Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழம் - அகமும் புறமும் - புதிய தொகுப்புக்கான10 கவிதைகள் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஈழம் - அகமும் புறமும்
புதிய தொகுப்புக்கான10 கவிதைகள்
 
1.
 
நீலம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
 
தோழி
காலமாய் நுரைகள் உடைகிற மணலில்
சுவடுகள் கரைய
சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?
கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்
நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.
மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்
உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.
 
ஆண்டு பலவாகினும்
நரையிலா மனசடா உனக்கென்றாய்.
தோழி
இளமை என்பது வாழும் ஆசை.
இளமை என்பது கற்றிடும் வேட்கை.
இளமை என்பது முடிவிலா தேடல்;
இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.
இளமை என்பது வற்றாத ரசனை
இளமை என்பது நித்திய காதல்.
இளமை என்பது
அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.
 
தோழா உனக்கு எத்தனை வயசு?
தோழி எனக்கு
சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.
2011
 
2.
 
பாவைக் கூத்து
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*
அம்ம வாழிய தோழி,
பதிலுக்கு வாழ்த்தவும் மறந்து
யார் அவன் யாரென மீண்டும் வினவுதி,
உனக்கு வேறு வேலையே இலதோ?
*
அறிந்திலையோடி?
மச்சு வீட்டின் காவல் மறந்து
ஊரின் சந்து பொந்து மரத்தடி எல்லாம்
காதல் குறுஞ்செய்தி பெய்து அலையுமே
அந்த நாயின் சொந்தக்காரனடி.
போயும் போயும் அவனையா கேட்டாய்?
 
 
*
அறம் இல்லாது
ஒருத்தனுக் கெழுதிய காதல் சேதியை
பிரதி பிரதியாய்
பலருக்கு அனுப்பும் கைபேசிக் கிளியே
அவனே உனக்குச் சாலவும் பொருத்தம்
அப்பாலே போ.
 
 
*
பிரிக்கவே சூழும் பெண்விதி கொடிது.
இனி, பொம்மலாட்டப் பாவையைபோல்
ஒருவர் சொல்லுக்கு ஒருவர் ஆடிய
இனிய நம் நாட்கள் போய்விடும் தோழி.
உந்தன் மழலை அவனை ஆட்டும் நாள்வரை
இனி அவனே உந்தன் பாவைக் கூத்தன்.
 
 
*
சரிதான் போடி உன்
நூறு நூறு குறுஞ்செய்திகளை
அவனுக்கே அனுப்பு.
காலை தோறும் எண்திசை வானில்
ஆயிரம் ஆயிரம்
சிறு வெண் கொக்குகள் பறக்க விடுகிற
கடற்கரையோரப் புன்னை மரமினி
என் துணை ஆகுக
 
 
2019
 
3.
 
பாடா அஞ்சலி
வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
உதிர்கிற காட்டில்
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்?
.
சுனாமி எச்சரிக்கை கேட்டு
மலைக் காடுகளால் இறங்கி
கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின்
கவிஞன் நான்.
பிணக்காடான இந்த மணல் வெளியில்
எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ
யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட.
.
வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது.
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத...
.
இந்த உலகிலும் பெரிய இடுகாடெது?
பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து
புதிய கொடிகள் நாட்டப்படுகிற
பெரிய அடக்கத் தலம் அது.
நடுகற்களின் கீழ்
அடிபட்ட பாம்புகளாய்
கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின்
இறுதிச் சாபங்கள் அலைகிறதே.
எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்.
.
அகலும் வலசைப் பறவைகளின்
புலம்பல்கள் தேயும் மண்ணில்
மொட்டை மரங்கள் பாடுகின்றன
”வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்.”
 
4.
 
