Jump to content

தந்தையர் தினப்பகிர்வுகள்


Recommended Posts

என் அப்பா ஒரு நேர்மையான...அரசுப் பேருந்து ஓட்டுநர். அவருடைய அந்தக் காலத்து டைரிகளைப் புரட்டினால் மனிதர் அவர் ஓட்டிச் சென்ற வண்டி பற்றியும் கூடவந்த நடத்துனர் பற்றியும் மட்டுமே எழுதி இருப்பார். அல்லது பெரும்பாலான தினங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்.

 அழகான குண்டு கையெழுத்தில் 'இன்று டிஎன் 9867 வண்டியை ராம்நாடு டெப்போவில் எடுத்து  குற்றாலம் ஹால்ட் அடித்தேன். நடந்துனராக‌ தம்பி முருகேசன் உடன் வந்தார்'... பெயர்களும் ஊர்களும் வண்டி நம்பர்களும் மாறி இருக்குமே தவிர இவ்வளவேதான் அந்த நாட்குறிப்புகளின் சாராம்சம். அப்பாவுக்கு மோட்டாரைத் தவிர வேறு எதுவும் தெரியாது. குடும்பமே உட்கார்ந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்போம். அவருக்கு கிரிக்கெட் புரியாவிட்டாலும் எங்களுக்கு இணையாக உட்கார்ந்து பார்ப்பார். தரையில் ஒன் பிட்ச் ஆன பந்தை ஃபீல்டர் பிடித்து விட்டாலே, 'அதான் கேட்ச் பிடிச்சுட்டான்ல அவுட்டே கொடுக்கல?' என அப்பாவியாய் கேட்பார். 'அடி தூக்கி அடி' என்றெல்லாம் கோஷம் போடுவார். ஆனால் கடைசியில், 'இந்தியா எத்தனை பாயிண்டு!' எனக் கேட்டு எங்களைக் கடுப்பேற்றிவிட்டு தூங்கிப்போவார். 

தூக்க விஷயத்தில் கொடுத்து வைத்த ஜீவன். வெறும் தரையில் கையை மடக்கி தலைக்கு வைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் தூங்க ஆரம்பித்து விடுவார். ஃபேன் காத்து ஏசி காத்து உணராத சரீரம். வியர்வை வடிந்த உடலோடு சன்னமான குறட்டையோடு நித்திரை ஆவது நித்தமும் வாடிக்கை. ஆனால் அதிகாலை 3 மணியோ 4 மணியோ அலாரம் வைக்காமலே டான் என எழுந்து டூட்டிக்கு கிளம்பி விடுவார்.

 தொலைதூரப் பேருந்துகளை ஓட்டுவதே அவர் பெருவிருப்பம். ராமேஸ்வரம் டூ குற்றாலம், ராமேஸ்வரம் டூ குமுளி, ராமேஸ்வரம் டூ கம்பம், ராமேஸ்வரம் டூ சென்னை போன்றவைதான் அதிகம் அவர் ஓட்டியது. பாம்பன் ரோடு பாலம் திறக்கப்பட்டபோது ராஜீவ் காந்தி சென்ற ஜீப்புக்கு முன் அரசு பஸ் சென்றதை யாரேனும் அன்றைய தூர்தர்ஷனில் அப்போது பார்த்திருக்கக்கூடும். வலியச் சென்று அந்த முதல் 'பாம்பன் பால' பஸ் வாய்ப்பைப் பெற்று தைரியமாக ஓட்டிச் சென்ற பெருமை என் அப்பாவுக்கு உண்டு.  

அதேபோல அப்போதெல்லாம்  ராமநாதபுரம் டூ சென்னை பஸ்ஸை ரெண்டு ஓட்டுநர்கள் ஓட்டிச் சென்ற காலம். முதல்முறையாக‌ ஒரேஒரு டிரைவரை வைத்து பரிசோதித்துப் பார்க்கலாமே என மருதுபாண்டியர் போக்குவரத்துக்கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி முடிவெடுத்தபோது அப்பா முன்வந்து தூங்காமல் ஓட்டிச் சென்றார். அதன்பிறகு இப்போதுவரை ஒரே டிரைவர்தான் தெக்கத்திப்பக்கமிருந்து ஓட்டி வந்து திரும்பச் செல்கிறார்கள். இதை மட்டுமே நூற்றி சொச்சம் தடவை புதிதாக சொல்வதைப்போல என்னிடம் சொல்லியிருக்கிறார். நம்புங்கள் நான் ஒருமுறையும் அலுத்துக் கொண்டதில்லை.  

எல்லா இரவுகளும் ஒரே மாதிரி விடியாது இல்லையா? பல நாட்கள் 'டூட்டி' முடிந்தும் வீட்டுக்கு அப்பா வராமல் போனதுண்டு. செல்போன் இந்தியாவுக்குள் நுழையாத காலகட்டம் அது. அம்மா என்னைத்தான் எம்.பி.டிசி பணிமனைக்கு அனுப்பி வைப்பாள். அங்கிருப்பவர்களிடம் ப‌தட்டத்தோடு 'அப்பா இன்னும் வீட்டுக்கு வரலை சார்' என்று நிற்பேன். கண்ணீர் உருண்டு விழ எத்தனிக்கும். 
"விஷயமே தெரியாதா? அப்பா போன வண்டி ஆக்சிடெண்ட்டு தம்பி. அழுவாதே. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகலை. லாரிக்காரன் ராங்கா சைடு வாங்கி ஏறி இருக்கான். சின்னதா அடி. இப்போ தூத்துக்குடில இருக்கார். இன்னிக்கு சாயங்காலம் வந்துடுவார்!" என்பார்கள்.

