Jump to content

யார் இந்த அமித்ஷா?


Recommended Posts

நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர்.  

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஆவார் அமித்ஷா. இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். 

அமித் சா 1964 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு தொழில் அதிபர் ஆவார். பயோவேதியியலில் இளையர் பட்டம் பெற்றார். சிலகாலம் பங்குச் சந்தைத் தொழிலில் ஈடுபட்டார். குசராத்து மாநில நிதிக் குழுமத்தில் தலைவராகவும் ஆமதாபாது மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி செய்தார்.

 

2014 இந்திய பொதுத் தேர்தல்
ஜூன் 2013 இல் உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அமர்த்தப்பட்டார். ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். 2014 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையும் காரணங்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதால் அமித் ஷா அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2019 இந்திய பொதுத் தேர்தல்

மொத்தமாக தேர்தல்கள் நடந்த 542 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 303 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையைப் பிடித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

பா.ஜ. கட்சியின் 'பாசிச' கொள்கை ? இல்லை இந்தியாவை ஒரு நாடு, ஒரு மொழி ஆக்கும் திட்டம்? 

இந்த மிகப்பெரிய பெரும்பான்மை வெற்றிக்கும் அமித் சா தான் முக்கிய காரணம் என பரவலாக நம்பப்படுகின்றது. அமித் சா தலைமையில் இந்த பா.ஜ. கட்சி இந்திய நாடு முழுவதிலும் தமது கட்சியின் இருப்பை உறுதிசெய்ய விரும்புகின்றனர். இதற்காக பல திட்டங்களை வெற்றிகரமாக அமுல் படுத்தி வருகின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களில் தமது கொள்கைகளை முன்னெடுக்க தடையாக இருக்கும் பிராந்திய கட்சிகளை 'விலைகள்' கொடுத்து நடந்து வருகின்றது.  

 

அவ்வாறான ஒரு திட்டத்தை, 'ஓப்ரெஷன் லோட்டாஸ்' என பெயர் இட்டு நடாத்தி வருகின்றது.  

 

மூலம் : இணையத்தள தொகுப்பு ; விக்கிபீடியா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோ.. கெட்டதோ.... தமிழ் நாட்டில், தாமரை மலர்ந்தே.. தீரும்.
காரணம்....  தமிழ் நாட்டு திராவிட அரசியல் வாதிகள் எல்லாம்,
பல கோடி அளவில்...  திருட்டு தொழிலை செய்து, 
பணத்தை.... புதைத்து, வைத்திருக்கின்றார்கள்.

இவர்களுக்கு.... ஒரு, கிடுக்குப் பிடி போட...
அடுத்து வர இருக்கும்,  தி.மு.க. ஆட்சியும்.... 
பா.ஜா.க. வின் ஆட்சிக்கு, துணை போவார்கள். 

அத்தி வரதரை... கும்பிடப் போன,
துர்கா  ஸ்ரானிலிருந்து.... காங்கிரசுக்கு, காய் வெட்டி....
தமது,  தொழிலை... விரிவு படுத்த,  கருணாநிதி குடும்பம் தயாராகவே  உள்ளது. 

இவர்களால்... முரண்டு பிடிக்கவே முடியாது.  
அந்தளவுக்கு... இவர்களின்  குடும்ப நடமாட்டத்தை, 
அமித் ஷா.... விரல்  நுனியில், வைத்து இருக்கின்றார். அசைய முடியாது.

தமிழ் நாட்டு, கூவத்து  நதியிலாவது.... "தாமரை... மலரும்"   

Link to comment
Share on other sites

ஆர். எஸ் எஸ் - பா ஜ கட்சி தொடர்பு 
இந்திய விடுதலை 
காந்தி கொலை 
சீன - இந்திய யுத்தம் 

 

Link to comment
Share on other sites

ஒற்றைத் தலைமை: காய் நகர்த்தும் எடப்பாடி, பன்னீர் 'மூவ்',

பி.ஜே.பி ஆப்ரேஷன்!

