கிருபன்

மாலை மலரும் நோய்

Recommended Posts

மாலை மலரும் நோய்

Temple.jpg

காமத்துப்பாலுக்கு உரை செய்ய வேண்டும் என்கிற  கனவு  கொஞ்ச நாட்களாகவே இன்புறுத்தி வந்த ஒன்று. நானும்  கவிஞர் சுகுமாரனும் சேர்ந்து செய்வதாகப்  பேசி வைத்தது.  தற்சமயம் அவர் வேறு வேலைகளில் மூழ்கி விட்டதால் அவரது ஆலோசனைகளோடு  இப்பணியைச் செய்ய முற்படுகிறேன். திருக்குறளுக்கு எண்ணற்ற உரைகள் புழக்கத்தில் உள்ளன. இன்னுமொரு உரை தேவையா ? இன்னும் பல உரைகள் தேவை என்பதே என் எண்ணம். குறளுக்கு மட்டுமல்ல,  பழந்தமிழ்ப் பாடல்கள் எல்லாவற்றிற்கும் வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு மனிதர்கள் உரை செய்வது அவசியம் என்றே நினைக்கிறேன். அவ்வுரைகள் அந்த இலக்கியங்களை மேலும் அணுகி அறிய உதவும் வண்ணம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரு  நிபந்தனை. எனது முயற்சியும் அவ்வண்ணமே அமைகிறது. வள்ளுவர் பரிமேலழகரோடு  தீர்ந்து விடுபவர் அல்ல.

thiruvalluvar.jpg

 

தமிழ்ச் சூழலில் வள்ளுவர் ஒரு குட்டி தெய்வமாகத் தோற்றமளிக்கிறார் அல்லது ஒரு அரசியல் பாதைக்குத் தலைமை ஏற்கிறார். இந்த இரண்டு பாத்திரங்களையும் விடுத்து அவரைத் தமிழின் ஆகச் சிறந்த கவியாக முன்னிறுத்துபவை காமத்துப்பால் பாடல்கள்.  ஒரு காதல் கவியாக வள்ளுவனின் இடம் தமிழில் அவ்வளவு  வலுவாக நிலைநிறுத்தப் படவில்லை என்றே எண்ணுகிறேன். வெகு சிலரே அது குறித்துப் பேசியிருக்கிறார்கள். அந்த வெகு சிலரில் ஒருவனாக உவகையுடன் இணைந்து கொள்ள விரும்புகிறேன். அவரது துவராடை களைந்து அவரை கபிலரோடும், வெள்ளிவீதியோடும் சரியாசனத்தில் இருத்தும் முயற்சி இது.

நமது கல்விக் கூடங்களில் காமத்துப்பால் பாடல்கள் பெரும்பாலும் பாடமாக வைக்கப்படுவதில்லை. எண்ணற்ற காதல் இதயங்களைத் தாலாட்டும் ஊஞ்சலாகத் திகழும் அரசுப் பேருந்துகளிலும் அவற்றிற்கு இடமில்லை. அறிஞர்களுக்கும், முனிவர்களுக்கும்  ஒரு இடைஞ்சலாகவே எப்போதும் அவை இருந்து வந்திருக்கின்றன. குன்றக்குடி அடிகளார்  தமது உரையில் காமத்துப்பாலுக்குப் பொருள் சொல்லாமல் பாடல்களை மட்டும் தந்துவிட்டு நழுவி விடுகிறார். வீரமாமுனிவர் மற்ற இரண்டு பால்களை மட்டுமே மொழி பெயர்த்திருக்கிறார். முனிகள் காமத்திற்கு அஞ்சுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அறிஞர்களும் அஞ்சவே செய்கிறார்கள். மூதறிஞர் ராஜாஜியும்  இவ்வாறே மொழி பெயர்த்திருக்கிறார்.

Isai.jpg

‘‘காமத்துப்பால்’’ என்கிற பெயரைக் கருதி “காம சூத்திரம்’’ போல மிகவும் சுவாரஸ்யமான ஒன்று என ஒரு இளம்வாசகன் எண்ணிவிடக்கூடாது. சுவாரஸ்யமானதுதான், ஆனால் “hottest”  அல்ல. “போஸ்டர்களால்’’ வஞ்சிக்கப்பட்ட  தலைமுறையைச்  சேர்ந்தவன் என்பதால் அந்த வலியும் ஏமாற்றமும் எனக்குப் புரியும்.

காமத்துப்பால் அதிகமும் பிரிவையே பேசுகிறது. பிரிவன்றோ காதலின் இன்பத்தை இரட்டிப்பாக்குவது. “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’’ என்பான் கம்பன். இப்பிரிவு குறித்து வ.சுப.மாணிக்கம் அவர்களின் கூற்றொன்று நினைவில் நிற்கிறது. இரண்டு முறை படித்தால் ஈஸியாக விளங்கிவிடும்.

“பிரிவு புணர்ச்சியின் பொதுவடிப் படை. இடையீடு இல்லா நாட்புணர்ச்சி கோழிப்புணர்ச்சி போன்றது. நாட்காமம் எடுத்ததற் கெல்லாம் வெகுளும் முன்சினம் போல வலுவற்றது; உள்ளத்திற்கும் உடலுக்கும் குடும்பத்துக்கும் கேடு பயப்பது. பிரிவால் அகமும் மெய்யும் அறிவும் திண்ணியவாம். பிரிவின் அகற்சிக்கு ஏற்ப புணர்ச்சித் தழுவலும், பிரிந்த வேட்கைக்கு ஒப்ப புணர்ச்சியின் பலமும் பெருகும். கூட்டுப்பேரின்பம் பிரிவுப் பெருந்துன்பத்தால் முகிழ்க்கும் என்பது காம வள்ளுவம். ஆதலின், காமத்துப்பாலின் இருபத்தைந்து அதிகாரங்களுள் பதினைந்து அதிகாரங்களைப் பிரிவுப் பொருளாக ஆசிரியர் அமைத்தார்.”

தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் காமத்துப்பாலை “இன்ப அன்பை’’ பேசும் பாடல்கள் என்கிறார். அந்த இன்ப அன்பைத்தான் நாம் இத்தொடரில் பார்க்கப் போகிறோம்.

உரைகளில் நிறைய வேறுபாடுகள் காணக்கிடைக்கின்றன. சில குறளுக்கு எந்த உரையையும் முழுதாக ஒப்ப மனம் வருவதில்லை. அது போன்ற தருணங்களில் வள்ளுவன் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து வைக்கிறான். வேறுபாடுகளோடு இன்னொரு வேறுபாடாக என் உரையும் இருக்கட்டும்.

நமது உரைகள் பலவும் பொருள் சொல்பவை. அது அவசியம்தான். ஆனால் கவிதை வெறும் ஒற்றை அர்த்தத்தில் அடங்கி விடுவதில்லை. அதன் மயக்கமே அதன் அழகு.  வெறுமனே பொருள் சொல்லப் புகும்போது ஒரு அர்த்தத்தை தெளிவாக வலியுறுத்த வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முன் உரை செய்தவர்களுள் கவிதையை அறிந்தவர்கள் உண்டுதான். அவர்கள், அவர்கள் அளவில் முயன்றுதான் பார்த்திருக்கிறார்கள். நானும் என்னால் இயன்றவரை கவிதையின் கவித்துவத்தையும் அதன் மயக்கத்தையும் என் உரைகளில் கடத்த முயல்கிறேன். ஒரு சில இடங்களிலாவது வள்ளுவனின் கவிதையையொட்டி இன்னொரு கவிதையை எழுதிக் காட்டி விட வேண்டும் என்பதே பேராசை. சவாலான பணிதான்.  மாதம் பத்துப் பாடல்கள் என்பது திட்டம். உலகியற்றியான் “அங்ஙனமே ஆகுக!” என்று அருளட்டும்!

 

https://uyirmmai.com/article/மாலை-மலரும்-நோய்/

 

Share this post


Link to post
Share on other sites

எனக்கு கால‌ நேரமின்றி இந்த நோய் திடீர் திடீர் என மலரும்

Share this post


Link to post
Share on other sites

மாலை மலரும் நோய் – காமத்துப்பால் உரை

ps.jpg

காமத்துப்பால் களவியல், கற்பியல் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  களவியல் காதற் பருவத்தின் சுகானுபவங்களைப் பாடுவதாகவும், கற்பியல் மணம் புரிந்த பின்னர் நிகழும் பிரிவின் மாளாத் துயரத்தைப் பாடுவதாகவும் சொல்லலாம். ஒரு வாசகர் இந்தப் பகுப்புகளையெல்லாம் விட்டுவிட்டு இப்பாடல்களை எங்கும் எப்படியும் வைத்து வாசிக்கலாம். அது அவர் வாசிப்பு. அவர் வசதி .அவர் இன்பம். களவியலின் முதல் அதிகாரம் “தகை அணங்கு உறுத்தல்’’

தகை அணங்கு உறுத்தல்

(அணங்காகி வருத்துதல்)

முதற்சந்திப்பில் காதலியைக் காணும்  காதலன் அவள் அழகில் தாக்குண்டு வருந்துதல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு – 1081

அணங்கோ ? மயிலோ ? அன்றி பெண்ணே தானோ ? அறியாது மயங்கி   வருந்தும் என் நெஞ்சம்.

மயில் சரி.. அதென்ன ஆய்மயில் ? படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில் என்கிறார் பரிமேலழகர். கனங்குழை மாதர்  என்பதை நீண்ட காதணிகளை அணிந்த மாது என்று சொல்லலாம்.

இன்றுவரை பெரும்பாலான காதல்காவியங்களின் முதல் காட்சி இதுதானே ? இந்த “ஸ்தம்பித்தல்” தானே?  “சத்தியமா இவள மாதிரி ஒரு பொண்ண இதுக்கு முன்னால பார்த்ததில்ல நண்பா’’ என்று தானே காதலன் தன் ஒவ்வொரு காதலின்போதும் அரற்றுகிறான்.

“கொல்’’ என்றால் கொல்லுதல் அல்ல. இங்கு இது ஒரு அசைச்சொல். அதாவது தனித்துப் பொருள் தராது. செய்யுள் இலக்கணத்தை நிரப்பும் பொருட்டு வருவது.  இச்சொல்லைப் பழந்தமிழ் பாடல்களில் நிறையக் காணலாம். நாஞ்சில் நாடன் தன் கம்பனின் “அம்பறாத்தூணி” நூலில் இது  குறித்து தெளிவாக எழுதியுள்ளார்.

b5f1cc7f0eea1288c8a5f06e11858175-lady-pa

மாலுதல் – மயங்குதல்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண்  டன்ன  துடைத்து – 1082

நானவளை நோக்க, அவளென்னைத் திரும்ப நோக்கிய நோக்கோ  அணங்கு படையோடு வந்து வருத்துவது போன்று உள்ளது.

அணங்கு தனியே வருத்துவதே தாளமுடியாத வேதனை. படையும் திரட்டி வந்தால்.. அணங்குப் படையின்  பிரத்யேக ஆயுதம் என்ன ?  கண் அன்றி வேறென்ன? அதைக் கண்டால் தானே குமரர் மாமலையை கடுகாக்கிச் சிதைப்பர்.

தானை – படை

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால்  பேரமர்க் கட்டு – 1083

கூற்றென்று கூறப்படுவதை இதற்கு  முன் அறிந்தவனில்லை. இதோ இப்போது காண்கிறேன் அவளது  சொக்கும் விழியழகில்.

அழிவின் இன்பத்தை நல்கும் கூற்று இது. இங்கு எருமைக்கும், தாம்புக்கும் பயந்து ஓடியொளிவதில்லை நாம். மாறாக, இருகரம் விரித்து ஏங்கி நிற்கிறோம்.

இளம் வாசகர் ஒருவர் இந்தப் பாடலில் கண் என்கிற சொல் எங்குள்ளது என்று தேடிச் சலிக்கக் கூடாது. அந்தச் சொல் முந்தைய பாடலில் உள்ளது. இப்படியாக ஒரு அதிகாரத்திற்குள் சொற்கள்  பரிமாறிக்கொள்ளப்படுவது இயல்பு.

கூற்று  எமன்- பண்டு  முன்பு – அமர்  போர்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக் கமர்த்தன கண் – 1084

அவளோ ஒரு பேதையைப் போல் தெரிகிறாள். ஆனால் அவள் கண்ணோ கண்டாரின் உயிரையெல்லாம் உண்டு செரித்து விடுகிறது.

தன்னைக் காணும் எவருடைய உயிரையும் உண்டு விடும் கொடியவையாய் இருப்பதால் இந்தப் பேதைப் பெண்ணிற்கு இவளது கண்கள் பொருத்தமுடையவையாய் இல்லை.

“உண்கண்’’ என்கிற சொற்சேர்க்கையை சங்கப் பாடல்களில் அதிகம் காணமுடிகிறது. அதன் பொருள் “மை உண்ட கண்’’ என்பது. அய்யன்  “உண்கண் ” என்பதை உயிருண்ணும் கண் என்றெழுதி உயரப் பறக்க விட்டு விடுகிறார்.

அமர்த்தல் – மாறுபடுதல்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து – 1085

கூற்றமோ? பிணையோ? அன்றி கண்ணேதானோ? அவள் நோக்கத்தில் இம்மூன்றும் உள்ளது.

எமனைப் போல் கொடியதாகவும் உள்ளது. மருளும் பெண்மானின் கண்களில் உதிக்கும் அழகாகவும் உள்ளது அவள் பார்வை. எது அமுதோ அது நஞ்சாகவும் இருக்கிறது

பிணை  பெண்மான் – மடவரல் இளம்பெண்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுக்கஞர்

செய்யல மன்இவள் கண் – 1086

இந்தப் புருவங்கள் வளைந்து அவள் கண்களை மறைத்து விட்டால் போதும் எனக்கு நடுக்கமோ, துன்பமோ நேராது.

கொடிய புருவங்கள் மேலும் வளைந்து  அடர்ந்து அவளது கண்களை மறைத்துவிடுமாயின் மிக்க நல்லது. பிறகு அந்தக் கண்களால் என்னைத் துன்புறுத்த இயலாதல்லவா ?

