Jump to content

நூறு கதை நூறு படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 98 – தமிழ் படம் (29.01.2010)

கலை எதையும் எதிர்க்கும். கலையையும்

-யாரோ

தமிழ்ப்படம் துரை தயாநிதி தயாரிப்பில் சீ.எஸ்.அமுதன் இயக்கத்தில் கண்ணனின் இசையில் டி.எஸ்.சுரேஸ் எடிடிங் செய்ய நிரவ் ஷா ஒளிப்பதிவு புரிந்து 2010 ஆமாண்டு உருவான தமிழ்ப் படம்.

தர்ம சாத்து என்பார்கள் அதை அனுபவித்தது தமிழ் சினிமா. இப்படி ஒரு சினிமா வரும் என முன் தலைமுறை எதிர்பார்த்திருக்குமா தெரியாது. ஆங்காங்கே நாகேஷ், தங்கவேலு தொடங்கி கவுண்டமணி வடிவேலு வரை பலரும் பல படங்களில் கிடைத்த இடங்களிலெல்லாம் சினிமாவை நக்கலடித்துக் கொண்டே சினிமாக்கள் செய்து வந்திருந்தாலும்கூட தமிழ்ப்படம் அளவுக்கு எதுவொன்றுமே இறங்கி அடித்ததில்லை. சி. ரங்கநாதன் தொடர்ந்து தன் படங்களில் சினிமாவை ஆனவரைக்கும் கிண்டல் செய்தார். ஆயினும் அவர் படங்கள் விதிவிலக்குப் படங்களாக ஒருபோதும் ஆகவில்லை. சி.எஸ். அமுதன் கையிலெடுத்தபோது சர்வசினிமாவும் நடுங்கியாக வேண்டியிருந்தது.

spacer.png

‘நீ வளரணும்னா அந்த சைக்கிள்லே ஏறி பெடலை சுத்துப்பா’ என்பார் பாட்டி. சுத்தியதும் பெரிய பய்யன் ஆவார் சிவா. ஒரு பாட்டில் பணக்காரர் ஆவார் சிவா, அவரது வளர்ச்சியை இரண்டு விதத்தில் காட்டுவார் இயக்குனர் ஒன்று, வெளி உலகத்தில் சிவா மின்சார வாரியம், சிவா விமான போக்குவரத்து நிலையம், சிவா மார்ச்சுவரி, சிவா ரத்த வங்கி, சிவா ரயில் நிலையம் என்றெல்லாம் காணக்கிடைக்கும். இன்னொரு புறம் யாரிடம் சவால்விட்டு விட்டு உழைத்து சிவா முன்னேறினாரோ அந்த நாயகியின் அப்பா அழகு ஒரு காஃபி கேட்டு அது அவர் கைக்குக் கிடைக்கும்போது பணக்கார மாப்பிள்ளையாக திரும்பியிருப்பார் சிவா. அதகளம்

அரசியல்வாதி கேட்கும் லஞ்சத்துக்கு பதிலாக மூன்று ரூபாய் ப்ளஸ் ஒரு ஐம்பது பைசா சாக்லேட் ப்ளஸ் வெளியே நிற்கும் ஓட்டை சைக்கிள் என தந்துவிட்டு சைக்கிளைப் பிரியமனமில்லாமல் கடக்கும்போது ஒரு பார்வை பார்ப்பார் சிவா. சிவாஜி தோற்பார் அந்த இடத்தில். உள்ளே சாவி தரும் போது சைக்கிள் சாவி கார்ச்சாவி போலவே இருக்கும்.

ஒரு இரவில் பரதநாட்டியம் கற்றுக்கொள்வது எப்படி என சிவா படிக்கும் அதே காதலார்வத்துடன் ஒரு இரவில் பிரியாணி சமைப்பது எப்படி என இன்னொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார் சிவாவின் க்ளாஸ்மேட் எம்.எஸ்.பாஸ்கர். சிவாவின் மற்ற சகாக்கள் வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் மனோபாலா. வெண்ணிற ஆடை மூர்த்தியின் அப்பாவாக வந்து கண்கலங்க அட்வைஸ் செய்து செல்லும் நடிகர் சிறுவயதினராக இருப்பார். அவர் வந்து செல்லும்வரை அரங்கங்கள் அதிரும்.

குடும்பப் பாட்டு அதுவும் இங்கிலீஷ் பாட்டு பாடி பிரிந்த குடும்பம் சேரும். அமெரிக்க ஜனாதிபதி ஃபோன் செய்து எனக்காக நீங்க மறுபடி வேலைக்கு வந்துதான் ஆகணும் என சிவாவிடம் கெஞ்சுவார். இதெல்லாம் சிறு சாம்பிள்கள் தான். மொத்தப் படமுமே சரவெடியாய் சிதறும்.

சங்கர் முதல் கே.எஸ்.ரவிக்குமார் வரை ரஜினி முதல் சிம்புவரை யார் படத்தையும்விடாமல் வாரி அடித்தது தமிழ்ப் படம். காலங்காலமாக எதையெல்லாம் செய்து ரசிகன் ரசிப்பான் என்று பூ சுற்றினார்களோ அத்தனை பூவையும் எடுத்து திரும்பிச் சுற்றுவது ஒன்றே நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தில் இருநூறு சதம் ஜெயித்தது இந்தப் படம்

தமிழ்ப்படம் தனக்குள் அடித்து துவம்சம் செய்த தமிழ்ப்படங்கள்:

பாட்ஷா, தேவர்மகன், கந்தசாமி, ரமணா, மாப்பிள்ளை, பில்லா, வேட்டையாடு விளையாடு, காக்ககாக்க, மௌனராகம், சிதம்பர ரகசியம், விருமாண்டி, மொழி, காதலுக்கு மரியாதை, அண்ணாமலை, அந்நியன், பாய்ஸ், அபூர்வசகோதரர்கள், சிட்டிசன், வீராச்சாமி, தளபதி, நாயகன், சந்திரமுகி, மின்சாரக் கனவு, கிழக்கே போகும் ரயில், போக்கிரி, ரன், கஜினி, சூர்யவம்சம், நாட்டாமை, சின்னத் தம்பி, திருப்பாச்சி, தசாவதாரம், காதலன், நாளைநமதே, தூள், 7ஜி ரெயின்போ காலனி, வைதேகி காத்திருந்தாள், சென்னை 28, திருமலை, கேப்டன் பிரபாகரன்.

