Jump to content

முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…

May 22, 2019

womens.jpg?resize=800%2C533கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாசவிடுதிகள் உட்பட ஒன்பது இடங்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களால் 290இற்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.இத் தாக்குதல்கள் நாட்டின் சகல மக்களையும் ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியுள்ளது.

சமதைபெண்ணிலைவாத குழுவினரான நாம் உயிரிழந்த அனைவருக்குக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது ஆதரவையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவும் அரசினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இவற்றுள் பலநடவடிக்கைகள் மக்களின் பாதுகாப்புக்காகவும், அச்சத்தைப் போக்குவதற்காகவும் எடுக்கப்பட்டிருப்பினும் ஒரு சில நடவடிக்கைகள் மக்களில் ஒரு பகுதியினரை அதிலும் பெண்களை எதிர்மறையாகப் பாதித்துள்ளதையிட்டு நாம் மிகவும் மனம் வருந்துகின்றோம்.

குறிப்பாக பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை யாரும் மறைக்க கூடாது என்ற தடையைப் பயன்படுத்தி புர்கா மற்றும் நிகாப் அணியும் முஸ்லிம் பெண்கள் மீது காட்டப்படும் பாரபட்சங்களும், முன்வைக்கப்படும் அழுத்தங்களும், அவர்கள்; பொதுவெளிகளிலும் வேலையிடங்களிலும் எதிர்கொள்ளும் சவால்களும், எதிர்ப்புக்களும் எமக்கு மிகுந்த கவலையை உண்டுபண்ணியுள்ளன.

இலங்கை பன்மைத்துவ அடையாளங்களைக் கொண்டவர்கள் வசிக்கும் நாடு ஆகும்.புடவையை இந்திய முறையிலோ கண்டிய முறையிலோ உடுத்தல், புர்கா அணிதல், சட்டை அணிதல்,தாலி கட்டுதல், காப்பு அணிதல், மெட்டி அணிதல், பூ வைத்தல், பொட்டு வைத்தல்,தலை முடி வளர்த்தல், என பல பெண்கள் இவற்றைத் தமது சுயதெரிவாகவும், பலர் கட்டாயத்தின் பேரிலும் செய்து வருகின்றனர். விரும்பிய மதத்தை பின்பற்றுவது அல்லது பின்பற்றாமல் இருப்பதும்போன்றே ஆடைத்தெரிவும் ஒரு மனிதரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இது தனிமனித உரிமையாகும்.

எமக்கிருக்கும் தெரிவுகளுக்கான வரையறையை இன-மத மானம், மரியாதை, கௌரவம் என்ற காரணங்களுக்காகவோ தேசிய பாதுகாப்பு என்ற காரணத்துக்காகவோ குடும்பங்களும், சமூகமும்,மத நிறுவனங்களும் நிர்ணயிப்பதை நாம் விரும்பவில்லை.

பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் பெண்களுக்கும், பெண்களின் ஆடைகளுக்கும் இருக்கும் தொடர்பை விட உண்மையான, ஆழமான வேறு காரணிகள்,ஒருவருக்கொருவர் துவேசத்தை விதைத்தலும் பரப்புதலும், வளங்களுக்கான போட்டி, லஞ்சம் ஊழல்போன்ற பல்வேறு காரணிகள் இருப்பதை சமூகங்களும் அரசும் புரிந்து கொண்டு அவற்றை முதன்மையாகச் சீர் செய்ய வேண்டும்.

பெண்கள் உரிமையையும் வன்முறைகளற்ற வாழ்வையும் விரும்பும் பெண்நிலைவாதிகளான நாம்,

• பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மூடக்கூடாது என்ற அரசின் தடையைக் காரணங்காட்டி முஸ்லிம் சகோதரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் இடைஞ்சல்களுக்காக நாம் மனம் வருந்துகின்றோம்.

• இந்த நாட்டில் வாழும் அனைத்துப் பெண்களும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இதே விதமான தடைகளால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றோம்;, அச்சுறுத்தபடுவோம் என்பதை உணர்ந்துள்ளோம்.

அந்தவகையில் வன்முறையற்ற வாழ்வை விரும்பும் நாம் எங்கள் சமூகங்களிடமும்,அரசிடமும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
1. எமது பண்பாட்டிலோ எமது விருப்பத்தெரிவுகளிலோ யாரும் தலையிடக்கூடாது என நாம் விரும்புவது போல, பிறருக்கும் விருப்பம், தெரிவு உண்டு என்பதை நாம் மதிக்க வேண்டும்.

2. தனிப்பட்ட அல்லது குழு வெறுப்பு விருப்புக்களை இந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து பாதுகாப்பு என்ற பெயரில் இன்னொருவரிலோ, குழுவிலோ காட்ட வேண்டாம்.

3. மற்றவர்களது பண்பாட்டை விமர்சித்தல், அவர்களின் தெரிவுகளுக்கு தடைவிதித்தல் போன்ற செயல்களால் சமூகங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மையை இல்லாமல் செய்வதையும் முரண்பாடுகளை உருவாக்குவதையும் நிறுத்தவும்.

4. மனிதர்களான நாம் அன்பு, புரிந்துணர்வுடன் அனைவரும் ஒற்றுமையாக வன்முறையற்ற வாழ்வை வாழக்கூடிய இலங்கையை உருவாக்குவதில் நாட்டிலுள்ள சகல மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுமாறும்,

– இத்தகைய பாரபட்சங்களை முடிவிற்கு கொண்டுவர தேவையான செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.

– தீவிரவாத வன்முறை மனப்பாங்குகளைத் தோற்றுவிக்கும் உண்மையான மூலகாரணிகளைக் கண்டறிந்து சுய-அரசியல் லாபங்களற்ற நிலையான தீர்வுகளை நோக்கி நாட்டை வழிநடத்துமாறு அரசையும் அரசியல்வாதிகளயும் கேட்டுக் கொள்கின்றோம்.

நாம் அன்பு, நம்பிக்கை, அடிப்படையிலான அகிம்சையான வன்முறையற்ற உறவுகளை உருவாக்கிக்கொள்ளவும், பேணவும் வாழவும், எமது சந்ததிகளுக்காக விட்டுப் போகவும் விரும்புகின்றோம். #eastersundayattacklk #மட்டக்களப்பு

சமதை பெண்ணிலைவாதக் குழு
மட்டக்களப்பு

 

 

http://globaltamilnews.net/2019/122414/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.