நதி வட்டம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
கடற்கொள்ளை அடித்த முகில்
காமத்தில் மலையேற
குறுஞ்சிப்பூ மடிமீது
பெயல்நீராய் நெழிந்தேன்
.
யாருமற்ற மலைக்காட்டில்
தீயாக பூத்து
செம்பவளமாய் உதிரும்
பலாச மரங்களே வியக்க
பகல் ஒளியில் சிலம்பமாடி
வண்ணங்களாய் இறுமாந்தேன்.
.
பசிய கிளை உடைத்துப்
பசியாறும் யானை மந்தை நாண
மீண்டும் கிளைகளாய் நிறைந்து
குருத்தெறிந்து சிரிக்கும்
பச்சை மூங்கில்களின் கீழே
ஈழவரை நினைத்தபடி
மலைகளைக் கடந்துவந்தேன்.
.
வழிநீள வழிநீள
பாய்ந்தும் விழுந்தும்
தழுவிய தேவதையர்
மார்பால் உரைத்துவிட்ட
கொச்சி மஞ்சள் கமழ
நெடுந்தூரம் வந்துவிட்டேன்.
.
காற்றில் இப்ப கரிக்கிறது உப்பு.
கமழ்கிறது தாழம்பூ
இனிக்குது கடற்பறவை
இசைக்கிற நாடோடிப் பாடல்
.
சந்தனமாய் தேய்கிற வாழ்வில்
எஞ்சிய வானவில் நாட்கள்
போதை தருகிறது.
என்றாலும்
கடல் புகுந்த ஆறு, முகிலாகி
மீண்டும் மலையேறும்
நதி வட்டப் பெரு வாழ்வில்
முதுமை எது? சாவு எது?
,
இன்னும் நீராட வாராத
வனதேவதைக்காக
இறுதிவரை ஆறாய் இருப்பேன்.
.
2017
 
5.
 
உலா
- வ.ஐ.ச.ஜெயபாலன்
 
நீலப் பாவாடையில் குங்குமமாய்
எழுஞாயிறு கசிய
பூத்தது விடலை வானம்.
வாழ்த்துடன் நிறைந்தன வலசைப் பறவைகள்.
எனினும் அன்பே
உலாவுக்கான உன் செல்பேசி அழைப்புத்தான்
இந்த வசந்த நாளை அழகாக்கியது,
 
வண்ணத்துப் பூச்சிகளாய் காற்றும் பூத்துக் குலுங்கும் வழி நெடுக.
காவியம் ஒன்றின் இறை வணக்கம்போல
கைகளும் படாத வெகு நாகரீகத்தோடுதான்
உலாவை ஆரம்பித்தோம்.
காடு வருக என
கதவுகளாய்த் திறந்தது.
 
சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட
கூறைச் சேலையாய்
வண்டாடும் மரங்களின்கீழ்
உதிரிப்பூ கம்பளங்கள்.
 
என் அன்பே
முகமறைப்பில் இருளில் இணையத்தில்
கண்காணா தொலைவில்தான்
இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க முடியுதென்பாய்..
முதலிரவுப் படுக்கையாய் பூச்சூடிய இந்தக் காடும்
விடுதலைப் பிரதேசமல்லவா
.
நீ முணுமுணுக்கும் பாடலை உரக்கப் பாடு
உன் மந்திர நினைப்புகளை ஒலி
தோன்றினால் சொல் கை கோர்க்கலாம்..
2015
 
 
6.
 
வரமுடியவில்லை அம்மா
வ.ஐ.ச. ஜெயபாலன்
 
வரமுடியவில்லை அம்மா
தீயினை முந்தி உந்தன்
திரு உடலில் முத்தமிட...
 
சிங்கமும் நரிகளும் பங்கும்
நீர்சுனையின் வழி அஞ்சி
உயிர் வற்றும் மானானேன்.
சென்னைச் சுவர்பாலை
துடிக்கும் பல்லி வாலானேன்.
 
தோப்பாகும் கனவோடு நீ சுமந்த
நறுங் கனிகள தின்றதே
ஈழத் தமிழன் விதி என்ற
பேர் அறியா தேசத்துப் பறவை.
துருவக் கரை ஒன்றில்
அதன் பீயாய் விழுந்தேனே
என் கனிகளச் சுமந்தபடி
 
இறால் பண்ணை நஞ்சில்
நெய்தல் சிதைந்தழியும்
சேதுக் கரையோரம்
படகுகளும் இல்லை.
 
