Jump to content

ஆசிரியர் இன்னார் என்று திருக்குறள் கூறாததின் மறைதிறவு! - கம்பனுக்கே குரு ஆன ஏற்றப்பாட்டு உழவர்கள்!


Recommended Posts

ஆசிரியர் இன்னார் என்று திருக்குறள் கூறாததின் மறைதிறவு! - கம்பனுக்கே குரு ஆன ஏற்றப்பாட்டு உழவர்கள்!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன்

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ல் பல்கலைக்கழக ஆசிரியர் தின விழாவில் அறிவியற்புல முதன்மையர் என்ற முறையிலும், மூத்த பேராசிரியர் என்ற முறையிலும் வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டிருந்தேன். புதிய செய்தியினை இவ்வாண்டு ஆசிரியர் தின வாழ்த்தாகத் தெரிவிக்க மனம் விரும்பியது.

ஆசிரியர் இன்னார் என்று வரையறுக்காத குறளாசான்!

வேண்டுவதை வேண்டியபடி எளிதில் தரும் அட்சய பாத்திரம் என்ற வகையில் திருக்குறளைப் புரட்டினேன். கல்வி குறித்தும், கற்றுக்கொள்வது குறித்தும் சிறப்பாகப் பேசும் திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர் அல்லது குரு என்பவனின் கடமை, தகுதி போன்றவற்றைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்ற ஆவலுடன் தேடிச்சென்றவனுக்குக் கிடைத்த விடையோ 'இன்னார்தான் என்று ஒன்றுமில்லை' என்பதுதான்!

அறிவானும் அறிவிப்பானும்!

கல்வி என்னும் கற்றல் என்பது தனி மனிதனின்  முயற்சியால் அடையப்படும் ஒன்று  என்பதே திருக்குறள் தரும் செய்தி.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

 தானே முயன்று கற்றுக்கொள்ளும் நிலை கை கூடாவிட்டால், கற்றுக்கொண்டவர்களிடம் கேட்டுக்கொண்டாவது அறிவு பெற வேண்டும் என்று சொல்கிறது குறள்.

 கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414)

 அவ்வாறு பெற்றுக்கொண்ட அறிவு, ஒருவர் தளர்ச்சி அடையும் காலத்தில் ஊன்றுகோல் உதவுவதுபோல உதவும்.

 திருக்குறள் ஏன் தனி மனிதர் எவரையும் ஆசிரியனாக, குருவாகப் பேசவில்லை?

ஆசிரியர் என்பவர் இன்னார்,  அவருக்கான இலக்கணம் இது என்று ஆசிரியரை வரையறை செய்யாமல், யார் யாரெல்லாம் அறிவுடையவர்களோ அவர்களிடமெல்லாம் அறிவைப் பெற்றுக்கொள்க என்று பொத்தாம் பொதுவாகப் பேசுகிறது.

 கல்வியைக் குறித்தும்,  கல்வியால் விளையும் அறிவைக் குறித்தும்  விரிவாகப் பேசும் குறளாசான், கற்பித்து அறிவை வளர்க்கும்  ஆசிரியரைக் குறித்துச் சிறப்பாக ஒன்றும் பேசவில்லையே!

 சற்றே அயர்ச்சியுடன் நூல்களைப் புரட்டிக் கொண்டே மனம் அசைபோட, அந்திக்கருக்கல் வேளையில், பளீரென வயல்வெளியில் உலா வந்தார் கல்வியில் பெரிய கவிச்சக்கரவர்த்தி, கம்பநாடன் என்னும் பேராசான்!

 கம்பநாடனும் கண்முன் விரிந்த எசப்பாட்டும்!

எங்கிருந்தோ வந்த ஏற்றப்பாட்டின் சந்தத்தில் ஈர்க்கப்பட்டு,   தம்மை அறியாமலேயே குரல் வந்த திசையில் நடக்கலானார் கம்பர். கமலை ஏற்றம் இறைத்து தண்ணீர் பாய்ச்சிய உழவர்களின் பாட்டே அது!  

“மூங்கில் இலைமேலே...” என்ற உழவனொருவனின் எசப்பாட்டுக்கு  

“தூங்கும் பனி நீரே...” என்ற எதிர்ப்பாட்டை மற்றொரு உழவன் பாட,

“தூங்கும் பனி நீரை...” என்ற மூன்றாமவன் எசப்பாட்டு நெட்டிசையில் கொள்ளை போனது கம்பனின் மனம்! கண்ணிமைக்கும் நேரத்தில், எசப்பாட்டுப் பாடிய உழவர்கள் மூவரையும் அங்கிருந்து கொத்திக்கொண்டு போனது "அப்பா! நம்ம வீட்டுப்பசு கன்னு போட்டாச்சு, கூப்புடுறாங்க!’ என்ற சிறுமியின் குரல்!

கம்பனுக்கே கைவராத எசப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு! 

