Jump to content

துறவிகளை முன்னிலைப்படுத்தும் நிகழ்கால உண்ணாவிரதங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துறவிகளை முன்னிலைப்படுத்தும் நிகழ்கால உண்ணாவிரதங்கள்

மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:03 Comments - 0

image_1855418e53.jpgபல்லின நாடொன்றிலான நமது சமூக, அரசியல் சூழலில் விவகாரங்களையும் நெருக்கடிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பிழையான முன்மாதிரிகளை நிகழ்காலம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. 

இதில் ஆகப் பிந்திய விடயமானது  - காவியுடை உடுத்த பௌத்த துறவி ஒருவர், உண்ணாவிரதம் இருந்தால் அவரது கோரிக்கையிலுள்ள சரி, பிழைகளுக்கு அப்பால் நாட்டின் அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் அதனை நிறைவேற்றித் தருவார்கள், தரவேண்டும் என்ற ஓர் எழுதப்படாத விதியொன்று இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. 

அத்துரலிய ரதனதேரரின் உண்ணாவிரதம் அதைத் தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு இராஜினாமா, அதற்குப் பிறகு முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைது செய்யக்கோரி  தெற்கில் சில துறவிகள் விரதமிருந்தமை, கடந்த சில நாள்களாக கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, பௌத்த துறவிகளின் துணையுடன் தமிழ்த் தரப்பினர் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதம் எல்லாமே ஒரு விதத்தில் நல்ல முன்மாதிரிகளாகக் குறிப்பிடக் கூடியவை அல்ல. ஏட்டிக்குப் போட்டியாக முஸ்லிம் தரப்பு சத்தியாக்கிரம் மேற்கொள்வதும் வரவேற்கத்தக்கதல்ல. 

உரிமைக்காகப் போராடுவது ஒவ்வொரு சமூகத்தினதும் தனிமனிதனதும் தார்மீகக் கடமை. அந்த வகையில் உண்ணாவிரதம் என்பது மிகச் சிறந்த ஜனநாயகவழி கருவியாகும். ஆனால், இந்து, இஸ்லாமிய மதகுருமாருக்கு இல்லாத மரியாதையையும் அச்சத்தையும் ஆட்சியாளர்கள் பௌத்த துறவிகளுக்கு வழங்குவதும் அவர்களது கோரிக்கைகளில் உள்ள நியாயங்களின் அடிப்படையிலன்றி, அவர்களைப் பகைத்துக் கொண்டால் பௌத்த மக்கள் குழம்பிவிடுவார்கள் என்ற தோரணையில் அக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் பிரயாசப்படுவதும் நல்ல வழிமுறைகள் அல்ல. 

அதுபோலவே பௌத்த துறவிகளை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தினால் அல்லது அவர்களாக இதில் பங்குகொண்டால் காரியம் சாதிக்கலாம் என்று பௌத்த கடும்போக்கு சக்திகளும், பெருந்தேசியவாதமும் எண்ணுகின்றது. அதுபோலவே, இப்போது என்றுமில்லாதவாறு பெருந்தேசியத்தைப் போலவே தமிழர்களும் தங்களுடைய கோரிக்கைகளுக்குப் பலம்சோர்க்கும் விதமாக பௌத்த துறவிகளை முன்னிலைப்படுத்துவதைக் காண முடிகின்றது. 

சிங்கள - தமிழ் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக மட்டுமன்றி, பிக்கு உண்ணாவிரதமிருந்தால் அரசாங்கமும் சிங்கள மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுமாயின், அது அவ்வளவு நல்ல பிரதிபலன்களைத் தரப் போவதில்லை. அதைவிடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் என்பது இங்கு கேலிக்குரியதல்ல. 

உண்ணாவிரதப் போராட்டங்கள் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. உலக அளவில் அதிலும் குறிப்பாக தென்னாசியப் பிராந்தியத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல உண்ணாவிரதப் போராட்டங்கள் சரித்திரத்தில் தடித்த எழுத்துகளால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பதை இவ்விடத்தில் மறந்து விடக் கூடாது. 

மகாத்மா காந்தியின் உண்ணாநிலைப் போராட்டத்தை இதில் முதன்மையானதாகக் குறிப்பிடலாம். தீண்டாமைக்கு எதிராகவும் இந்திய விடுதலை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 17 தடவைகள், மொத்தமாக கிட்டத்தட்ட 139 நாள்கள் காந்திஜி உண்ணாவிரதமிருந்தார். ஒருதடவையில் 21 நாள்கள் வரை உண்ணாவிரதமிருந்த போதும் இப்போராட்டத்தை அவர் குறுக்குவழி ஆயுதமாகவோ, இன முறுகலை உண்டுபண்ணும் சூழலிலோ மேற்கொள்ளவில்லை. 

