Jump to content

பாலன்


Recommended Posts

பாலன் (சிறுகதை)

ஆதியிலிருந்து தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கையில் எங்கள் ஊரின் வடக்குப்பகுதியில் காடொன்று தோன்றியதாம்.அபூர்வமாக அங்கு குடியேறிய சனங்கள் மிகுந்த ஆரோக்கியமாக  வாழத்தொடங்கினார்கள்.சிறுவர்கள் காட்டுப்பழங்களை உண்டு மகிழ்ந்தார்கள்.மர அணில்களைப் பிடித்து நெருப்பில் வாட்டினார்கள்.முள்ளம்பன்றிகளை வேடிக்கையாக அடித்துக் கொன்றார்கள்.முந்திரியம் பழங்களை ஆய்ந்த சிறுமிகள் அவற்றை      ஒரேயொரு கடிகடித்து வனத்தின் பள்ளங்களில் எறிந்தார்கள்.அதனாலேயே காட்டின்        பச்சைய சுகந்தத்தில் செழிப்பு இசைந்து கொண்டிருந்தது.

அப்போது சிறுமியாகவிருந்த உமையாள் பூப்பெய்தினாள்.அவள் ஏறிநின்று கொண்டிருந்த மரத்தைவிட்டு அச்சத்தோடு கீழே இறங்கி தாயைத் தேடி ஓடினாள்.காட்டின் மீது            நின்றுகொண்டிருந்த வானம் மழையைத் தூவியது.காடு இருண்டு வெள்ளத்தில்    அசையமுடியாத யானைப்போல நின்று கொண்டிருந்தது. என்ன பெயரென தமக்கு         தெரியாத பூவைப் பறித்து உமையாளுக்கு மாலை சூட்டினார்கள்.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்று சொல்வதற்கு முன்னரே உமையாளின் உடலிலிருந்து இப்பூமிக்கு              வெளிச்சம் உண்டாயிற்று எனும் பேருண்மையை தேவனே அறிந்திருக்காத நேரத்தில்        கலியன் சங்கெடுத்து ஊதினான்.காடெங்கும் உமையாளின் கூந்தல் போலிருந்த நாணல்கள் காற்றைப் போர்த்தன.கலியன் தனது காதலியான உமையாளின் மார்பில் காட்டுப்பூவின் மொட்டைச் சூடினான்.பூமியோ முதல்முறை சிலிர்த்தது.

உமையாளின் மேனியில் ஈர்ப்பின் சுடர்கள் தளும்பத்  தொடங்கின. பொந்துத்தேன்களை எடுக்கவல்ல ஒரேயொரு வேட்டைக்காரனாயிருந்த கலியன் காட்டின் நடுவே புதிதாகவொரு நீர்நிலையைக் கண்டான். அதிலிருந்து எழும்வாசனையைச் சொல்ல சொல்லுக்கு பிரமை போதவில்லை. உமையாளைக் கூட்டிக்கொண்டே போய் நீர்நிலையில் நீராடவிட்ட கலியன் கதகதப்பான உஷ்ணத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். தேவன் இந்தச்சம்பவத்தைக் கண்ணுற்ற போது காதலானது பூமியில் பெருகக்கடவது என்று சொன்னார்.உமையாள் நீருக்குள் இருந்து கரையேறுகையில் அவளிலிருந்து சொட்டிய நீர்த்துளிகள் பனி  என்று பெயர் கொண்டன. இந்தக் காட்டின் முதற்காதலர்களான உமையாளும் கலியனும் திருமணம் செய்துகொண்டதன் விளைவாக இரணைக்குழந்தைகள் பிறந்தன.

1-137-300x233.jpg

தேவனானவர் அவர்களை பரிசுத்தமாக்கினார்.அவர் ஏதேன் எனும் தோட்டத்தை உண்டாக்கி தான் உருவாக்கிய மனுஷனை அதிலே வைப்பதற்கு முன்னரே உமையாளின் இரண்டு          குழந்தைகளுக்கும் பெயர் சூட்டப்பட்டது.அந்தக் காட்டில் உமையாளுக்கு பின்னர் பூப்பெய்து அந்த நீர்நிலையில் குளித்த காதலர்கள் தமது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத்தொடங்கினர்.  காட்டில் புதிது புதிதாக முளைவிடத்தொடங்கியிருந்த மரங்களில் இருந்து காய்த்த கனிகளை சனங்கள் புசிக்கத்தொடங்கினார்கள்.கலியன் வேட்டைக்குச் செல்வதற்காய் படையொன்றை  சேர்த்தான்.உமையாள் பறவைகளுக்கு கூடுகள் செய்து மரங்களில் செருகினாள்.காடு எல்லோரின் சுவாசத்திலும் கசிந்துகொண்டிருந்தது.

