Jump to content

கம்போடிய ஏரிகளும் தமிழக மன்னர்களும்... ஒரு வரலாற்றுக் கதை!


Recommended Posts

9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் லண்டன் நகர மக்கள் தொகை வெறும் 30,000 மட்டும்தான். அதே சமயம், கம்போடிய அங்கோர் நகரில் 10 லட்சம் மக்கள் வசித்திருக்கிறார்கள் என்கிறது வரலாற்று ஆய்வாளர்களின் புள்ளி விவரம். 10 லட்சம் மக்கள் வசித்தார்கள் என்பதில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். அந்த மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகரத்துக்குத் தேவையான தண்ணீரும் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.

கம்போடியா கோயிலுக்கும் பனைக்கும் மட்டும் பிரபலமல்ல, அங்குள்ள ஏரிகளுக்காவும்தான். கம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 ச.கி.மீ. அந்நாடு, 443 கி.மீ நீளமான கடற்கரையைக் கொண்டது. கம்போடியாவில் சிறப்பாகச் சொல்லக்கூடிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், அவற்றில் கம்போடியர்களின் நீர்ப் பாசனத் திட்டங்கள் மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியவை.

 

தமிழ்நாட்டில் மன்னராட்சிக் காலங்களில், குறிப்பாகப் பல்லவர்கள் ஆட்சியின்போது நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மக்களுக்கான அத்தியாவசிய தேவை மற்றும் விவசாயம் ஆகிய தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அதிகமான ஏரிகளும் குளங்களும் அமைக்கப்பட்டன. அவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கும் வகையில் கால்வாய்களும் அமைக்கப்பட்டிருந்தன. (இன்று அவற்றில் பெரும்பாலும் இல்லை என்பது சோகக்கதை). பல்லவ மன்னர்கள் தாங்கள் அமைத்த ஏரிகளுக்கு 'தடாகம்' என்று பெயரிட்டனர். மன்னர்களின் பெயருக்கு பின்னால் தடாகம் என்று சேர்த்து பெயர் வைக்கும் வழக்கம் அப்போது புழக்கத்தில் இருந்திருக்கிறது.

மீண்டும் கம்போடிய கதைக்கு வருவோம். பல்லவ மன்னர்களுடன் தொடர்பு வைத்திருந்த கம்போடிய மன்னர்கள், தமிழகத்தில் உள்ள ஏரிகளைப்போல அமைக்க நினைத்தனர். அதனால் அவர்களும், ஏரிகளின் பெயரை 'தடாகா' (தடாகா - கம்போடிய மொழியில் தடாகம்) என்று வைத்திருக்கின்றனர். கம்போடியாவில் உள்ள அங்கோர் நகரில் மொத்தமாக நான்கு ஏரிகள் கட்டப்பட்டன. அதில் ஒரு ஏரியின் பெயர் 'இந்திர தடாகா'. கம்போடிய மன்னன் இந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டதால் அப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. அதன் பின்னர் யசோதர வர்மன் கட்டிய ஏரிக்கு 'யசோதர தடாகா' எனவும் பெயர்கள் வைக்கப்பட்டன. அதன் பின்னர் மேற்கு பேரே (பேரேரி என்பது பேரேவைக் குறிக்கும் சொல்), ஜெய தடாகா என்று இரண்டு பெரிய ஏரிகளும் கட்டப்பட்டன. அவர்களுக்கான நீர் மேலாண்மைக்கு முன்னோடிகள் பல்லவ மன்னர்கள்தாம் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உண்டு.

கம்போடியா நாட்டின் மிகப் பெரிய நீர் ஆதாரம் ‘டோன்லே சாப்’ ஏரி. இந்த ஏரி கடல்போலக் காட்சி அளிக்கும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உப்பில்லாத ஏரியும் இதுதான். 1997-ல் யுனெஸ்கோ இதை உயிரினப் பாதுகாப்புக் கோளம் என்று குறிப்பிட்டது. 16,000 ச.கி.மீ பரப்பளவில் இருக்கும் இந்த ஏரியின் அதிக பட்ச நீளம் 250 கி.மீ. ஏரியின் ஆழம் 33 அடி. அகலம் 100 கிலோ மீட்டர். இந்த பிரம்மாண்ட ஏரியில் ஆயிரக்கணக்கணக்கான குடும்பங்கள் மிதக்கும் வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் குடியிருப்புகளே சிறு சிறு கிராமங்களாகவும் இருக்கின்றன. மிதக்கும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக விரும்பிச் செல்லும் ஏரியும் இதுதான்.

வறண்ட காலத்தில் சுமார் 2,590 ச.கி.மீ. பரப்பையும், மழைக்காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோமீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஏரியையொட்டிய சமவெளிப் பகுதிகளில் அரிசி பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதி கம்போடியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இப்படி கம்போடியாவில் பல ஏரிகளைக் கட்டுவதற்கான முன்னோடியாக தமிழ்நாட்டு மன்னர்களும் இருந்திருக்கிறார்கள்.

கம்போடியாவில் பின்னர் வந்த அரசுகள் முறையாகப் பராமரிக்காததால், ஏரிகளிலிருந்து பாசனம் செய்யும் கால்வாய்கள் பெரும்பாலானவை காணாமல் போயின. ஆனால், ஏரிகள் அப்படியேதான் இருக்கின்றன. அதற்கு முன்னோடியாக விளங்கிய தமிழகத்தில் இப்போது, ஒருபடி மேலே போய் 'ஏரி'களே காணாமல் போய்க்கொண்டிருப்பது வருந்தத்தக்க விஷயம்.

https://www.vikatan.com/news/environment/historical-references-between-cambodia-lakes-and-tamil-kings

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.