Jump to content

பரதநாட்டியம் முதல் பவர்லிஃப்ட்டிங் வரை - சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண்


Recommended Posts

ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.

ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், 'வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயத்துக்குட்பட்ட, 63 எடையுள்ள பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கா சார்பில் போட்டியிட்ட ஆர்த்தி நிதி வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த பவர்லிஃப்ட்டிங் போட்டியின் ஸ்குவாட் பிரிவில் உலக சாதனையோடு தங்கப்பதக்கத்தையும் இவர் வென்றுள்ளார்.

சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு அந்நாட்டில் பிறந்து, வளர்ந்த ஆர்த்தி நிதியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"கனவு நனவானது"

ஆர்த்தி நிதிபடத்தின் காப்புரிமைARTHI

"கடந்த நான்கு ஆண்டுகளாக பவர்லிஃப்ட்டிங் போட்டிகளுக்காக பயிற்சி செய்து வரும் நான் இவ்வளவு விரைவில், பவர்லிஃப்ட்டிங் விளையாட்டின் ஒலிம்பிக்காக கருதப்படும் இந்த தொடரில் அமெரிக்காவுக்காக பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை. எனது கடுமையான, விடாப்பிடியான பயிற்சி, எனது நான்காண்டுகால கனவை நிறைவேற்றியுள்ளது" என்று பெருமை பொங்க கூறுகிறார் ஆர்த்தி.

சமூக அழுத்தத்தையும், மனரீதியான தடையையும் மீறி தனது பெற்றோர் அளித்த ஊக்கமும், சர்வதேச போட்டிக்கு தயாரானதும் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் தக்க பயிற்சியை வழங்கிய நிர்வாகம் மற்றும் நண்பர்கள்தான் தனது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார் ஆர்த்தி.

அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த இந்தியர்களின் குழந்தைகளின் கல்வியில் சாதனை புரிவது சாதாரணமாக மாறி வரும் வேளையில், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துள்ளது குறித்து பேசிய ஆர்த்தி, "இந்தியர்கள் என்றாலே கல்வியில் முதலிடம் என்ற மதிப்பு மிக்க நிலைக்கு புலம்பெயர்ந்த பெற்றோர்களே முக்கிய காரணம். ஆனால், கல்வியை போன்றே அமெரிக்காவின் விளையாட்டுத் துறையிலும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சாதிக்க முடியுமென்ற எண்ணம் வளர வேண்டியது அவசியம். கல்வி அதை தவிர்த்தால் நடனம் என்ற எண்ணத்திலிருந்து அமெரிக்க இந்தியர்கள் வெளிவர வேண்டும்" என்று கூறுகிறார்.

'சமூக அழுத்தத்தை உடைக்க வேண்டும்'

தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தியின் தந்தை கருணாநிதி 1987ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு சென்றார். பிறகு, 1990ஆம் ஆண்டு நாமக்கல்லை பூர்விகமாக கொண்ட சாந்தியுடன் திருமணமானவுடன், அவர்களுக்கு 1994இல் ஒரு ஆண் குழந்தையும், 1996இல் ஆர்த்தியும் அமெரிக்காவில் பிறந்தனர்.

 

தனது மகளின் வெற்றி குறித்து சாந்தி பேசுகையில், "சிறுவயதிலிருந்தே நேர்த்தியான செயல்பாட்டை மேற்கொள்ளும் ஆர்த்தி, பள்ளிக்காலத்தில் பரத நாட்டியத்தில் அசத்திய நிலையில், கல்லூரியில் சேர்ந்தவுடன், ஒரேயடியாக பவர்லிஃப்ட்டிங்கில் ஈடுபடப்போவதாக கூறியதை மனரீதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், எனது மகளின் ஆர்வத்திற்கு தடைபோட கூடாது என்ற ஒரே காரணத்துக்காக நானும் எனது கணவரும் ஆர்த்திக்கு தொடக்கத்தில் இருந்தே முழு ஆதரவு அளித்து வருகிறோம். இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய அணிக்காக சர்வதேச அளவில் போட்டியிட்டு எனது மகள் வெற்றிபெற்றுள்ளதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.