அவ்வளவு உறுதியாக முகத்தை திருப்பிக் கொள்வது அந்தக் கண்களைக் காணவே கூடாது என்றுதான். எல்லாம் இரண்டு நிமிடத்துக்குத்தான்….அதற்குள் காதலின் நூறு கைகள் ஒன்று கூடி அவன் தலையை அவள் திசைக்குத் திருப்பிவிடும்.

கோடுதல் வளைதல் –  அஞர் துன்பம்,

கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில் – 1087

இவளின் மதர்த்த முலைமேல் அணியப் பெற்ற துகிலானது மதக்களிற்றின் மத்தகத்தில் விளங்கும் முகப்படாம் போன்றது

முலை இங்கு மதங்கொண்ட யானையின் மத்தகத்திற்கு உவமையாகி தலைவனின் நெஞ்சை முட்டிச் சிதைக்கிறது. அவன் அய்யோ அய்யோ என்று இன்பத்தில் அலறுகிறான்.

காமத்துப்பாலில் இந்த ஒரு பாடலில் மட்டும்தான் “முலை’’ என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “அல்குல்’’ இல்லவே இல்லை. சங்கப் பாடல்களிலிருந்து விலகி நிற்கும் தன்மையாக இதைப் பார்க்க முடியும்.

கடாஅக் களிறு மதம் கொண்ட யானை –  படாஅ பெரிய

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே  ஞாட்பினுள் 

நண்ணாரும் உட்கும்என்  பீடு – 1088

எனக்கெதிரே போர்க்களம் புக அஞ்சி ஒடுங்கி ஒளிவர் எம் பகைவர். அப்படியான என் அத்தனை பலமும் இவளின் நெற்றி ஒளிக்கே உடைந்து நொறுங்கி விட்டது.

இப்படி  நொறுங்கிய பீடுகளைச் சேர்த்துக் குழைத்தால் உறுதியாக இன்னொரு 14 லோகங்களைச் சமைத்து விடலாம்.

நண்ணாரும் என்பதற்கு போர்க்களம் வராமலே செவி வழிச்செய்திகளுக்கே அஞ்சி நடுங்குவர் என்று கொள்ளலாம்.   “ஓ” என்கிற வியப்பு இவன் வலிமைகளின் பெருமையும், அவள் நுதலின் சிறுமையையும் தோன்ற நிற்கிறது என்கிறார் அழகர்.

ஞாட்பு போர்க்களம் – உட்கும் அஞ்சும்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து – 1089

பிணையின் மருளழகும், பளிரீடும் நாணமும் ஏற்கனவே அவளிடத்து ஆபரணங்களாக ஜொலித்துக்கொண்டிருக்கையில் எவன் அவன் மேலும் புனைந்து விட்டது ?

அவளுக்கு ஆபரணங்கள் ஏதும் வேண்டியதில்லை. அவள் தானே மின்னுபவள் என்றது.

“ஏதில தந்து’’ என்பதை பொருந்தாத அணிகள் என்றும் கொள்ளலாம்.

ஏதிலர் பகைவர் – பொருந்தாதவர்

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம் போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று – 1090

உண்டால் அல்லது களிப்பூட்ட மாட்டாது மது. கண்டாலே களிப்பூட்டவல்லது காமம்.

ஆம் அய்யனே… ஆண்ட்ராய்டுகளின் வழியே வேறென்ன நாங்கள் புத்துலகா சமைத்துக் கொண்டிருக்கிறோம் ?

அடுதல் என்றால் சுடுதல். சாலமன் பாப்பையா தன் உரையில் “ அடுநறா” என்பதை “காய்ச்சப்பட்ட கள்” என்கிறார். ஆனால் கள்ளை நாங்கள் காய்ச்சுவதில்லை என்கிறார் ஒரு விவசாயி. எனில் காய்ச்சப்படும் மதுவகை ஏதும் வள்ளுவர் காலத்தில் இருந்ததா?  இந்தச் சந்தேகத்தை வரலாற்று ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு நாம் அடுத்த அதிகாரத்திற்குச் செல்லலாம்.

 

 

https://uyirmmai.com/article/மாலை-மலரும்-நோய்-காமத்து/

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மாலை மலரும் நோய் | காமத்துப்பால் உரை | குறிப்பு அறிதல்

Lady-with-the-mirror-457x610.jpg

தலைவனை காதல் பீடித்துக் கொண்டது. தலைவியின் நிலையை அறிய வேண்டுமல்லவா? அதை அறிந்து கொள்ளும் அதிகாரம் இது.
1.
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

எளிது: இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.

இவளது உண்ணும் கண்களில் இரு நோக்குகள் உண்டு. ஒரு நோக்கு நோய் நோக்கு. மறுநோக்கோ அந்நோய்க்கு மருந்து.

இதில் தலைவனுக்குக் குழப்பமான குறிப்பே கிடைக்கிறது. நோய் நோக்கில் முகத்தைத் திருப்பிக் கொண்டு கலங்கடிப்பவள், மருந்து நோக்கில் அன்பொழுகப் பார்க்கிறாள்.

இப்பாடலை ‘குறிப்பறிதல்’ என்கிற அதிகாரத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஒரு தனிப்பாடலாக வாசிக்கையில் மேலும் இனிதாகிறது. மேலும் செறிவாகிறது.

எது நோயோ அதுவே மருந்தாகும் விந்தை காமத்தில் நேர்கிறது. மருந்து வேறெங்கும் வெளியில் இல்லை என்பதால்தான் நாம் நோய்மையின் சந்நிதியிலேயே விழுந்து கதற வேண்டியுள்ளது. அதாவது ஒரு நோக்கிலேயே மருந்தும், நோயும் கலந்திருக்கிறது என்கிற வாசிப்பிற்கு நகர முடிகிறது.


2.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

அவளது கடைக்கண் சிறுநோக்கம்… அதுவே காமத்தில் சரிபாதியை நிறைத்து விடுகிறது. இல்லையில்லை, அதற்கு மேலும் நிறைத்து விடுகிறது.

இப்போது தலைவனுக்கு நற்குறிப்பு கிடைத்துவிட்டது. தலைவி பொது நோக்கு நோக்கவில்லை.களவு நோக்கு நோக்குகிறாள்.களவும்,காதலும் இரட்டைப் பிறவிகள் அன்றோ ? நள்ளிரவில் பரணில் இருந்து இறங்கி வரும் தலைவியைக் கண்டதாகக் கத்துகிறாள் ஒரு சங்கத்துத் தாய். நம் வீட்டில் பேய்களின் நடமாட்டம் அதிகமாகிவிட்டது… நீ பார்த்தது நம் தலைவியின் உருவெடுத்து வந்த ஒரு பேயாக இருக்கும் என்று கூசாமல் புளுகுகிறாள் தோழி. நமது மாணவக் கண்மணிகளுக்கு காதல் பூக்கும்போது அது ‘ஸ்பெஷல் கிளாஸ்’ களோடு சேர்ந்தே பூப்பதைக் காண்கிறோம்.

களவுநோக்கு காமத்தில் செம்பாகம் எனும்போதே கவிதை வானமண்டலத்தைத் தொட்டுவிடுகிறது. “அன்று பெரிது” என்பது அதையும் தாண்டி மேலும் ஒரு “டைவ்” அடிப்பது.


3.
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

அவளது கள்ளநோக்கும், நாணமும்தான் நீராய் மாறி நித்தமும் காதலை வளர்க்கிறது.

யாத்தல் எனில் கட்டுதல். யாப்பு என்பது இங்கு இருவரையும் கட்டிப் பிணைத்திருக்கும் காதலைக் குறித்து நிற்கிறது. அக்காதல் செழித்து வளர நீர் வேண்டுமல்லவா? அவளது நோக்கும், நாணமும்தான் அந்த நீர். அவை தலைவனுக்குக் கிடைத்துவிட்டன.

இறைஞ்சுதல் – வணங்குதல், குனிதல், இங்கு நாணுதல்.

Khajuraho-212x300.jpg

 

4.
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்.

நான் அவளை நோக்கினால் அவள் நிலத்தை நோக்குவாள். நோக்காத போதோ என்னை நோக்கி மெல்லச் சிரிப்பாள்.

காதல் பிறந்தவுடன் கள்ளம் பிறப்பது போலவே குறும்பும் கூடவே பிறந்து விடுகிறது. அந்தக் குறும்பில் விளைந்த நகை இது.

இருவரும் தமக்குள் காதலை ஒளித்துக் கொண்டு விளையாடும் விளையாட்டுதான் காதல் நாடகத்தின் ரசமான பகுதி. வெளியரங்கமான பிறகு ஏறத்தாழ கணவன், மனைவி ஆகிவிடுகிறார்கள். பிறகென்ன? ஐயங்கள், குழப்பங்கள், கூச்சல், கூப்பாடு. தீராத கவலை, வற்றாத கண்ணீர்..


5.
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

அவளென்னை நேராக நோக்கவில்லைதான். ஆயினும் ஒரு கண்ணைச் சுருக்கி, ஒரு கள்ளநோக்கு நோக்கி சிரிக்காமல் இல்லை.

‘சிறங்கணித்தல்’ என்பதற்கு ஒரு கண்ணைச் சுருக்கி நோக்குதல் என்றும், கடைக்கண் நோக்கு என்றும் பொருள் சொல்கின்றன அகராதிகள். எப்படியாயினும் கண் கொண்டு நிகழ்த்தப்படும் காதலின் சேட்டைகளில் ஒன்று என்பது தெளிவு.


6.
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

புறத்தே அயலார் போல கடுஞ்சொல் பேசி நடித்தாலும் அகத்தே இருக்கும் அன்பின் சொல் விரைவிலேயே உணரப்படும்.

‘லூசு’ என்கிற வசைக்கு காதலர்கள் எவ்வளவு அகமகிழ்ந்து போகிறார்கள்! இரா முழுக்க அந்தச் சொல்லையே உருட்டி, உருட்டிப் பார்த்தபடி விழித்துக் கிடக்கிறார்கள்.

உறுதல் – சேருதல், உறார்- சேராதவர், அயலார், பகைவர்

செறுதல் – சினத்தல், செறார்- சினக்காதவர்


7.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

எளிது: செறாச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறார்போன்று உற்றார் குறிப்பு.
சினக்காது சொல்லும் கடுஞ்சொல்லும், சினந்தது போன்று நோக்கும் நடிப்பும் அயலார் போன்று தெரிவோரைக் காதலர் என்று காட்டும் குறிப்பு.
காதை இனிக்கச் செய்யும் இது போன்ற குறள்கள் புரிவதற்கு முன்பே பிடித்துப் போகின்றன. மந்திரமொன்றை திருத்தமாகப் பாடி முடித்தபிறகு ஒரு பக்தனுக்குள் என்ன நேர்கிறதோ, அதுவே இதுபோன்ற குறள்களிலும் நேர்கிறது. நேர்ந்தால் நாமொரு நல்வாசகர். இந்த மந்திரத்தன்மை குறைந்து விடுவதால்தான் அசை பிரித்து குறளை எளிமையாக்குவதைப் பண்டிதர்கள் விரும்புவதில்லை போலும்? நாம் அசை பிரித்துப் புரிந்துகொண்ட பிறகு திரும்பவும் குறளை மந்திரமாக்கி வாசித்து அனுபவிப்போமெனில் அதுவே நல்ல வாசிப்பு.


8.
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

எளிது : அசையியற்கு உண்டு ஆண்டுஓர்ஏர் யான்நோக்கப்
பசையினள் பைய நகும்.
அவள் சினத்தை நிஜமென்று நம்பி வாடி வருந்தி நின்றேன். அப்போது சின்னதாய் ஒரு சிரிசிரித்தாள். அதுவே எனக்கான நற்குறிப்பு.
‘உண்டு ஆண்டு ஓர் ஏர் இதில் ஏர்’ என்கிற சொல்லிற்கு அழகு என்றும், நன்மை என்றும் இரு பொருள்கள் உண்டு. “அழகு” என்று பொருள் கொள்ளும் உரைகள் ‘அசையியற்கு’ என்கிற சொல்லை அசைதல், வளைதல், மெலிதல் என்று விரித்து அதைத் தலைவியின் பண்பாக்கி ‘மெல்லியவள்’ என்று சொல்கின்றன. ‘துவளுகின்ற துடியிடையாள்’ என்கிறது கலைஞர் உரை. அதாவது தலைவன் நோக்குகையில் தலைவி மெல்ல நகுகிறாள். அப்போது அவளிடம் ஒருவித புதிய அழகு பூக்கிறதாம்.
‘நன்மை’ என்று பொருள் கொள்ளும் உரைகள் ‘அசையியற்கு’ என்கிற சொல்லைத் தலைவனின் நிலையாக்கி ‘வாடி வருந்தி நிற்பவனுக்கு’ என்பதுபோல் பொருள் சொல்கின்றன. அப்படி அவன் வருந்தி நின்று மனம் சோர்ந்து போகும்போது அவனைத் தெம்பூட்டும் விதமாக அவள் ஒரு சிரிசிரித்து விடுகிறாள். அந்தச் சிரிப்புதான் அவனுக்கான நற்குறிப்பு என்கின்றன இவ்வகை உரைகள்.
பசையினள் – அன்பானவள், பரிவானவள்


9.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

தமக்குள் ஒன்றுமேயில்லை என்பது போல பொது நோக்கு நோக்குதல் காதலர்க்கே உரித்தான கள்ளம்.


