Jump to content

அன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை . 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள அப்பா, அம்மா ... இந்தா ஒரு அவஸ்தை JsiaxbKl.jpg, . 


எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு உறவினர் வீட்டில் ஒரு துன்பகரமான சம்பவம்.
நிகழ்வு அவர்களின் குடும்ப வாழ்க்கையை சூறாவளியாய் சுழட்டி அடிக்கிறது.
என்னிடம் துன்பத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்... என்ன செய்யலாம் என்றும் ஆலோசனை கேட்டு இருக்கிறார். 
நானும் எனது யாழ்களத்து சொந்தங்கள் உங்களிடம் இதை பகிறுகின்றேன். 
உங்கள் அனுபவங்கள், மன முதிர்வுகளினூடாக வெளிப்படும் கருத்துகளில் நல்லவற்றை அவரிடம் பரிந்துரைக்க நினைக்கின்றேன்.
உறவு யாழ்ப்பாணத்தில்தான் வாசிக்கின்றார். 2 மகள்கள். மூத்தவள் வயது 22, இளையவளுக்கு  இன்னும் மூன்று மாதங்களில் 18  வயது ஆகும். உறவு சுமாரான ஒரு தொழிலில் வாழ்க்கையை செவ்வனே கொண்டு நடத்துகின்றார். அவரின் மனைவி காலை, மாலை, இரவு, கோயில் , பூசை, அர்ச்சனை , விரதம், இதுவே அவரின் நாளாந்த வாழ்வு. 
ஒட்டு மொத்தத்தில் சூது வஞ்சகம் தெரியாத, மற்றவர் சோலி சுரட்டுக்கு போகாத பெற்றார்கள் இந்த இருவரும்.
அப்போ, அப்போ நானும் உதவிக்கு தேவை படும் பொழுது பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு கொஞ்ச பண உதவிகள் செய்வதுண்டு.
சரி சம்பவத்துக்கு வருவோம். 
இரண்டாவது மகள் (<18) கடந்த ஒரு வருடமாக ஒரு பையனுடன் காதல். படிப்பில் கவனம் குறைந்து O /L  பரீட்சசையில் பெரியபடியாக நல்ல புள்ளிகள் எடுக்காத நிலை.
குறிப்பிட்ட பையன் இன்னும் 20 வயதையும் தாண்டவில்லை. படிப்பிலும் நாட்டமில்லை. தவிர பையன் வேற்று மதத்தையும், சமூகத்தையும் சார்ந்தவராம். (இதை இங்கே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும் - நான் மேலே சொன்ன சூறாவளிக்கு இதுவும் ஒரு காரணம்)
அரசல் புரசலாக இந்த விவரம் தெரிய வர பல முறை இது குறித்து குடும்பத்தில் விவாதங்கள், இது தொடர்பான பேச்சுக்கள் எழுந்துள்ளன. கண்காணிப்புகள் , தடைகள் என்பதையும்  தாண்டி இருவரின் காவிய காதல் தொடர்புகள் தொடந்து உள்ளன. பையன் 2, 3 கைத்தொலைபேசியை பல சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒருவகையில் இந்த பிள்ளையிடம் கொடுத்து அதன் மூலம் அன்றாடம் கதைத்து, பேசி "டெக்ஸ்ட்டித்து" வந்துள்ளான்.
தகப்பன் கஷ்டப்பட்டு வேலை வேலை என்று திரிய , தாயும் பக்தி மார்க்கத்தில் திரிய வீட்டில் தேவையான கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் காதலும் வரம்பு மீறி வளர்ந்திருக்கிறது. மூத்தமகளும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் , எதுவுமே காதில் எடுக்காத பட்சத்தில் ஒரேயடியாக தங்கையுடன் கதைப்பதையும் கூட தவிர்த்து விட்டாள்.
பெரியப்பாமார், சித்திமார், மாமாமார் , அப்பம்மா இப்படி நீண்ட பட்டியல் அவளுக்கு எத்தனையோ நல்ல புத்திமதிகளை எடுத்து சொல்லியும் இருக்கிறார்கள். 
ஒரு கட்டத்தில் 3 கைத்தொலைபேசிகளும் பறிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அடி, உதை கொடுக்கப்பட்டு, கொழும்புக்கும் ஊரு கடத்தப்பட்டு... ஆவண எல்லாம் செய்யப்பட்டு ...
இந்த காதல் மட்டும் அகோரமாக வளர்ந்த நிலையில் ... ஓரிரு கிழமைக்கு முன்னர் இந்த பிள்ளை வீட்டை விட்டு உடுத்த உடுப்போடு திரும்பியும் பார்க்காமல் அந்த பையனோடு ஓடியே போய்விட்டாள்!!!

இது நடந்தது யாழ்ப்பாணத்தில். கையிலே அடையாள அட்டை கூட இல்லாமல் ...
எல்லா இடத்தில தேடியும் 6,7 நாட்களாக பிள்ளை இன்னும் அகப்படவில்லை.
போலீசிலும் முறைப்பாடு செய்து , கொஞ்ச பணத்தையும் செலவு செய்து ஒரு மாதிரியாக இருவரையும் பிடித்து விட்டார்கள். பையனுக்கு  18 வயதுக்கு மேல் என்ற படியால்  அவனை ஒன்றுமே செய்யாது வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
பிள்ளையை ஒரு சிறுவர் சீர்திருத்த அமைப்பு ஒன்றில் கொண்டு போய் விட்டு இருக்கிறார்கள். அதுவும் 
அரச பாதுகாப்பான ஒரு அமைப்பு என்றும் கேள்வி.

