Jump to content

இலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், இலங்கை
 
தாக்குதலுக்குள்ளாகிய தேவாலயம்படத்தின் காப்புரிமை ANADOLU AGENCY/GETTY IMAGES

இலங்கையில் கடந்த மாதம் 250க்கு மேலானோர் கொல்லப்பட காரணமான தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளூர் முஸ்லிம்கள் இருந்திருக்கலாம் என்பதை அறியவருவது அந்நாட்டு மக்களில் பலருக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

இத்தகைய பேரழிவை உண்டாக்கிய தொடர் குண்டுவெடிப்புகளை சிறியதொரு குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது?

வில்பத்து தேசிய பூங்காவுக்கு அருகில் ஒரு தென்னந்தோப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் வெடிபொருட்கள் மற்றும் 100 வெடிக்கும் கருவிகளை இலங்கை காவல்துறை எதிர்பாராத விதமாக ஜனவரி மாத நடுவில் கண்டுபிடித்தபோதே, தாக்குதல் நடைபெறுவதற்கான துப்புகள் கிடைத்திருந்தன. இந்த பகுதி இலங்கையின் மேற்கு கடற்கரை ஓரத்தில் புத்தளம் மாவட்டத்தில் தொலைவில் இருந்த காடாகும்.

நாட்டின் பிற இடங்களில் இஸ்லாமிய கடும்போக்காளர்கள் என்று சந்தேகத்திற்குரியவர்களால் புத்தர் சிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்வங்களில் காவல்துறை புலனாய்வு மேற்கொண்டு வந்தது. இது தொடர்பாக புதிதாக உருவாக்கப்பட்டிருந்த "தீவிர முஸ்லிம் குழுவின்" நான்கு பேர் கைதாகினர்.

மூன்று மாதங்களுக்கு பிறகு, சந்தேகத்திற்குரிய இஸ்லாமியவாதிகள் அதிக மக்கள் நிறைந்திருந்த தேவாலயங்கள், கொழும்புவிலுள்ள ஹோட்டல்கள், நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாண நகரான மட்டக்களப்பு ஆகியவற்றில் தற்கொலை தாக்குதல் நடத்தி, 40 வெளிநாட்டவர்கள் உள்பட 250க்கு மேலானவர்களை கொன்றுள்ளனர்.

தென்னந்தோப்பில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தனிப்படதொரு சம்பவமல்ல. சில மாதங்களில் நடத்த இருந்த தாக்குதல்களுக்கு எச்சரிக்கை அளிக்கக்கூடிய பல்வேறு சந்தேக சம்பவங்களில் ஒன்றாகவே இருந்துள்ளது.

சிரியா சென்று இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவோடு தங்களை இணைத்து கொண்ட பல இலங்கையர் தாயகம் திரும்பியிருந்த நேரமது.

ஆனால், இந்த சம்பவத்தின் தொடர்பு அப்போது அறியப்படவில்லை.

இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அண்டை நாடான இந்தியா மற்றும் அமெரிக்காவின் உளவு அமைப்புகள் எச்சரிக்கைகள் வழங்கிய பின்னரும், இந்த ஈஸ்டர் திருநாளில் இந்த கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னர்தான் ஜனவரி மாதம் புத்தளத்தில் கைதானவர்களுக்கும், அதிக மக்களின் உயிரிழப்புக்கும் காரணம் என சந்தேகப்படும் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் நபருக்கும் தொடர்புகள் இருப்பதை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

அரசியல் மோதல்கள்

இலங்கை அரசின் உயரிய நிலையில் அரசியல் ரீதியிலான மோதல்கள் மற்றும் உட்கட்சி பூசல்கள், தாக்குதல் பற்றி வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் கவனிக்கப்படாமல் போய்விட ஓரளவு காணமாகிவிட்டன.

ஆனால் 2009ல் உள்நாட்டு போர் முடிவடைந்ததிலிருந்தே இலங்கையில் சமாதானத்தைப் பற்றி இருந்த திருப்தியும் இதில் ஒரு பங்காற்றியுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் அரசுக்கு இடையில் நடைபெற்ற உள்நாட்டு போர் முடிந்ததில் இருந்து, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தன.

