Jump to content

இஸ்லாமிய விரோதியா தீவிரவாதியா, நான் யார்? - ஸர்மிளா ஸெய்யித்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய விரோதியா தீவிரவாதியா, நான் யார்? - ஸர்மிளா ஸெய்யித்

on May 12, 2019

 

1555877421694.jpg?resize=1200,550&ssl=1

 

பட மூலம், Tharaka Basnayaka Photo, Axios

இஸ்லாத்தின் எந்தவொரு அடிப்படைவாத சிந்தனைகளையும் ஒரு சந்தர்ப்பத்தில்கூட தூக்கிப்பிடித்திராத, குறைந்தபட்சம் புர்காவோ ஹிஜாபோகூட அணியாத பெண் நான். பெரும்பாலான இடங்களில் “நானொரு முஸ்லிம்” என்று சொல்லிக் கொண்டாலே தவிர, என்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டு தோன்றுவதுமில்லை. மதம் ஆன்மீகமானதும், அது முழுக்க முழுக்க ஆழ் மனத்தோடு தொடர்பான ஒரு உள்மன யாத்திரை என்பதுமே மதம் பற்றிய எனது புரிதல். இருந்தும் நாட்டின் தற்போதைய சூழலில் நானும் ஒரு தீவிரவாதியாகவே பார்க்கப்படுகிறேன். இது எனக்கு அதிர்ச்சிதான்.

2002 முதல் பல்வேறு சமூக அபிவிருத்தித் திட்டங்களில் இணைத்துக் கொண்ட சுய முயற்சியை மட்டுமே நம்பி முன்னுக்கு வந்த பெண். ஒரு பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, சமூக செயற்பாட்டாளராக என்று கால சூழ்நிலைகள், தனிப்பட்ட ஆர்வம், அனுபவங்களுக்கு ஏற்றபடியாக மாறிவந்திருக்கிறேன். மந்த்ரா லைஃப் என்ற நிறுவனம் பல்வேறு நலத்திட்டங்களுடன் சுயமாக இயங்கக்கூடியதாக 2015இல் நிறுவப்பட்டது. எந்தவித இலாப நோக்குமற்ற பல நண்பர்களும் என்னோடு இந்தப் பயணத்தில் இருக்கிறார்கள். இந்த நண்பர்களில் என்னையும் இன்னொரு நண்பரையும் தவிர மற்ற எல்லாருமே முஸ்லிம் அல்லாதவர்கள். இன மத வேறுபாடின்றி வெற்றிகரமாகப் பல பணிகளையும் செய்திருக்கிறோம். பெண்கள் வலு, சிறுவர்கள் அபிவிருத்தி, உளவள ஆலோசனை, பாதிக்கப்பட்டவர்களை மீட்டல், அவர்களது நிகழ்கால வாழ்வுக்கு உதவுதல், தொழில் வழிகாட்டல்கள், இரசாயன பாவனையற்ற விவசாயம் என்று பல்வேறு செயற்றிட்டங்கள் இவற்றில் அடங்கும். இந்த செயற்பாடுகள் எதுவுமே, குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இலக்குவைத்ததாக இருந்ததில்லை. நான் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தபோதும் எந்தவொரு செயற்றிட்டத்தையும் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்துச் செய்ததில்லை. நிறுவனத்தைத் துவங்கியது, பதிவு செய்தது அனைத்தும் எதுல் கோட்டையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதியில். சிங்கள பெரும்பான்மை மக்கள்தான் பயனாளிகளாக இருந்தார்கள். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் இயங்கிப் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்ததில் மந்த்ரா லைஃப் நிறுவனத்திற்கென்று தனித்த பெயர் அமைந்தது. சமூக நல்லிணக்கத்திற்கான பணிகளில்கூட ஈடுபட்டோம். பல்லின மதத் தலைவர்களையும் அழைத்து மக்களோடு உரையாடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தோம். வெவ்வேறு சமூகங்களையும், கலாசாரங்கள், மதங்களையும் பிரதிநிதிப்படுத்துவோருக்கிடையில் புரிந்துணர்வையும் நட்பையும் வளர்க்கும் விதமாகவே மந்த்ரா லைஃபின் அனைத்து செயற்றிட்டங்களும் இருந்தன.