சரி நடந்தது என்ன.....
இந்த பிள்ளை அங்கும் கூட ஒரு கை தொலைபேசியை களவாக எடுத்துச்சென்று அந்த பையனுடன் தொடர்பை ஏற்படுத்தி கச்சிதமான ஒரு திட்டம் வகுத்து மூன்றே நாளில் அந்த இடத்துக்கும் டாட்டா காட்டி விட்டு ஓடி போய் இருக்கிறாள்.!!!
ஏற்கனவே நடைப்பிணம் போல் இருந்த குடும்பம் இன்றைய நிலையில் தவிடு பொடியாக இருப்பதை போல சூழ்நிலை.
நடந்த சம்பவங்களை என்னால் கட்பனை செய்துகூடவும் பார்க்கமுடியாமல் இருந்தது.
அந்த பிள்ளையின் முகத்தில் இன்னுமே அந்த பருவத்துக்கான கலை வரவில்லை. மாறாக ஒரு பதின்ம வயது பிள்ளையை போலத்தான் இருப்பாள்.  சரியாக தேனீர் கூட வைக்க தெரியாதாம் என்று வேறு கதை.
 
இப்போது திரும்பவும் போலீஸ் அவர்கள் இருவரையும் தேடுகிறார்கள். குடும்பம் கண்ணீரில் தள்ளாடுகிறது.
நானும் எனக்கு தெரிந்த சில ஆறுதல்களை அறிவுரைகளை சொல்லி இருக்கிறேன்.

தவிர; இதுபோன்று பல நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் நிகழ்வதாகவும் தகவல். கைத்தொலைபேசி பாவனையும் இதற்கு முக்கிய ஒரு காரணம் என்றும் கேள்விப்படுகிறேன். 
சரி நீங்கள் என்னதான் அந்த குடும்பத்துக்கு சொல்ல நினைப்பீர்கள் ?  இப்படியான கலாச்சார சீரழிவுகளை எப்படித்தான் தடுக்கலாம் ...

கேட்க ஆவலாக இருக்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

தவிர; இதுபோன்று பல நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் நிகழ்வதாகவும் தகவல். கைத்தொலைபேசி பாவனையும் இதற்கு முக்கிய ஒரு காரணம் என்றும் கேள்விப்படுகிறேன். 
சரி நீங்கள் என்னதான் அந்த குடும்பத்துக்கு சொல்ல நினைப்பீர்கள் ?  இப்படியான கலாச்சார சீரழிவுகளை எப்படித்தான் தடுக்கலாம் ...

சசி வர்ணம்! சமூகம் சமபந்தமான நல்லதொரு விடயத்தை பகிர்ந்துள்ளீர்கள்.
இப்படியான சம்பவங்கள் எமது மூத்ததுக்கு மூத்த சந்ததியிலிருந்தே நடந்தேறி வருகின்றது. இப்படி வீட்டைவிட்டு ஓடின சம்பவங்களால் பல கொலைகளே நடந்தேறியுள்ளது. அதுவும் சாதி மாறி ஒடிய ஓட்டங்களால். என்கண்ணெதிரே இன்னும் அந்த நான்கு சம்பவங்கள் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. இன்றைய காதலர்களுக்கு கைத்தொலைபேசி  இன்னொரு உதவியாக இருக்கின்றதே தவிர........உந்த ரன்னிங் கேஸ் மிக மிக பழமை வாய்ந்தது. இப்படியானவர்களை ஆக நெருக்கினால் தற்கொலை செய்து கொள்வார்கள். அவ்வளவுதான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு கு.சா அண்ணா.

நான் மேலே எழுதிய விடயத்தில் "பையனின் சமூகம்" என்ற அந்த விடயம் பெரிதாக அலட்டிக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை. நாம் அனைவரும் தமிழர் அது ஒன்று தான் நிஜம்.

அவர்கள் தங்கள் உற்றாரினதும் , ஊராரினதும் சூடு சொல்லுக்குத்தான் பயப்படுகிறார்கள் போல தெரிகிறது. 
அதனையும்  விட முக்கியமான விடயம் மகளின் வயது இன்னும் 18ஐ கூட தாண்டவில்லை என்ற பயமும், என்ன ஆகும், ஏதாகும் என்ற கவலையும் தான் மேலோங்கி நிட்கிறது. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி,

1. இப்படி காதல் செய்து வீட்டை விட்டு ஓடிப்போய், ஊரே மெச்ச வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். இளவயதில் பிள்ளை, பின் பிரிவு என நாசமாய் போனவர்களும் இருக்கிறார்கள்.

2. சாதியத்தின் மீது எமக்கு பிடிப்பில்லை, நாம் எல்லோரும் தமிழர் என்பதெல்லாம் சரி, ஆனால் அந்த குடும்பம் நாளைக்கும் அதே ஊரில் வசவுகளை கேட்டபடிதான் வாழ வேண்டும். கூட இன்னொரு பெண்பிள்ளை வேறு கரைசேர வேண்டும்.

3. இதில் யாராலும் அறிவுரை எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நான் அந்த தகப்பன் ஸ்தானத்தில் இருந்தால் என்ன செய்வேன்? என யோசித்ததில் மனதில் பட்டது:

பொடியனை கூப்பிட்டு கதைச்சு பார்ப்பேன். ஆள் அதிகம் மோசமில்லாட்டில், ஒரு கடையையோ எதையோ போட்டுக் கொடுத்து, கல்யாணத்தை முடித்து அருகிலேயே வைத்துக் கொள்வேன். உலகம் தெரியாத பிள்ளை என்க்கிறீர்கள், உதவாக்கரை பையன் - பெற்றார் ஆதரவும் இல்லாமல் போனால் அந்த பிள்ளையின் வாழ்க்கையே சூனியமாகப் போய்விடும். மகள் தன் தவறை உணரும் போது எல்லாம் ரூலேட் ஆகிவிடும். 