வரைபடம்

ஆனால், இவ்வளவு பெரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதல் நடைபெறலாம் என்று எந்த அறிகுறியும் தென்படவில்லை.

"இத்தகைய கொடிய குண்டு தாக்குதல்களால் இஸ்லாமியவாதிகள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளனர். இந்த நடவடிக்கை முழுவதையும் மிகவும் ரகசியமாக வைத்தும் இதனை நடத்தியுள்ளனர்," என்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள சில கடும்போக்காகளர்களை கண்காணித்து வந்த வைத்திருந்த இலங்கை பயங்கரவாத தடுப்பு அமைப்பின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விரிவான திட்டமிடல், பாதுகாப்பிடங்கள், திட்டமிடுவோர் மற்றும் செயல்படுத்துவோர் என விரிவான வலையமைப்பு, குண்டு தயாரிப்பு நிபுணர்கள் மற்றும் கணிசமான நிதி ஆதரவு அனைத்தும் இதற்கு தேவைப்பட்டிருக்கும்.

இவை அனைத்தும் ஒரு நாட்டின் கண்காணிப்பில் இருந்து தப்பியது எப்படி?

இந்த கேள்விகள் சிலவற்றிற்கு பதில் இல்லை. ஆனால், பல ஆண்டுகளாக பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கு தெரியாமலேயே சிறிய எண்ணிக்கையிலான சாக துணிந்த கடும்போக்காளர்களும், ஐஎஸ் அனுதாபிகளும் எவ்வாறு உருவாகி வந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைப்புகள், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

தனிப்பட்ட சில குடும்பங்களின் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மிகவும் தீவிர உணர்வு உடையவர்களாக மாறி, தனித்தனியான குழுக்களாகச் செயல்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"இவ்வாறுதான் அவர்களின் நோக்கங்களும், நடவடிக்கைகளும் தங்களுக்குள்ளேயே மறைத்து வைத்துள்ளனர்," என்று தற்போது நடந்துவரும் புலனாய்வின் முக்கியத்துவம் கருதி, பெயரை வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்ட அந்த பயங்கரவாத தடுப்பு அமைப்பின் முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.

ஒவ்வொரு குழுவும், பிற தீவிர உணர்வுடைய குடும்ப குழுக்களுடன் சேர்ந்து பெரிய வலையமைப்பை உருவாக்கியது. கருத்தியலுக்கும் மேலான நம்பகத்தன்மை இந்த வலையமைப்புகளில் மிகவும் கடுமையாக பாதுகாக்கபட்டு வந்திருப்பதாக ஊகிக்கப்படுகிறது.

மறை குறியீடுகளாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் செய்தி சேவை செயலிகள் இதற்கான செய்தித் தொடர்பையும், திட்டமிடலையும் ஊக்குவித்துள்ளதாக நம்பப்படுகிறது.

"இவர்கள் செய்திகளை எவ்வாறு பரிமாறி கொண்டார்கள், ஒருங்கிணைத்தார்கள் என்பதை கண்டுபிடிக்க புலனாய்வாளர்கள் இப்போது முயன்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்கள்

தங்களின் இலக்கை சாதிப்பதற்கு குடும்பங்களை பயன்படுத்தி கொள்வது இந்த கடும்போக்காளர்களின் புதிய பாணியின் ஒரு பகுதியாக உள்ளது. சில குடும்பங்கள் கடந்த ஆண்டு இந்தோனீசியாவில் தேவாலயங்கள் மற்றும் காவல் நிலையங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதை நாம் பார்த்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கடும்போக்காளர்களோடு தொடர்புடையதாக நம்பப்படும் 70 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த வலையமைப்பு கலைக்கப்பட்டுவிட்டது என்று எல்லாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை.

"இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரித்தவர்கள் என இன்னும் அதிகமானோர் உள்ளனர்... எனவே, இரண்டாவதாக தாக்குதல்கள் நடத்தலாம் என்று எதிர்பார்ப்புகள் உள்ளன," என்று தனது பெயரை வெளியிட விரும்பாத மூத்த அரசு அதிகாரி ஒருவர் கடந்த வாரம் என்னிடம் தெரிவித்தார்.

