• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

சம்பந்தன் மட்டுமா ஏமாற்றப்படுகின்றார்?

Recommended Posts

சம்பந்தன் மட்டுமா ஏமாற்றப்படுகின்றார்?

காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 10 செவ்வாய்க்கிழமை, மு.ப. 06:25 Comments - 0

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2015), ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், ஏமாற்றப்பட்டு விட்டார் என்றவாறாகத் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் எனப் பலரும், அகத்திலும் புறத்திலும் விமர்சித்து வருகின்றனர். இந்த விடயம், தமிழர்களைப் பொறுத்த வரையில், உண்மையாக, வேதனையாகவே பகிரப்பட்டு வருகின்றது. 

 இதன் அடுத்த கட்டமாகச் சம்பந்தன், தமிழ் மக்களை ஏமாற்றி விட்டதாகப் பொதுஜன பெரமுனவினர் கூறி வருகின்றனர். இது வேடிக்கையாகவும் விசமத்தனத்துடனும் பகிரப்படும் விடயமாகும்.  இதில் உண்மையே இல்லை; ஏனென்றால், சம்பந்தன் ஏமாற்றப்படவில்லை எனக் கூற வரவில்லை. ஆனால், பெரும்பான்மைக் கட்சிகள் மனம் திருந்தி, புதிய அரசமைப்பு மூலம் தீர்வுத் திட்டம் வழங்கப் போகின்றார்கள் எனப் பல்வேறு காலக்கெடுக்களைக் கூறி, தானும் ஏமாந்து, தமிழ் மக்களையும் சம்பந்தன் ஏமாற்றி விட்டார்.   

பிறப்பிலிருந்து பேரினவாதச் சிந்தனையில் மட்டுமே ஊறிய சிங்கள அரசியல் கட்சிகள், நிர்ப்பந்தங்களாலேயே கடந்த காலங்களில் ஒப்பந்தங்கள் செய்தன. இந்நிலையில், என்ன அடிப்படையில், தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய தீர்வுத் திட்டத்தை வழங்குவார்கள் எனச் சம்பந்தன் நினைத்தார் என, அவருக்கு மட்டுமே வெளிச்சம்.  

‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும்’. இது, பாடசாலை மாணவர்களாக இருந்த காலப் பகுதியில், வீட்டில் எங்கள் அம்மா, அப்பா அடிக்கடி உச்சரிக்கும் அரிய வார்த்தைகளாகும். அக்காலப் பகுதியில் இந்தப் பழமொழி, எங்கள் அலுவல்கள் மீது, சிந்தனையை ஒருமுகப்படுத்தி, எங்களை வளப்படுத்தியது.   

அதுபோல, அரசாங்கத்தை முழுமையாக நம்பி, அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தேவை, கடப்பாடு கூட்டமைப்புக்கு இருந்தது; அதனை மறுக்க இயலாது. ஆனாலும், அக்காலத்திலும் தமிழ் மக்களை ஒரு திரளாகத் திரட்சியாகத் திரட்டத் தவறியதே சம்பந்தனின் பாரிய தவறு ஆகும்.  

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி, அரசமைப்பு பூர்வாங்க வேலைகளை, நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தலைமையிலான அணியினர் மேற்கொண்டிருந்த சமகாலத்தில், அதற்குச் சமாந்தரமாக இயன்றவரை, தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி, அதன் ஊடாகத் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தத் தவறி விட்டார்.  

இவை, இலகுவாகச் சாதித்து முடிக்கின்ற காரியம் அல்ல. ஆனாலும், இது தொடர்பில் சம்பந்தன், எவ்வளவு தூரம் மனப்பூர்வமாக அக்கறை கொண்டிருந்தார்  எனத் தெரியவில்லை. தலைவருடைய, தலைவர்களின் கூட்டுச் செல்வாக்கு, ஒத்த சிந்தனையுடையவர்களை உடனழைத்து வரவேண்டும்; வரும். இது நிகழாது விட்டால், அமைப்பில் உள்ளவர்களிடையோ, அமைப்பில் உள்ள கட்சிகளுக்கிடையோ, விருப்பப் பிரிவினைகளும் விசுவாசப் பிரிவினைகளும் ஏற்படும். இதுவே, கூட்டமைப்புக்கு உள்ளும் நடந்தேறியது.   

“தமிழ் மக்களது காணிகளை விடுவிக்கின்றோம்; அபிவிருத்திகளை மேற்கொள்கின்றோம்; அடுத்ததாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வும் வழங்கப் போகின்றோம்” என, உலகத்துக்குச் சாக்குப்போக்கை, அரசாங்கம் சொல்லிக் கொண்டிருந்த காலமே நல்லாட்சிக் காலம். 
அதேபோல, முழுமையாகக் காணி விடுவிக்கப்படவில்லை; பொய்யான அபிவிருத்தி நடக்கின்றது; அரசியல் தீர்வும் அரங்கேறாத விடயங்கள் என, உலகத்துக்கு உரக்க உரைத்து, தமிழ் மக்களை ஒன்று திரட்டி, ஒரு குடையின் கீழ்க் கொண்டு வர, சம்பந்தன் தவறி விட்டார்.  