ஆகவே பிள்ளையின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்ய எது செய்ய வேண்டுமோ அதையே செய்ய வேண்டும்.

சாதி மாறிக் கட்டியதால் ஊர் தூற்றும், அவமானம் - இவை எல்லாம் இந்த குடும்பத்தை பொறுத்தவரை ஏற்கனவே கைமீறிப் போய்விட்ட விடயங்கள்.

பிள்ளையை ஒதுக்கி வைப்பதால் வரட்டு கெளரவம் மிஞ்சுமே ஒழிய, ஊர் வாயை அடைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தில்...சில பெரியவர்கள் ...சமூகத்தில் மதிபுபு மிக்கவர்கள் வாழ்ந்தார்கள்! அவர்கள் சொல்லுக்குப் பலர் கட்டுப்படுவார்கள்! இது ஒரு உத்தியோகப் பற்றில்லாத் கவுன்ஸிலிங் மாதிரி! இவ்வாறானவர்கள் யாராவது... இவர்களுடன் கதைத்து... இருவரையும் கொஞ்சக் காலம் பொறுத்திருக்கும் படி ஆலோசனை கூறலாம்! அவர்கள் நிச்சயம் கேட்பார்கள் என்று நினைக்கிறேன்!

மதம் பற்றி எனக்குக் கவலையில்லை! மனிதனுக்காக மதம் என்பது மாறி.. மதத்துக்காக மனிதன் என்று மாறும் போதே..., மதம் அங்கு செத்துப் போய் விடுகின்றது! தெய்வம் மீண்டும் கல்லாகி விடுகின்றது என்பதே எனது நிலைப்பாடு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொண்ணூறு வீதம் தடுக்க முடியாது.....இதைவிட மோசமாக நடந்த சம்பவங்களை எழுதலாம்....எனது பதிவுகள் உறவினர் பலருக்கும் தெரியுமென்பதால் எழுத முடியவில்லை..அந்தப் பெற்றோர்கள் கசப்போடும் கண்ணீரோடும் கடந்து போகத்தான் வேண்டும்.காதலை மூர்க்கமாக  எதிர்ப்பவர்கள் யாரென்று நினைக்கின்றிர்கள், ஏற்கனவே காதலித்து கல்யாணம் செய்து கொண்ட பெறோர்கள்தான்.......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படியான விடையங்களுக்கு வரும் முன் காப்பது தான் சரி.அதாவது பிள்ளைகளுடன் நெருக்கமான நட்ப்பு ரீதியான உறவைப் பேணுவது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் உதே வயதைக் கடந்து தான் வந்தோம். அதுவும் யாழ் நகரில்.. அழகான ஒத்தவயதுப் பெண்களுக்கும் குறைவில்லை. ஆனாலும் இப்படி எல்லாம் செய்யத் தோன்றவில்லை. காரணம்.. வாழ்கை எப்படி ஆகுமோ என்ற ஒரு ஏக்கம்... விதைக்கப்பட்டிருந்தது. கல்வி பிரதானமாக கண் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

போர்ச் சூழலை சொல்ல முடியாது. அப்போதும் இப்படி ஓடியோர் பலர். இப்ப கைத்தொலைபேசி செய்வதை அப்போ கோவில் திருவிழாக்கள் செய்தன. 

அந்தப் பிள்ளைக்கு வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய தெளிவூட்டல் ஒன்றைத் தவிர.. வேறு எதுவும் உருப்படியான மாற்றத்துக்கு வழி வகுக்காது.

அந்தத் தெளிவூட்டலை எப்படிக் கொடுப்பது..??!

சரி.. ஓடிப் போறாய். கல்யாணம் கட்டுகிறாய்.. அடுத்து..???!

சரி குழந்தை.. அப்புறம்...????????!

இந்த 3 சாதாரண கேள்விகள் ஒரு மனிதனை சிந்திக்க வைக்கும்.. நிச்சயம். 

சரி அப்படியும் தெளிவு வரவில்லையா.. அவர்களை அவர்கள் எண்ணப்படி நீங்களே உங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பு என்று அவர்கள் தெரிவின் படி வாழ விட வேண்டியான். நிச்சயம்.. அவர்களா கஸ்டப்படாமல் அவர்கள் வாழ்க்கை இனிக்காது. எவர் வாழ்கையும் தான். அந்த நிலையை புரிகிற போது.. எல்லாம் தெளியும். 

வீணாகப் பெற்றோரும் மற்றப் பிள்ளைகளும்.. இது தொடர்பில் அதிகம் மன உளைச்சலுக்கு ஆகாது அவர்கள் அவர்களின் வாழ்க்கையை சீராகக் கொண்டு செல்ல வேண்டும். வாழ்கை சிறியது. அதில் பெரும் பகுதியை மன உளைச்சலுக்கு செலவு செய்வது அல்லது எதிர்பார்ப்புக்களோடு கடத்திச் செல்வது.. அதுவும் பிள்ளைகள் என்றாலும் அடுத்தவரிடம் எதிர்பார்ப்பது.. கால விரயமாகும். நமக்குச் சரியென்று தோன்றுவதை செய்து கொண்டு.. அடுத்தவருக்கு தொந்தரவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே போயிடனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உங்கள் அப்பா அம்மாவுக்கு பிறந்ததால் 

