Justin

உடற்பருமனாதல்:மருத்துவக் குறிப்புகள்

Recommended Posts

( உடற்பருமனாதல் பிரச்சினையின் மருத்துவ/உடற்றொழிலியல் தகவல்களை இலகுவான தமிழில் தரும் ஒரு குறுகிய முயற்சி - மூன்று பகுதிகளாக இடம்பெறும். இது இணையவனின் உடல் எடை குறைப்புத் தொடருக்கு போட்டியாக எழுதப் படுவதல்ல! இங்கே உடற்பருமன் அதிகரிப்பதன்  மருத்துவ அறிவியல் அடிப்படையும், உடற்பருமனாதலை உருவாக்கும் காரணிகளும் மட்டும் சிறு குறிப்புகளாகப் பகிரப் படும்)

உலகளாவிய ரீதியிலும், வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகளிலும் உடற்பருமன் அதிகரித்தல் (obesity) என்பது மூன்றிலொரு பங்கினரைப் பாதிக்கும் ஒரு ஆரோக்கியக் குறைபாடாக இருக்கிறது. ஒருவரின் உடலின் உயரத்திற்கேற்ப அவரது உடல் நிறை இருக்க வேண்டும். இதனாலேயே உடல் கொழுப்பதை வெறும் உடல் நிறையாக அளக்காமல், உடல் நிறையை  உயரத்தின் வர்க்கத்தினால் வகுத்து வரும் உடற்திணிவுச் சுட்டி (body mass index- BMI) எனும் அளவீட்டை உடற்பருமனைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்துக் கொண்டு, வளர்ந்தோரில் BMI 25 முதல் 30 வரை இருந்தால், அவர்கள் உடல் எடை கூடியோர் (over weight) என்றும் 30 இலும் அதிகமாக இருந்தால் உடற்பருமனானோர் (obese) எனவும் மருத்துவ விஞ்ஞானம் வகைப் படுத்தி வைத்திருக்கிறது  உடலின் எடை இங்கே பங்களிப்புச் செலுத்துவதால் தசைகளைப் பெருப்பிக்கும் பயிற்சிகளால் பொடி பில்டர்களாகத் திகழுவோருக்கு இந்த அளவீடு சரியான ஆரோக்கியக் குறிகாட்டியாக இருக்காது. வளரும் குழந்தைகளிலும் இந்த உடற்திணிவுச் சுட்டி சரியான ஆரோக்கியக் குறிகாட்டியல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.இன்னொரு பக்கம், உடற்திணிவுச் சுட்டி 25 இலும் குறைவாக இருக்கும் ஒருவர், ஏனைய கொழுப்புடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப் படும் வாய்ப்புகள் குறைவெனினும், முற்றாக அந்த நோய்களற்று இருப்பார் என்றும் உறுதியாகக் கூற இயலாது. இதன் காரணம், உடம்பு வாசி எனப்படும் genotype காரணமாக, உடலின் தோற்கீழ் கொழுப்புக் குறைவாக இருந்தாலும், இதயத்தின் இரத்தநாளங்களில் கொழுப்புப் படிவது சிலரில் தாராளமாக நடக்கிறது. இதுவே உடற்பருமன் அதிகமாக இல்லாத ஒல்லிப் பித்தான்களும் சில சமயங்களில் மாரடைப்பு, மூளை இரத்த அடைப்பு போன்ற இதய குருதிக் கலன் நோய்களால் பாதிக்கப் படுவதற்குக் காரணம். எனவே, சாராம்சமாக, உடற்திணிவு சுட்டி என்பது ஆரோக்கியமான உடல் எடையைப் பேண பெரும்பாலானோரில் உதவும் ஒரு குறிகாட்டி!   ஆனால் முழுமையான ஆரோக்கியத்தைப் பேண இந்தக் குறிகாட்டியை மற்றைய பரிசோதனை முடிவுகளோடு இணைத்துப் பயன்படுத்துவது முக்கியம். உதாரணமாக, வருடாந்தம் உடற்பரிசோதனைகள் செய்யும் போது பெறப்படும் இரத்தக் கொழுப்பின் அளவு, கொலஸ்ரோலின் அளவு, குழூக்கோஸ் அளவு என்பனவும் ஒருவரின் அனுசேபத் தொழிற்பாட்டின் ஆரோக்கியத்தை (metabolic health) முழுமையாக அளவிடுவதற்குப் பயன்படுத்தப் பட வேண்டும். 

- தொடரும்

 • Like 8
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ஜஸ்டின் 

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து பகிருங்கள் ஜஸ்டின்.........!   👍 

Share this post


Link to post
Share on other sites

Very good info Justin. This is my contribution.