மோடிக்கு தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், அ.தி.மு.க-வுக்கு வேலைபார்க்க கமிட் ஆகியிருக்கிறார். இப்போது அவர் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். அது பன்னீருக்குத்தான் அம்பாக வந்து நிற்கும் என்று தெரிகிறது.

கடந்த ஜூலை 26 அன்றுதானே கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கலந்துகொண்டார். அன்று இரவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, 'ஆட்சியைத் தக்கவைக்க, முதலில் உங்கள் கட்சியைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். ஒற்றைத் தலைமை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது' என்று சொல்லியிருக்கிறார்.

இதற்குத்தானே காத்திருந்தார் எடப்பாடி. இப்போது கிஷோரே சொல்லிவிட்டதால், காய் நகர்த்த தொடங்கிவிட்டார். அதற்கான வேலைகளை 'மணி அண்ட் கோ'வினர் செய்துவருகிறார்கள்.

 

பன்னீரின் மூவ் என்ன?

கட்சியில் பதவிகள் மாற்றம் தொடர்பாக எடப்பாடி தரப்பிலிருந்து அனுப்பிய பல கோப்புகளை கிடப்பில் போட்டிருக்கிறது பன்னீர் தரப்பு. இது, எடப்பாடியைக் கடுப்பாக்கியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. அதில் கட்சியின் ஒற்றைத் தலைமை யார் என்பதை முடிவுசெய்யும் வாக்கெடுப்பை நடத்த எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருக்கிறது. இதை அறிந்து பன்னீர் தரப்பும் தனக்கு ஆதரவான ஆள்களைத் திரட்டிவருகிறது.

 

சசிகலா தரப்பு என்ன நினைக்கிறது?

சசிகலாவுடன் எடப்பாடி தரப்பு தொடர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அவர் சிறையிலிருந்து விரைவில் வெளியே வருவதற்கான காய் நகர்த்தல்கள் தமிழக அரசு தரப்பிலிருந்தே தொடங்கப்படும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. பன்னீரை ஓரம்கட்டவே சசிகலாவை எடப்பாடி தரப்பு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் சொல்கிறார்கள்.

என்னதான் எடப்பாடி தரப்பு பி.ஜே.பி-யிடம் இணக்கமாக இருந்தாலும் பன்னீர் தரப்புமீது பி.ஜே.பி தலைமைக்குத் தனிப்பாசம் இருக்கத்தான் செய்கிறது. அ.தி.மு.க-வில் அவரின் கை இறங்கினால், பி.ஜே.பி தலைவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார்களாம். ஒருவேளை அ.தி.மு.க-வில் அவர் நிலைமை மோசமானால் ராஜ்ய சபா எம்.பி-க்கள் சிலருடன் சேர்த்து, அவரை தங்கள் பக்கம் இழுக்கவும் பி.ஜே.பி கட்சித் தலைமை நினைக்கிறதாம். அப்படி ஒரு நிலைமை வந்தால் அவருடைய மகனுக்கு மந்திரிப் பதவி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பன்னீர் இதற்கு இணங்குவாரா என்றுதான் தெரியவில்லை.

தற்போது, அ.தி.மு.க-வின் இமேஜை அடித்து நொறுக்கும் வகையில் பி.ஜே.பி சில திட்டங்களை வைத்திருக்கிறது. அ.தி.மு.க ஊழல்களையும், அமைச்சர்களின் சொத்துக்குவிப்புகளையும் பி.ஜே.பி அரசு கண்டு கொள்ளவில்லை என்ற பரப்புரையை எதிர்க்கட்சியினர் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றனர். இது மக்களிடமும் எடுபடுகிறது. இதைப்பற்றி அமித் ஷாவுக்கு ஐ.பி ரிப்போர்ட் போயிருக்கிறது. அதை சரிசெய்யத்தான் அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர்மீது கை வைக்க பி.ஜே.பி திட்டமிட்டிருக்கிறது. அதில் முதல் குறி விஜயபாஸ்கர் என்கின்றன டெல்லியிலிருந்து வரும் தகவல்கள்.

https://www.vikatan.com/government-and-politics/single-leaderedappadi-panneer-move-bjpoperation

