• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
poet

நன்றி யாழ் இணையம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

”முரட்டு மேதை என்பர் மேலோர்
'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்
கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்.”

.

Image may contain: one or more people, beard and indoor

.

இது என் சுய தரிசனக் கவிதை. யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவனாக செயல்பட்ட நாட்க்களில் எழுதியது. ஒரு போராட்டத்தின்போது பல்கலைக்கழக தலைவராக இருந்த பேராசிரியர் கைலாசபதி என்னை intellectual and Thug என திட்டினார். அவருக்கு பதிலாக எழுதி பல்கலைகழக மாணவர் மன்ற அறிவுப்பு பலகையில் ஒட்டிய கவிதை. தற்செயலாக யாழ் இணையத்தில் தேடியபோது கிருபன் என்னைபற்றிய குறிப்புகளோடு பதிவிட்டிருந்தார். யாழ் இணையத்துக்கும் கிருபனுக்கும் நன்றிகள். என் இளமைக் காலம்பற்றி கிருபன் எழுதிய குறிப்பின் இணைப்பு கீழே இணைக்கபட்டுள்ளது. 
.
கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
.
முரட்டு மேதை என்பர் மேலோர்
'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்
கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்.
.
ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன்
ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்
கையா லாகாத கோழையைப் போல
கொடுமையும் சூதும் நிறைந்த உலகை
சகித்தும் ரசிக்கும் பாவனை செய்தும்
சான்றோன் என்று மாலைகள் சூட
நானும் எனது நண்பரும் விரும்போம்.
.
வீணையோடும் தூரிகையோடும்
மூலைமட்டம் ஸ்டெதஸ்கோப் அரிவாள்
சம்மட்டி போன்றவை பழகிப் போன
கைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்தி
எனது தோழர் புடை சூழ்வார்கள்.
.
பொன்னாய் அழகு பொலியினும் விலங்கை
அப்பிய மலமாய் அருவருத் துதறுவோம்.
வெடி மருந்துகள் தோய்ந்த எம்நாவு
ஓய்ந்திருக்காது.
தடைகள் சீனப் பெரு மதிலாயினும்
தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்
அங்குரார்ப்பணம் செய்வேன்.
தடைகளை தகர்த்தும் விலகியும் தொடர்ந்து
அதிமானிடராய் முன் சென்றிடுவோம்.
விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி
எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்.
.
கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும்
மானிடர் எமது வம்சக் கொடியை
சவக்குழி விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ?
விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ?
.
விடுதலை பெற்ற தோழியரோடு
கட்டாந் தரையின் வாழ்வே உவப்பு.
பெரிய இடத்துச் சீமை நாய்களாய்
கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில்
எமது தோழர் தோழியர் தேயார்.
.
கொடிய உலகம் சான்றோன் என்னவும்
இளம் சீமாட்டிகள் இனியவன் என்னவும்
குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்
பெறுமதி கூடிய காலணி இலங்கும்
கால்களைத் தேடியே முத்தம் கொடுப்பர்.
பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்
உலகம் அவர்களைக் கெளரவம் செய்க.
.
வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்
வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்
எங்களுக்காக இருக்கவே செய்யும்.
.
- 1979
யாழிணையத்தில் கிருபன் எழுதிய குறிப்பு.
https://yarl.com/…/162206-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%…/…

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

நன்றி இணையவன்

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, poet said:

தற்செயலாக யாழ் இணையத்தில் தேடியபோது கிருபன் என்னைபற்றிய குறிப்புகளோடு பதிவிட்டிருந்தார். யாழ் இணையத்துக்கும் கிருபனுக்கும் நன்றிகள். என் இளமைக் காலம்பற்றி கிருபன் எழுதிய குறிப்பின் இணைப்பு கீழே இணைக்கபட்டுள்ளது

கவிஞர் ஐயா,

இந்தக் குறிப்பை எழுதியவர் வ. ந. கிரிதரன். யாழில் அதை ஒட்டிய வேலையை மட்டும்தான் நான் செய்தேன்! எனவே உங்கள் நன்றி பதிவுகள் இணைய ஆசிரியர் வ. ந. கிரிதரனுக்கே போகவேண்டும். அப்படியே முகநூலிலும் திருத்திவிடுங்கள்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

அன்றெழுதிய கவிதையே ஆக்ரோஷமாய் இருக்குது கவிஞரே. அருமை....!   👍

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நன்றி கிருபன்.

பெயர் ஒற்றுமையை பார்த்துவிட்டு கிருபனும் கிரிதரனும் ஒருவர் என நினைத்துவிட்டேன். 78 அல்லது 79ல் யாழ்பாண கட்டிட தொன்மங்களை பாதுகாக்கும் ஆர்வத்துடன் இளம் ஆய்வாளராக வ.ந.கிரிதரன் எனக்கு அறிமுகமானார். போராலும் புலப்பெயர்வினாலும் ஈழம் இழந்த ஆற்றல்களுள் வ.ந.கிரிதரனும் ஒருவர். மீண்டும் கிரிதரன் ஈழத்தில் செயல்பட புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டும்.  நானே மறந்துபோன என் கவிதை பற்றி எழுதிய வ.ந.கிரிதரனுக்கும் அதனைப் பதிவேற்றிய கிருபனுக்கும் பாதுகாத்த யாழ் இணையத்துக்கும் நன்றிகள்.  

10 hours ago, கிருபன் said:

கவிஞர் ஐயா,

இந்தக் குறிப்பை எழுதியவர் வ. ந. கிரிதரன். யாழில் அதை ஒட்டிய வேலையை மட்டும்தான் நான் செய்தேன்! எனவே உங்கள் நன்றி பதிவுகள் இணைய ஆசிரியர் வ. ந. கிரிதரனுக்கே போகவேண்டும். அப்படியே முகநூலிலும் திருத்திவிடுங்கள்.

பதிவுக்கு நன்றி கிருபன். திருத்த வாய்ப்பில்லை. ஏனெனில் எடிட் மூடபட்டுவிட்டது நண்பா. திறக்க முடியுமா?

 

Share this post


Link to post
Share on other sites

மிகவும் நன்றி தோழமைக்குரிய புங்கையூரன், nunavilan and இணையவன். உங்களைப்போன்றவர்களின் ஆதரவுதான் என்னை தலைபணியாமல் எழுத வைக்கிறது

Share this post


Link to post
Share on other sites
55 minutes ago, poet said:

பதிவுக்குன்றி கிருபன். திருத்த வாய்ப்பில்லை. ஏனெனில் எடிட் மூடபட்டுவிட்டது நண்பா. திறக்க முடியுமா?

 

நிர்வாகம்தான் உதவமுடியும்.

நீங்கள் எழுதிய கவிதைகள் அனைத்தையும் தேடிப் பெற இணையம் உதவி செய்யும் என்று நினைக்கின்றேன். 

Share this post


Link to post
Share on other sites

கிருபன் நான் யாழில் ஆரம்பகாலங்களில் பதிவேற்றிய கவிதைகள் கிடைக்கவில்லை. உதவ முடியுமா