நகைச்சுவை என்பது ஆகக் கடினமான விசயம். அடுத்தவரை சிரிக்கச் செய்வதற்கு முழுமையான ஒப்புக்கொடுத்தலுடன் கூடிய உழைப்பும் முயற்சியும் அவசியம். ஒரு மொழியின் கதை, இசை, நடனம் ஏன் நடிப்புத் திறன் கூட பல மொழிகளிலும் வெல்லும். காமெடி எனப்படுகிற நகைச்சுவை பெரும்பாலும் அந்தந்த நிலத்துடனே உறையக்கூடிய கலாவினோதம் நகைச்சுவைக் கலைஞர்கள் மொழிவழி நிகழும் வைடூர்யங்கள். நகைச்சுவைப் படம் என்பது திரைப்பட உருவாக்கத்தில் கடினமான பகுதிதான். தமிழ்ப்படம் நகைச்சுவைப் படங்களைத் தொடவே இல்லை. ஸ்பூஃப் எனப்படுகிற எள்ளல்வழி அங்கதம் தமிழில் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலும் எடுக்கப்படுவதும் வெற்றி தோல்விகளை சந்திப்பதும் காலம் காலமாகத் தொடர்ந்துவரக் கூடியதுதான். தமிழ் மொழியைப் பொறுத்தவரை அபாரமும் அபூர்வமும் இரட்டைக் குழந்தைகள். எழுபது வருட சினிமா வரலாற்றில் 2010 ஆமாண்டு எடுக்கப் பட்ட தமிழ்ப் படம் அடைந்த வெற்றியை அதன் இரண்டாம் பாகமாக வெளியான தமிழ்ப் படம் 2 பெறவில்லை. இதுவும் நம் நிலத்தின் திரைரசனையின் வித்யாசங்களில் ஒன்றாகவும் கருதமுடியும்.

தமிழ்ப்படம் எள்ளலும் கிண்டலும்

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-98-தமிழ/

 

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 99 – காதல் கோட்டை

 

திரைப்படம் மேதைகளுக்கான கலைவடிவம் அல்ல. அது பாமரர்களுக்கானது

-வெர்னர் ஹெர்ஸோக்

தமிழ் சினிமாவின் மையங்கள் ஒரு புறம் வணிக வெற்றியை நோக்கியும் இன்னொரு பக்கம் கலாபூர்வ உன்னதங்களுக்கான முயற்சித்தலும் என இரண்டாகப் பிளந்தாலும்கூட ஒரு திரைப்படத்தின் வணிக வெற்றியிலிருந்துதான் அதன் சரித்திரம் தொடங்குவதாகப் பொருள். அப்படியான மையங்களை மாற்றி அமைப்பதற்கான முயல்வுகள் சென்ற நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பலமுறை நிகழ்ந்திருக்கின்றன. புராணப் படங்களிலிருந்து சமூகத் தளத்துக்கு மாற்றமடைந்ததையும் புனையப்பட்ட அரங்கங்களில் இருந்து நிஜமான கிராமங்களுக்குப் பெயர்ந்ததையும் சொல்ல முடியும். அதைப்போலவே காதல் என்கிற சாகாவரம் பெற்ற திரைக்கதைக்கான இடுபொருளை ஆய்வுசெய்தால் காதலைத் திரைப்படுத்துவதில் கிடைத்த எல்லா விதமான திரைப்படங்களையும் பார்த்துச் சலித்து “அடுத்தது என்ன?” என்று சாமான்ய தமிழ் ரசிகன் அயர்ந்திருந்த பொழுதொன்றில் 90களின் மத்தியில் வெளியான காதல் கோட்டை அகத்தியனுக்கு சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்துக்கான இரட்டை தேசியவிருதுகளையும் பெற்றுத்தந்தது.

spacer.png

பெரும் ஓட்டத்துடனான வணிக வெற்றியும் பல இந்திய மொழிகளுக்குப் பெயர்ந்த அதன்பின் விஸ்தாரமும் கூடுதல் தகவல்களே. ஒரு திரில்லர் படத்தில் மாத்திரமே சாத்தியமாகிற இறுதிவரை குறையாத விறுவிறுப்பை காதல் படத்தில் சாத்தியப்படுத்தியது காதல் கோட்டை. நல்லவர்களுக்குக் கெட்டவர்களால் ஏற்படும் துயரிலிருந்து தப்பித்தலைக் கதையாக்கிக் கொண்டிருந்த சினிமாவில் சகஜ மனிதர்களின் முரண்பாடுகளைக் கலைத்துப் போடுவதன் மூலமாகவே திரைக்கதை நகர்ந்தது ஆரோக்கியமான புதுமை. கடிதம் மூலமாக நட்புக் கொள்வதென்பது அதற்கு முந்தைய ஐம்பது ஆண்டுகால தமிழ் மத்யம கூட்டு ஞாபகத்தின் செல்வாக்கான மற்றும் அதிகம் சொல்லப்படாத இடுபொருள். அதனைக் கதையின் மையக் கருவாக்கியதன் மூலமாக இயல்பான மனிதர்கள் எல்லோர்க்கும் நிகழ வாய்க்கிற சம்பவங்கள் கூர்மையான வசனங்கள் என்று இந்தப் படத்தின் பெரிய வெற்றி முன் கூட்டித் திட்டமிடாத ஒன்றுதான்.

