• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

ஜனாதிபதித் தேர்தல்: முஸ்லிம்கள் சார்பில் பொது வேட்பாளரா?

Recommended Posts

ஜனாதிபதித் தேர்தல்: முஸ்லிம்கள் சார்பில் பொது வேட்பாளரா?

மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 09 திங்கட்கிழமை, மு.ப. 11:46 Comments - 0

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்க, மெல்ல மெல்ல சிறுபான்மைச் சமூகங்களை நோக்கி பெருந்தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள் நேசக்கரம் நீட்டத் தொடங்கியிருக்கின்றனர். இவர்களுள் யாருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தாடல்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இடம்பெறுகின்ற சம காலத்தில், முஸ்லிம்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது பற்றிய கருத்துகளும் பொதுத் தளத்தில் முன்வைக்கப்படுகின்றன.   

கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததன் மூலம், தேர்தல் காய்ச்சலைப் பொதுஜன பெரமுன சீண்டிவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடப்பட்டுள்ளார். தேர்தல் திகதி அறிவிக்கப்பட முன்னர், வேட்பாளரை அறிவிப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சொல்லிக்கொண்டு, அக்கட்சி இன்னும் ஒரு வேட்பாளரைப் பெயரிடாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது. 

இதற்கிடையில், ஐ.தே.க சார்பில் தன்னைக் களமிறக்குவார்கள் என்ற மனக்கணக்கில் பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்ற சஜித் பிரேமதாஸவுக்கு, அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, புறமொதுக்கிவிட்டு இன்னுமொரு பத்தாம்பசலி வேட்பாளரை அறிவிக்கலாம் என்ற அனுமானங்களும் வெளியாகியுள்ளன. எனவே, சஜித் தனியாகவும் ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி சார்பிலும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. 

நடைமுறைத் தேர்தல் விதிமுறைகளின் படி, ஜனாதிபதித் தேர்தலில் செல்லுபடியாகும் வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை எடுப்பவரே வெற்றிபெறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், போகின்ற போக்கைப் பார்த்தால், எந்த வேட்பாளருமே 50 சதவீத வாக்குகளைத் தம்வசப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே தென்படுகின்றன. 

இப்படியான ஒரு சூழல் வருமாயின், இரண்டாவது விருப்புத் தெரிவு வாக்கு எண்ணும் முறை கடைப்பிடிக்கப்பட்டு, வெற்றியாளர் தெரிவு இடம்பெறலாம் என்று கூறப்படுவது சரியென்றால், சிறுபான்மையினரின் வாக்குகளே வழக்கம் போல இம்முறையும் ஜனாதிபதியை நிர்ணயிப்பதில் இறுதித் துருப்புச் சீட்டாக அமையவுள்ளன. 

இவ்வாறான ஒரு பின்புலச் சூழலிலேயே, முஸ்லிம்கள் பெருந்தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு இம்முறையும் பிரிந்து பிரிந்து வாக்களிக்காமல், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஒரு பொதுவான வேட்பாளரை முன்னிறுத்தி அவருக்கு வாக்களிப்பது பற்றிய கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமட் இக்கருத்தை முதலில் முன்வைத்தார். 

அதற்குப் பிறகு பலரும் இதுபற்றிப் பேசி வருவதுடன், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மு.கா தலைவர் றவூப் ஹக்கீம் போன்றவர்களின் பெயர்களும் அவர்களது அரசியல் சார்பாளர்களால் முன்மொழியப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எல்லா விவகாரங்களையும் போல, இதற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. சவால்மிக்க இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவுகள், அதனால் ஏற்படக்கூடிய சாதக - பாதகங்கள் எனப் பல விடயங்களை, முஸ்லிம் சமூகம் கூர்ந்தாராய வேண்டியிருக்கின்றது. 

இலங்கையில் இதுவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக,  ஏழு தேர்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள், 1999, 2010, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில், முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏ.ரசூல், ஐ.எம்.இல்யாஸ், எம்.எம்.எம்.முஸ்தபா, எம்.சி.எம்.இஸ்மாயில், ஐ.எம்.மிப்லார் ஆகியோரே அவ்வாறு போட்டியிட்டவர்களாவர். இவர்களுள், முன்னாள் ஒருவர் மாத்திரம் இரு தடவைகள் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருந்தார். 