10.
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

கண்ணும், கண்ணும் பேசி காதல் புரியத் தொடங்கி விட்டால் பிறகு வாய்ச் சொற்களால் பயனொன்றும் இல்லை.
இப்போது பொதுநோக்கு என்கிற நடிப்பைத் துறந்து இருவரும் காதல்நோக்கு நோக்கிக் கொள்கிறார்கள். வாய் திக்கும்; திணறும். சொற்கள் நீளும்; குறையும்; உளறும். கண்களின் பாஷையிலோ சிக்கலொன்றுமில்லை.
அழகர் இப்பாடலைத் தோழியின் எண்ணமாகச் சொல்கிறார். ‘இருவர் கண்களிலும் ஒன்றே போலான கள்ளத்தனம் தெரிவதால் இவர்கள் தம்மிடம் சொல்லும் சொற்கள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை’ என்று தோழி நினைப்பதாகச் சொல்கிறார்.
வாய்ச் சொற்கள் தேவையே இல்லாதபடிக்கு தலைவனும், தலைவியும் உள்ளம் கலந்து நிற்பதோடு நிறைகிறது காமத்துப்பாலின் இரண்டாம் அதிகாரம்.
சிலர் இதைக் கண்டதும் காதல் என்று கேலி பேசலாம். ஆனால் தொல்காப்பியம் இதை ‘இயற்கைப் புணர்ச்சி’ என்று முறை செய்கிறது. ஊழ்வினையின் பயனால்தான் காதலர் கலக்கின்றனர் என்கிறது. ‘பாலது ஆணையின் ஒத்த கிழவனும், கிழத்தியும் காண்ப…’ என்கிறது நூற்பா. பால் எனில் ஊழ்.
இயற்கைப் புணர்ச்சியில் உள்ளங்கள்தான் கலந்தனவா? உடல்கள்? அதற்கும் வாய்ப்புண்டு என்றே ஆய்வுகள் சொல்கின்றன. சான்றோர் என்னை முனியலாகாது ஏடு என்ன சொல்கிறதோ அதையே நான் சொல்கிறேன். “அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்பதில் நெஞ்சம் என்பது ஒருவித இடக்கரடக்கலே கலந்தவை உடல்கள்தான் என்கிறார் ஒரு மூத்த தமிழறிஞர். யாதும் தெய்வத்தின் சித்தம் என்பதால் மனிதர்களை முறைத்துப் பயனில்லை.
சரி… நமது நோக்கம் கவிதைதான்… கலகமல்ல. அடுத்த அதிகாரம் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதாவது நிகழ்ந்த புணர்ச்சியை எண்ணி எண்ணி மகிழ்தல்.

 

https://uyirmmai.com/article/மாலை-மலரும்-நோய்-காமத்து-2/

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை

Khajuraho.jpg

 

புணர்ச்சி மகிழ்தல்

புணர்ச்சியை எண்ணி மகிழ்தலும் அதன் பெருமை பேசுதலுமான அதிகாரம் இது.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. (1101)

கண்ணால் கண்டும், செவியால் கேட்டும், நாவால் உண்டும், மூக்கால் முகர்ந்தும், மெய் கொண்டு தழுவுவதுமாக ஐம்புலன்களையும் இன்பத்துள் ஆழ்த்தும் வல்லமை அவளிடத்து உண்டு.

கண்டாலே காமம் இனிக்கும் என்று முன்பே சொல்லிவிட்டவர் இங்கு செவி, வாய், மூக்கு, மெய் என மொத்த உடலையும் இனிக்கச் செய்வது காமம் என்கிறார்.

கூந்தலேறிய பின்புதான் மல்லிகை மணக்கவே துவங்குகிறதென்பது நக்கீரச்சிறுவன் அறியாதது.

ஒண்தொடி கண்ணே உள- அழகிய வளையல்கள் அணிந்தவளிடம் உள்ளது

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. (1102)

பிற நோய்களுக்கெல்லாம் மருந்துகள் என்பவை அதற்கு எதிரானவையே. அவள் அளித்த நோயிற்கோ அவளே மருந்து.

“பிணிக்கு மருந்து பிற” என்பதில் சிக்கலில்லை. “மன்” எனும் ஒட்டு கொஞ்சம் குழப்புகிறதா? அது செய்யுளில் ஓசையை நிரப்பும் பொருட்டு வருவது. தனித்துப் பொருள் தராது. தனித்துப் பொருள் தராது என்று சொல்லும் போதிலும் சில பொருள்களைக் குறிப்பால் உணர்த்தவே செய்கிறது. இங்கு “மன் “என்பது “பிற” என்பதைக் கொஞ்சம் அழுத்துகிறது. அப்படி அழுத்துவதன் மூலம் அதை இழித்துரைக்கிறது என்று கொள்ளலாம். அதாவது பிறவற்றால் காதல் நோய்க்குத் தீர்வில்லை அல்லவா?

அணியிழை – அழகிய ஆபரணங்களை அணிந்தவள், இழை – ஆபரணம்

அதிகாரத்தைப் பொறுத்தே 1091-ம் குறளிலிருந்து இப்பாடல் வேறுபட்டு நிற்கிறது. அதில் தலைவன் மருந்தை வேண்டி நிற்பவன். இவன் உண்டு மகிழ்ந்தவன் அவ்வளவே.

ஒரே கவிதையை இரண்டு முறை எழுதி வைக்கும் இயல்பு வள்ளுவரிடமும் தென்படவே செய்கிறது. சமயங்களில் ஒரு பிரமாதமான கவிதைக்குப் பிறகு அதைப் போன்றே ஒரு சுமாரான கவிதையை செய்து வைத்திருக்கிறார். உதாரணத்திற்கு “நிறைஅழிதல்” அதிகாரத்தில் வரும் 5 வது மற்றும் 6 வது பாடல்களைச் சொல்லலாம். அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள் எழுதியாக வேண்டுமல்லவா?அந்தக் கட்டாயத்தால் கூட இது நேர்ந்திருக்கலாம்.

இப்படிச் சொல்வது வள்ளுவரை இகழ்வதாகாது. இத்தனை பாடல்களைப் புதிதுபுதிதாக எழுதியவருக்கு இன்னொரு புதுப்பாடல் எழுதத் தெரியாதா மடையா என்று நீங்கள் என்னை ஏசலாம். ஆனால் படைப்பு மனம் எப்போதும் ஒரே கொதிநிலையில் இருப்பதில்லை என்பதையே இங்கு சொல்ல விரும்புகிறேன். திருக்குறள் ஒரு விதத்தில் திட்டமிடப்பட்ட படைப்பு. அதுவும் நீண்ட காலத்திட்டம். திட்டமிட்ட படைப்புச் செயல்பாட்டில் தொடர்ச்சியாக இயங்க நேரும் படைப்பு மனத்தால் சதா காலமும் ஒன்று போலவே பீறிட்டுப் பெருக முடிவதில்லை என்று சொல்லலாமா? ஆனால் அய்யன் மகாகவிதான், அதிலொன்றும் சந்தேகமில்லை.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. (1103)

தான் விரும்பும் காதலியின் மென்தோளில் சாய்ந்துறங்கும் உறக்கத்தைக் காட்டிலும் இன்பமுடையதா என்ன அந்தத் திருமாலின் உலகு?
அவள் தோளிலேயே சொர்க்கம் கிட்டுகையில் அவன் ஐம்புலன் அடக்கித் தவம் இயற்ற வேண்டுமா என்ன?

தாமரைக்கண்ணான் உலகு என்பதை ‘செங்கண்மால்உலகு’ என்றுதான் அழகர் சொல்கிறார். ஆனால் வள்ளுவர் குறிப்பிட்ட மதம் சார்ந்த கடவுள்களை முன்னிறுத்திப் பேசுவதில்லை என்பதால் ‘தாமரைக்கண்ணான்’ என்பதை ‘தாமரைக்கு அண்ணான்’ என்று பிரித்து அது நிலவுலகைக் குறிப்பதே என்று சொல்லும் ஓர் ஆய்வுக்கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் பொன். சரவணன். அண்ணார் எனில் பகைவர். நிலவு தோன்றும் மாலை வேளையில் தாமரை வாடிவிடும் அல்லவா? எனவே தாமரைக்கு நிலவு பகை. கதிரவன் தோழன்.

வீழ்வார் ‘வீழ்தல்’ என்பதற்கு விரும்புதல் என்றும் விழுதல் என்றும் பொருள் சொல்கின்றன அகராதிகள். இரண்டும் ஒன்றுதானே என்று சொல்லிச் சிரிக்கிறது காதல்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள். (1104)

விலகிப்போனால் சுடுகிற, நெருங்கிச் சென்றால் குளிர்கிற அதிசயத் தீ அவள்.

தீ யாண்டு பெற்றாள் இவள் – இப்படியான தீயை எங்கிருந்து பெற்றாள் இவள்.

குளிர்ச்சிதான் என்றாலும் ஐஸ்கட்டியின் குளிர்ச்சியல்ல. அதனுள்ளே மின்சக்தியொன்று ஓயாமல் ஓடுகிறது. காமத்தின் குளிர்ச்சி என்பது தீக்குள் இருக்கும் குளிர்.

பற்றியெரிகிற குளிர் அவள்.

தெறுதல் – சுடுதல்

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள். (1105)

விரும்பும் பொழுது விரும்பிய பொருட்கள் அளிக்கும் சகல இன்பங்களையும் தானே அளிக்கவல்லது அவள் தோள்.

நீர் வேட்கையில் அவள் நீர். ஊண் வேட்கையில் அவள் ஊண். நிழல் வேட்கையில் அவள் நிழல். நித்திரை வேண்டினால் அதையும் அருள்வாள். இப்படியாக எல்லா இன்பங்களும் மொய்த்துக் கிடக்கின்றன அவள் தோளில்.

தோட்டார் கதுப்பினாள் தோள் – மலரணிந்த கூந்தலையுடையவளின் தோள்
வேட்டம்- விருப்பம், தோடு – பூவிதழ்

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் 
கமிழ்தின் இயன்றன தோள். (1106)

எளிது : உறுதோறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்.

கூடற்பொழுதில் அவள் என்னைத் தீண்டும் போதெல்லாம் வாடிக்கிடக்கும் என் உயிர் தளிர்த்துச் செழித்துவிடுகிறது. எனில், அமிழ்தால் ஆனதோ அவள் தோள்!
இந்த அமுதைப் பெற மலையை மத்தாக்கி, பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைய வேண்டியதில்லை. தலைவனுக்கு தலைவியே அமுது. இதழமுதம் போல இது தோளமுதம்! தழுவும்போது அமுதாகி இனிக்கும் அதுவேதான் பிரிவுக் காலத்தில் நஞ்சாகிக் கொல்கிறது.

உறுதல் – சேர்தல்

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. (1107)

தம் இல்லத்தில் மகிழ்ந்திருந்து தனது உரிமைப் பொருளைப் பிறர்க்கும் அளித்து தானும் உண்டு மகிழும் இன்பத்திற்கு இணையானது அவளைத் தழுவிப் பெறும் அந்த இன்பம்.

மேற்சொன்ன உரைதான் பெரும்பாலும் சொல்லப்பட்டிருக்கிறது. “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்பதுதான் வள்ளுவ நெறி. ஆனால் சில உரைவேறுபாடுகளும் உண்டு.

‘தனது முயற்சியின் பலனாய்ப் பெற்ற, தனக்குச் சொந்தமான பொருளைத் தம் இல்லத்தில் இனிதிருந்து நிம்மதியாய் அனுபவிக்கும் இன்பத்திற்கு நிகரானது அவளைத் தழுவி அடையும் இன்பம்’ என்கிற அர்த்தத்தில் பேசுகிறது ஒரு உரை. அதாவது “பகுத்துண்டலை” விட்டுவிடுகிறது.

“தம் இல்லில் இருந்து தமதை உண்பதை” ஒரு முக்கியமான இன்பமாகவே தமிழ்மரபு முன் வைக்கிறது. “தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் தீம் பழம் தூங்கும் பலவின்” என்கிறது ஒரு குறுந்தொகைப் பாடல்.

ஒரு திரைப்படத்தில் திருடித்திரியும் நாயகனை நல்வழிப்படுத்த நாயகி சொல்லும் அறிவுரை…
“உழச்சு சம்பாதிரிக்கற அந்த ஒத்த ரூபாய்ல அப்படி என்னதான் சொகம் இருக்குன்னு பாத்துருவோம்யா.”

நாமக்கல் கவிஞர் வேறொரு உரை சொல்கிறார். ‘மிரட்சியூட்டும்’ உரை அது.

அம்மா – அம் எனில் அழகு. அழகிய மாமை நிறத்தை உடையவள் என்று பொருள். மேலும் இது புணர்ச்சி இன்பத்தை வியக்கும் ஒரு வியப்புச் சொல்லாகவும் கொள்ளப்படுகிறது.

வீழும் இருவர் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. (1108)

காற்று கூட இடையில் நுழைய முடியா வண்ணம் இறுக அணைத்துக் கிடப்பதுவே காதலர் இருவர்க்கும் இனிது.

“காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்” என்கிறார் அழகர்.

ஆசையே இன்பத்துக்காரணம்; அதுவே துன்பத்துக்காரணமும்.

வீழ்தல் – விரும்புதல், வளி – காற்று, முயங்குதல்- தழுவுதல்

ஊடல், உணர்தல், புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். (1109)

ஊடுதலும், ஊடலின் அளவறிந்து அதை நீங்குதலும், பிறகு புணர்தலும் இவை காமத்தின் பயன்கள்.

புணர்ச்சியை அல்ல ஊடலையே முதலில் முன்வைக்கிறார். ஊடல் ஓர் இன்பம். அதைக் காதலர் அறிவர். உணர்தலும் முக்கியம். ஊடலை, அதன் இன்பத்தை எந்தத் தருணத்தில் முடித்துக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வும் காதல் வாழ்வில் மிக முக்கியம். அளவுக்கு மிஞ்சினால் ஊடலும் நஞ்சு. வழக்கமான புணர்ச்சியைக் காட்டிலும் ஊடலுக்குப் பின்னான புணர்ச்சியில் களியாட்டம் மிகுதியென்று களித்தோர் கூறக் கேட்டிருக்கிறேன். அப்போது நிஜமாலுமே இருவருக்குமிடையே காற்று கூட நுழைய இயலாது முந்தைய பாடலில் சொல்லியபடி.

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. (1110)

கற்குந்தோறும் கற்பவனின் அறியாமை வெளிப்படுவது போன்று அவளைச் சேரும்தோறும் சேரவே முடியாத ஏதோ ஒன்று அவளிடம் எஞ்சி விடுகிறது.

“கல்லாதது உலகளவு” என்பது போல அவளிடம் அறியா முடியா இன்பங்கள் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. அதாவது காணக்காணத் தீராதவள். எப்போதும் புதியவள்.

