Jump to content

இலங்கைத் தமிழர் - தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்

என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூலை 29 திங்கட்கிழமை, பி.ப. 12:33 Comments - 0

அண்மையில், கன்னியா பிள்ளையார் கோவில் உடைப்பு விவகாரம் உள்ளிட்ட, தமிழ் மக்கள் சார்ந்த சில விடயங்கள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்திருந்தார் என்ற செய்தியும் அந்தச் சந்திப்பில், தமிழ் மக்களை, குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதானமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பங்குபற்றவில்லை என்ற செய்தியும் முக்கியமாகப் பேசப்பட்டது.   

 அதைத் தொடர்ந்து, இலங்கையில் தமிழர்களின் அரசியல் மற்றும் தலைமைத்துவம் சார்ந்து, சில வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இந்தக் கருத்துகளில் சில, அபத்தமான எல்லைகளையும் தொட்டு நிற்பதை, நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.  

இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கை அரசியல், குறிப்பாக இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் அரசியல் தொடர்பில், தொடர்ந்து எழும் முக்கிய கேள்வியொன்றை, நாம் ஆராய்வது உசிதமானதாகத் தென்படுகிறது.   

இலங்கையின் சிறுபான்மையினர் என்ற அடையாளத்துக்குள் பிரதானமாகத் ‘தமிழர்கள்’ வருகிறார்கள். ஆனால், நடைமுறையில் இங்கு ‘தமிழர்கள்’ என்ற ஒற்றை அரசியல் மற்றும் சமூக அடையாளம் கிடையாது; அது பல உபஅடையாளங்களாகப் பிரிந்தே நிற்கிறது. இது சரியா, பிழையா என்பது இங்கு அவசியமல்ல. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் யதார்த்தமாக இருக்கிறது.  

தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும்  

தென்னிந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களுக்கு, இலங்கையின் ‘தமிழ்-முஸ்லிம்’ என்ற இருவேறு அடையாளங்களைப் புரிந்துகொள்வதில், சிக்கல்கள் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், ‘தமிழர்’ என்பது இனம்; ‘இஸ்லாம்’ என்பது மதம் என்ற அடிப்படையிலேயே அவர்களது அணுகுமுறை இருப்பதால், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் இஸ்லாமியர்கள், தம்மைத் தமிழர்களாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இது இலங்கையிலிருந்து வேறுபட்டதொரு நிலைமையாகும்.   

இலங்கையைப் பொறுத்தவரையில் இஸ்லாமியர்களில் அநேகர் (பெரும்பான்மையினர் என்று சொன்னாலும் பிழையல்ல) தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். அவர்களது அன்றாட மொழியாகத் தமிழே இருக்கிறது. ஆனால், சமூக ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி, இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் தம்மை ‘முஸ்லிம்கள்’ என்ற தனி இனமாக அடையாளப்படுத்துகிறார்கள்.   

அதாவது, இலங்கையைப் பொறுத்தவரையில், தென்னிந்தியாவின் தமிழகத்தைப் போன்று, தமிழ் பேசும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள், தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக அவர்கள், ‘இன-மத’ ஒருமித்த அடையாளமாக ‘முஸ்லிம்’ என்ற அடையாளத்தையே சுவீகரித்திருக்கிறார்கள். சமூக வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி, அந்த வேறுபாட்டை மிகத்தௌிவாகவும் இயல்பாகவும் கட்டமைத்திருக்கிறார்கள்.   

இந்தத் தனியான அடையாளம் பலமா, பலமில்லையா என்று ஆராய்வதை விட, அதனைக் குறித்த மக்கள் கூட்டத்தின் விருப்பாகக் கருதி, ஏற்றுக்கொள்ளுவதே சாலப் பொருத்தமான அணுகுமுறையாகும்.  எண்ணிக்கை அடிப்படையான அணுகுமுறையில் தமிழர்கள் - முஸ்லிம்கள் பிரிந்து நிற்பதிலும், இணைந்து நிற்பதே சிறந்தது என்ற வாதங்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தச் சமூக அடையாளங்கள், ஒரே இரவில் தோன்றுபவை அல்ல.   மாறாக, அவை காலங்காலமாக இடம்பெறும் சமூக, அரசியல் ஊடாட்டங்களின் விளைவாகக் கட்டமைக்கப்பட்டவை.

இந்த அடையாளங்களுக்கு, நீண்ட வரலாறு உண்டு. அந்த மக்கள், தம்மை அதுவாக உணரும் போது, பாரம்பரியமாக அந்த அடையாளத்தைச் சுவீகரித்திருக்கும் போது, அந்த அடையாளத்தை யாரும் கேள்விக்குள்ளாக்குவது என்பது ஏற்புடையதொன்றல்ல.  இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவாகத்தான், இலங்கையில் மிக இயல்பாகவே தமிழர்களையும் தமிழ்-பேசும் முஸ்லிம்களையும் இணைத்துச் சுட்ட ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற பதம் பயன்பாட்டிலுள்ளது.  

