Jump to content

மருத்துவர் தினம்


Recommended Posts

மருத்துவர் தினத்தில் எனது வேண்டுகோள்!

Dr. Hariharan V MBBS, MD.,
Diet consultant.

2006-07ல் நான் நைட் டூட்டி டாக்டராக  சிறிய மருத்துவமனைகளில் பணியாற்றியுளேன்.  பதினாலாயிரம் சம்பளம். மறக்க முடியாத தருணங்கள் அவை. "டாக்டர், என் ஏழு வயது பையனுக்கு கேன்சர். ஒரே பையன். எல்லாம் பண்ணியாச்சு. அவன் இன்னும் மூன்று மாதத்தில் இறந்துடுவான். இன்னிக்கு ரொம்ப  வலி, பெத்திடின்-பினர்காண்  ஊசி போட்டா வலி  போயிடும், ஊசி போட்டா   ஒரு வாரம் கழிச்சு தான் வலி வரும், நாங்க வழக்கமா போகும் மருத்துவமனையில்  மறுத்துட்டாங்க. டாக்டர் மாறிட்டார். நாங்களும் நாலு ஹாஸ்பிடல் போயிட்டோம். எல்லாரும் மறுத்துட்டாங்க. ப்ளீஸ் ஊசி போடுங்க", என மூன்று வயது குழந்தை சைஸ் இருக்கும் ஏழு வயது வலியில் துடிக்கும் மூச்சிரைப்புடன் இருக்கும் குழந்தையை அவன் அம்மா காட்டினார். உடனே எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஊசி போட சொன்னேன். அடுத்த பதினாறு வாரங்கள், வாரம் ஒரு முறை அதே போல் வருவார்கள், பதினேழாவது வாரம், பேரன்ட்ஸ் மட்டுமே வந்தார்கள். "ரொம்ப நன்றி டாக்டர். குழந்தை வலியில்லாமல் இறந்தான்". நான் தூங்க இரண்டு நாளானது. இன்றைக்கு அந்த பெற்றோர் முகம் எனக்கு நினைவில் உள்ளது. அப்பர் மிடில் கிளாஸ் ஆட்கள். அவர்கள் நிலைமையில் என்னை நினைத்து வருந்திய நாட்கள் அதிகம். 

இதே போல இன்னும் பதினைந்து இறப்புகள். ஒரு வருடத்தில். என் வயது 25. 

அவசர சிகிச்சை மற்றும் ஐசியு இரவு டூட்டிகள். பொட்டலம் மாதிரி தூக்கிக் கொண்டு வருவார்கள். என்னென்னவோ செய்வோம். ஒரு நேரத்தில், ஆறு நர்ஸ்கள் எனக்கு உதவிய காலங்கள் உண்டு. எப்படியாவது இவரை காப்பாற்றிட மாட்டோமா என போராடுவோம். பேஷண்டை மாமன் மச்சானாய் தான் நினைப்போம். அடுத்த நாள், நாம் என்ன செய்து அவரைக் காப்பாற்றினோம் என அவருக்கு தெரியாது, "குட் ஈவ்னிங் டாக்டர்" என்பார். புன்னகைத்தபடியே நகர்வேன். இரவில் நர்ஸ்களுடன் உணவு சாப்பிடும் போது, அவர்கள் என்னை வெகுவாக பாராட்டுவார்கள், நான் அவர்களின் நல்ல செய்கை மற்றும் அன்று அவர்கள் செய்த தவறுகளை சொல்வேன். இருபது வருடம் அந்த மருத்துவமணைகளில் வேலை பார்க்கும் மிக சீனியர் நர்ஸ்கள் கூட என்னை மதித்து, அந்த உணவு வேளைகளில் கலந்து கொள்வர்.

