Jump to content

முக்கியத் தருணத்தில் முரண்டு பிடிக்கின்றதா முன்னணி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியத் தருணத்தில் முரண்டு பிடிக்கின்றதா முன்னணி?

காரை துர்க்கா / 2019 ஜூலை 16 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:32 Comments - 0

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் ஒன்றினைக்கும் முயற்சி கைநழுவிப் போயுள்ளது.   

புலிகளது காலப்பகுதியில், தமிழ் மக்களது உரிமை மீட்சிக்கும் பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கும் அவர்களே முழுமையான பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களும் அவர்களையே நிறைவாக நம்பி இருந்தனர். ஆனால் புலிகளது மௌனத்துக்குப் (2009) பின்னர், கூட்டமைப்புக்கு அந்த வகிபாகம் வலியச் சென்றது.  

ஆனாலும், கூட்டமைப்பினர் தமிழ் மக்களது அபிலாஷைகளை அடையக் கூடிய வகையில், வினைதிறனுடனும் அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் காரியங்களை ஆற்றவில்லை எனத் தமிழ் மக்கள் கவலை கொள்கின்றார்கள். ‘பொய்யான நல்லிணக்கம்’ என்ற நாடகத்தின் தோலை உரித்து,  அதன் போலித்தன்மையை வெளி உலகத்துக்குக்  காட்டத் தவறி விட்டார்கள் என்ற ஆதங்கம் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆழமாக ஊறிவருகின்றது.  

மக்களின் வாக்குகளைப் பெறுவதற்குச் கூட்டுச் சேராமல், மக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, நிறைவேற்ற, ஆக்கபூர்வமாகச் சிந்தித்து செயற்பட ஒன்றுசேர வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். ஆகையால், தமிழ் மக்கள் தங்களது இலட்சியங்களை முன் நகர்த்தக் கூடிய வகையில், பிறிதொரு தகைமையுள்ள தலைமையை எதிர்பார்க்கின்றனர்.  தமிழர்களிடையே, மாற்றத்தின் தேவைக்காக ஒலிக்கும் குரல்கள் வலுவடைய ஆரம்பித்து இருக்கின்றன. பிழையான வழிநடத்தல்கள், தோல்வியுற்ற தலைமையின் விளைவாகவே உருவாகி உள்ளன. 

அந்த வகையில், விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் தலைமையிலான கட்சிகள் இணைவது காலத்தின் தேவையானதும் கனதியானதுமாகும் என மக்கள் கருதுகின்றார்கள். ஆனாலும், இவ்வாறு தோற்றம் பெறவுள்ள (?) புதிய கூட்டமைப்புகள், ஏற்கெனவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்க் கூட்டமைப்பை, வெறுமனே தேவையற்று எதிர்ப்பதும் அரசாங்கத்தை எதிர்ப்பதும் என, வெறும் எதிர்ப்பு அரசியலை மாத்திரம் செய்யக் கூடாது எனவும் அதே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.   

பேரினவாத அரசாங்கங்கள், இதுவரை செய்த அட்டூழியங்களுக்கும், இப்போது செய்து கொண்டிருக்கின்ற அட்டூழியங்களுக்கும் அறிவார்ந்த ரீதியாக முடிவு கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். 

தவறும் பட்சத்தில், எவராக இருந்தாலும் தமிழ் மக்களாலேயே எதிர்க்கப்படுவார்கள்; அரசியல் அரங்கிலிருந்தே அகற்றப்படுவார்கள்.   
இது இவ்வாறு நிற்க, இவ்வாறான இணைவைக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கில் செயற்படும் ஏனைய தமிழ்க் கட்சிகள்,  முக்கியமாகத் தென்னிலங்கைத் தேசியக் கட்சிகள் என, எவருமே விரும்ப மாட்டார்கள். மாறாகத் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்கள் மட்டும், மகிழ்ச்சி அடைவார்கள்; வாழ்த்துவார்கள்.   