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஜெயிலுக்குள்ள வைச்சு மொட்டை அடிச்சிட்டாங்கள் போல இருக்கு ...அங்கே இருந்து தான் வந்தவர்  மருதரின்ட ஹிருனிகாவின்ட  குரல் பதிவும் இருக்குதாம்😂
  • நேற்று இவரது பாராளுமன்ற உரையை கேட்டவை பலர் இவர் நல்லவர் என்று சொல்லினம் 🤣
  • புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் – பகுதி 2  January 1, 2020 கட்டுரைகள் “இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க விரும்பினால், அது எந்த புத்தகமாக இருக்கும்?  ஏன் அந்த புத்தகம் ?” இந்த கேள்வியை புத்தாண்டை முன்னிட்டு படைப்பாளர்களிடம் கனலி கலை இலக்கிய இணையதளம் சார்பாக கேட்கப்பட்டன.  நூறுக்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் அளித்த பரிந்துரைகள் தொகுத்த  கட்டுரையின் இரண்டாவது பகுதி இது… எழுத்தாளர் அகிலன் :  யோஸ்டைன் கார்டர் நார்வே மொழியில் எழுதி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆங்கிலம் வழி தமிழில் தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் பேரா. ஆர் சிவகுமார் மொழிபெயர்த்து, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘சோஃபியின் உலகம்’ நூலை நான் என்னுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிசளித்திருக்கிறேன். மூன்று கோடிப் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள அற்புதக் காவியம் இந்நூல். ‘நீ யார்?’ ‘இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?’ எனும் இரு அடிப்படையான கேள்விகளை சோஃபி அமுய்ந்ட்சென் எனும் சிறுமி தனது பதினான்காம் பிறந்தநாளன்று எதிர்கொள்கிறாள். இதற்கான விடை தேடும் முயற்சியே நாவலின் களம். அவளுடைய தேடலின் ஊடே மனிதகுலத்தின் வரலாறும், தத்துவப் போக்குகளும் வாசகர்களுக்கு அறிமுகமாகின்றன,. அலுப்புத் தட்டாத, விறுவிறுப்பான நடையில் நாவல் போகிறது. இதன் உத்தி மிகவும் நேர்த்தியான, வியப்பூட்டும் ஒன்று. மொழிபெயர்க்க மிகவும் சவாலான ஒரு படைப்பு. பேரா. ஆர். சிவகுமார் இதைத் தனக்கே உரிய லாகவத்துடன் மொழிபெயர்த்திருக்கிறார். எழுத்தாளர் விஜயராகவன் : என் மனமார்ந்த நண்பர்களுக்கு புத்தாண்டில் பரிசாக கொடுக்கும் ஒரே ஒரு புத்தகமாக கவிஞரும்  படைப்பாளியுமான பிரான்ஸிஸ் கிருபா அவர்களின் ‘ கன்னி ‘ நாவலை கொடுப்பேன். இந்த நாவலின் உட்கருவாக முகிழ்க்கும் காதலையே தமிழ் இலக்கியத்தில் முதன்மையான காதல்கதையாக நான் கருதுகிறேன். சொற்களிலிருந்து, அர்த்தங்கள் மௌனத்திற்கு திரும்புவதை கண்டு விம்மும் நிழலுமன்றி ஏதுமற்றவனின் அல்லலை இந்நாவலில் படித்து பித்துபிடித்து போயிருக்கிறேன். இந்நாவலில் பிரான்சிஸ் கிருபாவின் தமிழ் நடை, சென்ற, இருக்கின்ற, வரப்போகிற  தமிழ் படைப்பாளிகளின் எழுத்திற்கான சவால். கவிஞர் மெளனன் யாத்ரீகா : பரிந்துரைக்கும் நூல் :  மசானபு ஃபுகோகா எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி நஞ்சில்லாத உணவை இந்த உலகத்துக்குக் கொடுக்க இந்த நூலில் குறிப்புகள் உள்ளன. இதை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இந்த உலகின் மீது வீசும் நஞ்சை திரும்பப் பெற்றுக்கொண்டு இயற்கையான விதைகளை தூவலாம். எழுத்தாளர் யவனிகா ஸ்ரீராம்: பரிந்துரை :  கவிஞர் பச்சோந்தியின்  பீஃப் கவிதைகள் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் பசு இறைச்சி ஏற்றுமதிக்குத் தடைவிதிக்காமல் அதை உணவுக்காக உண்டு வாழும் உள்ளூர் மக்களை தண்டனைக்கு உட்படுத்துகிறது. புலையர்களும் மிலேச்சர்களும் ஆகப் பழங்குடியினரும் இன்னும் பிறவான மாட்டிறைச்சி உண்பவர்களும் இந்திய தேசத்தின் பிரஜைகள்தான். மேற்கு ஐரோப்பா முழுக்க மாட்டிறைச்சி அடிப்படையில் ஓர் உணவுப் பொருள். அதற்கான பண்ணைக்கும் நவீன இறைச்சிக் கூடங்களும் அதன்வழியே தின்பண்டங்களும் பலமடங்கு உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஆக, மேற்சொன்ன புனிதம் யாருக்காக இறைச்சி மேல் சுமத்தப்படுகிறது என்று பார்க்கும் போது அதன் வர்க்க நலம் பல்லிளிக்கிறது. இங்குதான் கவிஞர் பச்சோந்தியின் இந்த முழுத் தொகுப்பும் ஒரு வரலாற்றுப் பின்னணியிலிருந்து எழும்புகிறது. மாடுகளும் மனிதர்களும் உழைப்பின் வழியே ஒடுக்கப்பட்ட நிலம்தான் இந்தியா. துன்பத்தில் உழலும் கன்றினைக் கருணைக் கொலை செய்யும்படி ஏற்றுக்கொண்டவர்தான் நம் தேசத் தந்தை. பச்சோந்தி இந்த மாடுகளின் வாலைப் பிடித்துக்கொண்டு விளையாடிய காலந்தொட்டு தான் பயணிக்கும் நிலமெல்லாம் அவற்றின் கதைகளை விசாரித்து அலைந்து திரிந்து கண்ட அனுபவம்தான் இந்தத் தொகுப்பு. இதில் பல பகுதிகளாக மாட்டின் இருத்தல் பேசப்படுகிறது. மனிதனும் மாடும் இந்த நிலத்தில் வாழ்ந்த சுவடுகளை, வலிகளை, கண்ணீரை, ஒரு கலாச்சாரத்தை அல்லது உயிர்த்திருத்தலைப் பற்றிப் பேசுவதே இத்தொகுப்பு. எண்பது கோடி மக்கள் தொழிற்சாலையால் வெளித்தள்ளப்பட்டு அன்றாட வருவாயையும் குறைந்துபோன நிலையில் வேலை வாய்ப்புகளுமற்று மேய்ச்சல் நிலங்களும் அருகிப் போன பின்பு ஏற்றுமதி செய்யப்படும் மாடுகள் தவிர இருக்கும் மாடுகளை வளர்த்து தங்கள் இறைச்சிக்காக ருசித்து வாழ்வதையே இழிவு செய்யும் தத்துவம் ஏதென்றும் இருப்பின் அது மானுட விரோதம் என்றுதான் சொல்லமுடியும். பீஃப் கவிதைகள் என்று பெயரிட்டு இத்தொகுப்பை சுற்றுக்குவிட்டிருக்கும் பச்சோந்தி மாடுகளின் குணாம்சம் உள்ள மனிதன் மட்டுமல்ல; அதை நோய்ப்பார்த்து வளர்த்த பாரம்பரியமான பரிவும் நிலத்தின் மீது காலூன்றி நிற்கும் நம்பிக்கையையும் அதின் வழியே பெற்றிருப்பதால்தான் இக்கவிதைகள் பெரும் மாட்டு மந்தையைப் போல் அசைகின்றன. எழுத்தாளர் கொ.ம.கோ. இளங்கோ:  கறுப்பின அடிமைகள் மீதான ஒடுக்குமுறைகளை பேசிய கருப்பின அடிமைகள் வரலாறு நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் டாம் மாமாவின் குடிசை. விடுதலைக்கான போராட்டம் பற்றிய இந்த கதை விறுவிறுப்பாகவும் சுவாரசியம் நிறைந்ததாகவும் பிரச்சினையை ஆழமாக உணர்த்துவதாகவும் இருக்கிறது மலையாளத்தில் பி ஏ வாரியார் அவர்கள் எழுதிய டாம் மாமாவின் குடிசை நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் அம்பிகா நடராஜன். எழுத்தாளர் கரன் கார்க்கி: இந்த புத்தாண்டுக்கு நண்பர்களுக்கு பரிசளிக்கவே ,பரிந்துரைக்கவே உலகின் மிகச்சிறந்த பல பத்து நூல்களை சொல்ல முடியும். என்றாலும் … 1957 எழுதப்பட்ட “இவான்” என்கிற குறுநாவல் சிறுவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய அவசியமான ஒரு நூலாக கருதுகிறேன். இரண்டாம் உலகப்போரின் துயரை 12 வயது சிறுவன் மூலம் விளாந்தீமிர் பகமோலவ் எழுதிய ரஷ்ய இலக்கியம் என்றாலும், உலகின் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய குறுநாவல். போரில் பாஸிச நாஜிப்படையால் பெற்றோரை பறிகொடுத்து அநாதையான பல்லாயிரம் சிறுவர்களில் ஒருவன் தாய் நாட்டுக்காக எதிரிகளின் அரண்களுக்குள் புகுந்து, வேவு பார்த்து அதை ரஷ்யப்படைக்கு தகவல் தருகிற வேலையில் பாசிஸ்டுகளால் கொல்லப்பட்ட சிறுவனின் உண்மை கதை. இந்த புதினத்தை பரிசளிக்கவே நான் விரும்புகிறேன்.   இறுதியில் அந்த புதினம் இப்படி முடியும். விசாரணையின் போது அவன் எதிர்ப்பு காட்டுகிற முறையில் நடந்துக்கொண்டான், ஜெர்மன் ராணுவம் மற்றும் ஜெர்மன் பேரசின் மீதான தனது வெறுப்பை அவன் மறைக்கவில்லை. “தலைமை சுப்பரீம் கமாண்டரின், நவம்பர் 11,1942 ஆம் தேதிய கட்டளைப்படி தடுத்து நிறுத்தப்பட்டவன் 25.12.1943 காலை 6.55 மணிக்கு சுட்டுக்கொல்லப்பட்டான். ” இன்றைய சூழலில் சமூகம் போர் குறித்தும், போரின் துயரம் குறித்தும் , போர் ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. எழுத்தாளர் மணிமொழி: பரிந்துரைக்கும் நூல் மீசை என்பது வெறும் மயிர் என்ற தலைப்பு , இந்த புத்தகத்தில் ஏதோ ஒன்றைக் கட்டுடைக்கப் போகிறது என நான் நம்பினேன். அது நிகழ்ந்தும் போனது. மீசைக் கொண்டு ஆண் வர்க்கம் தன்னை ஆண்மை உள்ளவனாக காட்டிக் கொள்ள தடித்த மீசைகளை உருவாக்கிக் கொண்டனர். சாதியின் பெருமையைப் பேச மீசையும் தேவைப்பட்டது. சாதியைத் தொடர்ந்து கேள்வி கேட்கும் பீம்தாஸ் , வாசகர்கள் மத்தியில் கேள்விகளையும் விட்டுச் செல்கிறார். மேன்மையோ கீழ்மையோ இறந்த பின் பிணத்தில் அடிக்கும் துர்நாற்றத்தின் வழி அதை கண்டுப்பிடிக்க இன்னும் ஆய்வாளர்கள் பிறக்கவில்லை. இதையே பல கோணத்தில் நாவல் பேசி கொண்டு நகர்கின்றது. இந்த நாவல் புத்தக அட்டைப்படத்திலிருந்து தொடங்கி நாவலின் கடைசி பக்க அட்டையில் முடிகின்றது. கவிஞர் வே.நி.