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி,

“நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம், ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்          என்று கட்டளையிட்டார்”.

காட்டில் உள்ள சனங்களைப் போலவே ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் நிர்வாணமாய் படைக்கப்பட்டார்கள்.தேவன் உமையாளின் தோற்றத்தில் ஏவாளைப் படைத்தான்.                       இந்த வடிவின் நகலெடுப்புக்கு தேவனே வெட்கப்படாதிருந்தார்.நிர்வாணமாய் இருந்த எவரும் வெட்கப்படவில்லை என்று இதற்குமேல் தேவனால் போதிக்கமுடியாமல் இருந்தது.                            கலிங்கன் வேட்டைக்குச் சென்று பத்து  நாட்களாகியும் திரும்பாமல் இருந்தான். அவனோடு சேர்ந்து சென்றவர்களின் மனைவிமாரும் என்ன ஆயிற்று என்று தெரியாமல் தேவனிடம் மன்றாடினார்கள்.தேவனோ மனுஷர்களைப் பெருகப்பண்ணும் வேலையில் ஈடுபடத்தொடங்கியிருந்தார்.

கலிங்கனும் அவனது வேட்டைப்படையச் சேர்ந்தவர்களும் திரும்பிவருவார்கள் என்ற நம்பிக்கை தீர்ந்த பொழுதில் உமையாளோடு சேர்த்து தொண்ணூறு விதவைகள் தமது குழந்தைகளோடு காட்டை விட்டு வெளியேறினார்கள்.அப்போதும் “வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்.பூமியிலுள்ள யாவும்  மாண்டுபோம்” என்று தேவன் சொன்னார்.

இன்றைக்கு இந்தக் காடானது உமையாள்காடென்று அழைக்கப்படுகிறது. காட்டின் பெரும்பகுதியை அழித்து உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாமை திறந்துவைப்பதற்காக வந்திருந்த இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பயணப்பாதையெங்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் நீண்டிருந்தனர்.தாய்மார்கள் ஏந்திக்கொண்டு நின்ற மட்டைகளில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை சிறுமியொருத்தி ஒலிவாங்கியில் சொல்லிக்கொண்டிருந்தாள். இதனையடுத்து ஜனாதிபதியின் பயணப்பாதை இறுதி நேரத்தில் மாற்றப்பட்டது. இராணுவத்தினர் கூடியிருந்த மக்களை புகைப்படம் எடுத்தனர். மக்கள் கைகளில் இருந்த வாசக அட்டைகளால் தமது  முகங்களை மறைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினர். இராணுவ முகாமைத்திறந்து வைத்த ஜனாதிபதி யுத்த வெற்றியின் நினைவாக    இன்னும் நிறைய இராணுவ முகாம்களைத் திறக்கவிருப்பதாக கூறினார். நந்திக்கடலின் ரத்தம் உமையாள் காட்டிலும் வழிந்து கொண்டிருந்தது.

பெத்லகேமில் ஏரோது ராஜாவினால் கொன்றொழிக்கப்படாத இரண்டுவயதுப் பாலகனான இயேசுபிரான் கிறிஸ்துவுக்கு பிறகான இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டில் எங்கள் ஊருக்குள் நுழைந்திருந்தார். அன்றிரவே அவரைக் கொண்டுபோய் எங்கே மறைத்துவைப்பதென்று தெரியாமல்         நானும் நண்பர்களும் சற்றைக்கு குழம்பிப்போயிருந்தோம். வீட்டில் உள்ளவர்களின் பெயர்விபரங்களையும் புகைப்படங்களையும் இராணுவத்திற்கு கொடுக்கவேண்டுமெனும் கட்டளைக்கு மாறாக இருக்கவேண்டியதாகியிருந்தது.