 இதுபோல 'மலைப்பாதையில் உருண்டுருச்சு', 'பிரேக் ஃபெயிலியராகி புளியமரத்தில் மோதிடுச்சு', லிவர் கட் ஆகி வயலுக்குள்ள பாய்ஞ்சிடுச்சு' என திகில் லிஸ்ட் நிறைய உண்டு. தலையிலும் கையிலும் கட்டுப்போட்டு வீட்டுக்கு சிரித்தபடி வருவார். தான் சமயோசிதமாக ஸ்டியரிங்கை...க்ளட்ச்சை...பிரேக்கை லாவகமாக கையாண்டு பெரும் விபத்தைத் தவிர்த்த விதத்தை சொல்லிக் காட்டுவார். அந்த லாவகத்துக்காகவே அவர் ஓட்டும் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் ஆவல் பிறக்கும். ஆனாலும் இதுவரை அவர் ஓட்டிய பஸ்ஸில் நான் பயணித்ததில்லை. நம்புங்கள் கடைசிவரை அந்த பிராப்தம் எனக்கு கிடைக்கவில்லை. என் நண்பர்களும், 'உன் அப்பா செமையா உருட்டிட்டாரு...' 'செம வேகமா ஓட்டுனாருடா!' என கலவையாக தங்கள் பயண அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார்கள். 

இப்போதும் அப்பாவுக்கு ஒரு ஜோடி காது கிடைத்தால்போதும். பி.ஆர்.சியில் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் ஆரம்பித்து  எம்.பி.டி.சி உருவான வரலாற்றைத் தொட்டு மோட்டார் வாகனச் சட்டம், போக்குவரத்து சாலை விதிமுறைகள், தான் சந்தித்த விபத்துகள், நெகிழ்ச்சியான தருணங்கள் என மடைதிறந்த வெள்ளமாய் கொட்டித் தீர்த்து விடுவார். ரிட்டையர்டு ஆன பிறகு குளத்தாங்கரை வேப்பமரத்தடி என எங்காவது நான்கைந்து பெருசுகளிடம் உட்கார்ந்து தன் சாகச அனுபவங்களைப் பந்தி வைக்க ஆரம்பித்து விடுவார். காலையில் 8 மணிக்கு ஆரம்பித்தால் சோறுதண்ணி மறந்து சாயங்காலம் 3 மணி வரையிலும்கூட நீளும். 'இப்படி வெட்டிக்கதை பேசிக்கிட்டுத் திரியிறாரே இந்த மனுஷன்!' என அம்மாவின் கரிச்சுக் கொட்டல்களுக்கும் மசியாதவர் திடீரென ஒருநாள் மீண்டும் வண்டி ஓட்ட ஆரம்பித்து விட்டார்.  எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறாரே என வருத்தம் எனக்கு. இம்முறை கீழக்கரை முகமது சதக் இன்ஜினீயரிங் காலேஜ் பஸ் ஓட்டுநர். 'இந்த வயசான காலத்துல ஏன் வேண்டாத வேலை?' எனக் கேட்டால், சிரித்தபடி இப்படி சொல்வார்...
 
"சும்மா வீட்லயே இருக்குறது ஒருமாதிரி இருக்குப்பா. வண்டி ஓட்டுறதுல பொழுது நல்லாப் போகுது. குடும்பத்துக்கு வருமானமும் கிடைக்குது. மோட்டாரும் அப்படியே என் கைக்குள்ள இருக்குப்பா!" 

- அவர் உயிரோடு இருக்கும்போது எழுதிய பதிவு இது. அவரிடம் நான் வெட்கம் காரணமாக வாசித்துக்காட்டியதில்லை. அம்மா இந்த ஸ்டேட்டஸை வாசித்துக்காட்டியபோது மில்லி மீட்டர் அளவுக்கு புன்னகை பூத்தாராம். அவர் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டுவிழ எத்தனித்ததாம்.

*இந்தப்புகைப்படம்  யதேச்சையாக என் மொபைலில் எடுத்தது. தூரமாக சைக்கிளை மிதித்துச் செல்லும் அவரைத்தான் நான் எடுத்தேன். அதுவே அவரை நான் எடுத்த கடைசிப் படமாக ஆனது. இதோ இந்த வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் எங்கோ எங்களைவிட்டு பறந்து சென்றுவிட்டார். 

அப்பாவை மகன் நேசிக்க ஆரம்பிக்கும் தினங்களில் அவனின் அப்பா இந்த உலகில் இருப்பதில்லை.

மிஸ் யூ அப்பா! ❤️

சரண் ராம்

 

இளங்கோவன் முத்தையா

முழுக்கவும் சங்க இலக்கிய புத்தகங்கள். என்னுடைய அப்பா 1967 லிலிருந்து 2016 வரை சேர்த்து வைத்தவை. அவரது மறைவுக்குப் பிறகே அவற்றையெல்லாம் பிரித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. துறை வாரியாகப் பிரித்து, அழகாக அடுக்கி வைத்திருந்தார். நானும் தமிழ் மொழி மேல் பற்று கொண்டவன்தான் என்றாலும், கட்டுரைகளும், நாவல்களுமே என் தேர்வு.