சேயிழை – சிவந்த அணிகலன்களை அணிந்தவள், செறிதல்- சேருதல், புணர்தல்.

எல்லா உரைகளிலும் ஒருவிதப் போதாமை உண்டு. அந்தப் போதாமையிலிருந்துதான் அய்யன் எழுந்து விரிந்து நிற்கிறார். மற்ற உரைகளைக் காட்டிலும் என்னால் சுவையாக உரை செய்து விட முடியும் என்கிற ஆசையிலும், நம்பிக்கையிலும்தான் நான் உட்பட எல்லா உரையாசிரியர்களும் கிளம்பி வருகிறோம். ஆனால் கவிதையின் ஆன்மாவை அதே லயத்தோடு சென்று தொடுவது அவ்வளவு எளிதானதல்ல. மொழிபெயர்ப்பின் எல்லாச் சிக்கல்களையும் கொண்டது உரையாக்கம்.
எல்லா உரைகளுக்கும் பொதுவான இந்தப் போதாமையைத் தவிர கலைஞர் உரையில் தனித்துக் குறை சொல்ல அதிகமில்லை. காலத்தையும் கருத்தில் கொண்டு சில இடங்களைத் துல்லியமாகவே எழுதிக் காட்டியிருக்கிறார். ஆனால் இந்தக் குறளின் உரையில், பாடலில் இல்லாத “மாம்பழ மேனி” எதையோ நினைத்து ஏங்குகிறார்.

 

https://uyirmmai.com/article/மாலை-மலரும்-நோய்-காமத்து-3/

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

மாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை

5.jpg

நலம் புனைந்துரைத்தல்

தலைவியின் அழகு நலத்தைப் புகழ்ந்துரைக்கும் அதிகாரம் இது.

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். (1111)

அனிச்சமே இதுவரை நீயே மெல்லியவள் என்றிருந்தாய். இவளோ நின்னினும் மெல்லியள்.

அனிச்சத்தை வாழ்த்துவதுபோல வாழ்த்திவிட்டு தலைவியை அதனினும் மேலான இடத்தில் வைத்துப் புகழ்கிறார். பெண்ணைப் பூவாகக் கண்ட முதல் கவி யார்? அந்தக் கவிதை எப்போது எழுதப்பட்டிருக்கும்? தொல்காப்பியத்திற்கு முந்தைய காலத்திலேயே பிறந்திருக்க வாய்ப்புள்ள இந்த உவமை, இலக்கியம் இருக்கும் மட்டும் இருக்கும். ஒரு ஆண் கொஞ்சம் மலர்ந்து மணந்த அந்த ஆதி கணத்திலேயே பூ பூவையாகி இருக்கக் கூடும்.

பூ பூவையாகி, பூவையராகி பேருந்தின் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க, பொறுக்கியொருவன் சீட்டுக்கடியில் காலை விட்டு நோண்டுவது நவீன வாழ்வின் சித்திரம். மலரைக் கண்டு மனிதன் இன்னொரு மலராக வேண்டுமென்பதுதான் இயற்கையின் விருப்பம். ஆனால் விபரீதமாக சமயங்களில் குரங்காகி விடுகிறான்.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூஒக்கும் என்று. (1112)

பலரும் பூ என்று கண்டு செல்லும் அதை அவளின் கண் என்று மயங்கி நிற்கிறாயே மடநெஞ்சே!

காதலில் வீழ்ந்த தலைவனின் கண்கள் காதலின் கண்கள் ஆகிவிடுகின்றன. அவை காண்பதெல்லாம் ஒரே காட்சி. அக்காட்சி முழுக்க ஒரே முகம்.அது தலைவியின் முகம். எங்கெங்கும் அவள் நீக்கமற நிறைந்துவிடுகிறாள். பூவில் மட்டுமல்ல, புழுவிலும் கூட காதலியின் முகமே நெளிந்து எழும் பருவம் அது.

மையாத்தல் – மயங்குதல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
 வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு (1113)

 

lady_2-225x300.jpg

அவள் மேனிதளிர்; பற்கள் முத்து; மணமோ நறுமணம்; கண்ணது வேல்; தோளது வேய்.

இதில் புத்தம் புதிய உவமை ஒன்றுமில்லைதான். ஆனால் சப்தம் புதிது. சப்த சொர்க்கம் இது. இந்த சப்த இனிமையால் ஒரு இனிப்புப் பண்டத்தை வாயுள் அடக்கிச் சுவைப்பது போல, குறளொன்றைச் சித்தத்துள் இருத்தி நாளெல்லாம் சுவைக்கலாம்.

முறி – தளிர், முத்தம் – முத்து, வெறி – நறுமணம், வேய்- மூங்கில்

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.( 1114)

என் தலைவியின் கண்களைக் கண்டால், தான் இதற்கு இணையில்லையென்று குவளை நாணி நிலம் நோக்கும்.

குவளையில் செங்குவளை,கருங்குவளை என்று இரண்டுண்டாம். கண்ணிற்கு உவமையாவது கருங்குவளை. குவளையை நான் இலக்கியங்களில்தான் அதிகம் கண்டிருக்கிறேன். நேரில் கண்டதாக நினைவில்லை அல்லது அந்தப் பெயரோடு சேர்த்துக் கண்டதில்லை. குளத்தில் காணக்கூடும் என்று சொல்கிறார்கள். முதலில் குளத்தைத் தேடிப் பிடிக்க வேண்டும். பிறகு குவளையை.

மாணிழை – சிறந்த அணிகலன்களை அணிந்தவள்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை ( 1115 )

அந்தோ! இவளொரு பிழை செய்து விட்டாள். அனிச்சப்பூவைக் காம்பு கிள்ளாமல் தலையில் சூடி விட்டாள். எனவே பாரம் தாளாது இவள் இடை ஒடியப்போவது உறுதி.

அந்தோ! என்கிற பதற்றம் சொல்லில் இல்லை, ஆனால் பொருளில் ஒளிந்துள்ளது.

‘நல்ல பறை படா’ என்கிற வரி நுட்பமானது. இடை ஒடிந்து செத்து விட்டது. சாவு வீடென்றால் பறை முழங்க வேண்டுமல்லவா? அந்தப் பறைதான் அந்த வரியில் முழங்குகிறது. ஆனால் ‘நல்ல பறை படா’ என்றெழுதுகிறார். அதாவது மங்கல வாத்தியங்கள் இல்லை. சாவிற்கு இசைக்கப்படும் பறைதான் அவள் இடைக்கு இசைக்கப்பட வாய்ப்பு என்கிறார். பரிமேலழகர் உரை இதை ‘நெய்தற் பறை’ என்கிறது.

கால் – காம்பு, நுசுப்பு – இடை

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். ( 1116)

எது மதி? எது எம் தலைவியின் முகமென அறியாது வானத்து மீன்கள் கலங்கித் தவிக்கின்றன.

விண்மீன்கள் சமயங்களில் ஓடி எரிந்தடங்குவதைக் கண்டிருக்கிறோம். அந்த ஓட்டம்தான் இந்தப்பாடலில் உள்ளதா என்பதில் தெளிவில்லை. உரைகள் பலவும் ‘தன் நிலையில் இல்லாது திரிகின்றன’ என்பது போல உரை சொல்கின்றன.

நிலவு இலக்கியத்தின் தீராத செல்வம். குன்றாத பிரகாசம். ஒவ்வொரு நாளும் தோன்றுவது ஒரே நிலவல்ல. காண்பதும் அதே கண்ணல்ல. அது ஒரு கிரகம், எங்கோ தூரத்தில் இருக்கிறது நிம்மதியாக இருக்கட்டும் என்று விட்டுவிடுவதில்லை நம்மவர். தனக்கு நேரும் ஒன்றை நிலவின் மேல் ஏற்றிப் பாடுவது கவிமரபு. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்கிற வரி நிலவு உதிர்ந்து உலகு இருண்ட பின்னும் ஒளிரும் வரியல்லவா?

காதலன் உடன் இருக்கிறான். நிலவு தண்ணென்றிருக்கிறது. மந்த மாருதம் வீசுகிறது. அவன் உடன் இல்லை. பிரிந்து சென்று விட்டான். தலைவியை விரகம் வாட்டுகிறது. உடனே நிலவில் குப்பென்று தீப்பற்றிக் கொள்கிறது. ‘நெருப்பு வட்டமான நிலா’ என்று நொந்து சாகிறாள் ஒரு தனிப்பாடல் தலைவி.

காதல் வந்ததும் நிலவில் காதலர் முகம் தெரிய வேண்டும் என்பது ஒரு நியதி. ஒரே ஒரு முகம்தான் தெரிய வேண்டுமென்பதால் நவீனக்காதலர் மதியைப் புலியென அஞ்சுவர்.

பதி – இருப்பிடம்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து ( 1117 )

தேய்வதும், நிறைவதுமான நிலவில் உள்ளது போன்று கறையேதுமுண்டோ எம் தலைவியின் முகத்தில்?

முதல் பாடலில் மதியும், முகமும் ஒத்தது என்று சொன்னவர் இதில் ஏன் ஒவ்வாதது என்று சொல்கிறார். ஒரு நாள் மங்கியும், இன்னொரு நாள் பிரகாசித்தும் தோன்றுகிற தன்மை இவளிடத்தில் இல்லை.என்றும் குன்றாத ஒளியிவள். எனவே இரண்டும் ஒன்றல்ல.

அறுதல் – தேய்தல் மறைதல் அவிர்தல் பிரகாசித்தல் அவிர்மதி- பிரகாசிக்கும் மதி

மாதர் முகம்போல ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி ( 1118)

அவள் முகம் போல நீயும் ஒளிவிட வல்லையாயின், மதியே ! நான் உன்னையும் கூடக் காதலிப்பேன்.

வாழி என்பதில் ஒரு சின்னக் கேலி ஒளிந்திருக்கிறது.அந்தக் கேலி முடியவே முடியாது என்று அடித்துச் சொல்கிறது. கூடவே ‘பாவம்.. ஏழை நிலவு’ என்பதான இரக்கமும் தொனிக்கிறது இதில்.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. ( 1119)

நிலவே! என் தலைவியின் முகமும், உன் முகமும் ஒன்று போலவே ஒளிவிட வல்லது என்று பீற்றிக்கொள்ள விரும்புகிறாயா? அப்படியாயின் பலர் காண வந்துவிடாதே.

பலர் காண வந்தால் உன் அறியாமையை எண்ணி ஊர் சிரிப்பது உறுதி. ‘வெளியில சொல்லிறாத மச்சி’ என்பது நவயுக இளைஞர்களின் கேலி. இது இக்குறளின் தொனிக்கு அருகில் இருக்கிறது.

தோன்றல் – தோன்று+அல், தோன்றிவிடாதே

மலரன்ன கண்ணாள் மலர் போன்ற கண்களை உடையவள்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். (1120)

அனிச்ச மலரும், அன்னத்தின் இறகும் தலைவியின் காலடிக்கு நெருஞ்சி என உறுத்தும். அவ்வளவு மிருது அவள் காலடி.

வதனத்தில் சந்திரபிம்பம் உள்ளது போன்று கால்களில் ஒரு ஓவியம் உள்ளது. முனிகளின் கமண்டலத்து நீரைக் காக்கைகள் குடிக்கச் செய்யும் ஓவியம் அது. “இட்டடி நோவ, எடுத்தடி கொப்பளிக்க..” என்று அமராவதியின் நடை வருத்தத்தைப் பாடுகிறான் அம்பிகாபதி. எவ்வளவு மெதுவாக வைத்தாலும் வைத்த அடி நோகுமாம். வைத்து எடுத்த அடி கொப்பளித்து விடுமாம். அவ்வளவு மெல்லியது அவள் பாதங்கள் என்கிறான்.

இந்த அதிகாரம் அனிச்சத்தில் துவங்கி அனிச்சத்தில் முடிகிறது. இடையில் வருகிற இன்னொரு அனிச்சத்தையும் சேர்த்தால் இந்த அதிகாரத்திலேயே அனிச்ச மலர் மூன்று முறை பாடப்பட்டுள்ளது. ஆனால் அனிச்சத்தை ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ போன்ற பெருமைக்கு உயர்த்திய குறள் ஒன்றுண்டு. அது ‘விருந்தோம்பல்’ அதிகாரத்தில் வருகிறது..

 “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”

உலகத்து மலர்களுள் மென்மையானது என்று குறிப்பிடப்படுவது அனிச்சம். இம்மலர் குறித்துக் குழப்பமான செய்திகளே நிலவுகின்றன. தற்போது இது முற்றாக அழிந்து விட்டது என்று சொல்கின்றனர் சிலர். வேறு சிலர் எங்கேனும் ஒளிந்திருக்கும், நம்மால்தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்கின்றனர். இதன் நிறம் குறித்த குறிப்புகள் ஏதும் இலக்கியங்களில் இல்லை. ஆனால் கேட்டதும் கொடுக்கும் கூகுளில் தேடினால், ஊதா, செம்மஞ்சள் என்று விதவிதமான வண்ணங்களில் ‘அனிச்சத்தை’ காண முடிகிறது. தேடி வந்தோரை வெறுங்கையோடு அனுப்பும் பழக்கம் கூகுளுக்கு எப்போதும் கிடையாது.

https://uyirmmai.com/article/மாலை-மலரும்-நோய்-காமத்து-4/

Share this post


Link to post
Share on other sites

மாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை

khajuraho_bb4023d4-2d2a-11e5-a8da-005056

காதற் சிறப்புரைத்தல்

காதலர், தம் காதலின் இனிதும், பித்தும் சொல்லும் அதிகாரம்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். (1121)

மென்மொழி பேசும் தலைவியின் தூவெண் பற்களில் ஊறிய நீர் பாலொடு தேனும் கலந்தது போன்ற சுவையுடையது.
பாலொடு தேன் கலந்து இதுவரை அருந்தியதில்லை. ஆயினும் உறுதியாக வாயமுதிற்கு இணையாகாது. வாலெயிற்று நீர் கொஞ்சம் காரமும் உடைத்து. காமம் இடும் காரம் அது.