பாரிய எதிர்பார்ப்புகளுடனும் பலத்த சவால்களுடனும் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். ஆனால், தமிழ் மக்களது நம்பிக்கைகள் வற்றிய கடலாக, இன்று கூட்டமைப்பு உள்ளது. கூட்டமைப்புக்குள்ளேயே குத்துக்கரணங்களும் குழிபறிப்புகளும் மலிந்து கிடக்கின்றன. 

எந்தவொரு பிரச்சினையும் பாரிய நெருக்கடியாக மாறுவதற்கு முன், அதை உணர்ந்து கொள்ளும் திறமை, ஒரு தலைவருக்கான ஆளுமைத்திறன் ஆகும். ஆனால், பேரினவாதிகள் ஒருபோதும் தீர்வுகள் வழங்கப் போவதில்லை என்பதை, அனைத்துத் தமிழர்களும் நன்கு அறிவர். இந்நிலையில், தமிழர்களின் தலைவர் தீபாவளி, தைப்பொங்கல் தினங்களில் தீர்வு கிடைக்கும் எனக் கதைத்தமை கவலையளிக்கும் விடயம் ஆகும். இது, வெறுமனே கட்சிக்குள் மறைந்து போகின்ற ஒரு சிறிய விடயம் அல்ல; தனிநபர் கடந்து, கட்சி கடந்து, தமிழ் இனத்தைச் சிதைவுறச் செய்யும் தன்மை வாய்ந்ததாகும்.   

பேரினவாத அரசாங்கங்கள் என்ன வகையிலாவது, என்ன விலை கொடுத்தாவது, தமிழ்த் தேசியத்தைச் சிதைப்பதையே பிரதான நோக்காகக் கொண்டு இயங்குகின்றன. தமிழ்த் தேசியத்தைச் சிதைவுறச் செய்தால், இனப் பிரச்சினையே இல்லாமல் போய்விடும் என அவர்கள் கருதுகின்றார்கள். ஆகவே, தமிழ் மக்களது தேசிய அடித்தளம் அசையாத வரையிலேயே, அவர்களுடைய தனித்துவமும் கௌரவமும் இருக்கும்.   

அதாவது, தமிழ் மக்களது முழுமையான பங்களிப்புடன், மனப்பூர்வமான சம்மதத்துடன் இனப்பிரச்சினை சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டால், தமிழ்த் தேசியம் பாதுகாக்கப்படும். தமிழ் மக்கள் மீது, அவர்களது விருப்பின்றி, உப்புச்சப்பற்ற தீர்வுகளைத் திணித்து, ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால், அதாவது, தமிழ்த் தேசியம் தீர்த்துக் கட்டப்பட்டால், இனப்பிரச்சினை காணாமல் போய் விடும், என்பதுவே சிங்களப் பேரினவாதிகளின் புரிதலும் நோக்கமுமாகும். இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே, பேரினவாதிகளின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.   

தமிழ்த் தேசியத்தின் நிலைமைகள், இவ்வாறாக ஆபத்தாக இருக்கையில், தமிழ்க் கட்சிகள் இத்தனை காலமும் தங்களுக்குள் பிரிவினை காட்டி, சாதித்ததுதான் என்ன? 

இந்நிலையில், சம்பந்தன் மட்டுமே ஏமாற்றப்பட்டவர் போல, அவர் மீது மட்டும் பழியைத் தூக்கிப் போடலாமா? ஏனைய அரசியல் கட்சிகள் சாணக்கியத்துடன் செயற்படுகின்றனவா? மாற்றுத் தலைமை வேண்டும்; அது வினைதிறனாகச் செயற்பட வேண்டும் எனச் சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராகக் கோசம் போட்டவர்கள், மாற்றுத் தலைமைக் கதையை மறந்தே, பல மாதங்கள் ஆகி விட்டனவே?  

“ஜனாதிபதி வேட்பாளராக ரணில் போட்டியிட்டால் மட்டுமே, தமிழர்கள் வாக்களிப்பார்கள்” எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறுகின்றார். இதனை, இவர் எப்படிக் கண்டுபிடித்தார் எனத் தமிழ் மக்களுக்குத் தெரியவில்லை. “தமிழர்களுக்கு சஜித் மீது நம்பிக்கை உண்டு” என, மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கூறுகின்றார். இவர் இப்படிச் சொன்ன அன்றே, “பௌத்தத்தை வலுப்படுத்துவேன்; முப்படையினரும் சுயாதீனமாக இயங்க அனுமதி வழங்குவேன்” என, குருநாகலில் சஜித் பிரேமதாஸ கூறுகின்றார்.  

சரியோ, பிழையோ; காலத்தின் தேவையோ, மறைமுக அரசியல் நிகழ்ச்சியோ, ‘எழுக தமிழ்’ சிறப்பாக நடக்கட்டும். அதனூடகவேனும் சிறிய மாற்றமேனும் உண்டாகட்டும்; அது ஒரு விடிவு நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கட்டும் என இருந்திருக்கலாம். ஆனால், ‘எழுக தமிழ்’ பிளந்து போய்க் கிடக்கின்றது என, இணைந்த வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கூறுகின்றார். இவ்வாறாக, இவர் கூறி என்ன சுகம் கண்டார்? ஏன் இவர்களிடம் நேர்மறை எண்ணங்கள் வராது, எதிர்மறையாகவே பேசி வருகின்றார்கள்.  