அத்தனையையும் பிரித்துப் படிக்க வேண்டும், எல்லாவற்றையும் நானே வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைதான். ஆனாலும் அந்தப் பொக்கிஷங்கள் நாய் உருட்டும் தேங்காயாக மாறிவிடக் கூடாது என்கிற பயமும் இருந்தது.

பிஜியை வீட்டுக்கு அழைத்திருந்தேன். இரண்டு மூன்று புத்தகங்களைப் பார்த்தவர் மேற்கொண்டு எதையும் பார்க்கவில்லை. ஒரு வேளை, "இவை எனக்குத் தேவைப்படாது" என்று சொல்லப் போகிறாரோ என்று நினைத்து, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"பிரிக்கவே வேண்டாம், மொத்தமாக நானே எடுத்துக் கொள்கிறேன், அவ்வளவும், இப்போது தேடினாலும் கிடைக்காத புத்தகங்கள், அதிலும் 'கழக வெளியீடுகள்' எங்கும் கிடைப்பதில்லை" என்றார். மீண்டும் ஒரு முறை அவரது சகோதரருடன் காரில் வந்து, அனைத்துப் புத்தகங்களையும் அள்ளி, அணைத்து எடுத்துச் சென்றிருக்கிறார். வழக்கறிஞர் சுதாகரன் இந்திரன் அவருக்குத் தேவையான சில புத்தகங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

"உங்க அப்பாவை நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன்" என்று சொன்னார் பிஜி. ஒருவர் வைத்திருக்கும் புத்தகங்கள் அவரது குணங்களைச் சொல்லிவிடும்தானே..? எங்கள் அப்பாவோடு, இது குறித்தெல்லாம் நாங்கள் உரையாடத் தவறிய கணங்களை அவர் நினைவுபடுத்திச் சென்றுவிட்டார் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இரண்டு பெரிய ட்ரெங்குப் பெட்டிகள் இப்போது எங்கள் அப்பாவின் நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு காலியாக இருக்கின்றன.

உரிய பொருள், தகுதி உடையவரிடம் சேர்க்கப்பட்டுவிட்டது என்கிற நிம்மதியிலும், ஒரு வகையில் எங்கள் அப்பா சேர்த்து வைத்த அறிவுச்சுடர் பிஜியின் அலமாரிகளிலிருந்து, அவர் வழியே இனி ஒளிவீசும் என்கிற நம்பிக்கையிலும் நான் அமைதியடைகிறேன்.

நன்றி பிஜி.

எந்தையும் நானும்!

பாரதி மணி

 
என் சிறுபருவத்தில் என் தந்தை எப்போதுமே எனக்கு ஒரு ஹீரோவாக இருந்ததில்லை. செக்கச்செவேலென்ற அவர் மார்பில் இரண்டு பெரிய பவழம் போல இரண்டு மச்சங்களுண்டு. என் பிஞ்சுவிரல்களுக்கு அடங்காத அவரது பெரிய ஆள்காட்டி விரலைப்பிடித்துக்கொண்டு நடந்து சென்றது நினைவிருக்கிறது. நான் பிறந்து இருவருடங்களுக்கெல்லாம் இரண்டாம் உலகப்போர் மூண்டது. தினமும் மாலையில் என்னை அழைத்துக்கொண்டு தம்பானூரில் ரேடியோக்கடை வைத்திருந்த நண்பரைப்பார்க்கப் போவார். சர்ச்சில், அட்லி, ஸ்டாலின், ரூஸ்வெல்ட், ஹிட்லர் போன்ற வார்த்தைகள் அடிபடும். அன்றைய போர்நிகழ்ச்சிகள் அலசப்படும். அப்போது தான் புதிதாக ரேஷன் வினியோகமுறை அமுல்படுத்தப்பட்டது.

அப்பாவுக்கு நாடகத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்ததால், டிகேஎஸ் சகோதரர்கள், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை, ஸ்த்ரீபார்ட் எஃப்.ஜி. நடேசய்யர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்கள் திருவனந்தபுரம் வந்தால் அவரை அவசியம் சந்திப்பார்கள். மதுரகவி பாஸ்கரதாஸ் நாட்குறிப்பு புத்தகத்தில் “இன்று திருவனந்தபுரம் போயிருந்தேன். செந்திட்டை மணி அய்யர் வீட்டில் மதியசாப்பாடும் நிறைய பேச்சும்” என்று படித்தது ஞாபகம் வருகிறது. அவர் ஒரு சினிமாப்பைத்தியம்! அவரோடு சேர்ந்து நானும் எட்டுமுறை “சிவகவி” பார்த்திருக்கிறேன்!

