Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செயற்கை நுண்ணறிவு; மனிதனை மனிதனே பலியெடுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 29 வியாழக்கிழமை, பி.ப. 12:38

மனிதகுல வரலாற்றின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், பகுத்தறிவினதும் அறிவியல் வளர்ச்சியினதும் பங்கு பெரிது. இன்று, மனிதகுலம் கண்டிருக்கிற வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சியின் வலிமையால் சாத்தியப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத ஒன்று, இன்று சாத்தியமாகியிருக்கிறது. அறிவியல், மிக வேகமாகக் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் வளர்ந்துள்ளது. இப்போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு எதிர்ப்புக் கூறக்கூட முடியாத வகையில், அறிவியல் பல திசைகளிலும் பரந்து விரிந்துள்ளது. 

அறிவியல் வளர்ச்சி, எப்போதும் பயனுள்ள திசையில் மட்டும் பயணித்ததில்லை. இனியும் அவ்வாறு பயணிக்காது என்பதை, நாம் உறுதிபடச் சொல்லமுடியும். உயிர்களைக் காக்க உதவிய அறிவியலே, பல இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொள்ளவும் உதவியது. உயிர் காக்கும் மருந்துகளையும் நவீன மருத்துவக் கருவிகளையும் கண்டுபிடித்த அதே விஞ்ஞானமே, அணு குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் கண்டுபிடித்தது. இவ்வாறு, மனிதகுல வரலாற்றின் நன்மையிலும் தீமையிலும், அறிவியலுக்குச் சம அளவில் பங்கு இருக்கிறது. 

அறிவியலின் வரலாற்றை உற்று நோக்கின், அதன் பயணம் யாருடைய நலன்களுக்காக செயற்பட்டு வந்திருக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஆண்டாண்டு காலமாக, அறிவியல், அதிகாரத்துக்கும் ஆள்வோருக்கும் சேவகனாய், அவர்களது தேவைகளை நிறைவேற்றும் ஒன்றாய்க் கைகட்டி சேவகம் பார்த்திருக்கிறது. இதற்கு, விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், கல்வியலாளர்கள், மருத்துவர்கள் என யாரும் விதிவிலக்கல்ல. இன்றும், உலகின் முக்கியமான புதிய கண்டுபிடிப்புகள், அதிகாரத்துக்காகவும் ஆளுவோரின் நலன்களுக்காகவுமே பயன்படுகின்றன. உலகின் புதிய படைப்புகள், முதலில் இராணுவத்தின் தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டு, பின்னர் பொதுப் பயன்பாட்டுக்கு வருகின்றன (பேஸ்புக் எவ்வாறு ஏன் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது என்பது தனிக்கதை). இந்த வழித்தடத்தில் புதிதாக இணைந்துள்ளது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). அறிவியல் அபாயமா, ஆபத்தா என்ற கேள்வியை இப்போது மீண்டும் உரத்துக் கேட்கவேண்டியுள்ளது. 

 

 

செயற்கை நுண்ணறிவு; சில அடிப்படைகள்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது, அறிவியல் உலகில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறதென்பதை மறக்க முடியாது. மனிதகுலம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரக்கூடிய வல்லமை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு உண்டு. இது, அறிவியல் ரீதியாக மனிதகுலம் முன்னேற்றம் அடைவதற்கான பல சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. இதே தொழில்நுட்பம், ஆபத்தைத் தரக்கூடிய அழிவுக்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை, அண்மையில் வெளியான அறிக்கை, ஆதாரங்களுடன் நிறுவியுள்ளது. மனிதகுலத்தை, மனிதனின் அனுமதியின்றி இயந்திரங்களின் தன்னிச்சையான செயற்பாடு அழித்தொழிக்கக் கூடியதாக இருக்கும் ஓர் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். 

image_a9e7510b41.jpg

செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பமானது, மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. 