எந்த என்ஜியோவினதும் நிதியிலும் மந்த்ரா நிறுவனம் இயங்கியிருக்கவில்லை. முற்றிலும் சுயநிதியில்தான் இயங்கியது. சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் பல்வேறு செயற்பாடுகளில் மந்த்ரா உள்ளீர்த்துச் செயற்பட்டது. உணவு தயாரிப்பு, யோகா வகுப்புகள், சில கட்டண முறையிலான கற்பித்தல் செயல்பாடுகள் வழியாகத்தான் பெரும் பகுதி வருமானத்தைப் பெற்று நடத்தினோம். சமூக வியாபாரம் என்று சொல்லத்தக்க இலங்கையில் அவ்வளவு பரிச்சயமில்லாத ஒரு புதிய கருத்துருவாக்கத்தை செயற்படுத்திய மந்த்ரா லைஃப் அதே ஒத்த கொள்கை கொண்ட அமைப்புக்களுடன் வலையமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்ததும் அதன் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது. ‘குட்மார்க்கட்’ என்று பலராலும் பரவலாக அறியப்பட்ட ஒரு வலையமைப்பு எல்லா சமூக வியாபார நிறுவனங்களையும் ஏற்றுக் கொண்டதுபோல மந்த்ரா லைஃபிற்கும் ஆதரவளித்தது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் விளைவு தனிப்பட்ட ஒவ்வொரு மனிதரையும் ஏதோவொரு வகையில் பாதிப்படையச் செய்திருக்கிறது. மந்த்ரா லைஃபின் கனவுகளிலும் கற்கள் விழுந்துவிட்டன. மந்த்ரா லைஃபின் புதிய இடமான வாத்துவ நகரிலிருந்து விரட்டப்பட்டிருக்கிறோம். ‘முஸ்லிம்’, “பயங்கரவாதிகளை உருவாக்கும் சமூகத்தைச் சேர்ந்தவள்” என்ற காரணங்களின் முன்மொழிவுடன்தான் இது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மந்த்ரா லைஃப் என்றால் “முஸ்லிம் பெண் ஸர்மிளா ஸெய்யித்” இல்லை, அது ஒரு கூட்டுச் செயற்பாடு, மதத்தையும் இனத்தையும் முதன்மைப்படுத்தாது பல காரியங்கள் செய்துள்ளோம் என்ற நியாயங்கள் எதுவுமே எடுபடவில்லை.

இப்படி நான் நடத்தப்பட்டது ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில். 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘Church of the holy sprit’ என்றழைக்கப்படும் வாத்துவ தேவாலயத்தில்.

கடந்த பல ஆண்டுகளாகக் கொழும்பில் வசிக்கும் எனக்கும் வாத்துவ கத்தோலிக்க தேவாலயத்திற்குமான தொடர்பு ஒரே நாளில் தோன்றி ஒரே நாளில் முறிந்து போயிருக்கிறது. எல்லா ஆலயங்களுக்குள்ளும் நுழையும்போது எப்படியான பயபக்தியும், கண்ணியமும் உண்டாகுமோ அதற்கு எந்த வகையிலும் குறையாத உணர்வுடன்தான் 06.05.2019 அன்று நானும் அந்த ஆலயத்தினுள் நுழைந்தேன்.

காலி வீதியில் பாணந்துறை நகரை அடுத்து அமைந்திருக்கும் வாத்துவ நகருக்கும் எனக்குமான தொடர்பு இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்துதான் துவங்கியது. நான் பணியாற்றும் மந்த்ரா லைஃப் என்ற நிறுவனத்தின் வழியாகத்தான் அந்த தொடர்பு ஏற்பட்டது. எந்தவிதமான களங்கமுமேயற்ற சிந்தனையோடும் நேராகத் தெளிவான நோக்கத்தோடும்தான் அந்த நகரத்தில் காலடியெடுத்து வைத்தேன். இதற்கு முன்பு இந்த நகரத்திற்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இருக்கவில்லை.