சாதி 
மதம் 
பெற்று கொள்கிறீர்கள் 

குறித்த இடத்தில் பிறந்ததால் 
சமூகம் 
மொழி 
அறிவை 
பெற்று கொள்கிறீர்கள் 

சுயமாக 
பசி 
காதல் 
காமம் 
கோபம்  என்று அடுக்கிகொண்டு போகலாம்.
ஆனாலும் இவை ஒன்றோடு ஒன்று எதோ ஒரு நேர் கோட்டில் முட்டி மோதி கொள்கின்றன 
யாரோ வேறு வேறு சாதியில் காதலித்து ஓடியதுக்கு வாளை தூக்கி வெட்டபோய் ஜெயிலுக்கு 
சென்று வாழ்வை தொலைத்தவரக்ளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இவர்கள் சொந்த சாதி கொடுத்த 
வெகுமானம் சிறை வாழ்வு ஒன்றுதான்.  பிடித்தவருடன் வாழ போய் பிறந்த சாதி காரணமாக யாரோ ஒரு மூன்றாம் நபரால் வெட்டுண்டு இறந்தவர்களும் இருக்கிறார்கள். 
குமாரசாமி அண்ணர் எழுதியதுபோல்  கைத்தொலைபேசி தவிர்த்து எல்லாம் பழையானவைதான். 

இதில் அறிவுரை என்று பொதுவாக எழுதி யாருக்கும் பயன்பெற போவதில்லை 
இதில் அம்மா அப்பா பெண் பையன்  இவர்களுடைய உணர்ச்சி பிழம்புகள் எப்படியான 
நிலையில் இருக்கிறது என்று ஓரளவுக்கு தெரிந்த நீங்கள்தான் ஓர் முடிவை எட்ட முடியும் என்பதே 
என்னுடைய நிலைப்பாடு. அந்த பெற்றோரின் கையறு நிலைமை என்பதுக்கு மிகவும் மனம் வருந்துகிறேன் 
அவரவருக்கு இப்படியான சூழல் வரும்போதுதான் இதன் வலிகளை புரிந்து கொள்ள முடியும். 

சாதி குறைவு என்பதால் பல பள்ளி மாணவிகளை மன ரீதியாக எமது 
சமூகம் எவ்வளவு துன்பங்களை எந்த மனித மன சாட்சியும் அற்று கொடுத்தது என்பதை 
என் கண்ணால் பார்த்து இந்த யாழ் சமூகம் பற்றி எழுந்த கேள்விகளுக்கு நான் இன்னமும் பதில் 
காணவில்லை. 
யாரோ எங்கோ எப்போதோ விதைக்கும் விதை ஒரு மரமாகி எழுந்து நிற்கும்போது 
யாரோ எங்கோ செல்பவன் வந்து இளைப்பாறலாம். அதுவே ஒரு முள் மரமாக இருப்பின் யார் யாரோ 
சையிக்கிள் டயர்களை பஞ்சர் பண்ணி பயணத்தை கெடுக்கலாம். 

சமூகத்தில் இருக்கும் ஒவ்வரு விதையும் என்ன தன்மை கொண்டது என்பதை 
புரிந்து முளையிலேயே கிள்ளுவதும் நீர் ஊற்றி வளர்ப்பதும் ஒவ்வரு மனிதனின் கடமை. 
இது எதோ ஒரு வகையில் எல்லோரையும் வாழ்வின் எதோ ஒரு புள்ளியில் சந்த்திதே தீரும்.

குறித்த சம்பவம் 
சிறுவர் பராமரிப்பு மையம் 
போலீஸ் 
என்ற அளவில் சென்று விட்டதால்  பெண்ணுக்கு வயது 18 இல்லை என்ற காரணமும் இருப்பதால் 
சட்ட ரீதியாக பெற்றோருக்கு இதில் பல சாதகம் உண்டு. கோசன் அவர்கள் எழுதி கருத்தை உள்வாங்கி 
பையனை பற்றிய தகவல் எறிந்துவிட்டு .... சட்ட மூலம் அணுகுவது அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் சின்னனில் இருந்து வளர்ப்பதில் தான் இருக்கு...கோசான் சொன்ன மாதிரி கடையை போட்டு கொடுத்து பக்கத்தில வைத்திருக்கலாம் அதே சமயம் அந்த பெட்டையையும் மேலே படிக்க ஊக்குவிக்கலாம் உண்மையிலேயே, உண்மையான காதலாயிருந்தால் அந்த பெடியன் சாதியில் குறைவாயிருந்தால் என்ன,வசதியில்,படிப்பில் குறைவாய் இருந்தாலும் அந்த பெட்டையை வைச்சு காப்பாத்துவான்...அதே வெறும் காமமாயிருந்தால் விட்டுட்டு ஓடிடுவான்...அந்த பெட்டைக்கு ஒரு இளிச்சவாயன் வெளி நாட்டு மாப்பிள்ளை கிடைக்காமலா போய் விடும் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

.அந்த பெட்டைக்கு ஒரு இளிச்சவாயன் வெளி நாட்டு மாப்பிள்ளை கிடைக்காமலா போய் விடும் ?

 

இதன் அர்த்தம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

இதன் அர்த்தம் என்ன?

ஏன் உங்களுக்கு தெரியாதா மீரா?...அந்தப் பெண் காதலனோடு ஓடி இருக்கா...எப்படியும் அவனோடு உடலுறவு கொள்ளாமல் இருந்திருப்பாவா?... எத்தனை பேர் உண்மையை சொல்லி கல்யாணம் கட்டி வைப்பினம்? ... வெ.நாடு போய் புது வாழ்க்கை தொடங்கட்டும் என்று யாரையாவது பார்த்து கட்டி வைப்பினம்...இப்ப ஊர்ல அநேகமாய் அது தானே நடக்குது ..அந்த பெற்றோரை நான் குறை சொல்லவில்லை அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

ஏன் உங்களுக்கு தெரியாதா மீரா?...அந்தப் பெண் காதலனோடு ஓடி இருக்கா...எப்படியும் அவனோடு உடலுறவு கொள்ளாமல் இருந்திருப்பாவா?... எத்தனை பேர் உண்மையை சொல்லி கல்யாணம் கட்டி வைப்பினம்? ... வெ.நாடு போய் புது வாழ்க்கை தொடங்கட்டும் என்று யாரையாவது பார்த்து கட்டி வைப்பினம்...இப்ப ஊர்ல அநேகமாய் அது தானே நடக்குது ..அந்த பெற்றோரை நான் குறை சொல்லவில்லை அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் 

ஏன் விரும்பியவனுடன் உடலுறவு கொள்வது தவறா? அல்லது இங்கிருப்பவர்கள் திறமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

குமாரசாமி அன்னார் எழுதியதுபோல்  கைத்தொலைபேசி தவிர்த்து எல்லாம் பழையானவைதான்.