 முதலாவது, ‘துணைபுரியும் நுண்ணறிவு’ (Assisted Intelligence). இது, செயல்களை தன்னியக்கமயமாக்கும்  (Automation) செயற்பாடாகும். இது, பொதுவாகத் தொழிற்சாலைகளில் தொடங்கி இன்று அனைத்துத் தொழிற்றுறைகளிலும் மனிதனுக்கு  இயந்திரங்களைப் பதிலீடு செய்யும் செயற்பாடாக மாறியுள்ளது. இதை நாம் ஓரளவு அறிவோம்.

இரண்டாவது, விரிவாக்கப்பட்ட நுண்ணறிவு (Augmented Intelligence). இது, மனிதர்கள் வழங்கும் தரவுகள், மனித நடத்தை, மனிதச் செயற்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றில் இருந்து தானாகவே முடிவெடுக்கும் ஆற்றலாகும்.

மூன்றாவது, தன்னாட்சி நுண்ணறிவு (Autonomous Intelligence). இது, மனிதர்களின்  தலையீடோ குறுக்கீடோ இன்றி, இயல்பாக இயந்திரங்கள் சுதந்திரமாக முடிவெடுத்து இயங்கும் தன்மை கொண்டதாகும்.  

இவை மூன்றும், அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆனால், மனிதனின் உதவியின்றிச் சிந்தித்துச் செயற்படக்கூடிய இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பானது. இதைச் சுருக்கமாக, செயற்கையான மூளையொன்று உருவாக்கப்பட்டு, சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படுதல் என்றும் அழைக்கலாம். இதைச் சாத்தியமாக்குவதில், தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில், தரவுகளே உள்ளீடு செய்யப்பட்டு ஆராயப்படுகின்றன.

திரட்டப்படும் தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டு, இரண்டு செயன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில் முதன்மையானது, திரட்டப்பட்ட தரவுகளை ஆழ்நிலைக் கற்றலுக்கு உட்படுத்துவதாகும் (Deep Learning). இது, தரவுகளைப் பிரித்து, அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து, கோலங்களையும் நடத்தைகளையும் அறியவல்லது. அடுத்த வகை, இயந்திரக் கற்றல் முறையின் மூலம் ஆராய்வதாகும். (Machine Learning). இது, இயந்திரங்களுக்குக் கற்பிப்பதன் மூலம், அவை சுயமாக முடிவெடுத்து இயங்கப் பழக்குவது. 

இவையனைத்தும், மனிதனுக்கு நிகராக இன்னும் சொல்லப்போனால் மனிதனிலும் மேலாக, தர்க்க ரீதியாகச் சிந்திக்கக்கூடிய செயலாற்றக்கூடிய இயந்திரங்களின் சாத்தியங்களைக் கோடுகாட்டி நிற்கின்றன. 

 

 

மனிதகுலத்துக்கு எதிராகத் திரும்பும் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பங்கெடுக்கும் நிறுவனங்கள், மனிதகுலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை அறியும் நோக்கில், நெதர்லாந்தை மய்யமாகக் கொண்டியங்கும் தன்னார்வ நிறுவனமான  PAX (Pax for Peace) ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவுகள், கடந்த வாரம் அறிக்கையாக வெளியிடப்பட்டன. தீயதாக இருக்காதீர்கள்? (Don’t Be evil?) என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, மனித குலத்தின் எதிர்காலம் மிகவும் அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது என்பதை, எதுவித ஐயத்துக்குமிடமின்றி நிறுவுகிறது. நீங்கள் தன்னிச்சையாகச் செயற்படும் தானியங்கி ஆயுதத் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறீர்களா என்ற வினாவுக்கு, மைக்ரோசொஃப்ட், அமேஸன் போன்ற பராசுர நிறுவனங்கள் பதிலளிக்க மறுத்துள்ளன. அதேவேளை, கூகுள், 
ஐ.பீ.எம் ஆகியன இல்லை எனப் பதிலளித்துள்ளன. 

