Jump to content

காஷ்மீர் அதிர்வலைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1

by in கட்டுரைகள்

Jammu-Kashmir-Ladakh.jpg

 

காஷ்மீர்  தெற்காசியாவின் அரசியலில் முக்கிய நகர்வு ஒன்றை கண்டிருக்கிறது. முன்பு இருந்த தனித்துவமான அதிகாரங்களை இழந்து இந்திய மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரு அரசியல் பிராந்தியமாக  இருந்த பிரதேசம் இன்று இரண்டு பிரிவுகளாக பிரித்து விடப்பட்டுள்ளது.

முன்பு இருந்த காஷ்மீரில் மத்திய அரசினால் எடுக்கப்படும் எந்த தீர்மானத்தையும் மாநில சட்டபேரவையின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்த முடியாது என்பது அவற்றில் முக்கியமானது.

மேலும் வேற்று மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அரச வேலைகளில் வெளிமாநிலத்தவர் தெரிவு செய்யப்பட முடியாது என்பன போன்ற தனித்துவமான உரிமைகளை,  மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் காஷ்மீர்  இழந்துள்ளது.

ஒரு தனி நாட்டுக்குரிய பல்வேறு அதிகாரங்களை கொண்டிருந்த காஷ்மீர் இன்று ஜம்மு – காஷ்மீர் , லடாக் , என மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இரண்டு  யூனியன் பிரதேச  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதனால், தனது ஆளும் உரிமையை இழந்துள்ள –  இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் கொண்டிருக்கக் கூடிய அதிகாரங்களையும் கூட  இல்லாத  வகையில் இந்திய நாடாளுமன்றத்தில்  அரசியல் பலம் வாய்ந்த மோடி அரசாங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு  Princely State எனப்படும் சிறிய அரசுகள், சுதந்திர இந்தியாவின் எல்லைகளை தீர்மானிக்கும் பேச்சுவார்த்தைகளின் போது, மக்களால் தீர்மானிக்கக் கூடிய நிலைக்கு விடப்பட்டன.

காஷ்மீர் இஸ்லாமியரை அதிகமாக கொண்டிருந்த போதும் ஹரி சிங் என்ற இந்து அரசர் ஆட்சியில் இருந்தார். 1947 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்று கொள்ளும் பொழுது இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு நாடுகளாக பிரிந்து கொண்டதுமே, காஷ்மீருக்காக யுத்தம் புரிய ஆரம்பித்து விட்டன.

பாகிஸ்தானிய தலைமை ஜம்மு -காஷ்மீர் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக, பஸ்தூன் என்படும் ஆயுதம் தரித்த குடியேற்றவாசிகளையும் பழங்குடியினரையும் திட்டமிட்டு  ஜம்மு- காஷ்மீர் எல்லைக்குள் அனுப்பி வைத்தது பாகிஸ்தான்.

பஸ்தூன் இனத்தவர்கள் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை பிரதேசத்தின் ஊடாக ஆப்கானிஸ்தான் வரை பரந்து வாழ்கின்றனர் .

காஷ்மீர் பள்ளத்தாக்கின் வட மேற்கு எல்லைக்குள் ஆயுதம் தாங்கிய பஸ்தூன்கள்  ஊடுருவி விட்ட நிலையில்    நிலைமையை சீருக்கு கொண்ட வரும் பொருட்டு, மகாராஜா ஹரி சிங் இந்திய பிரதமராக இருந்த ஜவகர் லால் நேருவிடம் உதவியை நாடினார்.

security_personnel-in_jammu.jpg

நிலைமையை சாதகமாக பயன்படுத்திய இந்திய தலைமை முதலாவது காஷ்மீர் யுத்தத்தை ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட குழப்பநிலையை மையமாக வைத்து  ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர்  நேரு முறையிட்டதன் பலனாக பாகிஸ்தானிய சார்பு தனிமங்களை வெளியேற்றும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் 37 ஆவது சரத்திற்கு இணங்க பாதுகாப்பு சபைக்கு எடுத்து செல்லப்பட்டது.