சூர்யா: காரணங்கள் காணாமல் போகும் நிலையையும் கட்புலனாகதவைகளின் மாயக்கரங்கள் நீளும் நிலையையும் அடையமுடியாததை மானுடம் எதிர்கொள்ளும் நிலையையும் பரிசீலித்துப் பார்ப்பவை காஃப்காவின் படைப்புகள். அறியமுடியாமைகளை அறிந்து கொள்ள மனிதன் நிகழ்த்தும் சலிப்பேயில்லா போராட்டத்தை அதன் அபத்தங்களுடனும் கனவுகளுடனும் தோல்விகளுடனும் வரைந்து காட்டுவது அவருடைய விசாரணை நாவல். தொழில்நுட்பங்கள் மாபெரும் அமைப்பாக மாறிவிட்ட இன்றைய காலத்தில் மனிதனிடமிருந்து காரணங்கள் உறிஞ்சி எடுக்கப்பட்டு பிரம்மாண்டமான புரிந்து கொள்ள இயலாமைக்குள் மனிதன் சரிந்துவிழுகிற காட்சியை ஒரு ஆன்மிகத் தோல்வியை முன்பே தீர்க்கதரிசனம் போல உரைத்துவிட்ட படைப்பு விசாரணை நாவல். சில படைப்புகள் காலத்தில் உறங்குவதில்லை. ஏனெனில் அவை நித்தியமான சிக்கல்களை எதிர்கொண்டபடி இருக்கின்றன.. அவ்வகையான படைப்பு காஃப்காவின் விசாரணை நாவல். அவ்வகையில் காஃப்காவின் விசாரணை நாவலை வாசிக்க நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன் . காந்திய செயற்பாட்டாளர் சிவராஜ்: இப்புதுவருட மலர்வில் நான் யாருக்காவது பரிசளிக்க (அ) பரிந்துரைக்க விரும்புகிற புத்தகம், பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதிய “இன்றைய காந்திகள்“. இணையவெளி துவங்கி இருதயங்கள் வரைக்கும் வெறுப்பின் கசப்புரையாடல் மிதமிஞ்சிக்கொண்டிருக்கும் இச்சமகாலத்தில் நம்மை செயல்வேகத்துக்குள் வலிமையாக இழுத்துப்போகும் படைப்புகள் மிகமிக அவசியமாகிறது. அப்படைப்பும் அன்பில் இழையோடியதாக அமைதல்வேண்டும். அமைதிவழியில் செயலூன்றி இன்று இந்திய ஒன்றியத்துக்கான சாட்சிமனிதர்களாக மாறிநிற்கிற பதினொரு காந்தியவாதிகள் பற்றிய வாழ்வுவிபரத்தையும் வரலாற்றுச்சுருக்கத்தையும் கொண்டுள்ளது இப்புத்தகம். காந்தியவழி என்பது பழமைதோய்ந்த பாதை என்கிற அரைகுறைப்புரிதலை நீக்கி, நவீன எதிர்காலத்துக்குமான அறிவியல்படைப்புகளுக்கும் எப்படி அறவழிச்சிந்தனைகள் கைகொடுக்கிறது என்பதற்கான இந்திய ஆவணம் இந்நூல். இன்று உலகளாவிய சமூகநலத் திட்டங்களாக அறியப்படும் நிறைய செயல்பாடுகள், இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் ஏதோவொரு காந்தியத்தாக்கத்தால் உந்தியெழுந்த எளிய மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டவை.   அமுல் பால்வள நிறுவனர் வர்கீஸ் குரியன், திட்டக்கமிஷன் மூலம் பொருளாதார மாற்றம் கொண்டுவந்த லக்ஷ்மி சந்த் ஜெயின், வெறும்பாதக்கல்லூரியை நிறுவிய பங்கர் ராய், தகவலறியும் உரிமைச்சட்டத்தின் முன்னோடி அருணா ராய், பாலைவனத்தில் நீர்தேக்கிய தண்ணீர்மனிதர் ராஜேந்திர சிங், கிராமப்பெண்களை செவிலித்தாய்களாக்கிய மருத்துவர்கள் அபய் பங் மற்றும் ராணி பங், இமயமலைச்சரிவில் பனிஸ்தூபிகளை உருவாக்கும் சோனம் வாங்ச்சுக், அமைப்புசாரா தொழிலாளிகளுக்கான தொழிற்சங்க நிறுவனர் இலா பட், மனிதாபிமானப் பொருளியியல் அறிஞர் ஜான் ட்ரெஸ், சேவையை ஒளியாக்கி இருளகற்றும் அரவிந்த் கண்மருத்துவக் குழுமம், மானுட அறிவியலின் வழியாக கல்வியை விடுதலைப்படுத்தும் அரவிந்த் குப்த… இப்படியாக பதினோரு செயல்சாட்சிகளின் வரலாற்றுச்சித்திரத்தை இப்புத்தகத்தில் நாம் நெஞ்சுணர முடியும். காந்தியம் என்பது இன்னும் நாம் அறியப்படாத நிறைய பக்கங்கள் உடைய ஒரு பெருஞ்சாத்தியம். அச்சாத்தியத்தை அடைவதற்கான சத்தியத்தை இப்புத்தகத்தை நமக்கு நிச்சயம் நல்கும். ஒரு தேசத்தின் சிந்தனைப்போக்கை தங்கள் செயல்வழியே நல்வழிப்படுத்தி திசைப்படுத்துகிற இக்காந்தியர்களின் கதையை வாசிப்பது என்பது, நம்முடைய எதிர்கால இடர்களை கடப்பதற்கான நிகழ்கால சிந்திப்பு போன்றது. இப்புத்தகம் உங்களை இன்னும் தீவிரமாகச் செயல்படவைக்கும். நன்றி. எழுத்தாளர் விஜய ராவணன்: பரிந்துரைக்கும் நூல் : வங்கச் சிறுகதைகள் தமிழில்: கிருஷ்ணமூர்த்தி துண்டுபட்ட இந்திய சுதந்திரம் மற்றும் வங்காளப்போர் காலக்கட்டங்களில் எழுதப்பட்ட வங்கத்துச் சிறுகதைகளின் தேர்ந்தெடுக்கப்ட்ட தொகுப்புதான் நான் பரிந்துரைக்க விரும்புவது. அன்றைய சூழலில் வங்காகளத்தில் ஏற்பட்ட சமூதாய மாற்றங்கள், சிக்கல்கள், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பித்தலாட்டம்,பசி, அகதிவாழ்க்கை, ஆயுதபோராட்டம் என இன்றும் நாம் சந்திக்கும் சமூதாயசிதைவுகளை கதைப்பொருளாய் பேசும் இக்கதைகள், ஒவ்வொன்றும் கதைச் சொல்லும் யுக்தியில் தங்களுக்குள் மாறுபட்டவை. எனக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்திய மணல்வீடு ஹரிகிருஷ்ணன் என்னிடம் சொன்னதை தான் நானும் சொல்லவிழைகிறேன் “கட்டாயம் வாசிக்கவேண்டிய கதைகள்” எழுத்தாளர் உமை : விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவலை தமிழ்நாட்டின் இலக்கிய வாசகர்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறேன். ஈழ இலக்கியத்தின் போர்காலச் சூழலும், போருக்குப் பிந்தய சூழலும் மீன் சந்தையில் கருவாடு கிடைப்பதைப் போல ஈழ இலக்கியம் என்கிற பெயரில் மலிந்து கிடக்கிறது தமிழ்நாட்டில். ஷோபா சக்தி சொல்வதைப் போல, போர்க்கால சலுகையாக, மானியம் கொடுப்பதைப் போல, எல்லாவற்றையும் நீங்கள் கொண்டாடுகிறீர்கள். உங்களது நல்லெண்ணத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ‘அதற்காக, இப்படியா!’ என்கிற கேள்வி உடன். மேலும், ஈழ போர்க்கால இலக்கியத்தின் குப்பைகளை நாங்கள் அறிவோம். அவற்றை நாங்கள் பிரித்து வைத்திருக்கிறோம். வெளியே சொல்லத்தான் பயமாக இருக்கிறது. துரோகி என்கிறார்கள். அதற்காக அப்படியே விட்டுவிட முடியாது. நிற்க! ‘கசகறணம்’ நாவல் போருக்கு முந்தைய எங்கள் வாழ்வின் பதிவுகளைப் பேசுகிறது. அதுவும் கிழக்கு வாழ்வு குறித்து. இலங்கையின் கிழக்கு மாகாணம் என்பது, எல்லா விதத்திலும், வடக்கில் இருந்து தனித்துவமானதொன்று. எங்களது மொழியும் கலாச்சாரமும் வடக்கைவிடவும் வேறுபட்டது. எங்களுடைய மொழி இன்னும் செழுமையானது. அதற்கு வேறுவிதமான ஒலியும் நயமும் உண்டு. அதை நாங்கள் கொண்டாடுகிறோம். அதைத்தான் விமல் முன்னிறுத்த நாடுகிறார். சைவர்களும் இஸ்லாமியர்களும் பிட்டும் தேங்காய்பூவும் போல வாழும் இடம் கிழக்கு மண். போருக்கு முன்னர் அந்த இனங்களுக்கிடையே ஒரு நெருக்கமான உறவிருந்திருக்கிறது. அதுவும், அது சிதைந்து உறவுகள், பகைவர்கள் ஆன கதையும் இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கிறது. ஷோபாவின் இச்சா நாவலில் சொல்லப்படுகிற ஆலாவினுடைய நிலம்தான் கிழக்கு. ஆனால் ஷோபாவிற்கு அந்த நிலம் செவி வழியேறிய ஞானம் மட்டுமே. எங்கள் விமல் குழந்தைவேலுக்கு, அந்த நிலம் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதைப் பிழிந்து பிழிந்து எழுதி இருக்கிறார் இந்த நாவலில். எங்களுடைய மொழியை, பண்பாட்டை, வாழ்வியலை இதைவிட யாரும் சிறப்பாகச் எழுதி விட முடியாது. நிச்சயம் இந்தப் படைப்பை வாசியுங்கள். எங்களது இலக்கியம் நீங்கள் கொண்டாடுகிற துவக்குச் சத்தமும், கந்தக வாசணையும் மட்டுமல்ல. அது வேறெங்கெங்கோ பரவிக் கிடக்கிறது என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.  எழுத்தாளர் பாத்திமா மாஜிதா: புது வருடத்தில் பரிசளிக்க விரும்புகின்ற புத்தகம் இஸ்மத் சுக்தாய் கதைகள். சில வேளைகளில் நான் எழுதுவதற்கான விசையும் மன வலிமையும் இந்தப் புத்தகத்திலிருந்துதான் எழுந்து வந்தது. இஸ்மத் சுக்தாய் இந்திய பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தில் தீவிரமாக இயங்கி வந்தவர். அந்தக் கால சமூக, அரசியல் நடப்புகளை, பெண் சார்ந்த சமூக அசைவுகளை தனக்கேயுரிய எள்ளல் தொனியுடனும் அழுத்தமாகவும் எழுத்தாக்கியவர். உருது இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை விதைத்த இந்தப் பெண் ஆளுமையின் 24 சிறுகதைகளின் தொகுப்பு நூலான இஸ்மத் சுக்தாய் கதைகளை வாசிக்கும் அனுபவம் அலாதியானது.   இலக்கியமே பெண்ணிற்கு மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலச் சூழலில் பாலியல், சமூகப் பிரச்சினை, அரசியல், கடந்த கால அழகை மறைக்கும் உலகம், பெண்களின் பிரச்சினைகள், நடப்பியல் நிகழ்வுகள் முதலான பேசுபொருள்களைத் தம் கதைக்கான களன்களாகக் கைக்கொண்ட துணிச்சல்காரியின் எழுத்தையே இந்தப் புது வருடம் பரிசளிக்கவும் பரிந்துரைக்கவும் விரும்புகிறேன். எழுத்தாளர் லஷ்மி சிவக்குமார்: புதிய ஆண்டில் ஒரு புத்தகத்தை யாருக்காவது பரிசளிக்க அல்லது பரிந்துரை செய்ய விரும்பினால் அது எந்த புத்தகம் மற்றும் ஏன் அந்த புத்தகம்? என்று கேட்டிருந்தீர்கள். நன்றி. 2019 ஜனவரியில் வெளியான என்னுடைய ‘நியமம்‘ நாவல் தான் என் தேர்வு. ஒரு‌ எழுத்தாளன் தன்னுடைய புத்தகத்தைப் பரிசளிக்கவோ, பரிந்துரைக்கவோ விரும்புவது எந்த வகையிலும் சுயவிளம்பரமாகாது. நியமம் ஒரு‌ மருந்துப் பிரதிநிதியின் பார்வையிலிருந்து தன்னிலை விவரிப்பாகச்‌ சொல்லப்பட்டிருந்தாலும், அது அவனுக்குச் சம்பந்தப்பட்டவனது அறமற்ற இயக்கத்தை நோக்கியே பயணிக்கிறது. அந்தப் பயணத்தில் இவர்கள் அனைவருமே நேரடியாகப் பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டுருக்கிறது. குற்றங்கள் பெருகிக்கிடக்கும் இச் சமூகத்தில் அதை அம்பலபடுத்த ஒரு எளிய மனிதனின் பேராசையை முன்னிறுத்தி கதை சொல்வதென்பது புனைவின்‌ சுதந்திரம். குற்றங்கிடங்கான பெருநிறுவன ஆதாரங்களைத் திரட்டமுடியாத சூழலில் இங்கே ஒரு‌ சாமானியன் பெருங்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறானே ஒழிய அவனும் குற்றமற்றவன் என்று என்னால் வாதாட முடியாது. என்றைக்குமான‌ சூழலும் இப்படித்தான் இருந்திருக்கிறது. புனைவென்பது பெரும்பாலும் நடந்த ஒரு சம்பவத்தை முன்னிறுத்தி முன்னும் பின்னுமாக நிகழ்த்தப்படுவதாக இருக்கும் பட்சத்தில். குற்றங்களின் நுண்ணிய பின்விழைவாக ஏற்படப்போகும் இழப்பை முன்கூட்டியே சொல்வதென்பது அரிது. இந்த நாவல் வெளியான நாட்களில் அப்படியொரு விபரீதம் சாத்தனூரைச்‌ சார்ந்த ஒரு‌ கர்ப்பினிப் பெண்ணிற்கு