நாயகனும் நாயகியும் படத்தின் கடைசி ஃப்ரேமில்தான் முதல் முறை சந்தித்துக் கொள்வார்கள் என்று இதன் ஒருவரியைத் தீர்மானித்துக் கொண்டு களமிறங்கிய புள்ளிதான் அகத்தியனின் மாபெரிய தைரியம். சென்ற நூற்றாண்டில் செல்ஃபோன் இல்லை. கடிதங்கள் புழக்கத்தில் இருந்தன. இணையதளம் செல்பேசி குறுஞ்செய்தி பேஜர் என உலகம் தன் சுவர்களை உடைக்கத் தொடங்கிய காலத்தில் இப்படி ஒரு படம் சாத்தியம். இதையே அடுத்த படமா எடுத்துக்கலாம் என்று வைத்திருந்தால் ஜஸ்ட் லைக் தட் திரிந்த பால்போல் கெட்டிருக்கும். எடுப்பதற்கு எதுவுமின்றிக் கலைந்து சரிந்திருக்கும்.

தன் சான்றிதழ்களை ரயிலில் தவறவிடுகிறார் இளம்பெண் கமலி, அதை கண்டெடுக்கிறான் இன்னொரு திசையில் தனது பயணத்தை மேற்கொள்ளும் சூர்யா. மிகுந்த பொறுப்புணர்வுடன் அதை கமலியின் முகவரிக்கு அனுப்பிவிட்டு வட இந்தியாவின் ஒரு நகரத்தில் புதிய வேலையை நோக்கி சென்றுவிடுகிறான். கமலி சூர்யா இருவருக்குமிடையே கடிதங்களின் வழியாக நெருக்கமான நட்பு ஏற்படுகிறது. அதுவே பிற்காலத்தில் கனிந்து காதலாகிறது. ஒருவருக்காக ஒருவர் காத்திருக்க ஆரம்பிக்கிறார்கள். சூழல் நிமித்தம் சூர்யா சென்னை வர கமலியும் சென்னை வருகிறார். இருவரும் சந்தித்துக் கொண்டாலும் பேசுவதில்லை. பேசிக் கொண்டாலும் அது ஒரு பெயர் கேட்கும் அளவுக்கு கூட இல்லை. இப்படியான காணாமல் காதல் கடிதம் வழி அன்பு என்கிற எளிய கதையை எல்லா நிலத்துக்கும் ஆன காட்சி அனுபவமாக மாற்றினார் அகத்தியன். எப்படி, எங்கனம் அவர்கள் காதல் கடிதங்களிலிருந்து மனம்பெயர்ந்து உதடுகளை உடைத்துக் கொண்டு காதலாய்க் கனிந்தது என்பது காதல் கோட்டை படத்தில் கதை. எப்படி பாலச்சந்தர் தன் படவுலகத்தை தனக்கே உண்டான விசித்திர மனிதர்களைக் கொண்டு அவர்களுக்கான தனித்த உரையாடல்களைத் தயாரித்து அவர்களின் மூலமாகத்தான் உணர்ந்த அத்தனை முரண் புதுமை மீறல் எதிர்ப்பு ஒவ்வாமை லட்சியம் அலட்சியம் தனிமை என எல்லாவற்றையும் பேசச் செய்தாரோ அடுத்த காலத்தில் அதை இன்னும் புதிய உறுதியான யதார்த்த மனிதர்களின் தனித்துவங்களை எடுத்துச் சொல்ல விழைந்தவர் அகத்தியன். இந்தப் படத்தில் மழை ஒரு கதாபாத்திரமாகவே நடித்திருந்தது. ரயில் நிலையம் கடைசிக் காட்சியில் மனம் மாறும் வில்லனைப் போலவே பங்கு பெற்றது.

அதுவரை தமிழ் சினிமா கண்டிராத சுயமரியாதையுடனான குணச்சித்திர கதாபாத்திரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தன. அகத்தியனின் பாத்திரங்கள் நம்மோடு கலந்து வாழ்பவர்கள். நம்மில் பலராய்த் ததும்பினாலும் ஆளுமையும் கம்பீரமும் உறுதியும் தனித்துவமும் கொண்டவர்கள். அவர்களைப் பேசிப் பழகுபவர்கள் அவர்தம் வித்யாசங்களை உணர்வார்கள். ஆட்டோ ட்ரைவராக வரும் தலைவாசல் விஜய், மணிவண்ணன், ஹீரா, இந்து, கரண், பாண்டு, ராஜீவ் என எல்லாருமே அகத்தியனின் பாத்திரங்கள். காதல்கோட்டை மட்டுமல்ல அகத்தியனின் பல படங்களும் அவரது கதை சொல்லல் முறை வசனங்கள் மற்றும் பாடல்கள் என எல்லாவற்றுக்காகவும் ரசிக்கப்பட்டன. சினிமாவின் நெடிய வரலாற்றில் தன் படங்களை அழுத்தந்திருத்தமாய்ப் பொன்னால் எழுதிய கையெழுத்துக்களாய்ப் பதித்தார் அகத்தியன்.