பதப்படுத்திய உணவு வகைகளில் பொதுவாக எண்ணெய் இருக்கும். இந்த  எண்ணெய் ஹைட்ரஜன் (H)  சேர்க்கப்பட்டதால் அறை வெப்பநிலையில் கட்டியாக இருக்கும். மேலும் நிறைய காலத்துக்கு பழுதாகாமல் கடையில்  வைத்து விக்கலாம். ஆனால் இந்த  ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட  எண்ணெய் LDL எனப்படும்   கெட்ட கொலஸ்டெராலை கூட்டி  HDL  எனப்படும் நல்ல குறைக்கும். இந்த கெட்ட LDL  தான் எமது  ரத்த குழாய்களை அடைத்து விடுகிறது. கடலை என்னை, நல்லெண்ணெய்  ஒலிவ் எண்ணெய் , தேங்காய் எண்ணெய்  என்பவை LDL குறைந்தவை. மரக்கறி என்னை, margarine போன்றவை மிகவும் கூடாத எண்ணெய் வகைகள். பதப்படுத்தி கடயில் விக்கும் எல்லா உணவுகளும்  transfat  என்னும் ஹைட்ரஜன்  சேர்க்கப்பட்ட  எண்ணெய் உள்ளவையே 

Edited by nilmini

Share this post


Link to post
Share on other sites
31 minutes ago, nilmini said:

Very good info Justin. This is my contribution.

பதப்படுத்திய உணவு வகைகளில் பொதுவாக எண்ணெய் இருக்கும். இந்த  எண்ணெய் ஹைட்ரஜன் (H)  சேர்க்கப்பட்டதால் அறை வெப்பநிலையில் கட்டியாக இருக்கும். மேலும் நிறைய காலத்துக்கு பழுதாகாமல் கடையில்  வைத்து விக்கலாம். ஆனால் இந்த  ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட  எண்ணெய் LDL எனப்படும்   கெட்ட கொலஸ்டெராலை கூட்டி  HDL  எனப்படும் நல்ல குறைக்கும். இந்த கெட்ட LDL  தான் எமது  ரத்த குழாய்களை அடைத்து விடுகிறது. கடலை என்னை, நல்லெண்ணெய்  ஒலிவ் எண்ணெய் , தேங்காய் எண்ணெய்  என்பவை LDL குறைந்தவை. மரக்கறி என்னை, margarine போன்றவை மிகவும் கூடாத எண்ணெய் வகைகள். பதப்படுத்தி கடயில் விக்கும் எல்லா உணவுகளும்  transfat  என்னும் ஹைட்ரஜன்  சேர்க்கப்பட்ட  எண்ணெய் உள்ளவையே 

உண்மையில் இரத்த குழாய்களில் ஏற்படும் காயங்களை குணமாக்கவே LDL படிகிறது, தொடர்ச்சியாக படிவதனால் அடைப்பு ஏற்படுகிறது. பசுமஞ்சள், கருந்துளசி போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் பயன்பெறலாம்.

https://paleogod.blogspot.com/2018/03/by-neadner-selvan.html

Edited by ஏராளன்
add address
 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

உடற்பருமன்: ஒரு வரவு செலவுக் குழப்பம்!