Link to comment
Share on other sites

''காஷ்மீர் தீவிரவாதத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதுதான் காரணம்'' : அமித் ஷா

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதுதான் அங்கு தீவிரவாதத்திற்கு முக்கிய காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமாக பிரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதேபோன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்பு சாசன சட்டம் 370 நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் காணப்படும் நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்து பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது-

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கியிருப்பதற்கு காரணம் அங்கு சிறப்பு அந்தஸ்து இருப்பதுதான். இப்போது தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நேரம் வந்து விட்டது. சிறப்பு அந்தஸ்தை நீக்காவிட்டால் காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்கவே முடியாது. 

அரசியல் சாசன பிரிவு 370-யை நீக்குவதன் மூலம் ஜம்மு காஷ்மீர் - இந்தியா இடையிலான பிணைப்பை உறுதிபடுத்தியுள்ளோம். வாக்கு வங்கி அரசியலை வெற்றி கொண்டு சட்டம் 370-யை நீக்க ஒரு வலிமையான அரசியல் தலைவர் வேண்டும். அந்த நபராக மோடி இருப்பார்.

எங்களிடம் 5 ஆண்டுகளுக்கு ஜம்மு காஷ்மீரை கொடுத்துப் பாருங்கள். நாட்டிலேயே மிக உயர்ந்த மாநிலமாக ஜம்மு காஷ்மீரை மாற்றிக் காட்டுகிறோம்.
இவ்வாறு அமித் ஷா பேசினார். விவாதத்தின்போது, ஜனநாயகத்தை மத்திய பாஜக அரசு படுகொலை செய்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

https://www.ndtv.com/tamil/constitution-article-370-the-root-of-terrorism-in-kashmir-says-amit-shah-in-rajya-sabha-2080692?pfrom=home-topscroll

Link to comment
Share on other sites

அமித்ஷா -முதல்வர் எடப்பாடி திடீர் சந்திப்பு: அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

பாஜ தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்னையில், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ‘“கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற தனது புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் உட்பட பலர் வரவேற்றனர்.இதையடுத்து, கிண்டி ஆளுநர் மாளிகைக்கு அமித்ஷா புறப்பட்டு சென்றார். அங்கு இரவு தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகையில் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகிறது. இருப்பினும், இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழ்நிலைகள், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் அவர்கள் இரண்டு பேரும் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அமித்ஷா, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக தோல்விக்கான காரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தற்போது அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி பிரச்னைகள் குறித்தும் இரண்டு பேரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக நிலவும் குழப்பமான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் அவர் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதை அமித்ஷா உன்னிப்பாக கேட்டு கொண்டார். மேலும், கட்சியில் மீண்டும் பிளவு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அமித் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜ தலைவர்களுடன் ஆலோசனை
சென்னை கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த அமித்ஷாவை தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம், தமிழக பாஜ பொறுப்பாளர் முரளிதர்ராவ் உள்ளிட்ட பாஜ தலைவர்கள் நேற்று காலை சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடம் தமிழக அரசியல் நிலவரம், பாஜ உறுப்பினர் சேர்க்கை, கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். மேலும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்று பாஜவின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும். வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜவின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும் என்றும் அமித்ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக பாஜ தலைவர்களுடன் சேர்ந்து அமித்ஷா காலை உணவை உண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517434

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

` இது 10 ஆண்டுகால பகை!' - சிதம்பரத்தை ஏன் குறிவைக்கிறார் அமித் ஷா?

17 மணிநேரத்தில் நான்கு முறை டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ அதிகாரிகள் படையெடுத்துவிட்டார்கள். சி.பி.ஐ பிடியிலிருந்து ப.சிதம்பரம் தப்பியது மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோபத்தைக் காட்டுவதன் பின்னணியில் பத்தாண்டுகாலப் பகை இருப்பதாகச் சொல்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