ஜாதி மத வித்யாசங்களின்றி எங்களை வளர்த்தார். கிருஷ்ணன் பிறந்தநாளுக்கும், ஏசு பிறந்தநாளுக்கும், நபிநாயகம் பிறந்தநாளுக்கும் வீட்டில் பாயசம் உண்டு. மாலைவேளைகளில் வீட்டில் ஜமா சேர்ந்திருக்கும் பெருவிளை மூத்தபிள்ளை, தாணுலிங்க நாடார், பரமசிவம் ஆசாரி,  ஐசக் ஆரோன் இவர்களோடு புதிதாகச்சேர்ந்த இடலாக்குடி சாயிபு “எம்மோவ்! சாயிபு வந்திருக்கேன். ஒரு லோட்டா காபி கூட அனுப்புங்க!” என்று உரக்கச்சொல்லும் அன்னியோன்யம் இருந்தது. இடலாக்குடி ஈத் பண்டிகையின்போது அப்பாவுக்கும் எனக்கும் பரிவட்டம் கட்டி வரவேற்று, தனியாக அப்பாவிடம் “அய்யிரே போயிராதெயும். உமக்கும் பையனுக்கும் தனியா சமையல் இருக்கு! எங்ககூடத்தான் இன்னிக்கு சாப்பாடு!” என்று சொல்லும் உரிமையும் இருந்தது!.......அதையெல்லாம் எப்போது…..எங்கே தொலைத்தோம்?

எனக்கொரு மனக்குறை! அப்பாவை கட்டாயமாக தில்லிக்கு அழைத்துப்போகவில்லை. கூப்பிடும்போதெல்லாம் “வரேண்டா!.....இப்பொ என்ன அவசரம்?” என்று சொல்லியே தட்டிக்கழித்துவிட்டார். ஊருக்கு வந்திருக்கும்போது, சலவைக்குப்போட்ட என் பேண்ட் பாக்கெட்டில் சிகரெட்டுப்பாக்கெட்டும் தீப்பெட்டியும் இருந்ததை பெரிசுபடுத்தாமல் அடுத்தநாள் காலை அம்மாவுக்குத்தெரியாமல் என்னிடம் கொடுத்துவிட்டு, “இதெல்லாம் வேண்டாண்டா!.....ஒடம்புக்கு நல்லதில்லே!.... உனக்குத்தெரியாதா?” என்பதோடு நிறுத்திக்கொண்டவர். கல்யாணவீடுகளில் கூட வெற்றிலைபாக்கு போடாதவருக்கு வந்தது பொல்லாத கான்ஸர். 1968-ல் டாக்டர்கள் கைவிட்டபின் நானும் ஒருமாதம் கூட இருந்து தினமும் குளுப்பாட்டி அவருக்கு வேண்டியதைச்செய்தது மனதுக்குத்திருப்தி. கடைசி மூன்றுநாள் கங்காஜலம் மட்டுமே அருந்தினார். கடைசிமுறையாக குடித்துவிட்டு என் மார்பில் சாய்ந்தார். அவருக்கு கொள்ளி போடும் பாக்கியம் இரண்டாவது மகனான எனக்குத்தான் கிட்டியது. என் அண்ணன் இன்றும் சொல்லிக்காட்டுவான்! 

ஆனால் அவர் கற்றுத்தந்தது எனக்கு வாழ்க்கையில் பல அவமானங்களைத் தடுத்திருக்கிறது.

1.  காலையில் Self Respect என்ற பொக்கிஷ அட்டையை உன் ஜேபியில் வைத்துச்சென்றால் இரவு திரும்பும்போதும் அது கொஞ்சம் கூட கசங்காமல் அப்படியே இருக்கிறதா என்பது மிக முக்கியம். அதற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும்.
2. எங்கே போனாலும் (நீ எத்தனை தான் காசும் புகழும் சேர்த்திருந்தாலும்) முதல்வரிசையில் உட்காராதே. அது ஆபத்து. உன்னைவிட முக்கியமானவர்கள் வந்தால் “ஸார், மினிஷ்டர் வரார். நீங்க கொஞ்சம் பின்னுக்கு….” என்ற வார்த்தைகளை நீ கேட்கவே கூடாது! “அய்யா! கொஞ்சம் முன்னுக்கு வாங்க!” என்பது சந்தோஷத்தைத்தரும்!
3. எல்லா விஷயங்களுக்குமே நாணயம் மாதிரி இருபக்கங்களுண்டு. தன் தரப்பு தான் சரி என்று வாதிப்பது அபத்தம். மற்றவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கலாம். அதனால் அவசர முடிவு ஆபத்தைத்தரும்.
இப்படி எத்தனையோ சொல்லலாம்.

சரி!.....என் அப்பா என்னை அடித்திருக்கிறாரா?........அடித்திருக்கலாம்….. ஆனால் நினைவிலில்லை. அம்மா அடித்த வடுக்கள் இன்னமுமுண்டு!