நிகழ்ந்தது. இது நாட்டில் பல்வேறு இடங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விழிப்புணர்வாகவும் மனிதநேயத்தைப் போற்றும் வகையிலும் இந்த‌ நாவல் பரிந்துரைப்பு அவசியமெனக் கருதுகிறேன். எழுத்தாளர் விழியன்: இந்த புத்தாண்டில் என் பரிந்துரை பெனி எனும் சிறுவன். மொழிபெயர்ப்பு யூமா வாசுகி நிச்சயம் ஒவ்வொரு குழந்தைகளும் அவரது பெற்றோர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம். எழுத்தாளர் கலையரசி பாண்டியன்: கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ராஜநாராயணன் அவர்களின் ‘பிஞ்சுகள்,’ என்ற நாவலை, நான் சிறார்களுக்காகப் பரிந்துரைப்பேன். இது கையெழுத்துப் பிரதியாக இருந்த போதே, 1978 ஆம் ஆண்டுக்கான ‘இலக்கிய சிந்தனை,’ பரிசைப் பெற்றது. சங்கக் காலத்திலிருந்து, இயற்கையைத் தெய்வமாகக் கருதி, அதனோடு இயைந்து வாழ்ந்தவர்கள் நாம்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று இயற்கையிடமிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்; அடுக்கு மாடி குடியிருப்புகளில், எந்நேரமும் செல்போனை நோண்டிக்கொண்டு, பிராய்லர் கோழிகளாக நம் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். சுற்றுச் சூழல் மாசுபட்டு நஞ்சாக மாறியிருக்கும் இன்றைய சூழலில், நம் குழந்தைகளுக்கு இயற்கையைப் பற்றிய புரிதல் ஏற்படுத்துதல் மிகவும் அவசியம்; அவசரமும் கூட. அந்த வகையில், கி.ராவின் பிஞ்சுகள் சுவாரசியமான குறுநாவல். இதில் வரும் நம் மண் சார்ந்த சிட்டுகளைப் பற்றிய, ஒரு உரையாடலைப் பாருங்கள்;- “சிட்டுக்கள்ளெதான் எத்தனை வகையிருக்கு?… தேன் சிட்டு, தட்டை சிட்டு,பூஞ்சிட்டு, பட்டுச்சிட்டு, வேலிச்சிட்டு, முள்சிட்டு, மஞ்சள்சிட்டு, செஞ்சிட்டு….. இந்தச் செஞ்சிட்டு, அசல் குங்கும நிறத்துல இருக்கும்; இந்தக் கருஞ்சிட்டு மாதிரி, அதுவும் அபூர்வமா எப்பவாவது தான் வரும்”. “மாமா! இந்தப் பறவைகள் தான்,எம்புட்டு அழகா இருக்கு?” இக்கதையின் நாயகன் சிறுவன் வெங்கடேசு, சிறிய அளவில் பறவைகளை வேட்டையாடினாலும், பறவை முட்டைகளைச் சேகரித்தாலும், பறவைகளின் அழகை ரசிக்க்க் கூடியவனாக, அவற்றின்பால், அன்பு கொண்டவனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். இயற்கையின் மீது நம் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படவும், நம் மண் சார்ந்த உயிரினங்களின் தமிழ்ப்பெயர்களை அறிந்து, அவற்றைப் பாதுகாக்கவும், சிறுவர் மட்டுமின்றிப் பெரியவர்களும், அவசியம் வாசிக்க வேண்டிய நூல் கவிஞர் நேசமித்ரன்: இது எனது துடிக்கூத்து குறித்து எஸ்.சண்முகம் எழுதித் தந்த குறிப்பு நாம் எதிர்கொள்பவை மற்றும் கடப்பவை எல்லாம் உள்ளீடற்றப் பொருண்மையை உடையவை. அதன்பின்னே இயங்கும் கார்பரேட் பெருநிறுவனங்களின் வணிகச் சொல்லாடல்கள்; நம் அனுமதியைப் பெற்றே நம்மைக் கையாளுகின்றன. எல்லோரையும் அதிகாரத்தின் அங்கங்களாக மாற்றப்படுவதற்கான நோக்கிலேயே செலுத்தப்படுகின்றன. கட்டமைத்திருக்கும் சொல்லாடல்கள் அனைத்திலும் கண்ணுக்குப் புலப்படாத இறையாண்மையின் அதிகாரக் கரங்களின் பிடிகளில் இயங்குகிறது. அவைகளை அவிழ்க்கும் கவிதையாடல்களை அகப்படுத்தும் பிரதிகளே அரசியல் மொழிக்கான முன் நகர்வுகள் எனலாம். அத்தகைய பிரதியாக்கத்தினைக் கொண்டிருப்பவை நேசமித்ரனின் கவிதைகள்.இதையொருவித Surface Writing என்ற நவீனத்துவத்தின் பிந்தைய வகைமையில் நேசமித்ரன் தனது கவிதைகளை எழுதியிருக்கிறார். மேலும் இதன் மொழியானது பன்மைக் குறிப்பீட்டை வாசகரின் மனதில் மூண்டெழச் செய்வதற்கான வல்லமையை உடையன. அனைத்து அதிகார ஒப்பனைகளையும் கலைத்தழிக்கும் கவித்துவத்தை இத்தொகுயின் கவிதைகள் செய்கின்றன. நம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்பு செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன. எழுத்தாளர் அமல்ராஜ்: முரகாமியின் எழுத்தின் வெளிப்பாடு என்பது மிகவும் பரந்தது. அது நம்மை இன்னும் இன்னும் ஆழமான அகத் தேடல்களை நோக்கி இழுத்துக்கொண்டு போவது. அதிலும், ஆச்சரியமான விடயம், மேம்போக்கான வாசகர்களுக்கும், உளவியல் மற்றும் பிரதி சார் நுணுக்கங்களைத் தேடியலையும் வாசகர்களுக்கும் சமமாய் ஈடுகட்டக்கூடிய வித்தை அதனிடம் உண்டு. Norwegian Wood இன் ஆங்கில மொழிபெயர்ப்பும், அந்நாவல் உலகம் பூராவும் கொண்டாடப்படுவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று எனச்சொல்லலாம். இலகுவான ஆங்கிலமும், புரிந்துகொள்ள லாவகமாக மொழிநடையும் அந்த மொழிபெயர்ப்பின் பாரிய வெற்றிக்கான காரணிகள். என்னைப் பொறுத்தவரை, முரகாமியின் பாலியல் பற்றிய நுணுக்கமான புரிதல்களும், மனித உறவுகளுக்கிடையிலான உளவியல் சார் வேற்றுமைகளை விவாதப்பொருளாக வாசகனிடம் தூக்கியெறியும் நுட்பமும், ஜப்பானின் கலாச்சாரக் கட்டுக்களை தனி மனித சுதந்திரம் மற்றும் நிந்தனையற்ற புரிதல்களுடன் முன்வைக்கும் நிதானமும்தான் இந்நூலின் மிகப் பிரதானமான வெளிப்பாடுகள்.   Watanabe, Naoko, Midori போன்ற பிரதான கதாபாத்திரங்களை விட நாவலின் மிக முக்கியமான ‘இலட்சியத்தை நிறைவேற்றும்’ காரணி Reiko என்கின்ற வயலின் ஆசிரியைதான். ஒரு 13 வயது பள்ளிச்சிறுமி எப்படி Reiko வை seduce செய்து உளவியல் தொல்லை கொடுக்கிறாள் என்பதைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதைப் படிக்கும்போது அதுவொரு white elephant என்கின்ற மேம்போக்கு மனநிலையை அது ஏற்படுத்தாது. புத்திக்கூர்மையுடைய சிறுமியாக இருந்தால் அது யதார்த்தத்தில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு விடயம். இச்சம்பவத்தில் தோண்டியெடுத்துப் புரிந்துகொள்ள ஆயிரத்தெட்டு விடயங்கள் உண்டு. அதில்தான் முரகாமியின் ஒட்டுமொத்த வெளிப்பாடும் நிகழ்கிறது. Psychiatric Sanatorium பற்றிய ஆச்சரியமான தேடல்களுக்கு விரிவான அடித்தளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது இந்நாவல். அதுபோல, முரகாமியின் பிரெஞ்ச் இலக்கியம், இசை, உளவியல் நுணுக்கங்கள் மீதான ஆழமான புரிதல், ஜப்பானின் கலாச்சாரத்தை உடைக்காமல் தனி மனித சுதந்திரத்தை அடியில் நிரப்பி கொண்டிழுக்கும் வாழ்க்கை பற்றிய தர்க்கங்கள் நாவலின் முதன்மையான assets எனக் கொள்ளலாம். Norwegian Wood ஐ நிற்சயமாக மற்றவர்களுக்கு பரிசளிப்பேன். எழுத்தாளர் கோகுல் பிரசாத்: மகத்தான ருஷ்ய படைப்பாளிகளான தொல்ஸ்தோய்க்கும் தஸ்தாவ்யெஸ்கிக்கும் இடையில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் எனக்குக் குழப்பங்களே இருந்ததில்லை. ஒப்பற்ற உயிர்க் கருணையின் பேரொளியிலேயே உலகியக்கத்தின் உணர்ச்சிப் பெருக்கை, அதன் சீர்குலைவை, ஒழுங்கினை, நலுங்கலை எல்லாம் மினுங்கச் செய்த தொல்ஸ்தோய் தான். அவரது படைப்புலகை கனிவின் ‘உச்சம்’ எனச் சொன்னால் ஏதோ பீடத்தில் ஏற்றி வைத்தது போன்ற விலகலை அளித்து விடுகிறது. அவர் எங்கேயோ உச்சியில் நின்று கொண்டு நம்மைக் குனிந்து நோக்குபவரல்ல. கனிவின் நீர்மையின்பாற் இருண்மையிலும் ஒளியைத் தேடுபவர். திசையறியா காரிருளில் வழிகாட்டி. எலும்பில் ஊடுருவும் வலிக்கு மருந்து. அந்தப் பெருங்கருணையின் மெய்ஞானத்தை தமிழுக்கு அமுதூட்டிய கு. அழகிரிசாமியின் சிறுகதைகள் முழுத் தொகுப்பினையே எந்தவொரு நல்ல நண்பருக்கும் வாசகருக்கும் பரிசளிக்க விரும்புவேன். காலச்சுவடு வெளியீடு. மொழி, உத்தி, கோட்பாடு என எதுவும் மெய்மைத் தேடலின் ஆவேசத்தின் முன்பு செல்லுபடியாகாது. அதன் விவேகப் பாய்ச்சலை கதையின் ஒவ்வோர் அணுவிலும் பொதிந்து வைத்தவர். பாசாங்கற்ற கதாபாத்திரங்கள் வழியாக மனிதரின் மேன்மையான பக்கங்களை அள்ளியள்ளி எடுத்துரைத்தவர். வேறெதையுமே வாசிக்காமல் அவரது நூற்றி சொச்சம் கதைகளில் மட்டும் தொடர்ந்து ஆழ்ந்திருந்த பல மணி நேரங்களை இப்போது நினைக்கையிலும் பரவசமாக இருக்கிறது. அவரது கதைகள் நம்மைச் சீண்டுவதில்லை. மாறாக, அழுள்ளத்தில் அமைதியைக் கொண்டு வருகிறது. அவரது ‘வேடிக்கை மனிதர்களை’ எண்ணி புன்னகைக்கும் போதெல்லாம் உடல் சிலிர்க்கிறது. தாயுள்ளத்தின் அரவணைப்பில் கடத்தப்படும் கதகதப்பு. முன்முடிவுகளற்ற சித்தரிப்பில் தெளிந்து வரும் மேதைமை. அவருக்குப் பிறகு தமிழ்ப் பரப்பில் குழந்தைகளின் உலகை அவரளவுக்கு அணுக்கமாகச் சித்தரித்தவர் சு. வேணுகோபால் மட்டுமே. குழந்தைகள் உலகைக் காட்டிவிட முடிந்தபின் மற்றதெல்லாம் எம்மாத்திரம்? தமிழ்ச் சிறுகதையின் மகத்தான கதைசொல்லி. சாதனையாளர். எல்லோரையும் விட சிறந்தவர். ஆம், புதுமைப்பித்தனை விடவும் சிறந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமி. எழுத்தாளர் ரமேஷ் பிரதன்: டிக்‌ஷ்னரி ஆஃப் கசார்ஸ். இருபது ஆண்டுகளுக்கு முன்பு கதைசொல்லி இதழில் நெடுங்கட்டுரை எழுதியிருக்கிறேன். இப்போது தமிழிலேயே கிடைக்கிறது. அனைவரும் வாசிக்கவேண்டும். பிரதி தரும் வாசிப்பின் திளைப்பு அலாதியானது. எழுத்தாளர் அ.கரீம்: கடந்த 2019 – ம் ஆண்டில் வெளிவந்த புத்தகங்கள் என்று முடிவு செய்தால் பல புத்தகங்களை பரிந்துரைக்கலாம். நான் எதிர் வெளியீட்டின் இ.பா.