2018 டிசம்பர் மாதமளவில் வாடகை குறைந்த ஒரு இடத்திற்கு மந்த்ரா லைஃப் நிறுவனத்தை மாற்றுவதற்கு இடம் தேடத் தொடங்கியபோது, சொந்தமாக ஒரு நிலத்தை வாங்கி கட்டண முறையில் பணத்தைச் செலுத்த தீர்மானித்தோம். இந்த முயற்சியில்தான் வாத்துவையில் ஒரு காணியைக் கண்டடைந்ததோம். உண்மையில் அந்தக் காணிதான் எங்களைக் கண்டடைந்தது. அதாவது காணியின் உரிமையாளரே எங்களைத் தொடர்பு கொண்டு தனது காணி வாத்துவையில் இருப்பதாகவும் அதனை மந்த்ரா லை.ஃபிற்கு உபயோகப்படுத்துவதற்கும் ஆலோசனை தந்தார். ‘அத்பவுர’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாக அவர் மந்த்ரா லைஃபை அறிந்துகொண்டு அதன் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டிருந்தார். மந்த்ரா லைஃபிற்கு அது பொருத்தமாகவும் அமைந்துவிடவே அந்த இடத்தை வாங்க நினைத்தோம். ஆனால், அவ்வளவு வசதி இருக்கவில்லை. ஆகவே, 15 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, மெது மெதுவாக அதன் உரித்தைப் பெறுவதற்கு உரிமையாளருடன் பொருந்தி அதற்கான உடன்படிக்கைகள், உறுதிகள் என்ற சட்டப்படியான ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். இந்தக் காணி உரிமையாளர் ஒரு சிங்களவர். இதே வாத்துவ நகரில் பிறந்து வளர்ந்தவர். இலங்கை சிறுபான்மை சமூகம் பற்றி இவருக்கு நிரம்ப நல்லபிப்பிராயங்கள் இருந்தன. எங்களோடு காணி உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வதில் அவருக்கு எந்த வகையிலும் இரண்டாவது எண்ணப்பாடு இருக்கவில்லை. சிங்களவரான அவரோடு உடன்படிக்கை செய்வதில் எங்களுக்கும் எந்தவித தடுமாற்றமும் இருக்கவில்லை.

இந்தக் காலத்தில் குறிப்பிட்ட அந்தக் காணியில் இருந்த  வீட்டில் வாடகைக்கு ஒரு குடும்பம் வசித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இரண்டு ஆண்டுகள் மாத்திரமே செய்து கொண்ட உடன்படிக்கையுடன் ஏழு ஆண்டுகள் சட்டவிரோதமாக அங்கு குடியிருந்தார்கள். உரிமையாளரும் அவரது மொத்தக் குடும்பமும் வெளிநாட்டில் வசிப்பவர்களாக இருந்தபடியால் வாடகை குடியிருப்பாளரை அவ்விடத்திலிருந்து அகற்ற முடியாதுபோன சூழல் புரிந்தது. நான் அந்த வீட்டுக்குச் சென்று அங்கு குடியிருந்த தம்பதியருடன் பல முறை சுமுகமான உரையாடல்களைச் செய்தேன். அதிலிருந்து அவர்கள் புதிய வீடொன்றை அமைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. புதிய இல்ல வேலைகள் முடியும் வரைக்கும் அந்த வீட்டில் வசிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். நாங்களும் அனுமதித்தோம். இந்த அனுமதி ஒரு மாத காலத்தை விஞ்சியது. குறிப்பிட்ட தேதியில் அந்த மனிதர் வீட்டைக் காலி செய்யவில்லை. எந்தக் கணமும் வீட்டைக் காலி செய்வதற்கான எல்லா வசதியும் அவர்களுக்கு இருந்தது. காரணம், அவர் வாத்துவவிலேவே பிறந்து வளர்ந்தவர். அதே தெருவில்தான் அவரது தாயின் வீடுகூட இருந்தது. இருந்தும் அந்த நபரின் நோக்கம் ஒருவித தெளிவற்றதாயிருக்கவே சில சிறு விவாதங்களைச் செய்யவும் நேர்ந்தது. வாடகைக் குடியிருப்பாளர் வீட்டைக் காலி செய்த கடைசி நாள்தான், ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்று, நாட்டின் சூழ்நிலை முற்றாக மாறியது.