காலமெல்லாம் காதல் வாழ்க என்று இந்தப் படத்தின் டைடில்ஸ் துவங்கி இறுதிக் காட்சிவரைக்கும் மாபெரிய பரபரப்பை தக்கவைத்தது. படத்தின் பலம் ஒளிப்பதிவு தொடங்கி இசை வரைக்கும் எல்லாமே இனித்தன. காதல் கோட்டை அந்தக் காலத்தின் அற்புதமாகவே ஞாபக ஆழத்தில் உறைகிறது. காட்சி அனுபவத்தின் எல்லா அடுக்குகளிலும் தொண்ணூறுகளின் மத்தியில் சுயமாண்பும் சக மனிதப் போற்றுதலும் மிகுந்த மத்யம உலகத்தின் மாந்தர்கள் நிரம்பி இருந்ததுவும் அதுவரைக்கும் யாரும் சொல்லிப் பார்க்காத காதலைக் கன கச்சிதமாய்ச் சொன்னதுவும் சென்ற நூற்றாண்டின் ஆகச்சிறந்த தமிழ்ப்படங்களின் வரிசையில் காதல் கோட்டைக்கு உண்டான இடத்தை ஐயமற உறுதிசெய்ததன் காரணிகள்.

காதல் கோட்டை மனங்களின் கூட்டுப்பிரார்த்தனை

 

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-99-காதல/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 100 – அன்பேசிவம் (15.01.2003)

 

அன்பு காட்டுறவங்க என்னைப் பொறுத்தவரைக்கும் கடவுளுக்கு சமம்- (கமல்ஹாஸன்)
(நல்லா எனும் கதாபாத்திரத்தின் வழியாக அன்பே சிவம் படத்தில்)

சக மனிதனை நேசிக்கிறவன்தான் கடவுள். அப்படியான ஒவ்வொருவரின் உள்ளேயும் கடவுள் குடியிருப்பதாகத்தான் அர்த்தம். சினிமா பரீட்சார்த்தமான கருத்தாக்கங்களை முயன்று பார்க்கிற சோதனைக் கூடம் அல்ல என்றபோதும் சினிமா அளவுக்கு மக்களின் கூட்டு மனதின் சமான நிலையை மாற்றியமைக்கிற வல்லமைகொண்ட இன்னொரு ஊடகம் இல்லவே இல்லை எனலாம். கலைகளின் சேர்மானமாக சினிமா நிகழ்கிறது. எக்கதை யார்யார் சினிமாவாகிறதோ அக்கதை நற்கதை கண்டு உய்ப்பவன் ரசிகன். ரசிகன் கற்றுக்கொள்பவனாகவே எல்லாத் தருணங்களிலும் இருக்கிறான். உதாசீனமான அல்லது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மலினமான அல்லது பங்கமான விள்ளல் ஒன்றினைக்கூடத் தனக்கான பாடமாகவே கொள்ளுகிற யாராவது ஒருவன் இருந்துவிடக்கூடும் என்றாகுகையில், சினிமாவின் வீரியம் அதன் அபரிமிதம் புரிய வருகிறது. இன்னொரு புறம் சினிமாவின் உள்ளேயும் வெளியேயும் புழங்கிக் கொண்டிருக்கிற பணம், பிம்பமையவாதம், அரசியலின் படர்க்கைக் களமாக சினிமாவை நகர்த்திச் செலுத்துகிற முகாந்திரம், நாயக வழிபாடு அதனுள் எப்போதும் உறைந்திருக்கக் கூடிய எதிராளியை இகழுதல், வன்முறைமீதான அபரிமிதங்கள் என இத்தனைக்கும் பதில் தந்தவண்ணமே எல்லா சினிமாக்களும் உருவாக்கம் பெறுகின்றன. எல்லாவற்றுக்கும் அப்பால் சினிமா எப்போதாவது அரியமலர்தலை சாத்தியம் செய்கிறது. 

spacer.png

நூறு அத்தியாயங்களில் நூறு விதமான கதைகள் தவிர்க்கவே முடியாத திரைப்படங்களின் சரமாக இந்தத் தொடர் பதிவை திட்டமிட்டபோது இவற்றின் தேர்வு முழுக்க முழுக்க என் ஒருவனின் பார்வையாகவும் தீர்மானமாகவும் மட்டுமே இருந்துவிடட்டும் என்றுதான் ஆரம்பித்தேன். முகப்புத்தகத்தில் நண்பர்கள் சிலரது பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டது அப்புறம் நிகழ்ந்தது. அந்த வகையில் நூறு படங்கள் என்பது நிசமாகவே மலைப்பைத் தருகிற எண்ணிக்கைதான். அன்பே சிவம் படத்தை எழுதுமாறு நண்பர் சதீஷ் குமார் துரை கேட்ட போது சட்டென ஒரு மின்னற் பூத்தது. அன்பே சிவம்தான் நூறாவது படமாக எழுதவேண்டும் என்பதே அது. இதை நூலாய்த் தொகுக்கையில் அதன் பின்னர் வந்த எதாவதொரு படம் நூறு என்ற எண்ணைப் பற்றிக்கொள்ளும் என்றாலும் எழுதப்படுகையில் அன்பே சிவம் என்பதோடு தொடரை நிறைப்பது நல்ல விடயமாகப் படுகிறது.

அன்பே சிவம் நான் பார்த்த வகையில் மாபெரிய படம். அது வெளிவந்த போது அதற்கு வழங்கப்பட்ட மதிப்பை வரவேற்பைவிடப் பன்மடங்கு அதிகரிக்கப்பட்ட கொண்டாட்டமாக இன்றளவும் தன் கலாச்சாரக் கவன ஈர்த்தலை நிகழ்த்தியவண்ணம் இருக்கிறது.