இயேசு பாலன் களைப்பாகவும் மெலிந்தும் போயிருந்ததைப் பார்க்கையில் என்னுடைய நண்பனுக்கு மரியாள் நினைவுக்கு வந்தாள். என்னுடைய  அம்மா பாலனின் பரிசுத்தமான முகத்தை ஈரச்சீலை கொண்டு துடைத்தாள் நம்பமுடியாதளவுக்கு இயேசு பாலனின் இருதயம் அதிவேகமாக துடித்துக்கொண்டெழுப்பிய முறைபிறழும் ஒலியில் எங்கள் நிலத்தின்              சிலுவை ஊன்றி நின்றது.அம்மா பாலனைத் தூக்கித் தன்மார்பில் அணைத்து பாலச்சந்திரன் என்றாள். அப்போது உமையாள்காட்டிலிருந்து சரியாக ஒருகட்டை தூரத்தில் இருக்கும் எங்கள் வீட்டின் முற்றத்துக்கு மேலே விரவிக்கிடந்த வானத்தில் புதிய நட்சத்திரமொன்று பூத்தது.        பாலனான இயேசுபிரானை நாங்கள் பாலச்சந்திரன் என்று கூப்பிடத்தொடங்கிய சத்தம் கொழும்பிற்கும் இஸ்ரவேலுக்கும் கேட்டிருக்குமானால் நாளை காணாமலாக்கப்படும் எம்மோடு  பாலன் இயேசுவும் சேர்க்கப்படுவார் என்பது எமக்குமட்டும் தெரிந்த வாதை.                                    என்னுள் நூற்றாண்டின் கொடுங்கனா மணலாய் பெய்யத்தொடங்கியது.

சீலையொன்றை எடுத்து ஏணைகட்டி பாலனுக்குத் தாலாட்டுப்பாடினாள் அம்மா.அப்பொழுதே நானும் நண்பர்களும் சேர்ந்து ஒரு மறைவான இடத்தை பாலனுக்காய் ஆயத்தப்படுத்தினோம்.கதிர்களின் நுனிகளைப் போல அறுக்கப்படும் சனங்களின் நிலத்தில் அவன் ஓரிரவைக் கழிப்பான் என்று தேவனாலேயே சொல்லப்படாமலிருந்தது.இந்த வாக்கியத்தை நித்திரையிலிருந்து எழும்புகிற போது சொல்லவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.வீட்டிற்குள்ளேயே சிறிய பங்கர் ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தோம்.

அம்மா பாலனை நோக்கி ஜெபம் சொல்லத்தொடங்கினாள்.

  • கர்த்தாவே எங்கள் மேல் கொஞ்சமேனும் இரக்கம் செலுத்துங்கள்.உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களாகிய எம்மிடம் இனியும் சிந்துவதற்கு இரத்தமில்லை. உம்முடைய கிருபையின் நிமித்தம் இந்தத்தீவில் எமக்கு சுகம் தங்கப்பண்ணும்.

 

  • ஏரோது ராஜாவின் கொலைப்படைக்குப் பயந்து மரியாள் உம்மை மறைத்து வைத்ததைப் போல எங்கள் குழந்தைகளை எங்கே மறைப்பது? எங்கள் வனாந்தரங்கள் இராணுவ முகாம்களாகிவிட்டன.வணக்கஸ்தலங்களை குண்டுகளால் தகர்த்தது போதாதுவென,        ராட்சத இயந்திரங்களால் உடைக்கிறார்கள்.

 

  • பாவிகளின் வழியில் எமது பாதங்களை எப்படிச்சேர்ப்போம்.எங்கள் குழந்தைகளின் கல்லறைகளை அவர்கள் கற்களாக்கி, தூளாக்கினார்கள்.இயேசுவானவரே! நீர் உயிர்த்தெழுந்ததைப் போல எங்கள் நிலத்தின் மீட்பர்களும் எழுவார்கள்.தங்களின்                  உக்காத எலும்புகளைக் கொண்டும் அவர்கள் துன்மார்க்கரை வீழ்த்துவார்கள்.

 

  • யுத்தம் முடிந்தபின்னர் இந்த நிலத்தை இளம்விதவைகளின் தேசமென்று உலகம் சொல்லுவதை உம் செவிகளில் சேர்ப்பிக்கிறேன். கர்த்தாவே திக்கற்ற எங்களின் நிலங்களை அபகரித்துக்கொள்ளும் பொல்லாதவர்களையும் அவர்களின்                    இராணுவ சேனைகளையும் நாங்கள் கற்கள் கொண்டு வீழ்த்தும் நாட்களில் நீரும் ஜாக்கிரதையாக இரும்.ஆண்டவரே  அநியாயத்தை உமது அமைதியும் தான் செய்கிறது.

 

  • கூக்குரலுக்கு உதவாத கடவுளைத் தண்டியாமல் விடாதே, பிரம்பினாலும், சவுக்கினாலும் ஏன் கல்கொண்டு அடித்தாலும் அவன் சாகான். பிதாவே வதைக்கூடங்களை புனரமைக்கும் நல்லிணக்கம் எமக்கு வேண்டாம்.