தயவு செய்து இந்த எழுத்துப்பிழையை சரியாய் எழுதி விடுங்கோப்பா....வாசிக்க எனக்கே ஒரு மாதிரிக்கிடக்கு......:(
இதை இப்பிடியே விட்டால் நாளைக்கு சனம் எனக்கு அஞ்சலி செலுத்தினாலும் செலுத்தும்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிள்ளையாக இருந்து ஊரில் இருந்திருந்தால் என்ன செய்வேனோ தெரியவில்லை. ஆனால் இப்ப இருக்கும் நிலைக்கு பெற்றோர் மகளையும் அந்த பெடியனையும் அங்கீகரித்து அனுசரித்து போவதே புத்தி என்று நினைக்கிறன். விஷயம் இவ்வளவு தீவிரமானத்துக்கு காரணமே கடுமையான கெடுபிடித்தான். அந்த வயதில் செய்யக்கூடாது என்று  சொல்லவதை தான் முன்னின்று செய்வார்கள். ஊரிலும் புலம் பெயர் சமுதாயத்திலும் மற்றவர்களுக்காக வாழ்வதே முதன்மய உள்ளது. எனது குடும்பம் என் பிள்ளை என்ற முக்கியத்துவம் அற்று மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்பதே எமக்கு முக்கியம். இந்த பெண் பிள்ளை செய்தது முற்றிலும் பிழையான விடயம். ஆனால் இது வயது கோளாறால் நடந்த ஒரு துரதிஷ்டம். நாங்களும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களை கடந்து வந்தவர்கள் தான். ஆனால் பெற்றோருக்கு மீறி ஒன்றும் செய்யக்கூடாது என்ற மனப்போக்குடன் வளர்த்த படியால் இப்படியான  தப்பான வலைகளில் விழவில்லை. இந்த பெண் விழுந்து விட்டார். இப்போது உள்ள ஒரே வழி அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவதுதான். விட்டால் அந்த பையன் பெற்றோர் ஆதரவு இல்லாத பெண் தானே என்று நாளை அவளை எதுவும் செய்து விடலாம். நடுத்தெருவில் விட்டும்  போகலாம். அப்போது நிலைமை இன்னும் மோசமாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு பக்க பெற்றோரின் ஆதரவு இல்லாமல்  கஷ்ட படுவார்கள் .நிச்சயம் பிள்ளை திரும்பி தாய் தந்தையிடம் வருவா ஒரு சில மாதங்களில் .     இது தடுமாறும் வயதுப் பிரச்சினை ..பெற்றவர்  மன்னித்து  ஆறுதலாக   இருந்து ..வழி நடத்த வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோஷானின் கருத்தோடு ஒத்துப்போகின்றேன்.

ஏற்கனவே, பொலிஸ்வரை போயும் பெண்பிள்ளை காதலில் தீவிரமாக இருப்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எதைச் செய்யமுடியுமோ அதைத்தான் இருபகுதி பெற்றோரும் செய்வது நல்லது.

சில விடயங்களில் தெளிவு இல்லை.

பெண்ணுக்கு 18 ஆகவில்லை என்றால் புரியாத வயதுப்பெண்ணை கடத்திக்கொண்டு போனதாக செயற்பட சட்டம் இல்லையா? பொலிஸ் ஒன்றும் செய்யாமல் விட்டது அப்படி எதுவும் இல்லை என்றுதான் சொல்கின்றது.

பையனின் பெற்றோர், உறவினர்கள் இந்த காதல் பிரச்சினையை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்றும் தெரியவில்லை.

 

மேலும், இளவயதுத் திருமணம்  ஒரு பொறுப்பை இருவருக்கும் கொடுக்குமானால் வாழ்வில் நன்றாக வருவார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வில்லாமல் போகும்போது, குடும்பம் என்பதன் சுமை பாரமாக உணரும்போது, அதற்கேற்ப பொருளாதாரம் இல்லாதபோது வாழ்வு கசக்கும். இதை என் கண்ணால் ஊரிலும் புலம்பெயர்ந்த நாட்டிலும் பார்த்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயது அலைபாயும் மனதுக்குரியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் விடயம் கைமீறிப்போய்விட்டது. இருதரப்பும் இணைந்தோ அல்லது தனித்தோ ஆரோக்கியமான முடிவெனில் இருவரது காதலையும் ஏற்கிறோம் என்ற உறுதிமொழியைக் கொடுத்து, முதலில் பெண்பிள்ளை படிப்பை முடிப்பதோடு, ஆண்பிள்ளை தன்னை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்தி உரிய காலத்தில் இருவரையும் திருமணத்தில் இணைத்து விடலாம். இந்தக் கால இடைவெளியில் இருவரது முதிர்வுநிலை உறவுநிலையில்கூடத் தெளிவைத் தரலாம். பொறுப்புகள் பற்றி சிந்திக்கவும் செயற்படவும் ஒரு கால அவகாசமாகவும் அமையலாம். அதேவேளை பலரது கருத்தின்வழியே தெளிந்த குமுகாய அமைப்புமுறையினை உருவாக்குதலும் அவசியமாகின்றது என்பதையும் உணரமுடிகிறது. 

