Jump to content

கறுப்பு ஜூலைகளுக்கு முகம்கொடுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலைகளுக்கு முகம்கொடுத்தல்

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 24 புதன்கிழமை, மு.ப. 06:49 Comments - 0

image_9c14f430f5.jpgதென் இலங்கை திட்டமிட்டு அரங்கேற்றிய ‘கறுப்பு ஜூலை’ வெறியாட்டத்தை, தமிழ் மக்கள் எதிர்கொண்டு 36 ஆண்டுகளாகின்றன. 

அன்றைய ஜே.ஆர் அரசாங்கத்தின் குண்டர்கள், தமிழ் மக்களை வீடு வீடாகத் தேடி வேட்டையாடினார்கள்; அம்மணமாக்கித் தீயில் எறிந்தார்கள்; இறந்த உடல்களின் மீதேறி நின்று, வெற்றிக் கோஷமெழுப்பினார்கள்; அந்தக் கோர ஒலியின் அதிர்வு, இன்னமும் குறைந்துவிடவில்லை.

இந்த நாட்டில், தமிழ் மக்கள் கொண்டிருக்கிற பாரம்பரிய உரிமையையும் அதுசார் இறைமையையும் சூழ்சிகளாலும் காடைத்தனத்தாலும்  வெற்றிகொண்டுவிட முடியும் என்று, தென் இலங்கை தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது. 

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், இன வன்முறைகள் அதிகமான தடவைகளில், அரசாங்கத்தின் திட்டமிடலில் அல்லது, ஒத்துழைப்புடனேயே அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றின் பின்னால், பேரினவாத மனநிலை அல்லது தேர்தல்களை இலக்கு வைத்த இனவாத உணர்வூட்டல்கள் இருந்திருக்கின்றன. 

ஒரு நாட்டின் தலைவரான, (அதுவும் ஜனநாயக ரீதியாகத் தேர்தெடுக்கப்பட்ட தலைவரான) ஜே.ஆர்., “தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவதை, தென் இலங்கை விரும்புகின்றது. தென் இலங்கையை மகிழ்விக்கும் கடமை, எனக்கு இருக்கிறது.”  எனும் தொனியில், கறுப்பு ஜூலைக்கு முன்னராக, வெளிநாட்டு ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். இதற்கான தைரியத்தை அவர், எந்த அரசியல் அணுகுமுறையில் இருந்து பெறுகிறார் என்பதைப் புரிந்து கொண்டாலே,  இந்த நாட்டில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளை, இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

இலங்கையின் ஏக உரிமையும் அதிகாரமும் பௌத்த சிங்களம் சார்ந்தது என்கிற உணர்நிலை, தென் இலங்கையிடம் உண்டு. அது, ஒருவகை அச்சத்தாலும் எழுவது; அது, ஏனைய சமூகங்கள் குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தி, அச்ச மனநிலையைத் தக்க வைத்துக் கொள்கிறது. அதைக் கடப்பதற்காகப் பேரினவாத சிந்தனையை, ஒரு வாழ்வியலாகத் தென் இலங்கை போதிக்கின்றது. 

மனிதர்களுக்குள் புதைந்துகிடக்கின்ற அச்சத்தைப் போக்குவதும், அமைதி வழியைப் போதிப்பதும் மதங்களினதும் மார்க்கங்களினதும் வழி என்கிற உணர்நிலையொன்று பொதுவாக உண்டு. ஆனால், அச்சத்தையும் குரோதத்தையும் அதிகமாக்கி, வன்முறைகளை வளர்க்கும் இடங்களாக, வழிபாட்டிடங்கள் மாறி, பல நூற்றாண்டுகளாகின்றன. 

உலகின் பெரும் அழிவுகள், மதத்தின், மார்க்கத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அப்படியான ஒரு தோரணையை, தென் இலங்கையும் தன்னகத்தே கொண்டு நடக்கிறது. 

புத்தர், சாந்தியையும் சமாதானத்தையும் போதித்தார். ஆனால், அவரின் தர்ம போதனைகளைக் கடந்து நின்று, பேரினவாத சிந்தனைகளின் ஊற்றாகவும் மற்றவர்களின் மீதான அச்சத்தையும் அதிகமாக வளர்த்தெடுக்கும் கட்டங்களில் விகாரைகளின் பங்கு இன்றைக்கு முக்கியமானது. அதை, அதிகாரத்தின் அடுக்கின் வழி, நிலைபெறுவதற்காகவும் முன்வைத்து நடக்கிறார்கள் என்பதுதான், இன்னும் மோசமானது.