இருள் கவிந்து சூழ்வதை உணராது, பாடலில் மனதை பறிகொடுத்த கம்பர் அங்கேயே நிற்கிறார். “தூங்கும் பனி நீரை...”  என்பதன் அடுத்த வரிக்கு கவிச் சக்கரவர்த்தி கவி புனைய எத்தனிக்கிறார்;  தம் கவித்திறம் விடைபெற்றுக் கொண்டதோ என்று கவலைகொள்ளுமாறு, கம்பநாடனின் நாவில் உதிக்க மறுக்கிறாள் தமிழன்னை!

 எதிர்ப்பாட்டை முடித்துவைத்த ஏற்றம்பாடும் உழவர்கள்!

தம்மை மறந்து ஆற்றின் பாலக்கட்டையில் அப்படியே உட்காருகிறார். இரவும்,  நிலவும் மலர்ந்து உயர்வதை அறியாமலேயே  கம்பர் அந்த இடத்தை விட்டு அகலாமல் உறைந்து கண் அயர்ந்து விடுகிறார்.

பொழுது புலர்கின்றது..! புள்ளினங்கள் சிலம்பும் ஓசையில் உறக்கம் கலைய,  உழவர்களின் கமலை இயங்கத் துவங்குகிறது!  ஏற்றப்பாட்டும் தொடர்கிறது!!

 தூங்கும் பனி நீரை

என்று மூன்றாமவன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் பாட,

வாங்கும் கதிரோனே!” என்று முதலாமவன் முடித்துவைக்கிறான். மீண்டும்,

“மூங்கில் இலைமேலே...” என்று இரண்டாமவன் தொடங்க,  

“தூங்கும் பனி நீரே...” என்று  மற்றொருவன் பாட,

“தூங்கும் பனி நீரை... ... வாங்கும் கதிரோனே” என்று எசப்பாட்டும் கமலையும் இசை பெருக்கின.

 கம்பனுக்கே பேராசான்களான எசப்பாட்டு உழவர்கள்!

தம்மால் இயற்ற முடியாத அற்புதக் கவிதையைக் கேட்ட கம்ப நாடனின் உள்ளம் பேருவகை அடைந்தது. பாட்டை இடைநிறுத்த மனமில்லாமல், தமக்குக் கவி கற்றுக்கொடுத்த உழவர்களாகிய பேராசான்களிடம் மனதால் நன்றி கூறி, பரந்த மனமும், தன்னடக்கமும் கொண்ட உள்ளம் வரப்பெற்றவராய் தம் வீட்டை நோக்கி நடக்கிறார் கம்பன் என்னும் பெருங்கவிக்கோ.

'ஆசிரியன் வாழ்நாள் முழுவதும் மாணவனே' என்று உணர்த்திய கம்பன்!

 வள்ளுவனின் ஆளுமை கண்டு வியந்து போனேன்! அணுவைத் துளைத்து ஏழ்கடலைத் துளைத்துக் குறுகத் தரித்த குறள், எந்த தனி ஒரு ஆசிரியரின் தகுதிப்பாட்டையும், குணநலன்களையும் வெளிப்பட உரைக்காதது கற்றலும், கற்பித்தலும் ஒரு வாழ்நாள் அனுபவம் என்பதால் அல்லவா! ஆசிரியன் வாழ்நாள் முழுவதும் மாணவனே என்று உணர்த்தினார் கம்பன்;

மனித வாசிப்பு, சமூக வாசிப்பு, ஏனைய உயிரினங்களும், இயற்கையும் தரும் பட்டறிவு உள்ளிட்ட பல ஆசிரியர்களையும் உள்ளடக்கிய வாழ்வியல் பாடம் திருக்குறள் முழுவதும்  சொல்லப்படுவதால், 'ஆசிரியர்' தனியாகக் குறிப்பிடப்படவில்லை என்பது புரிந்தது!

 அன்னை, தந்தை, குரு, தெய்வம் என்று இறைவனுக்கு முந்தைய படிநிலையில் உள்ள ஆசிரியர் என்பவரின் தகுதிப்பாடு திருக்குறள் நெடுகிலும் பரக்கப் பேசப்படும் பொருள் அல்லவா?

தனிமனிதனுக்குள் ஆசிரியனைத் தேடிய மதியிலியானேன்!

தனிமனிதனுக்குள் ஆசிரியனைத் தேடிய மதியிலியான எனக்கு, ஏற்றப்பாட்டு உழவர்கள் போல் எண்ணற்ற ஊனுடல்களில் ஒளிந்திருக்கும் ஆசிரியர்களின் தரிசனம் கிட்டியது!

தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! 
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!

என்று

திருமூலர் அருளிய திருமந்திரத்துக்குப் புதிய பொருள் விளங்கித் தோன்றிற்று!

அறிவானும் அறிவிப்பானுமாகிய வாலறிவனே பேராசான்!