முன்பென்றால் பாட்டா பாட்டி என்ற வடிவில் ஒரு அமைதியான ஆனால் கண்டிப்புடன் கூடிய ஆளுமைகள் அப்பப்போ கொடுக்கு உளஉரணும் கண்காணிப்புகளும் சரியான வழியிலே செல்ல உதவியது. அது குடும்பப் பாதுகாப்பரணாக மட்டுமன்றிக் குமுகாயப் பாதுகாப்பரணாகவும் இருந்தது.   

ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமொன்று சாதி மதமென்று பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது என்பதே உண்மை. புரிந்துகொள்ளுமா ஈழத்தமிழினம் என்பது புரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

ஏன் விரும்பியவனுடன் உடலுறவு கொள்வது தவறா? அல்லது இங்கிருப்பவர்கள் திறமா?

18 வயசுக்கு மேற்பட்டவர்கள் என்றால் விரும்பியவர்களுடன் உடலுறவு கொள்வதை ஏற்றுக் கொள்ளலாம்...ஆனால் இங்கு இப் பெண் ஒரு சிறுமி...இங்கிருப்பவர்கள் திறம் என்று நான் எழுதவில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

தயவு செய்து இந்த எழுத்துப்பிழையை சரியாய் எழுதி விடுங்கோப்பா....வாசிக்க எனக்கே ஒரு மாதிரிக்கிடக்கு......:(
இதை இப்பிடியே விட்டால் நாளைக்கு சனம் எனக்கு அஞ்சலி செலுத்தினாலும் செலுத்தும்....😎

எழுதியவருக்கு நன்றி போட்டிருக்கேன். சாமியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

18 வயசுக்கு மேற்பட்டவர்கள் என்றால் விரும்பியவர்களுடன் உடலுறவு கொள்வதை ஏற்றுக் கொள்ளலாம்...ஆனால் இங்கு இப் பெண் ஒரு சிறுமி...இங்கிருப்பவர்கள் திறம் என்று நான் எழுதவில்லை 

 

நீங்கள் ஆரம்பத்தில் எழுதியதற்கும் இதற்கு தொடர்பு உண்டா????

18 வயதிற்கு உட்பட்ட உடலுறவு கொண்டவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தானா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, MEERA said:

நீங்கள் ஆரம்பத்தில் எழுதியதற்கும் இதற்கு தொடர்பு உண்டா????

18 வயதிற்கு உட்பட்ட உடலுறவு கொண்டவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தானா?????

சில வேளைகளில் ரதி என்ற பெண் பெயரில் எழுதுவது ஆணோ என நிணைப்பேன். இப்போதும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டணில், தமிழ் குடும்பம், பெட்டை 16 வயது. அவரோ வேறுமதம், சமூகம், கிட்டத்தட்ட பெட்டையிலும் பார்க்க டபுள் வயது, 30.

முகப்புத்தகம் மூலம் வயது குறைந்தவராக நடித்து பெட்டைய மடக்கினது மட்டுமல்லாமல், கொண்டு ஓடியும் விட்டார்.

போலீசார் பெரிசா மினக்கெடவில்லை.

பெற்றோர் இனவாத காரணமோ என்று கூட  நினைத்தார்கள்.

இறுதியாக பெற்றோரை அழைத்தார்கள். நாம் இருவரையும் அழைத்து பேசினோம்.

அவருக்கு சட்டம் தெரியும் என்பதால், பாலியல் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொண்டார் போலுள்ளது. (மருத்துவ சோதனை மூலம், போலீஸ் சொன்னது).

தான் எங்கேயோ வழி தவறி போனதாகவும், அவர் தனக்கு திரும்பிவர லிப்ட் தந்து உதவியதாகவும், வழியில் கார் பழுதாகியதால், வீட்டுக்கு வரமுடியாமல், மோட்டலில் தங்கி விட்டதாகவும், ‘சட்டத்துக்கு’ விளக்கம் தருகிறார்கள். ஆனாலும் அவர்கள் பொய் சொல்கிறார்கள், காதலில் இருக்கிறார்கள்.

பிரித்து அனுப்பினால், மறுபடியும் இதுவே தொடரும். மனக்கவலையும், நேரவிரயமும் தான் மிஞ்சும்.

அவர்களை கூப்பிட்டு, வாழ்க்கை திட்டம் என்ன? வீட்டு வாடகை, சாப்பாடு, உடுப்பு, பயண செலவுகள் திட்டம் என்ன. கலியாண செலவு எப்படி, யார், யாரை அழைப்பீர்கள் என யதார்தமான கேள்விகளை வைத்து, அதற்கான பதிலை சொல்ல அவகாசம் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

அவர்களை தகப்பன் அழைத்த போது, நாம் இணைபிரியா காதலர்கள், செத்தாலும் சாவோம், பிரித்துவிடாதீர்கள்.... என்று வசனங்களை மனப்பாடம் செய்து வந்தவர்களுக்கு, இந்த யதார்தமான நிதானமான கேள்விகள் சம்மட்டியாக இறங்கி வேறுவிதததில் சிந்திக்க வைத்தது.

தம்பி, வாடகைக்கு வீடு எடுக்க அட்வான்ஸ் காசு இல்லை என்று சொல்கிறீர். எனது பிள்ளை பட்டிணி கிடக்காமல் இருப்பாள் எண்டதை உறுதி செய்து கொண்டு வாரும், அது வரை பிள்ளை படிக்கட்டும் என்று சொல்ல, இருவரும் சம்மதித்தனர்.