கண்ணீரால் உன்மீது
எழுதாத கவிதைகளைக்
காலத்தில் எழுகிறேன்...
2006
 
7.
 
இன்றைய மது
வ.ஐ.ச.ஜெயபாலன்
 
உலகம்
விதியின் கள்ளு மொந்தை.
நிறைந்து வழிகிறது அது
மதுக் கிண்ணம் தாங்கியவர்களால்
எப்போதும் நுரைத்தபடி.
நேற்றிருந்தது வேறு.
இங்கே நுரைபொங்குவது
புதிய மது.
 
அது இன்றைய நாயகனுக்கானது.
நாளை கிண்ணம் நிறைகிறபோது
வேறு ஒருவன் காத்திருப்பான்.
 
நிச்சயம் இல்லை நமக்கு
 
நாளைய மது அல்லது நாளை.
 
எனக்காக இன்று சூரியனை
ஏற்றி வைத்தவனுக்கு நன்றி.
அது என் கண் அசையும் திசைகளில்
சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.
மயக்கும் இரவுகளில்
நிலாவுக்காக
ஓரம்போகிற சூரியனே
உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.
 
கள்ளு நிலா வெறிக்கின்ற
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும்
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.
 
எப்பவுமே வரப்பிரசாதங்கள்
வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்
உறவுகள் போலவும்
நிகழ் தருணங்களின் சத்தியம்.
நிலம் காய்ந்த பின்
விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ
பட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூட
அவனது வியர்வை முளைப்பதில்லை.
போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.
அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.
 
நனைந்த நிலத்தில்
உழுகிறவனின் கவிதையை எழுதுகிறது
ஏர்முனை.
 
காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.
 
 
9.
 
என் கதை
வ.ஐ.ச.ஜெயபாலன்
 
*
அவள் தனி வனமான ஆலமரம்.
நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.
என்னை முதன் முதற் கண்டபோது
நீலவானின் கீழே அலையும்
கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.
நானோ அவளை
கீழே நகரும் பாலையில் தேங்கிய
பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.
 
*
ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி
ஜாடை காட்டினாள்.
மறுநாள் அங்கிருந்தது என் கூடு.
இப்படித்தான் தோழதோழியரே
எல்லாம் ஆரம்பமானது.
தண்ணீரை மட்டுமே மறந்துபோய்
ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்
பாலை வழி நடந்த காதலர் நாம்.
 
*
அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.
நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.
சிறகுகளில் மிதக்கும் எனக்கோ
நிலைத்தல் இறப்பு.
மண்ணுடன் அவள் எனை
வேரால் இறுகக் கட்ட முனைந்தும்,
நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்
எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம்.
 
*
உண்மைதான் அவளை
நொண்டியென்று விரக்தியில் வைதது.
முதலில் அவள்தான் என்னைப் பார்த்து
கண்ட மரம் குந்தி, ஓடுகாலி
மிதக்கும் நரகல் என்றாள்.
 
*
ஓரு வழியாக இறுதியின் இறுதியில்
கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்
சமரசமானோம்.
மாய ஊறவின் கானல் யதார்த்தமும்
வாழ்வின் உபாயங்களும்
காலம் கடந்தே வாய்த்தது நமக்கு
நம் காதலாய் அரங்கேறியதோ
உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்
என்றோ எழுதிய நாடகச் சுவடி.
 
*
இப்போது தெளிந்தேன்.
சந்திக்கும் போதெலாம்
என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.
”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்
உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”
மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்
” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்
என் கிளைகளில் அமர்ந்ததோ
நீ மட்டும்தான்.”
 
*
இப்படித்தான் தோழதோழியரே
ஒரு மரமும் பறவையும் காவியமானது.
//
 
9.
 
இல்லறம்
-வ.ஐ.ச.ஜெயபாலன்.
 