தொடர்ந்து 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நடுஇரவிலிருந்து இருதரப்பும் யுத்த நிறுத்தம் செய்வதாக உடன்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய -பாகிஸ்தான் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

அன்றிலிருந்து 1972 வரை பல்வேறு தீர்மானங்கள் காஷ்மீருக்காக ஐக்கிய நாடுகள் சயையில் இயற்றப்பட்டன. இவை ஒவ்வொன்றும் குறித்து தமிழ் ஆய்வாளர்கள், கொள்கை பகுப்பாளர்கள், அரசியல் விதி படைப்போர் (norm creaters)  போன்றோர் கற்றறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

பல தீர்மானங்களுக்கும்  உறுதிமொழிகளுக்கும் காலம் தாழ்த்துதலுக்கும் ஆளாகிப்போன காஷ்மீரிய மக்கள் சார்பாக குரல் கொடுப்பதற்கு திடமான ஒரு அமைப்பு இல்லாத காரணத்தாலும், மத வேறுபாடுகளால் பிளவுபட்டு கிடப்பதாலும் ,  புவியியல் ரீதியாக காஷ்மீர் நில எல்லைகளையே கொண்டிருப்பதன் காரணமாகவும், இன்னுமொரு தேசத்தின் தயவில் வாழ வேண்டிய தேவை காரணமாகவும்  இந்திய -பாகிஸ்தானிய முரண்பாடுகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கிறது.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக தற்பொமுது அரசியல் அதிகாரத்தையும் இழந்து உள்ளது மட்டு மல்லாது, தமது இருப்பை அடையாளப்படுத்தும் தாயக பரப்பளவையும் இழந்து நிற்கிறது.

(தொடரும்)

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

 

 

http://www.puthinappalakai.net/2019/08/16/news/39551

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் அதிர்வலைகள் –  பகுதி 2

by in கட்டுரைகள்

modi-imran-trump-300x206.jpg

பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பதவிக்கு வந்த காலத்தில் இருந்து அமெரிக்க  அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திப்பதற்கு தடையாக,  பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்து வந்தன.

மேலைத்தேய கல்வி அறிவையும் வாழ்க்கை முறையையும் தனது சிறு வயதிலிருந்தே பெற்று கொண்டிருக்க கூடிய முன்னைநாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் பலநாள் ஏக்கம், ஜூலை 22 ஆம் திகதி , வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்ததன் மூலம், நிறைவேறியது என்றே கூறலாம்.

அமெரிக்கா கடந்த சில வருடங்களாக,  ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்று பாகிஸ்தான் மீது  குற்றம்சாட்டும் போக்கை கொண்டிருந்தது. இந்த சந்திப்பு அமெரிக்க – பாகிஸ்தான்  உறவுநிலையில் பிரதானமான மாற்றத்தை  ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வருவதில், பாகிஸ்தான் பெரும் பங்காற்றி இருக்கிறது என்றும்,  ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக வெளியேறுவதற்கு பெரும் உதவி செய்திருந்தது என்றும்,  இம்ரான் கானிடம்  வெள்ளை மாளிகையில் புகழ்ந்துரைத்திருந்தார் ட்ரம்ப் .

அதேவேளை  ஜம்மு – காஷ்மீரை இரண்டு துண்டுகளாக பிரித்து- அரசியல் சாசன அதிகாரங்களை இந்திய மத்திய அரசு கையிலெடுக்க, காரணமாக அமைந்ததும், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பேச்சே என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்திய பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்து, பல்வேறு தெற்காசிய விவகாரங்கள் குறித்து பேச்சுகளில் ஈடுபட்டபோது, இந்த விவகாரத்தில் நீங்கள் நடுவராக அல்லது மத்தியஸ்தராக இருக்க விரும்புவீர்களா என்று கேட்டார்.

நான் எங்கே என்று கேட்டேன்.  காஷ்மீர் விவகாரத்தில் என மோடி பதிலளித்தார்” என்று  ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் கூறினார்.