சில விஷயங்களில் என் தந்தை மிகவும் கண்டிப்பானவர். திருவனந்தபுரத்தில் அரண்மனை உத்தியோகம் என்பதால், பலரும் ‘என் தோட்டத்தில் காய்த்தது‘ என்று எதையாவது கொண்டுவருவார்கள். மாம்பழக்காலங்களில், இரு கூடைகள்  நிறைய வைக்கோல் சுற்றிய ‘வெள்ளாயணி’  மாம்பழம், பெரிய ‘வரிக்கன் சக்கை‘ [பலாப்பழம்] யோடு யாராவது வந்தால், மரியாதைக்காக ஒரு மாம்பழத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர்களை திட்டி திருப்பியனுப்பிவிடுவார். அப்போது ஒன்றும் பேசாத அம்மா, அடுத்தநாள் தெருவில் வரும் மாம்பழக்காரனிடம் அதே வெள்ளாயணி மாம்பழம் வாங்கும் போது, ‘ஏம்மா, அப்பா ஏன் நேத்திக்கு அதை திருப்பியனுப்பினார்? என்று கேட்டால், ‘அவர்கிட்டயே போய்க் கேளு’ என்று மட்டும் சொல்வாள். 
என் பள்ளிநாட்களில் நான் ஒரு முழு பென்சிலை உபயோகித்தது SSLC-க்குப் போனபிறகுதான் என்று சொன்னால் இந்தத்தலைமுறைக்கு நம்புவது கடினமாகத்தானிருக்கும். அப்பாவின் பூட்டாத அலமாரியில் ஒரு டஜன் ‘பெருமாள் செட்டி‘ பென்சில் இருக்கும். எல்லாமே பாதியாகத் துண்டிக்கப்பட்ட  24 அரைப்பென்சில்களாக வைத்திருப்பார். ஒரு பாதியை எடுத்து அடிப்பகுதியில் சிறிது காகிதம் சுற்றி, பழைய மைப்பேனாவின் கழுத்துப் பகுதியில்     பொருத்தித்தான் எழுதவேண்டும். அது தீர்ந்து புதுப்பென்சில் கேட்டால், பழைய ‘எலிப் புழுக்கை‘ பென்சிலை கவனமாக கையில் வாங்கி,  ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு, ‘இன்னும் ஒருவாரம்  ஓட்டலாம். அடுத்த வாரம்  புதிசு தரேன்‘  என்று சொல்லுவார்! புதிசு என்ன புதிசு? அதே ‘அரைப்புதிசு’ தான்! இப்போது அது கஞ்சத்தனமல்ல, சிக்கனம் என்பது புரிகிறது! (இதே சிக்கனத்தை நான் கடைப்பிடிக்கும்போது, என் குழந்தைகளிடம் கஞ்சன் என்று பெயர் வாங்கியிருக்கிறேன்!) 

அதேபோல பள்ளிக்கூட விடுமுறைக்கு முன்னால் என்வகுப்பு மாணவர்களுடன் ஆசிரியர்கள் உட்கார்ந்திருக்கும் குரூப் போட்டோ என்வீட்டில் இருக்காது. ஏனென்றால் அதற்கு இரண்டரை ரூபாய் கொடுக்க வேண்டும்.  ‘அதெல்லாம் எதுக்குடா? எல்லா குழந்தைகளும் அழகாத்தான் இருக்கு.  அந்த போட்டோவிலே  நீ எங்கே   நிக்கறேன்னு நீ வந்து காட்டினாத் தான் தெரியும்!‘ என்று சொல்லிவிட்டு போய் விடுவார்! 
SLB பள்ளியில் SSLC முடித்தபோது, அந்த குரூப் போட்டோவுக்காக நாள் முழுவதும் அழுது, அம்மாவின் strong recommendation பேரில்,  ‘சரி சரி! அலமாரிலேருந்து எடுத்துக்கொ’ என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். அப்பாவின் சம்மதம் பெற்று பூட்டாத அலமாரியைத்திறந்து சில்லறைப் பையிலிருந்து  இரண்டரை ரூபாய் எடுத்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது. அப்போதும் ‘அய்யனார்‘ கடலைமிட்டாய்க்காக இன்னும் நாலணா கூடுதலாக எடுக்கத் தோன்றவில்லை. என் தந்தைக்கு பொய்யும் திருட்டும் அறவே ஆகாது! நானும் இன்றுவரை என் வீட்டு அலமாரிகளைப் பூட்டியதில்லை. இதுவரை திருட்டுக் கொடுத்ததும் இல்லை! நான் SSLC பாஸான பிறகு தான், மணிமேடைக்கடையில் எட்டரை ரூபாய்க்கு மோட்டார் டயர் அடி [sole] போட்ட முதல் செருப்பை வாங்கிக் கொடுத்தார். ‘இது லேசிலே தேயாது‘ என்ற அறிவுரையுடன்!)