இராணுவ பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய அல்லது இராணுவ பாதுகாப்புத் துறைக்கு பயன்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் பணியாற்றுகின்ற உலகின் முக்கியமான நிறுவனங்களை மய்யப்படுத்தியே, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் பணிபுரிகின்ற உலகின் முக்கியமான 50 நிறுவனங்கள், இவ்வாய்வுக் உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 50 நிறுவனங்களும், உலகில் வளர்ச்சி அடைந்த 12 நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்குபவை. 

அறிக்கையின்படி இந்த 50 நிறுவனங்களில், சமூகப் பொறுப்போடு அறம் சார்ந்து, மனித குலத்துக்கு விரோதமில்லாமல் செயற்படும் நிறுவனங்கள் 7 மட்டுமே. 21 நிறுவனங்கள், மனித குலத்துக்கு விரோதமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளன. ஏனைய நிறுவனங்கள், மனித குலத்துக்கு விரோதமானச் சேர்க்கைத் தொழில்நுட்பத் திட்டங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன என்று, இந்த அறிக்கை கூறுகிறது.  

இந்த அறிக்கை தொடுக்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான். ஒரு மனிதன் உயிர் வாழ்வதா, சாவதா என்ற முடிவை யார் தீர்மானிப்பது என்பதே அந்தக் கேள்வியாகும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நு ட்பமானது, இப்போது எந்தவித மனிதக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓர் இயந்திரம் தன்னிச்சையாகவே முடிவெடுத்து, மனிதர்களைக் கொலை செய்வதற்கான ஆயுதங்களையும் தொழில் நுட்பத்தையும் உற்பத்தி செய்து வருகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது. 

இன்று, போரியல் துறையின் மூன்றாவது புரட்சியை, செயற்கை நுண்ணறிவு சாத்தியமாகியுள்ளது என்று பெருமை பேசப்படுகிறது. போரியல் துறையின் முதலாவது புரட்சி, வெடிமருந்து கண்டுபிடிப்புடன் தொடங்கியது. அதன் இரண்டாவது புரட்சியை, அணுவாயுதக் கண்டுபிடிப்பு தொடங்கி வைத்தது. இப்போது, தன்னிச்சையான ஆயுதங்கள் அதாவது, மனிதனின் கட்டளையை மீறிச் சுயமாக இயங்கக்கூடிய ஆயுதங்களை, செயற்கை நுண்ணறிவு சாத்தியமாக்கியுள்ளது. 

இன்று, செயற்கை நுண்ணறிவின் துணையால் உருவாகியுள்ள தானாகவே இயங்கும் ஆயுதங்கள், சட்ட மற்றும் அறஞ்சார் அடிப்படைகளைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. இவை, எதிர்காலத்தில் உலகின் அமைதியையும் பாதுகாப்பையும் பாரிய சவாலுக்கு உட்படுத்தும். இந்த ஆயுதங்கள், ஒரு மனிதன் உயிர் வாழ அனுமதிப்பதா அல்லது கொல்லுவதா என்ற தீர்மானத்தை, தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரத்தை எந்திரங்களின் கைகளுக்கு வழங்குகிறது. 

இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிற முக்கியமான விடயம் யாதெனில், தொழில்நுட்பத்துக்கும் மனிதகுல வளர்ச்சிக்கும் இடையிலான உறவை மீள்பார்வைக்கு உட்படுத்துவதும் விவாதிப்பதும், காலத்தின் அவசிய, அவசரத் தேவையாகிறது. தொழில்நுட்பம் எந்த எல்லைவரை செல்ல முடியும் என்பது குறித்தும் தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்தும் மீண்டும் ஒருமுறை ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது என்பதை, இந்த அறிக்கை கோடிட்டு நிற்கிறது. 