`` ப.சிதம்பரத்தின்மீது மத்திய அரசு வன்மத்துடன் செயல்படுகிறது. இதன் பின்னால் உள்ள வரலாறுதான், எங்களைக் கவலையடையச் செய்கிறது” என்கிறார்கள், சிதம்பரத்துக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.
2010-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, குஜராத் உள்துறை அமைச்சராக அமித் ஷாவும் இருந்தார். அந்தச் சமயத்தில், குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷாவைக் குற்றவாளி என்று கூறியது சி.பி.ஐ. அமித் ஷாவைக் கைதுசெய்யும் நிலை வந்தபோது அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த வழக்கில் சில நாள்கள் தலைமறைவாக இருந்த அவர், 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதற்குப் பின்னால் ப.சிதம்பரத்தின் அழுத்தமிருந்ததாக அப்போது அமித் ஷா தரப்பினர் கருதினர்.

தற்போது மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா இருக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டில்தான் சி.பி.ஐ. நிர்வாகம் உள்ளது. `ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால், உடனடியாக அவரைக் கைதுசெய்ய வேண்டும். மேல்முறையீடு செல்லும்வரை காத்திருக்க வேண்டாம்' என்று நேற்று காலையே சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டிருந்ததாகத் தகவல் வெளியானது.


ஆனால், நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும் அங்கிருந்து வெளியேறிய சிதம்பரம், நேராக அவருடைய டெல்லி இல்லத்துக்குச் சென்றார். அதற்குள் அவரை விசாரணைக்கு அழைக்கும் சம்மனைத் தயார்செய்யும் வேலையில் சி.பி.ஐ அதிகாரிகள் இறங்கினர். முறைப்படி சம்மனை அவருக்குக் கொடுத்து சி.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்துக் கைதுசெய்யும் முடிவில் அதிகாரிகள் இருந்துள்ளனர். ஆனால், வீட்டுக்கு வந்த ப.சிதம்பரம் உடனடியாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபில் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படியே, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார், சிதம்பரம். அவருடைய போனும் அதோடு ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மேலிடத்தில் நீண்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. `சிதம்பரம் கைதுசெய்யப்பட்டால் அது கட்சிக்கு மிகப்பெரிய கெட்டபெயரை ஏற்படுத்திவிடும்' என்று சோனியா கருதியுள்ளார். ஜன்பத் சாலையில் உள்ள சோனியாவின் வீட்டிலிருந்தே, `சிதம்பரம் விஷயத்தில் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெறவேண்டும்' என்று வழக்கறிஞர்களிடம் தெரிவித்துள்ளனர். மறுபுறம், அமித் ஷா தரப்பு எப்படியும் இரவுக்குள் அவரைக் கைது செய்யவேண்டும் என்று சி.பி.ஐ-க்கு அழுத்தம் கொடுக்க, நள்ளிரவு நேரத்தில் சிதம்பரம் வீட்டில் அழைப்பாணை நோட்டீஸை ஒட்டியுள்ளனர் அதிகாரிகள்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதுவரை விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று சிதம்பரம் தரப்பிலிருந்து சி.பி.ஐ-க்குப் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஒருவரது வீட்டில் சிதம்பரம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் தனது வழக்கு குறித்த தீர்ப்புக்குப் பிறகே இந்த விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று அவர் முடிவெடுக்க உள்ளார். அதே நெருக்கடிகள் தொடர்ந்தால், சி.பி.ஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகிவிட்டு, சிறைக்குச் செல்லும் மனநிலைக்கு சிதம்பரம் வந்துவிட்டார் என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னையிலிருந்தே நிலைமைகளைக் கேட்டுவருகிறார்கள்.

அமித் ஷாவின் பழைய பகைதான், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ இவ்வளவு வேகம்காட்ட காரணம் என்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில். ஆனால், சிதம்பரத்தைக் காப்பாற்ற அபிஷேக் சிங்வி, கபில்சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட பத்துப் பேர் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் படையே இன்று உச்ச நீதிமன்றத்தில் களமிறங்கியுள்ளது. ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்ததும், ஒட்டுமொத்த வழக்கறிஞர் குழுவும் அடுத்தகட்ட ஆலோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

https://www.vikatan.com/government-and-politics/politics/reason-behind-amit-shah-anger-over-chidambaram

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.