மாம்பழக்காலங்களில், நாகர்கோவில் கடைகளில் மாம்பழம் வாங்குவதில்லை. தோட்டத்தில் விளையும் மாம்பழம் வைக்கோல் சுற்றி ஒருமூலையில் பழுத்துக்கொண்டிருக்கும்.  அப்பா இருபது மாம்பழங்களை நன்றாக கழுவித்துடைத்து ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்துக்கொண்டு உட்காருவார்...... அவரைச்சுற்றி நாங்களும். மடியிலிருந்து அவர் மனைவியைவிட அதிகமாக நேசித்த அவரது  Pen Knife பேனாக்கத்தியை எடுத்து விரித்து முதலில் காம்புப்பக்கத்தை சீவுவார். (இன்றைய தலைமுறைக்கு தெரியாத பேனாக்கத்திக்கு ஏன் இந்த பெயர் வந்தது? Fountain Pens காலத்துக்கு முந்தியிருந்த Squills இறகுப்பேனாவை கூர் செய்வதற்கு இந்தக்கத்தி பயன்பட்டது) பிறகு மாம்பழத்தின் மேல் ஒரே சீராக மேலிருந்து கீழ் சுற்றிச்சுற்றி அவரது கத்தி வழுக்கிக்கொண்டே போகும். கத்தி விடுபடும்போது அவர் கையில் மஞ்சள் நிறத்தில் அம்மணமான மாம்பழமும் கீழே குடை ஸ்ப்ரிங் மாதிரி நாங்கள் கையில் தூக்கித்தூக்கி விளையாடும் தோலும் விழும். மாம்பழத்தை உடனே நறுக்கமாட்டார். இருபது மாம்பழங்களுக்கும் ஒரே மாதிரி துச்சாதனன் பாணியில் வஸ்த்ராபகரணம் செய்வார். மாம்பழங்களும் ‘ஹே....க்ருஷ்ணா!’ என்று அலறாது. அவனும் வரமாட்டான்! அப்பாவின் பேனாக்கத்திக்கு பயந்தோ என்னவோ! அவரது பேனாக்கத்தி  கடையில் வாங்கியது அல்ல...ஸ்பெஷலாக சொல்லிச்செய்தது. வெற்றிலைபாக்கு போடும் நண்பர்கள் பச்சைப்பாக்கு சீவ கேட்டாலும் கொடுக்கமாட்டார்.  அவர் அடிக்கடி சொல்வது:: “Like wife, pen and knife are not to be shared! துண்டாக நறுக்கிமுடிந்ததும் கொட்டையெல்லாம் எங்களுக்கு. கதுப்புக்களை வெட்டி, ஒவ்வொரு கிண்ணமாக ‘இது பாட்டிக்கு, இது மாமாவுக்கு, இது அடுத்தாத்து அத்தைப்பாட்டிக்கு” என்று போகும். தாம்பாளத்தில் மீதமிருக்கும் துண்டுகளும் கொட்டைகளும் எங்களுக்கு சரிவிகிதத்தில் பிரிக்கப்பட்டாலும் ‘அவனுக்கு நெறய குடுத்தே!’ பராதியை தவிர்க்கமுடியாது!

பலருக்கும் இருக்கும் குறை எனக்குமுண்டு!.....தில்லியில் எனக்கென்று ஒரு விலாசம்.   கிடைத்தபோது அவர் பார்க்கவில்லை. நாலு வீடு, காரோடு நான் இருந்ததைப்பார்க்க அவரில்லை! அவரைப்பற்றி நினைக்க நினைக்க மனது பெருமிதம் கொள்கிறது. அவர் என்னை மேலேயிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறாரென்ற நம்பிக்கையுண்டு!

Link to comment
Share on other sites

அப்பாவின் கைபிடித்தல் அழகு ❤️

எங்க அப்பா லாரி டிரைவர். உங்க அப்பா என்ன வேலை பார்க்கிறார்னு யாராவது கேட்டா, டிரைவர்னு சொல்லும்போது நிறைய பேர் ஏளனமா பார்த்திருக்காங்க. நான் பிறந்தப்ப அப்பா லாரி க்ளீனரா இருந்தார். வெறும் 70 ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தை கரை சேர்க்கும் பொறுப்பு அவருக்கு. லாரியில் லோடு ஏத்திக்கிட்டு வேலைக்குப் போனார்னா அப்பா வீட்டுக்குத் திரும்ப குறைஞ்சது 6 நாளாகும். நாக்பூர் போயிட்டா அதிகபட்சம் லோடு கிடைக்கிறதப் பொறுத்து 15 நாள் கூட ஆகலாம்.வேலைக்குப் போனது போக அப்பாவை மாதத்தில் 2 அல்லது 3 முறை பார்த்தாலே அபூர்வம் தான்.

ஒவ்வொரு முறையும் அப்பா வீட்டுக்கு வரும் நாள்தான் எனக்கு திருநாளாக இருக்கும். 'அப்ப்ப்ப்ப்பா'னு ஓடி வந்து நான் கட்டிக்கொள்ளும்போது அவர் சட்டையில் ஒட்டியிருக்கும் க்ரீஸ் வாசனைதான் எனக்கு தெய்வீக நறுமணம். அப்பாவின் சட்டை வாசனையைப்  பத்திரப்படுத்த என்னைத் தவிர வேறு யாராலும் முடியாதுதான்.  உழைப்பின் வாசனையும் பாசமும் கலக்கும்போது டிரைவரின் காக்கிச்சட்டையாக இருந்தாலும் அது எனக்கு விரைப்போடே தெரிந்தது.

லாரி தொழிலில் அப்பா அனுபவித்த சிரமங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. எத்தனையோ விபத்துகள். எத்தனையோ காயங்கள். சம்பந்தமே இல்லாமல் வழிப்பறி கொள்ளையர்களிடமெல்லாம் சிக்கி எங்களுக்காக அவ்வளவு அடிவாங்கி இருக்கிறார். காடு மலை கரடுமுரடான குறுகிய சாலை என இரவு பகல் பாராதது அவர் உழைப்பு.

'அப்பா ஸ்கூல் பீஸ் 840 ரூபாயும் புக் பீஸ் 320 ரூபாயும் கட்டணும்னு' நான் சொன்னப்ப ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்தப் பணத்தை மொத்தமா எண்ணி என் கையில் கொடுத்துட்டு, ' வேற எதுனா வேணுமா விமல்'னு அவர் கேட்டப்ப காயம் பட்டு வீங்கிப்போயிருந்த அவர் பாதங்கள் தான் என் வாழ்வின் மறக்க முடியாத தடம். 
 