‘வால்’ எனும் சொல் பழந்தமிழ்க் கவிதைகளில் அடிக்கடி இடம் பெறக்காணலாம்.அது வெண்மை, தூய்மை, பெருமை போன்று பொருள்படும். ‘வாலெயிறு ஊறிய வசை இல் தீ நீர்’ என்கிறது குறுந்தொகை. இந்தத் தீஞ்சுவை நீரைப்பெறாமல் வெறும் செல்வத்தை மட்டும் பெற்று என்னதான் பயனென்று ஒரு தலைவன் பொருட்வயின் பிரிவையே கைவிட்டுவிடுகிறான்.

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. (1122)

உடம்பில் உயிர் எப்படியோ அப்படியானது தலைவியொடு நான் பூண்ட நட்பு.

இந்த ‘உடம்பொடு உயிரை’ ஆண்டாண்டு காலமாக பாவலர் முதல் பாமரர்வரை சொல்லிச் சொல்லி தேய்க்கின்றனர். ஆயினும் அதன் ஆதார இயல்பு காரணமாக அது தேயமாட்டேனென்று அடம்பிடிக்கிறது. கவிதையில் வரும் ‘உயிரே’ எனும் விளி தேய்வழக்காகி வெகுகாலமாகிவிட்ட பின்னும், இசையில் துடிக்கும் ‘உயிரே’ இன்னும் ஜீவனோடுதான் ஒலிக்கிறது. பாடல்களில் அது இன்னும் ‘க்ளிஷே’ ஆகிவிடவில்லை.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். (1123)

என் காதலி என்னுள்ளேயே இருக்க வேண்டும். எனில் அதற்குப் பொருத்தமான இடம்தான் என்ன? என் கண்ணிற் கருமணிப் பாவாய்! நீ வேறெங்கேனும் போய்விடு.
வீழுதல் – விரும்புதல், வீழும் திருநுதற்கு- என்னால் விரும்பப்படும் அழகிய நெற்றியையுடைய தலைவிக்கு.

‘கண்ணே’ என்கிற விளியும் காலத்தில் புளித்துவிட்டது. ஆனால் அதன் பாவையை போய்விடு என்று விரட்டுவது சுவாரஸ்யமளிக்கிறது.

‘கண்ணே’விலிருந்து ‘சனியனே’விற்குச் செல்லும் பாதை உளவியல் வல்லுனர்களுக்கு உரியது. அவர்கள் அங்கு இரவு பகலாக வேலை செய்து அரிய பல முத்துக்களை அளித்து வருகிறார்கள்.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து. (1124)

வாழ்விற்கு உயிர் போன்றவள் தலைவி. எனில் அவள் நீங்கினால் என் உயிர் நீங்குகிறதென்றே பொருள்.

‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்’ என்று ஓங்கிச் சொல்கிறார் பாரதி. தண்டவாளத்திற்கு தலைகொடுத்துப் படுத்திருக்கும் காதலின் நெஞ்சுரம் நடுநடுங்கச் செய்கிறது. உறுதியாக காதலின் தலைதான் அது. அவனிலிருந்து காதலை மட்டும் உருவி எடுத்துவிட்டால் துள்ளி எழுந்து தூர ஓடிவிடுவான் தலைவன்.

காதல் பன்மைக்கு மாறிவிட்ட காலம்தான் இது. காதலில் தற்கொலைகள் குறைந்துவிட்டதாக வருத்தப்படுகிறது ஒரு திரைப்பாடல். ஆயினும் நமது நாளிதழ்களில் காதலின் ரத்தச் சிவப்புகொட்டாத நாட்கள் குறைவு. காதல் இச்சையன்றி வேறில்லை என்று சொல்வார் உண்டு. எனில் அது ஏன் இன்னொரு உடலைத் தேடிப் போகாமல் பூச்சிக்கொல்லியைத் தேடி ஓடுகிறது?

ஆயிழை – ஆய்ந்து தேர்ந்த ஆபரணங்களை அணிந்தவள்

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம். (1125)

தலைவியை, அவள் குணத்தழகை நான் மறப்பதேயில்லை. மறந்தாலன்றோ நினைப்பதற்கு.

இரண்டாயிரம் வருடங்கள் பழைமையான இந்தக் காதல் காட்சி இன்றுவரை தொடர்ந்து வருகிறது. “என்ன நெனச்சுகிட்டயா?” என்று காதலி கேட்கிறாள். “மறந்தாத்தான நெனைக்கறதுக்கு…” என்று ஒரு போடுபோடுகிறான் தலைவன். “ப்ராடுப் பயடா நீ…” என்று காதலி ஏசினாலும், அப்போது அவள் கண்களில் சின்னதொரு வெட்கம் துள்ளத்தான் செய்கிறது.

ஒள்ளமார்க் கண்ணாள் – ஒளிர்ந்து போர் செய்யும் கண்களை உடையவள்

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர் (1126)

அவர் என் கண்ணிலிருந்து போக மாட்டார். நான் இமைத்தால் அதற்காக வருந்தவும் மாட்டார். அவ்வளவு நுண்ணியர் எம் காதலர்.

ஊரில் அலர் மிகுந்துவிட்டது. அது தணியும்வரை தலைவியைக் காண்பதைத் தவிர்க்கிறான் தலைவன். தலைவியைக் காண வாராத தலைவனைப் பழித்துப் பேசுகிறாள் தோழி. அத்தோழிக்கு தலைவியின் பதிலுரையாகச் சொல்லப்படுகிறது இப்பாடல். என்னைவிட்டு எங்கேயும் போய்விடவில்லை எம் தலைவன். அவன் என் கண்ணுள்ளேதான் இருக்கிறான். ஆனால் உங்களைப் போன்ற ‘ஊனக்கண்’ கொண்டோர்க்கு அவன் தெரிவதில்லை என்று தன் காதலின் சிறப்புரைக்கிறாள் தலைவி.

பருவரல் – வருந்துதல், நுண்ணியர் – கட்புலனாகா நுண்ணியர். ‘நுண்ணிய அறிவுடையார்’ என்கிறது மணக்குடவர் உரை.

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து (1127)

என் காதலர் எப்போதும் என் கண்ணுள்ளேயே உள்ளார். அவர் வருந்தி மறைந்து விடுவாரோ என்றஞ்சித்தான் நான் மைகூட எழுதுவதில்லை.
அலங்கரித்த விழிகளைக்காட்டிலும் அவ்வளவு பிரகாசம் இந்தப் பேதையின் விழிகளில்.

கரத்தல்-, மறைதல், கெடுதல்

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து (1128)

எளிது: நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து

சூடான எதையும் நான் உண்ண அஞ்சுகிறேன். உண்டால் என் நெஞ்சத்துள் இருக்கிற காதலரை அது சுட்டுவிடாதா என்ன?

‘கண்ணுள்ளே காதலர் இல்லை’, ‘நெஞ்சத்தார்க்கு வெய்துண்டால் சுடாது’ போன்ற அசட்டு உண்மைகளால் கவிதைக்கோ, காதலுக்கோ ஒரு பயனும் இல்லை. காதல் வந்தவுடன் அறிவு பல காத தூரத்திற்குப் பறந்துவிடுகிறது. அறிவு பறந்தவுடன் இன்பம் விளைந்துவிடுகிறது. காதலில் நீ எவ்வளவுக்கெவ்வளவு முட்டாளோ அவ்வளவுக்கவ்வளவு இன்பம்.

உணவை உண்டால் அது வாய், உணவுக்குழாய் வழியே நேராக இரைப்பையை அடைந்துவிடுகிறது. இடையில் நெஞ்சத்திற்கு என்ன சோலி என்கிற உங்கள் அனாட்டமி குச்சியைக் கவிதையின் குறுக்கே நீட்டாதீர். இது கவிதை… அதுவும் காதல் கவிதை. இங்கு அது வைத்ததுதான் அனாட்டமி.

வேபாக்கு – வேகுதல், சுடுதல்

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர். (1129)

கண்ணுள்ளே இருக்கும் காதலர் மறைந்து விடுவாரோ என்றஞ்சித்தான் நான் இமைப்பதேயில்லை. இதையறியாத இவ்வூர் அவரை என் உறக்கத்தின் பகைவன் என்று பழிக்கிறது .

கரத்தல் – மறைதல் ஏதிலர்- பகைவர், அயலார்

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர். (1130)

எப்போதும் என் உள்ளத்தே மகிழ்ந்திருக்கிறான் தலைவன். அதை அறியாத இவ்வூரோ அவனை அன்பிலன் என்று தூற்றும்.

ஊருக்கு சகலமும் கண்முன்னே நிகழ வேண்டும். நெஞ்சத்துள் பார்க்கும் வல்லமை அதற்கில்லை. தலைவன் தலைவியுடன் உறையவில்லை எனவே அவனுக்கு அன்பில்லை என்று தூற்றுகிறது ஊர். ஒருவிதத்தில் உடனுறைவதைக் காட்டிலும் உள்ளத்துறைவது சேமமானது. ஓயாமல் உடனுறைகையில் பரவசங்கள் மங்கத் தொடங்கிவிடுகின்றன. காதலின் புத்தம் புதிய ப்ரிண்டில் ‘மழைக்கோடுகள்’ விழுந்து விடுகின்றன. ‘அதீத நெருக்கம் குழந்தைகளையும் வெறுப்பையும் உருவாக்கும்’ என்கிறார் ஒரு அயல் தேசத்து அறிஞர்.

 

https://uyirmmai.com/article/மாலை-மலரும்-நோய்-காமத்து-5/

Share this post


Link to post
Share on other sites

மாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை

Erotic-Sentiment-in-Indian-Temple-Sculpt

நாணுத்துறவுரைத்தல்

பிரிவுக்காலத்தில் காதல் படுத்தும்பாட்டை காதலர் வெட்கத்தைத் துறந்து விரித்து அரற்றும் அதிகாரமிது.

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி (1131)

தலைவியின் காமம் பெறாமல் துயரம் மிக்க தலைவனுக்கு மடலேறுதலைத் தவிர வேறொரு துணையில்லை.
தலைவன் பனங்கருக்குக் குதிரையேறி, தலையில் எருக்கம்பூ சூடி, மார்பில் எலும்பு மாலையணிந்து தலைவியின் வீதி வழியே வருதலை “மடலேறுதல்’ என்பர்.

மாவென மடலும் ஊர்ப: பூவெனக்
குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
ரிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே
என்கிறது குறுந்தொகை.

தலைவனுக்கு காதல் முற்றிவிட்டது. அதனால் ‘ரிதும் ஆகுப’ அதாவது எதுவும் செய்வான்.

மடலேறுதல், விரும்பாத தலைவியை வற்புறுத்தும் வழியல்ல. அவள் ஏற்கனவே காதலில்தான் இருக்கிறாள். பனங்கருக்கின் கூர்நுனி குத்திக்கிழித்ததில் பெருக்கெடுத்து வரும் குருதியின் மூலம் தன் காதலின் திடம் காட்டி அவளது பெற்றோரைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கும் முயற்சி என்று சொல்லலாம். தயவுசெய்து நீங்கள் நம்ப வேண்டும் இன்றும் ரத்தத்தில் எழுதப்படும் கடிதங்கள் புழக்கத்தில் உள்ளன. அவை மடலேறுதலின் தொல்நினைவுகளா என்ன?
மடலேறுதல் பெருந்திணையின்கீழ் வருகிறது. அதாவது பொருந்தாக் காமம். இது பொருந்தாக் காமம் ஆவது அதனுடைய மிதமிஞ்சிய தன்மையால்தான். அதாவது நடுத்தெருவில் நடப்பதால்தான். காதலின் அந்தரங்கத்து அழகைக் குலைத்து விடுவதால்தான். மற்றபடி மடலேறுதல் பழிக்கத்தக்கதல்ல என்பது மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் ஆய்வு முடிவு. காதல் காதில் கிசுகிசுக்கப்படும் கிளுகிளுப்பு மாறாக அடித்தொண்டையில் உரக்கக் கத்தும் நாராசமல்ல என்பது நம் முன்னோர் துணிபு.

‘உழந்து’ என்றாலும் வருத்தமே. இங்கு அது அதீத வருத்தத்தைக் குறித்து நிற்கிறது.
ஏமம் – காவல் , வலி – வலிமையான துணை

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. (1132)

பிரிவின் வெம்மை தாளாமல் நாணத்தை நீக்கி விட்டு நான் மடலேறத் துணிந்தேன்.
தலைவனுக்கு காமம் முற்றி விட்டது. இனியும் தலைவியைப் பெறவில்லையெனில் அவன் உயிர் உடலில் தங்காது. எனவே ‘உடலும் உயிரும்’ என்று அய்யன் எழுதுவதாகச் சொல்கிறார் அழகர்.
‘நாணினை நீக்கி நிறுத்து’ என்கிற சொற்றொடர் நாணத்தை விலக்கி வைப்பதல்ல. மாறாக அதைத் தூரஓட்டுவதின் பொருளில் தொனிக்கக் காண்கிறோம்.
நோனா – தாங்க இயலாத

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். (1133)

நாணமும் ஆண்மையும் கொண்டவனாகவே இருந்தேன் முன்பு. இன்றோ மடல்குதிரையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்னிடம்.
இன்றைய அரசியல் வாசிப்புகளால் ‘ஆண்மை’ என்கிற சொல்லில் கொஞ்சம் அழுக்கேறி விட்டது. ஆனால் இக்குறளில் ஆண்மை என்கிற சொல்லிற்கு அழகர் சொல்லும் பொருள் குறிப்பிடத்தகுந்தது. அதை ஆண் இனத்தின் பெருமையைப் பீற்றும் சொல்லாகச் சுருக்காமல் மொத்த மனித இனத்திற்குமான சொல்லாக மாற்றி விடுகிறார். அழகர் சொல்கிறார்… ஆண்மை என்பது ‘ஒன்றற்கும் தளராது நிற்றல்’.
பண்டு – முன்பு

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புனை (1134)

என் துயரத்தைக் கடக்க என்னிடம் ஒரு தெப்பம் இருந்தது. அது நாணத்தாலும், ஆண்மையாலும் ஆனது. ஆனால் என்ன பயன், அதைக் காமப் பெருவெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டதே?