சிந்தன் மொழிபெயர்ப்பில் வந்த “நிழல் ராணுவங்கள்” புத்தகத்தை பரிந்துரைக்கிறேன். நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் இந்தியாவுக்குள் ரகசியமாக இயங்கிக் கொண்டு இன்னொரு இந்தியாவை காண முடியும். ஒரு கிரைம் நாவல் படிப்பதைப் போல் ஒவ்வொரு பக்கத்தையும் கடப்பது அதிர்ச்சியாகவும் மன இயலாமையின் நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பக்கத்துக்குள்ளேயும் நமக்கு தெரியாத அல்லது சரியாக கவனிக்காத பேரதிர்ச்சியை அந்த புத்தகம் உள்ளே வைத்திருக்கிறது.  இந்தியா போன்ற பன்முக தேசத்தில் கட்டமைக்கப்படும் அபாயத்தை பல்வேறு தரவுகளின் மூலம் நம்முன் வைக்கும் மிக முக்கியமான புத்தகம் நிழல் ராணுவங்கள். அந்த புத்தகத்தை வாசித்து விட்டால் நம்முன்னே உள்ள சவால்களும் பயணிக்க வேண்டிய திசையையும் சமூக, மனித, தேச பாதுகாப்புக்காக செய்யப்பட வேண்டிய வேலை கடல் போல் உள்ளதை விரித்துக்காட்டும் முக்கியமான வரவு நிழல் ராணுவங்கள். எழுத்தாளர் கீதா மதிவாணன்: பெண் ஏன் அடிமையானாள் – பெரியார் இந்தக் காலத்தில் பெண்கள் படித்து நல்ல பணிகளில் அமர்ந்திருக்கின்றனர், ஆண்களுக்கு நிகராக பற்பல துறைகளிலும் முன்னேறியுள்ளனர், பொருளாதாரத்தில் தங்கள் கால்களில் தாங்களே நிற்குமளவுக்கு பொருளீட்டுகின்றனர், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்கின்றனர். இதற்குமேலும் இன்னும் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்? என்ற கேள்வியை அனுதினமும் நாம் எதிர்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் உண்மை நிலவரம் என்ன? எத்தனை சதவீதப் பெண்கள் மேற்குறிப்பிட்ட எல்லா உரிமைகளையும் பெற்றிருக்கிறார்கள்? அப்படியே பெற்றிருந்தாலும் அவ்வுரிமைகளை எல்லா காலகட்டத்திலும் எவ்வித இடையூறுமின்றி அவர்களால் முழுமையாக அனுபவிக்கவோ செயல்படுத்தவோ முடிகிறதா? காமுகக் கண்களின் பாலியல் வன்முறைகளிலிருந்து தப்பிக்க இயல்கிறதா? இப்படியான சூழலில் இந்நூல் பரிசளிக்கப்படுவதும் பேசப்படுவதும் அவசியம் என உணர்கிறேன்.   பெண்கல்வி, பணி, கற்பு, காதல், கன்னிமை, திருமணம், கர்ப்பம், கர்ப்பத்தடை, கைம்மை, மறுமணம், விபச்சாரம், சொத்துரிமை, சமூகம், சுயமரியாதை என பெண்ணை அடிமைப்படுத்தும் மற்றும் அடிமைத்தளைகளிலிருந்து விடுவிக்கும் எண்ணற்ற விஷயங்களைப் பற்றித் துணிகரமாகப் பகிர்ந்த பெரியாருடைய சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல். காலங்கள் மாறினாலும் பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியில் காலங்காலமாய்ப் படிந்துகிடக்கும் பழம்நம்பிக்கைகளை துளியேனும் அசைத்துப்பார்க்க உதவும் அற்புதமான சிந்தனைத் திறவுகோல் இந்நூல். கவிஞர் லாவண்யா சுந்தரராஜன்: க.மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் தமிழினி வெளியீடாக வந்துள்ள ‘குரங்கு வளர்க்கும் பெண்‘ என்ற சிறுகதை தொகுப்பினை பரிந்துரை செய்வேன். இந்த தொகுப்பில் ஏழு கதைகள் உண்டு. அதில் இரண்டு நெடுங்கதைகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலப்பரப்பில் நிகழும் கதைகள். அவை அனைத்தும் ஆண் பெண் உறவு சிக்கலை நுட்பமாய் சொல்கிறது. நிகழும் நிலப்பரப்பு எதுவாயினும் பசி, துக்கம், அன்பு செய்தல், அவமானம், இயலாமை என்று உணர்வுநிலைகள் பொதுவானதே என்பதை உணர்த்தும் கதைகள்.   க. மோகனரங்கன் அவர்களின் மொழிபெயர்ப்பில் இந்த கதைகளை வாசிப்பது சொந்த மொழிக்கதைகளை வாசிப்பது போன்ற உணர்வை தருகின்றது. கவிஞர்  முத்துராசா குமார்: தமிழின் மூத்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பேராசிரியர் தொ.பரமசிவன். நாட்டார் தெய்வ வழிபாடுகள், தொன்மம், சடங்குகள், சுற்றுச்சூழல், உணவு, உடை, பண்பாடு, கலாச்சாரம், சாதி, சமயம், கல்வி, நாட்டார் வழக்காற்றியல், தமிழ் இலக்கியம், திராவிடம், தலித்தியம், பெரியாரியம், மார்க்சியம் என்று தொ.ப அவர்களின் ஆய்வுப் படைப்புகளும், பயணங்களும் பிரமிக்கத்தக்கவை. மக்களின் அன்றாட நுண் நகர்வுகளை ஆதி மரபுகளிலிருந்து கால வரிசைப்படி பிடிக்கும் தொ.ப தனது ஆய்வுகள் அத்தனையையும் ஆதியின் பொடி புள்ளியிலிருந்தே ஆரம்பித்து விடுகிறார். அதற்குண்டான சான்றுகள் ஒவ்வொன்றையும் சமூகத்தின் உள்ளடுக்குகளில் இருந்து நுட்பமாக அகழ்ந்தெடுக்கிறார். அந்த வகையில் ‘மானுட வாசிப்பு, தொ.ப.வின் தெறிப்புகள்’ நூல் அவரது ஆய்வுத் தளங்கள் அனைத்தையும் முன்வைத்து, அவருடன் நடத்திய நேர்காணல்களைக் கொண்ட நூல் வடிவம். தற்சமய அரசியல் சூழலில் நமக்குள் பலவகையான கேள்விகள் உடனுக்குடன் எழும். அவை எளிமையாக, தர்க்கப்பூர்வமாக, வாதங்களாக என்று பல குணாதிசியங்களில் இருக்கலாம். அவை அனைத்திற்கும் இந்நூலில் பதில்கள் இருக்கின்றன. தொ.ப சொல்லியிருக்கும் அப்பதில்கள் அசாத்தியமானவை. ஒற்றைக் கலாச்சார திணிப்பு, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பூர்வக்குடிகளை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றுதல், கல்வி நிறுவனப் படுகொலைகள், சாதிய, மத, பெண் வன்கொடுமைகள், நவீனத் தீண்டாமைகள், அரசியலாக்கப்பட்ட இயற்கை என்று முற்றிலும் அறமற்றுப் போன இன்றைய இந்திய, தமிழக அரசியல் சூழலில் தொ.ப.வின் ஆய்வு எழுத்துகள் அத்தனையும் கடைத்தட்டு மக்களுக்கான அற அரசியலின் பக்கம் நிற்கும் வலுவான அறிவாயுதங்கள். விதிப்படியும், இயல்பாகவும் தொ.ப.வின் ஆய்வு முடிவுகள் எளிய மக்களின் அருகாமை நோக்கியே நகர்கின்றன. தெளிவையும், தேடலையும், பதில்களையும், எதிர் வினைகளையும் தரக்கூடிய தொ.ப அவர்களின் எழுத்துகள் அனைத்தையும் பேணிக் காத்து, படித்து பரவலாக்கி அடுத்த தலைமுறையினருக்கு கைமாற்றிவிட வேண்டியது தமிழ் சமூகத்தின் கட்டாய கடமை. நூலிலிருந்து…. ‘தேசபக்தி என்பது எப்படி கயவர்களின் கடைசி புகலிடம் என்கிறோமோ அப்படி சாதி என்பது பாதுகாப்பற்றவனின் புகலிடம்’ – பேராசிரியர் தொ.பரமசிவன். (நூல் : மானுட வாசிப்பு, தொ.ப.வின் தெறிப்புகள் – தயாளன், ஏ.சண்முகானந்தம் – தடாகம் வெளியீடு,)  கவிஞர் பெரு விஷ்ணுகுமார்: எனது இரண்டு பரிந்துரைகள். 1.) வார்த்தைகளின் ரசவாதம் – பிரம்மராஜன்;   குறிப்பிட்ட ஒரு முடிவினை எட்டியபின்னும் தீராது எஞ்சியிருக்கும் அடிப்படை கேள்விகளே ஒவ்வொரு காலகட்டத்திற்கும் கவிதை பற்றிய உரையாடலுக்கு மூலகாரணம். கவிதை பற்றிய பலவகை கூற்றுகளையும் கருத்துருக்களையும் ஒன்றுகூட்டி விவாதிக்கும் முயற்சி இந்த புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் நிகழும். 2.) Periodic Table – Primo Levi ;   போர்கால முகாமிலிருந்து வெளியேறிய பிரைமோ லெவி அமெரிக்கா சென்ற பின்பு எழுதிய நாவலாக Periodic Table ஐ கூறுவர். தனிமவரிசை அட்டவணையில் காணப்படும் ஒவ்வொரு தனிமங்களாக எடுத்துக்கொண்டு அந்த தனிமங்களை ஒத்த பண்புகள் கொண்ட மனிதர்களை அவர்களைப்பற்றிய நினைவுகளை கூறுவதே நாவலின் வடிவம். கிட்டத்தட்ட இந்த நாவலுக்கு பிறகுதான் இவர் ஏற்கனவே எழுதிய படைப்புகளும் கவனம் பெற்றதாக கூறப்ப எழுத்தாளர் கமலகண்ணன்: செவ்விலக்கிய நூல்கள் பல மனதில் தோன்றினாலும் நவீன தமிழ் இலக்கியத்தின் அளவில் மனதைக் கட்டுப்படுத்தி கொள்கிறேன். தமிழின் சிகரங்களுள் ஒன்றான ‘கொற்றவை‘ நாவலை அளித்திடுவேன். புனைவின் செறிவை புனைவின் இனிமையை சாத்தியங்கள் கடந்த தளத்தில் ஏற்படுத்தி மலைப்பை உருவாக்கிய நாவல். சிலப்பதிகாரத்தின் நாவல் வடிவம். நிலக்காட்சிகளின் உளவியலை இத்தகைய நுண்ணிய அவதானிப்பு வழியாக மனதில் பார்ப்பது வேறெந்த புனைவிலும் கண்டிராத உணர்வு. பல இருப்பினும் காரணங்களுள் முதல் தமிழ். எழுத்தாளர் ப. தெய்வீகன் : நான் இந்த புத்தாண்டில் பரிந்துரைக்கும் அல்லது பரிசளிக்க விரும்பும் புத்தகம் டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனா‘ உலகை தனது தட்பான கரங்களில் வைத்து வருடிக்கொள்ளும் காதலின் மகத்துவத்தை மிகப்பெரிய காவியமாக சொன்ன நாவல் அன்னா கரீனினா.மானிடச்சிக்கல்களின் அனைத்து ஆள்கூறுகளின் வழியாகவும் காதல் என்ற பெரும் நதி எவ்வளவு மூர்க்கமாக நுழைந்தோடிக்கொண்டிருக்கிறது என்பதை கண்முன்னால் நிகழ்த்திக்காண்பித்திருக்கும் அதிசயம் இந்த நாவல். நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் இந்த நாவலின் பாதிப்பில்லாத படைப்புக்களை காணமுடியாது எவ்வளவு அதிசயமோ அதோபோல டால்டாய் போலொருவர் பெண்ணிற்குள் இவ்வளவு ஆழத்திற்கு இறங்கி ஒரு பிரதியை எழுதியது எவ்வாறு என்பதும் இன்றுவரை அதிசயமே. எழுத்தாளர் அரிசங்கர்: பரிந்துரைக்கும் நூல் வால்கா முதல் கங்கை வரை…. பல்லாயிரம் ஆண்டு மனித சமுதாயத்தின் வரலாற்றை 20 கதைகளின் வழியாக எளிமையாக உணர்த்தும் நூல்… எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல். முக்கியமாக முதல் ஐந்து கதைகளில் மனித வரலாற்றின் ஆரம்ப காலத்தில் பெண்ணின் நிலை… தாய் வழி சமூகம் எவ்வாறு இயங்கியது என்பதை ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்… நான் எப்போதும் பரிசாக கொடுக்க விரும்பும் புத்தகம்..! எழுத்தாளர் தீபு ஹரி: புத்தாண்டில் இரண்டு பரிந்துரைகள். மணற்கடிகை என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான நாவல். ஒரு தொழிற் நகரத்தில் குறுகிய காலத்தில் ஏற்படுகிற அசுர வளர்ச்சி, அது மக்களுடைய அக மற்றும் புற வாழ்வில் ஏற்படுத்துகிற கலாச்சார பண்பாட்டு மாற்றங்கள் போன்றவற்றை மிக விரிவாகவும், நேர்த்தியாகவும் பதிவு செய்திருக்கிற ஒரு புதினம். கிட்டத்தட்ட அது தொழிற்புரட்சிக்குப் பிந்தைய திருப்பூரைப் பற்றிய ஒரு ஆவணம் என்று கூட சொல்வேன். அதே போல் இந்த வருடம் வெளிவந்த கவிதைத் தொகுப்புகளில் விளையாட வந்த எந்திர பூதம் எனக்கு மிகுந்த புத்துணர்வைக் கொடுத்த ஒரு தொகுப்பு.   