ஏன்பா காலெல்லாம் வீங்கியிருக்குனு கேட்டப்ப, ' வாட்ச்சை கழட்டு, படி துட்டு எடுனு திருடனுங்க வழி மறிச்சு கல்லைத் தூக்கிப் போட்டுட்டாங்க... நீ நல்லா படி'னு சொன்ன அந்த நாளில் இருந்துதான் அப்பாவிடம் பணம் வாங்காமல் பார்ட் டைம் வேலைகள் மூலம் என் கல்வித் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்தேன்.
அப்பாவுக்கென்று தனியான ஆசைகள் எதுவும் இல்லை. நானும் எனக்கடுத்த மூன்று பிள்ளைகளையும் கரை சேர்ப்பதொன்றே அவர் கனவாகிப் போயிருந்தது. என் இளமைக் காலங்கள் வீட்டில் கேப்பைக் கஞ்சியும் பள்ளியில் சத்துணவுமாக கழிந்திருந்தாலும் நான் அப்பாவோடு வாழ்ந்த வாழ்க்கையையே மகாராணி வாழ்க்கையென்று அடித்துச் சொல்வேன். என் உலகை லாரியில் சுற்றிவந்து வழியமைத்துக் கொடுத்த அப்பாவுக்கு, மெட்ரோவையும், விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் சுற்றிக்காட்ட ஆசை எனக்கு.
என் உலகம் எங்கே சுழன்று கொண்டிருந்தாலும் அப்பாவின் கைகள் பிடித்துக் கொண்டு நடக்கும்போது தான் நானும் அழகாகிறேன். 

போவ்... நீ எங்க இருந்தாலும் சரி... நான் எங்க இருந்தாலும் சரி... எல்லா நேரமும் உன் நெனப்புதான்பா எப்பவும்!
❤️❤️❤️
# சென்ற வருடம் 31 ஆயிரம் லைக்குகள், 18 ஆயிரத்துக்கும் அதிகமான பகிர்வுகளைப் பெற்று உங்கள் அன்பைப் பெற்ற பதிவு இது. 
அனைவருக்கும் மீண்டும் மீண்டும் அன்பும் நன்றியும் ❤

 

பொன் விமலா 

Link to comment
Share on other sites

அன்புள்ள அப்பா:

இதே வாடிக்கையாய்ப் போய்விட்டது... ஒவ்வொரு தந்தையர் தினத்தன்றும் நான் எதோ புலம்பி happy Father's day in heaven என்று அழுகையாய் முடிக்க

அதற்கு நாலு பேர் த்சொ த்சொ என்றபடி சமாதானப்படுத்த....
இம்முறை எதுவும் எழுதக் கூடாதென்று தான் நினைத்தேன் ...ஆனால் நாள் நெருங்க நெருங்க
கத்திபாரா்சந்திப்பில்்சாலையைத் தனியே கடக்கும் குழந்தையைப் போல் ஒரு பதட்டம்
இதோ எழுதியே விட்டேன் ....

என்னென்னவோ மாற்றங்கள் 
உப்பும் தண்ணீரும் சேரச் சேர துக்கம் மறந்துதான் போகிறது 

நானும் மாறுகிறேன் .. சுஜாதா பாலகுமாரனை மறந்து ஜெயமோகன் எழுத்தை அடிக்கோடிட்டு வாசிக்கின்றேன். எழுத்தால் நெஞ்சில் சூடு இழுக்கிறார் . நானும் வியப்பால் அப்படியே நிற்கிறேன்

நீ என் கோபத்துக்குப் பயந்த காலம் போய் நான் என் பிள்ளைகள் கோபத்துக்குப் பயப்படுகிறேன் 

வர வர தூக்கக் கலக்கத்தில் நானும் மோடிக்கு மாறி விடுவேனோ என்று சற்று பயமாய் இருக்கிறது...

எது மாறினாலும் 

உன் வயதையொத்த முதுவாலிபர்களைக் கடந்து போகையில்்அவர்களைப் போல் நீயும் மைசூர் போண்டா சாப்பிட்டு , வாட்சப் செய்திகளை ஃபார்வர்ட் செய்தபடி இந்த பூமியில் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டு இருந்திருக்கலாம் என்று அன்றாடம் நினைப்பது மாறவில்லை

அம்மா கொச்சம்
 கூட மாறவில்லை..நீ்இறந்த போது நடந்து கொண்டிருந்த விஜய் டிவி சீரியல்களை விடாது மும்முரமாய்த்்தொடந்து பார்க்கறாள்... 

நீயென்னவோ எங்களிடம இருந்து தப்பித்து சொர்க்கத்தில் பரம சௌக்யமாய் இருப்பதாகத் தோன்றுகிறது...

" பிழைத்துப் போ அனுபவி"  என்று  சொல்கையில் தான் விபரீத முறண் உறைக்கிறது
ம் எப்படிப் பிழைத்துப் போவாய் ?.......
பிழைக்காத்தால் தானே சொர்க்கத்துக்கே போனாய்

Happy Fathers day in Heaven

கீதா சந்ரா

Link to comment
Share on other sites

the-lion-king-poster-cropped-700x344.jpg
தந்தையர் தினம்
 
 இன்று தந்தையர் தினம். இறந்த, இருக்கின்ற, காணாமற் போன, மறக்கப்பட்ட அத்தனை தந்தையர்களையும் நினைவுகூர வேண்டிய நாள்.