புனலில் எதிர்நிற்பதே சிரமம். கடும்புனலில் என் செய்வான் தலைவன்?
சிற்றோடைக்கே சிதைந்து விடும் நெஞ்சம் சில தலைவர்க்கு. ‘ஹார்மோன் பெருக்கம்’ என்று ஆறுதல் சொல்கிறது அறிவியல்.
புனல் – வெள்ளம், புனை- தெப்பம்
உய்க்கும் – கொண்டு சேர்க்கும். இங்கு அடித்துப் போகும்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். (1135)

மாலையில் மிகுந்தெழும் துயரத்தையும் அதனிமித்தம் மடலேறுதலையும் அவளே எனக்குத் தந்தாள்.
தொடலைக் குறுந்தொடி – மாலை போல் தோன்றும் சின்னச் சின்ன வளையல்களை அணிந்தவள்.
காதலின் துயரம் நாள் முழுக்கவே உண்டு. எனினும் மாலையில் அது மிகுந்தெழும் என்று சொல்லப்படுவதுண்டு. காமத்தை ‘மாலை மலரும் நோய்’ என்று பாடுகிறார் அய்யன். மாலை மங்க மங்க காமம் கூடி விடுகிறது. மாலையை நொந்து பாடும் சங்கப்பாடல்கள் பல உள்ளன. ‘நார் இல் மாலை’ என்கிறாள் ஒரு குறுந்தொகைத் தலைவி. அதாவது “அன்பில்லாத மாலையாம்”. அன்பில்லாத மாலை என்பது பிரிவுப் பொழுதில் மட்டும்தான். கூடல் பொழுதிலோ விடியவே கூடாது என்று விரும்புகிறாள் தலைவி. விடியச் செய்யும் கோழியைப் பிடித்து பூனைக்குத் தந்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள். ‘அம்மை! பொழுது புலர்கையில் நாங்கள் கூவுகிறோமேயொழிய, நாங்கள் கூவிப் பொழுது புலர்வதில்லை’ என்று தலைவியிடம் மண்டியிட்டு மன்றாடுகிறது கோழி இனம்.
உழத்தல் – வருந்துதல்

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண் (1136)

பேதைத்தலைவியின் பிரிவுத்துயரில் துயில மாட்டாது விழித்துக் கிடப்பேன். எனவே இரவு முழுக்க மடலூர்தலையே எண்ணிக் கொண்டிருப்பேன்.
மடலூர்தலிலிருந்து பின்வாங்கும் பேச்சிற்கே இடமில்லை என்று தலைவன் உறுதிபடச் சொன்னது இது.
கண் படல் ஒல்லா – கண் தூக்கத்தில் படாமல்
உள்ளுதல் – நினைத்தல்

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில் (1137)

கடல் போன்ற காமத்தில் வருந்தித் தவித்தும் மடலேற நினையாத பெண்ணின் அடக்கத்திற்கு எதுவுமே இணையில்லை.

ஆணிற்கு மடலேறி வர ஒரு வீதியிருக்கிறது. பெண்ணினம் சகலத்தையும் நெஞ்சிற்குள்ளேயே நிகழ்த்த வேண்டியுள்ளது. அது ஆழங்காண முடியாத இருட்குகை. அபயாகரமானதும் கூட. அதனால்தான் பெண்கள் பேசத் துவங்கும்போது நம் கலாச்சாரம் அவசரமாக சிறுநீர் முட்டுவதாகச் சொல்லிவிட்டு கழிப்பறைக்கு ஓடி விடுகிறது. ஆற்றாமையை குமட்டியெடுக்க ஆணிற்கு டாஸ்மாக் இருக்கிறது. பெண் என்னென்ன செய்து ஆற்றிக்கொள்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்தது.
உழந்து – வருந்தி

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். (1138)

சென்ற பாடல் வரையும் தலைவன் கூற்று. இனி தலைவி தன் வருத்தம் சொல்கிறாள்…
காமத்திற்கு என் மனவுறுதியைக் கண்டு அச்சமுமில்லை, பாவம் என்று இரக்கமுமில்லை. மறைவில் ஒளிந்திருக்கும் அது இப்போதெல்லாம் பொதுவில் வெளிப்படத் துவங்கி விட்டது.

‘நிறையரியர்’ என்பதற்குப் பல உரைகளும் ‘நிறை இல்லாதவர்’ என்றே பொருள் சொல்கின்றன. அழகர் ‘நிறை நிரம்பியவர்’ என்கிறார். எனக்கு அழகர் உரையே பிடித்திருக்கிறது. காமத்தின் முன் ஒரு உயிர் பலவிதமாகப் போராடும் காட்சி இதில்தான் விரிகிறது. இக்கவிதை முதலில் மிரட்டிப் பார்க்கிறது. பிறகு தேம்பி அழுகிறது. அச்சுறுத்தலும், அடிபணிதலும் அடுத்தடுத்து அமைந்து இக்கவிதையை பொலியச் செய்து விடுகின்றன.

நிறை – மனவுறுதி, பலம், கற்பு
அளித்தல் – அருள்செய்தல், காத்தல்
மன்று – மன்றம், பொதுவெளி

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு (1139)

இதுவரையும் ஒளிந்திருந்ததால் என் காமத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. இப்போதோ அது வீதிகளில் வெளிப்பட்டுத் திரிகிறது.

‘மருண்டு மறுகும்’ என்பதற்கு ‘மயங்கித் திரியும்’ என்பதாகச் சொல்கின்றன பல உரைகள். என்ன மயக்கம் என்று யாரும் பொருள் விரிக்கவில்லை. முதன் முதலில் வெளிப்படும் தயக்கமும் நாணமுமாக இருக்கக் கூடும்.

‘மருண்டு மறுகும்’ என்பதற்கு ‘அம்பலும் அலருமாயிற்று’ என்று உரை சொல்கிறார் அழகர். ‘அலர்’ நாம் அறிந்ததுதான். ‘அம்பல்’ என்பதை அலரின் குழந்தைப் பருவம் என்று சொல்லலாம். அம்பல் என்பது ஒரு சிறு கூட்டம் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்வது. பிறகு அது ஊர் முழுக்கப் பரவி அலராகி விடுகிறது.
மறுகு- வீதி, மருகுதல் – மயங்குதல்

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. (1140)

என் கண் முன்பாகவே கேலிச்சிரிப்பு சிரிப்பர் சில அறிவிலிகள். அவர்களோ நான் பட்ட துயரத்தை ஒருநாளும் பட்டதில்லை.

‘பட்டாத்தான்’ தெரியும் என்பது நமது பேச்சு வழக்கு. ‘காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது அறியலர்’ என்கிறது குறுந்தொகை. அதாவது காமம் என்றால் என்னவென்று அறியாதவர்கள்தான் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதா என்ன? என்று முட்டாள்தனமாகக் கேட்பர் என்கிறது.

பட்டால் உணர்ந்து கொள்ள முடியும் என்கிறார் அய்யன். மேலும் உச்சத்தில் எழுந்து ‘ரிதின் நோயைத் தன் நோய் போல் போற்ற வேண்டும்’ என்கிறார். அய்யனே! மனுஷப் பொறப்புக்கு அவ்வளவு மேன்மை கூடுவதில்லை. இவர்கள் ‘ரிதின் நோயை’ நோண்டாமல் இருந்தாலே போதும்.

 

https://uyirmmai.com/article/மாலை-மலரும்-நோய்-காமத்து-6/

Share this post


Link to post
Share on other sites

மாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை

Header-Khajuraho.jpg

அலரறிவுறுத்தல்

காதலரிடையேயான நெருக்கத்தை ஊரார் பழித்துப் பேசுதல் ‘அலர் தூற்றுதல்’ எனப்படும். ‘அம்பல்’, ‘அலர்’, ‘கௌவை’ ஆகியவை இதைக் குறிக்கும் சொற்கள். அம்பல் என்பது மெதுவாக வாயிற்குள் முணுமுணுப்பதென்றும், அலர் என்பது வெளிப்படையாகத் தூற்றுதல் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஊர்க்கதை பேசும் இன்பம் பொதுவான மனிதப்பண்புதான் என்றாலும் அகத்திணை இலக்கியங்களில் அது பெண்களுக்கானதாகவே சுட்டப்பட்டிருக்கிறது. ‘அலர்வாய்ப் பெண்டிர்’, ‘தீவாய்ப் பெண்டிர்’, ‘நிறையப் பெண்டிர்’ என்பதாகக் குறிப்பிடப்படுகிறார்கள் அவர்கள். அலர் தூற்றும் பெண்களின் அபிநயத்தை வரைந்து காட்டுகிறார் உலோச்சனார் எனும் புலவர்.

“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி

மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற…” என்கிறது பாடல்.

தன்கதை அவலமானது. மறக்க விரும்புவது. நினைக்கக் கசப்பது. ஊர்க்கதையோ எவ்வளவு அவலமென்றாலும் சுவாரஸ்யமானது. தொட்டு நக்கச் சுவையானது.

ஊரார் அலர் தூற்றலும், காதலர் அதை எதிர்கொள்ளும் விதமும் சொல்லும் அதிகாரம் இது. முதல் ஐந்து பாடல்கள் தலைவன் கூற்று. மற்ற ஐந்து தலைவி கூற்று.

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

                பலரறியார் பாக்கியத் தால். (1141)

எம்மை வருத்த வேண்டி ஊரார் அலர் தூற்றுகிறார்கள். எம் உயிரோ அவ்வலரையே பற்றிக்கொண்டு வாழ்ந்து வருகிறது. இந்த வினோதத்தை நல்லவேளையாக இவ்வூர் அறிந்திருக்கவில்லை.

‘அலரெழ ஆருயிர் போகும்’ என்பது ஊரார் கணக்கு. அதையே பற்றிக் கொண்டு உயிர்தரித்திருப்பது காதலின் சிறப்பு. அலருள் உள்ளதென்ன? அவனும், அவளும்தானே? அவர்தம் நினைவுகள்தானே? அந்த நினைவின் இனிப்பில் பழி மறந்து மகிழ்கிறது காதல்.

‘அதனைப் பலரறியார் பாக்கியத்தால்’ என்கிற வரி நமது அன்றாடத்தின் பேச்சு வழக்காகத் தொனிக்கிறது. அன்றாடத்துள் கலந்து நிற்கும் வரி இயல்பாகவே நெஞ்சுக்குள் தங்கிவிடுகிறது.

    மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

                அலரெமக்கு ஈந்ததிவ் வூர். (1142)

அலர்தூறும் இந்த ஊர் எனக்கு நன்மையே செய்கிறது. அது அடைய அரிதான தலைவியை நான் அடைந்து மகிழ உதவுகிறது.

அலரால் காதல் வீட்டில் வெளிப்பட்டுவிடும். அலருக்கு அஞ்சி வீட்டார் நமக்கு மணமுடித்து வைப்பர் என்கிறான் தலைவன். இப்படியாக அஞ்சியஞ்சி அரிதாக சந்தித்துக் கொண்டிருந்த காதலரை அலர் நிரந்தரமாகப் பிணைத்து விடுகிறது.

அருமை – அரிது, கடினம்

மலரன்ன கண்ணாள் – மலர் போன்ற கண்களை உடையவள்

      உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

                பெறாஅது பெற்றன்ன நீர்த்து (1143)

ஊர் முழுக்க அறியுமாறு இந்த அலர் மிகுந்துவிடக் கூடாதா என்ன? அது தலைவியைப் பெறாதபோதும் பெற்றது போன்ற இன்பத்தைத் தரவல்லது.

காதல்மனம் அலருக்கு அஞ்சினாலும் அதன் அடியாழத்தில் அலர்மீதான ஏக்கமும் இருப்பதாகவே சந்தேகிக்கத் தோன்றுகிறது. கல்லூரிக் கழிப்பறைகளில் காதலர் படங்களைக் கிறுக்கி வைப்பது வில்லனுடைய வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒளிந்திருந்து துப்பறிந்தால் அது நாயகனின் கைவண்ணமாக இருக்கும் ‘திடீர் திருப்பத்தை’ காணமுடியும். காதலால் அடங்கி இருக்க இயலாது. அடிப்படையில் அது வெளிப்பட்டுக் கொண்டிருக்கவே விரும்புகிறது.

உறுதல் – தோன்றுதல், மிகுதல் நீர்த்து – தண்மையானது, இனிமையானது

    கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

                தவ்வென்னும் தன்மை இழந்து. (1144)

அலரால்தான் பற்றிச் செழிக்கிறது எம் காதல். அலரின்றேல் வாடிச் சுருங்கிவிடும்.

தூற்றத் தூற்ற கெடுவதற்குப் பதிலாக வளர்வதென்பது காதலின் இயல்பு. அலர் காதலை மேலும் பலமிக்கதாக்குகிறது. அது எதிரி போல் தோன்றும் நண்பன். வெல்ல வேண்டும் என்கிற வேட்கையையும் அதன் வழியே சக்தியையும் அளிப்பதால் ஒருவிதத்தில் எதிரியே நண்பன்.

கவ்வுதல் – பற்றுதல் தவ்வுதல் – குறைதல், கெடுதல், சுருங்குதல்

களித்தொறும் கள்உண்டல் வேட்டற்றால் காமம்

                வெளிப்படுந் தோறும் இனிது. (1145)

கள்ளுண்ட களிப்பில் மேலும் மேலும் அதையே விரும்பி உண்பது போல, காமம் ஒவ்வொரு முறை வெளிப்படுந்தோறும் இனிக்கும்.

சின்ன இன்பத்தோடு வீடு திரும்ப யாராவது விரும்புவார்களா அய்யனே? இன்பத்திற்குப் பிறகு இன்பம், இன்பம், இன்பம் என்று அடுக்கிப் பார்க்கவே மனித மனம் விழைகிறது. அதனால்தானே 5ஆவது பெக், 6ஆவது பெக் என்று நீண்டு கொண்டே போகிறது. முகநூல் ஸ்டேட்டஸ்கள், இன்பாக்ஸ் இன்பங்கள், சங்கீதங்களில் நீந்துவது, குரங்காகிக் குதிப்பது, போர்னோவில் திளைப்பது, பார் பாயை இம்சிப்பது, பக்கத்து டேபிளோடு கைகலப்பது என்று அதிவேகத்தில் போய் ஏதேனும் ஒரு புளியமரத்தில் முட்டிமோதி நிற்கிறது இன்பம்.