இதற்கு இம்ரான்கானும் நீங்கள் இந்த விடயத்தை செய்வீர்களாயின் மில்லியன் வரையிலான காஷ்மீர மக்களின் பிரார்த்தனையை பெறுவீர்கள் என்ற கூறி இருந்தார்.

இந்த உரையாடல் இந்தியத் தரப்பில் ஒரு அரசியல் சூறாவளியையே உருவாக்கி  இருந்தது. மறுநாள் இந்திய நாடாளுமன்றத்தில் இதனை மறுதலித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் இந்தியப் பிரதமரால் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டதை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இந்திய நாடாளுமன்றத்தில் இந்து அடிப்படைவாத முதலாளித்துவ போக்குடைய பாரதீய ஜனதாகட்சி மிகுந்த பலம் வாய்ந்த அறுதிப் பெரும்பான்மை கொண்ட நிலையில் உள்ளது. இதனால், உடனடியாக காஷ்மீர் பகுதியை இரண்டு துண்டுகளாக வெட்டி சாய்த்தது மட்டுமல்லாது , ஏற்கனவே இருந்த அதிகாரங்களையும் கிழித்தெறிந்து விட்டது.

இந்த சட்டத் திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் தீர்மானத்தில் உரையாற்றிய, மதிமுக பொதுச்செயலர்,  வைகோ இது ஒரு ஜனநாயக படுகொலை என தனது பாணியில் இடித்தரைத்திருந்தார்.

இந்த விவகாரம் சட்ட விவகாரமாக்கப்படுமானால் காஷ்மீர் போராட்ட காலத்தில் மீறப்பட்ட மனித உரிமை விவகாரங்கள் எல்லாம் வெளிக் கொணரப்படும். இவற்றை மறைக்க இனப்படுகொலைகளில் ஈடுபடுவீர்களா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

காஷ்மீர் குறித்த பேச்சுக்களில் இடைத்தரகர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த பிரச்சினைக்கான தீர்வு இந்திய -பாகிஸ்தான்  இருதரப்பு உடன்பாடுகள் மூலமே நடத்தப்படும் . ஆனால் பாகிஸ்தான் எல்லையோர பயங்கரவாத நவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சரால் கூறப்பட்டது.

இந்திய அமெரிக்க உறவு மிகவும் சுமூகமான நிலையில் இன்று இருக்கிறது.  இரு நாடுகளும் மூலோபாய சகபாடிகளாக இருந்து வருகின்றன.

இந்து சமுத்திரத்தில் இடம்பெற்று வரும் அரசியல் மாற்றங்கள், கிழக்காசியாவிலும் தென்சீன கடற்பரப்பு நடவடிக்கைகளும், மத்திய ஆசிய ஈரானிய நடவடிக்கைகளும், சர்வதேச சந்தைப்படுத்துதல்களும் என பல்வேறு மூலோபாய நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்காவுக்கு மிகவும் தேவையான ஒரு சகபாடியாக இந்தியா இருந்து வருகிறது.

இத்தகைய  தேவைகளுக்கு மத்தியில்  அமெரிக்காவின் பாகிஸ்தான் சார்பு மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது முக்கியமானதாகும்.  கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த ஜனநாயக நாடு என்றும் பயங்கரவாத அமைப்புகளின் புகலிடம் என்றும் , சர்வதேச அரங்கில் அமெரிக்கா பறைசாற்றி வந்தது.

modi-imran-trump.jpg

அதேவேளை, பாகிஸ்தானிய ஆய்வாளர்கள் பலர் அமெரிக்க – இந்திய கூட்டு யுத்த சூழலை உருவாக்கும் கூட்டு என்றும்,  அது இஸ்ரேலிய ஸியோனிச சதிகளுக்கு அமையவே நகர்த்தப்படுகிறது என்றும்  கூறி வந்தனர்.

ஆனால், இம்ரான்கான் பதவியை ஏற்று கொண்டதில் இருந்து சீனா எல்லா உதவிகளுக்கும் மேலாக பாகிஸ்தானின் திறைசேரி இருப்பை வலுப்படுத்தும் முகமாக 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கொடுத்திருந்தது.