சக மனிதனின் உரிமைகளைப் புறந்தள்ளிக் கொண்டு, ஜனநாயகம் பற்றியும் மனித ஒழுக்கம் பற்றியும் உரையாட முடியாது. அப்படியான நிலையில், பௌத்தத்துக்கு முதலிடம் என்கிற அரசமைப்பைக் கொண்டிருக்கிற ஒரு நாட்டின் பிரஜைகள் அனைவரும், சமமானவர்கள் என்கிற உணர்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பேச்சுகள் எவ்வளவு போலியானவை.

புத்தரையோ, அவரின் போதனைகளின் வழியான பௌத்த மார்க்கத்தையோ தமிழ் மக்கள் என்றைக்கும் விரோதமாகப் பார்த்ததில்லை. அப்படியான நிலையில், அந்த மக்களை நோக்கி, பௌத்த அடையாளங்களோடு பேரினவாத சிந்தனைகளை முன்நகர்த்திக் கொண்டு வரும் போது, அதை எதிர்கொள்ள வேண்டிய கடப்பாடு, தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்றது.

இலங்கை உருவாகிய காலம் முதல், தமிழ் மக்களுக்கான வரலாறு இருக்கின்றது. புனைவுக் கதைகளுக்கு அப்பாலான அடையாளங்களைக் கொண்டிருக்கின்ற தரப்பாகத் தமிழ் மக்கள் நிலைபெறுகிறார்கள். 

அப்படியான கட்டத்தில், பேரினவாதத்தால் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை; அல்லது, நாட்டின் ஏக வாரிசு உரிமைக் கோரல்கள், தமிழ் மக்கள் நிலைபெறும் வரையில், சாத்தியப்படாது என்கிற அச்சம், தென் இலங்கையிடம் உண்டு. அதன்போக்கில், புதிய புதிய வடிவங்களில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். 

பௌத்தத்தையும் அதன் நற்சிந்தனைகளையும் வாழ்வில் ஒரு பகுதியாகக் கொண்டு சுமந்த வரலாறு தமிழ் மக்களுக்கு உண்டு. அப்படியான மக்களை நோக்கி, புத்தரை (சிலைகளை) ஆக்கிரமிப்பின் குறியீடுகளாக முன்னிறுத்தியது தென் இலங்கையே ஆகும்.

தமிழர் மரபுரிமைச் சின்னங்களாக அடையாளப்படுத்தப்படும் இடங்களை நோக்கி, புத்தர் சிலைகளைத் தூக்கிக் கொண்டு ஓடிவருகிறார்கள்; புதிய வரலாறுகளை, புனைவுகளை எழுதிக் கொண்டு, தமிழர் வரலாற்று அடையாளங்கள் மீது, காவி பூசுகிறார்கள்; இன்றைக்கு, நீராவியடியிலும் கன்னியாவிலும் திடீரென முளைத்த புத்தர் சிலைகள், அப்படியான வங்குரோத்துச் சிந்தனைகளின் வழி வருவதுதான்.

தமிழ் மக்களின் உயிர்களைப் பலிவாங்குவதும், அவர்களின் சொத்துகளைச் சூறையாடுவதும்தான் கறுப்பு ஜூலைகள் அல்ல; தமிழ் மக்களின் இருப்புக்கான அனைத்து வழிகளையும் அடையாளங்களையும் அழிப்பதும் கறுப்பு ஜூலைகளே. இதைத் தென் இலங்கை ஒருநாளும் கைவிட்டதில்லை. 

ஒரு கட்டம் வரையில் நேராக நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டு, முதுகில் குத்திக் கொண்டு, தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாறான கட்டத்தில், அதை எதிர்கொள்ளவதற்கான கடப்பாட்டை, எவ்வாறு  கட்டமைப்பது என்கிற கேள்வி தமிழ் மக்களை நோக்கி  எழுகிறது.

அஹிம்சை வழிப் போராட்டங்களையும் ஆயுத வழிப் போராட்டங்களையும் முன்னெடுத்த தரப்பாகவும் உலக ஒழுங்கை ஓரளவுக்குப் புரிந்து கொண்ட தரப்பாகவும் தமிழ் மக்கள் அரசியல் உரிமைப் போராட்டங்களுக்குப் புதிய வடிவத்தைக் கொடுக்க வேண்டும். 