"ஒரு பயங்கரவாத சம்பவத்தை பொறுத்தமட்டில், ஒவ்வொரு தற்கொலை தாக்குதலாளியும் தான் திட்டமிட்ட தாக்குதலை செயல்படுத்துவதற்கு குறைந்தது ஐந்து பேர் தேவைப்படுகின்றனர். இவ்வாறு பார்த்தால் ஒன்பது தாக்குலாளிகளுக்கு உதவி செய்திருக்கலாம் என்று நம்பப்படும் இன்னும் 45 பேர் வெளியில் உள்ளனர். எனவே எங்களுக்கு கவலையாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இவரது இந்த தகவல், பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்த கருத்துக்குமுரணாக அமைகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களோடு தொடர்புடைய எல்லா சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்னர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் என்று சமீபத்தில் அவர் அறிவித்திருந்தார்.

முஸ்லிம் தொழுகைபடத்தின் காப்புரிமை AFP

இந்த குண்டு தாக்குதல்கள் இலங்கையில் பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்களவர் மற்றும் தமிழர்களுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய சமூகமான முஸ்லிம்களின் மீது கவனத்தை கொண்டு வந்துள்ளது. இலங்கையில் வாழும் 22 மில்லியன் மக்களில் 10 சதவீதம் முஸ்லிம்களாவர்.

உள்நாட்டு போரின்போது, முஸ்லிம்கள் தமிழீழ விடுதலை புலிகளால் துன்புற்றனர். 1990ம் ஆண்டு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இலங்கையின் வடக்கிலுள்ள யாழ்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதே ஆண்டு கிழக்கிலுள்ள மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இலங்கை பாதுகாப்பு படைப்பிரிவுகளில் சேர்ந்தனர். பெரும்பான்மையான முஸ்லிம்கள் சிங்களத்திலும், தமிழிலும் சரளமாக பேசக்கூடியவர்கள் என்பதால், உளவுத்துறை நிறுவனங்களில் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

தமிழின கிளர்ச்சிக்கு எதிராக இலங்கை அரசு கடுமையாக போரிட்டு வந்த நிலையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிழக்கில் அதிதீவிர பழமைவாத இஸ்லாமிய இயக்கம் அமைதியாக வலுவடைந்து வந்தது.

"இந்த செயல்முறை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியது. வாக்ஹாபிவாத இஸ்லாம் இளைஞர்களை கவர்ந்தது. வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதரவும் இதற்கு இருந்தது," என்று இலங்கையின் கிழக்கில் அமைந்துள்ள காத்தான்குடி மசூதிகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான மசூக் அகமத் லெப்பே கூறினார்.

முஸ்லிம் பெண்கள்படத்தின் காப்புரிமை AFP

சுமார் 47 ஆயிரம் பேர் வாழுகின்ற கடலோர நகரமான காத்தான்குடியில் பெரும்பாலானோர் முஸ்லிம்களே. மத்திய நகரத்திலுள்ள சில கடைகள் அபயா என்கிற முஸ்லிம் பெண்களால் அணியப்படும் உடல் முழுவதையும் மறைக்கும் முழு நீள கறுப்பு ஆடையை விற்கின்றன. வண்ணமயமான குவிமாடங்கள் மற்றும் கோபுரங்கள் இந்த நகரை சுற்றி காணப்படுகின்றன.

சுமார் 60 மசூதிகளை கொண்டுள்ள காத்தான்குடியில், இன்னும் அதிகமான மசூதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மசூதிகள் மிதமான மற்றும் பிரதான நீரோட்ட போதனைகளை கற்பித்து வரும் வேளையில், சில அதிதீவிர பிற்போக்கு இஸ்லாம் போதனையையும் கற்பித்து வருவதாக முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய அடிப்படைவாத இஸ்லாமால் ஈர்க்கப்பட்டவரில் ஒருவர்தான் முகமது சஹ்ரான் ஹாசிம். காத்தான்குடியை சோந்த தீவிர மத போதகரான இவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின்போது ஷாங்கரிலா விடுதியில் தற்கொலை தாக்குதல் நடத்தினார் எனறு அரசு கூறுகிறது.

சஹ்ரானின் தந்தை மதப் பள்ளி ஒன்றுக்கு இவரை படிக்க அனுப்பினார். ஆனால், அவர்கள் உண்மையான இஸ்லாமை பின்பற்றவில்லை என்று கூறி, ஆசிரியர்களுக்கு எதிராக சாஹ்ரான் கேள்விகள் கேட்க தொடங்கினார்.