மனிதர்களுக்கு பொறி-புலன்கள் கொண்ட உடல் மூலம் அறிவை அறிவிக்கும் இறைவன், மனிதர்களுடன் தானும் அறிகின்றான்; அறியப்படும் அறிவாகவும் இருப்பதும் இறைவனே! அவனே வானாகி, மண்ணாகி, வளியாகி,  ஒளியாகி, ஊனாகி, உயிராகி, அறிகின்ற மெய்ப்பொருள் உண்மையுமாய் நிற்பவன் என்று காரைக்கால் அம்மையின் பாடல் நன்கு விளங்கிற்று! 

அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - 
அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே 
விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன்! 
- 11ம் திருமுறை:அற்புதத் திருவந்தாதி-4:காரைக்காலம்மையார்.

ஆசிரியன் இவன்தான் என்று நுட்பப் பொருளாக வள்ளுவன் என்னும் பேராசான் வழங்கிய

கற்றதனால் ஆய பயன் என்கொல்! வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்?

குறள்வழி, அறிவானும், அறிவிப்பானும் தானேயாகிய வாலறிவனின் பேரருள் விளங்கிற்று!

குருவின் திருவடிகளே சரணம்!

 

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார் 
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

Link to comment
Share on other sites

திருக்குறள் ஏன் தனி மனிதர் எவரையும் ஆசிரியனாக, குருவாகப் பேசவில்லை?

ஆசிரியர் என்பவர் இன்னார்,  அவருக்கான இலக்கணம் இது என்று ஆசிரியரை வரையறை செய்யாமல், யார் யாரெல்லாம் அறிவுடையவர்களோ அவர்களிடமெல்லாம் அறிவைப் பெற்றுக்கொள்க என்று பொத்தாம் பொதுவாகப் பேசுகிறது.

சிந்திக்க வைத்த கருத்து. பகிர்விற்கு நன்றி. 

Link to comment
Share on other sites

மிக்க நன்றி ஐயா. எழுத்துக்கு ஊக்கம் தரும் ஆக்க சக்தி தங்கள் பின்னூட்டம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்தாழமிக்க பதிவுக்கு நன்றி ஐயா....!

திருவள்ளுவரை நாம் பார்த்ததில்லை.ஆனால் திருக்குறள் என்னும் நூலே ஆசிரியருக்கும் ஆசிரியராய் விளங்குவது அதன் சிறப்பு......!  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி அய்யா..!

22310152_1966277680278688_18511756553045

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சிந்தனைத் துளிகள் பேரா.கிருஷ்ணன் அள்ளித் தெளித்தவை. தமிழன் அன்றாட நிகழ்வுகளிலிருந்தும், தான் கடந்து செல்லும் மனிதர்களிடமிருந்தும் அனைத்தும் கற்றான் என்பது தெளிவு. குரு, குருகுலம் போன்ற சொற்களே வட புலத்தாரிடமிருந்து வந்தவை. வாத்தியார்  என்பது வடசொல்லான 'உபாத்யாயரின்' திரிபு. ஆசிரியர் எனும் சொல்லே ஆஷ்ரய (आ‌श्रय) (பொருள்-அடைக்கலம்) என்பதன் திரிபு. வடவரின் குருகுல வழக்கத்தில் குருவிடம்  அடைக்கலம் ஆகிப் படிப்பதால் தோன்றிய சொல் 'ஆசிரியர் '. ஆசு - அகக்குற்றம் (மாசு - புறக்குற்றம்) ; இரிதல் - விலக்குதல் ; இவ்வாறு 'ஆசிரியர்' என  விளக்கம் தருதல் தற்செயல் நிகழ்வு (Editorial க்கு 'ஏடு இட்டோர் இயல்' எனும் தற்செயல் நிகழ்வைப் போல). 'பள்ளி' என்ற சொல்லே தமிழ்ச் சொல்லானாலும், சமணப் பள்ளி (படுக்கை) யிலிருந்து வந்தது. முதலில் சமணர்கள்தான் தமிழகத்தில்  தம் பள்ளியிலிருந்து எழுந்தமர்ந்து மக்களை சுற்றி அமர வைத்து முறைசார் கல்வி (organised education) தந்தவர்கள். எனவே 'ஆசிரியர் ' என்பதற்கு பழந்தமிழ்ச் சொல்லே இல்லை என்று நினைக்கிறேன். இல்லாத வழக்கத்திற்கு சொல் மட்டும் எங்கிருந்து வரும் ? 

பேரா.கிருஷ்ணனை வாசித்ததும் தோன்றிய நினைவுகளை (நான் எப்போதோ வாசித்ததிலிருந்து) சிதறி விட்டேன். நீண்ட‌ எழுத்திற்கு மன்னிக்கவும். முடிந்தால் கோர்வையாக்கிக் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.