தமிழ் சிறி

கறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்!

Recommended Posts

Black-july-2-720x450.jpg

கறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்!

உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள். ஈழத்தமிழர்களுக்கு வருடங்கள் வன்முறைகளால், மாதங்கள் படுகொலைகளின் எண்ணிக்கைகளாலும் ஆனவை.

இத்தனை ஆண்டுகால ஈழத்தமிழர்களின் வாழ்வில், தமிழர்கள் கடந்து வந்த பாதையினை மீட்டிப்பார்த்தால், எல்லா மாதங்களுமே, எதோவோர் வன்முறையினாலோ அல்லது வன்முறைகளினாலோ சூழப்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரிகிறது.

இவையெல்லாவற்றையும் இலங்கையின் பெரும்பான்மை அரசு எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றியதோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் இதுபோன்ற துயர வரலாறுகள் அழிக்கப்படுவதற்கான முன்னெடுப்புகளையும் பெரும்பான்மை அரசியலால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பல வன்முறைகள் தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுத்து வடிவிலும் பதிவுகள் வடிவிலும் மட்டுமே காணக்கூடிய அளவில் உருமாற்றம்பெற்றுள்ள நிலையில், இவையெல்லாவற்றையும் தாண்டி தமிழர்களின் மனதில் ஆறாத வடுவாக ஆழப்பதிந்திருக்கின்ற வரலாற்று துயர்களில் ஒன்றாக இருப்பதும், தமிழர்கள் மீது பேரினவாதத்தால் நடத்தப்பட்ட இத்தனை பெரிய இனப்படுகொலையின் மிகப்பெரிய திருப்பு முனையாக இருப்பதுமான ஒன்று ஜூலை கலவரம்.

1983ம் ஆண்டு இலங்கை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலம். இலங்கை பேரினவாதம் சிறுபான்மையினத்தவர்களின் மீது படிப்படியாக தனது அடாவடித்தனங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தாலும் அனைத்துமே வெளி உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருந்த காலப்பகுதி. 1981ல் உலக தமிழர்களின் மிகப்பெரிய கலாசார சின்னம், யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட தழல்கள் முற்றாக அணைந்துவிடாத காலப்பகுதி.

விடுதலைக்கான ஒரே வழி ஆயுதம் ஏந்துவதுதான் என பேரினவாதத்தால் கற்பிக்கப்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்களில் ஒன்றான தமிழீழ விடுதலை புலிகள், படிப்படியாக வளர்ந்து கனிசமாக பலம் பெற்றிருந்த காலப்பகுதி.

அந்த ஆண்டின் ஜூலை மாதம் 23ம் திகதி வளர்ச்சிக்கட்டத்தை அடைந்துகொண்டிருந்த விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் அவர்களது தரப்பில் இருந்த மிக முக்கியமான படைத்தளபதிகளில் லெப்டினன்ட் சீலன், ஆனந்த் ஆகியோர் இறந்த 8வது நாள். இவர்களின் இறப்புக்கான பதிலடியினை வழங்க வேண்டிய கடப்பாடு விடுதலைப் புலிகளுக்கு.

அதேநேரம் இலங்கை இராணுவத்தினை பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளுக்கெதிரான மிக முக்கிய இராணுவ நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டு குறித்த நடவடிக்கையில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட, விடுதலைப் புலிகளுக்கு எதிரான, அந்த நடவடிக்கை குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பலாலியில் இருந்து நகரும் இலங்கை இராணுவத்தினரின் ஒரு குழுவினருக்கு FOUR FOUR BRAVO  என பெயரிடப்படுத்திருந்தது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் பலாலி குழுவினர் திருநெல்வேலி பகுதியால் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தபாற்பெட்டி சந்தியில் வைத்து விடுதலைப் புலிகளினால் நிலக்கண்ணிவெடி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

மேலும் அப்பகுதியில் பரஸ்பரம் இரு பகுதியினருக்கு இடையில் நடந்த ஆயுத தாக்குதலில், ஏறக்குறைய 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்ததுடன், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரில் மேலும் இருவர் இறப்பினைத் தழுவ உயிரிழப்பின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது.

இந்த தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கனிமப்பொருட்களால் தயாரிக்கப்பட்டவை என்பது உபரித்தகவல்.

இந்நிலையில் இந்த தாக்குதலை, ஆரம்ப புள்ளியாக வைத்துக்கொண்டு ஒரு மிகப்பெரிய இன வன்முறையினை கட்டவிழ்க்க திட்டம் தீட்டியது பெரும்பான்மை. அதற்கு வழிகோலுவது போல யாழில் பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டதாக வெளிவந்த வதந்தி மற்றும் கொல்லப்பட்ட இராணுவத்தினரை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட சர்ச்சை என்பன அமைந்துவிட தமிழர்களின் வாழ்க்கையினை நிலைகுலைய செய்தன அந்த நாட்கள்.

