Jump to content

இலங்கையின் பொருளாதார நிலைப்பாடும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தேவையும்


Recommended Posts

இலங்கையின் பொருளாதார நிலைப்பாடும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தேவையும்

அனுதினன் சுதந்திரநாதன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 01:4

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வுகளுக்குப் பின்னர், இலங்கையின் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி நிலையொன்று ஏற்பட்டதை, யாரும் மறுக்க முடியாது. மூன்றுக்கு மேற்பட்ட மாதங்களை நாம் கடந்துள்ள போதிலும் குறித்த நிகழ்வால் ஏற்பட்ட பொருளாதார அதிர்வுநிலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை.

இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகள், இந்நிகழ்வுகளுக்கு முன்னதாகவே, மிகப்பெரும் நெருக்கடியிலிருந்ததுடன், அதைத் தீர்ப்பதற்கு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டே, நாட்டின் அபிவிருத்தி இலக்குகள் திட்டமிடப்பட்டிருந்தன. தற்போது, அவற்றின் மூலமான எவ்வித நலன்களையும், மிகவிரைவாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையுள்ளதால், இலங்கையின் பொருளாதார நிலைப்பாடு, மிகப்பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது.   

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் மாதங்களில் நாம் எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்தப் பொருளாதார நிலையில், இன்னமும் மோசமான நிலையே எதிர்பார்க்க முடியும். அதிலும், எதிர்பார்த்த வருமானங்கள், முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், பொருளாதாரச் செயற்பாடுகளை நமது அரசியல் தலைவர்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.  

இலங்கையின் நவீனப் பொருளாதார வளர்ச்சி, பொருளாதாரத் திட்டமிடலுக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு, மிகப்பெரிய தொடர்புள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் ஏற்பட்டுள்ள தாமதம், நம்பிக்கையின்மை நிலை ஆகியன நவீன பொருளாதார வளர்ச்சி வேகத்தின் தாக்கத்தி, மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.   

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை இவ்வாண்டில் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் அளவானது, மிக சொற்பமாகவேயுள்ளது. அத்துடன், இவ்வாண்டில் இடம்பெற்ற அசாதாரண நிகழ்வுகளின் விளைவாக, இலங்கை கடந்த ஆண்டிலும் பார்க்க மிகக் குறைவான வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளைவுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தேக்கமடையச் செய்துள்ளதுடன், எதிர்பாராதப் பொருளாதார சுமைகளையும் மக்கள் மீது சுமத்தக் காரணமாக அமையப்போகின்றது.  

 

வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தேவைப்பாடு

இலங்கைக்கு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் தேவைப்பாடு நிகழ்வதற்கு, மிக அவசியமான பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 7-8 சதவீதமான வளர்ச்சியைத்தொட, குறைந்தது மொத்தத் தேசிய உற்பத்தியில், 30 - 40 சதவீதமானவரை, வெளிநாட்டுநேரடி முதலீடுகளாக இருக்க வேண்டும். இதற்கு மிக முக்கியக் காரணம், இலங்கை போன்ற நாட்டின் உள்நாட்டு சேமிப்பானது, மிகக் குறைவானதாக உள்ளமையாகும். 

இன்னுமொரு வகையில் சொல்லப்போனால், இலங்கையின் முதலீடுகளை ஈடுசெய்யக் கூடியதாகவில்லை என்பதாகும். எனவே, இந்த முதலீடு-சேமிப்பு இடைவெளியைக் குறைப்பதற்கு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.  

பெரும்பாலும், இந்த நேரடி முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கு, பாதுகாப்பான அரச சூழ்நிலைகளும் முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய சலுகைகளும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆயினும், தெற்காசிய நாடுகளான அபிவிருத்தி அடைந்துவரும் வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளுடன் ஒப்புடுமிடத்து இலங்கைக்கான முதலீடுகளின் உள்வருகை மிகக்குறைந்த அளவிலேயே இருக்கிறது.   

இந்த நிலை, இலங்கையின் உள்நாட்டு கட்டமைப்பு வினைத்திறனற்ற முறையிலிருப்பதையும் அரசியல் குழப்பங்கள் முதலீட்டாளர்களை கவராத தன்மை கொண்டுள்ளமையையும் வெளிப்படுத்துகிறது.  