உண்மையில், வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள், தங்களுக்குள் தேவையற்று மோதி, தங்களது பெறுமதியான காலத்தையும் வலுவான சக்தியையும் வீணாக இழந்து வருகின்றனர். எங்களின் பொது எதிரியின் நகர்வுகளைக் கவனிப்பதை விடுத்து, கற்பனை எதிரியைத் தங்களுக்குள் உண்டுபண்ணி, அவர்களுடன் மோதி வருகின்றனர்.  

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், தங்களைப் பேரினவாத அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றுவதை, நன்கு உணர்ந்தவர்கள்; பட்டறிந்தவர்கள். அதன் வரிசையிலேயே கடைசியாகச் சம்பந்தனும் இணைந்து கொண்டுள்ளார்.   

ஆனாலும், அதையும் தாண்டித் தங்களைத்  தங்களது தமிழ் அரசியல்வாதிகளே ஏமாற்றுவதை, ஜீரணிக்க முடியாது தமிழ் மக்களை தவிக்கின்றார்கள். தமிழ் மக்களை நேசிக்கும் தலைவர், அரசியல்வாதி என, எமக்கு யாரும் இல்லையோ என அவர்கள் வேதனையில் அனலில் இடப்பட்ட புழுவாய்த் துடிக்கின்றார்கள். நாதியற்று நடுத்தெருவில் இருக்கும் எங்களை, எல்லோருமே ஏமாற்றுகின்றார்களே எனத் தமிழ் மக்கள் விரக்தியில் உள்ளார்கள்.   

தமிழ் அரசியல்வாதிகள், மக்களைப் பற்றி எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை, அவர்கள் தெரிந்து கொள்ளும் வரை, அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு விடயங்கள் தெரியும் என்பதைப் பற்றி மக்களுக்கு அக்கறை இல்லை.  

 அரசியல் தலைமைத்துவம் என்பது, பதவியை விட, மனநிலையோடு அதிகம் தொடர்புனடையது. மக்களுக்கான தலைவருக்குத் தேவையான சிறப்பான சில ஆலோசனைகளை, சீனநாட்டுக் கவிதை பின்வருமாறு கூறுகின்றது.  

‘மக்களிடம் செல்லுங்கள்; அவர்களை நேசியுங்கள்; அவர்களுடன் வாழுங்கள்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்; அவர்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து தொடங்குங்கள்; அவர்களிடம் இருப்பதைக் கொண்டு உருவாக்குங்கள்; அவர்களது காரியம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அவர்கள் வேலை முடிந்த பிறகு, தங்கள் சிறந்த தலைவர்களைப் பற்றி, அவர்கள் இப்படிக் குறிப்பிடுவார்கள்; “நாங்களாகவே எல்லாவற்றையும் செய்து முடித்தோம்”  

தமிழ் மக்களுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் இக்கவிதை அப்படியே பொருந்துகின்றது அல்லவா? இந்நிலையில் எந்தவிலை கொடுத்தேனும், தமிழ்த் தேசியத்தை உயிர்ப்புடன் பாதுகாப்பதே இன்றைய தேவைப்பாடு ஆகும். ஆகவே, தமிழ்மக்களாகவே எல்லாவற்றையும் செய்து முடிப்போம்; வெற்றி பெறுவோம்.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சம்பந்தன்-மட்டுமா-ஏமாற்றப்படுகின்றார்/91-238216

Share this post


Link to post
Share on other sites

‘மக்களிடம் செல்லுங்கள்;

அவர்களை நேசியுங்கள்;

அவர்களுடன் வாழுங்கள்;

அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்;

அவர்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து தொடங்குங்கள்;

அவர்களிடம் இருப்பதைக் கொண்டு உருவாக்குங்கள்;

வர்களது காரியம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அவர்கள் வேலை முடிந்த பிறகு, தங்கள் சிறந்த தலைவர்களைப் பற்றி, அவர்கள் இப்படிக் குறிப்பிடுவார்கள்; “நாங்களாகவே எல்லாவற்றையும் செய்து முடித்தோம்”

 

இதை மக்கள் சகல தமிழர் அரசியல் தலைவர்களிடமும் அச்சடித்து கொடுக்க வேண்டும், மாலையாக போடவேண்டும் 

Share this post


Link to post
Share on other sites

சம்பந்தன் ஏமாற்றப்படவுமில்லை ஏமாறவவுமில்லை.
அவரால் எதுவுமே முடியவில்லை. இதுதான் உண்மை.
 சம்பந்தன் தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாகவும் இல்லை.வழி விடவுமில்லை.
தான் சாகும் வரைக்கும் அரைச்சமாவையே அரைச்சுக்கொண்டிருக்கும் உத்தமன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this