இலங்கையில் உண்ணாவிரதம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது தியாகி திலீபனின் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம்தான். விடுதலைப் புலிகளின் போராட்டத்தோடு பல விடயங்களின் உடன்பட முடியாத நிலையும் விமர்சனமும் இருந்தாலும் கூட ஒரு சமூகத்துக்காக உயிர் விடும் வரை உண்ணாவிரதமிருந்த பார்த்தீபன் இராமையா என்ற இயற்பெயருடைய திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு சமூக உணர்வும் அகிம்சையும் இருந்ததை மறுக்க முடியாது. 

புலிகளின் முக்கிய உறுப்பினர் என அறியப்படுகின்ற திலீபன், இந்திய அமைதி காக்கும் படையினரிடம் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்துத் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை 1987 செப்டெம்பர் 15 இல் ஆரம்பித்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையிலும் தனது கொள்கையில் நிலையாக இருந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, 26ஆம் திகதி உயிரிழந்த திலீபன், தமிழர்களின் தியாகி ஆகினார். இப்படிப் பல வரலாற்றுப் பதிவான உண்ணாவிரதங்கள் இருக்கின்றன. 

இவர்கள் யாரும் சமூக நல்லிணக்கத்துக்கு விரோதமாக உண்ணாவிரதம் இருக்கவில்லை. ஓர் அகிம்சையான ஆயுதமாகவே உண்ணாவிரதம் என்ற கருவியைப் பயன்படுத்தினர். அத்துடன், காந்திஜியோ அல்லது திலீபன் போன்றோர்களோ, (இன்று நாம் கேள்விப்படுவது போல), உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இரண்டாவது நாளில் தாமாக சிகிக்கை தேடியதாகவோ, இரகசியமாக எதையாவது பானத்தை அருந்தியதாகவோ எந்தத் தகவலும் இல்லை. 

அதுமட்டுமன்றி, உண்மையாக சமூகத்தை நேசிப்பவர்களின் உண்ணாவிரதங்கள், இலங்கையின் ஓரிரு சிங்கள அரசியல்வாதிகள் ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் கடந்தகாலங்களில் நடாத்திய ‘உண்ணாவிரத நாடகத்தை’ போல அமையவில்லை. அவை உண்மைக்குண்மையான உண்ணாவிரதங்களாக இருந்தன. ஆனால் நிகழ்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற உண்ணாவிரதங்களில் நியாயங்களை விட, அரசியல் மற்றும் கடும்போக்கு சக்திகளின் ஆதிக்கமே அதிகம் இருப்பதாகக் கருத முடிகின்றது. அதற்கு அரசாங்கம் தலைவணங்குவதுதான் மிகப் பிழையான செயற்பாடாகும். 

பௌத்த துறவிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை. அவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் மதகுருக்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதும் தவிர்க்க முடியாதது. ஆனால், பௌத்த துறவிகள் அரசியல் மற்றும் ஏனைய பின்னணிக் காரணங்களின் அடிப்படையில் போர்க்கொடி தூக்குவதும், அதற்கு அஞ்சிநடுங்குவது போல அரசாங்கமும் பொறுப்புவாய்ந்தவர்களும் காட்டிக் கொள்வதும் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்பதைக் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. 

குறிப்பாக, தியாகி திலீபனின் கோரிக்கையை கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காத அரசாங்கம், தமிழ் பொதுமக்கள் நிலமீட்புக்காக நெடுங்காலமாக நடத்திவரும் உண்ணாவிரதங்கள் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள், முஸ்லிம்கள் காணி மீட்புக்காக மேற்கொண்ட சத்தியாக் கிரக போராட்டங்களை திரும்பிக் கூடப் பார்க்காத பெருந்தேசியம், இன்று பௌத்த பிக்கு ஒருவர் எங்காவது உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் பதறியடித்துக் கொண்டு, தீர்வுகாண ஓடிவருவதும், அதற்கு ஓரிரு பௌத்த பீடங்கள் ஒத்துஊதுவதும்தான் ஏன் என்பதை நாட்டுமக்கள் அறியாதவர்களல்லர். 