 

  • கர்த்தாவே என் வார்த்தைகளுக்கு செவிகொடும்,என் தியானத்தைக் கவனியும்.இந்த நிலத்தில் நீர் காணும் ஒவ்வொரு அங்கவீனர்களின் காயங்களிலும் இஸ்ரவேலின் குண்டுச்சிதறல்களும் இருக்கின்றன.  அவர்களிடம் பாலைவனக்காற்றைப் போல வீசுகிற துயரத்தை நீர் சிலுவையில் அறையப்பட்ட போதிலும் உணர்ந்திருக்கமுடியாது.எங்களை புதைகுழிக்குள் உயிரோடு புதைத்தனர். நாமோ உம்மை நோக்கி கைகளை உயர்த்தி அழுகையில் வானிலிருந்து குண்டுகள் விழுந்தன.முள்முடி ஏந்த உம்மிடம் சிரசிருந்தது.         நீர் பாக்யவான்.

 

  • கர்த்தரே! நாம் குருதிப்புழுதியில் முகமூடப்பட்டவர்கள். எமது சேனைகள் பெலன் குறைந்து மண்ணை அணைத்தனர். உம்முடைய சத்தம் நீருக்கு மேல் தொனித்தது போல எங்களின் சத்தம் கண்ணீரில் முழங்கியது.அப்போது உமது கண்கள் குருடாகவும் செவிகள் செவிடாகவும் இருந்தன. என் தேவனே! உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.                  இந்த நிலத்தில் ஒரு களிப்பையுண்டாக்கும்.எங்களின் குழந்தைகளை வதைமுகாம்களில் இருந்து பெற்றுத்தந்து அதிசயங்களைத் தருவியும்.

 

  • என் தேவனே எம்மைக் கழைகள் போல தின்றுகொண்டிருக்கும் அக்கிரமக்காரர்களின் இராணுவச்சேனையை எங்கள் கொம்புகளால் வீழ்த்துவோம் ஆமென்!

 

ஆதியில் வேட்டைக்குப்போன கலியன் காணாமல் போனதையடுத்து  காட்டில் இருந்து நகர்ந்த உமையாள் உட்பட தொண்ணூறு விதவைகளும் குடியேறியிருந்த சமவெளி நிலத்தில் கடவுளை வணங்கத்தொடங்கியிருந்தனராம்.”இறக்கை மரம்” என அழைக்கப்படும் அந்தவிருட்சத்தின் கீழே பழங்கால கல்லொன்று இன்றைக்குமிருக்கிறது. அந்தக்கல்லின் மத்தியபகுதியில் வரையப்பட்டிருக்கும் நீரடிப்பாசிகள் போன்ற கோடுகளுக்கு நடுவில் நீந்தும் இறக்கை கொண்ட சிறியமீனின் உருவத்தை அவர்கள் கடவுளென வரித்துக்கொண்டார்களாம்.

அதிக நீரேரிகளும், குளங்களும் கடலும் கொண்ட அந்தவூருக்கு பேர் கலியன்குடி.              உமையாள் அங்குள்ள அனைத்து மக்களுக்கும் தலைவியாக இருந்தாள்.அங்கிருந்து                    அவளும் சிலரும் உணவுக்காய் வேட்டைக்குச் செல்லத்தொடங்கினார்கள். ஆரம்பத்தில்  அவர்கள் எல்லோருக்குள்ளும் பயமிருந்தாலும் தொலைந்து போன கணவர்மாரைத் தேடுவதையும் குறியாக வைத்தனர். முதல் நாளில் அவர்கள் ஆடியவேட்டையில் பெரிய மரையை வீழ்த்தினார்கள்.கலியன் குடியில் உள்ள தொண்ணூறு குடும்பத்திற்கும் போதுமான      வகையில் தலைவி உமையாள் இறைச்சியை பங்கிட்டுக்கொடுத்தாள்.காட்டிற்குள் ஊடுருவியதும் ஏற்படும் கிளர்ச்சியை எல்லோரும் தமக்குள் பகிர்ந்துகொண்டார்கள்.                 ஒரு கோடைநாளின் மதியநேரத்தில் வேட்டைக்குச் சென்ற உமையாள் குழுவின் கால்களில் முட்கள் ஏறின.எல்லோரும் கால்களைத் தூக்கிப்பார்கையில் மனித எலும்புகள் தெரிந்தன. உமையாள் அங்கு உக்கிக்கிடந்த எலும்புகளைப் பொறுக்கிக்கொள்ளும்படி எல்லோருக்கும் உத்தரவிட்டாள்.காட்டின் மரங்களில் வேர்வரை வழிகிற ஈரம் போலவே  அந்தப் பெண்கள் குந்தியிருந்து எலும்புகளைப் பொறுக்கிக் கொள்ளத்தொடங்கினர். இறக்கை மரத்தின் கீழே கொண்டுவந்து குவித்த  மனித எலும்புகளை உமையாள் ஒரே குழியில் போட்டுமூடி நடுகல்லொன்றை நட்டாள்.