உயிரை காப்பாற்றும் தருணங்களில், அடுத்த நாள் காலை வீட்டிற்கு பைக்கில் செல்லும் போது, ஹெல்மட் மண்டையை மேலே தூக்கியபடி வண்டி ஓட்டுவேன். இன்றளவும் மனதில் இருக்கும் தருணங்கள் அவை. காப்பாற்ற முடியாத தருணங்களில், இரண்டு நாட்களுக்கு மனதை உழப்பிக் கொண்டே இருப்பேன். ஓனர் டாக்டர், "ஹரி, கரெக்டா தாம்பா செஞ்ச. அமெரிக்காவில் அவன் இந்த நேரம் போயிருந்தாலும், அங்க என்ன செய்வாங்களோ அதை தான் செஞ்ச. அதுக்கு மேல அவன் தலை விதி. விடு" என்பார். நான் செய்யும் வேலையை பார்த்து இரண்டே மாதத்தில் சம்பளத்தை இரட்டிப்பாக்கினார் ஒரு ஹாஸ்பிடல் ஓனர் டாக்டர். இழப்பின் வலி அவருக்கு தெரியும். அவர் டாக்டர் மனைவி ரத்தப் புற்றுநோய் வந்து லட்சக்கணக்கில் செலவு செய்தும் இறந்தார். 

ஒரு வருடத்திற்கு மேல் முடியவில்லை. நிறைய கற்றுக் கொண்டாலும், சில மரணங்கள் என்னை அலைக்கழித்தன. மன அழுத்தத்தில் எனக்கு பிரஷரும், தூக்கமின்மையால் உடற்பருமனும் வந்தது. சமூகத்திற்கு நான் ஆற்றிய கடமை போதும் என கொஞ்சம் டென்ஷன் கம்மி தரும் வேலைக்கு வந்து, பின்னர் எம்டி படித்து, திருமணம் முடித்து, மெடிக்கல் காலேஜ் வாத்தியார், டயட் டாக்டர் என டென்ஷன் கம்மி வேலைகளில் செட்டில் ஆகி விட்டேன். 

இன்றளவும், நான் மிகப்பெரும் டாக்டர்களாக மதிப்பது, தங்கள் ஆரோக்கியம், சந்தோஷங்களை தொலைத்து பல்வேறு மருத்துவமனைகளில் வெறும் இருபத்தைந்தாயிரம், முப்பதாயிரம் ரூபாய்க்காக நைட் டூட்டி பார்க்கும் காஷுவாலிட்டி மற்றும் ஐசியூ நைட் டூட்டி டாக்டர்களையே. உங்கள் உயிரையோ, அல்லது உறவினர் நண்பர் உயிரை அவர் காப்பாற்றியிருந்தாலும் சரி, போராடி உயிரை காப்பாற்ற முடியாவிட்டாலும் சரி, அவருக்கு ஒரு smsசிலோ, வாட்ஸப்பிலோ, போன் செய்தோ, நேரிலோ, ஒரு கடிதம் மூலமாகவோ நன்றி செலுத்துங்கள். அவர் அடையும் சந்தோஷமே வேறு. உங்களை நன்றாக நினைவு வைத்திருப்பார். இன்றும் நான் காப்பாற்றியவர்கள் யாரும் நினைவில் இல்லை. இழந்தவர்கள் அனைவரும் என் நினைவில் பத்திரமாக உள்ளனர். 

டாக்டர்களை அடித்தல். அந்த பதினாறு மரணங்களில் ஒரு மரணம், ஒரு கவுன்சிலருடையது. அவர் அடிப்பொடிகள் மருத்துவமனையை அடித்து உடைத்தார்கள். நான் என் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். எனக்கென்ன பயம்? நான் ஒரு தவறும் செய்யவில்லை. அவரை காப்பாற்ற முழு முயற்சி செய்தும் முடியவில்லை. என்னை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லாவற்றையும் நொறுக்கினார்கள். பின் தான் தெரிந்தது, கவுன்சிலர் தன் மகளுக்கு உயிலில் ஒன்றும் வைக்காமல் எல்லாவற்றையும் மகன்கள் பேருக்கு எழுதி வைத்து விட்டார் என. அந்த மகளின் கோபத்தின் வடிகாலே எங்கள் மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது. சொத்து கிடைத்த இரு மகன்களும், சைலண்டாக பாடியை வாங்கிச் சென்று விட்டார்கள். அடிவாங்காமல் நான் தப்பித்தது தம்பிரான் புண்ணியம். இறந்த நபரின் முகம் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அவர் மகளின் நினைவில் அந்த முகம்  இருக்குமா? 