இரண்டு மாதத்தில் சிந்திக்க ரேரம் கிடைத்ததால், தாமாகவே பிரிந்து விட்டனர்.

பலருக்கு தெரியாமல் முடிந்த கதை இது.

தகப்பன், இதை சிறப்பாக கையாண்டிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிரிந்தன பிரச்சனையாக பெண்ணின் பெற்றோருக்கு தோற்றமளிப்பதுவும், தடங்கலாகவும் இருப்பது சாதி.

மறுவளமாக, பெண் 18 வயது அடையாவிட்டாலும், ஆண் சராசரி வருமானத்திழும் அதிகமாக white collar வேளையில் உழைப்பவராய் யிருந்தால், இந்த சாதி என்பது இரண்டாம் பட்சமாகவே அநேகமாக கருத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.

இருவரையும் அழைத்து, இரு வீட்டாரும் முன்னிலையிலும் இருந்தால் இன்னும் நன்று, , வாழ்கைக்கு வேண்டிய வரவு செலவு திட்டத்தையும் விலா வாரியாக நாதமுனி சொல்லியபடியே அவர்கள் இருவரிடமும், குறிப்பாக ஆணிடம், எப்படி வாழ்க்கையை கொண்டு நடுத்துவீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கலாம்.

உணர்ச்சி வசப்படாமல் இதை அணுக வேண்டும்.

பெண்ணின் தந்தை, ஆண் படித்து ஏதாவது ஓர் துறையில் வேலை எடுப்பதத்திற்கு கூட உதவி செய்வதத்திற்கு தயார் என்றும் சொன்னால், பெண் மற்றும் ஆண் சிந்திபதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சாதி இதில் இரண்டாம் பட்சமே.

பெண்ணின் தந்தை, தனது மக்களின் வாழ்க்கையை, தன்னால் இயலுமானவரை,  எப்படி ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக ஆக்கலாம் என்பதை பற்றியே சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இலண்டணில், தமிழ் குடும்பம், பெட்டை 16 வயது. அவரோ வேறுமதம், சமூகம், கிட்டத்தட்ட பெட்டையிலும் பார்க்க டபுள் வயது, 30.

முகப்புத்தகம் மூலம் வயது குறைந்தவராக நடித்து பெட்டைய மடக்கினது மட்டுமல்லாமல், கொண்டு ஓடியும் விட்டார்.

போலீசார் பெரிசா மினக்கெடவில்லை.

பெற்றோர் இனவாத காரணமோ என்று கூட  நினைத்தார்கள்.

இறுதியாக பெற்றோரை அழைத்தார்கள். நாம் இருவரையும் அழைத்து பேசினோம்.

அவருக்கு சட்டம் தெரியும் என்பதால், பாலியல் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொண்டார் போலுள்ளது. (மருத்துவ சோதனை மூலம், போலீஸ் சொன்னது).

தான் எங்கேயோ வழி தவறி போனதாகவும், அவர் தனக்கு திரும்பிவர லிப்ட் தந்து உதவியதாகவும், வழியில் கார் பழுதாகியதால், வீட்டுக்கு வரமுடியாமல், மோட்டலில் தங்கி விட்டதாகவும், ‘சட்டத்துக்கு’ விளக்கம் தருகிறார்கள். ஆனாலும் அவர்கள் பொய் சொல்கிறார்கள், காதலில் இருக்கிறார்கள்.

பிரித்து அனுப்பினால், மறுபடியும் இதுவே தொடரும். மனக்கவலையும், நேரவிரயமும் தான் மிஞ்சும்.

அவர்களை கூப்பிட்டு, வாழ்க்கை திட்டம் என்ன? வீட்டு வாடகை, சாப்பாடு, உடுப்பு, பயண செலவுகள் திட்டம் என்ன. கலியாண செலவு எப்படி, யார், யாரை அழைப்பீர்கள் என யதார்தமான கேள்விகளை வைத்து, அதற்கான பதிலை சொல்ல அவகாசம் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

அவர்களை தகப்பன் அழைத்த போது, நாம் இணைபிரியா காதலர்கள், செத்தாலும் சாவோம், பிரித்துவிடாதீர்கள்.... என்று வசனங்களை மனப்பாடம் செய்து வந்தவர்களுக்கு, இந்த யதார்தமான நிதானமான கேள்விகள் சம்மட்டியாக இறங்கி வேறுவிதததில் சிந்திக்க வைத்தது.

தம்பி, வாடகைக்கு வீடு எடுக்க அட்வான்ஸ் காசு இல்லை என்று சொல்கிறீர். எனது பிள்ளை பட்டிணி கிடக்காமல் இருப்பாள் எண்டதை உறுதி செய்து கொண்டு வாரும், அது வரை பிள்ளை படிக்கட்டும் என்று சொல்ல, இருவரும் சம்மதித்தனர்.

இரண்டு மாதத்தில் சிந்திக்க ரேரம் கிடைத்ததால், தாமாகவே பிரிந்து விட்டனர்.

பலருக்கு தெரியாமல் முடிந்த கதை இது.

தகப்பன், இதை சிறப்பாக கையாண்டிருந்தார்.

நாதம், 

நீங்கள் எழுதியது எல்லாமே நடைமுறையில் நடக்காத விடயங்கள்.