புவனேஷ்வர் என்கிற வடமாநில நகரத்தில் விமானம் கேன்ஸல் ஆவதால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிற நல்லா என்ற நல்லசிவம் மற்றும் அரஸ் என்கிற அன்பரசு. அவர்கள் அடுத்துவரக்கூடிய தினங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. அன்பரசுவின் உடமைகள் தொலைகின்றன. எப்படியாவது நல்லா என்கிற நல்லசிவத்தின் போரடிக்கும் பேச்சிலிருந்து தப்பி ஓடிவிட விழையும் அன்பரசு, அவருடன் தங்கவேண்டிவருவதை வேண்டா வெறுப்பாக உடன்படுகிறான். ட்ரெய்ன் மற்றும் சாலை மார்க்கமாக என்ன செய்தாவது இருவருக்குமே வெவ்வேறு காரணங்களுக்காக தமிழகம் சென்றாக வேண்டும். அரசுக்கு தமிழகத்தில் அடுத்த சில தினங்களில் கல்யாணம் நடக்க இருக்கிறது. நல்லா தன்வசமிருக்கும் 32லட்ச ரூபாய் செக்கை கொண்டு சேர்க்க வேண்டும். அது அவர் வழக்காடி வென்ற தொகை. இறந்த தொழிலாளிகளின் குடும்ப நலனுக்காக அதைக் கொண்டு சேர்க்க ஆவலாக சென்று கொண்டிருக்கிறார் நல்லா. அவருடைய முகம் மற்றும் உடல் பல இடங்களில் பெரும் விபத்திலிருந்து மீண்டதன் அடையாள மிச்சங்களோடு அவர் தோற்றம் மாறி இருக்கிறது. அவருடைய தோற்றமும் அரசுக்கு அவர் மீது ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது.

இருவரும் எல்லாவற்றிலும் எதிர்வாதிகளாகவே இருப்பது நல்லாவுக்கு சிரிப்பையும் அரசுக்கு எரிச்சலையும் உண்டுபண்ணுகிறது. உடமை இழந்ததால் அவனுக்கு நல்லாவை சார்ந்தாக வேண்டிய சூழல். அந்தப் பயணங்களில் இறுதியில் இருவரின் கதையும் பலவிதங்களில் சந்திப்பதும் நல்லசிவத்தின் முன் கதையும் நமக்கெல்லாம் முழுவதுமாக விளங்குகிறது. அன்பே சிவம் படம் தமிழில் எடுக்கப் பட்ட முக்கியமான படங்களில் ஒன்று.

அச்சமற்ற முகத்தோடும் வயதுக்கேற்ற உறுதியுடனும் வீதி நாடக கலைஞராக வாழ்ந்து வருகிற நல்லாவின் முன் கதை தொடங்குகிறது. மில் ஓனர் கந்தசாமியுடன் தொடர்ந்து முரண்படுகிறார்கள் தொழிலாளிகள். அவர்களுக்கு ஆதவான தன் தொடர்ந்த நாடகங்களின் மூலமாக நல்லாவும் அவருடன் முரண்பட்டு வருபவர்தான். எதிர்பாராத திருப்பமாக கந்தசாமியின் மகள் பாலசரஸ்வதியுடன் அறிமுகம் காதலாகிறது. நல்லசிவத்துக்கு கந்தசாமியின் பார்வையிலிருந்து விலகி தூர கேரளத்துக்குச் சென்று புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக பாலசரஸ்வதி இருக்குமிடம் நோக்கி நல்லசிவம் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் பயணத்தின் இடையில் மலைப் பாதையில் இருந்து விபத்தாகி உருண்டு விழுகிறது. பேருந்து அதில் இருந்து உருவம் சிதைந்து உயிர் தப்புகிறார் நல்லசிவம்
பழைய உருவத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒச்சங்களுடனான முகமும் நடை குன்றிய கால்களும் பலவீனமான முதுகுத்தண்டுமாய் சிரமங்களுடன் வேறொரு அன்பான மனிதராக மாறி இருக்கிறார் நல்லா. தன் மறு ஜென்ம வாழ்வை மனித இனம்மீதான வாஞ்சைக்காகவே ஒதுக்கி வாழ்கிறார். பாலசரஸ்வதியை தேடிச் செல்லும்போது அவளுக்கு திருமணமாகிவிட்டது என்று நல்லாவிடம் கந்தசாமி பொய் சொல்லுகிறார். நல்லா இறந்துவிட்டதாக தன் மகள் பாலாவை நம்பச் செய்கிறார்.

அரஸ்தான் பாலசரஸ்வதிக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை. மெல்ல அரஸ் நல்லாவை ஒரு நண்பனாக கருதத் தொடங்கி தன் திருமணத்துக்கு அவசியம் வரவேண்டுமென்று அழைக்கிறான். தன் மாப்பிள்ளையிடம் பாலாவுடனான காதலைச் சொல்லாத நல்லாவிடம் டீல் பேசுகிறார் கந்தசாமி. தொழிலாளர்களுக்கு ஆதரவான ஒப்பந்தத்தில் கந்தசாமி கையெழுத்திட்ட திருப்தியுடன் நல்லா பால சரஸ்வதியை சந்திக்காமலே திரும்பிச் செல்கிறார். நல்லாவை தீர்த்துக்கட்டிவிடுமாறு தன் ஆளிடம் கட்டளையிடுகிறார் கந்தசாமி. மனம் கசிந்து நல்லாவிடம் உண்மைகளைச் சொல்லி தயவுசெய்து எங்காவது போய்விடு. முதலாளியிடம் நான் உன்னைக் கொன்னுட்டேன்னு சொல்லிக்கிறேன் என்று அவனைத் தப்பவிடுகிறான் வேலையாள். அவனுடைய மனமாற்றத்தை ரசித்தபடியே அங்கேயிருந்து கிளம்பிச் செல்கிறார் நல்லசிவம்.