உடலின் சக்தித் தேவை, கட்டுமானம், தொழிற்பாடு என்ற மூன்று தேவைகளுக்குமாகத் தான் மாச்சத்து, புரதம், கொழுப்பு ஆகிய மூன்று பிரதான போசணைப் பொருட்கள் உள்ளெடுக்கப் படுகின்றன. இந்த மாபோசணைப் (macro nutrients) பொருட்களை உடலின் கலங்கள் பயன்படுத்த பல்வேறு நொதியங்கள் சிறப்பாகத் தொழிற்பட வேண்டும்: அதற்கு நுண்போசணைப் (micro nutrients) பொருட்களான விற்றமின்களும், கனிய உப்புகளும் அவசியம். இந்த மூன்று தேவைகளுக்காக நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், எங்கள் குடல் அதைச் சமிபாடடையச் செய்து, உறிஞ்சப் படக்கூடிய எளிமையான மூலக்கூறுகளாக மாற்றுகிறது. மாச்சத்து எந்த வடிவில் எடுக்கப் பட்டாலும், அது குளூக்கோசாகவும், பிரக்ரோசாகவும் மாற்றி  உறிஞ்சப் படுகிறது. புரதங்கள் அமினோ அமிலங்களாகவும், கொழுப்புணவு கொழுப்பமிலங்களாகவும் மாற்றப் பட்டு உடலினுள் பிரவேசிக்கின்றன. எனவே உடலின் கலங்களைப் பொறுத்த வரையில், அவை காண்பதும் பயன்படுத்திக் கொள்வதும் குளூக்கோஸ், சிறிது பிரக்ரோஸ், அமினோ அமிலம் மற்றும் கொழுப்பமிலம் ஆகிய மூலக்கூறுகளைத் தான். இவற்றுள் குளூக்கோஸ் உடற்கலங்களின் default ஆன சக்தி எரிபொருள்! குளூக்கோஸ் நேரடியாக கலங்களால் சக்தித் தேவைகளுக்காக எரிக்கப் படும் அதே வேளை, எஞ்சியது கிளைக்கோஜன் (glycogen) எனப்படும் சேமிப்புப் பொருளாக மாற்றப் பட்டு தசைகளிலும், ஈரலிலும் சேமிக்கவும் படுகிறது! உடல் பட்டினி கிடக்கும் போது, இந்த களஞ்சிய சேமிப்பில் இருக்கும் கிளைக்கோஜனைத் தான் குளூக்கோசாக மீள மாற்றி உடல் பயன்படுத்திக் கொள்ளும். இதே வேளை கொழுப்பமிலங்களும் நேரடியாக உடற்கலங்களின் சக்தி எரிபொருளாக எரிக்கப் படலாம். உண்மையில், ஒரு யுனிற் கொழுப்பை எரிப்பதால் வரும் சக்தி, ஒரு யுனிற் குளூக்கோசை எரிப்பதால் வெளிவரும் சக்தியை விட அதிகமானது! ஆனால், உடல் கொழுப்பை சாதாரண நிலைமைகளில் பிரதான சக்தி எரிபொருளாகப் பயன்படுத்தாமல் இருக்க சில காரணங்கள் இருக்கின்றன. உடற்கலங்களின் பிரதான பாகங்களின் கட்டுமைப்புக்கு மட்டுமன்றி, உடலின் முக்கிய ஹோர்மோன்கள், நோய்க்கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பு , குருதி உறைதல் என உயிர்காக்கும் பல தொழிற்பாடுகளுக்கு கொழுப்பு அவசியம். எனவே, சாதாரண நிலைமைகளில் உடல் கொழுப்பை எரிக்காமல்  பாதுகாப்பது  மட்டுமல்ல, ஒரு படி மேலே சென்று தனது தேவைக்கதிகமான குளூக்கோசை கொழுப்பாகவும் மாற்றும் வேலையை ஈரல் மூலம் செய்கிறது. இதனால் தான் கொழுப்பைக் குறைத்தாலும், சோறு, பாண் போன்ற மாச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வோர் உடல் பருமனாதல் பிரச்சினையை எதிர் நோக்குகின்றனர். 

ஒரு சிக்கலான பிரச்சினையை நாம் அணுகும் போது, நாம் வனத்தையும் பார்க்க வேண்டும், அந்த வனத்தை உருவாக்கும் மரம் செடி கொடிகளையும் பார்க்க வேண்டும். மேலே சொல்லப்பட்டவை மரம் செடி கொடிகள். இப்போது முப்பதாயிரம் அடிகள் மேலெழுந்து, வனத்தைப் பார்த்தால் உடல் கொழுத்தல் என்பது தேவைக்கதிகமான போசணையும் குறைவான எரிப்பும் என்பதைக் காணலாம்.  உடல் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய ஜீன்கள் (பரம்பரை அலகுகள், இவையே பெற்றோரிடமிருந்து எமக்குக் கடத்தப்படும் கூறுகள்) பல  கடந்த 10 ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. பரிசோதனை கூடங்களில், இந்த ஜீன்களில் சிலவற்றை எலிகளில் மாற்றிப் பரிசோதிக்கையில் அவற்றின் உடல் எடை சாதாரண எலிகளை விட இரட்டை மடங்காக அதிகரிப்பதைக் காண்கிறோம். இந்த எலிகள் சாதாரண எலிகளை விட அதிகம் சாப்பிடுகின்றன, ஆனால் குறைவாக சக்தியை எரிக்கின்றன. இந்த உடல் எடை தொடர்பான ஜீன்களில் முக்கியமானவை எங்கள் மூளையில் இருக்கும் ஹைப்போதலமஸ் என்ற பகுதியில் பசியைக் கட்டுப் படுத்தும் நியூரோன்களின் செயற்பாட்டுடன் சம்பந்தப் பட்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மூளையின் இந்தப் பகுதியை மையமாகக் கொண்ட மெலனனொகோர்ட்டின் (melanocortin) வலையமைப்பு எங்கள் பசி (hunger), பசியாறிய உணர்வு (satiety) என்பவற்றைக் கட்டுப் படுத்தும் பிரதான செயற்பாட்டு மையமாக இருக்கிறது. உடற்பருமனுடையோரில் மாறியிருக்கும் பிரதான ஜீன்களில் பல இந்த மெலனோகோர்ட்டின் கட்டமைப்புடன் நேரடித் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. ஆய்வு நடத்தப் பட்ட இனக்குழுக்களின் வகையைப் பொறுத்து, அதீத உடற்பருமனுடையோரில் இந்த மெலனோகோர்ட்டின் தொடர்பான பிரதான ஜீன் பிரச்சினை 2% முதல் 40% வரையாக இருக்கிறது. 