இத்தேர்தல்களின் பெறுபறுகளை நோக்கினால், 20 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்ற ஒரு தேசத்தில், ஜனாதிபதி வேட்பாளரான முஸ்லிம் ஒருவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் குறைவாகும். 2010 தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், சரத் பொன்சேகாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் முஸ்லிம் வேட்பாளரான முஸ்தபா இருந்தார். எனினும், அவரால் அந்த வாக்குகளை வைத்து இச்சமூகத்துக்கு எதனையும் செய்ய முடியாமல்தான் போனதைது. 

இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் தனிநபர்கள் யாரும், இந்தச் சமூகத்தின் சார்பில் நிறுத்தப்படுபவர்கள் அல்லர். அநேகமானோர், இந்த் சமூகத்தின் விடிவுக்காக, சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கோடு போட்டியிடுவதும் இல்லை. பெரும்பாலும் நமக்குத் நன்கு தெரிந்த தனிப்பட்ட எதிர்பார்ப்புகளே, அவர்களைக் களமிறக்கி விடுவதாகச் சொல்லமுடியும். 

இவ்வாறு போட்டியிட்ட வேட்பாளர்கள், இலங்கை முஸ்லிம்களால் நிறுத்தப்பட்ட பொதுவான வேட்பாளர்களும் இல்லை என்பதுடன், பரவலாக வடக்கு, கிழக்கிலும் தென்னிலங்கையிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற, அவர்களுக்குப் பரீட்சயமான வேட்பாளர்களாகவும் இருந்ததில்லை. எனவே, இப்படியான ஒரு வேட்பாளருக்கு 1 இலட்சம் வாக்குகள்கூட கிடைக்க மாட்டாதென்பதே நமது பட்டறிவாகும். 

எனவேதான், இப்போது பொது வேட்பாளர் பற்றிப் பேசப்படுகின்றது. அதாவது, முஸ்லிம் பெயர்தாங்கி வேட்பாளர் ஒருவரை அவரது சொந்த ஆசைகளுக்காக களத்தில் தள்ளிவிடாது, இந்த சமூகத்தின் அபிலாஷைகளை முன்னிறுத்தி, எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுப்படையான வேட்பாளர் ஒருவரைப் போட்டியிடச் செய்கின்ற வியூகம் என்று குறிப்பிடலாம். 

இலங்கையில், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த யாரும் எக்காலத்திலும் ஜனாதிபதியாக வரமுடியாது. இலங்கையில் இருக்கின்ற எல்லாத் தமிழர்களும், இரா. சம்பந்தனுக்கு வாக்களித்தாலும், எல்லா முஸ்லிம்களும் ஒரு பொது முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்குப் போட்டாலும், ஜனாதிபதிப் பதவி என்பது ஒருக்காலும் கிடைக்காது என்பதை அரசியல் அரிச்சுவடி அறியாதவர்கள்கூட அறிவார்கள். 

ஆனால், இலங்கைச் சிங்களவர்களின் வாக்குகள், இரு பிரதான கட்சிகளையும் நோக்கி, கிட்டத்தட்ட சரி சமமாகப் பிரிவடைந்ததன் பின்னர், தேர்தல் வெற்றிகளைத் தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம்களதும் தமிழர்களதும் வாக்குகள், முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றன என்பதையும் மறந்துவிட முடியாது. அண்மைக்கால வெற்றி வாய்ப்புகள், சில இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தீர்மானிக்கப்பட்டன என்ற அடிப்படையில் நோக்கும்போது, முஸ்லிம்களின் வாக்குகள் எல்லாம், திரட்சியாக ஒரு கூடையில் விழுமாயின், ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தொழிற்பட முடியும். 

இலங்கையில் 15 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களுள் சுமார் 12 இலட்சம் பேர், 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்தனர். இத்தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவும் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்‌ஷவும் பெற்ற வாக்குகளுக்கு இடையிலான வித்தியாசம், 5 இலட்சம் என்பது இவ்விடத்தில் கவனிப்புக்குரியது. 