மழையும் நாயும் இந்தப் படத்தின் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்கள். மனிதன் என்பவன், அவன் மனதுக்கு அடிமையாக மாறுகிறவன்தான் எவர் வாழ்விலும் தன் மனதுக்கு முன் மண்டியிடாத ஒரு துகள்கணமும் இல்லாமற்போவதில்லை என்பதை இப்படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் பறைசாற்றுகின்றன. சுனாமின்னா என்னான்னு தெரியுமா ஸார் என்று அன்பரசுவிடம் நல்லா கேட்கும்போது மாதவன் ஒரு குரலில் அலட்சியமாகத் தெரியும் ஸார் சுனாமின்னா பெரிய அலை என்பார். அடுத்த சில நிமிடங்கள் சுனாமி பற்றி இருவரும் பேசிக் கொள்வார்கள். நல்லசிவம் தன் அப்பாவை பெரிய அலை கொண்டுசென்றுவிட்டதாக சொல்வார்.

அப்போதைக்குத் தமிழகத்துக்கும் சுனாமி என்ற சொல்லுக்கும் அந்தச் சொல்லளவு மட்டும்தான் தொடர்பிருந்தது. அன்பேசிவம் வெளியானது 2003 ஜனவரி 15 ஆம்தேதி. தமிழகத்தை சுனாமி தாக்கியது அதற்கடுத்த வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி. கலை சீட்டெடுத்துத் தருகிற கிளிபோலத்தான் எல்லாவற்றையும் எங்காவது முன்னும் பின்னுமாய்ப் பேசிவிடுகிறது. அதன் மொழி புரிவதற்குத்தான் காலமும் மனிதர்களும் பெருவிலைத் தரவேண்டி இருக்கிறது.

ஆர்தர்.ஏ.வில்சனின் ஒளிப்பதிவு படத்தின் பெரும் ப்ளஸ் பாயிண்ட். முக்கியமாக புவனேஸ்வரிலிருந்து சென்னை வந்து சேரும் வரையிலான மழை தினங்கள் ஒரு காட்சியின் துளிக்கூட செயற்கையின் உறுத்தல் தோன்றிவிடாமல் படமாக்கியதெல்லாம் பெரிய விஷயம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை கதை, திரைக்கதை, இரண்டையும் சுமந்து படத்தை நிமிர்ந்து நிற்கச் செய்ததில் வசனத்திற்குப் பெரும் பங்கு இருப்பது தனித்துச் சொல்லப் பட வேண்டியதே. கமல்ஹாஸனின் கதை, திரைக்கதைக்கு வசனங்களை எழுதியவர் கார்டூனிஸ்ட் மதன்.

மாதவனுக்கும் கமலுக்குமான முரண், கமலுக்கும் கிரணுக்குமிடையிலான காதல், நாஸருக்கும் கமலுக்கும் இடையிலான முதல்பகுதி, வித்யாசம் நாசருக்கும் சந்தானபாரதிக்குமான தனித்த உறவாடல், இரண்டாம் பாதியில் மாதவனுக்கும் கமலுக்கும் இடையிலான புரிந்துணர்வு, அதன்பிறகு கடைசியில் நாஸரின் வீழ்ச்சியும் கமலுடன் அவர் செய்து கொள்ளக்கூடிய வணிக சமரசமும் என முழுப்படத்தையும் பல பாகங்களாக விதவிதமான தனித்த வசனங்களினூடாக பகுத்துக் காட்டியிருந்தது வசீகரம்.

சில பளிச் இடங்கள்

1 ஒரு விஷயம் சொல்லட்டுமா இந்த தீவிரவாதிங்கள்லாம் நீங்க நினைக்கிறமாதிரி என்ன மாதிரியெல்லாம் இருக்க மாட்டாங்க. ரொம்ப அழகா இருப்பாங்க உங்களைமாதிரி என்று கமல் சிரிக்கும் காட்சியில் மாதவனின் கண்களில் தெறிக்கும் நட்பற்ற தன்மை முன்னர்த் திரையறியாதது.

2 பக்கத்ல இருக்கறவன் புகையிலை போட்டுட்டு பீப்பி ஊதுரான் என்பதை கம்ப்ளெயிண்ட் ஆக சொல்லும் மாதவனிடம் “பொது இடத்துல ஜோதியோட கலந்துரணும் ரிமோட் கண்ட்ரோல்ல அட்ஜஸ்ட் பண்ணனும்கிறீங்க இது டீவீ இல்ல ஸார் உலகம்” என்பார் நல்லா.

3 பணம் குடுத்தாக்கூட வசதி கிடைக்காத ஒரு நாடு இது, தட்ஸ் இண்டியா ஃபார் யூ என்பார் அன்பரசு பணம் குடுத்தா எதுவேணா எப்பவேணா கிடைக்குனு நினைக்கிறவங்க இருக்கிறவரைக்கும் தட் வில் பீ இண்டியா ஃபர் யூ என்பார் நல்லசிவம்.