பல்லாயிரம் ஆண்டுகளான கலியன்குடி நடுகல்லை சிங்கள இராணுவத்தினர் இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டில் இடித்தழித்த அடுத்தநாள் காலையில் “தமிழீழ விடுதலைப்புலிகளின் மிகமுக்கியமான உறுப்பினர் ஒருவரை புதைத்த இடத்தை தாம் கண்டுபிடித்திருப்பதாக இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலகம் அறிக்கை வெளியிட்டது.கலியன் குடி நடுகல்லின் சிதைக்கப்பட்ட கற்துண்டுகளை சனங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று பாதுகாத்து வைத்தனர். அம்மாவோ எடுத்துவந்த சிறிய கற்துண்டொன்றை சாமித்தட்டில் வைத்து ஊதுபத்தி காட்டத்தொடங்கியிருந்தாள். தனக்கு பெம்பிளைப்பிள்ளை பிறந்தால் உமையாள் என்றுதான் பேர்வைக்கவேண்டுமென்று நினைத்திருந்ததாக அம்மா சொல்லுவாள்.

அப்பாவை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவானவர் என்று பிறிதொரு ஆயுத இயக்கம் வெட்டிக்கொன்றது.அப்பாவை நான் மிகவும் நேசிக்கத்தொடங்கும் பிள்ளைப்பிராயத்தில் அவரின் உடலை எரியூட்டும் கற்பூரங்களை நானே பற்றச்செய்தேன். அப்பாவை எரியூட்டும்          சுடலையானது உமையாள் காட்டின் உள்ளே இருந்தது.தொண்ணூறு விதவைகளும் குந்தியிருந்து எலும்புகளைப் பொறுக்கிய அந்த இடத்திலேயே எரியூட்டும் மேடையிருந்தது. அப்பாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த இயக்கப்போராளிகள் சிலர் அழுதுகொண்டு சுடலை வரைக்கும் நடந்தனர். அப்பாவைக் கொன்றதற்கு பொறுப்பேற்றுக் கொண்ட            பிறிதொரு இயக்கத்தின் உறுப்பினராக இருந்த சொந்தக்காரர் செத்த வீட்டிற்கு வந்தால் தன்னைப் புலிகள் பிடித்துவிடுவார்களென அஞ்சியே வராமல் போயிருந்தார். அம்மாவுக்கு அருகிலேயே பெண் போராளிகள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அம்மா அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு அக்காவை உமையாள் என்று அழைத்து அழுதாள். புதைகுழி வாய்திறந்து அம்மாவின் கருப்பையை விழுங்கும் காட்சியை அப்பாவின் சடலம் முன்னேயே காலம் எனக்கு காண்பித்தது.

இயேசு பாலனை அம்மா பங்கருக்குள் மறைத்துவைத்தாள்.பாலகன் குரலெழுப்பும் பொழுதுகளில் தன்னுடைய நெஞ்சினில் வைத்து ஓராட்டினாள்.அம்மாவை தன்ஒளிரும்      கண்கள் கொண்டு பாலன் இயேசு பார்த்துக்கொண்டேயிருந்தார். தனது பிஞ்சுக்              கைகளால் செடியைப் பதியனிடும் தோரணையில் அம்மாவின் கன்னங்களை கிள்ளிவிளையாடிக் கொண்டிருந்தார்.இயேசு பாலனுக்கு மாட்டுக்கொட்டகை                          போல எனக்கு பங்கர். பிறகு இடப்பெயர்வில் தான் வளர்ந்தேன்.