வேட்டம் – வேட்கை, விருப்பம்

   கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

                திங்களைப் பாம்புகொண் டற்று. (1146)

தலைவனைக் கண்டு நான் காதல் கொண்டதென்னவோ ஒரு நாள்தான். ஆனால் நிலவைப் பாம்பு பிடித்த கதையின் விந்தை ஊர் முழுக்கப் பரவியது போல அலராகி விட்டதெம் காதல்.

ஒருநாள் எனில் ஒரே நாள் என்று கொள்ள வேண்டியதில்லை. ‘தலைவி தன் நெஞ்சத்து நிறைவின்மையால் பெற்றும் பெறாதவள் போல் இப்படி புலம்புவதாக’ தன் குறுந்தொகை உரையில் குறிப்படுகிறார் உ.வே. சா. தலைவனின் தேரை நான் பார்க்கிறேனோ இல்லையோ எனக்கு முன் ஊர் பார்த்துவிடுகிறது என நோகிறாள் ஒரு சங்கத்தலைவி.

        ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

                நீராக நீளும்இந் நோய் (1147)

ஊரின் தூற்றலையே எருவாகக் கொண்டு அன்னையின் திட்டுகளையே நீராகக் கொண்டு நாளும் வளர்கிறது எம் காதல் நோய்.

‘அலரில் தோன்றும் காமத்து மிகுதி’ என்கிறது தொல்காப்பியம். அது இப்போது சடசடக்கும் தீயாகி விட்டது. குறுக்கே எது வந்தாலும் எரித்து முன் செல்லும் தினவு பூண்டுவிட்டது.

‘தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி…’ என்கிற இன்றைய அலங்காரம் இக்கவிதையைப் படிக்கையில் நினைவில் எழுகிறது.

       நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

                காமம் நுதுப்பேம் எனல். (1148)

நெய்யை ஊற்றித் தீயை அணைப்பது போன்ற மடமை, அலரை ஊற்றிக் காதலை அணைப்போம் என்பது.

பொதுவாக மனிதனுக்கு எதில் எது எரியும்? எதில் எது அடங்கும்? என்பதில் அவ்வளவு தெளிவில்லை. அதுவும் காதல் போன்ற வினோத நோய்களின் முன் அவனது எந்த மருந்தும் வேலை செய்வதில்லை.

நுதுத்தல் – அவித்தல், அழித்தல்.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

                பலர்நாண நீத்தக் கடை. (1149)

இது பிரிவுக்காலத்தில் தூற்றும் ஊருக்குத் தலைவியின் பதில்…

ஊர் அலருக்கு நான் ஏன் நாண வேண்டும்? ஊர் மொத்தமும் நாணும்படி ‘அஞ்சாதே… விரைந்து வருவேன்’ என்று எம் தலைவன் உறுதி சொல்லியிருக்கையில்.

‘சுறாக்கள் திரியும் பெரிய கடல் கூட சமயங்களில் தூங்கிவிடும். ஆனால் அலர்ப்பெண்டிரோ அதனினும் துஞ்சார்…’ என்று புலம்புகிறாள் ஒரு சங்கத்தலைவி. சுறாவின் பிளவுண்ட வாயிலும் கொடியது ஊர்வாய்.

‘ஓம்புதல்’ என்கிற சொல் பழந்தமிழ்க்கவிதைகளில் ஒரே சமயத்தில் ‘காத்தல்’ என்றும்  ‘விலக்கல்’ என்றும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ நாம் நன்கறிந்த ஒன்று.

நீத்தல் – பிரிதல் ஓம்புதல் – தவிர்த்தல், விலக்குதல்.

      தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

                கௌவை எடுக்குமிவ் வூர். (1150)

நான் விரும்பியபடியே இந்த ஊர் முழுதும் எம் காதல் அலராகிவிட்டது. இனிக் காதலர் விரும்பும்போது யாம் மணமுடித்துக் கொள்வோம்.

‘அன்றைய அலர்’ நன்றே என்கிற செய்தி இப்பாடலில் தெளிவாக உள்ளது. அது காதலைத் திருமணத்தில் சென்று சேர்க்கிறது. அடுத்தடுத்த அதிகாரங்களில் மணவாழ்வின் காதல் காட்சிகளைக் காணப்போகிறோம். அதாவது ‘கற்பியல்’ துவங்குகிறது.

அலரின் நவீன வடிவே நாசமாய்ப் போன அந்த ‘நாலுபேர்’. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் அந்த ‘நாலுபேரின் நாக்கு’ கூடவோ, குறையவோ வினையாற்றவே செய்கிறது. அந்த நான்கு நாக்கிற்கு எவன் செவிடோ அவனே பாக்கியவான்.

இன்று நாம் மனமதிர அறிய நேரும் ‘சாதி ஆணவக்கொலைகளில்’ ஊர்வாய்க்கு குறிப்பிடத்தக்க பங்கிருக்கிறது. அலருக்கு அஞ்சிய சங்கத்து அன்னை தன் மகளை ‘சிறுகோலால் அலைந்தாள்’. இன்றைய அன்னையோ பெற்ற மகளை வெட்டிப் புதைக்கவும் சம்மதித்து விடுகிறாள்

 

https://uyirmmai.com/article/மாலை-மலரும்-நோய்-காமத்து-7/

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அருமையான விளக்கம் - அம்பல், அலர்..காதலில் பிறர் தூற்றல் என்பது இயல்பே. அடுத்தவர் விடயம் தொட்டு நக்கச் சுவையானது! 

வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள் கிருபன். எம் போன்ற தமிழ் மாணாக்கர்களுக்கு மிகவும் பயனள்ளதாகவுள்ளது.

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, அருள்மொழிவர்மன் said:

அருமையான விளக்கம் - அம்பல், அலர்..காதலில் பிறர் தூற்றல் என்பது இயல்பே. அடுத்தவர் விடயம் தொட்டு நக்கச் சுவையானது! 

வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள் கிருபன். எம் போன்ற தமிழ் மாணாக்கர்களுக்கு மிகவும் பயனள்ளதாகவுள்ளது.

வாழ்த்துக்கள் இந்தத் தொடரை உயிர்மை மாத இதழில் இசை எனும் பெயரில் எழுதுபவருக்குத்தான் சேரவேண்டும்.

படிப்பதை யாழில் பகிர்வதை மட்டும்தான் நான் செய்கின்றேன் நண்பர் அருள்மொழிவர்மன்.

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, கிருபன் said:

வாழ்த்துக்கள் இந்தத் தொடரை உயிர்மை மாத இதழில் இசை எனும் பெயரில் எழுதுபவருக்குத்தான் சேரவேண்டும்.

படிப்பதை யாழில் பகிர்வதை மட்டும்தான் நான் செய்கின்றேன் நண்பர் அருள்மொழிவர்மன்.

அப்படியானால் பகிர்வுக்கு நன்றி..

Share this post


Link to post
Share on other sites

நல்ல விளக்கங்கள்...... பகிர்வுக்கு நன்றி  கிருபன்.....!   😁

Share this post


Link to post
Share on other sites

மாலை மலரும் நோய்: காமத்துப்பால் உரை

isai.png

இனிவரும் பதினெட்டு அதிகாரங்களும் கற்பியலின்கீழ் வருகிறது. அதாவது, காதல் கொண்டு மணம்புரிந்தபின் நிகழும் நிகழ்ச்சிகளைப் பேசுவது. கற்புகால புணர்ச்சியை ‘நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சி’ என்கிறது தொல்காப்பியம். நெஞ்சம் அச்சத்தின் தளையிலிருந்து விடுபட்டு நிகழும் நிம்மதியான புணர்ச்சி என்று இதை விளக்கலாம். ஆனால் ‘திருட்டு மாங்காய்க்குத் தித்திப்பு கூட’ என்கிறது நம் பழமொழி. திருட்டில் ஒரு சாகஸமுண்டு. அந்த சாகஸமும் அதுதரும் பரவசமுமே தித்திப்பைக் கூட்டிவிடுகின்றன என்பது களவில் வல்லோர் கூற்று. காதல் பருவத்துப் புணர்ச்சி உற்சாகமிக்கதெனினும் கூடவே அகப்பட்டுவிடுவதற்கான அச்சமும் நடுக்கமும் கொண்டதுதான். மணமேடை ஏறியபின்தான் ‘நிதானமாக நின்று விளையாட முடியும்’ என்கிறார் தொல்காப்பியர்.

‘நிதானமான ஆட்டத்தில்’ சமயங்களில் சலிப்பேறிவிடுகிறது. ‘காதல் ஒரே சோப்பில் குளிக்கும். இல்லறம்தான் ஆளுக்கு ஒரு சோப்பு கேட்கும்’ என்பது பாதசாரியார் பொன்மொழி. திருமணத்திற்குப் பிறகு காதல் போய்விட்டதென்று தம்பதியர் சிலர் புலம்பக் கேட்டிருக்கிறோம். அது போனவழி ஆய்வுக்குரியது. சரி… நாம் குறளுக்குத் திரும்புவோம்.

கற்பியலின் முதல் அதிகாரம் ‘பிரிவாற்றாமை’. தலைவி, தலைவனின் பிரிவை ஆற்றமாட்டாது வருந்தும் அதிகாரம். கல்வி கற்கப் பிரிவது, தூதுவனாகப் பிரிவது, வேந்தனின் வினைமுடிக்கப் பிரிவது, பரத்தையர் பிரிவு எனப் பல பிரிவுகள் பேசப்படுகின்றன சங்கத்தில். ‘பொருட்வயின் பிரிவு’ நாம் நன்கறிந்தது. இன்றுவரை நம்மை விடாது வதைத்துத் கொண்டிருப்பது. ‘பொருள்வயின் பிரிவு’ என்கிற தலைப்பிலேயே விக்கிரமாதித்யன் எழுதிய கவிதையொன்று இங்கு நினைக்கத்தக்கது.

பிரிவாற்றாமை

            செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

                வல்வரவு வாழ்வார்க் குரை. (1151)

‘செல்லமாட்டேன்’ என்பதை மட்டும் எம்மிடம் சொல். மற்றதனைத்தையும் நீ திரும்புகையில் யார் உயிர்தரித்திருக்கப் போகிறார்களோ அவர்களிடமே சொல்லிக்கொள். எம்மிடம் சொல்லிப் பயனில்லை.

தலைவன் சொல்லச் சொல்லவே அது மூர்க்கமாக மறுக்கப்படும் சித்திரத்தை இக்கவிதையில் காணலாம். பிரிவு எனும் சொல்லுக்கே காதைப் பொத்தித் தரையில் அமர்ந்துவிடும் பெண் இவள். இந்த இரண்டடிக்குள் ஒரு பிணம் கால் நீட்டிப் படுத்திருக்கிறது. ‘வல்வரவு’ என்பது நல்வரவிற்கெதிரான நல்லதொரு சொல்லாக்கம்.

தலைவன் பிரியும் எண்ணத்தைப் பக்குவமாக முதலில் தோழியிடம்தான் சொல்வான் என்பதால் இது தலைவனது பிரிவை எதிர்த்துத் தோழி உரைத்தது என்கிறார் அழகர். தலைவி கூற்றாகக் கொண்டாலும் எதுவும் குறைவதில்லை மாறாக சூடு கூடுகிறது.

இவ்வதிகாரத்தில் வரும் பிற குறள்கள் யாவும் தலைவி தோழிக்குரைத்தது.

   இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

                புன்கண் உடைத்தால் புணர்வு (1152)

முன்பெல்லாம் எனக்கு அவர் பார்வையேகூட இன்பம் தருவதாய் இருந்திருக்கிறது. இன்றோ அவர் புணர்ச்சியும் கூட பிரிவிற்கான குறிப்பாய் அமைந்து வாட்டுகிறது.

தலைவன் வழக்கத்திற்கு மாறாய் அதீதமாய் அன்பைப் பொழிதல், கூடுதலாய் புணர்ச்சியை விரும்புதல் போன்றவை அவன் பிரிந்து செல்லப் போவதற்கான குறிப்பாய் அமைந்துவிடுகின்றன. எனவே புணர்ச்சியும் கசந்துவிடுகிறது. ஒரு சங்கப் பாடல் இதை ‘கழிபெருநல்கல்’ என்கிறது. அதாவது ‘மிகுதியான அன்பை நல்குவது’’

ஒரு ஆண் நெருங்கி அருகமர்ந்து, மெல்லத் தலைவருடி  “மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!”  என்று துவங்கும்போது, பெண் உள்ளம் உருகி கண்கள் சொக்குவதற்குப் பதிலாக அதிகமாக விழித்துக்கொள்ள வேண்டும் என்பது நம் முன்னோர் முடிபு.

பார்வல் – பார்வை, புன்கண் – துன்பம், இன்கண் – இன்பம்

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

                பிரிவோ ரிடத்துண்மை யான். (1153)

பிரிவுத்துயரை நன்கறிந்த தலைவனும் ஒருநாள் பிரிந்துதான் போவானெனில்  ‘பிரியேன்’ என்று அவன் உரைத்த உறுதிக்கு என்னதான் பொருள்?

‘அறிவுடையார்’ என்பது இங்கு பிரிவின் துயரங்களை அறிந்தவர் என்றாகிறது. இவன் கொஞ்சம் விசாலமான அறிவுடையவன். அவனுக்குத் தெரிந்துவிட்டது நாள் முழுக்கக் கிடந்தால் சப்பரமஞ்சம் சலித்துவிடுமென்று. தவிர காதலின் பரவசத்திற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல கடமை நிறைவளிக்கும் களிப்பு. ‘செயலாற்றி முடித்தபின் / அறிக / முடிந்த செயலது நன்மையென மலர்ந்த முகம்’ என்கிறது தம்மபதம்.