1. 16 வயது தாண்டி விட்டால் (15 முடிந்து 16ம் பிறந்த தினத்தோட) இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் உரிமை வந்து விடும். 16 வயதுக்கு மேற்பட்ட இருவரை, பெண்ணாக தான் வல்லுறவுக்கு உள்ளானதாக சொல்லும் வரை, நீங்கள் உடலுறவு கொண்டீர்களா என ஒரு போதும் பொலீஸ் கேட்காது. இதில உடலுறவு நடந்ததா இல்லையா எனும் சோதனையை பொலீஸ் செய்தது என்பது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானது. இப்படி நடந்திருந்தால் இந்த பெண் நஸ்ட ஈட்டாக பெரும் தொகை பெறலாம். ஆனால் ஒரு போதும் இதை பொலீஸ் செய்யாது. இதுவே இருவரில் ஒருவர் 16 க்கு குறைந்தவர் என்றால் கதையே வேறு. Age of consent 16. அதுக்கு கீழே இருப்பவருடன் உடலுறவு வைப்பது statutory rape. ஆகவே முதலாவது கேள்வியே உடலுவை பற்றியதாகவே இருக்கும்.

2. இதில் இந்த மோட்டல் கதை எங்கே வருகிறது? ஒரு 16 வயது பெண்ணும் 30 வயது ஆணும் சுய விருப்பில் என்னவும் செய்யலாம். பொலீஸ் முதலாவதாக வயதை செக் பண்ணும், பின் இருவரிடமும் சுயவிருப்பிலா போனீர்கள் என கேட்க்கும். அத்தோடு பைலை மூடிவிடும். லிப்ட், மோட்டல் எந்த “சட்டத்துக்கேற்ற விளக்கமும்” கொடுக்கத் தேவையில்லை.

3. பொலீஸ் பெற்றாருக்கு இப்படி கேள்வி கேளுங்கள் என்று அட்வைஸ் செய்தது என்பது இன்னொரு நம்ப முடியாத விடயம். இது சினிமாவில் வரும் தமிழ்நாட்டு பொலீசல்ல. They are both above the age of consent. We won’t get involved in this matter. It’s a family dispute என்று கதையை முடிப்பதுடன், மீறி தடுத்தால் பெண்ணுக்கு பாதுகாப்பும் அளிக்கும்.

4. லண்டலில் கார் வைத்து ஓடும் ஒரு 30 வயது இளந்தாரி வாடகை கொடுக்க அட்வான்ஸ் இல்லாமல் இருப்பதா? அட்லீஸ்ட் ஒரு வீட்டில் ஒரு அறைக்காவது?

5. லண்டலில் 16 வயது, பள்ளிகூடம் ஏல் படிக்கும் புள்ளை, மோட்டலில் தங்கும் அளவுக்கு கில்லி, இங்கே எழுதுபவர்களை விட, சட்டமும், பொது அறிவும் இந்த பிள்ளைக்கு இருக்கும். உங்கள் உடம்பு உங்கள் உரிமை என 10 வயதிலேயே எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படும். இந்த பிள்ளையும், ஒரு 30 வயது ஆளும் வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு துணிந்த பின், அப்பாவின் கதையை கேட்டு பிரிந்தார்கள் என்பதும் நம்பக் கடினமானதே.

6. நீங்கள் சொல்லும் இந்த கதையில் அவர்கள் பிரிய வேறு பல காரணங்கள் இருக்கலாம். அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டிருக்கலாம். சலித்துப் போயிருக்கலாம். இங்கே யூகேயில் இது பெரிய மேட்டர் இல்லை. கோவிலில், தமிழ் பள்ளியில் சில சனம் குசுகுசுக்கும். தாய் தேப்பன் தமிழ் சனத்துக்கு ஒழிச்சி திரியவும் கூடும். ஆனால் அந்த பிள்ளைக்கு இது சப்பை மேட்டர். அவரை சுற்றி இருக்கும் உலகுக்கும் அப்படியே. பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்ன நடந்தது என்றே தெரியாதிருக்கும்.

ஆனால் ஊரில் நிலைமை அப்படி அல்ல. ஊரே கூடி முதுகுக்கு பின்னால் கதைக்கும். மூத்த பிள்ளைக்கு அவர்கள் சமூகத்தில் ஒரு நல்ல வரன் அமைவது என்பது முயல்க்கொம்பாய் ஆகிவிடும்.

தவிரவும், இப்படி ஓடிப்போகும் அளவுக்கு காதல் வயப்பட்டவர்களுக்கு மோகம் ஒருபோதும் 30 நாளில் தீராது. எப்படியும் ஒரு 3 வருடம் ஓடும். அதுகுள்ள என்ன கூடாத விளைவுகள் ஏற்பட வேண்டுமோ எல்லாம் ஏற்பட்டு விடும். அதற்கு பின் பிள்ளை திரும்பி வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

ஓடிப்போய், மனைவியை படிப்பித்து டாக்ரர் ஆக்கியவர்களும் இருக்கிறார்கள், எல்லா பொருத்தமும் பார்து கல்யாணம் கட்டிய மனைவியை வைத்து சூதாடியவர்களும் இருக்கிறார்கள். 

Everything is case-specific and facts-sensitive. பிள்ளையின் நல்வாழ்வு என்ற ஒற்றை குறிக்கோளை மட்டும் மனதில் நிறுத்தி செயல்படுவதே ஒரே வழி.

பிகு: மேலே சொன்ன கருத்துகள் உங்களை பழிக்கும் எண்ணத்தில் எழுதியவை அல்ல. நீங்கள் அண்மையில் எனக்கும் நேற்று ரதிக்கும் சொன்னீர்கள் “மட்டம் தட்டி எழுத வேண்டாம்” என்று. இதனாலே இந்த கருத்தை 3 தடவை எடிட் செய்து எழுதினேன். ஆனால் முற்றிலும் தவறான தகவல்களை பகிரும் போது சும்மா கடந்து போகவும் மனம் ஒப்பவில்லை. இந்த மனநிலை வரும் போது அநேகமாக யாழில் இருந்தும், வாழ்கையில் இருந்தும் ஒதுங்கிவிட வேண்டியதுதான் போலும் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.