தன் சொந்தம், நட்பை இழத்தல் ஒருவருக்கு தரும் அதே சோகத்தை, அந்த பேஷண்டை அட்டென்ட் செய்யும் டாக்டருக்கும் தருகிறது.                                              

சிறிய மருத்துவமனைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நம்மூர் டாக்டர், நம்மை நம்பி ஆரம்பித்த மருத்துவமனை. அதற்கு பதிலாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டியிருந்தால், அது முன்னேறி, இன்றைக்கு ஒரு அரசியல் தலைவர்/ காண்டிராக்டர் ஆகியிருப்பார். மக்களுக்காக அவர் கட்டி, இரவும் பகலும் நோயாளிகளுக்காக அவர் பாடுபட்ட அந்த மருத்துவமனை இன்று விற்பனைக்கு. வாங்க ஆளில்லை. அவர் மகன்கள்/ மகள்கள் மெரிட்டில் மருத்துவம் கிடைக்காமல், மேனேஜ்மெண்ட் சீட்டில் சேர்க்க காசில்லாமல், இன்று வேறு கோர்ஸ்களில் சேர்கிறார்கள். அந்த டாக்டர் நாற்பது வருடங்களாக சம்பாதித்தது, அந்த பில்டிங்கை தவிர வேறில்லை. அதையும் விற்க முடியவில்லை.   

இன்னும் இருபது வருடங்களில், உங்கள் அருகில் இருக்கும் உங்களுக்கு பழக்கமான சிறிய மருத்துவமனைகள் இருக்காது. இன்றைக்கே ஒரு "நன்றி டாக்டர்" மெசேஜ் தட்டுங்கள். செய்யும் முதலீட்டிற்கு கேவலமான  லாபத்துடன் தொழிலை நடத்துவதற்கும், செலவழிக்கும் நேரத்திற்கும், இழந்த தூக்கத்திற்கும், அவர் குடும்பத்திற்கு நேரம் செலவழிக்காமல் இருந்ததற்கும் நம்மால் செய்யக் கூடிய ஒரே கைம்மாறு " Thanks Doctor" எனும் ஒரு வரியே. அவருக்கு அதனால் கிடைக்கும் சந்தோஷமே வேறு..

##############################

 

மருத்துவர்கள் தினமான இன்று 
எனது வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத
மருத்துவரைப் பற்றிய நினைவைப் பதிகிறேன்

சுமார் பதினான்கு வருடங்களுக்கு முன்பு ,
2005 ஆம் ஆண்டு, அப்போது நாங்கள் நாமக்கலில் வசித்து வந்தோம். 
நான் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி எனும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தேன்

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் கடுமையாக உழைத்து இறுதி தேர்வுகளை அடைந்தேன். 

ஆனால் அங்கு எனக்கொரு மாபெரும் சோதனை காத்திருந்தது. 
மொழிப்பாடங்கள், இயற்பியல் ( physics) தேர்வுகள் வெற்றிகரமாக கடந்து சென்றன. 

சரியாக வேதியியல் ( chemistry ) தேர்வன்று ( 14/3/2005)  அதிகாலை 1 மணியளவில் குளிர் நடுக்கத்துடன் கடும் காய்ச்சல் வந்துவிட்டது . 
என்னால் தூங்கவும் முடியவில்லை. புத்தகத்தை திருப்புதலும் ( revision) செய்ய முடியவில்லை. கடுமையான தலைவலி பிடித்துக்கொண்டது. 