வேட்டைக்குச் செல்லும் காடுகளில் “உமையாள் காடே பிடித்தமானதாக இருந்து வந்திருக்கிறது.  எனது பதினான்காவது வயதில் மறக்கமுடியாத ஒரு மழைக்காலம்  ஊருக்கு வந்தது. அன்றையநாட்களில் வேட்டைக்கு செல்வதற்கென்றே சில உடைகளை நான் வைத்திருந்தேன்.அதிலொரு அதிஸ்டம் இருப்பதாக அம்மா சொல்லுவாள். உமையாள் காட்டின்    மேற்குப்புறத்தில் வேட்டையாடுவதற்காய் எப்போது இறங்கினாலும் செழிப்பான இரைகளை கையில் தருவிக்கும்.அந்த மழைக்காலத்தில் காட்டுக்குள் நாயோடு இறங்கினேன்.                      அது தனியாக வேட்டையாடும் சுகத்தை தருவித்த நாள்.

காட்டினுள்ளே உயர்ந்து நீண்டிருந்த மரங்களின் மேனியில் சுழன்று பற்றியேறிய கொடிகள் கீழ் நோக்கி தொங்கிக்கொண்டிருக்கும் இயற்கையின்அலங்கார ஜதிகளை அங்குதான் கண்டேன்.      பூமியில் நிறைந்திருக்கும் வனப்பின் நீர்க்குமிழி சொட்டிக்கொண்டேயிருக்கும் ஒரு இளஞ்செடியில் சமநேரத்தில் நீரருந்தும் வேட்டை நாயையும் என்னையும் காடு ஒரு கனியாகவே வளரவிட்டிருந்தது.வெள்ளம் ஓடுகிற சத்தம்  பரிசளிக்கும் ஆசுவாசம் எனக்குள் பிரவாகமெடுத்தது.மரத்தின் கீழே இருந்தேன். கிளைகளிலிருந்து சொட்டிக்கொண்டிருக்கும் பெருமழையின் உச்சாடனங்களை கவனித்துக்கொண்டிருந்தேன்.கிட்டத்தட்ட உமையாள் காட்டின் நடுவில் அதுவும் சுடலையின் பக்கமாக வந்தமர்ந்திருக்கிறேன் என்பதை பிறகு தான் கவனித்தேன்.வேட்டை நாய் எனக்கருகிலேயே இருந்தது.

அப்போது மரத்தின் கிளையொன்றிலிருந்து முறிந்து கீழே விழுகிற மனிதனின் உடலைக் கண்டேன். நீரில் விழுந்து ஆடும் அவனின் உடலைத் தூக்குவதற்காக ஓடிப்போனேன். அவனின் முதுகுப்புறத்தில் நீரடிப்பாசிகள் போன்ற கோடுகளுக்கு நடுவில் நீந்தும் இறக்கை கொண்ட சிறியமீனின் உருவத்தை பார்த்தேன்.கலியன்குடியின் இறக்கை மரக்           கல்லில் இருக்கும் சித்திரமது. அவன் என்னை சிலநிமிடங்கள் உற்றுப்பார்த்தான். கைகள் முழுக்க கீறலும் காயங்களும் குருதிகசிந்து துருவேறிக்கிடந்தன. அவனிலிருந்தது பழங்கால இரத்த வாடை.            அவனின் சாயலில் இதற்குமுன் யாருமிந்த பூமியில் இல்லையென்று சொல்லுமளவுக்கு திரண்டதோளோடு வடிவாயிருந்தான்.எனதருகில் வந்து உன்னுடைய பெயர் என்னவென்று கேட்டான்.கலியன் என்றேன். உமையாள் காடு பெண்ணின் நளினத்தோடு அசைவதை  அப்போது தான் பார்த்தேன்.

அவனும் சொன்னான்.

“கலியன்”