மந்த்ரா லைஃபிற்காக எடுத்துக் கொண்ட இடத்தை இந்தக் காலத்தில் பூட்டி வைக்க மட்டுமே முடிந்தது. குண்டு வெடிப்புச் சம்பங்கள் நடந்த ஒன்பதாவது நாள் வாத்துவை வீட்டைப் புனர் நிர்மாணம் செய்வதற்காக ஒரு கட்டுமானத் தொழிலாளியுடன்  சென்றேன். அப்போது வீட்டைக் காலி செய்து சென்றிருந்த முன்னாள் குடியிருப்பாளர் உடனடியாக அங்கு வந்து, கிராம சேவகர் சந்திக்க சொல்லியதாகச் சொன்னார். இந்த இடத்தில் நீங்கள் செய்யப்போகின்ற செயற்றிட்டம் பற்றியும் அவர் கேட்டதாகக் கூறினார். அன்று கிராம சேவகரைச் சந்திப்பதற்கான தினமாக இருக்கவில்லை ஆதலால் சந்திக்க முடியவில்லை.

மறுநாள் காலை வாத்துவைப் பொலிஸிலிருந்து பிரியந்த என்ற பொலிஸ் உத்தியோகத்தர் அழைத்து காணி தொடர்பான விபரங்களைக் கேட்டார். அதன் ஆவணங்களை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் வரும்படி கூறினார். அதே வேகத்தில் காணி உரிமையாளரும் வெளிநாட்டிலிருந்து அழைத்தார். வாத்துவை தேவாலய பிதா அழைத்ததாகவும் காணியை இப்போது வைத்திருப்பவர்களின் விபரங்களைக் கேட்டதாகவும் கூறினார். அத்துடன், தேவாலய பிதாவின் கைப்பேசி எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பி அவரைத் தொடர்பு கொள்ளும்படியும் கேட்டிருந்தார். நான் உடனே பிதாவைத் தொடர்பு கொண்டேன். அவர் தேவாலயத்தில் வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டதுடன், 06.05.2018 காலை 8.00 க்கு வரும்படி நேரத்தையும் குறிப்பிட்டார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக எல்லா இடங்களிலும் சோதனை நடப்பதுபோல் தான் இதுவும் என்று எண்ணிக் கொண்டு சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நான் ஒரு முஸ்லிம் பெண் என்பதை அந்தக் காணியின் முன்னாள் குடியிருப்பாளர் மூலமாகத் தெரிந்து கொண்டு காணியை விட்டுவிடுமாறு எச்சரிக்கை செய்யவே அங்கு அழைத்திருந்தனர்.

“இங்குள்ள மக்கள் நல்லபிப்பிராயத்துடன் இல்லை. அவர்கள் பயப்படுகிறார்கள்” என்றுதான் தேவாலய பிதா பேச்சைத் தொடங்கினார்.

“இங்குள்ள மக்கள் யாருமே என்னையோ எங்கள் நிறுவனத்தையோ இன்னும் அறியவில்லை. நாங்கள் இன்னும் அந்த இடத்திற்கு உத்தியோகபூர்வமாக வரவில்லை. வாங்கி மட்டும்தான் இருக்கிறோம். அதற்குள் எப்படிப் பொதுமக்களுக்கு ஒரு அபிப்பிராயத்துக்கு வரமுடியும்” என்று கேட்டேன்.

உடனே “நீ முஸ்லிம்” என்றார் தேவாலய பிதா. அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் செயற்பாடுகளால் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையால் ஈர்க்கப்பட்டிருந்த எனக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த மற்றொரு நகரான மட்டக்களப்பில் ”பயங்கரவாதிகளையும் அவர் குடும்பங்களையும் மன்னித்துவிட்டதாக” பேராயர் நடத்திய பிரசங்கத்தின் பின்னால் இருக்கும் வலி, சமூக நல்லிணக்க உணர்வு என்பவற்றுக்கு முன்னால் இந்த நடத்துகை அநீதியாகத் தோன்றியது. இப்படி நடத்தப்படுவதற்கு நான் எந்த வகையிலும் பொருத்தப்பாடானவளாக இல்லாத நிலையில் அங்கே ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட்டேன். எவ்வளவு சமாதானமான நியாயமான விடயங்களை முன்வைத்தும் பிதா எதையும் உள்வாங்கவே இல்லை. அவர் திரும்பத் திரும்பச் சொன்னதெல்லாம், ”நீ முஸ்லிம். இப்படித்தான் அந்த சென்டர் இந்த சென்டர் என்று துவங்குவீர்கள். நாங்கள்தான் செய்திகளில் பார்த்தோமே, பள்ளிகளிலேயே ஆயுதங்களை ஒழித்து வைத்திருப்பவர்கள் நீங்கள். உங்களுடைய சேவையோ செயற்பாடோ எங்களுக்குத் தேவையில்லை. எங்கள் மக்களுக்கான சமூக அபிவிருத்திப் பணிகளை நாங்கள் முன்னெடுப்போம். நீ ஏதாவது நல்லது செய்ய விரும்பினால், முஸ்லிம் சமூகத்துக்குப் போய் செய். குண்டுகளோடு குதிக்க இருப்பவர்களுக்கு உள ஆலோசனை வழங்கித் திருத்து. மீறி இங்கு வந்தால், பௌத்த பிக்குவையும் இணைத்துக் கொண்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று உறுதிபடக் கூறினார்.