எமக்கான நல்ல செய்தி என்னவெனில், ஆசிய இனங்களில், இந்த பிரதான ஜீன் பிரச்சினை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால், பரம்பரையாகக் கடத்தபடும் சீரியசான உடற்பருமன் பிரச்சினையால் ஆசியர்கள் பாதிக்கப் படும் வாய்ப்புகள் குறைவு. இன வேறுபாடின்றி எல்லோருக்குமான நல்ல செய்தியும் இருக்கிறது:  எங்கள் பசியைக் கட்டுப் படுத்தும் ஜீன்களில் இருக்கும் பிரச்சினையால் மிதமான போசணை அதிகரித்தாலும், உடல் எடை கூடாமல் ஆரோக்கியமாக இருக்க உடல் எமக்கு ஒரு பிரதான வழியைத் திறந்தே வைத்திருக்கிறது. அந்த வழியின் பெயர் சக்திச் செலவழிப்பு! 

-தொடரும்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 5/8/2019 at 12:31 PM, ஏராளன் said:

உண்மையில் இரத்த குழாய்களில் ஏற்படும் காயங்களை குணமாக்கவே LDL படிகிறது, தொடர்ச்சியாக படிவதனால் அடைப்பு ஏற்படுகிறது. பசுமஞ்சள், கருந்துளசி போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் பயன்பெறலாம்.

https://paleogod.blogspot.com/2018/03/by-neadner-selvan.html

ஏராளன், நீங்கள் இணைத்திருக்கும் கட்டுரை இணைப்பில் இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானவையும் கூட. அடிப்படையான உயிர் இரசாயனவியல் அறிவற்ற ஒருவரால் எழுதப் பட்ட கட்டுரை இது. மூளையில் அதிகம் கொழுப்பு இருப்பதால் அதிக கொழுப்பு நல்லது என்பதும், சிவப்பு இறைச்சி இதயத்தில் இருப்பதால் அதிக சிவப்பு இறைச்சி நல்லது என்பதும்  அரைவேக்காட்டு விளக்கங்கள். இந்த விளக்கத்தின் படி, நாம் கீரையும் காய்கறிகளும் சாப்பிட்டால் பச்சை நிறமாக மாறி விட வேண்டும்! அப்படி நடக்கிறதா? இல்லை! 

1. சிவப்பு இறைச்சியில் இருக்கும் கார்னிரின் (carnitine) என்ற மூலக்கூறு இதயநோயோடு தொடர்பு படுத்தப் பட்டிருக்கிறது. எங்கள் உடற்கலங்களில் சிறுமணிகளில் (mitochondria) இருக்கும் ஒரு மூலக்கூறு  இந்த கார்னிரின். அதனால் இதை விற்றமின் போல எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நல்லது என்ற போலி விஞ்ஞான தகவல், கார்னிரின் அதீத அளவில் இதய நோயை அதிகரிக்கும்  என்ற ஆய்வு முடிவினால் நிராகரிக்கப் பட்டிருக்கிறது.

2. கொலஸ்ட்ரோல் அதிகம் எடுத்துக்  கொண்டால் இதய குருதிக் கலன்களில் கொழுப்புத் திட்டு (atheroma) அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது என்பது Framingham Heart Study என்ற பல்லாயிரம் பேரைக் கொண்டு  நடத்தப் பட்டு வரும் ஆய்வின் முடிவு. மேலும் கொலஸ்ரோலின் LDL வகை ஈரலில் இருந்து உடலின் ஏனைய பகுதிகளுக்கு கொழுப்பைக் காவிச் செல்வதால் அது குருதிக் கலன்களில் படிவைக் கூட்டுகிறது. HDL வகை உடலின் உறுப்புகளில் இருந்து ஈரலுக்கு கொழுப்பை எடுத்துச் செல்வதால் அது ஆரோக்கியமானதாக வகைப் படுத்தப் படுகிறது. 