மேலும், சீன- பாகிஸ்தானிய உறவில் அதிக உறுதிப்பாடுகள் ஏற்படும் வகையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. ஏற்கனவே சீன- பாகிஸ்தானிய பொருளாதார ஒழுங்கை  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிட த்தக்கது.

ட்ரம்பின் பேச்சுகள் பாகிஸ்தானுக்கு உதவுவதாக உள்ளதா அல்லது இந்தியாவின் அதீத வளர்ச்சியை பயன்படுத்தி பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் இல்லாது ஆக்கப்பட்டு, ஈரானை சுற்றி வளைப்பதற்கான நகர்வுகளில் ஒன்றா- என்பது தான் இங்கே உள்ள கேள்வி.

ஏற்கனவே இந்திய – பாகிஸ்தான் முரண்பாடுகளை சவுதி அரேபிய நிதி உதவிகள் ஊடாகவும் வியாபார உடன்படிக்கைகள் ஊடாகவும் சமாதானம் செய்யும் முதற்கட்ட நகர்வு, மோடியின் வெற்றி வாய்பை உறுதிப்படுத்தும் விதமாக  நடத்தப்பட்ட இந்திய விமானப்படையின் குறுகிய நடவடிக்கையும் அதனை கட்டுக்குள் கொண்டு வந்த விடயமும் உறுதிப்படுத்துகிறது.

இங்கே முக்கியமாக கவனிக்கதக்க விடயம் என்ன வெனில்,  தனது அயல்நாடுகளுடன் முதன்மையான நல்லுறவு என்ற வெளியுறவு கொள்கையை வகுத்திருக்கும் இந்தியா, தனது தனது மாநிலங்களில் பிரச்சினைகள் எழும்போது , அந்த மாநிலங்கள் சார்ந்த உப பிராந்திய நாடுகளுடன் சர்ச்சைக்குரிய வகையிலேயே தனது உள்நாட்டு விவகாரத்தை கையாள வேண்டி உள்ளது.

இது காஷ்மீர் மட்டுமல்ல அசாம், திரிபுரா, மிசோராம், மேகாலயா, மணிப்பூர் போன்ற மாநில  எல்லைகளில்,  தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில்- பல்வேறு கிராமங்கள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ன.

மேற்குவங்கமும் வங்காள தேசமும் இதேபோல, பல்வேறு பிராந்திய உப பிராந்திய பிரச்சினைகளை கண்டுள்ளது,  தமிழ்நாடும் சிறிலங்காவும் உத்தர்காண்டும் நேபாளமும் என இன தொடர்ச்சி சார்ந்த பல்வேறு சமூக, மொழி, மத  பிரச்சினைகளை கொண்டிருக்கின்றன.

இந்தநிலையானது, நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசு அற்ற தரப்புகளால்  அணுகப்படும் பொழுது,  அது மத்திய – புறநில விவகாரமாக இந்தியாவில்  உருவெடுத்து விடுகிறது என்பதாகும்.

இதனை உணர்ந்து புதிய அணுகுமுறைகளை தமிழர்கள் தமிழ்நாட்டுடன் ஏற்படுத்தி கொள்ள வேண்டியது குறிப்பிட த்தக்கதாகும்.

தமிழ் நாட்டில் கல்வியும் பகுத்தறிவும் சமூக நீதியும் மொழிப்பற்றும்  இந்தியாவிலேயே  மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பது அறிவு சார்ந்த தொடர்புகளை இலகுவாக, ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசியல் நிலைக்கு ஏற்றதாகப்படுகிறது.

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

 

http://www.puthinappalakai.net/2019/08/19/news/39601

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் அதிர்வலைகள் –  பகுதி 3

by in கட்டுரைகள்

SLPP-gota-4-300x198.jpg

இந்தியாவின் அரசியல் மாற்றங்கள், மிகவும் முக்கியமான வரலாற்று மாற்றங்களாக,  அதனை சூழ உள்ள நாடுகளில்  அதிர்வலைகளை ஏற்படுத்தி விடுவது பொதுவான போக்காக உள்ளது.   புவியியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும், சமூக, கலாசார ,மொழி, மத ரீதியாகவும், அனைத்து நாடுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பது இதற்கு முக்கிய காரணமாகும்.