அண்மையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவர் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டியில் உண்ணாவிரதமிருந்தார். முஸ்லிம்களின் ஆதரவையும் பெற்ற அரசாங்கமோ, அல்லது பின்னர் முஸ்லிம் எம்.பி.களைப் பதவிகளைப் பொறுப்பெடுக்குமாறு கோரிய பௌத்த பீடங்களோ அவரைச் சமரசப்படுத்த முயலவில்லை. 

முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தையும் ஒடுக்கும் உள்நோக்கம் மறைக்கப்பட்டு, பௌத்த பிக்குவின் உண்ணாவிரதம் பாரிய இனமுறுகலைக் கொண்டுவரும் என்ற தோற்றப்பாடே ஏற்படுத்தப்பட்டது. இறுதியில், இவர்கள் இராஜினாமாச் செய்ய உண்ணாவிரத அரசியல் வென்றது. அதன்பின்னர் சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைது செய்யச் சொல்லியும் தென்னிலங்கையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டுப் பின்னர் பிசுபிசுத்துப் போனது. 

இந்நிலையிலேயே, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட தனியொரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தித் தருமாறு தமிழர்கள் கல்முனையில் கடந்த சில நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு மேலதிகமாக இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்ற தேரர் ஒருவர் உள்ளடங்கலாக வேறு ஒருசில பௌத்த துறவிகளும் இதில் பங்கேற்றிருக்கின்றனர். 

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் என்று அழைக்கப்பட்டு வந்த உப பிரதேச செயலாளர் பிரிவைத் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தித் தருமாறு தமிழ் மக்கள் கோரி வருகின்றனர். 1993 காலப் பகுதியிலேயே இதனைத் தனியொரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதை முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்து வருவதாகவும் தமிழர் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

தமிழர்களின் இக் கோரிக்கை நியாயமானதே. தமது பிரதேசங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பை நிர்வாகம் செய்வதற்கான பிரதேச செயலகம் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட தனியோர் அலுவலகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்தப் பிழையும் இருப்பதாகத் தெரியவில்லை. மறுபுறத்தில்,  இதற்கு முஸ்லிம்கள் ஏன் விரும்புகின்றார்களில்லை என்ற காரணத்தையும் நோக்க வேண்டியிருக்கின்றது. 

பிரதேச செயலகம் என்பது அரச நிர்வாகக் கட்டமைப்பாகும். அதனை பெறுவதற்கு ஒரு வழிமுறை இருக்கின்றது. சரி, முயற்சி எல்லாம் கைகூடாத நிலையிலேயே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று வைத்துக் கொண்டால், அதில் தவறில்லை. ஆனால், இதில் பௌத்த பிக்கு துணைக்கு அழைக்கப்பட்டுள்ளமையானது, ரதனதேரரின் உண்ணாவிரத வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற தோற்றப்பட்டை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழர்களில் அக்கறையிருப்பதாகக் காட்டிக் கொள்ளும் சில தமிழ் அரசியல்வாதிகள் ஸ்தலத்துக்கு வந்து கூறும் கருத்துகள் முஸ்லிம்களை முகம் சுழிக்கச் செய்கின்றன. தமிழர்களின் போராட்டத்துக்கு பௌத்த பிக்குகள் ஆதரவளிப்பதும், ஞானசார தேரர், ரதன தேரர் போன்றோரும் இதில் சம்பந்தப்படுவதும், சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கைகோர்த்து விட்டார்களா? என்ற சந்தேகத்தை முஸ்லிம் சமூகத்துக்குள் ஏற்படுத்தியுள்ளது. 

முஸ்லிம் தரப்பினர் இப் பிரச்சினைக்குப் பேசித் தீர்வு காணாமல் மேலெழுந்தவாரியாக தனிப் பிரதேச செயலகத்தை எதிர்க்க முடியாது. மறுபுறத்தில், தனியான பிரதேச செயலகத்தைக் கோரிப் பெறுவது தமிழர்களின் உரிமை. அதற்காக அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றார்கள் என்பதும் விமர்சனத்துக்குரியதல்ல. 