எழுத்தாளர் கறுப்பி சுமதி: ‘A Fine Balance’ – இந்நாவல் அண்மையில் வாசித்த மிகச்சிறந்த நாவல் என்று கூறும் தரத்தோடு இருக்கின்றது. 1975இல் இந்தியாவில் ‘அவசரகால ஆட்சி’ பிரகடனப்படுத்தப்பட்ட போது மும்பையில் வசித்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த டயானா எனும் பெண்ணினின் வாழ்வை மையப்படுத்தி அவரது சிறு பிராயத்தில் தொடங்கி முதுமை வரையின் நாவல் நீள்கின்றது. பெண்கள் மேலான ஆண்மையின் அடக்குமுறை அதை எதிர்த்து நிற்கும் டயானாவின் திறமை, பொருளாதார நெருக்கடி, டயானா சந்திக்கும் மனிதர்கள் என்று தன் எழுத்தால் வாசகர்களை பாத்திரங்களுக்குள் கொண்டு சென்றுள்ளார் மிஸ்ரி. நகர சுத்திகரிப்புத்திட்டம், குடும்பக்கட்டுப்பாடு என்ற பெயரில் வீதியோரப் பிச்சைக்காறர்களையும், பாமர மக்களையும் அரசாங்கம் நடாத்தும் முறை மிகவும் நெகிழ்சி தரும் வகையில் எழுத்தப்பட்டிருக்கின்றது. இந்திராகாந்தியின் அரசியல் காலகட்டத்தில் இந்திய மக்கள் அவர் மேல் கொண்டிருந்த வெறுப்பை மிகத் துல்லியமாகவும் துணிவோடும் தந்திருக்கின்றார் மிஸ்ரி. மூன்று வருடங்கள் திருமணத்தின் பின்னர் கணவனை ஒரு விபத்தில் இழந்த டயானா, ஆணாதிக்கவாதியான தனது அண்ணனுடன் தங்க நேர்ந்து விடுமோ என்று அஞ்சி, வாழ்வை ஒரு போராட்டம் நிறைந்த சவாலாக எதிர் கொண்டு முன்னேறும் போது டயானாவின் வீட்டின் அறையில் வாடகைக்கு வந்து சேரும் மொனீக் எனும் பல்கலைக்கழக மாணவன், டயானாவின் தையல் வேலைக்கு என வந்து சேரும் ஐவர், ஓம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தலித் ஆண்கள் இவர்களுடனான டயானாவின் உறவு என கதை நீண்டு செல்கின்றது. இந்த நாவலை இந்த புத்தாண்டில் நண்பர்களுக்கு பரிசளிக்க அல்லது பரிந்துரை செய்ய விரும்புகிறேன். எழுத்தாளர் கிருஷ்ண மூர்த்தி: புத்தாண்டிற்கு நான் பரிசளிக்க விரும்பினால் நட்ராஜ் மகராஜ் நாவலே என் தேர்வாக இருக்கும். வரலாறு மனிதர்கள் மீது உருவாக்கும் அடையாளங்களும் பின் அந்த அடையாளங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு வாழும் மனிதர்களின் அபத்தமும் எல்லா காலத்திற்கும் பொருந்தும். வரலாறு குறித்த புரிதலை களைத்து போட்டுக்கொண்டே இருக்கும் புதினம் புத்தாண்டில் புதிய வாசலை, புதிய புரிதலை கொடுக்கட்டும்.  எழுத்தாளர் பிரவீன் பஃறுளி: இந்த புத்தாண்டில் நான் இரண்டு புத்தகங்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன் ஒன்று. துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை – பாலசுப்ரமணியன் பொன்ராஜ். சமகாலத் தமிழ்ப் புனைவில் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகள் ஏற்படுத்தியிருக்கும் இடையீடு முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதமையவாதம், சுய அனுபவம், அன்றாடம் என சலிக்கும் யதார்த்தவாதக் குவியல்களுக்கிடையே, தமிழ்ப்புனைவு வெளியில் அவை ஒரு விபரீதத்தையும் திடுக்கிடலையும் நிகழ்த்தியுள்ளன. நமது புழங்கெல்லை என்னும் பரிதாபமான வரையறையை கேலி செய்தபடி வாசிப்பினூடாக அறிவியல், தத்துவம், வரலாறு, என சகல அறிவுத்துறைகளோடும் மேலும் நுகர்வியத்தின் புதிய பண்பாட்டு மற்றும் அறிவுக் களங்களோடும் மூர்ச்சிக்கும் புனைவுச் சாகசங்களை அவை பரிசோதிக்கின்றன. வாசிப்பே உடலாகி அதனூடான பல்வேறு பிரதிகளையே தன் எல்லையற்ற நிலமாக்கும் ஆற்றல் அப்புனைவுகளுக்கு உண்டு. ’அறிவார்த்தம், பரிசோதனை, கனவுத்தன்மை, புனைவதீதம், தடையற்ற சுதந்திரம்’ இக்கதைகளின் தன்னியல்பான அழகுகள். புனைவெழுத்தை கவிதையின் மொழிபுகளுக்கு உருக வைக்கும் அறிநிலைகள் அவற்றில் உண்டு. பழமையடைந்து வரும் ‘அன்பு’, ’நீதியியல்’ போன்றவற்றின் காலாவதித் தேதியை அறிவித்தபடி, வரலாற்றால் ஒட்டுமொத்தமாக வெறுமையாக்கப்பட்டிருக்கும் மனிதனை அவனது உயிர்க்கூறான வேட்கை, வன்முறை, நுகர்விச்சை, இயல்பூக்கங்களோடு அவை பரிசீலிக்கின்றன. , ’துரதிஷ்டம் பிடித்த கப்பலின் கதை தொகுதிக்குப் பின்னர் கல்குதிரையில் ‘பிரமிடுகளை அளக்கும் தவளை’ வெளியானது. அது தமிழில் நிகழ்ந்துள்ள ஒரு மாயாற்புதம் என்றே கூறலாம். புவியீர்ப்புக்கு எதிராகவும் விசைகொள்ளும் ஆற்றலும் வரலாற்றுக்குள் பல்வேறு இணைப்பிரதிகளினூடாக மயங்கிச் செல்லும் அறிவார்த்தத்தின் பெரும்சுழல்களும் அதில் உண்டு. மற்றொன்று. ஈட்டி -குமார் அம்பாயிரம் குமார் அம்பாயிரம் கதைகள் தொல்கதையாடிகளின் மந்திர நாவுகள் கொண்டவை. அவை தொல்கதைகளின் புதைபடிவுகளுக்குள்ளேயே ஆவிகளை உசுப்பியபடி நவீனத்துவம், சமகாலம், வரலாறு போன்ற வரம்புகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய வேறொரு ஞாபக வெளியில் புனைவுறுபவை. நிலத்திலும் காலத்திலுமான கோடுகளுக்கு முன்னும் பின்னுமென ஊசலாடிச் செல்லும் தொன்மங்கள் , வழக்காறுகளின் எல்லையின்மையும் நாடோடிக் குணமும் கொண்டவை. நவீனத்துவ அறிமுறைகளால் குருடுமையான நம் புலன்களைக் கழட்டி எறிந்து நமது உடலில் பூடகமான வேறுவித புலன்களைப் பொருத்தக்கூடியவை. அன்றாடம் என்ற நமது அலுப்பூட்டும் தகவல்-விவரண நினைவை ரத்துசெய்து தொன்மம், புனைவுகள் , ஐதீகங்கள், வழக்காறுகள் போன்றவற்றின் தொனிகளை வரித்துக்கொண்டு , நவீனம் கடந்த அறிதிறன்களின் புதிய ஒரு மெய்ம்மை கொண்டதாக அவரது கதைகள் இருக்கின்றன.     கீழைத்தேய அல்லது உலக தொல்சமூகங்கள் சார்ந்த தனித்த மனமும் அழகியலும் அவற்றை வழிநடத்துகின்றன. இத்தன்மையில் சமகால சித்திரம், நடப்பு அரசியல் கூட அதில் வேறொரு புனைவாக உருமாற்றப்படுகிறது. குமாரின் கதைசொல்லி நடப்பு உலகைப் பற்றி கதைகூறத் தொடங்கும் போது கூட அதன் புற அடையாளங்கள் , தகவல் குறிப்பீடுகள் , தினசரித் தன்மை என்ற மேலோட்டமான படலத்தை நீக்கி அதன் உலகளாவிய மற்றும் காலவரையற்ற பொது நினைவின் புதையுண்ட அடுக்குகளை அது புனைவாக்கம் செய்கிறது. எழுத்தாளர் ம.நர்மி தோழர் விக்னேஷ்வரன் வரப்போகின்ற புத்தாண்டில் ஒரே ஒரு புத்தகத்தை யாருக்காவது பரிசளிக்க விரும்பினால் எந்த புத்தகத்தை தருவீர்கள் என கேட்டிருந்தார். பா. ராகவனின் “எக்ஸலன்ட் செய்யும் எதிலும் உன்னதம்” என்ற புத்தகத்தை யாருக்காவது பரிசளிக்க விரும்புகிறேன்.   உண்மையில் புத்தாண்டு என்பது புதுவித எதிர்பார்ப்புகளுடன் கூடிய புத்தம் புதிய 365 நாட்கள். ஆண்டு தொடங்கும் போது எதை எதையெல்லாமோ அந்த வருட முடிவிற்குள் செய்து முடித்துவிட வேண்டும் என்று நினைப்போம். ஆனால் ஏதோ ஒரு வகையில் எல்லாமே தேங்கிவிடும். இதிலுள்ள 14 கட்டுரைகள் உன்னதங்களை நோக்கிய உங்கள் பயணங்களில் ஒரு சிறு உதவியையேனும் செய்யும் என நினைக்கிறேன். செய்கிற ஒவ்வொரு காரியத்தில் சுமாரான தரம் , நல்ல தரம் எல்லாம் தாண்டி சிறந்ததை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். எனக்கு இந்த கட்டுரையில் ” யானி ஒரு சாமுராயின் கதை ” மிகவும் பிடித்திருந்தது. “செயலின் உன்னதம் என்பது நீங்கள் உங்களை எத்தனைதூரம் அதில் அர்ப்பணிக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது. கவனம் பிசகாத , ஆத்மார்த்தமான முயற்சிகள் மாபெரும் வெற்றியைத்தவிர வேறொன்று பெறுவதில்லை..” – பா. ராகவன் எழுத்தாளர்ஹேமா: சமுதாயம் வரையறுத்த வட்டத்திற்குள் அடங்காத விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, 34 வயது பெண் தன்னந்தனியாக பயணம் மேற்கொள்கிறார். குறையில்லை எனினும் திருப்தியற்று சென்று கொண்டிருந்த வாழ்க்கை. அதை உதறும் Elizabeth Gilbert தனது bucket list ஐ நிறைவேற்றிக் கொள்ள முன்பின் சென்றறியாத திசையில் பயணம் மேற்கொள்கிறார்.   தன்னந்தனியாக ரோமுக்கு பயணம், பிடித்த உணவைச் சாப்பிடுதல், ஆன்மீகத்தைத் தேடி 3 மாத இந்திய வாசம், அதனைத் தொடர்ந்து இந்தோனேஷியாவில் எதிர்பாராமல் கிடைக்கும் காதல் என்று அவரது வாழ்க்கை திருப்பங்களுடன் பயணிக்கிறது. மனத்தடைகளை உடைத்தெறிந்து வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க வைக்கும் புத்தகம், Elizabeth Gilbert தன் அனுபவங்களைக் கொண்டு எழுதிய Eat Pray love. நண்பர்களுக்கு முக்கியமாக தோழிகளுக்கு நான் பரிசளிக்க விரும்பும் புத்தகம் இது. எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி : வழக்கமாகவே ‘வாசிக்கிற’ எனக்குப் புத்தங்கள் பரிசளிக்கும் பழக்கம் அறவே குறைவு. ஆகவே, பரிந்துரைப்பது என்றால் தோழிகளுக்கு ரமேஷ் ரக்‌ஷனின் ‘நாக்குட்டி‘ நாவலையும், தோழர்களுக்கு ஏக்நாத்தின் “மேப்படியான் புழங்கும் சாலை“யையும் பரிந்துரைப்பேன்…  கவிஞர் கவிதைகாரன் இளங்கோ: நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘பஞ்சதந்திரக் கதைகள்‘. (ஒன்பது வயதிலிருந்து பன்னிரெண்டு வயது வரையிலான எந்தக் குழந்தைகளுக்கும் பரிந்துரை செய்வேன். கதை வெளிகளில் அவர்கள் மனம் சஞ்சாரம் செய்ய அதொரு வாய்ப்பாக அமையலாம்) போன வருடம், என் மகளுக்கு அந்த புத்தகத்தை பரிசளித்தேன். கவிஞர் நிலாகண்ணன்: துக்கம் என்ற சிறு சொல் எவ்வளவு எடைகூடியது அது கரைக்கமுடியாத ஒரு பாறையைப்போல் அல்லவா பறிகொடுத்தவன் மனதில் ஏறி நிற்கிறது ஆனாலும் அந்தப்பாறை கால ஓட்டத்தில் உப்பாக இளகி கரைந்து போய்விடுகிறது.  – எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன் நாவல் :  கல்பட்டா நாரயணனின் சுமித்ரா .  தமிழில் : கே.வி ஷைலஜா இழந்தவரின் நினைவுகள் வேறு வேறு மனங்களிலிலிருந்து துவங்கி அந்த வீடுநோக்கிவருகிறது. மரணத்தை மிக நெருங்கி உணர்த்துகிறார். வித்யாசமான சொல்லல்முறை மூலம் கல்பட்டா நாராயணன் எழுதியதை தமிழில் கவித்துவம் மாறாமல் கே.வி ஷைலஜா மொழிபெயர்த்துள்ளார். எந்த ஒரு மரணச்செய்தியும் இந்த நாவலை நியாபகப்படுத்த தவறியதேயில்லை எனக்கு.வாசிக்கவேண்டிய நாவல். வம்சி வெளியீடு .  விலை: 500 ரூ இளம் எழுத்தாளர் மானசி : இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதாய் நம்பப்பட்ட அந்த கால கட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிந்த நாட்களை அதே குமுறல்களோடும் குருதி வாடையோடும் பதிவு செய்தவன் மண்டோ. 2019 ன் குழப்பமான, திடுக்கிட்ட, அமானுஷ்யமான மற்றும் பெரும் புரிதலை அனுபவித்த பல தருணங்கள் மண்டோவின் படைப்புகளுடன்தான் கழிந்தன. சகோதரன் சிற்றரசன் அறிமுகப்படுத்திய சதத் ஹசன் மண்டோ ஒரு பெருத்த ஏகாந்தத்தில் சொற்களின் வழி என்னை வந்தடைந்தவன். மண்டோவின் பிரார்த்தனையில் தொடங்கியது அவன் மீதான என் வசீகரம். பின்பு கதைகள், சொற்சித்திரங்கள், வாழ்வனுபவங்கள், கட்டுரைகளென ஒவ்வொன்றும் ஓர் அப்பட்டமான உண்மையை மட்டுமே எனக்கு இசைத்துக் காட்டியது. மண்டோவைப் படித்தபின்தான், மகளை கலவரத்தின் குரூரத்திற்கு பறிகொடுத்த அப்பாவின் மனம் புரிகிறது. ஒரு வேசியின் தோலுக்குள் இருப்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தோன்றுகிறது. மனித மனங்களின் பல நிறங்களை கண்முன் நிறுத்தியது மண்டோவின் படைப்புகள். சுபைதா, ஜானகி, குஷியா என நீளும் மண்டோவின் கதாபாத்திரங்களை என் மனதுக்குள் அடைகாத்துக் கொள்கிறேன். இன்று பாரதீய ஜனதாவின் அசூசை தரும் குடியுரிமை சட்டத்தை உள்ளடக்கிய பல நடவடிக்கைகளும் அதைத் தொடர்ந்து எழும் கேள்விகளும் கோபமும் போராட்டங்களும் மீண்டும் மீண்டும் எனக்கு மண்டோவையே நினைவுபடுத்துகிறது. அபத்தங்கள் படிந்த அழுக்கேறிய இந்த சமூகத்தின் அலங்கார உடைகளை கழற்றி எறிந்து நிர்வாணப்படுதுபவன் மண்டோ எனத் தோன்றுகிறது. குடி போதையில் ஏதோ ஒரு வேசியின் தீண்டுதலுக்காய் ரோட்டோரத்தில் நிற்கும் என் மண்டோவை இந்த கணத்தில் இறுக அணைத்து முத்தமிட்டுக் கொள்கிறேன். எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ்: உண்மைய சொல்லனும்னா இந்த வருஷம் நான் குஷ்வந்த் சிங் ஓட எல்லா புக்கையும் யாருக்காவது இந்த 2020ல பரிசளிக்க விரும்புகிறேன். அதிலும் குறிப்பா சொல்லணும்னா அவரோட The Company of Women புத்தகத்த அது நிச்சயம் யாருக்காவது பரிசாக கொடுப்பேன். Literature is a serious business that does not mean we end making serious stuff. 2020ல இருக்கக் கூடிய அரசியல் சூழலில் நம்ம எல்லார் கிட்டயும் ஒரு இறுக்கம் வந்துடுச்சு.   அதனால நம்மள நாமே மனதளவில் ரிலாக்ஸாகி இருக்கிறதுக்கு குஷ்வந்த் சிங் ஒரு எழுத்து ரொம்ப தேவைப்படுது. இந்த புத்தகம் முழுவதும் அவருக்கு காமத்தை ரொம்ப அழகா எழுதி இருக்காரு. ஆனா அது மஞ்சள் புத்தகம் போல இருக்காது. அவர் எழுத்தில் ஒரு அழகான கிராஃப்ட் இருக்கும். செக்ஸ கூட ரொம்ப நேர்த்தியா ரொம்ப நகைச்சுவை உணர்வோடு அழகா சொல்லி இருப்பார். ரொம்ப நேர்மையான ஒரு புத்தகம். சர்ச்சைக்காக சில பேர் செக்ஸை பத்தி எழுதுவாங்க, செக்ஸ் பத்தி எழுதினா பெரிய ஆளுன்னு நினைச்சு பாங்க அப்படின்னு எழுதுவாங்க, இல்ல தன்னுடைய பெருமைய பீத்திப்பதற்காக செக்ஸை பத்தி எழுதுவாங்க ஆனா அதையெல்லாம் தாண்டி குஷ்வந்த் சிங் ஓட எழுத்து ரொம்ப இயற்கையா எந்த ஊரு பூச்சும் இல்லாமல் செக்ஸ கொண்டாடுற ஒரு மனுஷன் எப்படி அதை எழுத்தில கொண்டாடுவாரோ அப்படி இருக்கும். ரசிக்கக் கூடிய புத்தகம். குஷ்வந்த் சிங் வார்த்தையில சொல்லணும்னா – பேனாவுக்கு இன்னும் யாரும் ஆணுறைகள் கண்டுபிடிக்கவில்லை. எழுத்தாளர் றாம் சந்தோஷ்: இந்திய தத்துவ ஞானம் ஆக்கியோன் கி லக்ஷ்மணன். எனது எம்ஏ பாடத்திட்டத்தில் இடம் பெற்ற நூல்களில் ஒன்று தத்துவத்தின் மீதும் கோட்பாட்டின் மீதும் ஈடுபாடு கொள்ளச் செய்த மற்றும் தர்க்கம் அல்லது வாதிடும் தன்மை குறித்து நான் கற்றுக்கொள்ள அடிப்படையாக அமைந்த அரிச்சுவடி. வேத உபநிடதங்கள், அவைதிக தத்துவங்கள், ஐவகை தரிசனம், மூவகை வேதாந்தம், சைவ சித்தாந்தம் ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டது. பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு. எழுத்தாளர் க.வீரபாண்டியன்: ‘மூக்நாயக்’ அம்பேத்கர் முதன்முதலில் மராத்தி மொழியில் தொடங்கிய மாதமிருமுறைப்பத்திரிக்கை. 2020 இந்த இதழின் நூற்றாண்டு. மராத்தி மொழியில் வெளிவந்த மூக்நாயக்கின் 14 இதழ்களில் வெளிவந்த தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணத் தொகுப்பு இந்நூல். மூக்நாயக் இதழ் 1920ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் வெளியிடப்பட்டது. கோலாப்பூர் மன்னர் சத்ரபதி சாகுஜி மகாராஜா அளித்த 2500 ரூபாய் நிதியுதவியுடன் துவங்கப்பட்ட இந்த இதழின் முதல் ஆசிரியராக நந்த்ரா பட்கர் (Nandra Bhatkar) அவர்களும், பிறகு தியான்தார் கோலப் (Dyander Gholap) அவர்களும் இருந்தனர். அம்பேத்கரின் ஆரம்பகால அரசியல் பார்வைகளையும், விடுதலைக்கு முந்தைய தலித் இயக்கங்களின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொருவரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். திலகர் காலத்து காங்கிரஸ் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் மீதான பார்வைகள், சுயராஜ்ஜியம் கருத்துருவாக்கத்தின் மீதான விமர்சனங்கள், தீண்டத்தகாதோர் உரிமைகள் என 1920களின் இந்திய அரசியல் வரலாற்றை விமர்சனப் பூர்வமான கண்ணோட்டத்துடன் கருத்துகளைத் தாங்கி வந்த இதழ் என்ற அடிப்படையில் இந்த நூல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டில் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் என்பதால் நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன். கோலாப்பூரில் உள்ள டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் சமூக வள்ர்ச்சிக்கான ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த டாக்டர்.பி.ஆர்.காம்ப்ளே என்பவரால் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த மொழியாக்கம் முதன்முறையாக மராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குச் செய்யப்பட்டது. இப்போது வரை கிடைத்திருக்கும் தரவுகளின்படி, ஆங்கிலத்திலிருந்து இந்த இதழின் முதல் தலையங்கத்தை சுமார் 98 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் தமிழில் நான் மொழியாக்கம் செய்தேன். எழுத்தாளர் மதிவண்ணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘வெள்ளைக்குதிரை’ காலாண்டு இதழில் அந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை வெளிவந்தது. மொத்த நூலையும் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தூல் தமிழில் விரைவில் வெளியிடப்படும். கனலி வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! எழுத்தாளர் தெரிசை சிவா: பரிசளிக்க விரும்பும் புத்தகம் நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு.  தனி மனித வாழ்வில் கடவுளின் அவசியமென்ன? இயற்கையின் கொடையாகிய மழையையும் காற்றையும் பங்கிட முடியாத நாம், நிலத்தை பங்கிட்டுக் கொள்வதற்கான பின்னரசியல் என்ன? தனிமனித விரோதங்களில் கடவுளின் பங்கு என்ன? என பல கேள்விகளுக்கு குறியீடுகளின் கலவையாய் பதிலை தருகிறது நாஞ்சில் நாடனின் இந்த நாவல். நாஞ்சில் மொழியின் எள்ளலும் துள்ளலும் நகைச்சுவையும் வரிக்கு வரி இழைந்தோடுகிறது. மொழி வனப்பின் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் குணாதிசயங்களுக்கும் கொடுக்கும் ஆசிரியர் கொடுக்கும் சித்திரம் வியக்கவைக்கிறது. மண் சார்ந்த படைப்புகளில் மிக முக்கியமான படைப்பாக போற்றப்பட வேண்டியது நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு. கவிஞர் உமா மோகன்: பிரபஞ்சனின் கதைகளைக் கடந்த சில வருடங்களில் பல நண்பர்களுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவ்வகையில் சமீபத்திய டிஸ்கவரி வெளியீடான தேர்ந்தெடுத்த பிரபஞ்சன் சிறுகதைகளைக் குறிப்பிடலாம் என்றே இருந்தேன். இப்போது ஒரு யோசனை …பிரபஞ்சன் கதைகளை நான் சொல்வது வழக்கம். இந்தப் புத்தாண்டுக்கான மாற்றமாக கோ.லீலா எழுதிய மறைநீர் புத்தகத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், நீர் மேலாண்மை , மறைநீர் பற்றிய விரிவான தகவல்களோடு தமிழ் இலக்கியங்களின் நீர் மேலாண்மைக் குறிப்புகளையும் எடுத்தாண்டு சுவாரசிய நடையில் எழுதப்பட்ட நூல். dayzero அச்சுறுத்தும் நகரங்களின் பட்டியலில் நம் ஊர் இருக்கிறதா என்று எட்டிப்பார்த்துக் கொண்டு அந்த நாள் எட்டடி இருப்பதால் இப்போதைக்கு இப்படியே இருப்போம் என்ற அலட்சிய சமூகத்துக்கு இந்நூல் அவசியம் தேவை. சின்னஞ்சிறு தீர்வுகள் முதல் கொள்கை வகைத் தீர்வுகள் வரை விளக்கும் நல்ல நூல். மறைநீர் -விலை ரூ .150 ஆசிரியர் :கோ.