காலனித்துவத்திற்கு இலங்கை உட்பட்டிருந்த காலப்பகுதியில் இருந்தே தமிழர்கள் கல்வியிலும் வியாபார ரீதியாகவும் தம்மை வளர்த்துக்கொண்டதன் காரணமாக, தலைநகரின் பல பகுதிகளில், தமிழர்களும் தமிழர்களின் வியாபார தளங்களும் பரவலாக காணப்பட்டன.

இலங்கை, பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே என கோஷமிடும் பெரும்பான்மை இனத்தவர்களால் இம்முறை அதிகமாக கவனம் செலுத்தப்பட்டது, கொழும்பில் இருந்த தமிழர்கள், அவர்களது உடைமைகள் மற்றும் தமிழர்களின் வியாபார தளங்கள் என்பனவே ஆகும்.

அந்த அடிப்படையில் ஏறக்குறைய ஒரு வாரம் நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவங்களில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொழும்பிலும் இலங்கையின் பெரும்பான்மையான பகுதிகளிலும் வைத்து கொல்லப்பட்டனர்.

குறித்த ஜூலை கலவரம் முறையாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்ற குற்றச்சாட்டுக் குரல் மனித உரிமைகளின் மேல் நம்பிக்கையுள்ள மற்றும் மனிதாபிமானம் வாய்ந்த மனிதர்களிடம் இருந்து இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அந்த அளவுக்கு மிக கச்சிதமான முறையில் அரங்கேற்றப்பட்ட ஜூலை கலவரத்தில் கொல்லப்பட்ட உயிர்கள் தொடர்பாகவோ, அதனை முன்னின்று நடத்தியவர்கள் தொடர்பாகவோ, இன்று வரை பெரும்பான்மை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எந்தவிதமான விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லையென்பது இந்த விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கான ஓர் அளவீடு என்றால், குறித்த கலவரங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் அதற்கு எதிராக கண்டனம் வெளியிட்டு இந்த கலவரத்தை நிறுத்துமாறு கோரிக்கை முன்வைத்த சர்வதேச நாடுகளிடம், எமது நாட்டு பிரச்சினைகளை நாம் பார்த்துக்கொள்வோம் என அக்காலப்பகுதியில், இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்தமை அதற்கான இன்னொரு சான்று.

கொழும்பு போன்ற இலங்கையின் பிரதானமான பகுதிகளில் இவ்வாறான அட்டூழியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றால், இலங்கையில் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளில் ஏற்கனவே பல இன்னல்களை எதிர்நோக்கி வந்த தமிழ் கைதிகளுக்கு, மேலும் மேலும் அச்சுறுத்தலாய் அமைந்தன இந்த வன்முறைகள்.

அந்த அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் கதவுகள் பேரினவாத கரங்களினால் உடைக்கப்பட்டன. ஜூலை 23ஆம் திகதி யாழில் இடம்பெற்ற தாக்குதலை காரணமாகக்கொண்டு இடம்பெற்ற ஜூலை கலவரத்தின் கொடூர கரங்கள் அதே மாதம் 25ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலை வரை நீண்டதில் அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளில், 35 பேர் கோர தாக்குதல்களுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர். மேலும் அன்று குடித்த குருதி போதாமல் 28ம் திகதி மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலையில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களில், 18 பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர்.

தமிழின மீட்பு போராட்ட வராலற்றில் மிக முக்கியமான போராளிகளாக கருதப்பட்ட ஜெகன், தங்கதுரை, குட்டிமணி ஆகியோரின் உயிர்களும் காவுகொள்ளப்பட்டன.

அதனை தாண்டிய கொடூரமாக ‘நான் இறந்த பின்னர் எனது கண்களை இரண்டு தமிழர்களுக்கு பொருத்திவிடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை என் கண்கள் காணட்டும்’ என குட்டிமணி தனது மனதின் வேட்கையினை வெளிப்படுத்திய ஒரே காரணத்துக்காக அவரது கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு பேரினவாதத்தின் கால்களால் நசுக்கப்பட்டன.

ஆனால் தமிழினத்தின் வலிமை, பேரினவாதத்தின் கற்பனையை விடவும், சர்வதேசத்தின் கற்பனையை விடவும் மேலானது என்பதை காலம் உலகிற்கு கற்பித்தது.

இத்தனை கொடூரங்களைத்தாண்டி, கால வரிசையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட எண்ணிலடங்கா கொடூரங்களைத் தாண்டி, தமிழினம் நிமிர்ந்தது, உலகின் கடைக்கோடி எல்லை வரை வியாபித்தது.