3. பசு மஞ்சள், துளசி கொழுப்பைக் குறைக்குமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்த தகவலை உங்கள் இணைப்பின் சொந்தக் காரரான அரைவேக்காட்டு விஞ்ஞானி எழுதியிருந்தால் அதுவும் புலுடாவாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். 

ஆரோக்கியமற்ற போலி விஞ்ஞானத் தகவல்களை நம்பாமல், உரிய ஆதாரங்களுடனான தகவல்களை மட்டுமே இங்கு இணைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! 

நன்றி

Edited by Justin
எழுத்துப்பிழை திருத்தம்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Justin said:

ஆரோக்கியமற்ற போலி விஞ்ஞானத் தகவல்களை நம்பாமல், உரிய ஆதாரங்களுடனான தகவல்களை மட்டுமே இங்கு இணைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! 

ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவினர் விஞ்ஞானிகள் இல்லை, கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளனர். உணவு பழக்கங்களை மாற்றி தம்மை தாமே ஆராய்ந்து தற்போதைய நவீன ஆய்வுகூட இரத்த பரிசோதனைகள் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸ், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தியுள்ளதை நிரூபித்துள்ளனர்.
என்னை விட நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். குழுவிற்குள் சென்று சற்று வாசித்து பாருங்கள், நானும் ஆரம்பத்தில் நம்பவில்லை.
நன்றி அண்ணா.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஏராளன் said:

ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவினர் விஞ்ஞானிகள் இல்லை, கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளனர். உணவு பழக்கங்களை மாற்றி தம்மை தாமே ஆராய்ந்து தற்போதைய நவீன ஆய்வுகூட இரத்த பரிசோதனைகள் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸ், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தியுள்ளதை நிரூபித்துள்ளனர்.
என்னை விட நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். குழுவிற்குள் சென்று சற்று வாசித்து பாருங்கள், நானும் ஆரம்பத்தில் நம்பவில்லை.
நன்றி அண்ணா.

ஏராளன், மருத்துவரோ அல்லது உயிரியல் தெரிந்த கல்வியாளரோ உங்கள் இணைப்பில் உள்ள கட்டுரையை எழுதியதாக நான் நம்பவில்லை! உங்களுக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் கட்டுரையைக் காட்டிப் பாருங்கள், அவரும் இதையே சொல்வார்! உயிரியல் அடிப்படை இல்லாத முட்டாள் தனமான கருத்துகள் அதில் இருப்பவை! அவர்களின் தங்கள் மீதே அவர்கள் செய்து கொண்ட பரிசோதனை இந்த கட்டுரையின் அடிப்படையில் இருக்குமானால் அவர்களின் பரிசோதனைகளும் ஏமாற்றுத் தனமானவையாகவே இருக்கும் என நான் ஊகிக்கிறேன்! இது போன்ற நிரூபணமாகாத முட்டாள் தனங்களை யாரும் நம்புவது அவர்களது உரிமை! ஆனால், அதைப் பரப்பும் போது அதன் அடிப்படை பற்றிய கேள்விகள் எழும்! இது போன்ற போலி விஞ்ஞானக் கருத்துகள் கொண்ட இணைப்புகளை இங்கே இணைக்க வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! நன்றி 

Share this post


Link to post
Share on other sites
On 5/8/2019 at 12:03 PM, nilmini said:

Very good info Justin. This is my contribution.

பதப்படுத்திய உணவு வகைகளில் பொதுவாக எண்ணெய் இருக்கும். இந்த  எண்ணெய் ஹைட்ரஜன் (H)  சேர்க்கப்பட்டதால் அறை வெப்பநிலையில் கட்டியாக இருக்கும். மேலும் நிறைய காலத்துக்கு பழுதாகாமல் கடையில்  வைத்து விக்கலாம். ஆனால் இந்த  ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட  எண்ணெய் LDL எனப்படும்   கெட்ட கொலஸ்டெராலை கூட்டி  HDL  எனப்படும் நல்ல குறைக்கும். இந்த கெட்ட LDL  தான் எமது  ரத்த குழாய்களை அடைத்து விடுகிறது. கடலை என்னை, நல்லெண்ணெய்  ஒலிவ் எண்ணெய் , தேங்காய் எண்ணெய்  என்பவை LDL குறைந்தவை. மரக்கறி என்னை, margarine போன்றவை மிகவும் கூடாத எண்ணெய் வகைகள். பதப்படுத்தி கடயில் விக்கும் எல்லா உணவுகளும்  transfat  என்னும் ஹைட்ரஜன்  சேர்க்கப்பட்ட  எண்ணெய் உள்ளவையே 