ஆனால், நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகப் பௌத்த கடும்போக்கு சக்திகள் கிளர்ந்தெழுந்துள்ள சூழ்நிலையில், அவ்வாறான சக்திகளின் ஆசிர்வாதத்தை பெறுவதும், கடும்போக்கு சக்திகளின் புதிய ‘ட்ரென்டாக’ ஆகியுள்ள உண்ணாவிரத அரசியலுக்குள் தமிழ் சமூகம் சிக்குவதும், முஸ்லிம்களின் ஆதரவோடு வடக்கு - கிழக்கை இணைக்கக் கோரும் தமிழர்களுக்கு நல்ல சகுணங்கள் அல்ல. அதேநேரம், இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது என்ற கோஷத்தோடு ஏட்டிக்குப் போட்டியாக முஸ்லிம் தரப்பும் இன்னுமொரு பௌத்த துறவியை அழைத்து வந்து சத்தியாக்கிரகம் இருந்தால் என்ன செய்வது என்பது பற்றியும் சிந்திக்க தவறக் கூடாது. 

எனவே, உண்ணாவிரத அரசியலுக்காகவும், பிக்குகள் இதற்கு ஆதரவளிக்கின்றார்கள் என்று பயந்து கொண்டும்.... இப் பிரச்சினைக்கு தீர்வுகாண எத்தனிக்காது, உண்மையில் தமிழர்கள், முஸ்லிம்களின் நியாயங்களின் அடிப்படையில் மட்டுமே இவ்விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். 

கல்முனை விவகாரம்: இருதரப்பு நியாயங்கள்

  கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் என்று அழைக்கப்பட்டு வந்த, ஓர் உப பிரதேச செயலகத்தை, தனியான ஒரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துமாறு தமிழ்த் தரப்பினர் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை முன்னிறுத்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அக்கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாகத் தற்போது மீண்டும் பிரதமர் வாக்குறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இந்தப் பிரச்சினை இன்னும் தீரவில்லை.   
உப பிரதேச செயலாளர் பிரிவாக இயங்கி வந்த இவ்வலுவலகத்தைத் தரமுயர்த்த 1990களிலேயே அரசாங்கம் முயன்ற போது முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்து வருவதாகத் தமிழ்த் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. 

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இந்த உதவிப் பிரதேச செயலாளர் அலுவலகம் இயங்குவதால் நிதி போன்ற நடைமுறைகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக நீண்டகாலமாகவே கூறப்பட்டு வந்தது. 
உண்மையில், பொதுநிர்வாக கட்டமைப்பாகிய பிரதேச செயலகம் ஒன்றின் கீழ் வினைத்திறனான நிர்வாக நடைமுறை இருக்க வேண்டும் என்று இப் பிரதேசத்தில் வாழும் மக்கள் கருதுவதில் தப்பேதும் கிடையாது. 

ஆனால் பிரதேச செயலகம் என்பது அரசியல் அதிகார அலகோ, அரச நிறுவனமொன்றின் கிளையோ கிடையாது. எனவே அதைக் கோருவதற்கு ஒரு முறை இருக்கின்றது. மாவட்ட செயலாளர் ஊடாக, பொதுநிர்வாக அமைச்சு இவ்விடயத்தை பரிசீலித்து, அல்லது 90களில் வெளியான கடிதக் குறிப்புகளைப் பரிசீலித்து இதனைத் தரமுயர்த்த வேண்டுமேயொழிய, வேறு கோரிக்கைகள் போல உண்ணாவிரதம் இருந்து, அரசாங்கத்துக்கு சவால் விடுத்து சாதிக்க நினைப்பது, புதுப்புது பிரச்சினைகள் எழ வழிவகுக்கலாம். 

மறுபுறத்தில், குறிப்பிட்ட சில காரணங்களுக்காகவே முஸ்லிம் தரப்பு இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றது. இதில் பிரதானமானது கல்முனை பிரதேச செயலகத்துக்கும், சர்ச்சைக்குரிய வடக்கு உப பிரதேச செயலகத்திற்கும் உரித்தான எல்லைகளுடன் தொடர்புபட்ட சிக்கலாகும். சுருங்கக் கூறின், முஸ்லிம்களின் வர்த்தக மய்யமான கல்முனை நகரும் குறிப்பிட்டளவான முஸ்லிம் குடியிருப்புகளும் இந்த புதிய பிரதேச செயலக எல்லைக்குள் சென்றுவிடும் என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர். 

அந்த வகையில், இருதரப்பு நிலைப்பாடுகளிலும்  நியாயமிருக்கின்றது. எனவே இருதரப்பும் ஓரளவுக்கேனும் திருப்திப்படும் விதத்தில் எல்லைப் பிரிப்புகளுடன் பிரதேச  செயலகம் தரமுயர்த்தப்படுவதே ஆரோக்கியமான தீர்வாக அமையும். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/துறவிகளை-முன்னிலைப்படுத்தும்-நிகழ்கால-உண்ணாவிரதங்கள்/91-234511

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.