எத்தனை பேரினவாதத்தாலும் எத்தனை அடக்குமுறைகளாலும் அவ்வளவு எளிதாக அணைத்துவிட முடியாத வலிமை தமிழுக்கும் தமிழர்களுக்குமானது.

http://athavannews.com/கறுப்பு-ஜுலை-ஈழத்தமிழர்/

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

கறுப்பு ஜூலை - 1983-இல் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் நடந்தது என்ன?

ரஞ்சன் அருண் பிரசாத்இலங்கையிலிருந்து பிபிசி தமிழுக்காக
தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை நடந்தேறி 36 வருடங்கள் பூர்த்தி.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்த கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறைகளை நோக்கலாம்.

கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், சொத்துக்கள் என அனைத்தையும் அழிக்கும் செயற்படாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களை தேடி தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை நடந்தேறி 36 வருடங்கள் பூர்த்தி.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.

கறுப்பு ஜுலை ஏற்படுவதற்கான காரணம்?

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஜுலை 23ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவ சிப்பாய்கள் உயிரிழந்திருந்ததாக கூறப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் தென் பகுதியிலுள்ள சிங்கள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தது.

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை நடந்தேறி 36 வருடங்கள் பூர்த்தி.

கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முற்றுகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவத்தினர் முதலில் உயிரிழந்திருந்தனர், அதன்பின்னர் காயமடைந்த இரண்டு ராணுவத்தினர் உயிரிழந்ததை அடுத்து, எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் மறுநாள் வெளியாகிய நிலையில், தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த ராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு - பொரள்ளை மயாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகைத் தந்திருந்தனர்.

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை நடந்தேறி 36 வருடங்கள் பூர்த்தி.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வருகைத் தந்துள்ளதாக பொய் கருத்துக்கள் வெளியாகிய நிலையில், சிறியளவில் ஏற்பட்ட வன்முறை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டி கொலைசெய்யப்பட்டதாகவும், பலர் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை நடந்தேறி 36 வருடங்கள் பூர்த்தி.

இலங்கையில் தமது சொத்துக்களை, சொந்தங்களை இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் இன அழிப்புக்கு இந்த வன்முறை முதல் முதலில் வித்திட்டதாக இன்றும் தமிழர்கள் கூறி வருகின்றனர்.

பஸ்களில் வருகைத் தந்த பலர், தமது ஊரை தீக்கிரையாக்கியதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரத்தினபுரியை சேர்ந்த பெண்ணான எஸ்.கமலாஷினி தெரிவிக்கின்றார்.

'நிறைய பஸ்கள்ள நிறைய பேர் வந்தாங்க. கத்தி, அரிவாள் ஆயுதங்கள எடுத்துகிட்டு வந்து, ஊரையே சேதப்படுத்தினாங்க. நெருப்பு வச்சாங்க. எங்கட வீட்ட உடைக்க அவங்க வந்த போது, பக்கத்து வீட்டுல இருந்த சிங்கள மக்களே எங்களையும் காப்பாத்தினாங்க. நிறைய பேர் காடுகளுக்குள்ள ஓடி ஒளிஞ்சிகிட்டாங்க" என எஸ்.கமலாஷினி தெரிவித்தார்.

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை நடந்தேறி 36 வருடங்கள் பூர்த்தி.

கறுப்பு ஜுலை என்பது தமிழர்களுக்கு மாத்திரமன்றி, சிங்களவர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

'கறுப்பு ஜுலை என்பது தமிழர்களுக்கு மாத்திரமன்றி, சிங்களவர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்திய ஒரு சம்பவம். கறுப்பு ஜுலை சம்பவத்தினால் சிங்கள மக்களை சர்வதேச சமூகம் தவறாக கோணத்தில் பார்த்தது. இது சிங்கள மக்களுக்கும் கறுப்பு ஜுலை. அதுக்கு பிறகே 30 வருட கால யுத்தம் வந்தது. யுத்த காலப் பகுதியில் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு போனார்கள். அவர்களின் சொத்துக்கள் இல்லாது போனது. இரண்டு பக்கமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். கறுப்பு ஜுலையின் ஆரம்பமே அது. அன்று அதை அரசியல் ரீதியில் நிறுத்தியிருந்தால், இன்று இலங்கைக்கு இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது" என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49098048

Share this post


Link to post
Share on other sites

சுதந்திரக் கட்சி ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், ஸ்ரீ லங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம்,  இலங்கையில் முதல் தடவையாக கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வு, எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு, இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று, 36 வருடங்கள் கடந்துவிட்டதை நினைவுக்கூர்ந்தும், கலவரத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/சுதந்திரக்-கட்சி-ஏற்பாட்டில்-கறுப்பு-ஜூலை-நினைவேந்தல்/175-235812

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.