நில்மினி, தகவலுக்கு நன்றி! ஆனால் அமெரிக்காவில் 2018 ஜூன் முதல் உணவுகளில் transfat பயன்படுத்தத் தடை! இன்னொரு விடயம்: ஆரோக்கியமான எண்ணையில் எப்படி தேங்கயெண்ணை வந்திருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை! பாமிற்றிக் அமிலம் என்ற நிரம்பிய கொழுப்பமிலம் மிகவும் நிறைந்தது தேங்கயெண்ணை (அதனால் தான் ஊரில் மாசிமாதக் குளிரில் தேங்காயெண்ணை நெய் போல உறைந்து விடும்!). இப்போது தேங்கயெண்ணை நல்லது ஒலிவ் எண்ணை கூடாது என்பதும் எங்கள் தமிழ் ஆட்கள் நம்பும் ஒரு fake news தான்! 

Share this post


Link to post
Share on other sites

Candid ஆக சில விடயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது! அதைச் சொல்லி விட்டு விடை பெறலாமென நினைக்கிறேன்!

பேலியோ உணவு முறை பற்றி அது வேலை செய்வது பற்றி எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை! ஆனால், இந்த பேலியோ முறையை வியாபாரமாக மாற்றுவோரின் உயிரியல் விளக்கம் என்பது எந்த அடிப்படையும் அற்ற முட்டாள் தனமான கற்பனை என்பது எனக்கு விளங்குகிறது. முறைசார் ரீதியாக உயிரியல் படித்து அதையே தொழிலாகச் செய்யும் எவருக்கும்விளங்கும்! இதை இலகு தமிழில் இங்கே சொல்லவே இந்தத் தொடர் தொடங்கப் பட்டது! இங்கே மோட்டுத் தனமான அரைவேக்காட்டு இணைப்புகளை இணைக்காதீர்கள் என்று டீசன்டாகத் தான் கேட்கப் பட்டது! அதைக் கூட கேட்க முடியாத முட்டாள் தனத்தோடு என் நேரம் விரயமாவதை நான் விரும்பவில்லை!

இத்தொடர் இத்துடன் முற்றுப் பெறுகிறது! ஏராளன் இதைத் தொடர்ந்து தன் "போலி விஞ்ஞான" விளக்கங்களால் உங்களுக்கு நன்மை பயப்பார்! ஆதரவுக்கு நன்றி!

Share this post


Link to post
Share on other sites

அண்ணை உங்கள் எழுத்தை தொடருங்கோ, நான் வாசிக்கிறேன்.
இடையூறு செய்யும் ஆசையில்லை.

Share this post


Link to post
Share on other sites
On 5/13/2019 at 7:18 PM, Justin said:

இத்தொடர் இத்துடன் முற்றுப் பெறுகிறது! ஏராளன் இதைத் தொடர்ந்து தன் "போலி விஞ்ஞான" விளக்கங்களால் உங்களுக்கு நன்மை பயப்பார்! ஆதரவுக்கு நன்றி!

ஜஸ்ரின் அண்ணா உங்கடை எழுத்தை குழப்ப இணைப்புகளை இணைக்கவில்லை, அதில் இருப்பதை வாசித்து எங்களுக்கும் தெளிவுபடுத்துவீர்கள் என்று நினைத்தேன்.
நீங்கள் ஆரம்பிக்கும் திரிகளில் இனிமேல் ஒன்றும் எழுதமாட்டேன்.
உங்கள் எழுத்தை தொடருங்கோ, தவறு ஏதும் செய்திருப்பின் மன்னிச்சுக்கொள்ளுங்கோ.
 

Share this post


Link to post
Share on other sites

இந்த திரியை ஜஸ்டின் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...விமர்சனங்களை வாசிக்காமல், அல்லது வாசித்தாலும் கருத்தில் கொள்ளாமல் தொடருங்கள்...என் போல் ஒரு சிலருக்காகவாவது தொடரலாம்

Share this post


Link to post
Share on other sites

பல நாட்கள் கடந்து இந்தத் திரி தொடர்வதால் ஒரு முன்கதைச் சுருக்கம்: மாச்சத்தையும், கொழுப்பையும் குறைவாக எடுத்துக் கொள்ளும் போது நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைகிறது. உடல் உழைப்பை அதிகரிக்கும் போது உடல் எரிக்கும் கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது. இந்த இரண்டு வழிகளால் உடலின் போசணையை சமநிலையில் வைத்திருப்பதால் உடற்பருமனாதலை பெரும்பாலானோரில் தடுக்கலாம் என்பது ஐந்தாறு தசாப்தங்களாக மீள மீள நிரூபிக்கப் பட்ட மருத்துவ உண்மை.