அமையவுள்ள கூட்டுக்குள் (?) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) உள் நுழையக் கூடாது என்பதில் கஜேந்திரகுமார் விடாப்பிடியாக உள்ளார். தமிழ்த் தேசியத்துக்கு நெருக்கடி சூழ்ந்துள்ள இக்காலகட்டத்தில், தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தன்கட்சிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக அ(இ)சைந்து கொடுக்க வேண்டிய தேவைப்பாடு நிறையவே உள்ளது என்பதை, கஜேந்திரகுமார் புரியாமை வேதனைக்கு உரியதே.   

இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் (2015) பிரகாரம், யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில், வசூலித்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் தமிழ்க் கூட்டமைப்பு (207,577), ஈ.பி.டி.பி (30,232), ஐக்கிய தேசியக் கட்சி (20,025), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (17,309) என அடுத்த படியாகவே, முன்னணி (15,022) வாக்குகளைப் பெற்றது. வன்னியில் (1,174) திருகோணமலையில் (1,114), மட்டக்களப்பில் (865) அம்பாறையில் (439) என்றவாறாகவே முன்னணி ஏனைய தேர்தல் தொகுதிகளில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அமைகின்றது.   ஆனால், 2015 நாடாளுமன்றத் தேர்தல்தலில் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ்பிரேமசந்திரன் தோல்வி கண்டார். அவர் 29,906 விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். அதே தேர்தலில், வன்னித் தேர்தல் தொகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொண்டது. சிவசக்தி அனந்தன் 25,027 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி ஈட்டினார். அத்துடன், கடந்த கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சியிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அங்கம் வகித்து உள்ளது.   

ஒரு கட்சியின் பலம், மக்களது வாக்குகளே ஆகும். வாக்குகளே, சபைகளில் அங்கத்தவர்களின் எண்ணிக்கையைத் தக்க வைக்கவும் செல்வாக்கை நிலை நிறுத்தவும் உதவுகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில், முன்னணியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது; மக்கள் அதிகப்படியாக விரும்பகின்றார்கள்; நம்புகின்றார்கள் என எடுத்துக் கொண்டாலும் வாக்குகளை, 2015ஆம் ஆண்டிலிருந்து எத்தனை மடங்குகளால் அதிகரிக்க முடியும்?   

வடமராட்சியில் நிகழ்வொன்றில் அண்மையில் உரையாற்றிய கஜேந்திரகுமார், தங்களது வாக்கு வங்கி நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.  எந்தப் புள்ளிவிவரங்கள், ஆதாரங்களின் அடிப்படையில், இவ்வாறாகக் கருத்துத் தெரிவித்து உள்ளார் என்பதும் ஆச்சிரியமாக உள்ளது.   

2018 உள்ளூராட்சித் தேர்ததலில், முன்னணிக்கு வாக்களித்த அனைவருமே முன்னணியின் ஆதரவாளர்கள் அல்ல. மாறாக, கூட்டமைப்பின் வெறுப்பாளர்கள் ஆவர். அவ்வாறிருந்தும், முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட யாழ். மாநகர மேயர் ஆசனத்தைக் கூட, முன்னணியால் கைப்பற்ற முடியவில்லை.   

இந்நிலையில், நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் கூட்டமைப்பால் களம் இறக்கப்பட்டவர். கூட்டமைப்பு பிழையாக நடந்து கொண்டிருந்தாலும், விக்னேஸ்வரன் சரியாக நடந்து கொள்கின்றார் என மக்கள் கருதுகின்றார்கள்.   

ஆனாலும், கடந்த (2013) மாகாண சபைத் தேர்தலைப்  போன்று, அவரால் இலட்சம் தாண்டிய விருப்பு வாக்குகளைப் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே. ஆனாலும், அவருக்கான மக்களின் வாக்கு உயர்வானதாகவும் அவரின் மக்களுக்கான கருத்துகள் மதிப்புள்ளனவாகவும் உள்ளன.  