ஆற்றம் கரையில்
இன்னும் தோற்றுப்போகாத மரம் நான்.
 
இன்று தெளிந்துபோய்
புல்லும் சிலும்பாமல் நடக்கிறது காட்டாறு.
விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி
ஹோலிப் பண்டிகைக் குறும்போடு
வண்ணங்கள் வீசி
தொட்டுத் தொட்டுடச் செல்கிறது அது.
நேற்று வெறிகொண்டாடியது தானல்ல என்பதுபோல.
 
எனது கன்றுகள்
முளைத் தெழுகிற நாள்வரையேனும்
கைவிட்டகலும் வேர்மண் பற்றி
பிழைத்திருக்கிற போராட்டத்தில்
நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்
அது நானல்ல என்பதுபோல.
 
நேற்றைய துன்பமும் உண்மை
நாளைய பயமோ அதனிலும் உண்மை.
எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு.
சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்.
துள்ளி மகிழுதே பொன்மீன்கள்.
 
நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே
இந்த நட்பும் வாழ்வும்.
 
10.
 
நெடுந்தீவு ஆச்சிக்கு
வ.ஐ.ச.ஜெயபாலன்
 
அலைகளின்மீது பனைக்கரம் உயர
எப்போதும் இருக்கிற
என்னுடைய ஆச்சி
 
காலம் காலமாய் உன்னைப் பிடித்த
பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின
போத்துக்கீசரின் எலும்புகள் மீதும்
தென்னம் தோப்பு
நானும் என் தோழரும்
செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.
 
தருணங்களை யார் வென்றாலும்
அவர்களுடைய புதை குழிகளின்மேல்
காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.
 
என்ன இது ஆச்சி
மீண்டும் உன் கரைகளில்
நாங்கள் என்றோ விரட்டி அடித்த
போத்துக்கீசரா ?
தோல் நிறம் பற்றியும்
கண் நிறம் பற்றியும்
ஒன்றும் பேசாதே
அவர்கள் போத்துக்கீசரே
 
எந்த அன்னியருக்கும் நிலை இல்லை
எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.
நாளை இந்தப் போத்துக்கீசரும் புதைய அங்கு
கரும்பனைத் தோப்பெழும் என்பதைத் தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.
 
ஆச்சி
என் இளமை நாள் பூராக
ஆடியும் பாடியும் கூடியும் வாடியும்
தேடிய வாழ்வெலாம்
ஆமை நான், உனது கரைகள் நீழ
புதைத்து வந்தேனே.
என்னுடன் இளநீர் திருட
தென்னையில் ஏறிய நிலவையும்
என்னுடன் நீர் விழையாட
மழை வெள்ளத்துள் குதித்த சூரியனையும்
உனது கரைகளில் விட்டுவந்தேனே
என் சந்ததிக்காக.
 
திசகாட்டியையும் சுக்கானையும்
பறிகொடுத்த மாலுமி நான்
நீர்ப் பாலைகளில்
கனவுகாண்பதுன் கரைகளே ஆச்சி
 
நீ நிலைத்திருப்பாய் என்பதைத் தவிர
எதனைக் கொண்டுநான்
மனம் ஆற என் ஆச்சி
(பெருந்தொகை -1995)
*நெடுந்தீவு (Delft) எனது மூதாதையரின் தீவு. இன்று இரணுவத்தின்
பிடியில் சிக்கியுள்ளது. விட்டு விடுதலையாகி நின்ற இந்த தனித்த தீவு
பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டது.
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தெரிவுக் கவிதை புத்தகம் தொகுக்கும் முயற்சியில் உள்ளேன். இன்னும் குறைந்தது 40 கவிதைகள் தெரிவுசெய்து இணைக்க வேண்டும். இங்கு இடம்பெறாத எனது கவிதைகளில் உங்களுக்கு பிடித்த கவிதைகள் நினைவில் வந்தால்   குறிப்பிடுங்கள். பிரதி இருந்தால் இணையுங்கள்.

 

Edited by poet
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.