எனவே, முஸ்லிம்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவருக்கு நமது சமூகம் ஒன்றுதிரண்டு தமது வாக்குகளை வழங்குமாக இருந்தால், அதன்மூலம் இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஜனாதிபதியிடம் பேரம்பேசலை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. 

உண்மைக்கு உண்மையாக அந்தப் பேரம்பேசல் இடம்பெற்று, அதில் முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகள், உரிமைசார் மற்றும் அரசியல் அபிலாஷைகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது இலங்கையின் அரசியல் அரங்கை ஓர் ஆட்டு ஆட்டுவிப்பது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை மாற்றியமைப்பதற்கான அடிப்படையாகவும் அமையலாம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இதுவெல்லாம் நடந்தேற வேண்டுமாயின், சில முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன. 

அதாவது, முஸ்லிம் சமூகம் தன்னளவில் தமக்கு ஒரு பொது வேட்பாளர் தேவை என்பதை உணர வேண்டும். கட்சி பேதம், சுயநலம், வியாபார புத்தி, இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லாத ஒரு பொதுமையான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம் கட்சித் தலைவர்களும் இன்னபிற அரசியல்வாதிகளும், தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களையெல்லாம் ஓரத்தில் போட்டுவிட்டு, அந்தப் பொது வேட்பாளரை ஆதரிக்க முடிவெடுக்க வேண்டும். மிக முக்கியமாக, (அநுர குமாரவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றபடியால்) ஆகக் குறைந்தது 8 இலட்சம் முஸ்லிம் வாக்குகளாவது முஸ்லிம் பொது வேட்பாளருக்குக் கிடைக்க வேண்டும். இதுவெல்லாம் நடந்தால்தான் இது சரிப்பட்டு வரும்.  

பெருந்தேசியவாதமும் பெருந்தேசியக் கட்சிகளின் பிரித்தாளும் தந்திரமும் தீவிரமடைந்துள்ள அரசியல் சூழலிலேயே நாம் இருக்கின்றோம். பிரதான கட்சிகளின் கொல்லைப் புறத்தில், இனவாதம் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது. இப்படியான ஒரு சூழலில் முஸ்லிம் சமூகம் தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்துகின்றது என்றால், அதனை ஐ.தே.க, சு.க, பொ.ஜ.பெரமுன மட்டுமன்றி, ஜே.வி.பியும் விரும்பாது. எல்லோரும் முஸ்லிம்களை வசப்படுத்த முனைவார்கள். அது சாத்தியப்படாதவிடத்து, அவர்களின் பொது எதிரியாக முஸ்லிம் பொது வேட்பாளர் இருப்பார்.

இவ்வாறான இன்னும் பல சவால்களைத் தாண்டியும், இந்த வியூகத்தை முன்கொண்டு செல்வதாயின், சரியான திட்டமிடல்களும் ஒத்துழைப்பும், வெற்றிக்கான நிகழ்தகவுகளும் இருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு பெருந்தேசியக் கட்சியின் பிரதிநிதியாக அல்லது அந்தக் கட்சிக்கு மறைமுகமாக முஸ்லிம் வாக்குகளைச் சேகரித்துக் கொடுக்கின்ற நோக்கில் யாராவது முன்வருவார்களாயின், அவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தக் கூடாது. முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளுக்காக அல்லாமல், தமது அரசியல் இலாபத்துக்காக அலைந்து திரிகின்ற அரசியல்வாதிகளை, பொது வேட்பாளராகக் கொள்ளமுடியாது. 

ஆகவே, பொது வேட்பாளரை முஸ்லிம்கள் நிறுத்துவதாயின், மிகப் பொருத்தமான, கட்சி பேதங்களுக்கு அப்பால், தென்னிலங்கையிலும் மலையகத்திலும், வடக்கு, கிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் நல்லெண்ணத்தைப் பரவலாகப் பெற்ற ஒருவரையே தெரிவுசெய்ய வேண்டும். 