அது, கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை எடுத்துக் கொண்டு மாத்திரமல்ல, எதிர்காலத்துக்கான சரியான திட்டமிடல்கள் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். 

அரசியல் மேடைகளிலும், ஊடக வெளியிலும் கொள்கை - கோட்பாடு என்கிற கவர்ச்சி உரையாடல்களை முன்னெடுத்தாலும், அதனைச் சரியான வடிவங்களில் முன்நகர்த்துவது சார்ந்த, எந்த அடைவுகளும் கடந்த பத்து ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. 

தமிழ்த் தேசியம் சார் அரசியல் என்பது, தன்னுடைய அடிப்படைகளில் இருந்து விலகிவிடவில்லை என்பது இன்றைக்கும் மெச்சக்கூடிய ஒன்றே. 

ஆனால், அது காலத்துக்கு ஏற்ப, தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, அரசியல் இயங்கு நிலைக்குச் செல்லவில்லை என்பது விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டியது.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, மக்களின் திரட்சி வழி நிலைபெற்ற ஒன்று. அப்படியான நிலையில், இன்றைக்கு மக்கள் திரட்சி அல்லது அதன் போராட்ட வடிவங்கள் சில மணிநேரங்களுக்குள் அல்லது நாள்களுக்குள் வலுவிழப்பதற்கான காரணங்களைத் தேடி அறிந்து கொள்ள வேண்டும். 

நீராவியடிப் பிள்ளையாருக்குப் பொங்கல் வைக்கவும் கன்னியாவில் தேவாரங்களின் வழி, பக்திப் போராட்டத்தை நடத்தவும் மக்கள் திரள்கிறார்கள். 

ஆனால், அந்தத் திரட்சிக்குப் பின்னரான காட்சிகள் என்பது, யாரை நோக்கியதாக இருக்க வேண்டுமோ, அதனை மறந்துவிட்டுத் தங்களுக்குள்ளேயே முரண்படுவதற்கான களங்களாக, தமிழர் தரப்பால் மாற்றப்படுகின்றதோ என்கிற சந்தேகம் ஏற்படுகின்றது. இவ்வாறான நிலை, தமிழ் மக்களின் மனோதிடத்தைக் குலைக்கும்.

தமிழ்த் தேசிய அரசியலில், தேர்தல் கூட்டுகளுக்காக அடித்துக் கொள்ளும் நிலையொன்று, தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. அது, தொடர்பில் ஒரு கட்டம் வரையில் அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை. 

ஆனால், அந்தநிலை, தமிழ்த் தேசியப் போராட்டங்களின் அடிப்படைகளை ஆட்டம் காண வைக்கும் போதுதான், அது குறித்து அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டி ஏற்படுகின்றது. 

மக்கள் திரட்சி என்பது, அரசியல் உரிமைப் போராட்டங்களின் சார்பிலான ஒன்றாக இருக்க வேண்டும். அதனை, தேர்தல் கூட்டுகளின் சார்பிலான ஒன்றாக மாற்ற முடியாது. 

அப்படி யாராவது மாற்ற முயலும் போது, மக்கள் போராட்டங்கள் கலகலத்துப் போகும். அப்படியான நிலை, தென் இலங்கை கறுப்பு ஜூலைகளைத்  தமிழ் மக்களை நோக்கித் தொடர்ச்சியாக முன்னிறுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்கும்.

கன்னியா பிள்ளையாருக்கான பக்திப் போராட்டத்தை வழிநடத்தியவர்களில் ஒருவரான தென் கயிலை ஆதினத்தின் மீது, எச்சில் தேநீரை வீசிய குண்டரின் செயல் கறுப்பு ஜூலைகளின் ஒரு வடிவமே. 

அதுபோல, நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் கட்டப்பட்டிருந்த நந்திக் கொடிகளை அறுத்தெறிந்த பிக்குவின் செயலும் கறுப்பு ஜூலைகளில் தொடர்ச்சியே. 

அப்படியான நிலையில், கறுப்பு ஜூலைகளை எதிர்கொண்டு, கடக்கும் கட்டங்களைத் தமிழர் அரசியல் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதான், தமிழர் இருப்பையும் இறைமையையும் இந்த நாட்டில் காப்பாற்ற உதவும்.

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கறுப்பு-ஜூலைகளுக்கு-முகம்கொடுத்தல்/91-235783

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.