மதராஸா பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், தனது சொந்த செலவில் மதக் கல்வியை தொடர்ந்து, பின்னர் உள்ளூர் மசூதிகளின் நடைமுறைகளை எதிர்த்து போதிக்க தொடங்கினார்.

"நாங்கள் இந்த கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, எந்தவொரு மசூதியிலும் அவரை போதிக்க அனுமதிக்கவில்லை. பின்னர், அவர் தனது சொந்த குழுவை தொடங்கினார்," என்று லெப்பே தெரிவித்தார்.

"தாருள் அதார்" என்ற பிற்போக்கு குழுவை தொடக்கத்தில் நிறுவிய சஹ்ரான், பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் (என்டிஜே) என்கிற கடும்போக்கு அமைப்பை 2014ம் ஆண்டு நிறுவினார்.

இந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை இந்த குழுதான் நடத்தியுள்ளது என்று இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

சஹ்ரான் ஹாசிமின்

புத்தரின் சிலைகளை சிதைத்தது, பிற முஸ்லிம் குழுக்களோடு மோதியது ஆகிய பிரச்சனைகளால் என்டிஜே உறுப்பினர்கள் காவல்துறையினருக்கு முன்னரே தெரிந்தவர்கள். ஈஸ்டர் தாக்குதல்கள் போன்ற கொடிய சம்பவங்களை நடத்தும் அளவுக்கு இந்த குழுவினருக்கு திறனுள்ளது என்பது பலரையும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் மலேசியாவில் போன்ற வெளிநாடுகளில் இருந்து தொடக்க காலத்தில் என்டிஜே நன்கொடை பெற்று வந்தது,

காத்தான்குடியின் கடற்கரையோரத்தில் இந்த குழுவுக்கு சொந்தமான மசூதியை கட்டுவதற்கு இந்த பணம் உதவியது.

இந்த தாக்குதல்களை இந்த குழுதான் நடத்தியதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டிய பின்னர், இந்த மசூதி மூடப்பட்டுள்ளது.

கடுமையான, கண்டிப்பான இஸ்லாமிய வடிவத்தை பின்பற்றுகின்ற வாஹாபிய பாரம்பரியத்தால் ஒரு போதகராக சஹ்ரான் தூண்டுதல் பெற்றார்.

ஆனால், அவர் அதற்கு மேலும் சென்று கடும்போக்கு கருத்தியலில் ஈடுபாடு கொண்டார் என்று காத்தான்குடி முஸ்லிம் குழுக்கள் தெரிவிக்கின்றன.

மறைபொருள் இறைநம்பிக்கை வடிவத்தை பின்பற்றும் சிறிய சூஃபி முஸ்லிம்களுக்கு எதிராக என்டிஜே பரப்புரை மேற்கொண்டது.

இலங்கை அரசால் மூடப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமின் மசூதிபடத்தின் காப்புரிமை Reuters Image caption இலங்கை அரசால் மூடப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமின் மசூதி

2017ம் ஆண்டு என்டிஜே உறுப்பினர்களும், சூஃபி முஸ்லிம்களின் ஒரு குழுவினரும் கூரிய ஆயுதங்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் மோதிக்கொண்டனர்.

சஹ்ரானின் தந்தை மற்றும் இரண்டாவது சகோதரர் உள்பட என்டிஜேயின் 10 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், சஹ்ரானும் அவரது சகோதரர் ரில்வானும் தலைமறைவாகினர்.

பரந்த அளவில் விமர்சனம் எழுந்த பின்னர், சஹ்ரானை இந்த குழுவில் இருந்து நீக்கிவிட்டதாக என்டிஜே கூறிவிட்டது. ஆனால், இந்த குழுவில் சஹ்ரான் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்தார் என்ற சில முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

தலைமறைவாக இருந்தபோது, இறைநம்பிக்கை இல்லாதோருக்கு எதிராக வெறுப்புரைகளை காணொளியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தார். தனது குடும்ப உறுப்பினர்களில் பெரும்பான்மையோரை தனது கடும்போக்கு வன்முறை சிந்தனையின் வழியில் சஹ்ரான் ஈர்த்து கொண்டதாக நம்பப்படுகிறது.