லீலா படைப்பு பதிப்பகம் 8,மதுரை வீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர் -607 002 எழுத்தாளர் பொள்ளாச்சி அபி:  நூல் : வால்காவிலிருந்து கங்கை வரை இயற்கையோடு இணைந்த வாழ்ந்த மனிதன்,ஒரு சமூகமாகவும்,நாகரீகங்களை நோக்கி படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு,பின்னாளில் பேரரசுகளாகவும் மாறிய நிகழ்வையும்,ஆதியில் தாய்வழிச் சமூகமாக இருந்து, பின்னர் படிப்படியாக ஆணாதிக்கச் சமூகமாக மாறுவதும்,அதற்கான கருவிகளாக சடங்குகள், மதம், கற்பு, ஒழுக்கம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவதையும்..எளிய சிறு கதைகளாக விளக்கும் நூல். மனித சமூகத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள ஆர்வமுடைய ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய…என்பதைவிட கற்றுக்கொள்ள வேண்டிய நூல்…! கவிஞர் இரா.பூபாலன்: நான் பரிசளிக்க விரும்பும் புத்தகம் குட்டி இளவரசன். குழந்தைகளின் உலகத்தைப் பெரியவர்கள் புரிந்து கொள்ளவும் பெரியவர்களின் மனநிலையைக் குழந்தைமைக்குக் கொண்டு போகவுமான அற்புதம் செய்யும் ஒரு சிறு புத்தகம் அது. எழுத்தாளர் சுபா செந்தில்குமார்: பரிந்துரை : விக்ரமாதித்யன் கவிதைரசனை கவிதை எழுதுவற்கான உந்துதலோடு வரும் இளம் எழுத்தாளர்களுக்கு கிட்டத்தட்ட தான் எழுதும் எல்லா கவிதைகளிலும் கவித்துவத்தை எட்டிப் பிடித்துவிட்டதாகவே தோன்றும். இன்னொரு புறம் வாசிப்பு அனுபவம் என்பது கவிதையின் வெவ்வேறு முகங்களை அறிமுகம் செய்யும். தான் எழுதிய கவிதைகளுக்கும் தன்னைச் சுற்றி எழுதப்படும் கவிதைகளுக்குமான இடைவெளியைப் புரிந்துகொள்வது என்பது “எது கவிதை?” என்பதை புரிந்துகொள்ள உதவும் ஒரு பெரும் பயணத்தின் தொடக்கம். தன் கவிதைகள் தனக்குத் தரும் கிளர்ச்சி என்பது தண்ணீர் தரும் குளிர்ச்சியைப் போன்றது. அந்தக் குளிர்ச்சியை அனுபவித்தபடி ஓரிடத்தில் நீர்நிலையைப் போல நிலைகொண்டுவிடாமல், ஒரு பெரும் நீரோட்டத்தை அறிமுகம் செய்யும் இந்த நூல், நம் கரங்களைப் பிடித்து பேருருவாய் விரிந்துகிடக்கும் ஆழ்கடலின் கரையில் சென்று நிறுத்துகிறது. எழுத்தாளர் முஹம்மது யூசுப்: இந்தியாவில் மூன்று மாநிலத்தவர்கள் மீதான கேலி நகைச்சுவைகள் அதிகமாக உண்டு ஒன்று சர்தார்ஜி ஜோக் மற்றொன்று பீகாரி ஜோக் கடைசியாய் மதராஸி ஜோக் மூவருமே முட்டாள்கள் என்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை கட்டமைப்பை உண்டாக்கும் எழுத்துக்கள். சற்றே உற்று நோக்கினால் ஏதோ நூல் ஒன்று பொதுவாய் தென்படும் இந்த கேலிகளுக்குப் பின்னால். அது மிகப் பெரிய அரசியல். பீகாரிகளின் கதை என்றதும் ஆவலில் வாசிக்க ஆரம்பித்தேன்  “கரும்புனல்” நாவலை. நண்பர் சுரேஷ் அவர்களின் கரும்புனல் நாவலை முழுவதுமாக வாசித்து முடித்ததும் பத்து நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தேன். உண்மையிலேயே தொண்டை வற்றி விட்டது. மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் நீர் அருந்தி பள்ளி சென்று தொழுது வந்த பின் மனம் பழைய நிலைக்குத் திரும்பியது பீகாரில் சார்க்கண்ட் எப்படி ஏன் எதற்கு என அது உண்டான கதை, அப்படியே ராஞ்சியில் நிலத்தை அபகரிக்கும் ஊழல் அதன் ஊடே வழிந்து ஓடும் வர்மா சதுர்வேதி பானர்ஜி களின் ஜாதி துவேசம் என கதை கை பிடித்து நம்மை அழைத்துச் செல்கிறது நிலக்கரி சுரங்கம் அதற்காக நிலத்தை கையகப்படுத்தும் அரசாங்கம், அதற்கு மாற்று நிலம் தருவதில், இழப்பாக பணம் தருவதில்,வேலை தருவதாக வாக்குறுதி தருவதில் இடைய நடக்கும் தரகு வேலை – இன்னமும் தொடந்தபடி தானே உள்ளது இந்த மோசமான இயங்கு முறை வயிற்றில் அடிக்கிறாயே என திருப்பிக் கேட்டால் மாவோயிஸ்ட்களாகவும் தீவிரவாதிகளாகவும் அடைப்புகுறிக்குள் சிக்கும் பலகீனமான அப்பாவி மனித எலிக் கூட்டம் நல்ல நாவல் இந்த புத்தாண்டில் நண்பர்களுக்கு இந்த நாவலை பரிந்துரை செய்கிறேன். ஒரு தேர்ந்த scientific thriller எப்டியிருக்க வேண்டுமோ அப்டியிருக்கிறது ‘யூனிட் 109‘ முதல் நான்கைந்து அத்தியாயங்கள் எங்கும் பிடி கொடுக்காமல் சென்றாலும் அதன் பிறகான பாய்ச்சல் நாவலுக்குள் நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. தென்றல் தப்பும் கணத்திலிருந்து அசுர வேகம்… ஒரு சில நாவல்கள் மட்டுமே கதைக்களத்தையும் கேரக்டர்களையும் நம் கண்முன்னே நிறுத்தும், அவ்வகையில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் சில வர்ணனைகள் தேவையில்லாமல் வருகிறதோ எனத் தோன்றினாலும் அதில் மேற்கொண்ட வித்தியாசம் அருமை. இறந்து போன சிறுமியின் உடலைக் கூட அவளின் தலைமுடி உடை என வர்ணித்து சேற்றில் விழுந்து கிடந்த மெழுகுச் சிலைபோல் இருந்தாள் என முடித்தது மனதை வலிக்கச் செய்யாமல் இருக்காது. ஆங்காங்கே வலிமையான வசனங்களும், “இங்க நம்பிக்கைக்கு கூட expiry date இருக்கு, அதை மறந்துட்டேன், we can never believe people in power” போல பல இடங்களில், மற்றும் கதைக்குத் தேவையான ஆஸ்கர் வைல்ட், ஐன்ஸ்ட்டின் வாசகங்களும்… வலிந்து திணிக்காத நகைச்சுவை மிகப் பெரும் ப்ளஸ், விவாகரத்து பெற்ற தம்பதிகள் ஓரிடத்தில் பேசுவது… “Anyone who comes up on the road can see your big fat ass” “I know my ass is not as big as your ego” அமேசான் Pen to Publish போட்டிக்காக வந்தவைகளில் இதுவரை நான் வாசித்ததில் மிகச் சிறந்த தரமான வாசிப்பனுபவம் கொடுத்தது மாயா-வின் ‘யூனிட் 109’. எழுத்தாளர் Malarvizhi Baskaran. நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்டெல்லா ப்ரூஸையும் ஆர்னிகா நாசரையும் ஒருசேர வாசித்தது போன்ற உணர்வு…! கவிஞர் வேல் கண்ணன்: தஸ்தாயேவ்ஸ்கியின் ‘ஒரு எழுத்தாளரின் நாட்குறிப்பு’ அன்றைய அரசியல். பொருளாதார, சமூக சூழ்நிலை அன்று தஸ்தாயேவ்ஸ்கி தனது எழுத்தில் எப்படி பதிவு செய்துள்ளார் என்பதை பற்றி அறிய இந்த புத்தகம் பெரிய உதவியாக இருக்கிறது. மேலும் இதன் வழியே இன்றை நமது சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மொத்தத்தில் மிகச்சிறந்த புத்தகம். கவிஞர் தயாஜி: பரிசளிக்க நினைக்கும் புத்தகம் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்‘ நாவல். இரண்டாம் உலகப்போரில் காலகட்டத்தில் மலாயாவில் கதை தொடங்குகிறது. இன்றைய மலேசிய மண்ணில் கால் பதித்த நம் மூதாதையர்களின் தியாகத்தையும் இதில் கண்டு கலங்கினேன. இன்று எத்தனையோ மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் கண்டுள்ள தமிழ்ச்சமூகம் தன் தொடக்க காலத்தில் சுமந்த வலியையும் இழப்புகளையும் இதன் வழி அறியலாம். கூடுதலாக அதன் மொழி, இன்றும் இந்நாட்டில் பல இடங்களில் பேசும் மொழியாகவே இருக்கிறது. எழுத்தாளர் அகில் குமார்: மனதின் மிக நுட்பமான பகுதிகளை குறைந்த பக்கங்களிலேயே வாசகனுக்கு உணர்த்திவிடும் காஃப்காவின் உருமாற்றத்தையும், தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளையும் நான் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன். மனித இருப்பின் முக்கியத்துவத்தை சர்ரியலிசத்தின் துணையோடு உருமாற்றம் கேள்விக்குள்ளாக்கும்போது, மனித உறவு முறைகளின் அசலான முகத்தை யதார்த்தவாத புனைவு முறையில் வெண்ணிற இரவுகள் வெளிப்படுத்துகிறது. எழுத்தாளர் ஷான் கருப்புசாமி: யவல் நோவா ஹராரி எழுதிய “ஹோமோ டியஸ்“. மனித குலத்தின் எதிர்காலம் குறித்த பல அனுமானங்களை முன்வைக்கிறார் நூலாசிரியர். அவற்றில் பல அதிர்ச்சியூட்டும் வகையாக இருக்கும். நம் சிந்தனாவாதத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நூல். எழுத்தாளர் ஸ்ரீதேவி மோகன்: காளான் மனசு எனக்கு. பட் பட்னு உடைஞ்சு போற என் மனதை அந்தந்த காலகட்டத்தில் தூக்கி நிறுத்துபவை தன்னம்பிக்கை புத்தகங்கள் தான். அந்த வரிசையில் ” என்னுடைய பாலாடைக் கட்டியை எடுத்துச்சென்றது யார்? ( Who moved my cheese) புத்தகத்தைப் பரிசளிக்க விரும்புவேன். துயரமோ, தோல்வியோ அந்த இடத்திலே தேங்கிவிடாமல் நகர்ந்து விட வேண்டும் என்பதை அப்புத்தகம் வலியுறுத்துகிறது. கவிஞர் ஜான்ஸி ராணி: பரிந்துரைக்கும் நூல் : காதுகள் – நாவல் 1920 ஆம் ஆண்டு பிறந்த எம்.வி.வெங்கட்ராம் தனது வாழ்க்கை வரலாற்று நாவல் என இந்நாவலை சொல்லியிருக்கிறார். சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் தஞ்சாவூர் மாவட்ட நூலகத்தில் எந்த இலக்கிய பரிச்சயமும் இல்லாத என் பதின்ம வயதில் இக்கதையைப் படித்த அனுபவமும் நான் அப்போதடைந்த பிரமிப்பின் அலைகள் இப்போதும் எனது நினைவுக் கடலில் அலைமோதியபடியிருக்கின்றதென சொல்லலாம். மேஜிக்கல் ரியலிச நாவல்களின் கூறுகளைக் கொண்டதென்றாலும் மனநலத் துறையை சார்ந்த எனக்கு வேறெந்த நாவலும் auditory hallucinations பற்றி இத்தனை விஸ்தாரமாக பேசியதில்லை என்றே தோன்றுகிறது. மனித மனங்களின் பிறழ்வுகளை இலக்கியமாக படைத்திருக்கும் இந்த உன்னத ரசவாதம் போற்றத்தக்கதும் சிறந்த வாசிப்பனுபவத்தையும் அளிக்கக்கூடியதுமாகும். இந்நாவலுக்காக 1993 ஆம் ஆண்டு எம்.வி.வி சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ளார். தொகுப்பு : க.விக்னேஷ்வரன்   http://kanali.in/book-recommendations-by-writers-part2/