காலங்காலமாக பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அனுமதி, ஆய்வின் அறம் சார்ந்த விடயங்களைக் கணிப்பில் எடுத்த பின்னரே வழங்கப்படும். அறம் சாராத ஆய்வுகள், பொதுவில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலை இன்று இரண்டு வகைகளில் மாற்றமடைந்துள்ளது. முதலாவது, தொழில்நுட்பத் துறைசார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து, தங்களுக்குரிய ஆய்வுகளைப் பல்கலைக்கழகமோ எந்த ஒரு வெளி நிறுவனமோ சாராது, தமது நிறுவனத்துக்குள்ளேயே  ஆய்வுகளைச் செய்து, முடிவுகளைப் பெறக்கூடிய தன்மை உடையனவாய் வளர்ந்துவிட்டன.

இதனால், இவர்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில், அறம் சார்ந்த விடயங்கள் எப்போதும் கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை. இரண்டாவது, இன்று பல்கலைக்கழக ஆய்வுகளின் நிதி மூலங்களாக இந்த நிறுவனங்களே இருக்கின்றன. எனவே குறிப்பிட்ட ஓர் ஆய்வைச் செய்வதற்கு, நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்குகின்றன. அறம் சார்ந்த கேள்விகள் இருந்தாலும், அந்த அறம் சார்ந்த கேள்விகளை அந்த நிறுவனங்களால் வழங்கப்படும் நிதி இல்லாமல் செய்கிறது. எனவே, அந்த அறம் சார்ந்த கேள்விகளைப் பக்கத்தில் வைத்துவிட்டு, பல்கலைக்கழகங்களும் அவர்களுக்கு வேண்டிய ஆய்வுகளைச் செய்து முடிக்கின்றன. நவீன முதலாளித்துவ உலகம், எல்லாவற்றையும் பண்டமாக்கிய பிறகு, அறிவும் அறமும்கூட விற்பனைச் சரக்காக விட்டது. மனிதன் தன்னைத் தானே அழிப்பதற்கு எவ்வளவு பாடுபட்டு சிந்தித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. 

மனிதனைப் போல சுயநலமான பிராணி இவ்வுலகில் எதுவுமே இருக்க முடியாது. நியாயம், அறம், மனிதநேயம் அனைத்தையும் புறந்தள்ளி, கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்கிறான். இதை எம்மால் புரிந்துகொள்ள முடியுமாயின் அணுகுண்டை ஏன் மனிதன் போட்டான் என்ற கேள்விக்கும் அமேசன் மழைக்காடுகளுக்கு ஏன் மனிதன் தீவைத்தான் என்பதையும் விளங்குவதில் சிரமங்கள் இரா. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/செயற்கை-நுண்ணறிவு-மனிதனை-மனிதனே-பலியெடுத்தல்/91-237521

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மானிட வளர்ச்சியும் செயற்கை அறிவுத்திறனின் தாக்கமும்

"எழுந்து நடந்தால் இமயமலையும் வழிகொடுக்கும்; உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறைபிடிக்கும்"   என்பது போல் கைத்தொழில் புரட்சியின் பின்னரான மனித சமுதாயமானது எல்லைகளைத் தாண்டி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஓய்வின்றி  முயற்சிக்கின்றது.  ஒவ்வொரு  நாளும்  புதிய  கண்டுப்பிடிப்புகளை நோக்கிய மனிதனின் பயணமானது வியப்பும் விந்தையளிப்பதுமாக உள்ளது. அந்த விந்தைகளுள் ஒன்றான செயற்கை அறிவுத்திறன் (Artificial Inteligence) பிரயோகமானது இன்று உச்சத்தை எட்டியுள்ளது.

செயற்கை  அறிவுத்திறன் என்பது கடந்த  காலத்தில்  நிகழ்ந்த  விடயங்களை கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக் கூடிய வல்லமை பெற்றது. ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956 இல் இந்தச்சொல்லை அறிமுகப்படுத்தி இதனை "நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல்" என வரையறுத்தார்.