அன்று இரவு கொடுமையான இரவாக இருந்தது. 
கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்துக்கொண்டிருந்தது. 

ஒரு பக்கம் காய்ச்சல் தலைவலி தரும் வேதனை

மற்றொரு பக்கம் விடிந்தால் என் விதியை நிர்ணயம் செய்யப்போகும் பரீட்சை 

நான் ஒரு சமயத்தில் என் மருத்துவக் கனவு தகர்ந்தது என்றே நினைத்துவிட்டேன் 

காலை பரீட்சைக்கு காய்ச்சலோடு தயாரானேன்
வாந்தியும் குமட்டலும் சேர்ந்து கொண்டது 

என் வீட்டருகே அப்போதைய எங்கள் குடும்ப மருத்துவர் மரு. பழனிச்சாமியிடம் என் தந்தை அழைத்துச் சென்றார். 

அவரது பார்வை நேரம் இல்லையெனினும் எனக்காக காலை 8 மணிக்கு என்னைப் பார்த்தார். 

இரண்டு ஊசிகளும்
சில மாத்திரைகளும் கொடுத்தார்

இரவு முழுவதும் உறங்காததால்
நான் மிகவும் சோர்வாக இருந்தேன்

அவரிடம் நான் சொன்னேன்
" அங்கிள், டாக்டாராகனும்னு என் ஆசை. ஆனா இன்னைக்கு என்னால முடியுமானு தெரியல அங்கிள்" என்று அழுதுவிட்டேன்

அப்போது அவர் சொன்னார் 
" டோன்ட் வொர்ரி டாக்டர். கவலப்படாம எழுதிட்டுவாங்க. ஐ பிலீவ் , யூ வில் பிகம் ய டாக்டர். " என்று கூறினார்

இன்று நினைத்தாலும் அந்த வார்த்தைகள். என் கண்களை குளமாக்கிவிடும். 

அவர் வானில் இருந்து வந்த தேவதை போல எனக்குத் தெரிந்தார். 

எனக்கிருந்த காய்ச்சலை மூன்று மணிநேரம் இல்லாமல் பார்த்துக்கொண்டார். 

பரீட்சையில் புத்துணர்வுடன் களம் கண்டேன்.
வெற்றி பெற்றேன் . 
மருத்துவர் ஆனேன். 

இனிப்புகளுடன் அவரை சந்தித்தேன்
நான் நன்றிகளைக் கூறினேன். 
அவர் மிகவும் மகிழ்ந்தார்

என் வாழ்க்கையில் மிகவும் எளிதாக பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் அவர் .

இப்படித்தான் மருத்துவர்கள் அன்றாடம் தங்கள் பணியில் தங்களை அறியாமலே பலர் வாழ்க்கையில் மாற்றங்களை புரிகின்றனர்

அவர் என்னை மறந்திருப்பார்
ஆனால் 
என்னால் அவரை என் வாழ்நாளில் மறக்க இயலாது 

அவர் அன்று எனக்களித்த பரிந்துரைச்சீட்டை பத்திரமாக வைத்துள்ளேன்
நான் மருத்துவராக உதவிய பரிந்துரைச்சீட்டு 
என் வாழ்க்கையை மாற்றிய பரிந்துரைச்சீட்டு

( நானும் என்னை சந்திக்க வரும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை காக்க வைப்பதில்லை. அவர்களுக்கு உந்துதல் தரும் வார்த்தைகளை கூறாமல் இருப்பதில்லை. இது அவரிடத்தில் கற்றுக்கொண்டது தான்) 

இறைவனுக்கே புகழனைத்தும்

தங்களை அறியாமல் பிறர் வாழ்க்கையில் வண்ணம் தீட்டும் மருத்துவர்களுக்கு

மருத்துவர் தின வாழ்த்துகள்

இதே போன்று உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்த மருத்துவரைப்பற்றி கமெண்ட் செய்யலாம்

 

Dr Faruk abdulla

Fb 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.