 உடற்பயிற்சியின் அறியப் பட்ட நன்மைகள் எவையென்று பார்க்தால் ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.  உடற்பயிற்சி:

 •  உடற்பருமனைக் குறைக்கிறது
 • இதய குருதிக்கலன் நோய்களைக் குறைக்கிறது
 • நீரிழிவு வரும் வாய்ப்பைக் குறைக்கிறது
 • வயது முதிர்ச்சியால் ஏற்படும் ஞாபக மறதியையும் (dementia) மூளையின் வினைத்திறன் இழப்பையும்       குறைக்கிறது
 • பாலுணர்வை (libido) இருபாலாரிலும் அதிகரிக்கிறது
 • மன அழுத்தம் (depression) , மனப்பதட்டம் (stress) என்பவற்றைக் குறைக்கிறது.

அனேகமான இந்த நன்மைகள் உடற்பயிற்சியின் போது அதிகரிக்கும் இரத்தவோட்டம் உடலுறுப்புகளுக்கு அதிகரித்த ஒட்சிசனையும் போசணைகளையும் எடுத்துச் செல்வதால் ஏற்படுகிறது. இதை விடவும், சில நன்மைகளுக்கு அடிப்படையான  சிறப்புக் காரணிகளைக்  கண்டறிந்திருக்கிறார்கள்.உதாரணமாக, நாம் சந்தோசமாக இருக்கும் வேளைகளில் எங்கள் மூளையில் சுரக்கும் என்டோர்பின்கள் (endorphin)  எனப்படும் சுரப்புகள் உடற்பயிற்சியின் போது அதிகம் சுரப்பதால் மன அழுத்தமும் பதகளிப்பும் குறைவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். உடற்பயிற்சியினால் சிறிது அதிகரிக்கும் ரெஸ்ரோஸ்ரிறோன் எனும் ஆண் ஹோர்மோன் (இது பெண்களிலும் சிறிது இருக்கிறது), பாலுணர்வு அதிகரிப்பிற்குக் காரணமாக அறியப் பட்டிருக்கிறது. இந்த ஹோர்மோன் வெறுமனே பாலுணர்வை அதிகரிப்பதற்காகவல்லாமல், உடலின் சக்தி எரிப்பை ஊக்குவிக்கவும் தசைகளை எதிர்கால உடற்பயிற்சிக்குத் தயாராக பலப்படுத்தவுமே சுரக்கப்படுகிறது என்று நம்பப் படுகிறது.

எனவே, உடற்பயிற்சி உடல்பருமன் உட்பட பல உபாதைகளுக்கு  நல்ல நிவாரணி என்பது கேள்விகளுக்கிடமற்ற ஒரு தரவு. ஆனால், எவ்வளவு உடற்பயிற்சி இந்த நன்மைகளையடைய அவசியம் என்பது மட்டும் தான் கடந்த சில ஆண்டுகளில் விவாதத்திற்குரிய பொருளாக இருக்கிறது. தற்போதைய அறிவியலின் படி, வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிரமான சக்தி செலவழிக்கும் உடற்பயிற்சி மேற்சொன்ன நன்மைகளை பெரும்பாலான மக்களில் ஏற்படுத்தப் போதுமானது.

நடை, வேகநடை மிதமான உடற்பயிற்சியாகவும், 10 நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடுதல் தீவிர உடற்பயிற்சியாகவும் பெரும்பாலானோரில் உதாரணப் படுத்தப் படலாம். சும்பா (Zumba) போன்ற குறுகிய நேரத்தில் அதிக கலோரி எரிக்கும் பயிற்சிகளும் தீவிர உடற்பயிற்சியின் உதாரணங்கள். உடற்பயிற்சியின் தீவிரம் என்பது உங்கள் உடல் நன்கு பயிற்சிக்கு பழக்கமடையும் போது மாறுவதை நீங்கள் உணர்வீர்கள். வேகநடையை பல மாதங்களாகச் செய்து வரும் ஒருவர், ஒரு கட்டத்தில் அதனால் களைப்படையாது போகும் கட்டத்தில், ஓடுதல் போன்ற தீவிர உடற்பயிற்சிகளுக்கு மாறுவதால் கலோரி எரிப்பைப் பேணலாம்.