பின்னர் மரங்களைப் பிடித்து அந்தரத்தில் மறைந்தான்.நானோ பயத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன்.காட்டின் கண்கள் திறந்துகொண்டு என்னையே பார்த்தன.                    நான் கலியனைப் பார்த்தேன் என்று சொன்னால்,நம்புவதற்கு ஆளில்லை.அசரீரிகளும் தரிசனங்களும் உக்கிப்போன விறகு மாதிரி எரிந்துபோய் சாம்பலாகிவிடுகின்றன.                        இந்தச்சம்பவத்திற்கு பிறகு உமையாள் காடு அதிகமாய்ப் பிடித்துப்போயிற்று.                        அடுத்த தடவை கலியனை சந்திப்பேன் என்று நினைத்தும் கூட பார்க்கவில்லை.                                  அப்போது கார்த்திகை மாதம். காந்தள்பூக்கள் கிளைகளின் நுனியில் காடெங்கும் அசைந்துகொண்டிருந்தன. கலியன் ஒரு மரத்தின் பொந்திற்குள் இருந்து வெளியேவந்தார்.            நான் பார்த்துக்கொண்டேயிருந்தேன். அவரின் உடல் சிவனின் சாம்பல்நிறத்தை ஒத்திருந்தது. அவர் எனக்கு ஒரேயொரு செய்தியை மட்டும் சொல்லி மறைந்தார்.அந்தச் செய்தி அவரோடு ஆதியில் காணமல்போனவர்கள்  குறித்து மட்டுமில்லையென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. காடு உடையதை விளம்பவில்லை கலியா என்று கூக்குரல் தொனியில் சொன்னார்.கலியனிலிருந்து எழுந்த தேன்வாசனையானது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அந்தக்காட்டின் வளியில் நின்றேகும். அவர் மறைகிற போது காட்டினுள்ளே சுழன்ற              காற்றின் இரைச்சல் இதயத்தில் படிந்தது. இந்தக் காட்டிற்குள்ளும் வதைமுகாம்கள் இருக்கிறதென அவர் சொல்லவந்தாரா? இப்போது  கலியனைப் பார்க்கமுடியாது.              இராணுவ முகாம் பெருமளவில் காட்டை குடைந்துவிட்டது. மக்களின்  சுடலையையே  இராணுவம் வேறொரு இடத்திற்கு  மாற்றியது.இடம்பெயரும் சாபம் கொண்ட நாம்                  எரிவதற்கிருக்கும் இடமே இடம்பெயர்ந்து போவதைப்பற்றி எந்தமுறைப்பாடுகளும் இல்லை.

இயேசு பாலன் பங்கருக்குள் இருந்து அழத்தொடங்கிய சத்தத்தை ஒரு கட்டத்தில் ஆற்றுப்படுத்த முடியாத அம்மா வெளியே தூக்கி வந்தாள்.எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தையை எல்லோரும்      அதிசயமாகப் பார்த்தார்கள். இரண்டே வயதான ஒரு பழுப்புநிற பாலகனை அம்மா மடியில் போட்டுக்கொண்டு இன்றையநாளின் ஜெபத்தை தொடங்கினாள்.

  • பாலகனே! நீயொரு யூதனாகப் பிறந்து சிலுவையில் அறையப்படுவீர்.நாம் பங்கருக்குள் உயிர்விடுவோம். நீர் பெத்தலகேமில் பிறந்து ஏரோது ராஜாவிற்கு மட்டும் ஒளிந்துபோனீர்.நாம் பிறக்கும் போதே துட்டகைமுனுக்களுக்கு இரையாவோம்.

 

  • நீர் ஆதிமுதலாய் அன்பைப் போதித்தீர்.ஆதலால் இன்றும் உம்மை  நம்பியிருக்கிறோம். ஐ.நாவா? ஆண்டவனா? என்று சாத்தான்கள் என்னை நோக்கிக் கேட்டால்,நான் உமக்கும் கேட்கும்படியாய் ஆண்டவன் என்பேன். எம்மிடம் அலைந்து திரிய இனி ஒருபிடி            மண்ணும் இல்லையென்று உமக்கும் தெரியும்.

 

  • யுத்தம் எமக்கு பெலனாக இருந்தது. பின்னர் எம்மையும் அதன் நிழலிலே இளைப்பாற அனுமதிக்கவில்லை. யுத்தம் எமக்காய் வேதனைப்பட்டது. நிராயுதபாணிகளாக நாம் ஆடைகளை அவிழ்த்து கடலுக்குள்  இறங்குகையில் உமது அற்புதங்களான கடலை பிரித்து நிலமாக்கிய காட்சியும் சடுதியாய் நினைவுக்கு வந்தது.அப்போது நந்திக்கடலில்            உப்புக்கு பதிலாய் பிணங்கள் விளைந்தன.

 

  • நீங்கள் மகத்துவமானவர் கர்த்தரே! அப்பம் போலொரு மகிழ்ச்சியையும், திராட்சை ரசம் போன்ற நிம்மதியையும் உங்கள் புயத்தின் வல்லமையினால் எம்மிடம் கொண்டு சேர்ப்பீர். இல்லையேல் நாம் மீட்கப்படுவது சந்தேகமென்றாலும் பாலனே வாய்திறந்து சொல்லும்.

 

  • சனங்களே கவனியுங்கள்! துரோகஞ்செய்யும் அக்கிரமக்காரர்களை நீதியின் நிமித்தம் தண்டிக்கும் படியாய் இயேசு பாலனிடம் வேண்டுங்கள். இஸ்ரவேலர்கள் எம்மைக்கொன்றதன் சாட்சியாக இருக்கும் குண்டுகளின் கோதுகளை கொண்டு வந்து காட்டுங்கள்.கர்த்தர் கண் திறக்கும்படியாய் கூடிவாருங்கள்.அவர் இஸ்ரவேலராகவென்றாலும் எம்மீது கரிசனம் கொள்ளட்டும்.