கடந்த காலத்தில், சமூகத்தின் பெயர்களைச் சொல்லி வாக்குகளைப் பெற்று, பேரம் பேசல் என்ற கோதாவில் அமைச்சுப் பதவிகளுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சோரம்போனது போல, இத்தனைச் சவால்களையும் எதிர்கொண்டு, பொது வேட்பாளருக்கு வாக்களிக்கின்ற முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாஷைகளை, பேரம்பேசல் ஊடாக வென்றுத் தருவேன் என பகிரங்கமாக சத்தியம் செய்கின்ற, நம்பிக்கையான ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும். 

முஸ்லிம் சமூகமும் பிரஸ்தாப பொது வேட்பாளரும், இந்த நிபந்தனைகள், சவால்களை எல்லாம் கடந்து, பொது வேட்பாளருக்கு இலட்சக்கணக்கான வாக்குகளை அளிக்க கூட்டிணைந்துப் பணியாற்றினால் மாத்திரமே, இந்தக் கனவு மெய்ப்படும். அவ்வாறு முஸ்லிம்களும் அரசியல்வாதிகளும் செய்ய மாட்டோம் என்றால், பொது வேட்பாளர் பற்றிப் பேசி இப்போது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.  

கண்டுகொள்ளப்படாத யாசகர்கள்

நாம் பெரிய பெரிய விவகாரங்கள் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்றோம். அமெரிக்க பொருளாதார பின்னடைவு பற்றி, அமேசன் காடுகள் எரிவது பற்றி, காஷ்மீர் ஆக்கிரமிப்பு பற்றி, இங்கிலாந்து அரசியல் கொந்தளிப்பு பற்றிப் பேசுகின்றோம். இலங்கையில், மாகாண சபைத் தேர்தல் நடைபெறாதென்பது பற்றியும் ஜனாதிபதித் தேர்தலில் நமது வியூகம் என்னவென்பது பற்றியும், முஸ்லிம்களாக நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். 

இவையெல்லாம் பேசப்பட வேண்டியவைதான். ஆனால், இவ்வாறான பல பிரச்சினைகள் நமது எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. அவற்றில் எம்மால் குறிப்பிடத்தக்க எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. 

ஆனால், நமக்கு முன்னே நடந்துகொண்டிருக்கின்ற, நமது சக்தியைக் கொண்டு ஏதாவது செய்யக்கூடிய பல பிரச்சினைகளைக் கண்டும் காணாததுபோல நாம் தினமும் சர்வ சாதாரணமாக கடந்துச் செல்கின்றோம். 

அதில் ஒன்றுதான், வறியவர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் அல்லது யாசகர்கள் பற்றிய விடயமாகும். இதுபற்றி பேசுவதைத் தவிர்க்கும் பாங்கிலான மௌனத்தைக் கலைப்பதே இப்பத்தியின் நோக்கமாகும்.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 4.1 சதவீதமானோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், புள்ளிவிவரங்களிலும் அறிக்கைகளிலும் உள்ளடங்காத நிஜமான வறியவர்களின் எண்ணிக்கை, நிச்சயமாக இதைவிட அதிகமாகவே இருக்கும். 

ஆனால், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களையும் அதையும் தாண்டி யாசகம் கேட்கும் நிலைக்கு செல்பவர்களையும், அந்த நிலைமையில் இருந்து மீட்பதற்கு அரசாங்கம் என்ன காத்திரமான நடவடிக்கை எடுத்திருக்கின்றது? 

இலங்கைச் சமூகங்கள், குறிப்பாக முஸ்லிம்கள்; ஒரு சமூகமாக வறுமையை ஒழிப்பதற்கும் பிச்சைக் கேட்டு வருபவர்களுக்கு நிரந்தர வருமானத்துக்கான ஏற்பாடு செய்வதற்கும் என்ன நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர்? அதில் எந்தளவுக்கு வெற்றி கண்டுள்ளனர் என்ற கேள்விகளுக்கு விடை தேடப்பட வேண்டியுள்ளது. 