பொலிஸ் நிலையத்தில் இப்படி அச்சுறுத்தப்படவில்லை. ஆனால் இங்கு வருவது பாதுகாப்பில்லை. மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

இவர்கள் ‘மக்கள்’ என்று யாரைக் கூறுகிறார்கள் என்பது எனக்குப் புரியவேயில்லை. அந்த ஊரில் எந்த மக்களுக்கும் என்னைத் தெரியாது. ஆக இந்த முடிவுகள் அனைத்தும் சில தனிநபர்களின் விருப்பத்திற்கு அமைவாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன.

2012 இல் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் உயிரச்சுறுத்தலை எதிர்கொண்டு கைக்குழந்தையுடன் இந்த நாட்டை விட்டே செல்லும்படியான நிலைக்குத் தள்ளப்பட்டேன். ‘உம்மத்’ நாவல் வெளியானவுடன் 2014 இல் மீண்டும் என் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இவையெல்லாம் நடந்தும், எனது சொந்த ஊருக்கு 9 ஆண்டுகளாகச் செல்ல முடியாத சூழ்நிலையிருந்தும் நாட்டுக்குத் திரும்பி வந்தேன். இந்த நாட்டின் மீது எனக்கிருந்த நேசம், நம்பிக்கை தவிர வேறு எதன் பொருட்டும் நான் இத் தீர்மானத்தை எடுக்கவில்லை. இஸ்லாமியக் கலாசாரக் காவலர்களின் கண்காணிப்பில் இருந்து தள்ளியிருக்கும் பொருட்டு சுமார் 16 ஆண்டுகள் வாழ்ந்து பழகிய முஸ்லிம்கள் அதிகம் வாழும் தெஹிவளைப் பகுதியை விட்டு ஶ்ரீஜயவர்த்தன பகுதியில் குடியேறினேன். அவ்வளவு தூரம் சிங்கள மக்களில் எனக்கு நல்லபிப்பிராயமும் நட்பும் இருந்தது. இன்னும் இருக்கிறது.

முஸ்லிம் சமூகம் என்னை இஸ்லாமிய விரோதியாக நோக்குகிறது. சிங்கள சமூகம் இஸ்லாமியத் தீவிரவாதியாக சித்தரிக்க முற்படுகின்றது. இந்த நாட்டில் பாதுகாப்பாக கௌரவமாக வாழ முடியுமா என்ற கேள்வி திரும்பவும் திரும்பவும் மேலெழுந்து வந்து கடுமையாக வேதனை செய்கின்றது.

வாத்துவவில் மந்த்ரா லைஃபிற்குச் சொந்தமாக ஒரு இடம் என்ற கனவு சரிந்து விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தலாம், ஆனால் நான் யாருக்காக என்னவிதமாகச் செயற்படவேண்டும் என்று கூறப்பட்ட இடமும், கூறப்பட்ட விதமும் என்னை பெரிய அளவில் அச்சுறுத்திக் கொண்டேயிருக்கின்றது. இந்த நாட்டின் ஆன்மா ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு சக்திகளால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது ISIS பயங்கரவாதிகளால் நடந்தேறியுள்ளது. இந்தக் கறையைத் துடைத்தெறிந்து நம் எதிர்கால சமுதாயத்திற்கு முரண்பாடுகளற்ற ஒரு தேசத்தைக் கையளிக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையுடையதும்.