spacer.png
நாஸர் இந்தப் படத்தில் கந்தசாமி என்ற பணக்காரனாக தன் செல்வந்தம் தனக்குள் ஊறச்செய்திருக்கும் திமிரைத் தனக்கெதிரே தென்படுகிற யார் மீதும் படர்த்தியபடி தன் மனம்போன போக்கில் வாழ முற்படுகிற எதையும் விலைபேசுகிற எல்லாவற்றிலும் தன்னலம் மட்டுமே பேணுகிற நயவஞ்சக சுயநல மிருகமாகவே மிளிர்ந்தார். படம் முழுவதும் நாஸர் தோன்றுகிற காட்சிகள் எல்லாவற்றையும் அவரே உயிர்ப்பித்தும் இருளிலாழ்த்தியும் முழுமையான நடிகராக மின்னினார். ஆஸ்பத்திரியில் கோலம் அழிந்து சிதைந்து கட்டிலில் கிடத்தப்பட்டிருப்பார் நல்லா. அவரைப் பார்க்கத் தன் உதவியாளர் சகிதம் செல்வார் கந்தசாமி திறந்திருக்கும் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் கமலின் முகத்தில் அழுத்துவதைப் போல் தலையணையை எடுப்பார். உடனே கந்தசாமியை தொட்டு உசுப்பும் அவரது உதவியாளர் சந்தானபாரதி நான் அழுத்தட்டுமா என சைகையால் கேட்பார். உலகின் விசித்திரமான மிருகம் மனிதன்தான் என்பதை தெளிவாக விளக்கும் இந்தக் காட்சி. இதென்ன சினிமாக் கதைன்னு நினைச்சியா பணக்காரப் பொண்ணைக் கொண்டு போய்க் குடிசையில குடும்பம் நடத்த..? நெசம்” என்று உறுமும்போது ஆயிரமாயிரம் செல்வந்தர்களின் ஆணவமொத்தமாகவே நம் கண்முன் நின்றார் நாஸர். இது நாஸரின் படம் என்றால் தகும்

கமல்ஹாஸன் இந்தப் படத்தில் இரட்டை வேடங்கள் என்று சொல்லக்கூடிய அளவில் நல்லசிவத்தின் முன் காலத் தோற்றமாகவும் வீழ்த்தப்பட்ட பிறகு மாமனிதனாக வேறொரு பரிணாமம் தாங்கியும் வாழ்ந்து காட்டினார். தன் குரலாலும் சிரிப்பாலும் தோற்றத்தாலும் நடையாலும் என அவர் தன்னை வருத்திக்கொண்டு நல்லசிவம் அலையஸ் நல்லா எனும் புதிய மனிதனை, நம் எல்லோரும் அறிந்த வெகு காலம் பழகிய நண்பனாக ஒரு பின்பற்றத் தகுந்த கொள்கைவாதியின் சொற்களைப் பேசித் தந்தவனாக நம்மோடெல்லாம் வாழ்ந்து விலகிச் சென்றிருக்கக்கூடிய நல்லதொரு அறிஞனாக மனங்களின் அணுக்கத்தில் ஏற்படுத்தி வைக்கிற பிம்ப அடையாளமானது மிக வலிமையானது. அதே நேரம் போற்றுதலுக்குரிய ஒன்று. இத்தகைய கதாபாத்திரங்களைப் பொய் என்று தள்ளுவதைவிட நல்லா எனும் மனிதனை நிஜம் என்று ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. அதுதான் ரசிகமனோபாவத்தின் விழைதலாக நூறு ஆண்டுகளாக தனக்கு விருப்பமான நடிகன் ஏற்கிற பாத்திரங்களை நிசமென்று நம்பி வழிபட்டுத் திளைப்பதில் சுகம் கண்டிருக்கக்கூடிய பெருங்கூட்டம் ஒன்றின் முன்னே வழங்க வாய்க்கிற நியாயமான மாற்று மதிப்பீட்டுக்குரிய திருப்பமாகவும் அமையமுடியும். தற்செயல் என்பது எல்லாக் கதைகளையும் திருத்தக்கூடிய கதைமாற்றி என்பதற்கான எளிய அழகிய உதாரணம் அன்பே சிவம்.

வைரமுத்து, பிரளயன் இருவரின் பாடல்களுக்கும் இசை அமைத்தவர் வித்யாசாகர். இந்தப் படத்தின் தீம் ம்யூசிக் வித்யாசாகரின் மகா இசைத்திறனுக்கு நற்சான்று. யார் யார் சிவம் பாடல் கமல் தன் சொந்தக் குரலில் பாடிய பாடல்களிலேயே முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பற்றிவிடுகிற சாமர்த்தியம் கொண்ட பாடல். இந்தப் பாடலுக்குள் நுழைந்து உடனே வெளித்திரும்புதல் அனேகமாக சாத்தியமே இல்லை எனலாம் அந்தளவுக்கு குறிப்பிட்ட காலம் தன்னுள்ளேயே திரிந்தலைபவர்களாகத் தன்னைக் கேட்பவர்களை மாற்றிவிடுகிற வல்லமை இப்பாடலில் உறைந்தொலிக்கிறது.

கிரண், பசி சத்யா, சீமா, யூகிசேது, ஆர்.எஸ்.சிவாஜி, சந்தானபாரதி, பூ ராமு (இதில் தான் அறிமுகம்) , உமா ரியாஸ் கான், இளவரசு எனப் படமெங்கும் தோன்றும் நடிக முகங்கள் இயல்பின் வெளித்தாண்டாத ஆட்டமாடிகளாகவே உலாவருகின்றனர். ஒரு சிறிய காவல் நிலையக் காட்சியில் இளவரசு தன் உச்சபட்சத்தை ஸ்கோர் செய்வது அழகு. முதலில் நல்லாவை ஏளனமாகப் பார்ப்பவர் அவர் பெரிய பணக்காரர் கந்தசாமியின் மகளைக் காதலிக்கிறவர் எனத் தெரிந்ததும் அவரை அழைத்துச் சென்று லாக்கப்பின் உள்ளே நின்றவாறு வெகு நட்பாகப் பேசுகிற காட்சி எள்ளளவு என்றாலும் அதன் முக்கியத்துவக் கொள்ளளவு அதிகதிகம்.

