Jump to content

உயர்வான எண்ணத்தை ஏற்படுத்த அமெரிக்க நிறுவனத்திற்கு பணம் கொடுத்து ஒப்பந்தம் - பாகிஸ்தான்


Recommended Posts

அமெரிக்க அரசிடமும், மக்களிடமும் தன் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக  அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை பாகிஸ்தான் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்ற பின், பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் அமெரிக்காவுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்லாயிரம் கோடி நிதியுதவியை கடந்த 2018 ஜனவரி முதல் நிறுத்தி விட்டார். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை நாளை சந்திக்க இருக்கிறார். டிரம்ப் பதவியேற்று ஏறக்குறைய 4 ஆண்டுகள் முடியும் நிலையில், தற்போதுதான் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க உள்ளார். 

இந்நிலையில், அமெரிக்க அரசிடமும், அதன் மக்களிடமும் தனது நாட்டை பற்றி ஏற்பட்டுள்ள தவறான எண்ணத்தை மாற்றவும், இவர்களிடம் தனது நட்டை  பற்றி உயர்வான எண்ணத்தை ஏற்படுத்தவும் ‘ஹாலண்ட் அண்ட் நைட்’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. இது தொடர்பாக, இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்சுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த ‘ஜால்ரா’ வேலையை செய்வதற்காக, அந்த நிறுவனத்துக்கு பாகிஸ்தான் அரசு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக குரேஷி கூறுகையில், ``ஹாலண்ட் அண்ட் நைட் நிறுவனம் பாகிஸ்தான் தூதரகத்துடன் இணைந்து செயல்பட்டு, அமெரிக்கா மீது பாகிஸ்தான் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை திறம்பட எடுத்துரைக்கும்,’’ என்றார். இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்ஸ், நியூயார்க் நகரத்தின் முன்னாள் காங்கிரஸ் எம்பி.யாக இருந்தவர். அவர் கூறுகையில், ``எங்கள் நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, இந்த பொறுப்பை ஒப்படைத்த பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு, புரிந்துணர்வு தொடர்பாக வலுவான நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளில் எங்கள் நிறுவனம் செயல்படும்,’’ என்று கூறினார்.

சவுதி இளவரசர் உதவி:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு பாதித்துள்ளது. இந்த உறவை சீராக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈடுபட்டுள்ளார். இதற்கு, சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் உதவி வருகிறார். டிரம்பின் மருமகன் ஜரேட் குஷ்னருடன் சல்மான் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். அவர் மூலமாகதான், டிரம்ப் - இம்ரான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

தூதர் இல்லத்தில் தங்கல்:
பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், தனது நாட்டில் பல்வேறு செலவுகளை குறைப்பதற்கான சிக்கன நடவடிக்கைகளை இம்ரான் எடுத்துள்ளார். தனது அமெரிக்க பயணத்திலும் இதை அவர் பின்பற்றுகிறார். அமெரிக்காவில் அவர் நட்சத்திர ஓட்டலில் தங்கவில்லை. பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே தங்குகிறார். 
 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511798

Link to comment
Share on other sites

அமெரிக்க தலைநகரில் ஆயிரக்கணக்கான பணத்திற்கு கொள்கையை வென்றெடுக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் இவை ' லோபியிங்' (lobbying) என அழைக்கப்படும். சகல மேற்குலக நாடுகளில் கூட இப்படியான அமைப்புக்கள் இருந்தாலும் உலகின் மிக்வும் பொருளாதார இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குகள் காரணமாக அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தான் இவை அதிகம்.  (https://www.hklaw.com/en

உள்ளூர் நிறுவனங்கள் உட்பட பல வெளிநாட்டு அரசுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட தமது கொள்கை மாற்ற உதவிக்கு இவ்வாறு அணுகுவதுண்டு. 

சிங்கள அரசு கூட இவ்வாறு  முன்னர் இழந்த ஜி.எஸ். பி. வரி சலுகையை மீளப்பெற ஒரு அமைப்பை பணம் கொடுத்து அணுகி இருந்தது. 

ஆக, பணம் இருந்தால் எமது மீது உள்ள தடைகள் மட்டுமல்ல தனி நாடு இல்லாவிட்டாலும் ஒரு சுயாட்சியை கூட இலங்கையில் தமிழர்கள் பெறலாம். தமிழர்களிடம் அதற்கான பணமும், கொடுக்கும் மனமும் உள்ளது என .நம்பலாம். ஆனால், அதற்கான தலைமை தான் இல்லை.  