தேற்றம் – தெளிவு, உறுதி

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

                தேறியார்க்கு உண்டோ தவறு. (1154)

‘அஞ்சாதே… பிரியேன்…’ என்று வாக்களித்திருந்தவர் அவ்வாக்கில் பிறழ்ந்து பிரிந்து செல்வாராயின், பிழை அவரிடமேயன்றி அவர் சொல்லை நம்பிய என்னிடமில்லை.

‘அளித்தஞ்சல்’ என்பது அன்பை அருளி அஞ்சாதே என்றது.

     ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

                நீங்கின் அரிதால் புணர்வு. (1155)

என்னை அழியாது காக்கவேண்டுமாயின் தலைவனைப் பிரியாது காக்கவேண்டும். மீறிப் பிரிந்துவிட்டால் பின் சேர்வது கடினம்.

தலைவன் பிரிந்துவிட்டால் தலைவியின் உயிரும் பிரிந்துவிடுமாம். பிறகெப்படி புணர்வது? என்பது அழகர் தரும் விளக்கம்.

ஓம்புதல் – காத்தல், அமைந்தார் – காதலுக்கு அமைந்தார் தலைவர்.

   பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

                நல்குவர் என்னும் நசை (1156)

‘பிரிகிறேன்’ என்று வாயெடுத்துச் சொல்லுமளவு துணிந்துவிட்ட பிறகு, அக்கொடியோன் திரும்பி வந்து நம்மை அன்பு செய்வான் என்று ஆசையோடு காத்திருப்பது வீண்.

பிரிந்து செல்லும்போதல்ல, ‘பிரியப் போகிறேன்’ என்று சொல்லும்போதே தலைவன் கொடியவனாகிவிடுகிறான். தலைவனின் கல்மனம் தலைவியின் தலைமேல் விழுந்து அழுத்துகிறது.

வன்கண்ணார் – கொடியவர், நசை- – ஆசை, விருப்பம்.

  துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

                இறைஇறவா நின்ற வளை. (1157)

தலைவன் நம்மைத் துறந்து சென்றதைத் தூற்றாமல்விடுமோ மணிக்கட்டிலிருந்து கழன்று விழும் என் வளைகள்?

தலைவனின் பிரிவை அறிவித்த தோழிக்கு தலைவியின் பதில் இது என்கிறார் அழகர். நீ வந்து சொல்லும் முன்பே நெகிழ்ந்து விழுந்த என் வளைகள் சொல்லிவிட்டன என்கிறாள் தலைவி. எனில், இது வள்ளுவரின் மாந்த்ரீக எழுத்து… பிரிவைக் கண்டு வளை நெகிழவில்லை வளை நெகிழ்ந்ததைத் கண்டு தலைவன் பிரிந்துவிட்டான் என்பதை அறிந்துகொள்கிறாள்.

‘துறந்தமை’ என்கிற சொல்லைக் கொஞ்சமாக இறந்த காலத்திற்கு நகர்த்துவதன் மூலம் இந்தக் குறளையே ஒரு மாயாஜாலக் காட்சிபோல் மாற்றிவிடுகிறார் அழகர். அய்யனின் குறளும் அதற்கு ஏதுவாகவே உள்ளது. அய்யனுக்கு அழகர் ஒரு வரம்.

இறை – மணிக்கட்டு

   இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

                இன்னாது இனியார்ப் பிரிவு. (1158)

பிரிந்து சென்ற தலைவனையும், அச்செய்தியைக் கொண்டுவரும் தோழியையும் ஒருசேரக் கடிந்து தலைவி உரைத்தது இது. ஆனால் பொதுவாகச் சொல்வதுபோல சொல்கிறாள்.

நமது துயரத்தைப் போக்கவல்ல உறவுகள் இல்லாத ஊரில் வாழ்வது கொடிது, அதனினும் கொடிது நமக்கு இனியர் நம்மைப் பிரிந்து செல்வது.

இரண்டாவது பகுதி தலைவரைக் கடிந்தது என்பது தெளிவு. முதற்பகுதி தோழிக்கானது. அவள் தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்தவில்லையல்லவா? எனவே, “நீ தோழியே இல்லை..” என்று சொல்லிவிடுகிறாள் தலைவி.

கெட்ட செய்திகளுக்கும், அதைக் கொண்டுவருபவர்களுக்கும் சமயங்களில் யாதொரு தொடர்பும் இருப்பதில்லை. ஆனால் ஒரு துர்நினைவின் முகமாக அவரது முகம் காலத்திற்கும் நம்முள் படிந்துவிடுகிறது.

இனன் – இனம், உறவு இல்ஊர் – இல்லாத ஊர்

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

                விடிற்சுடல் ஆற்றுமோ தீ. (1159)

தொட்டால் சுடுவதன்றி, காமம்போல் விட்டால் சுடுமளவு கொடியதல்ல தீ.

தீ தன்னை நெருங்கியவரைத்தான் சுடுகிறது. காமமோ, தன்னைவிட்டுப் பிரிவோரை வருத்தும் விநோதமானது. பிரியப் பிரிய வருத்தம் கூடுகிறது. தீ சடசடக்கிறது. ‘குறுகுங்கால் தண்ணென்னும் தீ’ என்று முன்பும் சொல்லியிருக்கிறார் அய்யன்.

காமத்திற்கும் அக்கினிக்கும் அவ்வளவு பொருத்தம் ‘செம்புலப் பெயல்நீர் போல’. ‘காமாக்னி’ என்கிற சொல்லாக்கத்தை முதன்முதலில் வாசித்தபோது அடைந்த கிளர்ச்சியை மறைக்க விரும்பவில்லை. அந்தப் பெயர் தாங்கி நின்ற சினிமா போஸ்டருக்கு அந்தப் பெயரே போதுமானதாக இருந்தது. படங்கள் ஏதும் அவசியப்படவில்லை. எங்கள் ஊர் நி.ஙி.டீலக்ஸில் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

காமத்தை தீயொடு ஒப்பிடுவது பொது வழக்கம். அய்யனோ, காமம் தீயினும் தீயது என்கிறார்.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

                பின்இருந்து வாழ்வார் பலர். (1160)

பிரிவின் அல்லல்களைப் பொறுத்துக்கொண்டு உயிர் வாழும் மகளிர் பலரும் இவ்வுலகில் இருக்கவே செய்கிறார்கள்.

நான் அவர்களுள் ஒருத்தியல்ல என்பது குறிப்பு. அது கவிதைக்குள் ஒளிந்திருக்கிறது.

இடைநில்லா இசைக்குறிப்பு போல் வழுக்கிச் செல்கிறது இக்கவிதை. அதன் ஆக்ரோஷம் நம்மை அச்சுறுத்துகிறது.

அழகர் முதல்வரியை பிரியும் போது நேரும் கொடுந்துயர் என்றும், இரண்டாம் வரியை பிரிவை ஆற்றமாட்டாது வருந்தும் துயர் என்றும் இரண்டாகப் பிரித்து விடுகிறார். அவரைப் பின்பற்றி வேறுபல உரையாசிரியர்களும் அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.

அதிகாரத்தின் முதல்பாடலில் காதுகளைப் பொத்திக்கொண்ட தலைவி இன்னமும் எடுக்கவில்லை. அப்போது சொன்னதைத்தான் அவள் இப்போதும் சொல்கிறாள். ஊஞ்சலொன்று ஆடுகிறது மரணத்திலிருந்து மரணத்திற்கு.

 

https://uyirmmai.com/article/மாலை-மலரும்-நோய்-காமத்து-8/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வ.சக்தி பொது ஜன பெரமுன  கட்சி ஒரு இனவாதக் கட்சியல்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கட்சியாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ  வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (18)  காலை களுதாவளை யில் அமைந்துள்ள அவரைது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..... நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சில கட்சிகளின் இனவாதத்தினால் தான், எமது கட்சிக்கு இம்மாவட்ட த்தில் எதிர்பார்த்த அளவு வாக்குகள் கிடைத்திருக்க வில்லை.    இருந்த போதிலும் கோட்டாபய அமோக வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல அபிவிருத்திகளும் நடைபெறும்.   நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்  ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு  வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் பொதுஜன பெரமுன  கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.  http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/பொதுஜன-பெரமுன-இனவாதக்-கட்சியல்ல/73-241161
  • -க. அகரன்   வவுனியா விவசாயக் கல்லூரி வளாகத்தில், படுகொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம், வவுனியா விவசாயக் கல்லூரியில், இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா விவசாயக் கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாக இரத்ததான நிகழ்வு நடத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன. http://www.tamilmirror.lk/வன்னி/நினைவுதினம்-அனுஷ்டிப்பு/72-241145
  • சிவாஜிலிங்கம் இம்முறை மகிந்த கேட்ட 25,000 வாக்குகளை பெறவில்லை. 12,256 வாக்குகளை பெற்றார். 2010 ஜனாதிபதி தேர்தலில் பெற்ற 9,662 வாக்குகளை விட அதிகம் தான். 😀 இம்முறை பாராளுமன்ற தேர்தலிலிலும் சுயேட்சையாக போட்டியிடும் எண்ணம் உள்ளதா? 2015 இல் குருணாகலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 😀
  • International Criminal Court may investigate UK 'war crimes cover-up' British Special Forces have been accused of covering up the killings of four young Afghans in 2012 The International Criminal Court could open its first investigation into the British military following a BBC programme about alleged war crimes. Panorama found evidence the state had covered up killings of civilians by UK troops in Iraq and Afghanistan. The ICC said it took the findings very seriously. The MoD has said the allegations are unsubstantiated. The MoD said it had co-operated fully with the ICC and saw no justification for further interventions by the court. Public inquiry A formal investigation by the ICC, based in The Hague in the Netherlands, would be the first time it has taken action against any UK nationals for war crimes. The ICC's Office of Prosecutor said it would "independently assess" the findings of Panorama, which could be "highly relevant" to their decision whether to open a landmark investigation into the UK.  The court has previously concluded there is credible evidence that British troops committed war crimes in Iraq. Most of those cases involve allegations of the mistreatment of detainees. The best known is that of Baha Mousa, a hotel worker in Basra who died after being tortured and beaten by British troops in 2003. It led to a public inquiry and the only conviction of a British soldier for war crimes in Iraq.  However, Panorama, working with the Sunday Times, has uncovered new information about alleged killings in British custody. Detectives from the Iraq Historic Allegations Team (IHAT), which investigated alleged war crimes committed by British troops during the occupation of Iraq, say they found evidence of widespread abuse occurring at a British army base in Basra three months before Mousa was killed. Camp Stephen, Iraq, where alleged abuse took place It happened at Camp Stephen, run by the Black Watch, 3rd Battalion, Royal Regiment of Scotland. IHAT investigated the deaths of two men, who died within a week of each other, in May 2003. The MoD accepts both were innocent civilians. IHAT gathered statements from British soldiers and army staff that described how the two men were tortured before being found dead with bags tied over their heads.  This summer, British military prosecutors decided no-one would be prosecuted in connection with the two deaths.  When he was shown Panorama's evidence, former Director of Public Prosecutions Lord Macdonald said he thought it was "staggering" that no soldier had been charged. "I think the conclusion begins to become rather obvious, that prior to their deaths, it's overwhelmingly likely that these men were physically abused." 'Extensive investigation' On Sunday, Foreign Secretary Dominic Raab told the BBC "all of the allegations, that had evidence, have been looked at". The MoD said military operations are conducted in accordance with the law and there had been an extensive investigation of allegations. "Investigations and decisions to prosecute are rightly independent from the MoD and have involved external oversight and legal advice," a spokesperson told the BBC. "After careful consideration of referred cases, the independent Service Prosecuting Authority decided not to prosecute." "The BBC's claims have been passed to the Service Police and the Service Prosecuting Authority who remain open to considering allegations." Panorama, War Crimes Scandal Exposed is on BBC One at 21:00 GMT on Monday 18 November.
  • -க. அகரன், செல்வநாயகம் ரவிசாந் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, தான் உங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளாமைக்கு தான் மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லையெனவும் கூறினார். புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழத்துத் தெரிவித்து அனுப்பியுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒரு சிலர், தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரு கொடியின் கீழ் இணைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட நடவடிக்கையானது, வகுப்புவாதப் பாதையில் பிரசாரமாக நகர்வதை உணர்ந்த தான் உங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளவில்லையெனவும், அதற்காக மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லை என தான் கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நடந்தேறிய தேர்தல், தான் நினைத்தது சரியென நிரூபித்துக் காட்டியுள்ளதெனத் தெரிவித்துள்ள ஆனந்த சங்கரி, உள்ளூராட்சி, பொதுத்தேர்தல்கள் மட்டுமன்றி சகல விடயங்களிலும் இனவாதம் தலைதூக்கிய போதெல்லாம் தான் வெறுப்படைந்திருந்தது நீங்கள் அறியாததல்லவெனவும் கூறியுள்ளார். ஒரு குழுவினர் ஒன்றிணைந்து, தாங்கள் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், தமது கோரிக்கைகள் 13ஐயும் நிறைவேற்ற வேண்டுமெனக் கூறியிருந்தனரென ஞாபகமூட்டியுள்ள அவர், அக்குழுவில் பலர் இருந்தபோதும், ஓர் அமைப்பைச் சேர்ந்தவர் கூட தம்முடன் இணையுமாறு தன்னிடம் கோரவில்லையெனவும் தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பு கொண்டு இணையுமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தால், நிச்சயமாக தான் அவர்களுடன் இணைந்திருக்க மாட்டேனெனத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் முன்வைத்த 13 கோரிக்கைகளில் முதலாவதே சர்ச்சைக்குரிய இனப் பிரச்சினை பற்றியதாகுமெனவும் கூறியுள்ளார். இனப் பிரச்சினைக்கானத் தீர்வை, தாங்கள் ஜனாதிபதிப் பதவி வகிக்கின்ற காலத்திலேயே நிறைவேற்றுவீர்கள் எனத் திடமாக நம்புவதாகவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பிரசாரத்தில்-கலந்துகொள்ளாமைக்கு-மன்னிப்புக்-கோரவேண்டிய-அவசியமில்லை/71-241141