தெற்காசிய நாடுகளில் இந்தியா பெரிய நாடாக இருப்பதால், இந்திய உள்நாட்டு விவகாரங்கள் இதர தெற்காசிய நாடுகளில் தாக்கத்தை விளைவிப்பது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது .

இந்தியா முன்னேற்ற கரமான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகர்வதாக  இருந்தாலும் சரி . மாநிலங்களில் புதிய  அடாவடி சட்டங்களை கொண்டு வருவதாக இருந்தாலும் சரி, அவை பிராந்திய நாடுகளில் தாக்கத்தை உட்படுத்த வல்லவையாகவே இருக்கின்றன.

இந்த பார்வையின் அடிப்படையில்,  இலங்கைத் தீவின் தற்போதைய அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு பார்க்குமிடத்து,  தமிழ் மக்களின் இருப்பிற்கு பேரிடர் ஏற்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இன்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிலிருந்து  மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் ஈறாக, போராட்ட அழிவிற்கு காரணமான அனைத்து சக்திகளும் தமிழ் தேசியத்தை வாக்கு  அரசியலில் வார்த்தைகளால் புகழ்ந்து உரைத்து  வருகின்றன.

போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்த போது, சதி வலைகளுக்கு உடந்தைகளாக இருந்த பல சக்திகளும் போராட்ட தலைமைத்துவங்களை தமது வாக்கு அரசியலுக்காக, உபயோகிக்க தலைப்பட்டு விட்டன. மாற்று தலைமை தாமே என கூறிக் கொண்டவர்களும் கூட,  மிதவாத மேலைத்தேய செல்வாக்கின் தேவையினால் தமக்குள்ளே முரண்பட்டு கொள்கின்றனர்.

தமிழ் மக்களது அரசியலை நிர்ணயிக்ககூடிய தமிழர் நலம் சார்ந்து ஆளுமை செலுத்தக் கூடிய அரசியல் சார்பற்ற ஒரு தனித்துவமான நபரோ அல்லது கட்டமைப்போ இல்லாத நிலை உள்ளது.

சிறிலங்கா அரசின் பொறிமுறைக்குள் சிக்கிக்கொண்டவர்களாகவே எல்லோரும் இருக்கின்றனர். அரசின் போக்கை திசை திருப்ப கூடிய வகையிலான செயற்பாடுகள் எதுவும் இதுவரை இடம் பெறவில்லை.

SLPP-gota-2.jpg

அல்லது சரியான சிந்தனை தெளிவை ஊட்டக் கூடிய எவரும் பெயர் பதிக்க முடியாத நிலை உள்ளது. இதனால்  தமிழ்த் தேசியத்தின் பால் சிந்திக்க முடியாத தன்மைக்கு, ஈழத்தமிழ் மக்கள்  விட்டிருக்கிறார்கள்.  சிங்கள தேசியத்தை தீர்மானிக்கும் சக்தி பௌத்த பிக்குகளின் கட்டமைப்புகளுக்கு இருப்பது போல, சமூக நீதித்தெளிவும் தமிழ் தேசியத்தையும் தாங்கி நிற்க கூடிய, தமிழ் தலைமை இல்லாததும் பெரும் பிற்போக்கானது.

லடாக் பிரதேசம் தனித்துவமான பெளத்த மாநிலமாக மாற்றப்பட்டதை இட்டு இந்திய மத்திய அரசுக்கு நன்றி செலுத்தும் பெளத்த சமய தலைவர்கள்,  மிக விரைவில் சிறிலங்காவில் நிலைமையை சாதகமாக்கி கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியத்தை பிரிப்பதற்கு திட்டமிடப் போகிறார்கள் .