"அவர்கள் சாதாரண முஸ்லிம் குடும்பம்தான். ஏழை பின்னணியில் இருந்து வந்த சஹ்ரானின் தந்தை இங்குள்ள சமூகத்தால் அறியப்படுபவர். குரானை கற்று தேர்ந்த சஹ்ரான் சிறந்த போதகர். இத்தகைய செயல்களை சஹ்ரானும், அவரது குடும்பமும் செய்ய முடியும் என்று யாரும் நம்பவில்லை," என்கிறார் லெப்பே.

"ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்னால், சஹ்ரானின் தந்தையையும், அவரது ஒரு சகோதரரையும் சந்தித்தேன். அவர்கள் இயல்பாகவே பழகினர். இந்த அளவுக்கு அவர்கள் எவ்வாறு கடும்போக்காளர்களாக மாறினார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது," என்று என்டிஜேயின் முன்னாள் உறுப்பினரும், சஹ்ரானின் உறவினருமான ஒருவர் தெரிவித்தார்.

விளக்கப்படம்

உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு பின்னர், தெற்கு காத்தான்குடியிலுள்ள சாய்ந்தமருது நகரில் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது சஹ்ரான் ஹாசிமின் பெற்றோரும், இரண்டு சகோதரர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

மூன்று பேர் தற்கொலை தாக்குதலாளிகளாக மாறி குண்டை வெடிக்க செய்தனர். கொல்லப்பட்ட 15 பேரில் ஏழு பேர் குழந்தைகள்.

கோயில்களில் வழிபாடு நடைபெறும்போது பௌத்த பெண்கள் அணிகின்ற வெள்ளைநிற ஆடைகளை அங்கு காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

மே மாத நடுவில் விசாக் பௌத்த பண்டிகையின்போது மாற்றுடையில் கோயில்களில் நுழைந்து மேலதிக தாக்குதல்கள் நடத்துவதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

"துணிக் கடையிலிருந்து வாங்கியிருந்த ஒன்பது ஆடைகளில் ஐந்தை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. நான்கு ஆடைகளை காணவில்லை," என்று அந்த சம்பவ இடத்தில் இருந்த அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார்.

சஹ்ரானின் மனைவியும், மகளும் காயங்களோடு உயிர் பிழைத்தனர்.

தனது சகோதரரின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அவரிடம் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் ஏப்ரல் 24ம் தேதி முகமது ஹாசிம் மதானியா பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னர், தன்னுடைய குடும்பத்தினர் யாரையும் பார்க்கவில்லை, பேசவும் இல்லை என்று அவர் கூறினார்.

அவர் சொல்வதில் இருந்து இந்த வலையைமைப்பில் இல்லாத சில குடும்ப உறுப்பினரில் இவர் ஒருவர் என தெரிகிறது.

இந்த தேடுதல் வேட்டையின்போது, அவரது வீட்டிலிருந்து சுமார் 20 லட்சம் இலங்கை ரூபாயை கண்டெடுத்துள்ளதாக கூறி ஒரு வாரத்திற்கு பின்னர், காவல்துறை அவரை கைது செய்தது.

சாய்ந்தமருதுவில் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் குழந்தைகளின் பாடநூல்கள் கிடந்தன. Image caption சாய்ந்தமருதுவில் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் குழந்தைகளின் பாடநூல்கள் கிடந்தன.

இலங்கை தேவாலய தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு முன்னர், கொழும்புவில் வைத்து அவரது சகோதரரிடம் இருந்து இந்த தொகையை அவர் பெற்றிருக்கலாம் என்று காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதானியா எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.

தீவிர உணர்வு பெறுதல்

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டியின் மத்திய மாவட்டத்தில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் பல முஸ்லிம்களை கடும்போக்கு நிலைக்கு தள்ளியிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட இந்த கலவரங்களின்போது குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மசூதி ஒன்றில் தீ வைக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான வீடுகளும், கடைகளும் சேதமாகின.