அதேவேளை, அமையவுள்ள கூட்டக்குள் (?) சுரேஷ் பிரேமசந்திரனையும் கஜேந்திரகுமாரையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற நீதியரசர் சி.வியின் எண்ணம் விரும்பத்தக்கது நிதர்சனமானது. இதனால் இந்தக் கட்சிகளும் தமிழ் மக்களும் என இரு தரப்புக்கும் நன்மைகள் கிடைக்கும் என நம்பலாம்.   

மக்களது நாடித் துடிப்பை அறிந்து கட்சி நடத்த வேண்டுமே தவிர, கட்சிக்காக மக்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆகவே, கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமசந்திரனுடன் உடன்படாவிட்டாலும் பரவாயில்லை, முரண்படாமல் இருப்பதே காலத்தின் கட்டாய தேவையாகும்.   

தமிழ் மக்களது ஆளணிப்பலம், பொருளாதாரப்பலம், உளவியல்பலம் என அனைத்தும் இறங்குமுகமாக இருக்கையில், ஒரு குடையில் அணி திரள்வதே புத்தி சாதுரியம். கஜேந்திரகுமார் தொடர்ந்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ் எதிர்ப்பு அரசியலைச் செய்து, தனது கட்சி தனித்துவத்தைக் காட்டி, சில வேளைகளில் தனித்துப் போகவும் வாய்ப்புகள் உள்ளன.   

தமிழ் மக்கள் தற்போது தனிக்(கட்சி) அரசியலை வெறுக்கின்றார்கள்; ஒதுக்குகின்றார்கள். ஒற்றுமையாக, தமிழர் அணியாகப் போட்டியிட்டால், தமிழ் மக்களது வாக்களிப்பு சதவீதமும் அதிகரிக்கும்; சோர்ந்து போயிருப்பவர்களிடமும் ஒருவித புதுஎழுச்சியும் ஏற்படும். இதனை அரசியல்வாதிகள் புரிய வேண்டும்.   

தமிழ் மக்கள், கட்சி ரீதியாகப் பிளவுபட்டு, வாக்குகள் சிதைவுற்று, அவர்களது வாக்களிப்பு சதவீதமும் வீழ்ச்சி அடைய வேண்டும் என்பதே, பேரினவாதக் கட்சிகளது பிரதான குறிக்கோள் ஆகும்.   

இதனால், யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி தவிர்ந்த ஏனைய தொகுதிகளில், தமிழர் பிரதிநிதித்துவமே பறிபோகலாம். திருகோணமலையில் 2000 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பல அணியாகச் சிதறி, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையே இழந்ததை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.   

மக்களின் விடுதலைக்காக, கூட்டு அணிகள் அமைக்க விரும்பாமை; அவ்வாறு சிரமப்பட்டு அமைத்தாலும் அதற்கான நெறிமுறையில் நடந்து கொள்ளாமை என, நமது கடந்த காலத் தவறுகள் நம்மை மாற்றுப் பார்வையைப் பார்க்க வைத்திருக்க வேண்டும். ஆனால், நம் அரசியல்வாதிகள் த(ப்பு)வறு என்பதையே, மாற்றுப் பார்வைக்கு ஆட்படுத்துவதை வழக்கமாக்கி வருகின்றார்கள்.   

குறிப்பு: இப்பத்தியின் தூ(ர)ய நோக்கம், விடுதலைக்காக விலை மதிப்பில்லாத பெரும் விலையைக் கொடுத்து, அளப்பரிய தியாகங்களைச் செய்த சமூகம், அந்த விடுதலை யாகம் பாதியில் நிற்கையில், தங்களுக்குள் முட்டி மோதிப் புரிந்துணர்வைக் குழி தோண்டி புதைக்கின்றார்களே என்ற ஏக்கம் மாத்திமே. தவிர, ஒருவரைப் புகழ்வதோ, மற்றையவரை இகழ்வதோ அல்ல!   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முக்கியத்-தருணத்தில்-முரண்டு-பிடிக்கின்றதா-முன்னணி/91-235425

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.