சிங்கள தேசத்தில் வாக்கு வெற்றிகளை குவிக்க வேண்டுமாயின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முக்கியமானது என்பது பொதுவான சிந்தனை திட்டமாக உள்ளது.

அதேவேளை பௌத்த சிங்களம் தனது இருப்பை இலங்கைத் தீவு முழுவதும் நிலை நிறுத்துவதற்கு பெரும் முனைப்புடன் செயற்படுகிறது

இதற்கான வியாக்கியானங்களும் சிந்தனைகளும் காலாகாலம் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு திரிபுபடுத்தப்படுகிறது. சிங்களவர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குவதல்ல தமிழ் பேசும் மக்களின் நோக்கம், ஒருங்கிணைந்த தமிழ் பேசும் மக்களின் தாயகமும் அதன் இருப்பை வலியுறுத்துவதும், சிங்கள தாயகத்தை பாதிக்காது என்பது கிராம மட்டங்களில் சென்றடைய வில்லை.

தேவையை அறிந்து தமது சந்தர்ப்பவாத போக்கை மறைக்கும் முகமாக வெறும் வாய்ப்பேச்சுக்காக மட்டும் செயலாற்றும் தமிழ் மிதவாதம் ஆழமான எந்த நகர்வும் செய்யாது. சிங்கள தேசத்துக்கு நொந்து விடும், கடினமாக கிள்ள கூடாது என்பது போல நடந்து கொள்கிறது.

ஜம்மு -காஷ்மீர் பிராந்திய அரசியல் நிலை சந்தர்பம் இலங்கைத் தீவில் வடக்கு -கிழக்கு என்று தொடர்ச்சியான தமிழ் பேசும் நிலப்பரப்பாக இருக்கும் தமிழ் பேசும் தாயகத்தை பிரித்து விடுவதற்கு, சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட புதிய மாவட்டம் ஒன்று உருவாக்கப்படக் கூடும். அவ்வாறான சிங்கள பெரும்பான்மை மாவட்டம் நிரந்தரமாக வடக்கையும் கிழக்கையும் நிலத்தொடர்ச்சியை உடைத்து விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது

இந்த புதிய மாவட்ட உருவாக்கத்தில்   வட மத்திய மாகாணத்தில் ஒரு பெரும் பகுதியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதியும் இணைக்கப்படும் பொழுது,  சிங்களவர்களை பெரும்பான்மையாக  கொண்ட புதிய மாவட்டம் வங்க கடலின் கிழக்கு கரையை ஒட்டியதாகவும் அமையும்.  தமிழ் ஈழம் என்ற பெயரை உடைத்தெறிவதாகவும் அது அமையும். தமிழருக்கு இருந்த வங்க கடல் உரிமையும் இழக்கப்படும்.

சிறிலங்கா அரசினை கையாளும் எந்த அரசாங்கமும் தமிழ் தேசியத்தை பிரிப்பதன் மூலமே, தமது பௌத்த சிங்கள  இயந்திர அரசை காப்பாற்ற முடியும் என்பதை தார்மீக கொள்கையாக கொண்டிருக்கின்றன.

ஆக தேர்தலுக்கு முன்பாக பதவியில் உள்ள அரசாங்கம் அரசு செய்யாவிட்டாலும், அடுத்து வரக்கூடிய சாத்தியப்பாடுள்ள,  மாக்கியவல்லி சித்தாந்தத்தை முழுமையாக செயல்வடிவில் நடத்த இருக்கும் கோத்தாபய அரசாங்கம், சட்டம் -ஒழுங்கு என்பது, பயத்தின் பால் பட்டது என்ற சிந்தனையை கொண்டதாகவே இருக்க முடியும்.

மிகஅதிகமான பயமுறுத்தும் அடக்குமுறை மூலம், ஆட்சி செய்யக் கூடும் என எதிர்பார்க்கக் கூடிய  கோத்தாபய அரசாங்கம், அதீத ஆயுத பிரசன்னத்தின் மத்தியில் காஷ்மீர் பிரிவினையை மையமாக வைத்து நிச்சயமாக நிறைவேற்றும் என்பதில் ஐயமில்லை.