இந்த கலவரங்களிளுக்கு பின்னர் தங்களை பாதுகாக்க இலங்கை அரசு எதையும் செய்யவில்லை என்று உள்ளூர் முஸ்லிம்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இந்த கலவரங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னால், குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்களே தீவிர உணர்வுடையவர்களாக மாறியிருந்தனர், 2014ம் ஆண்டு சிரியாவிலும், இராக்கிலும் குறிப்பிட்ட பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஐஎஸ் தீவிரவாத குழு அறிவித்த பின்னர் டஜன் கணக்கானவர்கள் இந்த குழுவால் ஈர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு கண்டியில் நடைபெற்ற முஸ்லிம்களு்கு எதிராக கலவரங்கள் அவசர நிலையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின.படத்தின் காப்புரிமை AFP Image caption கடந்த ஆண்டு கண்டியில் நடைபெற்ற முஸ்லிம்களு்கு எதிராக கலவரங்கள் அவசர நிலையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின.

இலங்கையின் மத்திய பகுதியிலுள்ள பள்ளி தலைமையாசிரியர் முகமது முக்சின் நிலாம் என்பவர்தான் சிரியாவிலுள்ள ஐஎஸ் அமைப்பில் இணைந்த முதல் இலங்கையர் ஆவார். 2015ம் ஆண்டு ரக்காவில் அவர் உயிரிழந்தார்.

"இந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்திய தற்கொலை தாக்குதலாளிகள் சிலர் தீவிர உணர்வு பெறுவதில் முக்கிய பங்காற்றிய ஒருவராக நிலாம் இருந்ததாக நம்பப்படுகிறது," என்று பிபிசியிடம் பேசிய பயங்கரவாத தடுப்பு அமைப்பின் முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.

இந்த தாக்குதலாளிகள் சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டனரா என்பது தெளிவாக தெரியவில்லை. அப்துல் லதீஃப் முகமது 2014ம் ஆண்டு துருக்கி வரை சென்று பின்னர் தாயகம் திரும்பிவிட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிரியாவு செல்வதற்கு முன்னால், பிரிட்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் கல்வி கற்ற பணக்கார குடும்பத்தை சோந்த ஜமீல், தேயிலை வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஏப்ரல் 21ம் தேதி இவரது இலக்கு கொழும்புவிலுள்ள தாஜ் சமுத்திரா ஆடம்பர விடுதியாகும். ஆனால், அவரது குண்டு வெடிக்காமல் போயிருக்கலாம். அவர் அவ்விடத்தை விட்டு செல்வது தெரிகிறது. பின்னர், டிகிவாலவின் புறநகரிலுள்ள மோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தி இரண்டு விருத்தினர் கொல்லப்பட காரணமானார்.

நான்கு குழந்தைகளுக்கு தந்தையாக 37 வயதான ஜமீல், உள்ளூர் கடும்போக்காளர்களுக்கும், வெளிநாடுகளை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎஸ் அல்லது பிற இஸ்லாமியவாத குழுக்களுக்கு இடையிலான தொடர்பாளராக இருந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது,

பல ஆண்டுகளுக்கு முன்னால், இவரது கடும்போக்கு பார்வையால் மிகவும் கவலையடைந்த ஜமாலின் குடும்பம், பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் உதவியை நாடியது.

"அவர் முழுமையாக தீவிர உணர்வு பெற்றிருந்தார். கடும்போக்கு கருத்தியலை ஆதரித்தார். அவரோடு தர்க்க ரீதியாக வாதிட முயன்றேன்," என்று இந்த அதிகாரி தெரிவித்தார்.

ஜமீல் ஹோட்டலை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது,படத்தின் காப்புரிமை Reuters Image caption ஜமீல் ஹோட்டலை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது,

"இந்த கருத்தியலை எவ்வாறு பெற்றாய் என்று கேட்டபோது... லண்டனில் பிரிட்டனின் தீவிர கருத்தியலுடைய போதகர் அன்ஜிம் சௌத்திரியின் உரைகளை கேட்டதாக அவர் கூறினார். அந்த போதனைகளின்போது அவரை சந்தித்திருப்பதாகவும் அவர் கூறினார்," என்று இந்த அதிகாரி தெரிவித்தார்.