20.jpg

 இந்தத் துறையானது மனிதர்களின் பொதுவான ஒரு குணத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. "பகுத்தறிவு"  என்ற இந்த குணத்தை ஓர் இயந்திரத்திலும் வடிவமைக்க முடியும் என விவரித்தது. இருப்பினும் இது அறிவியலில் பல சிக்கல்களை தோற்றுவித்ததன் விளைவாக அன்றைய காலக்கட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளைவாக மீண்டும் நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்குவதற்கான அணுகுமுறைகள் தேடப்பட தொடங்கின.

இதன் விளைவாக 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செயற்கை அறிவுத்திறனை மூலாதாரமாக கொண்ட இயந்திரங் களின் பாவனை அதிகரித்தது. உதாரணமாக செயற்கை அறிவுத்திறனை   அடிப்படையாகக்   கொண்டு   வடிவமைக்கப்பட்ட மடிக்கணனிகள், இயந்திரமனிதன் என்பவற்றைக் குறிப்பிடலாம். இதன் தாக்கமானது மனித வளர்ச்சியோடு இணைந்து 700பில்லியனுக்கு மேற்பட்ட சனத் தொகை கொண்ட உலகத்தை கூகுள் (Google) என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கிவிட்டது. உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அடுத்த நொடியே அதனை அறியக்கூடிய அளவிற்கு அனைத்து துறைகளிலும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் இயந்திர மனிதனின் (Robot)   பாவனை அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பரவலாக காணமுடிகின்றது. மரத்தடியில் கல்வி கற்ற காலம் முடிந்து நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள் மற்றும் ரோபோ வழிமூலகல்வி வரை பரிணமித்துள்ளது. கல்வி மட்டுமன்றி விவசாய துறையை எடுத்துக் கொண்டோமானால் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் உலக நாடுகள் எதிர் நோக்கிய பாரிய சவாலாக உணவு பற்றாக்குறை காணப்பட அதற்கு தீர்வாக பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனையும் தாண்டி இன்று நிலப்பற்றாக் குறைக்கு தீர்வாக செயற்கை அறிவுத் திறனைப் பயன்படுத்தி ஜப்பான் முதலிய  நாடுகளில்  ரோபோக்களின்  துணை  கொண்டு  கடல்  மேற்பரப்பிலும் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 அதேபோல் வங்கித்துறையிலும் செயற்கை அறிவுத்திறன் அதி முக்கிய பங்கினை வகிக்கின்றது. பண்ட பரிமாற்ற முறையில் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல் செயன்முறை இன்று தானியங்கி பணப்பரிமாற்று இயந்திரங்களில் (ATM Machine) மேற்கொள்ளப்படுகின்றது. இதனைத் தவிர வளர்ச்சியடைந்த நாடுகளின் மருத்துவத்துறையில் அறுவை          சிகிச்சைகளின் போது ரோபோக்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. இது இந்நூற்றாண்டில் மனித சமுதாயம் கண்ட மாபெரும் வெற்றியாகும்.

இவ்வாறு பல துறைகளில் நல்ல விடயங்களுக்கு இவை பயன்படுத் தப்பட்டாலும் சில  நாடுகள்  ஏனைய  நாடுகளை  தன்  கட்டுப்பாட்டின்கீழ்  வைக்க இத்தொழிநுட்பத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன. இது சர்வதேச அரசியலில் ஒரு பனிப்போர்   நிலையை   உருவாக்கியுள்ளது. மனிதனால்   ஆக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இத்தொழிநுட்பம் சில நாசகாரர்களின் கைபொம்மையாயிருப்பது வருத்தமளிக்கின்றது.  சுயநலங்களை  மறந்து  வளர்ச்சியை  மட்டும்  கருத்திற் கொண்டு செயல்படும் பொழுது மனித சமுதாயமானது எட்டாத உயரங்களையும் எட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

ச.ரவிகுமார் 
தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடம்,
திருகோணமலை வளாகம்,
கிழக்கு பல்கலைகழகம்.

 

https://www.virakesari.lk/article/63862

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் இனி இயற்கை வாழவேண்டும் என்றால் ....
மனித இனம் அழிவதுதான் ஒரே வழி 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.