பஞ்சாப்பில் காலிஸ்தான் கேட்டவர்கள் இன்று கனடாவில் ஒரு சிறு குழுவாக உள்ளனர், அதேபோல் காஷ்மீர் கேட்டவர்களும் எங்கோ ஒரு அரபு நாட்டில் குடிபுகுந்து விடுவார்கள் என்பதே இந்தியாவின் கனவு ஆகும். சிறிலங்காவின் எதிர்பார்ப்பும் இது வாகவே இருக்கிறது. எங்கோ மேலை நாடுகளில் வாழ்பவர்கள் மே மாதத்தில் ஒருமுறையும் நவம்பரில் ஒருமுறையும் சலசலத்து விட்டு சென்று விடுவார்கள் என்பதுவே.

security_personnel-in_jammu.jpg

மேலைத்தேய அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசுகளும் தேசியங்களும் ஒன்றில் ஒன்று நம்பிக்கையற்ற தொடர்ச்சியான  போட்டி நிலையில், மிகவேகமாக யதார்த்த சிந்தனைகளின் அடிப்படையில் நகர்ந்து வருகின்றன.  இதனால் அதிகாரங்களை கையில் எடுப்பது முக்கியமான தந்திரமாக இருக்க வேண்டும்.

அத்துடன்  இனிவரும் காலங்களில் ஒருமித்த கருத்துடைய வாக்காளர்களை பல்வேறு கட்சிகளிலும் இருந்து தெரிவு செய்ய வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர் என்பது மட்டும் தெரிகிறது.

முடிவுரை

தெற்காசியாவின் சமூக ,புவியியல், அரசியல் பொருளாதாரத்தில் இந்தியா மிகவும் பெரிய நாடு. இந்தியாவில் இடம் பெறும் மாற்றங்கள் யாவும் அதன் உபபிராந்திய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதில் அரசியல் சட்ட தீர்மானங்களின் மாற்றம் கொண்டு வருதல் பெரும்பான்மை ஜனநாய  ஆளும் உரிமையை பயன்படுத்தி, தேசிய இனங்களை சிதைத்தல், பாரம்பரிய நிலத்தை கைப்பற்றுதல் போன்ற விடயங்களில் ஏனைய அனைத்து தெற்காசிய நாடுகளைவிட சிறிலங்காவில் உள்ள சமூக அரசியல் நிலை இதனை விரைவாக பிரதி செய்து விடக் கூடிய சூழலை கொண்டுள்ளது.

சிறிலங்காவில் பெரும்பான்மை  ஜனநாயகம் ஒரு தேர்தலினால் தான் உருவாக வேண்டும் என்பதல்ல, மேற்குறிப்பிட்ட விடயங்களுக்காக எந்த சமயத்திலும் ஏகமனதான தீர்மானம் இயற்றப்படலாம்.

ஆனால், அரசியல் சூழல் சாதகமாக எழும் பொழுது,  இவை இலகுவாக நிறைவேற்றப்படுவது கடந்த கால அரசியல் அனுபவங்களில் இருந்து கற்று கொண்டவைகளாகும்

சர்வதேச அரங்கில் சிறிலங்கா தன்னை பாதுகாத்து கொள்வதற்கான சந்தர்ப்பம் காஷ்மீர் அரசியல் அதிர்வலைகளால் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

சிறிலங்கா அரசு என்பது ஒரு பெரிய இயந்திரம். அதற்குள் எழும் சிறு பொறிமுறை சிக்கல்களை,  உரிமை கோரி கையாளுபவர்களே அரசியல்வாதிகள்.  இதிலே தமிழ்  அரசியல்வாதிகள் அந்தப் பொறிமுறை சிக்கல்களில் ஒன்றாக இருக்கின்றனரே அல்லாமல், கையாள்பவர்களாக இன்னமும் மாறவில்லை என்பது தான் இங்கே வருத்தம் தருகிறது.

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

 

http://www.puthinappalakai.net/2019/08/24/news/39700

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.