பிரிட்டனில் மிகவும் பிரபலமானவராகவும், ஆபத்தான தீவிர மதப் போதகரில் ஒருவராகவும் அன்ஜிம் சௌத்திரி கருதப்படுகிறார். இஸ்லாமிய அரசு குழுவுக்கு ஆதரவு வழங்கியதாக 2016ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், 2018ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்,

ஜமீலின் கடும்போக்கு சிந்தனைகளை உருவாக்கிய முக்கிய அம்சம் அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்தது என்று ஜமீலின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறிய பின்னர், ஜமீல் மேலும் தீவிர உணர்வுடையவராக மாறியுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு அவர் வந்தபோது, அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இது எவ்வளவு நாட்கள் நீடித்தது என்று தெரியவில்லை.

மசாலா வியாபாரிகள்

இலங்கையின் கிழக்கிலுள்ள மதப் போதகரான சஹ்ரான் ஹாசிம், கொழும்பிலுள்ள பணக்கார மசாலா வியாபாரிகளான இன்ஷாஃப் மற்றும் லாஹிம் இம்ராஹிமோடு எவ்வாறு தொடர்பை ஏற்படுத்தினார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

சகோதரர்களான இருவரும் ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

குருநேகள என்ற நகரை சேர்ந்த ஒரு பெண்ணை சஹ்ரான் திருமணம் செய்து கெண்டதாக முஸ்லிம் சமூக தலைவர் ஒருவர் கூறினார்.

2016ம் ஆண்டு இலங்கை அமைச்சரிடம் இருந்து விருது பெறும் இன்ஷாப் இப்ராஹ்ம் (வலது) அவரது தந்தை (மத்தியில்)படத்தின் காப்புரிமை Facebook Image caption 2016ம் ஆண்டு இலங்கை அமைச்சரிடம் இருந்து விருது பெறும் இன்ஷாப் இப்ராஹ்ம் (வலது) அவரது தந்தை (மத்தியில்)

சஹ்ரான் ஹாசிமோடு சேர்ந்து ஷாங்கரிலா விடுதியைத் தாக்கிய லாஹிம் இம்ராஹிம், குருநேகளயில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாத்தளவில் மசாலா நிறுவனத்தை நடத்தி வந்தவர். இந்த பகுதியில்தான் சஹ்ரானும், லாஹிம் இம்ராஹிமும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

முதல் தாக்குதல்கள் நடைபெற்று சில மணிநேரங்களுக்கு பின்னர் கொழும்புவின் புறநகரில் தெமட்டகொடயிலுள்ள லாஹிம் இம்ராஹிம் வீட்டில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது தற்கொலை குண்டு தரித்திருந்த அவரது மனைவி குண்டை வெடிக்க செய்து தன்னையும், அவர்களின் மூன்று குழந்தைகளையும், மூன்று அதிகாரிகளையும் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒன்பது தற்கொலை தாக்குதல்களை நடத்துவதற்கு மிகவும் கவனமான திட்டமிடுதலும், பெரிய அளவிலான நிதி ஆதரவும் தேவைப்படும் என்று அதிகாரிகளும், பாதுகாப்பு நிபுணாகளும் கூறுகின்றனர்.

இந்த தாக்குதல்கள் நடைபெற்ற ஒரு வாரத்திற்கு பிறகு, மாவனெல்ல நகரை சேர்ந்த மொஹமட் அப்துல் ஹக் மற்றும் முகம்மது ஷஹீத் அப்துல் ஹக் ஆகிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இம்ராஹ்ம் சகோதரர்களோடு இவர்களுக்கு தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

"ஹக் சகோதரார்களுக்கு புத்தளம் மாவட்டத்தில் காயல் ஒன்றை பார்த்தப்படி பாதுகாப்பான வீடு ஒன்று இருப்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சொத்தை வாங்குவதற்கான முன்பணம் இம்ராஹிம் சகோதரர்களிடம் இருந்து வந்துள்ளதற்கான சாட்சியங்களை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்," என்று முன்னாள் உளவுத்துறை முகவர் தெரிவித்தார்.

இப்ராஹிம் சகோதரர்களின் தந்தை முகமது இப்ராஹிம் இப்போது போலீஸ் காவலில் உள்ளார். கொழும்பு வணிக வட்டாரத்தில் பிரபலமானவரும், அரசியலில் தொடர்புகளை கொண்டவருமான இவர், நாடாளுமன்றத்திற்கு ஒருமுறை போட்டியிட்டு தோற்றவர். இவர் மீது குற்றச்சாட்டு பதியப்படவில்லை. தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இதுவரை அவரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜமீல், இம்ராஹிம் சகோதரர்களை தீவிர உணர்வடைய தூண்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த குடும்பங்கள் ஒன்றையொன்று அறிந்திருந்தன.