 கலோரி எரிப்பிற்காக சுவாசத்தை அதிகரிக்கும் aerobic பயிற்சிகளையே மேலே நாம் பார்த்தோம். உடற்பயிற்சியின் இன்னுமொரு முக்கியமான, ஆனால் அனேகம் புறக்கணிக்கப் படும், வகை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளாகும் (resistance or weight training). உடல் அழகுக்காக தசைகளைக் கட்டமைக்கும் பயிற்சிகள் உடல் வனப்பையும் தாண்டி எமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். தசைகளை முறுக்கேற்றும் பழுதூக்குதல் போன்ற பயிற்சிகள்  கலோரி எரிப்பை கொஞ்சம் அதிகரிக்கின்றன. வலுவான தசைகள், குறிப்பாகக் காலின் தசைகள், வேகநடை, ஓட்டம் போன்ற உடற்பயிற்சிகளின் போது எமது மூட்டுக்கள், சவ்வுகள் அதிகம் சேதமாகாமல் காக்க அவசியமானவை என்று ஆய்வுகளில் கண்டறிந்திருக்கிறார்கள். தசைக்கட்டமைப்புப் பயிற்சிகளால் ரெஸ்ரெஸ்ரிறோன் ஹோர்மோன் நன்கு அதிகரிப்பதால், மேலே நாம் குறிப்பிட்ட நன்மைகள் கிடைக்கும்.

உடலில் இன்சுலின் சுரந்தாலும் உடற்கலங்கள் குழூக்கோசை உள்வாங்க இயலாத நிலை இரண்டாம் வகை நீரிழிவு (type 2 diabetes, T2D)எனப்படுகிறது. இந்த வகை நீரிழிவு தான், மிகையான போசணை, உடற்பருமன் அதிகரிப்பு, உடற்பயிற்சியின்மை என்பன அதிகரித்த மேற்கு நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு செய்யப் பட்ட ஒரு ஆய்வில், இந்த வகை நீரிழிவுடைய நோயாளிகளின் தொடையின் சுற்றளவை பழுதூக்கும் பயிற்சிகளால் அதிகரித்தால், அவர்களது நீரிழிவு கட்டுப் பாட்டுக்குள் வந்ததை அவதானித்தார்கள். இது எப்படி நிகழ்கிறது?  எமது தொடைப்பகுதியில் உள்ளவை உடலின் பாரிய தசைகளாகும். இந்தத் தசைகளைப் பயிற்சியினால் பெருப்பித்தால் அவற்றின் குழூக்கோஸ் தேவையும் அதிகரித்து, இரத்தத்தில் இருந்து குழுக்கோசை அவை பசியோடு உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் மிகக் குறைந்த மருத்துவத்துடனேயே இரத்தக் குழுக்கோஸ் கட்டுப் பாட்டில் வந்து விடுகிறது. உடலின் ஒரு பகுதியில் மட்டும் ஒரு தசையைப் பயிற்சியினால் பெருப்பித்தால் நீரிழிவு கட்டுப் பாட்டில் வருகிறதெனில், எங்கள் கைகள், தோள்கள், முதுகு  என சகல தசைகளையும் பயிற்சியினால் பெருப்பித்தால் எவ்வளவு இலகுவாக உடலின் குழூக்கோசைக் கட்டுப்படுத்தலாம் என யோசித்துப் பாருங்கள். இந்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு தான் வாரம் 150 நிமிட கலோரி எரிப்புப் பயிற்சியோடு, வாரத்தில் இரண்டு தடவையாவது பழுதூக்குதல் போன்ற தசைப் பயிற்சிகளையும் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உள்ளெடுக்கும் கலோரியைக் குறைத்தல், எரிக்கும் கலோரியை அதிகரித்தல், இதற்கு உதவியாக உடல் தசைகளை வலுப்படுத்திப் பெருப்பித்தல் ஆகியன உடற்பருமனைக் குறைக்க உதவும் எனப் பார்த்தோம். ஆனால், இந்த உடற்பருமனாதல் சமன்பாட்டில் முக்கியமான இன்னொரு அம்சமாக மனப்பதகளிப்பு (stress) இருக்கிறது. மனப்பதகளிப்பும், தூக்கமின்மையும் எப்படி உடற்பருமனாதலை அதிகரிக்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம். அதைத் தொடர்ந்து, நாம் உண்ணும் கொழுப்பு வகைகள், எமக்குள் இருக்கும் குடல் நுண்ணங்கிகள் எப்படி  உடற்பருமனாதலைப் பாதிக்கின்றன என்றும் பார்ப்போம்.

-தொடரும்    

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.