 

வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் எதிர்பார்க்கையும் ஏமாற்றங்களும்

நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கானத் தேவை உணரப்பட்டது இன்றோ, நேற்றோ அல்ல. 1977ஆம் ஆண்டு முதல், இலங்கையானது வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும் முதலீட்டாளர்களையும் கவர்வதற்கான முழுமையான முயற்சிகளை வெளிப்படுத்தி வருகின்றது. குறிப்பாக, இந்த முயற்சியின் பலனாக, 1982ஆம் ஆண்டில் இலங்கையில் மிகப்பாரிய தொழிற்சாலைகள், முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது. இருப்பினும், குறித்த ஆண்டுகளுக்கு பின்னதாக ஆரம்பித்த இலங்கையின் இனக்கலவரமானது, அனைத்து வகையான வெளிநாட்டு முதலீடுகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் முட்டுக்கட்டையாக அமைந்தது. இதன்காரணமாக, இலங்கைக்குக் கிடைக்கவேண்டிய அந்நிய முதலீடுகள் சுமார் 20க்கும் மேற்பட்ட வருடங்களாக, தெற்காசிய வலயத்திலுள்ள ஏனைய நாடுகளுக்குக் கிடைக்கப் பெற்றதுடன், அவை இலங்கையைப் பார்க்கிலும் மிக விரைவாக வளர்ச்சி பெறவும் ஆரம்பித்திருந்தன.  

எனினும், 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின்னதாக, இலங்கை அரசாங்கமானது. அதுவரை காலம் விடுபட்ட வெளிநாட்டு உறவுகளையும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள், முதலீட்டாளர்களையும் கவர்ந்துகொள்ள முடியுமென நம்பியிருந்தது. ஆனால், இலங்கையின் பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள், அதற்கு ஏதுவானதாக அமைந்திருக்கவில்லை. குறிப்பாக, ஐரோப்பிய யூனியன் தடை செய்த GSP+ சலுகை உட்பட ஏனைய காரணிகளும் இதில் முதன்மையானதாக உள்ளது.  

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சர்வாதிகார ஆட்சிக்கு பின்னதாக ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கமானது, இதுவரை காலமும் இலங்கை இழந்த நலன்களை மீட்டெடுக்கும் கனவுடனும் சபதத்துடனுமே ஆட்சி பீடமேறியிருந்தது. ஆனால், ஆட்சி காலத்தில் இடம்பெற்ற மோசமான குழப்பங்கள், அரசியல்வாதிகளின் கையாடல்கள் காரணமாக, மக்களினதும், சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்களையும் இழந்ததே மீதமாகியுள்ளது.  

இவற்றுக்கு மேலாக, இலங்கையின் வாழ்வாதார செலவீனங்கள் அதிகரித்து கொண்டுசெல்ல, இலங்கையின் ஊழியப்படையின் செலவுகளும் அதிகரித்து கொண்டே செல்லுகிறது. இதன்காரணமாக, அநேக வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு இலங்கைக்கு மாற்றீடாக வேறு ஆசிய, தெற்காசிய நாடுகள் போட்டியாக வர ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாகவும் இலங்கையானது தனக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ளுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளுகிறது.  

இவ்வாறாக, இலங்கை தனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஏதொவொரு வகையில் தவறவிட்டுக்கொண்டே வந்திருக்கின்றது அல்லது வருகின்றது. அந்த வகையில், மிக அண்மையாக இலங்கையை அபிவிருத்தி பாதைக்கு மீளக்கொண்டுச் செல்லக்கூடியதாக கிடைக்கப்பெற்ற வழியையும் தவறவிட்டுக்கொண்டிருக்கிறது என்றே கூறவேண்டியுள்ளது. 

குறிப்பாக, இலங்கை பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்திடும் சுற்றுலாத்துறை மூலமான வருமானம், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் என்பவற்றை நாம் இழப்பதன் மூலமாக, மீளவும் முன்னேற முடியாத நிலையில் சிக்கிக்கொள்ளுவதுடன், ஆசிய பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலிருந்துகொண்டு, ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து பின்தங்கிய வளர்ச்சி நிலையைக் கொண்டிருக்கும் அவமான நிலையை எதிர்கொள்ள வேண்டியதாகவிருக்கும்.  

எனவே, இலங்கை அரசாங்கமும் அதுசார் அதிகாரிகளும், நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்டு, நாட்டின் வளர்ச்சியை முன்னேற்ற உதவக்கூடிய வெளிநாட்டு நேரடி முதலீடுகள், தொழில்சார் விருத்தி கட்டமைப்புக்களில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் வகையிலானத் திட்டங்களை முன்னெடுப்பதுடன், எந்தவகையான அரசியல் செயற்பாடுகளும் நாட்டின் அபிவிருத்தியையும் அதுசார் தொழிற்றுறைகளையும் பாதிக்காத வகையில் முன்னெடுத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.