தமிழர்கள்?  

தமிழர்கள் - முஸ்லிம்கள் என்ற அடையாளப் பிரிவு, மேற்குறிப்பிட்ட வகையில் இருக்கும் அதேவேளையில், இந்த இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் அல்லது தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மற்றைய அனைவரும் ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்துக்குள் வருகிறார்களா என்ற கேள்வி முக்கியமானது.   

பொதுவாகப் பார்த்தால், தமிழ்பேசும் அனைவரும் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதுதான் ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்துக்குப் பலம் சேர்க்கும். ஆனால், யதார்த்தம் என்பது எப்போதும் பயன்மய்ய அணுகுமுறை சார்ந்து அமைவதில்லையே!   

சமகாலத்திலும் சரி, வரலாற்றிலும் சரி, மொழி ரீதியாக மட்டும், அதாவது மொழியை அடிப்படையாகக் கொண்டு மட்டும், இலங்கைவாழ் மக்கள் கூட்டம், தம்மை அரசியல் ரீதியாகவும் சரி, சமூக ரீதியாகவும் சரி, ஒரே அடையாளம் கொண்ட மக்கள் கூட்டமாகக் கட்டமைத்துக் கொண்டதில்லை என்பதை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.   

சில நூற்றாண்டுகள் பின்சென்று பார்த்தால் கூட, தமிழ் பேசும் மக்கள் பிரதானமாக வாழ்ந்த பகுதிகளான யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம்-சிலாபம் பகுதிகளில் வாழ்ந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், ஒருவரிலிருந்து ஒருவர் ஏதோவொரு வகையிலேனும் வேறுபட்ட சமூக, அரசியல் அடையாளத்தைக் கொண்டிருந்ததுடன், தம்மை மற்றையவரிலிருந்து வேறுபடுத்தியே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்தை அவர்கள் அந்நியப்படுத்தியதில்லை.   
 மாறாகத் தம்முடைய தனிப்பட்ட அடையாளம் பற்றிய பிரக்ஞை, அவர்களுக்கு அதிகமாக இருந்ததை, வரலாற்றைக் கற்கும் எவரும் தௌிவாகக் காணலாம். குறிப்பாக, அரசியல் ரீதியாக அம்மக்கள் தம்முடைய தனித்துவ அடையாளத்தைத் தௌிவாகப் பற்றியிருந்ததையும் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.  

ஆனால், கொலனித்துவ காலகட்டத்தின் பின்னர், இந்த நிலை மாற்றமடைகிறது. குறிப்பாக, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், ஆட்சியாளர்களின் இன ரீதியாக இலங்கை மக்களைப் ‘பிரித்தாளும்’ தந்திரோபாயத்தின் படி, ‘தமிழர்கள்’ என்ற அடையாளம், இலங்கையில் பலநூற்றாண்டுகளாகப் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த தமிழ் பேசும் மக்களைத் தன்வயப்படுத்திக்கொள்கிறது.

இது அரசியல் அடையாளம் மட்டுமே. சமூக ரீதியாக இந்த அடையாளத்துக்குள் பிரதேச அடையாளம், பிராந்திய அடையாளம், மத அடையாளம், சாதிய அடையாளம் என்பவை எப்போதும் முக்கியத்துவம் மிக்கவையாகவே அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிட்டாக வேண்டியதாகிறது.  

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், கொலனித்துவ காலகட்டத்தில், தென்னிந்தியாவிலிருந்து கணிசமான மக்கள், குறிப்பாகப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக குடிபெயர்த்தி அழைத்துவரப்படுகிறார்கள். இலங்கையின் மலையகத்தில் குடியமர்த்தப்பட்ட இந்த மக்கள், தமிழர்களாக இருந்தாலும், சமூக ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி, இலங்கையின் ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

இந்தச் சூழலில்தான், இலங்கையின் ‘தமிழர்கள்’ என்ற அடையாளம் ‘இலங்கைத் தமிழர்கள்’, ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்று இருகூறாகிறது. அரசியல் ரீதியாகவும் சரி, சமூக ரீதியாகவும் சரி, இந்த அடையாளப் பிரிவு மிக முக்கியமானதொன்றாகிவிட்டது. இதற்கான காரண காரியங்கள், மானுடவியல் ஆய்வுக்குரியவை. ஆனால், அரசியல் ரீதியாக இது தமிழர்களுக்கு மிகுந்த பின்னடைவையே தந்திருக்கிறது.   

எவ்வாறு பிராந்திய ரீதியாகப் பிரிந்திருந்த இலங்கைத் தமிழர்கள், கொஞ்சம் கொஞ்சமாக ‘இலங்கைத் தமிழர்கள்’ என்ற அடையாளத்துக்குள் அரசியல் ரீதியாகவேனும் தன்வயமானார்களோ, அதுபோல, ‘இந்திய வம்சாவளித் தமிழர்களையும்’ தன்வயமாக்கியிருந்தால், இலங்கையில் ‘தமிழர்களின்’ அரசியல் பலம் அதிகரித்திருக்கும்.