கிரணுக்கு இந்தப் படத்தில் பின்னணி தந்தவர் பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம். இல்லாத புதிய குரலாகவே தொனித்தார் கிரண். கொஞ்சம் ஹெல்ப் பண்ணக் கூடாதா என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியாம எப்படி ஹெல்ப் பண்றது ஸாரி சொல்லப் போறேன் இந்தக் கடைசி வாக்கியத்தை உலகத்தில் அனுராதா ஸ்ரீராம் தவிர வேறாராலும் அப்படிச் சொல்லவேமுடியாது. நெடுங்காலம் மறவாத ஒரு கனவின் புதிர்ஞாபகம்போல் இல்லா நிஜமாக இருந்தது கிரணின் குரல்.

நல்ல causeக்கு தானே காசு வருது ஐ மீன் ஃபார் எ குட் காஸ் கலைஞன்தான் விலை போகக் கூடாது கலை விலை போகலாம்ல?

எளிய புத்திசாலித்தனமான வாழ்வின் விளிம்புகளுக்குள் இயங்கத் தலைப்பட்ட உரையாடல்களின் வழியாகவும் உணர்வுகளின் வழியாகவும் சமமாக நகர்ந்து சென்றது அன்பே சிவம் படம். அதுவரை சுந்தர்.சி இயக்கிய படங்களிலிருந்து முற்றிலுமாக விலகி ஒளிர்ந்த ஒரே படமாக இதனைச் சொல்லலாம். Either anbe sivam or any other movie எனும் அளவுக்கு வித்தியாசம் காட்டிய சுந்தர் படம் இதுதான்.

இந்தப் படத்தின் இன்னொரு ஆச்சரியம் உமா ரியாஸ் பல படங்களில் நடித்த நாடறிந்த குணச்சித்திர நடிகையான கமலா காமேஷின் மகள் உமாரியாஸ் இதில் மெஹ்ருன்னிஸா என்ற கதாபாத்திரத்தில் நாடகக் குழுவில் நல்லாவுடன் இடம்பெறுகிற சக தோழியாக நடித்தார். தன் மனதுக்குள்ளேயே நல்லாவை காதலித்து உருகிக் கொண்டிருக்கும் பெண்ணாக ஒரு கட்டத்தில் வெடித்து உணர்ச்சிக் குவியலாகத் தன் அன்பத்தனையையும் நல்லா முன் பலகாலம் ஒன்றிரண்டாய் சேகரம் செய்த மட்பாண்ட உண்டியலை உடைத்து உள்ளிருக்கும் நாணயங்களைச் சிதறடிப்பதுபோலக் குமுறுவார். ஐ லைக் யூ என்று சொல்ல முற்படும் நல்லாவிடம் இந்தா பார்… லவ் யூ வேற லைக் யூ வேற என்று கடிவாளம் போடும் இடத்தில் கமல் என்கிற நூறு நூறு படங்கள் நடித்த பெரிய கலைஞனையே வந்து பார் என்று சொடுக்கிட்டுக் கடந்திருப்பார். ஒரே ஒரு படமென்றாலும் உமா ரியாஸ் வாழ்வில் அன்பே சிவம் ஒரு தலைவாயில். இது உமா ரியாஸின் படம்.

மாதவன் கமல்ஹாஸன் எனும் பெரும் பிம்பத்தின் முன் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை ஆனமட்டிலும் மிளிர்ந்தார். அவரது வேடத்தில் இன்னொரு சமகால முகத்தை கற்பனை செய்துபார்க்க இயலாத புள்ளியில் நிதர்சனமாகிறது அவரது வெற்றிகரம். இச்சாபுரம் ரயில் நிலையத்தில் ரயிலைப் பற்றவேண்டிய நேரம் அவருக்கும் நல்லாவுக்கும் இடையில் நிகழுகிற வாக்குவாதமும் அதில் மாதவனின் நடிப்பும் மிக முக்கியமான ரசவாதம்.”உங்களுக்கு பாருங்க உலகம் முழுக்க ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க என்னாலதான் யார நம்பறதுன்னே தெரியலை” என்று உருக்கமான குரலில் தன்னிடம் எதுவுமே பிழையில்லை என்றாற்போல் மாதவன் சொல்வதெல்லாம் அமேஸிங். ரத்தம் தர மறுப்பதும் பிறகு ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ரத்தம் தருவதும் வழியில் அந்த சிறுவன் இறந்துபோவதைப் பார்த்து அழுது தீர்ப்பதுமாக மாதவனின் மகா உன்னத நடிப்பு மின்னுகிறது.

யூகி சேது அடுத்த ஆச்சர்யம். உத்தமன் என்ற பேரோடு அறிமுகமாகி சிலமணி நேரங்களிலேயே தேடப்படும் உத்தமத்தின் தற்போதைய நிலைமையை எடுத்துரைக்கும் வினோதத் திருட கதாபாத்திரம். உன்னிப்பாகக் கவனித்தால் பிடிபட்ட பிற்பாடு யூகிசேதுவின் நடிப்பில் முன்காலத்திய ஆச்சரிய நடிகர் ஒருவரின் நடிப்பு நினைவிலாடும். யூகி சேதுவைத் தவிர அந்த நடிகரது நடிப்பை அத்தனை கச்சிதமாக வேறாராலும் மீமுயல்வு செய்து பார்க்கக்கூட முடியாது என்பதுதான் நிசம். அந்த நடிகர் ஜேபி சந்திரபாபு. கீழே கிடக்கும் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு தன்னிடம் அதுகாறும் பேசியவனது முகத்தை உற்றுப் பார்க்கும் காட்சியில் அள்ளிக் கொண்டு செல்வார் யூகிக்க முடியாத சேது.

காலங்கடந்தும் கைதட்டல்கள் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அன்பே சிவம் மகத்தான படம்
 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-100-அன்ப/

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.