நாட்டின் எதிர்காலத்தை உறுதியற்றதாகவும் தனிமனிதர்களின் எதிர்காலத்தைப் பயத்தின் பிடியில் வைத்திருக்கவும் அதிகார சக்திகள் விரும்புகின்றன. இதன் மூலமாக அரசியல் இலாபமடைவதே அதிகார சக்திகளின் விருப்பம். இந்நாட்டின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இதற்கான சான்றுகளை நிறையவே காணலாம். இனவாதம், மதவாதம் இரண்டுமே பல்வேறு காரணிகளின் நிமித்தம் தனிநபர்களின் தீர்மானங்களின்படி நாட்டைப் பிடித்தாட்டுகின்றன. இந்நாட்டினுடைய ஒரு பிரஜையாக எனக்கிருந்த பெருமிதங்கள், நம்பிக்கைகள், பாதுகாப்புணர்வு அனைத்துமே கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழலில் இருந்தே இதனை எழுதுகிறேன்.

வாத்துவ மக்கள் என்னையோ, மந்த்ரா லைஃப் நிறுவனத்தையோ புறக்கணிப்பதற்கான எந்த அடிப்படையுமில்லை, இருந்தும் அந்த மக்களின் சார்பாக மத பீடங்கள் அந்தத் தீர்மானத்தை எடுத்து நிராகரிக்கின்றன. இந்த நிராகரிப்பிலிருந்து உருவாகும் வெறுப்புணர்வும், அது சமாதானத்தின் ஆணிவேர்களை எவ்வளவு தூரம் அரிக்கச் செய்யக்கூடியதும் என்பதை அந்த மத பீடங்கள் அறியாதுள்ளன. சிங்கள பௌத்தர்களையும், சிங்கள கத்தோலிக்கர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட வாத்துவ மக்களின் மதபீடங்களின் எதிர்ப்புணர்வை, கோபத்தை, அச்சத்தை, வலியைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பதை எப்படித்தான் சொல்வது? நம் காயங்களைக் குணப்படுத்துவதற்கான மருந்து ஒன்றுபடுவதில்தான் உள்ளதென்று எப்படிப் புரியவைப்பது? இன மத வெறிகளுக்கு எதிராக  செயற்படவேண்டும் என்று இதுவரை காலமும் எழுதியும் செயற்பட்டும் வந்த என்னை இந்த இரு வெறிகளும் நேரடியாகத் தாக்குகிறபோதெல்லாம் நானொரு உதவியற்றவளாக தனித்துவிடப்பட்டவளாக பாதுகாப்பு அற்றவளாகவே உணர்கிறேன். சுற்றியுள்ள எல்லாமும் என்னை எச்சரிக்கை செய்ய செய்வதறியாது இதனை எழுதி முடிக்கிறேன்.

Sharmila-Seyyid-e1493619461155.jpg?resizஸர்மிளா ஸெய்யித்

 

 

https://maatram.org/?p=7784

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2019 at 10:51 PM, கிருபன் said:

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையால் ஈர்க்கப்பட்டிருந்த எனக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த மற்றொரு நகரான மட்டக்களப்பில் ”பயங்கரவாதிகளையும் அவர் குடும்பங்களையும் மன்னித்துவிட்டதாக” பேராயர் நடத்திய பிரசங்கத்தின் பின்னால் இருக்கும் வலி, சமூக நல்லிணக்க உணர்வு என்பவற்றுக்கு முன்னால் இந்த நடத்துகை அநீதியாகத் தோன்றியது.

அதுசரி பயங்கரவாதிகளை மன்னிக்க இவர் யார் ....? யார் இவருக்கு அத்தாரிட்டி கொடுத்தது ...?
கர்தினால் என்றால் புத்தபிக்கிகளை கண்டால் குழைந்து ஸலாம் போட்டு ஞாயிற்றுக்கிழமை தவறாமல் கோயிலில் திருப்பலி ஒப்புக்கொடுப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் ,இவரது குடும்பத்திலும் நாலைந்து பிணம் விழுந்து அப்போது வந்து மன்னித்திருந்தால் அது மேட்டர், அழிந்தது யாரோ இவர் சைக்கிள் கப்பில் கடா வெட்டுறார் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.