பல வருடங்களுக்கு முன்னர் கனடிய சீ.பி.சீ. வானொலியில் ஒரு நிகழ்ச்சியைக் கேட்டேன். தலைப்பு இப்போது மறந்து விட்டது, நிகழ்ச்சியையும் இப்போது நிறுத்தி விட்டார்கள். நேயர்கள் தொலைபேசியில் அழைத்து தமது வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நிகழ்ச்சி அது.

அன்றைய நாள் தந்தையருக்குரிய நாள். நிகழ்ச்சியில் ஒரு நேயர் வினிபெக்கில் இருந்து அழைத்திருந்தார். தான் ஒரு டாக்சி சாரதி என்றும் ஒரு நாள் தன் வண்டியில் பயணம் செய்தவர் பற்றியும் கூறினார். கதையில் அவரது வாழ்வும் இழையோடியது.

“நான் ஒரு தனிமையில் வாழும் தந்தை. எனது ஒரே மகன் எங்கு போனான் எப்படி இருக்கிறான் என்பது தெரியாது. அவனை இழந்ததற்கு நான் தான் முக்கிய காரணம். நான் ஒரு பொறுப்பற்ற தந்தை. போதை வஸ்துப் பாவனையில் அடிமையாகிப் போனவன். அதனால் குடும்பத்தை இழந்தவன். ஒரு நாள் நான் எனது மகனைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் என் நாட்கள் நகரும்.

ஒரு நாள் என் வண்டியில் ஒரு இளைஞர் ஏறினார். மிகுந்த போதையில் இருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு என்னையறியாமல் ஒரு ஈர்ப்பு வந்தது. அவன் என் மகனாக இருக்கக்கூடாதா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். கண்ணாடியூடு அவனை அடிக்கடி பார்த்தேன். மயக்கத்தில் கிடப்பது போலிருந்தது. அவன் சொல்லிய இடம் வந்ததும் இறங்கும்படி பணித்தேன். தள்ளாடிக்கொண்டே இறங்கினான். பணம் தரும்போது என்னால் பொறுக்க முடியவில்லை. உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டேன். முணு முணுத்துக் கொண்டு முதற் பெயரைச் சொன்னான். சொந்த இடத்தைக் கேட்டேன். சொல்லிவிட்டுத் தெருவைக் கடந்து சென்றான். எங்கேயோ விழுந்து தொலைக்கப் போகிறவன் போல் நடை இருந்தது. இன்னுமொரு பயணிக்கான அழைப்பு வந்தது. கண்ணாடியினூடு அவனைப் பார்த்துக்கொண்டே வண்டியை நகர்த்தினேன்.

அவன் தான் என் மகன்”

தழு தழுத்த அவரது குரலும் வானொலி அறிவிப்பாளரின் மெளனமும் துக்கத்தை மேலும் பன்மடங்காக்கின.

சில தருணங்கள் சுமையைப் பஞ்சாக்கும். இது அப்படியொன்று.

தந்தையருக்கு வாழ்த்துக்கள்!

சிவதாசன்

http://marumoli.com/தலையங்கம்-தந்தையர்-தினம/?fbclid=IwAR16eAzcYZ2Tddt0oaiGZf5afZQQ5MYKEn164yW4gBW3yFOyEpHP6Sm5QIk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள அப்பா.....!

இருபத்தி நாலு மணி நேரமும்,
இயங்கும் நகர வெளிகளில்.....
எனது வாழ்வு  கரைகின்றது...!

நான் அனுப்புகின்ற சிறிய தொகைகள்,
உனக்குக் கிடைக்கும் போதெல்லாம்.....,
உனது குற்ற உணர்வுகளை...,
நீ என்றும் மறைத்ததேயில்லை..!

பெண்களைப் பெற்ற அப்பாக்கள்...,
எல்லாரும்  தங்களுக்குள் அழுகின்ற.

தேசம் அது....!

ஆயிரம் தடவைகளுக்கு மேல்...,
ஆற்றுப் படுத்த முயற்சித்தேன்..!

நீயோ....இறுதி வரை...
நம்பவேயில்லை..!

எனெனில்..
அகதி வாழ்வின் அவலங்களும் ...,
வெளி நாடுகளில் வாழும் எம்மவர் ..,
அள்ளி விடுகின்ற புனை கதைகளும்,
உனக்குப் புரிந்தே இருந்தது...! 

பள்ளிக்  காலத்து...இரவுகளில்..,
நான் பிந்தி வரும் போதெல்லாம்...,
வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பாய்!
எனது சைக்கிள் முடக்கில் திரும்புகையீல்...,
உனது முதுகுப் புறம்...,
எனது விழியின் ஓரத்தில்...,
ஆழப் பதிவதுண்டு...!

வீட்டின் கதவைத் திறக்கையில்....,
என்ன.....துரை வந்திட்டாரோ...?
நீ அம்மாவிடம் கேட்பதும்....,
எனக்குக் கேட்கும்!

இதுவும் அந்தத் தேசத்தில்...
மட்டுமே நடக்கும்...!

இது தான்....
அப்பாக்களின் அன்பு...!

என்னைப் பொறுத்த மட்டில்....,
எனக்குத் தோன்றாத ஒளியாக...,
எங்கோ மறைந்து நிற்கிறாய்....!

எனது கரம் பிடித்து....,
இன்னும்  என்னை வழி நடத்துகின்றாய்..!

எனது நீங்காத நினைவுகளில்....,
என்றும் நீ....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.