும் தண்ணீரை கொடுப்பார்கள். அதையும் சகித்து கொண்டு நாங்கள் குடிப்போம். அவர்களுக்காக சுத்தம் செய்யும் பணியை நாங்கள் செய்யும்போது, அவர்கள் எங்களை கேவலமாக மட்டுமே நடத்துவார்கள். மனிதர்களாக கூட பார்க்கமாட்டார்கள்" என்கிறார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவி

இது உயிருக்கே ஆபத்தான ஒரு பணி என்று தெரிந்துதான் பலரும் இதை செய்கின்றனர். ஆனால் இவர்கள் யாரும் இதை விருப்பத்தோடு செய்வதில்லை. ஏதோ ஒரு நாள் தங்களுக்கு மாற்று வழி ஏற்படும் என்றே இவர்கள் நம்புகின்றனர்.

'சாதிய வன்கொடுமை'

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது சாதி ரீதியான கொடுமை என்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.

இதன் அடிமட்டத்தில் சாதிய வேறுபாடுகள் மிக வலுவாக வேறூன்றி உள்ளது என்கிறார் சஃபாயி கரம்சாரி அந்தோலன் அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தீப்தி சுகுமார்.

இந்த அமைப்பின் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 1993 - 2017ஆம் ஆண்டு வரை 251 பேர் இந்த பணியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருமே பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள்.

"இது சட்டப்படி குற்றமாகும், மேலும் இந்த சட்டத்தின்படி இந்த பணியில் ஈடுபடுவோருக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் குறித்து சரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு ஏற்ற மாற்று வழிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும்.

தீப்தி Image caption இது ஒரு சாதிய வன்கொடுமை என்கிறார் தீப்தி

ஆனால் பெரும்பாலும் பணியாளர்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை" என்கிறார் தீப்தி சுகுமார்.

'சென்னையில் இல்லை'

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 252 மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் உள்ளதாக சென்னை மாநகராட்சி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இல்லை என்று தெரிவிக்கிறார் சென்னை மாநகராட்சியின் கட்டடங்கள் மற்றும் திடக்கழிவுத் துறையின் கண்காணிப்பு பொறியாளர் ஜி.வீரப்பன்.

"சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை சுத்தம் செய்யும் பணிகள் இயந்திரங்களை வைத்தே செய்யப்படுகிறது" என்கிறார் அவர்.

"ஏற்கனவே இந்த பணியில் ஈடுபட்டவர்களுக்கு மாற்று உதவிகளை செய்து அவர்கள் இந்த பணியைவிட்டு வேறு பணிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்" என்கிறார்

2013ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை தடை செய்யும் சட்டம் அதில் ஈடுபவர்களுக்கு முறையான மாற்று தொழில்களை அமைத்து தரப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

ஆனால் தங்களுக்கு இதுவரை எந்த ஒரு அரசாங்க உதவியும் கிடைக்கவில்லை என்கிறார் சிரஞ்சீவி

"ஏதோ ஒரு படிவத்தை நாங்கள் நிரப்பி கொடுத்தோம். ஆனால் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை அதனால் எங்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை" என்கிறார் அவர்.

தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய எந்த உதவித் தொகை பற்றிய விழிப்புணர்வும் இல்லாமலேயே பேசுகிறார் சிரஞ்சீவி,

இழப்பீடு கிடைப்பதில் தாமதம்

நாம் பேசிய பலருக்கும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு உதவித்தொகை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்றே தோன்றுகிறது.

ஆதிலட்சுமி

அதுமட்டுமல்லாமல் விஷவாயு தாக்கி உயிரிழந்தால் கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையை பெறுவதற்கும் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக சொல்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

"என் கணவர் இறந்து 18 வருடங்கள் ஆகிறது நானும் பல மனுக்களை கொடுத்து பார்த்துவிட்டேன் இதுவரை எந்த உதவியும் எனக்கு கிட்டவில்லை" என்கிறார் ஆதிலட்சுமி.

ஆதிலட்சுமியின் கணவரும் அவரின் தம்பியும், கழிவுநீர் தொட்டி ஒன்றை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்துவிட்டனர். ஆனால் சட்டப்படி அவருக்கு வரவேண்டிய இழப்பீடு இன்றும் கிடைக்கவில்லை.

மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவது சட்டப்படி குற்றம். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் மரியாதையுடன் வாழ்வதற்கான அனைத்து உரிமையும் உள்ளது என்கிறது சட்டம். ஆனால் இதுகுறித்து அங்கங்கு சில விழிப்புணர்வு இருந்தாலும் பெரும்பாலும் இது நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனம் என்கின்றனர் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதற்கு எதிராக போராடிவரும் செயற்பாட்டாளர்கள்

https://www.bbc.com/tamil/india-48112886

 

Share this post


Link to post
Share on other sites

என்ன கொடுமை இது, பாதுகாப்பு ஆடைகளும் இல்லை, சுவாச கருவிகளும் இல்லை.
மனிதர்கள் உள்ளே செல்ல முன்னர் விசவாயுவை வெளியேற்ற முடியாதா? நீண்ட குழாய்கள் போன்றவற்றை பொருத்தி உயர்வான இடத்தில் விசவாயுவை வெளியேற்ற முடியாதா?

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஏராளன் said:

என்ன கொடுமை இது, பாதுகாப்பு ஆடைகளும் இல்லை, சுவாச கருவிகளும் இல்லை.
மனிதர்கள் உள்ளே செல்ல முன்னர் விசவாயுவை வெளியேற்ற முடியாதா? நீண்ட குழாய்கள் போன்றவற்றை பொருத்தி உயர்வான இடத்தில் விசவாயுவை வெளியேற்ற முடியாதா?

திரைப்படங்களிலும்  அரசியலிலும்  மட்டும் தங்களை வல்லரசு என பிமிப்பூட்டும் நாடு அது.மனிதத்திற்கு தேவையான அடிப்படை தேவைகளை மறைத்து கேளிக்கைகளை முன்னிலைப்படுத்தும் நாடு அது.

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.