Link to comment
Share on other sites

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்த இம்ரான்கான்

பாகிஸ்தானில் தற்போதைய பிரதமராக பதவி வகிப்பவர் இம்ரான்கான். இவர் 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் டிரம்பை சந்திக்க இருக்கிறார். பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் தலைவர்கள் ராணுவ விமானத்திலோ அல்லது தனி விமானத்திலோ பயணம் செய்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானோ பயணிகள் விமானமான ‘கத்தார் ஏர்வேசில்’ பயணம் செய்தார். சிக்கன நடவடிக்கையாக, பயணிகள் விமானத்தில் இம்ரான்கான், பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அவரது இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் அமெரிக்க எம்.பி.க்களையும், ‘கார்பரேட்’ தலைவர்களையும், அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்களையும் சந்திக்க இருக்கிறார்.

இந்த பயணத்தில், பிரதமர் இம்ரான்கானுடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, தலைமை ராணுவ தளபதி குவாமர் ஜாவீத் பாஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ. தலைமை இயக்குனர் ஆகியோர் பயணம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பும், இம்ரான்கானும் முதல் முறையாக அமெரிக்காவில் சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பாகிஸ்தானின் இரு ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமருடன் அமெரிக்கா சென்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

http://thinakkural.lk/article/32066

Link to comment
Share on other sites

பின்லேடனைப் பிடிக்க உதவியவரின் விடுதலை: இம்ரானிடம் வலியுறுத்த டிரம்ப் திட்டம்

அல்-காய்தா தலைவர் பின்லேடனின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவிய பாகிஸ்தான் மருத்துவரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு அமெரிக்கா வரும் பிரதமர் இம்ரான் கானிடம் வலியுறுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.pin.jpg

இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசவிருக்கிறார்.

அப்போது, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மருத்துவர் ஷகீல் அஃப்ரிடியை விடுவிக்குமாறு இம்ரானிடம் டிரம்ப் வலியுறுத்துவார்.

அல்-காய்தா தலைவர் பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிய அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ-வுக்கு உதவிய ஷகீல் அஃப்ரிடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அதிபர் டிரம்ப்புக்கும்  அமெரிக்க மக்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாகும்.

நியாயமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஃப்ரிடியை விடுவிப்பதன் மூலம்  தனது பிராந்திய தலைமைப் பண்பை சர்வதேச சமுதாயத்திடம் பாகிஸ்தான் நிரூபிக்க முடியும் என்றார் அவர்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின்லேடன், பாகிஸ்தானின் அபோட்டாபாதில் பதுங்கியிருந்ததை அமெரிக்க சிஐஏ உளவுத் துறை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறிந்தது.

அதனைத் தொடர்ந்து, பின்லேடனின் இருப்பிடத்துக்குள் கடந்த 2011-ஆம் ஆண்டு நுழைந்த அமெரிக்க கடற்படை சிறப்பு அதிரடி வீரர்கள், அவரை சுட்டுக் கொன்றனர்.

பின்லேடனின் பதுங்குமிடத்தை சிஐஏ கண்டறிவதற்கு, மருத்துவர் ஷகீல் அஃப்ரிடி முக்கியமான உதவிகளைச் செய்தார்.

மருத்துவப் பணியாளராக பின்லேடனின் இருப்பிடத்துக்குச் சென்ற அவர், நோய் பரிசோதனை செய்வதாகக் கூறி பின்லேடனின் குழந்தைகளது ரத்த மாதிரிகளை சேகரித்தார். அந்த மாதிரிகளை மரபணு பரிசோதனை செய்த சிஐஏ, பின்லேடன் அங்கு பதுங்கியிருப்பதை உறுதி செய்தது.

இந்த நிலையில், பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பிறகு ஷகீல் அஃப்ரிடிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

பின்லேடனைப் பிடிப்பதற்கு உதவியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக பரவலாகக் கருதப்பட்டாலும், உள்ளூர் பயங்கரவாத அமைப்புக்கு உதவியதாகக் கூறி அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஷகீல் அஃப்ரிடியின் நோயாளி ஒருவர் இறந்தது தொடர்பாக, அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, தாம் ஆட்சிக்கு வந்தால் மருத்துவர் ஷகீல் அஃப்ரிடியை பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிப்பதாக டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்கா வரும் இம்ரான் கானிடம் இதுகுறித்து டிரம்ப் பேசவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

http://thinakkural.lk/article/32087

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.