ஆனால், இதை இடம்பெறாது தடுத்ததில், தமிழர்களின் சமூகக் காரணிகளும் சிங்களவர்களின் அரசியல் தந்திரோபாயக் காரணிகளும் முக்கிய பங்கு வகித்திருந்தன என்பது வரலாற்றுச் சோகம்.  

‘இலங்கைத் தமிழர்கள்’, ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்ற இந்தப் பிரிவு நிலை, அரசியல் ரீதியாகவேனும் மாறுவதற்கான ஒரு சந்தர்ப்பம் 1972இல் உருவானது. அதுதான், ‘தமிழர் ஐக்கிய முன்னணி’யின் (TUF) உருவாக்கம்.

இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சிகளாக அன்றிருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதான கட்சியாக இருந்த ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும்’ இணைந்து உருவாக்கிய கூட்டணிதான் ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ஆகும்.  

ஆனால், இந்த ஒற்றுமை, நீண்ட நாள் நீடிக்கவில்லை. தமிழர் ஐக்கிய முன்னணி, ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’யாக மாறியதுடனும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்ததுடனும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அந்தக் கூட்டணியிலிருந்து விலகிக்கொள்கிறது.

இதற்கு அதன் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் சுட்டிக்காட்டிய முக்கிய காரணம், இந்த இரு மக்கள் கூட்டங்களுக்கும் இடையேயுள்ள அரசியல் அபிலாஷைகளின் வேறுபாடாகும்.   
 ‘இலங்கைத் தமிழர்களின்’ அரசியல் அபிலாஷைகளுக்கும் அணுகுமுறைக்கும் ‘இந்திய வம்சாவளித் தமிழர்களின்’ அரசியல் அபிலாஷைகளுக்கும் அணுகுமுறைக்குமான இடைவௌியை, அன்றிலிருந்து நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.  

 ‘தமிழர்கள்’ என்ற அடிப்படையில் இரு மக்கட் கூட்டங்களும் பேரினவாதத்தால் பாதிப்பைச் சந்தித்தாலும் தமக்கான அரசியல் அடைவுகள் தொடர்பாக அவர்களிடம் வேறுபட்ட பிரக்ஞைகள் இருப்பதை மறுக்கமுடியாது.

ஆகவே யதார்த்தத்தில், அரசியல் ரீதியாகவேனும் இலங்கைவாழ் ‘தமிழர்கள்’ அனைவரும், ஓர் அரசியல் அடையாளத்துக்குள் ஒன்றிணைய வேண்டுமானால், அவர்களின் அரசியல் அபிலாஷைகள் ஒன்றாக அமையவேண்டும்; அதுதான் அடிப்படை.  

தேர்தல் ஜனநாயக அரசியலைப் பொறுத்தவரையில், எண்ணிக்கை என்பது பலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்று. ஆனால், ஓர் அரசியல் ஒற்றுமை, அந்த அடிப்படையில் மட்டும் உருவாவதல்ல.  

குறிப்பாக, இனத் தேசியவாத அரசியல் வேர்விட்டுள்ள ஒரு நாட்டில், அரசியல் அபிலாஷைகளும் இனத் தேசிய ரீதியிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இங்கு ‘இலங்கைத் தமிழர்கள்’, ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்ற பிரிவைத் தாண்டி, ‘தமிழர்கள்’ என்ற ஒற்றை அடையாளத்தை ஸ்தாபிக்க விரும்புபவர்கள், அதற்கான அரசியல் அடிப்படைகளை முதலில் ஸ்தாபிக்க வேண்டும்.   

இலங்கையின் பிரதேச, பிராந்திய, சாதி, சமூக ரீதியாகப் பிரிந்திருந்த ‘இலங்கைத் தமிழர்களை’ அரசியல் ரீதியாக ஒன்றுபடச் செய்வதற்கான அரசியல் தேவையும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன. அவை தான் ‘இலங்கைத் தமிழர்கள்’ என்ற அடையாளத்துக்குள்ளான தன்வயப்படுத்தலைச் சாத்தியமாக்கின.   

‘இலங்கைத் தமிழர்களும்’, ‘இந்திய வம்சாவளித் தமிழர்களும்’ ஒன்றுபடவேண்டுமானால், அத்தகைய அரசியல் தேவையொன்றும் சந்தர்ப்பமும் அவசியம்; அல்லது அத்தகைய தேவையும் சந்தர்ப்பமும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான தத்துவார்த்த அஸ்திவாரமொன்று கட்டமைக்கப்பட வேண்டும்.

 ஆனால், வேறுபட்ட அரசியல் அபிலாஷைகளையும் தேவைகளையும் கொண்டிருக்கும் வரை, அந்த இணைப்பும் தன்வயப்படுத்தலும் நாம் எத்தனை நல்லெண்ணத்துடன் முன்னெடுத்தாலும் யதார்த்தத்தில் அரசியல் ரீதியாக சாத்தியப்படுவது அத்தனை எளிதல்ல.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கைத்-தமிழர்/91-235998

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.