 

  • குதிரைகளே எங்கள் பிணக்காட்டின் மேலே நீங்கள் ஓடினீர்கள்,உங்கள்  யுத்த ரதங்கள் கடகடவென்று எங்கள் உடல்களில் ஏறிக்கொண்டே போயின. அலைகள் மோதியடிக்கும் இந்துசமுத்திரக் கடலில் இறந்துபோய்க் கிடந்த மீன்கள் மாதிரி இறந்துபோன எத்தனையோ பாலன்களை நட்சத்திரங்கள் பார்த்தன. அப்போதும் அவைகள் பிரகாசமாக ஒளிர்ந்து மின்னின.அலைகள் குருதியாய் எழுகையில் நிலவு வளர்ந்தது. யுத்தம் வானத்தில் நடக்காதென நீர் உறுதியளித்தீரா?

 

  • எனது நொறுங்குண்டு போகும் இந்த உயிரின் நடுக்கத்தை நீர் மரியாளின் பிள்ளையாக பொருட்படுத்தும். நாம் கேட்பதைப் புறக்கணித்தால் இந்தப் பூமியின் ஆரோக்கியம் இருப்பதிலும் பார்க்க குறைந்துவிடும்.அன்பெனும் சொல்லை பழியும் பாவமும் தீண்டத்தொடங்கும். எங்கள் கண்ணீர் தாவீதுவின் பையிலிருந்த கல்லைப் போலாகி எமக்கு  உதவாத அமைதியையையும் அன்பையும் நோக்கி குறிவைத்து தாக்கும்.

 

  • பெத்தலகேமின் பாலகனே உம்மைப் பார்க்கையில் அலறவேண்டுமாற் போலிருக்கிறது.இந்த நாட்டின் குடிகளை உனது எந்தவார்த்தைகளும் சுகப்படுத்தாது என்று நீரே முடிவுபண்ணாதையும்.அந்நிய பாஷையிலேனும் நீர் உரையாடும். ஆமென்!

அம்மாவின் கண்ணீர் இயேசு பாலனின் வயிற்றில் துளிச்சிசுவென விழுந்து உடைந்தது.கால்களை உதறி அழத்தொடங்கியவரின் கண்கள் அசைவற்று அம்மாவில் குத்திநின்றது.காணாமல்போன தனது பிள்ளையை கண்டுபிடிப்பதற்காய் போராடிக்கொண்டிருந்த மலர்வதி கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்த செய்தி கலியன்குடியை மீளமுடியாத சுழிக்குள் இழுத்தது. பாலன் இயேசுவைத் தூக்கிக்கொண்டு மலர்வதி வீடுநோக்கி ஓடினாள் அம்மா. நீர்குடித்து உப்பிப் போய்க்கிடந்த மலர்வதியின் சடலத்திற்கருகே செல்ல இயேசு பாலன் வீறிட்டு அழுதார். ஊருக்குள் புதிதாகவொரு குழந்தை வந்திருப்பதை ஊரிலுள்ள உளவாளிகள் மூலம் அறிந்த இலங்கையின் பயங்கரவாததடுப்பு பிரிவினரால் கலியன் குடி சுற்றிவளைக்கப்பட்டது.மலர்வதியின் இறுதிக்கிரிகைகள் முடிவதற்கிடையில் கலியன்குடியில் இன்னொரு கொலையை இராணுவம் நிகழ்த்தியது.

அடுத்தநாள் காலையில் இந்த சம்பவம் பற்றி தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டி வழங்கிய இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் “நேற்று சுட்டுக்கொன்ற இரண்டு வயதான புலியை இதற்கு முன்பும் ஒரு தடவை தமது இராணுவம் போரின் இறுதிநாட்களில் சுட்டுக்கொன்றதாகவும் எப்படி உயிர்த்தெழுந்தார் என்பதே ஆராயப்படவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அம்மா பாலச்சந்திரன் என்று குரல் எடுத்துக் கதறுகையில் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

இயேசு பாலனின் ரத்தம் காய்ந்த எங்கள் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள்                    அன்னை மரியாள்.

நன்றி :2018 மே தடம் இதழ் 

http://akaramuthalvan.com/பாலன்-சிறுகதை/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.