பரதநாட்டியம் முதல் பவர்லிஃப்ட்டிங் வரை

அமெரிக்காவிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்த ஆர்த்தி, எப்படி கல்லூரிக்கு சென்ற பிறகு பவர்லிஃப்ட்டிங்குக்குள் நுழைந்தார் என்று அவரிடமே கேட்டோம். "மேல்நிலை பள்ளிக்கல்வி வரை பரதநாட்டியம் பயின்ற நான், இடையில் ஓராண்டிற்கு அதை நிறுத்தியதால் உடல் எடை அதிகமானது. அதைத்தொடர்ந்து, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றேன்; உணவு பழக்கவழக்கத்தை மாற்றியமைத்து உடற்கட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினேன். அதைத்தொடர்ந்து, கல்லூரில் சேர்ந்த பிறகு, பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த அறிவுரையின்படி, பவர்லிஃப்ட்டிங்கில் ஈடுபட தொடங்கினேன்" என்று தனது பயணத்தின் தொடக்க காலத்தை விவரிக்கிறார்.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் இனவெறியை மையமாக கொண்ட சம்பவங்களால், தான் நேரடியாக பாதிக்கப்பட்டதில்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.

"அமெரிக்கா முழுவதும் நிறவெறி இருக்கிறது என்று கூறமுடியாது. அதே சமயத்தில் நிறத்தின் அடிப்படையில் ஒருவரை தனிமைப்படுத்தும், வசைபாடும் மற்றும் தாக்குதல் தொடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நான் இதுவரை நேரடியாக இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டதில்லை. எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை தொடர்ந்து பயணிக்க வைத்தது."

'தமிழராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்'

தான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்கா என்றாலும், தமிழ்நாட்டுடனான தனது உறவு எப்போதும் தொடரும் என்றும், தான் தமிழராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் ஆர்த்தி கூறுகிறார்.

ஆர்த்தி நிதிபடத்தின் காப்புரிமைARTHI

"சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது தாத்தாவும், பாட்டியும் இறந்துவிட்டனர். அதற்கு முன்பு வரை, ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையின்போது, ஒன்று முதல் இரண்டு மாதத்திற்கு நானும், எனது அண்ணனும் தமிழ்நாட்டிற்கு வந்து உறவினர்களுடன் நேரம் செலவிடுவோம். அப்போது, தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம், உணவு வகைகள், மொழியின் சிறப்பு போன்றவற்றை தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. நான் பள்ளியில் படித்த போது, தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து செல்லும்போது, என் நண்பர்கள் கேலி செய்ததுண்டு. ஆனால், நான் ஒருபோதும் அதுகுறித்து கவலைப்பட்டதில்லை. இப்போதுகூட எனது உடற்கட்டை பராமரிக்கும் உணவு வகைகளில் அவை தொடருகின்றன" என்று கூறுகிறார்.

"எனது குழந்தைகள் வளர்ந்த நேரத்தில், தமிழை சொல்லி கொடுப்பதற்கான வாய்ப்பு நியூ ஜெர்சியில் மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது. இருப்பினும், எங்களது வீட்டில் எப்போதுமே தமிழ் பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதால், பேச்சுத் தமிழை பொறுத்தவரை எனது குழந்தைகளுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. எனினும், தற்போது அமெரிக்கா முழுவதுமுள்ள தமிழ் கல்வி கூடங்களை பயன்படுத்தி தங்களது மொழியறிவை மேம்படுத்த எனது குழந்தைகள் விரும்புகின்றனர்" என்று கூறுகிறார் ஆர்த்தியின் தாயார் சாந்தி.

'தடைகளிலிருந்து மீண்டெழ வேண்டும்'

ஆர்த்தி நிதி

இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெண்களை அவர்களது சொந்த குடும்பத்தினர் குறைவாக மதிப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறார் ஆர்த்தி.

"இந்த சமூகம் நினைப்பதை போன்று பெண்கள் வலுவற்றவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் எந்த பெண்ணாலும் சாதிக்க முடியும். தனக்கு மிகவும் பிடித்த விடயத்தை செய்ய பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரளிக்க வேண்டும், நினைத்ததை செய்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்" என்று கூறும் ஆர்த்தி பவர்லிஃப்ட்டிங் வீராங்கனையாக மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகவும் பணிபுரிகிறார்.

தற்போதுவரை ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாத பவர்லிஃப்ட்டிங், வருங்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டால், ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சார்பாக பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது நீண்டகால இலக்கு என்று ஆர்த்தி கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/global-48598309

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.