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில், மூன்று வகையான வறிய மக்கள் பிரிவினர் வாழ்கின்றனர் எனலாம். ஒன்று, அரசாங்கம் சொல்கின்ற குறிகாட்டிகளின் அடிப்படையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற அடிமட்டக் குடும்பங்கள். இரண்டாவது, இரந்து அல்லது பிச்சைகேட்டுப் பிழைப்பவர்கள். மூன்றாவது வகையினர், உண்பதற்கும் உடுப்பதற்கும் எதுவுமற்ற நிலையிலும் சமூக அந்தஸ்து மற்றும் கௌரவத்துக்காக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், கையில் பணம் இருக்கின்ற போது சாப்பிட்டுவிட்டு, இல்லாதபோது பட்டிணி கிடக்கின்ற மக்கள். இவர்கள் பற்றி நமக்குப் பெரிதாக அறியக் கிடைப்பதில்லை. 

உண்மையில், சிங்கள மக்களின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில், அவர்கள் “பிச்சை தாருங்கள்” என்று கேட்பது குறைவாகவே இருக்க வேண்டும். ஆனால், தமிழர்களைப் போலவே முஸ்லிம்கள் மத்தியிலும் வறுமை இருக்கின்றது. ‘ஸக்காத்’ எனப்படும் உழைப்பில் ஏழைகளுக்குப் பங்கு கொடுக்கின்ற முறை, முழுமையாக வெற்றியடையவில்லை என்றே கூறவேண்டும். 

சிங்கள சமூகத்தின் மத்தியில் நேரடியாக இரந்து கேட்பதை விடுத்து, வேறு வழிகளில் அவர்கள் நிதியுதவியைத் தேடுகின்றனர் எனலாம். பஸ்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் பாட்டிசைத்தல், கையேடுகள், புத்தகங்களை விற்றல், ஏமாற்றும் பாங்கிலான பிச்சையெடுப்பு என அந்த நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.

முஸ்லிம் சமூகத்தில் நேரடியாக இரந்து கேட்கின்ற நடைமுறைகளே பெரிதும் அவதானிக்கப்படுகின்றன. பிச்சைக்காரர்களும் வறியவர்களும், ஆண்டாண்டு காலமாக அப்படியே இருப்பதையும் காணமுடிகின்றது. சிலருக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்பது போலத் தெரிகின்றது. வேறு சிலர் பிச்சை எடுப்பதை இலகுவான தொழில் என்று கருதுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

ஓர் ஊரில் இருப்பவர்கள், மற்றைய ஊர்களுக்கு இரந்து கேட்பதற்காகச் செல்கின்றனர். இஸ்லாமிய மார்க்க ஆடைகளோடும் கையில் பிள்ளைகளோடும், சிலர் வருகின்றனர். இவ்வாறு வருகின்ற சிலரைப் பணம்படைத்த முஸ்லிம்களே நையாண்டி செய்வது மனது வலிக்கும் - தனிக்கதை. இறைவன், எல்லோரையும் ஒரேமாதிரி படைக்கவில்லை. பொதுவாழ்வில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. நமது கையில் பணமில்லாத போது, நமக்கு ஏற்படும் நெருக்கடியையே அந்த வறியவர்கள் அன்றாடம் அனுபவிக்கின்றனர். அப்பேர்ப்பட்ட இல்லாத மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டச் சொல்லியே இஸ்லாம் மட்டுமன்றி எல்லா மதங்களும் கூறுகின்றன. 

ஆனால், நாட்டில் முஸ்லிம் சமூகத்தில் மட்டுமன்றி, எல்லா மக்களிடையேயும் வறுமையும் குறிப்பாக பிச்சை கேட்கும் பழக்கத்தையும் இல்லாதொழிப்பதற்காக, அந்த மக்களுக்கு நிரந்தர வாழ்வாதாரம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசியல்வாதிகளும் சமூக இயக்கங்களும், பொது மக்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய காலமிது. 

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதித்-தேர்தல்-முஸ்லிம்கள்-சார்பில்-பொது-வேட்பாளரா/91-238142

Share this post


Link to post
Share on other sites

"எனவே, முஸ்லிம்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவருக்கு நமது சமூகம் ஒன்றுதிரண்டு தமது வாக்குகளை வழங்குமாக இருந்தால், அதன்மூலம் இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஜனாதிபதியிடம் பேரம்பேசலை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. "

இப்பொழுதும் கூட முஸ்லீம்கள் பிரதிநிதிகள் எல்லா கட்சிகளிலும் இருந்து பேரம்பேசலை வெற்றிகரமாக முன்னெடுக்கிறார்கள்.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this