அரசியல் அம்சங்கள்

உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்களால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும், வலியிலும் இருந்து இலங்கை மக்கள் மீண்டு வருகையில், இந்த தாக்குதல்களுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் சண்டைகள் மற்றும் பிரச்சனையை கையாளும் முறையாலும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

இரண்டு வேறுபட்ட கட்சிகளை சேர்ந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கரசிங்கவும் பகைமை உணர்வோடு உள்ளனர்.

ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கபடத்தின் காப்புரிமை Getty Images

இவர்கள் ஒருவரையொருவர் புறக்கணிக்க எடுத்து கொண்ட முயற்சிகள் அரசியலில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு படைப்பிரிவுகள் துறையை கையில் வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கரசிங்கவும், இந்திய உளவுத்துறையில் வழங்கப்பட்டிருந்த தகவல்கள் தங்களிடம் பகிரப்படவில்லை என்று இந்த தாக்குதல் நடைபெற்றவுடன் தெரிவித்தனர்.

உயரிய உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடமும் இது பற்றி கூறவில்லை என்பதை சிறிசேனவும் உறுதிபடுத்தினார்.

இரு தலைவர்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடு நாட்டை பெருமளவு பாதிக்கிறது என்று மனித உரிமை வழக்கறிஞர் பவானி பொன்சேகா கூறுகிறார்.

"நாட்டின் பாதுகாப்பில் ஏற்பட்ட பாதிப்பை விட மேலதிக விடயங்கள் இதிலுள்ளது. இதுதான் கவலை தருவது" என்று அவர் கூறுகிறார்.

இருவேறு அமைச்சர்கள் உயிரிழந்தோர் பற்றி தவறான எண்ணிக்கையை வழங்கியது பற்றி மாறிமாறி குறைகூறி கொண்டதில் இருந்து, அரசின் பல்வேறு அமைப்புகளின் செய்தி தொடர்பில் ஏற்பட்ட பலவீனமும் வெளிப்பட்டுள்ளது.

தாக்குதல் நடைபெற்று ஐந்து நாட்களுக்கு பின்னர், இந்த தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100க்கு மேலாக குறைத்து அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க பெண்ணொருவரை சந்தேக நபராக தவறாக அடையாளப்படுத்தியதற்கு இலங்கை காவல்துறை மன்னிப்பு கோர வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

பிபிசியோடு பேசிய பெரும்பாலான அரசு அதிகாரிகள், தாக்குதலோடு தொடர்புடையோர் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

இது, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கையை இஸ்லாமிய அரசு குழு இலக்கு வைக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "சிரியாவிலும், இராக்கிலும் தாங்கள் கட்டுப்படுத்திய இடங்களை இழந்துள்ள இந்த குழு, தங்களின் இடங்களின் ஒரு பகுதியாக இலங்கை தீவை பார்க்கிறது" என்கிறார்.

"இந்நிலையில், ஐஎஸ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று அறிக்கை வெளியிட சமீபத்தில் அமைதியை நிலைநாட்டிய நாடு ஒன்றை தேர்வு செய்திருக்கிறது," என்று இந்த வாரம் ஜனாதிபதி சிறிசேன பிபிசியிடம் கூறியுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, பல தசாப்பதங்களாக கடும் வன்முறைகளை அனுபவித்துள்ளது.

ஆனால், இந்த முறை இலங்கையின் படைப்பிரிவுகள் யாரை எதிர்க்க முயல்கின்றன என தெளிவாக தெரியவில்லை. எதற்காக இது நடைபெறுகிறது என தெரியவில்லை. உலக அளவில் பயங்கரவாத வலையமைப்பின் ஆதரவோடு இருக்கலாம் என ஊகமே உள்ளது.

இதற்கான போராட்டம் நீண்டதாக அமையலாம். ஆனால், அரசியல் ரீதியாக பிளவுண்டிருந்தால் நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48239044

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.